World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

US war crime in Afghanistan: Hundreds of prisoners of war slaughtered at Mazar-i-Sharif

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் யுத்தக் குற்றங்கள்: மஸார்- இ- ஷரீபில் நூற்றுக்கணக்கான யுத்தக் கைதிகள் கொலைசெய்யப்பட்டனர்

By the Editorial Board
27 November 2001

Back to screen version

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாஸார்-இ-ஷரீபில் கைதுசெய்யப்பட்ட 800 தலிபான் கைதிகளில் அதிகமானோர் கொல்லப்பட்ட யுத்த குற்றத்திற்கு அமெரிக்க அரசாங்கமும், இராணுவமும், நேரடியாக பாதுகாப்பு செயலாளரான டொனால்ட் ரும்ஸ்வெல்டும் ஜனாதிபதி புஸ்ஸுமே அரசியல் பொறுப்பேற்கவேண்டும். இக்கொலைகளானது ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலின் உண்மையான தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. செப்டம்பர் 11ம் திகதியின் பயங்கரவாத தாக்குதல்கள் இக்காலனித்துவ வடிவத்திலான யுத்தத்திற்கும், பாரிய கொலைகளுக்குமான முன்நிபந்தனையாக பயன்படுத்தப்பட்டது.

இவ்விரண்டு நிகழ்விலும் காட்டுமிராண்டித்தனமான முறைகள் பாவிக்கப்பட்டுள்ளன. குற்றத்தை மறைப்பதற்காக பொய் கூறப்பட்டது, Qala-i-Janghi கோட்டையில் நடாத்தப்பட்ட கொலைகளானது வியட்னாம் யுத்தகாலத்தில் My Lai இல் செய்யப்பட்ட பயங்கரத்தை நினைவுபடுத்துகின்றது. Phoenix படுகொலைத் திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட அப்படுகொலையில் 20,000 வியட்னாமியர்கள் கொல்லப்பட்டனர். இதன்போது நெருக்கமான குண்டுத்தாக்குதலாலும், ஆகாயத் தாக்குதலுக்கும் Agent Orange எனப்படும் இரசாயன நஞ்சுகள் பயன்படுத்தப்பட்டதுடன், Ben Suc கிராமத்தை அடியோடு அழிக்கையில் ஒரு அமெரிக்க அதிகாரி ''அக்கிராமத்தை பாதுகாப்பதற்கு அதனை அழிக்கவேண்டியிருந்தது'' என கூறினார்.

தொலைத்தொடர்பு சாதனங்களினதும், அமெரிக்க அரசாங்க அறிக்கைகளின் படியும் அமெரிக்க விஷேட படையினரும், CIA அதிகாரிகளும் மாஸார்-இ-ஷரீபில் இருந்ததாகவும், அவர்கள் வானூர்தி விமானங்களையும், யுத்த விமானங்களையும் வான் தாக்குதலுக்கு அழைத்ததாகவும், வடக்கு கூட்டணிப்படையினர் நூற்றுக்கணக்கான கைதிகளை சுட்டுக்கொல்லும் போது அவர்களின் நடவடிக்கைகளை வழிநடாத்தியுள்ளனர். ஜேர்மனி நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் வடக்கு கூட்டணிப்படைகள் சிறையின் வெளிச்சுவருக்கு அப்பாலிருந்து கைதிகள் இருந்த சிறையை நோக்கி சுட்டதை ஒளிபரப்பியது.

