World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை Election violence in Sri Lanka foreshadows further political turmoil இலங்கையில் தேர்தல் வன்முறைகள் மேலும் ஒரு அரசியல் குழப்ப நிலையை முன்னறிவிக்கின்றன By K. Ratnayake இலங்கையில் 11 வாரகால தேர்தல் பிரச்சாரங்களை அடுத்து இன்று மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர். இந்த தேர்தல் பிரச்சாரங்களில் ஆளும் பொதுஜன முன்னணிக்கும் (PA) எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (UNP) இடையிலான கசப்பான போட்டிகள் செல்வாக்குச் செலுத்தின. வன்முறைகளின் அதிகரித்த மட்டமானது இருந்து கொண்டுள்ள பதட்ட நிலையையும் நாட்டின் அரசியல் ஸ்தாபனத்தினுள்ளான தொடர்ச்சியான நெருக்கடியையும் சுட்டிக் காட்டுவதன் மூலம் இந்தத் தேர்தலை பண்பாக்கம் செய்துள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடுத்த நாள் அவரது அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பேரில் உருவாகிய பிளவுக்கு முகம் கொடுத்த நிலையில் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததோடு, கடந்த பொதுத் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் மாத்திரமே பூர்த்தியாகியுள்ளது. இந்தத் தீர்மானம் கடந்த தேர்தலைத் தொடர்ந்து உருவான 12 மாதகால சித்திரவதையான அரசியல் உள்முரண்பாடுகளுக்கும் ஆளும் கும்பலின் நிகழ்ச்சித் திட்டங்கள் அமுல் செய்யப்படாததால் வளர்ச்சி கண்டு வந்த வெறுப்புக்கும் ஒரு முடிவாக அமைந்தது. பெரு வர்த்தகர்கள் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பொதுஜன முன்னணியையும் யூ.என்.பி.யையும் ஒரு தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கத்துக்காக பல மாதங்களாக வற்புறுத்தியும் ஆசைகாட்டியும் வந்தனர்; அவை நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைப்பதும் சர்வதே நாணய நிதியத்தின் (IMF) மறுசீரமைப்பு கோரிக்கைகளை அமுல்படுத்துவதுமாகும். பொதுஜன முன்னணி யூ.என்.பி.யுடனான ஒரு உடன்படிக்கைக்கு பதிலாக பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியிடம் (JVP) ஆதரவு தேடியதை அடுத்து பெரு வர்த்தகர்களில் மிகவும் சக்திவாய்ந்த பகுதியினர் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பினர். சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட்ட சில பொதுஜன முன்னணி அரசியல்வாதிகள் அரசாங்கத்தை பாராளுமன்றத்தில் சிறுபான்மையாக்கிவிட்டு கட்சிமாறத் தூண்டினார்கள். யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனியார் தொடர்பு சாதனங்களின் உதவியுடனான பிரச்சாரங்களின் போது, 1983ல் யுத்தத்தை ஆரம்பித்து அதை ஒரு தசாப்தத்துக்கு மேலாக கடுமையாக முன்னெடுத்த பழமைவாத யூ.என்.பி.யை சமாதானத்துக்கான கட்சியாக சாயம் பூசுவதில் ஈடுபட்டார். நேற்று ரொய்டருக்கு கருத்துத் தெரிவித்த விக்கிரமசிங்க, தாம் தேர்தலில் வெற்றி பெற்றால் விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதாக குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் கோரிக்கையைப் பற்றி கேட்டபோது, அவர் விடுதலைப் புலிகளிடமிருந்து சாதகமான பிரதிபலிப்புகள் கிடைத்தவுடன் உடனடியாக அதைப் பற்றி சிந்திப்பதாக கூறினார். விக்கிரமசிங்க, பொதுஜன முன்னணியை கைவிட்டு தற்போது விடுதலைப் புலிகளுடனான ஒரு உடன்பாட்டுக்கான சிறந்த சந்தர்ப்பத்துக்காக யூ.என்.பி.யை எதிர்பார்த்திருக்கும் சில தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைத் தொடர்ந்தும் கொண்டிருக்கின்றார். சிங்கள மற்றும் தமிழ் கும்பல்களுக்கிடையிலான அதிகாரப் பரவலாக்கல் ஒப்பந்தத்துக்கான ஒரு இணக்கப்பாடு பிராந்திய அடிப்படையிலான மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வுக்கும் இனக்குழு அடிப்படையிலான மேலும் ஒரு சக்திவாய்ந்த இனக்குழு பிரிவுக்கு வழிவகுக்கும். தமது கடந்தகால ஆட்சியின்போது இடம்பெற்ற நிகழ்வுகளையிட்டு பரந்தளவிலான வெறுப்புக்குள்ளாகியிருந்த யூ.