:
ஆசியா
:
இலங்கை
Socialist Equality Party contests Sri Lankan general election
இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது
By the Socialist Equality Party
13 November 2001
Back to screen version
சோசலிச சமத்துவக் கட்சி டிசம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை பொதுத் தேர்தலுக்காக
கொழும்பு மாவட்டத்தில் 24 வேட்பாளர்களுடன் களத்தில் இறங்கியுள்ளது. பொதுச் செயலாளர் விஜே டயஸ் சோ.ச.க.வின்
முதன்மை வேட்பாளராவார். நாட்டின் தலைநகரான கொழும்பு, 2.2 மில்லியன் ஜனத்தொகையையும் எல்லா சமூகத்தவரையும்
உள்ளடக்கிய -சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்- 1.4 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட ஒரு வர்த்தக,
தொழில்துறை மையமாகவும் விளங்குகின்றது.
சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தின் சார்பில் பேசிவரும் ஒரே கட்சியாக விளங்கும்
அதே வேளை பெரும்பான்மைக் கட்சிகளான ஆளும் பொதுஜன முன்னணி (PA)
மற்றும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) போன்ற
கட்சிகளால் தூண்டிவிடப்பட்ட பிரித்தாளும் இனவாத அரசியலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப் படுத்தும் ஒரு
சோசலிச கொள்கையை முன்வைக்கின்றது.
இந்தத் தேர்தல் உலக அரசியலின் ஒரு முக்கியத் திருப்புமுனையினுள் இடம்பெறுகின்றது.
செப்டம்பர் 11ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் கடுமையான உணர்வுகளை சுரண்டிக் கொள்ளும் அமெரிக்க
ஏகாதிபத்தியம், உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றுக்கு எதிராக யுத்தத்தைத் தொடுத்துள்ளது. புஷ் நிர்வாகம் இந்த யுத்தத்தை
நடாத்துவது, அது கூறிக்கொள்வதைப் போல் உலகின் நாகரீகத்தையோ அல்லது ஜனநாயகத்தையோ காப்பதற்காக
அல்ல; மத்திய ஆசியாவில் உள்ள பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதற்கான
நீண்டகால திட்டத்தின் ஒரு பாகமாக ஆப்கானிஸ்தானுக்குள் தமக்குச் சார்பான ஒரு அரசாங்கத்தை நிறுவுவதற்கேயாகும்.
இலங்கை உட்பட ஆசியா பூராவுமுள்ள ஆளும் கும்பல்களும் அவர்களின் அரசாங்கங்களும் அமெரிக்கத்
தலைமையிலான யுத்தத்துக்கு ஆதரவளித்து வரும் அதே நேரம், அதை தமது சொந்தத் தேவைகளுக்காகவும் -பேரினவாதத்தைத்
தூண்டவும் உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு தாக்குதல் தொடுக்கவும்- பயன்படுத்தி வருகின்றன.
இந்த முரண்பாடுகள் காஷ்மீர் தொடர்பான பிரச்சினையையிட்டு இரண்டு அணுவாயுத சக்திகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையில், பதட்ட நிலையை அதிகரித்துள்ளது. இது பிராந்தியத்திற்கு பேரழிவு கொணரும் சாத்தியங்களைக் கொண்டுள்ளது.
இலங்கையில் சந்தேகத்துக்கு இடமற்ற விதத்தில் யுத்தத்தை எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச
சமத்துவக் கட்சி மட்டுமே. பொதுஜன முன்னணி, யூ.என்.பி. மற்றும் சிங்களத் தீவிரவாதக் கட்சியான மக்கள் விடுதலை
முன்னணி (JVP) அனைத்தும் புஷ்சின் "பயங்கரவாதத்துக்கு எதிரான
பூகோள யுத்தத்தின்" பின்னால் அணிதிரள்வதன் மூலம் தமது ஏகாதிபத்தியச் சார்பு, தொழிலாள வர்க்க விரோத
கொள்கையை வெளிக்காட்டிக்கொண்டுள்ளன.
இந்த தேர்தல் கடந்த பொதுத் தேர்தல் இடம்பெற்று சற்றே ஓராண்டுக்குப் பின்னர்
இடம்பெறுகின்றது. கடந்த 12 மாதங்களாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் தொடர்ச்சியான
நெருக்கடிகளால் தள்ளாடிக் கொண்டிருந்தது. அவர் கடந்த ஜூன் மாதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் (SLMC)
வெளியேற்றத்தை அடுத்து தனது சிறிய பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்ததோடு, ஜூன் 4ம் திகதி எதிர்க் கட்சியினரின்
ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை தவிர்ப்பதற்காக பாராளுமன்றத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைத்தார்.