எவ்வாறிருந்தபோதிலும் கொல்லப்பட்டவர்களில் அநேகமானோர் அமெரிக்காவின் ஆகாயத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டிருந்தனர். அச்சிறைச்சாலையின் மீது யுத்தவிமானங்கள் குண்டுகளை பொழிந்ததுடன், நிமிடத்திற்கு 1800 சுற்றுக்களை சுடக்கூடிய AC-130 யுத்த ஹெலிகொப்டர்கள் விஷேட படையினரால் சிறைச்சாலையை வானத்திலிருந்து குறிவைத்து தாக்குவதற்காக அழைக்கப்பட்டனர். டாங்கிளும், 2000 வடக்கு கூட்டணிப்படையினரும் அவ்வழிப்பு வேலைகளை பூரணப்படுத்துவதற்கு அழைக்கப்பட்டிருந்தனர். முற்றுமுழுதான ஒருதலைப்பட்டசமான இச்சண்டையில், அங்கிருந்த Time பத்திரிகையாசிரியர் Alex Perry 40 அல்லது அண்ணளவான அமெரிக்க விஷேடபடையினரும் பிரித்தானிய SAS ''தாக்குலை ஒழுங்குபடுத்தியதாகவும்'' அவர்கள் ஆகாய, தரைத்தாக்குதலை வழிநடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ் ஒடுக்குமுறையின் காட்டுமிராண்டித்தனம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது என்பது திங்கட்கிழமை வடக்கு கூட்டணியினரின் பேச்சாளரின் அறிக்கையில் எடுத்துக்காட்டப்படுகின்றது. Zaher Wahadat ''கூடுதலானோர் கொல்லப்பட்டனர், ஒரு சிலரே கைதுசெய்யப்பட்டனர்'' எனவும் 800 பேருக்கு கிட்ட கொல்லப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். ஒரு பிராந்திய தளபதியான ஜெனரல் Rashid Dostum இன் ஆலோசகரான Alim Razim ''உயிருடன் தப்பியுள்ள கைதிகளும் நீண்டநாட்களுக்கு உயிருடன் இருக்கமாட்டார்கள் எனவும், அங்கு கைவிடப்பட்டவர்கள் இறந்துவிடுவார்கள் எனவும், அவர்களில் ஒருவரும் தப்பமாட்டார்கள்'' எனவும் கூறினார்.

வடக்கு கூட்டணியும், அமெரிக்க பென்டகன் அதிகாரிகளும் தலிபான் படையினர் உடைகளின் கீழ் ஆயுதங்களை கடத்தி வந்ததாகவும், காவலாளிகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தப்ப முயற்சித்தனர் என கூறினர். ஆனால் அந்த நேரத்தில் சிறைச்சாலைக்குள் இருந்த பத்திரிகையாளர்களின் தகவல்களின் படி பல பாதுகாப்பு அதிகாரிகளை கைதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுயன்று ஆயுதங்களை கைப்பற்ற ஆரம்பித்ததில் இருந்தே கலவரம் ஆரம்பமானதாக குறிப்பிட்டனர். ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கலவரம் இடம்பெற்றதா என்பது தெளிவாகவில்லை. பிரித்தானிய பத்திரிகையான Guardian அவதானித்ததன்படி ''தப்பியோடும்போது சுடப்பட்டனர், எல்லாவற்றிற்கும் பின்னர் இது புத்தகத்திலுள்ள பழைய புளுகாகும்'' என குறிப்பிட்டது. வடக்கு கூட்டணி படையினர் கைதிகளை நோக்கி சுட்டிருக்கலாம், இதன் மூலம் தற்பாதுகாப்பிற்கான கலவரத்தை உருவாக்கியிருக்கலாம்.

தலிபான் எதிர்ப்பு குழுக்களுக்கு மனித உரிமை மீறல் தொடர்பாக நீண்டவரலாறு உண்டு. பத்தாண்டுகள் நீடித்த ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு யுத்தத்தில் இரண்டு பிரிவினரும், விஷேடமாக மாஸார்-இ-ஷரீபில் கொலைகளில் ஈடுபட்டிருந்தனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாஸார்-இ-ஷரீபில் 400-600 உடல்களை கடந்த கிழமை கைப்பற்றியதாக அறிவித்தது. இது அநேகமாக நவம்பர் 9ம் திகதி இந்நகரத்தை வடக்குகூட்டணி கைப்பற்றிய பின்னர் அவர்களால் செய்ப்பட்ட கூட்டு கொலையில் பலியானவர்களாக இருக்கலாம்.