என்.பி, மீண்டும் ஆட்சியில் அமர்வதற்காக யுத்தத்துக்கு எதிரான பொதுஜனங்களின் பரந்த எதிர்ப்பை சுரண்டிக் கொள்ள முனைகின்றது. அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகம் 3,000 க்கும் மேற்பட்டவர்களுடன் நடாத்திய ஒரு ஆய்வின் போது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதை 77 வீதமானவர்கள் ஆதரிப்பதாக சுட்டிக் காட்டியது. ரீசேர்ச் லங்கா ஆய்வு நிறுவனத்தின்படி கடந்த மாதம் யூ.என்.பி.க்கான ஆதரவு பொதுஜன முன்னணியின் 38.8 வீதத்தை விட 40.4 தொடக்கம் 43.5 வரை அதிகரித்துள்ளது. கொழும்புப் பல்கலைக் கழகத்தின் கருத்துக் கணிப்பின்படி அவர்களில் 45 வீதமானவர்கள் யுத்தத்தை விட நாட்டின் பொருளாதார மந்த நிலையை பிரதானமாக சுட்டிக் காட்டினர். இந்த கருத்துக்களை கணக்கில் கொண்ட விக்கிரமசிங்க, தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கும் தொழில்களை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சியை மீளமைக்கவும் உறுதியளித்துள்ளார். ஆனால் எப்படி என்பதைத் தெரிவிக்கவில்லை. இந்தக் குறைபாடுகளின் தாக்கத்துக்குள்ளாகியுள்ள பொதுஜன முன்னணி தோல்வியைத் தவிர்ப்பதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குமாரதுங்க 1994ல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த போதிலும் வாக்குறுதிகளை குப்பையில் தள்ளிவிட்டு யுத்தத்தை உக்கிரமாக்கினார். அரசாங்கம் தற்போதைய பிரச்சாரத்தில், நாட்டை பிரிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு இரகசிய உடன்பாடு கொண்டுள்ளதாக, எந்தவித சாட்சியங்களையும் வழங்காமல் விக்கிரமசிங்கவை குற்றம் சாட்டுகின்றது. குமாரதுங்க, யூ.என்.பி.யை நம்பிக்கைத் துரோகி என குற்றம்சாட்டும் அதே வேளை விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாத போதிலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படமாட்டாது எனவும் ஒரு தனித் தமிழ் ஈழத்தின் பேரிலான எந்த ஒரு கலந்துரையாடலும் இடம்பெறாது எனவும் சுட்டிக் காட்டியுள்ளார். அரசாங்கம் அரச ஊழியர்களுக்கான சம்பள மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பு, ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கான நியமனங்கள் உட்பட ஒரு தொகை நாகரீகமற்ற தேர்தல் லஞ்சங்களை வழங்கியது. குமாரதுங்க, வர்த்தக பகுதியினரை கவரும் ஒரு முயற்சியாக, சம்பளம் வழங்குவதில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அரச நிவாரணங்களை வழங்கவும் அதே போல் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஆடைக் கைத்தொழிலுக்கான நிதியை மீளமைப்பு செய்யவும் ஜனாதிபதி மாளிகையில் வேலைகொள்வோர் குழுக்களுடனான ஒரு கடைசி நிமிட கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். தேர்தல் வன்முறைகள் அரசியல் கட்சிகளின் முன் இருந்துகொண்டுள்ள நெருக்கடிகளின் மட்டமானது அவர்களை பலவிதமான குண்டர் தாக்குதல்களுக்கும் வன்முறைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. உத்தியோகபூர்வமான பொலிஸ் அறிக்கைகளின்படி நேற்றுவரை தேர்தலோடு தொடர்புபட்ட சம்பவங்களால் 26 பேர் கொல்லப்பட்டதோடு 700 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் தேர்தல் கண்கானிப்பாளர்கள் கொல்லப்பட்டவர்களின் தொகை 41 எனக் குறிப்பிடுகின்றனர். இரண்டு கட்சிகளுமே பாதாள உலக குண்டர்களின் தனியார் கும்பல்களையும் முன்னாள் இராணுவ வீரர்களையும் தன்வசம் கொண்டுள்ளன. எதிர்க் கட்சி, பொதுஜன முன்னணி அரசாங்கப் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துவதாக -பொலிஸ், இராணுவம்- குற்றஞ் சாட்டுகின்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அனுராதபுரத்தில் பொதுஜன முன்னணியின் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு கிரனேட் வெடித்ததால் இருவர் கொல்லப்பட்டு 13 பேர் காயமடைந்ததை அடுத்து பொதுஜன முன்னணி மற்றும் யூ.