பெரு வர்த்தகர்கள் ஆண்டு பூராவும் தனது நிகழ்ச்சி நிரலை அமுல் செய்வதற்கான ஒரு தேசிய
ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன முன்னணியையும் யூ.என்.பி.யையும் நெருக்கி வந்தனர். இந்நிகழ்ச்சி நிரல் 18
வருடகால உள்நாட்டு யுத்தத்தை நிறுத்துவதற்கு பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்வது, சர்வதேச
நாணய நிதியமும் உலக வங்கியும் வேண்டிய சந்தை மறுசீரமைப்புக்களை அமுல் செய்வதையும் உள்ளடக்கி இருந்தது. எவ்வாறெனினும்
இந்த இருபெரும் குழுக்களாலும் தமது நீண்டகாலப் பகைமையை ஓரங்கட்ட முடியவில்லை. குமாரதுங்க செப்டம்பர் மாதம்
ஒரு ஆட்டங்கண்ட பெரும்பான்மையை மீளமைப்பதற்காக ஜே.வி.பி.யுடன் ஒரு ஒப்பந்தத்துக்குச் சென்றார்.
ஆனால் செப்டம்பர் 11ம் திகதி தாக்குதலும் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தலைமையிலான
யுத்தமும் இலங்கையின் அரசியல் சமபலநிலையை மாற்றியது. பெரு வர்த்தகர்கள் அமெரிக்கா தலைமையிலான "பயங்கரவாதத்துக்கு
எதிரான யுத்தத்தை" ஒரு சமாதான நடவடிக்கைக்காக விடுதலைப் புலிகளை நெருக்குவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக
கணித்த அதே நேரம், நீண்டு கொண்டு செல்லும் பூகோளப் பொருளாதாரப் பின்னடைவு இலங்கையின் பொருளாதாரத்தில்
ஏற்படுத்தும் தாக்கத்தையிட்டு நன்கு புரிந்து கொண்டும் இருந்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த
ஆண்டில் பல தசாப்தங்களாக இல்லாத மட்டத்தில் 0.6 வீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ள அதே வேளை
ஏற்றுமதி இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொதுஜன முன்னணி அக்டோபர் 11ம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பேரில், ஜே.வி.பி.யுடன்
ஏற்படுத்திக் கொண்ட உறவையிட்டு பெரு வர்த்தகர்கள் தமது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தனர்.
அவர்களின் அதிதீவிரவாத சிங்கள சோவினிசம் விடுதலைப் புலிகளுடனான எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் எதிராக
குறுக்கே நின்றுகொண்டுள்ளது. திரைமறைவில் இடம்பெற்ற திட்டமிட்ட சூழ்ச்சிகள், குமாரதுங்கவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட, பொதுஜன முன்னணி உறுப்பினர்களின் வெளியேற்றத்தால் ஒரு தொடர்ச்சியான
சிதைவுகளை உண்டுபண்ணின. வாக்குகளை இழப்பதை விட, அவர் அக்டோபர் 10ம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து
முன்கூட்டியே ஒரு தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
தேர்தலை விரைவுபடுத்திய முறையானது தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகும்.
பெரு வர்த்தகர்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அவஸ்தைப்படுவது, மோதுதல்கள் உருவாக்கிவிட்டுள்ள பயங்கர துயரங்களை
நிறுத்துவதற்காக அன்றி பூகோள முதலீடுகளை வெற்றி கொள்ளவும் இலங்கையை ஒரு மலிவு உழைப்பு மேடையாக மாற்றுவதற்குமேயாகும்.
அவர்களின் கோரிக்கைகளில் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், சமூக நலத் திட்டங்களிலும் இலவசக் கல்வி
மற்றும் இலவச சுகாதார சேவைகளில் மேலதிக வெட்டு மற்றும் உழைப்புச் சந்தையில் "விரும்பியபோது வேலைக்கு
அமர்த்தவும் நினைத்தபோது வேலைநீக்கம் செய்யும் கொள்கையும்" (Hire and fire policy)
அடங்குகின்றன.