Alex Berry இன் கருத்தின்படி கைதிகளாக இருந்த பாகிஸ்தான், செச்சேனியா, மற்றும் ஏனைய அரபுநாடுகளில் இருந்து வந்த இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒரு பத்திரிகையாளர் பேட்டிகாண ஆரம்பித்தபோது கலவரம் ஆரம்பமானது என குறிப்பிட்டார். அவர் Time இன் வலைத்தளத்திற்கு ''அது ஒரு மேற்குநாட்டவரின் முகத்தை பார்த்ததால் உருவானது போலிருந்தது. அவர்கள் இங்கு ஜிகாத்திற்காக போராட வந்தவர்கள். அவர்கள் ஒரு மேற்குநாட்டவரின் முகத்தை பார்த்ததும் தாங்கள் பிடிக்கவேண்டியவர் இவர்தான் என கருதிக்கொண்டனர்'' என எழுதியுள்ளார்.

சிறையில் ஒரு மேற்கத்தையவரின் சமூகத்தை பார்த்தவுடன் கைதிகள் ஆத்திரமடைய கூடுதலான காரணங்கள் உள்ளன. அமெரிக்க CIA தலையீட்டாளர்கள் கைதிகளை கூடுதலான விசாரணையையும், அதன் பின்னரான சித்திரவதையும், மரணதண்டனையையும் எதிர்நோக்கும் அல் காட்தாவின் தலைவர்களிலிருந்து சாதாரண தலிபான் படையினரை பிரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராதவிதமாக தலிபான் கைதிகள் வெற்றிகொள்ளப்பட்ட குண்டூஸ் நகரத்தில் சரணடைந்தனர். அவர்கள் கிழக்கிலிருந்து தாக்கிய தஜிக்கிஸ்தானை பின்னணியாக கொண்ட தளபதி Khan Daoud இடம் சரணடைவதிலும் பார்க்க, மேற்கிலிருந்து குண்டூஸை நோக்கிவந்த உஸ்பெக்கிஸ்தானை பின்னணியாக கொண்ட தளபதி Dostum இடம் சரணடைய விரும்பினர். தளபதி Dostum தம்மை பாகிஸ்தானிடம் கைளிக்கலாம் என உறுதியளித்திருக்க சாத்தியக்கூறுகள் இருந்திருக்கலாம்.

கடந்தவார இறுதியில் Dostum அப்படியான உடன்பாட்டை செய்துகொண்டதற்கான பத்திரிகை அறிக்கைகள் இருக்கின்றன. வெளிநாட்டு தலிபானியரை இஸ்லாமிய நீதிமன்றத்தின் முன்நிறுத்தி அவ்விடத்திலேயே சுட்டுக்கொல்லவேண்டும் என கூறும் போட்டி வடக்கு கூட்டணியின் தளபதிகளால் Dostum கண்டிக்கப்பட்டார் எனவும் தெரிவித்தன. Qala-i-Janghi இல் அமெரிக்கப் படையினர் காணப்பட்டது, தலிபான் படையினருக்கு தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என உணரப்பட்டதால் அவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

ரும்ஸ்வெல்டின் கட்டளையின்படி செய்யப்பட்ட படுகொலைகள்

Qala-i-Janghi இல் செய்யப்பட்ட படுகொலைகளுக்கான நிகழ்வுகளுக்கு இட்டுச்சென்ற சம்பவங்கள் இன்னும் உறுதியாக இல்லாதபோதிலும், இவ் இரத்தம் தோய்ந்த நிகழ்வுக்கான அரசியல், தார்மீக பொறுப்புக்கள் உறுதியானவை. இப்படுகொலைகளுக்கு சிலநாட்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகளினதும், மனித உரிமை அமைப்புக்களும் வரவிருக்கும் படுகொலைகள் குறித்து எச்சரித்திருந்தனர். இதற்கு மாறாக அமெரிக்க அதிகாரிகள் கூடுதலான வெளிநாட்டு தலிபான் படையினர் கொல்லப்படுவதை விரும்பினர். அவர்கள் எவ்விதமான ஊக்கமளிப்பும் இல்லாமல் தனிப்பட்ட இரத்தம் குடிக்கும் விருப்புடைய வடக்கு கூட்டணித் தலைவர்களிலும் பார்க்க கூடுதலான நோக்கத்தை மீண்டும் மீண்டும் விடுத்த பகிரங்க அறிக்கைகளில் வெளிப்படுத்தினர்.