என்.பி. ஆதரவாளர்களுக்கிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன. பொலிசார் இராணுவத்தின் உதவியுடன் நகரின் சில பகுதிகளில் காலவறையறையற்ற ஊரடங்கு சட்டத்தை திணித்தனர். கடந்த வாரம் யாழ் குடாநாட்டின் வடபகுதியில் இடம்பெற்ற ஒரு தாக்குதலின்போது தமிழ் கட்சிகளின் இரண்டு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதோடு ஏனையவர்கள் காயமடைந்தனர். இதற்கு அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே (EPDP) பொறுப்பு எனச் சொல்லப்படுகின்றது. கட்சித் தலைவர்களும் வன்முறைகளைப் பயன்படுத்துவதை ஆதரித்தார்கள். குமாரதுங்க நவம்பர் 15ம் திகதி திஸ்ஸமகாராமவில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்; "எங்களில் ஒருவரைக் கொன்றால் அவர்களில் ஒருவரைக் கொல்வது சாத்தியமானது" என ஆத்திரமூட்டும் வகையில் கூறினார். பொதுஜன முன்னணியிலிருந்து யூ.என்.பி.க்கு கட்சி மாறியவர்களில் உயர் மட்டத்தில் உள்ளவரான எஸ்.பி.திசாநாயக்க நவம்பர் 22ம் திகதி இளம் சட்டத்தரணிகளுடனான ஒரு கூட்டத்தில் இதே முறையில் பிரதிபலித்தார்; "வாக்கு மோசடியில் ஈடுபடுபவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ கொல்லப்பட்டால் ஏனையவர்கள் மேலதிக மோசடிகளை நிறுத்தி விடுவார்கள்" என அவர் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல் எதையும் மீள் திருத்தம் செய்யப்போவதில்லை என்பதையிட்டு வர்த்தகர்கள் வட்டாரங்களுக்கு மத்தியில் கவலை தோன்றியுள்ளது. யூ.என்.பி.க்கு தெளிவான ஆதரவு இருந்து கொண்டுள்ளதற்கு கடந்த வாரங்களில் பங்குச் சந்தையின் 25 வீத வளர்ச்சி சான்று பகர்கின்றது. இது யூ.என்.பி. வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பின் பிரதிபலிப்புகளாகும். ஆனால் யூ.என்.பி.யும் அதன் பங்காளிகளும் ஒரு தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டாலும் கூட, குமாரதுங்க 2005 வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் இருந்துகொண்டிருப்பார். விக்கிரமசிங்க, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரான்சிய அரசியல் முறையை சுட்டிக் காட்டுவதன் மூலம் குமாரதுங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கான யூ.என்.பி.யின் தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். "நாம் அவரை வெளியேற்றத் தேவையில்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார். "அவர் ஒரு அதிகாரமற்ற தலைவராக இருக்கும் அதேவேளை சிலவேளைகளில் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றிய விடயங்களில் கவனம் செலுத்தலாம். ஆனால் நாங்கள் அரசாங்கத்தை கொண்டுசெலுத்துவோம்." எவ்வாறெனினும் அது குமாரதுங்கவின் அதிகாரத்தை குறைப்பதல்ல- அது சில குறிப்பிடத்தக்க அரசியல் யாப்பு திருத்தத்தை வேண்டி நிற்கும். யூ.என்.பி. வெற்றிபெறும் சந்தர்ப்பத்தில் அவர் ஏற்கனவே ஒரு அரசியல் எதிர்ப்பு பாதையை உருவாக்கினார். அவர் ரொய்டருக்கு பேசுகையில்: "என்னால் அவர்களுடைய கொள்கையுடன் செயல்பட முடியாது" எனத் தெரிவித்தார். சில வர்த்தகப் பிரமுகர்கள் தேர்தலுக்குப் பின்னரான மேலும் ஒரு அரசியல் குழப்பநிலையை எதிர்கொள்ளும் வகையில் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கான அழைப்பைப் புதுப்பித்தனர். தேர்தலுக்கு முன்னர் அரசுக்குச் சொந்தமான இலங்கை வங்கியின் தலைவர் கென் பாலேன்திரா குறிப்பிட்டதாவது: "அனைத்துக் கட்சிகளதும் ஒரு தேசிய அரசாங்கமே நாட்டுக்கு சிறந்தது. இல்லையேல் இந்த உறுதியற்ற நிலைமைக்கு முடிவு கிடையாது." லங்கா மன்த்லி டைஜஸ்ட் (Lanka Monthly Digest) ஒரு காத்திரமான எச்சரிக்கையை விடுத்தது: "ஆகவே பொருளாதாரமும் வாழ்க்கைச் செலவும் மற்றும் தற்போதைய யுத்தமும் (அல்லது