1994ல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் வாழ்க்கை நிலைமைகளை அபிவிருத்தி செய்வதாகவும்
அடிப்படை ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த பொதுஜன முன்னணி அதற்கு
நேரெதிராக செயற்பட்டது. ஒரு தேர்தல் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் அச்சத்தில் குமாரதுங்க ஒவ்வொரு கொழும்பு
சிங்கள பேரினவாத அரசியல் வாதிகளிடம் கையிருப்பில் உள்ள, யூ.என்.பி. "விடுலைப் புலிகளுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை
மூலம்" நாட்டை விற்றுத்தள்ளுகிறது எனும் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதே நேரம் அவர் அரசாங்க ஊழியர்களுக்கு
அற்ப சொற்ப சம்பள மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பு உட்பட்ட சில அற்ப மானியங்களின் மூலம் வாக்காளர்களுக்கு இலஞ்சம்
வழங்கவும் முயற்சிக்கின்றார்.
அதே சமயம் 1983ல் யுத்தத்தை தூண்டிய, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு
பேர்போன பழமைவாத யூ.என்.பி. சமாதானத்திற்கான கட்சியாகவும் அதேபோல் தொழில் மற்றும் ஜனநாயக உரிமைகளின்
பாதுகாவலனாகவும் வலம் வருகின்றது. அதனது தேர்தல் விஞ்ஞாபனம் விடுதலைப் புலிகளுடனான ஒரு பேச்சுவார்த்தையையும்
தொழிற்சாலை மூடுவிழாக்களுக்கு ஒரு முடிவையும் முன்மொழிகின்றது. அதே நேரம் எவ்வாறெனினும் யூ.என்.பி. தலைவர்
ரணில் விக்கிரமசிங்க தமது நிர்வாகம் "ஒழுங்குவிதிமுறைகளை திணிக்கவும்" சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்துவதாகவும்
விளங்கும் என வலியுறுத்துகிறார். இது அவர் கையாளப் போகும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் மோசமான அறிகுறியாகும்.
பெரு வர்த்தக சமூகத்தின் பெரிதும் சக்திவாய்ந்த பகுதியினரும் தனியார் தொடர்புச் சாதனங்களின்
சகல தரப்பினரும் தமது பலத்தை யூ.என்.பி.க்கும், பொதுஜன முன்னணியை விட்டோடியவர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசையும் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களிடையேயான பல்வேறு அரசியல் அமைப்புகளையும் கொண்ட அதனது
ஐக்கிய தேசிய முன்னணிக்கு வழங்கியுள்ளன. யூ.என்.பி. இப்போது சமாதானத்துக்கு வாக்குறுதி அளிக்கிறது. ஆனால் கடந்த
ஆண்டில்தான் இது ஜே.வி.பி.யுடனும் மகாநாயக்க தேரர்களுடனும் சேர்ந்து குமாரதுங்கவுக்கு எதிரான ஒரு இனவாத பிரச்சாரத்தில்
அணிதிரண்டது. குமாரதுங்கவின் உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் நாட்டைப் பிளவுபடுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
ஒரு தனிநாட்டை வழங்கப் போவதாக குற்றம்சாட்டியது.
யூ.என்.பி.க்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையில் எந்தவித அடிப்படை வேறுபாடுகளும் கிடையாது.
விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு செல்லும் பலவித திட்டங்களும், அனைவரும் தொழிலாள வர்க்கத்தை பரஸ்பரம்
சுரண்டுவதற்காக சிங்களம், தமிழ், மற்றும் முஸ்லீம் கும்பல்களுக்கிடையில் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் திட்டத்துடன்
தொங்கிக்கொண்டுள்ளது. அத்தகைய நடவடிக்க்ைகளுக்கு பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்குகின்றன. இதில்
தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), ரெலோ (TELO),
ஈ.பீ.ஆர்.எல்.எப் (EPRLF) அடங்கும். ஆனால் யூ.என்.பி யினுள்ளும்
பொதுஜன முன்னணியின் உள்ளும் அத்தோடு ஜே.வி.பி போன்ற கட்சிகளின் உள்ளேயுள்ள சிங்கள பேரினவாதிகளிடமிருந்தும்
மாற்றமுடியாத பிரதிபலிப்புகளை உண்டு பண்ணியது. இந்த எந்த ஒரு அரசியல் கட்சியிடமும் சாதாரண உழைக்கும் மக்கள்
முகம் கொடுக்கும் உக்கிரமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது.