செப்டம்பர் 11ம் திகதி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின் லேடன் கட்டளையிட்டது என்பதற்கான முன்வைக்கப்பட்டிருக்கக் கூடிய ஆதாரங்களைவிட, Qala-i-Janghi படுகொலைகளை அமெரிக்கா கட்டளையிட்டது என்பதற்கான கூடுதான உறுதியான ஆதாரங்கள் உள்ளன.

நவம்பர் 19ம் திகதி: வடக்குகூட்டணியின் தளபதியான Khan Daoud, குண்டூஸில் வெளிநாட்டு தலிபான் படையினர் சரணடைந்தால் அவர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்படுவர் என தான் விரும்பியதாகவும், இது தொடர்பாக தலிபானுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் தெரிவித்தார்.

நவம்பர் 20ம் திகதி: அமெரிக்க பாதுகாப்பு செயலாளரான டொனால்ட் ரும்ஸ்வெல்ட் இக்கோரிக்கையை நிராகரித்ததுடன், ''தலிபான்களுடன் இணைந்து இயங்கும் அல் காத்தாவினரும், செச்சேனியர்களும் வெளியேறி வேறுநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் இப்படியான பயங்கரவாத் தாக்குதல்களை செய்வதற்கு காரணமாக இருப்பர்'' என கூறியதுடன், தொடர்ந்து வரும் நாட்களில் வெளிநாட்டு தலிபான் படையினர் கொல்லப்படுவர் அல்லது கைதுசெய்யப்படுவர் என திரும்ப திரும்ப கூறினார்.

நவம்பர் 20ம் திகதி: ஆப்கானிஸ்தானில் இயங்கும் அமெரிக்க, பிரித்தானிய படையினரின் உத்தியோகபூர்வ பேச்சாளரான Kenton Keith, குண்டூஸின் உடன்பாட்டை அமெரிக்க எதிர்த்ததாகவும், எங்களின் கருத்தின்படி உள்ள ஒரேயொரு வழி சரணடைதலே எனவும், எதிர்வரப்போகும் படுகொலைகளை நியாயப்படுத்தியபடி கைதிகளுக்கு எவ்வாறான பொருத்தமான தண்டனை வழங்கப்படவேண்டும் என வடக்கு கூட்டணியின் அதிகாரிகளுக்கு தனது முயற்சிகள் அனைத்தையும் செய்துள்ளதாக கூறி, தாம் எதற்கும் உத்தரவாதம் வழங்க முடியாத நிலையில் உள்ளதாக கூறினார்.

நவம்பர் 23ம் திகதி: New York Times பத்திரிகை ''ஒரு முக்கிய பெண்டகன் அதிகாரியை'' சுட்டிக்காட்டி அவர் கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டு தலிபான் படையினரின் விடுதலையை எதிர்த்ததுடன், அல் கொய்தா அமைப்பினரும், தலிபானினரும் முன்னர் செய்ததை தொடர்ந்தும் செய்யமுடியாது இருப்பது தொடர்பாக நாம் கவனமாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 23ம் திகதி: Washington Post பத்திரிகை ரும்ஸ்வெல்ட் கருத்து ஆப்கான் அராபியர்கள் என அழைக்கப்படுபவர்களை கொல்வதற்காக அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியுள்ளதாக மத்திய கிழக்கின் பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தது தொடர்பாக குறிப்பிட்டிருந்தது. ஒரு விமர்சகர் வடக்கு கூட்டணியானது கைதுசெய்யப்பட்ட தலிபான் கைதிகள் மீது பழிக்குபழிவாங்க அமெரிக்காவால் ''ஊக்கமளிக்கப்பட்டதுடன், தூண்டப்பட்டுள்ளனர்'' என எழுதியுள்ளார்.