சமாதானத்தின் தடைக்கல்) வர்த்தகத்திலும் அதேபோல் சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்தும். இவை எதுவும் இடம்பெறாவிடில் வர்த்தகர்களதும் மக்களதும் குரல் உடனடியாக ஒரு செய்தியை ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு அனுப்பி வைக்கும் (அரச நிர்வாகப் பிரதேசம்) : தொங்கு பாராளுமன்றம்! இந்தக் குறிப்புகள் ஆளும் வட்டாரங்களுக்குள் தற்போது இடம்பெறும் கலந்துரையாடலுக்கான தெளிவான எச்சரிக்கைகளாகும். தேர்தல் இந்த அரசியல் முட்டுக் கட்டையை தகர்க்கத் தவறுமானால், ஆளும் கும்பல்களின் ஒரு பகுதியினர் பாராளுமன்றத்தில் பிரிவதோடு அவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தை சர்வாதிகார முறையில் மிகவும் நேரடியாக அமூல் செய்வார்கள். இருந்துகொண்டுள்ள அரசியல் நெருக்கடியானது தனிப்பட்ட இலட்சியங்களதோ, கட்சிப் போட்டியினதோ உருவாக்கம் அல்ல, ஆனால் ஆழமான முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றது. பிரத்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக, கொழும்பு அரசியல் நிர்வாகம் தொழிலாளர் வர்க்கத்தை பிரிக்கவும் தனது சொந்த நிலைப்பாட்டை திரட்டிக்கொள்ளவும் சிங்கள பேரினவாதத்தை நாடிவந்துள்ளது -அதன் ஒரு பகுதியாக 1983ல் யுத்தத்தை தோற்றுவித்தது. யுத்தம் இலங்கையின் மலிவு உழைப்பை சுரண்டிக் கொள்வதற்காக பூகோள முதலீட்டை கவர்வதற்கான அதன் திட்டங்களுக்கு ஒரு தடையாக இருந்துகொண்டுள்ளதால் பெரு வர்த்தகர்கள் யுத்தத்துக்கு ஒரு முடிவை கோருகின்றார்கள். ஆனால் இதுவரையும் பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் சிங்களப் பேரினவாதத்தில் புதையுண்டுப் போயுள்ளதால் அவை இரண்டும் விடுதலைப் புலிகளுடனான ஒரு உடன்பாட்டுக்குச் செல்ல இலாயக்கற்றுள்ளது. ஒரு கட்சி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையைத் தயாரிக்கும் போது, மற்றையக் கட்சியின் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகுகின்றது. யூ.என்.பி.யும் பொதுஜன முன்னணியும் இணைந்து பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இலாயக்கற்றிருப்பது அவ்வாறு செய்வதால் பலவித சிங்கள தீவிரவாதக் கட்சிகளின் பின்னணியை இழக்க நேரிடும் என்ற பீதியாலேயாகும். கொழும்பு மாவட்டத்தில் 24 வேட்பாளர்களுடன் களம் இறங்கியுள்ள சோசலிச சமத்துவக் கட்சி மாத்திரமே, சோசலிச மற்றும் அனைத்துலக வேலைத்திட்டத்தில் நின்றுவரும், எல்லா வகையான தேசியவாதத்தையும் பேரினவாதத்தையும் சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கும் ஒரே கட்சியாகும். சோ.ச.க. ஆப்கானிஸ்தானிலான அமெரிக்கத் தலைமையிலான யுத்தத்தை சந்தேகத்துக்கு இடமின்றி எதிர்க்கும் அதேவேளை அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஏனைய கட்சிகள் வழங்கிவரும் ஆதரவு அவர்களின் தொழிலாளர் வர்க்க விரோத கொள்கைகளின் தெளிவான வெளித்தோற்றம் எனவும் எச்சரிக்கை செய்கின்றது. அதன் வேட்பாளர்கள் இலங்கையினுள்ள யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்சியெழுப்புவதற்காகவும் சமுதாயத்தை சோசலிச வழியில் மீளமைப்பு செய்யவும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. சோ.ச.க. யுத்தத்துக்கு முடிவுகட்டுவதற்காக ஒரு பொருத்தமான வேலைத்திட்டத்தை
அபிவிருத்தி செய்கின்றது: அது வடக்குக் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி வாபஸ்பெறவும் முனைப்படைந்துள்ள
ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மக்களின் நேரடியானதும் ஜனநாயக ரீதியிலானதுமான
வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசியலமைப்பு நிர்ணயசபையை கூட்டுமாறும் அழைப்புவிடுக்கின்றது. சோ.ச.க.
அனைத்துலகினதும் இந்தியத் துணைக்கண்டத்தினதும் சோசலிசக் குடியரசு ஒன்றியத்தினது ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா ஈழம் சோசலிசக்
குடியரசுக்காகப் போராடுகின்றது. |