இந்தப் பிரச்சாரங்கள் சேறடிப்புகள், தமிழர் விரோத இனவாதம், வாக்குக்
கொள்ளையடிப்பு மற்றும் பயமுறுத்தல் சம்பந்தமான குற்றச்சாட்டுகள், குண்டர் தாக்குதல்கள் போன்றவற்றால் ஆதிக்கம்
செலுத்தப்படுகின்றது. நவம்பர் 11ம் திகதி வரை 40 கடுமையான தேர்தல் வன்முறைகள் உட்பட 473 தேர்தல்
வன்முறை சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த விதிமுறைகள் அனைத்தும்
சகல பெரும் கட்சிகளதும் ஜனநாயக விரோத பண்பின் நிஜ அறிகுறிகளாகும்.
சோ.ச.க. மாத்திரமே இலங்கையில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின்
நலன்களை அடையக்கூடிய ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்கிறது. இது சோசலிச அனைத்துலகவாதத்தினை கொள்கைகளின்
அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதன் வேட்பாளர்கள் சகல வகையிலான இனவாதத்தையும் சோவினிசத்தையும் எதிர்க்கும்
அதே வேளை தங்களது பொது வர்க்க அவசியங்களுக்காக போராட அனைத்து தொழிலாளர்களுக்கும் -சிங்களம், தமிழ்,
முஸ்லிம்- அழைப்பு விடுக்கின்றனர்.
சோ.ச.க. பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுத்துள்ள
யுத்தத்தை எதிர்ப்பதோடு வடக்குக் கிழக்கிலிருந்து அனைத்து துருப்புக்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும்
வாபஸ்பெறும்படி கோருகிறது. அது ஒரு தனித் தமிழ் அரசு நிறுவப்படுவதையும் பலவித அதிகாரப் பரவலாக்கல் பொதிகளையும்
எதிர்க்கிறது. சோ.ச.க. ஒன்றுபட்ட அரசினை பலாத்காரமான முறையில் நிர்வகிக்க முயலும் சிங்கள சோவினிசத்துக்கும்
தமக்கே சொந்தமான ஒரு முதலாளித்துவ குட்டி அரசை எதிர்பார்க்கும் குட்டி முதலாளித்துவ தமிழ் பிரிவினைவாதிகளுக்கும்
எதிராக அரசின் அமைப்பை தீர்மானிப்பதற்காக சாதாரண உழைக்கும் மக்களால் வெளிப்படையாகவும் ஜனநாயக ரீதியிலும்
தெரிவு செய்யப்பட்ட ஒரு நிஜமான அரசியல் நிர்ணய சபையை கூட்டுமாறு முன்மொழிகிறது.
சோ.ச.க. சகல பாதுகாப்புச் சட்டங்களையும் மத, இன, இனக்குழு மற்றும் பால்
அடிப்படையில் வேறுபாடு காட்டும் சகல நடவடிக்கைகளையும் தூக்கிவீசுமாறு கோருகிறது. சோ.ச.க. சமூகம் செல்வந்தர்களான
ஒரு சிலரின் இலாப நலன்களுக்காக அல்லாமல் பெரும்பான்மையினரின் சமூக அவசியங்களையும் அபிலாசைகளையும் இட்டு
நிரப்பும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்கிறது.
ஆப்கானிஸ்தானிலான ஏகாதிபத்திய யுத்தம் அனைத்துலக ரீதியில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும்
போராட்டத்தின் ஒரு பாகமாக இந்தியத் துணைக் கண்டம் பூராவும் ஒரு தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கிய சோசலிச
இயக்கத்தை புதிதாக உருவாக்குவதற்கான அவசியத்தை உருவாக்கியுள்ளது. தொழிலாளர் வர்க்கம் இந்த அடிப்படையில்
மாத்திரமே பெரும் வல்லரசுகளின் புதிய காலனித்துவ முன்னேற்றங்களுக்கு எதிராக போராடவும் தமது வாழ்க்கைத் தரத்தையும்
ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கவும் முடியும். சோ.ச.க. இந்திய உபகண்ட சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு
இணைந்த பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான ஒரு முன்னோக்கை அபிவிருத்தி செய்து வருகின்றது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான சோ.ச.க. தனது
தோழமைக் கட்சிகளுடன் இணைந்து உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS)
ஊடாக சர்வதேச தொழிலாளர் வர்க்கத்துக்குள் ஒரு சோசலிச கலாச்சாரத்தை மறுநிர்மாணம் செய்யப்
போராடுகின்றது. நாம் இளைஞர்களையும் புத்திஜீவிகளையும் கொழும்பில் எமது பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஆதரவு
தருமாறும், 100,000 ரூபா தேர்தல் நிதிக்கு நிதியுதவி வழங்குமாறும் வேண்டுகிறோம்.
|