நவம்பர் 24ம் திகதி: Times பத்திரிகை ''ஒரு அமெரிக்க அதிகாரியின்'' அறிக்கையை சுட்டிக்காட்டி அமெரிக்க மத்திய கட்டளையகம் தலையிட்டு ஆப்கான் அல்லாதவர்களை குண்டூஸிலும் மற்றைய இடங்களிலும் கைது செய்து அவர்களிடமிருந்து அல் கொய்தா தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டார். மத்திய கட்டளையகம் ஒரு தொகை கைதிகள் வெளிவந்தால் என்ன செய்வது என்பதுடன் பலவிடயங்களில் தலையிட்டுள்ளது என்பதை உறுதியாக கூறலாம் என மத்திய கட்டளையகத்தை சுட்டிக்காட்டி அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும் ''நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பங்குவகிக்கவே விரும்புவதுடன், எங்களால் இயலுமானளவு அதிகமான கைதிகளை அடையவிரும்புகின்றோம் என கூறியுள்ளார். இக் கடைசி அறிக்கை உயர் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தலிபான் கைதிகளை நெருக்கமாக கண்காணிப்பதை எடுத்துக்காட்டுகின்றது. மாஸார்-இ-ஷரீபின் நிகழ்வுகள் அவர்கள் எதிர்பார்த்திராதபோது நிகழவில்லை.

செய்தி நிறுவனங்களின் பங்கு

அமெரிக்க அரசாங்கத்தின் பொறுப்பும், ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானின் இரத்தமூழ்கடிப்பு தொடர்பான செய்தி ஸ்தாபனங்களினது வெட்கங்கெட்ட பொய்களும், பாரிய கொலையை அவர்கள் பாதுகாத்தவிதமும் நாசிசத்தால் செய்யப்பட்ட மோசமான குற்றங்களை ஞாபகப்படுத்துகின்றன.

அமெரிக்க இராணுவ பேச்சாளரான Kenton Keith திங்கட்கிழமை கூட்டணி படையினர் கொலையை செய்யவில்லை என மறுத்துள்ளதுடன், ஜெனீவா உடன்பாட்டின் கீழ் கைதிகளின் ''நிலைமையானது'' அவர்கள் ''எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால்'' தான் [அதாவது தமது கொலைகளுக்கு எதிராக எதிர்த்தபோது] மாற்றப்பட்டது என குறிப்பிட்டார்.

கொண்டூஸில் தலிபான் கைதிகள் அடித்துக்கொல்லப்பட்டது தொடர்பாக பத்திரிகைகள் விபரிக்கையில், Qala-i-Janghi இன் கொலைகளுக்கு மேலாக Kenton Keith வடக்கு கூட்டணி படையினர் ''கட்டுப்படுத்தப்பட்டே செயற்படுகின்றனர் எனவும், ஏதாவது கொடுமைகள் பரந்தளவில் எங்காவது நடைபெற்றதா என எமக்கு தெரியாது'' என கூறினார்.

சம்பவங்களின் இவ்வகைப்பட்ட பார்வையானது அமெரிக்க பத்திரிகைத் துறையால் உண்மையாக எதிர்க்கப்படாதுள்ளது. திங்கட்கிழமை காலை படுகொலைக்கு அடுத்தநாள் நிகழ்ந்த அண்மைய பத்திரிகை மாநாட்டில் இந்த சிறைச்சாலை கொலை தொடர்பாக ஒரு சிறு கேள்வி கூட கேட்கப்படவில்லை. பின்னர் நடைபெற்ற ரும்ஸ்வெல்டின் பத்திரிகை மாநாட்டில் இக்கேள்வி தொட்டும் தொடாத மாதிரி எழுப்பப்பட்டது, ஒரு பத்திரிகையாளரும் மேற்கொண்டு அது தொடர்பாக கேள்வியெழுப்பவில்லை.

இக்கொலைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க பத்திரிகையின் மனிதப்பண்பற்ற தன்மையை Washington Post இராணுவத்தின் நிலைமை குறித்து எழுதிய நீண்ட முன்பக்க கட்டுரை ஒன்றில் காணக்கூடியதாக இருந்தது. Washington Post ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதல்களை, 1980களில் ''அமெரிக்க விஷேட படை ஆலோசகர்கள் உள்ளூர் படையுடன் இணைந்து மார்க்சிச கெரில்லா போராளிகளை வேட்டையாடுவதில் ஈடுபட்ட'' எல் சல்வடோரின் உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்காவின் பங்குடன் ஒப்பிட்டது.

ஆப்கானிஸ்தானை எல் சல்வடோருடன் தெளிவான அங்கீகாரத்துடன் ஒப்பிடுவது, சிலவேளை சிந்திக்காது செய்யப்பட்ட அறிவுரையாக இருக்கலாம். இது மத்திய ஆசியாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பானது ''மனித உரிமைகளை'' பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதல்ல மாறாக பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதோடு சற்று தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தை கொண்டது. எல் சல்வடோரில் அமெரிக்காவால் செய்யப்பட்ட எதிர்ப்புரட்சி பிரசாரமானது 20ம் நூற்றாண்டின் பாரிய குற்றமாகும். அமெரிக்க ஆதரவிலான கொலைப் படைகளால் 50,000 பேர் கொலைசெய்யப்பட்டனர். இப்பாசிச பயங்கரவாத்தினால் கொல்லப்பட்டவர்களில் நன்கு அறியப்பட்டவர்கள் சன்சல்வடோருக்கான கத்தோலிக்க பிதாவான Oscar Romero உம், நான்கு அமெரிக்க Maryknoll பெண்துறவிகளும் ஆகும்.

New York Times இற்கு மாஸார்-இ-ஷரீபில் கொலைகள் தொடர்பான அறிக்கை தலிபான் கைதிகளின் கொலைக்கு அவர்களே குற்றம்சாட்டப்படவேண்டும் என கூறுவது மட்டுமல்லாது, எதிர்வரும் கொலைகளை முற்கூட்டியே நியாயப்படுத்துகின்றது. New York Times '''இந்நிகழ்வானது தான் ஆயிரக்கணக்கானோரின் செயற்திறமுள்ள நூற்றுக்கணக்கான தலிபான் படைவீரர்கள் மீதான கட்டுப்பாட்டை எடுக்கும்போது வடக்கு கூட்டணியினர் உணரும் நம்பிக்கையின்மையை ஆழமாக்குகின்றதோ என்பதை காட்டுகின்றது'' என எழுதியுள்ளது.

அமெரிக்க செய்தித்துறை அரசாங்கத்தின் இராணுவ ஆக்கிரமிப்புக்கும், அரசியல் ஆத்திரமூட்டலுக்குமான ஒரு நேரடி விருப்பமான கருவியாக செயற்படுகின்றது. தொலைக்காட்சிகளும், தினசரி பத்திரிகைகளும் உலகத்தின் எந்தபகுதியிலானாலும் அமெரிக்க படைகளால் செய்யப்படும் குற்றங்களை மூடிமறைத்து நியாயப்படுத்த தயாராக உள்ளன.

யார் பயங்கரவாதிகள்?

அமெரிக்காவிற்கு வெளியே சில முக்கிய பத்திரிகைகளும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீட்டின் இரத்தம் தோய்ந்த தன்மையை அவதானிக்க முன்தள்ளப்பட்டுள்ளன. பிரித்தானிய Guardian பத்திரிகையில் Brian Whitaker என்பவர் 26 திகதி யுத்தக் கொலைகளுக்கு டொனால்ட் ரும்ஸ்வெல்ட் குற்றம்சாட்டப்படலாமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Brian Whitaker ஆப்கானிஸ்தானின் கொலைகளை 1982 செப்டம்பரில் சப்ரா, ஷாட்டில்லா பாலஸ்தீன அகதிமுகாம்களின் மீது நடாத்தப்பட்ட இன்னுமொரு ஏகாதிபத்திய அட்டூழியத்திற்கு ஒப்பிட்டுள்ளார். அதன்போது லெபனான் பாசிச இராணுவக் குழுவினர் இஸ்ரேலிய பாதுகாப்புபடையின் பாதுகாப்புடன் முகாமினுள் புகுந்து 1000 இற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலைசெய்தனர்.

Brian Whitaker ''சப்ரா, ஷாட்டில்லாவிற்கும் ஆப்கானிஸ்தானின் பலர் கொல்லப்பட்டதும் ''பச்சை விளக்கு'' யுத்தத்திற்கான உதாரணங்களாகும். இவற்றில் இந்நிகழ்வுகளுக்கு முக்கிய பொறுப்பானவர்கள் தமது துணையாட்களுக்கு முன்னரே தெரிந்த உற்சாகத்தையும், உதவிகளையும் வழங்கியதன் மூலம் பேசமுடியாத [அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளமுடியாத] இழிவான வேலைகளுக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கொள்ள முயல்கின்றது'' என எழுதியுள்ளார்.

சப்ரா, ஷாட்டில்லா கொலைகளின் போது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமரான ஆரியல் ஷரோனாகும். இவர் பாராளுமன்ற விசாரணைக்கு ஆளானதுடன் அதைத்தொடர்ந்து இராஜினாமா செய்ய தள்ளப்பட்டார். 1982 இன் நிகழ்வுகளுக்காக பல ஐரோப்பிய நாடுகள் ஆரியல் ஷரோனுக்கு எதிராக யுத்தக் கொலைக்குற்றஞ்சாட்ட முயன்றன.

Brian Whitaker ''அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரும்ஸ்வெல்ட் இப்படியான விசாரணைகளை எதிர்நோக்கவேண்டியிருக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் அவரது அண்மைய அறிக்கைகள் கொலைவெறியாட்டத்திற்கு பச்சைவிளக்கை காட்டியிருக்கின்றன. ஆப்கான் அல்லாத படையினர் குறித்து அவர், எனது நம்பிக்கை அவர்கள் கொல்லப்படுவார்கள் அல்லது கைதுசெய்யப்படுவார்கள், ஆனால் எது நிகழும் என்பது தெரியவில்லை என கூறியதாக'' எழுதியுள்ளார்.

ஐக்கியநாடுகள் நீதிமன்றத்தின் உதவியை விசாரணைக்காக, முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதியான மிலோசிவிக் போன்றோருக்கு எதிராக பயன்படுத்துகின்றபோதும், அமெரிக்கா எந்தவொரு நாட்டை சேர்ந்த அரசாங்க அதிகாரிகளால் செய்யப்படும் யுத்தக்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச குற்ற நீதிமன்றத்தை அமைப்பதை விட்டுக்கொடுக்காது எதிர்த்து வந்துள்ளது. இது அமெரிக்காவின் சுதந்தரத்தை பாதுகாப்பதற்கான சாதாரணமான வெறும் கொள்கையல்ல. அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் கொலை நடவடிக்கைகளை நாளாந்தம் திட்டமிட்டு, அதிகாரம் வழங்கி வருகின்றனர். எவ்விதமான புறநிலையான நிலையிலிருந்தும் அவர்களை கிட்லர், கோரிங், கோயபல்ஸ் போன்று யுத்தகுற்றங்களுக்காக சிறையிலடைக்க வேண்டும்.

உலக வர்த்தக மையத்தினதும், பென்டகன் மீதும் விமானத்தை கடத்திச்சென்று தற்கொலை தாக்குதல் நடாத்தி அண்ணளவாக 4000 பேரை கொன்றது ஒரு பேய்த்தனமான குற்றம். அதேவேளை அமெரிக்க அரசாங்கமும் இத்தாக்குதலுக்கு பின் லேடனும், தலிபானும் பொறுப்பு என்பதை காட்டுவதற்கான ஆதாரங்களை வைக்க தவறியுள்ளது. எவ்வாறிருந்தபோதும், செப்டம்பர் 11ம் திகதி தாக்குதல்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் மீது செய்யப்படும் குற்றங்களை ஒருபோதும் நியாயப்படுத்தாது. மற்றும் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் ஏனைய நாடுகள் மீதான புதிய குற்றங்கள் CIA ஆலும் பென்டகனாலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.

Qala-i-Janghi நிகழ்வுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தலையீடு மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், பயங்கரவாதிகளை தண்டிப்பதற்கும் என்பது நம்பமுடியாததாகியுள்ளது. பாரிய இராணுவத்தையும், தனது விருப்பத்தை பலத்தால் நிறைவேற்றும் மூர்க்கத்தனமான தீர்மானமும் கொண்ட அமெரிக்க அரசாங்கமே உலகின் பெரிய பயங்கரவாதியாகும்.

அமெரிக்காவினதும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் பொறுப்பானது, ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பி ஏகாதிபத்திய யுத்தத்தையும், அது பாதுகாக்கும் இலாப அமைப்பு முறையையும் முடிவுகட்டுவதாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved