World Socialist Web Site www.wsws.org |
WSWS :செய்திகள் & ஆய்வுகள் : ஆசியா : இலங்கைSri Lankan government opens housing project in bid for votes இலங்கை அரசாங்கம் வாக்குகளுக்காக வீடமைப்புத் திட்டங்களைத் திறந்து வைத்துள்ளது By Panini Wijesiriwardana, SEP candidate for Colombo
district இலங்கையில் டிசம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்குகளைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஆளும்பொதுஜன முன்னணி (PA) கொழும்பு நகரில் ஒரு பொது வீடமைப்புத் திட்டத்தை அவசரமாகத் திறந்து வைத்துள்ளது. அரசாங்கம் நாட்டின் ஏழைகளின் பெரும் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு திட்டமாக இதை அபிவிருத்தி செய்துள்ளதோடு இது சாஹசபுர (Sahasapura) அல்லது புத்தாயிர நகரம் (Millenium City) என அழைக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் இந்த உயரமான வீடமைப்புகளில் வசதிகள் மிகவும் மட்டுப் படுத்தப்பட்டவையாக உள்ளன. அதே வேளை இதில் குடியேற தயாராக உள்ளவர்களுக்கு செலவு ஈடுசெய்ய முடியாததாக இருக்கும் என நெருக்கமான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வீடமைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம் வீடில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதல்ல. மாறாக பழைய குடியிருப்புக்கள் அல்லது சேரிகள் அமைந்துள்ள பிரதான நிலங்களை கைத்தொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தித் திட்டங்களுக்காக வேறுபடுத்திக் கொள்வதற்காகும். இந்த வீடமைப்புத் திட்டம் கொழும்பு நகரின் பழையதும் மிகப் பெரியதுமான வனாத்தமுல்ல குடியிருப்பின் ஒரு பகுதியன 66 காலனி என அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. அங்கு பெரிய குடும்பங்கள் வாழும் வீடுகள் உட்பட கிட்டத்தட்ட 3,000 இடம்பெயர் குடிசைகள் உள்ளன. பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் திரிசர புரவர (Sustainable Township) திட்டத்தின் கீழ் 671 வீடுகள் கொண்ட 14 மாடிக் கட்டிங்களுக்கான ஐந்து இறக்கை (Five Wings) திட்டத்தை நிர்மாணிக்க சில அரசாங்க முகவர்களால் வரையறுக்கப்பட்ட நிஜ தோட்ட முகாமைத்துவம் (Real Estate Management Ltd- REEL) ஸ்தாபிக்கப்பட்டது. இந்த வீடமைப்புத் திட்டம் தேர்தல் தினத்துக்கு ஒரு கிழமைக்கு முன்னர் நவம்பர் 28ம் திகதி மேளதாளங்களோடு திறந்து வைக்கப்பட்டது. இந்த வீடுகள் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கே கையளிகப்பட்டன. எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூர் வேட்பாளர் ஒருவர் அரசாங்கம் இந்த வீடுகளை வாக்காளர்களுக்கு இலஞ்சமாக விநியோகிப்பதாக தேர்தல் ஆணையாளரிடம் குற்றம் சாட்டினார். வீடமைப்பு அமைச்சர் யூ.என்.பி. மக்களுக்கு வீடுகள் வழங்குவதை எதிர்க்கின்றது எனக் குற்றம் சாட்டியவுடன் எதிர்க் கட்சி வேட்பாளர் வாய் மூடிக் கொண்டார். திறப்புவிழாவுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் உட்பட வெளியாருக்கு இந்த வீடமைப்புத் திட்டத்தை பார்வையிடுவது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் உலக சோசலிச வலைத் தளத்தின் (World Socialist Web Site) செய்தியாளர் குழு இந்த குடியிருப்பாளர்கள் முகம் கொடுக்கவிருக்கும் நிலைமைகள் தொடர்பாக ஒரு சித்திரத்தை பெற்றுக்கொள்ள மேற்கொண்ட முயற்சி சாதகமானதாக அமைந்தது. இந்த உயரமான கட்டிடம் வெளியில் ஒரு நவீன முறையில் மிக அழகாக நிறம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் உள்ளே வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன. இங்கு நான்கு விதமான அளவு கொண்ட மாடிக் கட்டிடங்கள் உள்ளன. -31-36 சதுர மீட்டர் (335க்கு 600 சதுர அடி). இவை அவர்கள் முதலில் வசித்த வீட்டின் அளவின் அடிப்படையிலேயே குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. குளியலறை இரண்டு விதமாக அமைக்கப்பட்டுள்ளது -ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர். ஏனைய இரண்டு வடிவமைப்புகளும் குளியலறையையும் கழிவறையையும் இணைக்கின்ற போதிலும் வெறுமனே ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய மூன்று வடிவமைப்புகளிலும் எல்லா வீடுகளிலும் சமையலறை கிடையாது. ஒரு எரிவாயு அடுப்பையும் ஏனைய சில பொருட்களையும் வைப்பதற்கான ஒரு சாதாரண கொங்கிரீட் திண்ணை உள்ளது. ஒவ்வொரு மாடியிலும் ஐந்து பொது சலவைச் சாலைகள் உள்ளன. ஒரு தாய்மார் குழு கோபத்துடன் தெரிவித்ததாவது: நாங்கள் கழுவுவதற்காக இந்த சலவைச் சாலைகளை பயன்படுத்தவேண்டும். ஏனென்றால் புதிய கட்டிடங்களில் உள்ள குளியலறைகளில் ஒருவருக்கு திரும்புவதற்கு கூட இடம் போதாது. நாங்கள் எங்கே குளிப்பது, எங்கே எங்கள் துணிகளை கழுவுவது போன்ற எல்லாவற்றையும் அவர்களே (கம்பனி) தீர்மானித்து விடுகின்றார்கள். நாங்கள் பொம்மைகளாக தரம் குறைக்கப்பட்டுள்ளோம். இந்தத் திட்டத்தின் இடம்பெயர் கொள்கைகளை, எங்களுக்கு விளக்கமளித்த தொழிலாளர் குழுவினரின் கருத்துக்கள் கோடிட்டுக் காட்டின. "நாங்கள் இந்தக் கட்டிடங்களுக்கு வடிகால்களைப் பொருத்துகின்றோம். நாங்கள் இந்த வடிகால்களை எங்கே பொருத்தப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ள பழைய சாக்கடையிலாகும். திறப்பு விழாவுக்கு முன்னர் இதை முடிப்பதற்காக சுறுசுறுப்பாக வேலைசெய்கின்றோம்." ஆர்.ஈ.ஈ.எல். (REEL) தமது மாடிக் கட்டிடங்கள் உயர் தரமானவை எனவும் "சமூகத்தில் உள்ள எந்த ஒரு வருமானம் பெரும் குழுவுக்கும் பொருத்தமானது" எனவும் பெருமைப்பட்டுக் கொண்டது. ஆனால் இந்தக் கட்டிடங்களில் வசித்துவரும் சிலர் தெளிவுபடுத்தியதைப் போல், இந்தப் புதிய வீடுகள் அவர்கள் முன்னர் வாழ்ந்து கொண்டிருந்த சேரி வீடுகளை விட சிறியவை. "அத்தோடு எங்கள் துணிகளைக் கழுவுவதற்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டும். நாங்கள் அந்தக் குடியேற்றத்தில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக வாழ்ந்தோம். இந்தத் திட்டம் ஒரு வகையில் எங்களுக்கான தண்டனையாகும். அரசாங்கம்எங்கள் வீடுகளை அழித்து நிலங்களை கம்பனிகளுக்கு விற்கப்போகின்றது. இவ்வாறான ஒரு திட்டத்தின் மூலம் இலாபமடையப் போவது யார்? முதலில் சேரிவீடுகளால் நிரம்பியிருந்த கொழும்பு நகரின் 280 ஹெக்டரில், மாடிக் கட்டிங்களால் அந்த வீடுகளை மீளமைப்பதற்கு 120 ஹெக்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். மிகுதி 160 ஹெக்டர்களும் வர்த்தகத் தேவைகளுக்காக பெரும் இலாபத்துடன் விற்றுத் தள்ளப்படும் என்பதில் சந்தேகம் கிடையாது. வீடமைப்பு அமைச்சர் இந்த வீடுகள் பழைய குடியேற்றத்தில் வாழ்ந்தவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒரு குடியிருப்பாளர் குறிப்பிட்டது போல்: "இந்த வீடுகள் எங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது என்பது முழுப் பொய்யாகும். அரசாங்கம் எங்களது இடங்களை எடுத்துக் கொண்டதால் இந்த வீடுகளை எங்களுக்கு விநியோகித்துள்ளது. இதன்படி முதலில் 25,000 ரூபாய்களை ஆர்.ஈ.ஈ.எல். கம்பனியிடம் வைப்பில் இடவேண்டும். அவர்கள் இது ஒருசேமிப்பு வைப்பு என சொல்லிக் கொள்வதோடு இது வட்டியால் பராமரிக்கப்படும் எனவும் சொல்கிறார்கள். "இந்த வீடுகள் எங்களது பழைய வீட்டின் அளவின்படியே வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சராசரி அளவு 335 சதுர அடிகளாகும். பழைய வீட்டின் அளவு 150 சதுர அடிகளானால் அந்தக் குடும்பம் 335 சதுர அடி வீடு கிடைத்ததையிட்டு பெருமைப்படலாம். ஒருவரது பழைய வீடு 150 சதுர அடியை விட குறைவானதாக இருந்தால் எவ்வாறெனினும் ஒரு வீட்டை வாங்குவதற்கு மேலதிகமாக செலுத்த வேண்டும்." பல ஏழைக் குடும்பங்கள் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுடன் இந்த 25,000 ரூபா வைப்புப் பணத்தை செலுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்தத் தொகை ஒரு தொகை தொழிலாளர்களுக்கு அவர்களின் ஆறு மாத சம்பளத்துக்கு சமமானதாகும். நாங்கள் குப்பைத் தோட்டத்துக்கு (இது ஒரு பழைய குப்பைத் தொட்டிக்கு அருகில் அமைந்துள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது) அருகில் உள்ள குடியிருப்பாளர்களிடம் பேசிய போது அவர்கள் தங்களுக்கு புதிய வீடுகள் வழங்குவதற்கான எந்த ஒரு திட்டமும் கிடையாது எனத் தெரிவித்தனர். அவர்கள் (அதிகாரிகள்) எங்களுக்கு பின்னர் வீடுகள் வழங்கப்படும் எனக் கூறினார்கள். எப்பொழுது என்று யாருக்குத் தெரியும்? இந்த குப்பைத் தோட்டத்துக்கு கிழ் ஊற்று நீர் இருக்கின்றது. ஆகவே அது பெறுமதியானதல்ல. அதனால் தான் எங்களுக்கு இது ஒத்திப்போடப்பட்டது." தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வரையறுக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் கொழும்பில் அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ள ஏழைகளின் தேவைகளை திருப்திப்படுத்த போதுமானதல்ல. மத்திய வங்கி தனது 1996 வருடாந்த அறிக்கையில் 171,599 வீடுகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் ஒவ்வொரு வருடமும் தேவைப்படும் அளவை பூர்த்தி செய்ய 70,000 வீடுகள் அவசியமாகுவதாக திட்டமிட்டிருந்தது. 2000 ஆண்டு கடைப்பகுதி வரையிலான நிர்மாணப் பணிகள் 336,802 வீடுகளை மாத்திரமே பூர்த்தி செய்துள்ளதோடு, கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 200,000 பற்றாக்குறையையும் விட்டு வைத்துள்ளது. மத்திய வங்கி அறிக்கையின்படி உண்மையில், நிர்மாணப் பணிகளின் வீதம் குறைவடைந்து வருகின்றது. 1999ல் நிர்மாணிக்கப்பட்ட 81,662 தொகையுடன் ஒப்பிடுகையில் 2000 ஆண்டில் 42,225 வீடுகளே நிர்மாணிக்கப்பட்டுள்ள அதேவேளை பொருளாதாரப் பின்னடைவின் பேரில் அது மேலும் குறைக்கப்படவுள்ளது. கொழும்பு மிகவும் பாதிப்புக்குள்ளான பிரதேசமாகும். இங்கு ஜனத்தொகையில் 51 வீதமான மக்கள் 1500 குடியிருப்புகளில் 66,000 குடிசைகளிலும் சேரிகளிலும் வாழ்கின்றனர். வீதிகளுக்கும் ரயில்பாதைகளுக்கும் மற்றும் வாய்க்கால்களுக்கும் அருகில் அமைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 11,000 குடிசைகள் புதிய வீடுகளுக்கான வாக்குறுதிகள் எதுவும் இன்றி சட்டரீதியாக அகற்றப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஆளும் பொதுஜன முன்னணியும் எதிர்க் கட்சியான யூ.என்.பி.யும் தமது தேர்தல் பிரச்சாரங்களில், தாம் தேர்வு செய்யப்பட்டால் அனைவருக்கும் பொருத்தமான வீடுகளை வழங்குவதாக கூறிவந்தனர். எவ்வாறெனினும் இரண்டு பெரிய கட்சிகளும், அரசாங்க செலவுகளையும் விசேடமாக பிரதேசங்களில் பொது வீடமைப்பு, பொதுவசதிகள், கல்வி மற்றும் சுகாதார செலவுகளை வெட்டித் தள்ளுவதற்கு அழைப்பு விடுத்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தைஅமுல்படுத்துவதற்கு இணங்கியுள்ளன. கடந்த தேர்தலின் பின்னர் இடம்பெற்றதைப் போல் இம்முறையும் வீடமைப்பு வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் மோசமாக கிழித்தெறியப்படும். உண்மையான நிலவரத்தை 2000 ஆண்டுக்கான அரசாங்க செலவு விபரங்களில் காணலாம்.
எல்லாப் பிரதேசங்களுக்குமான நகர்ப்புற கிராமப்பற வீடமைப்புத் திட்டங்களுக்கான மொத்த செலவு 1.4 பில்லியன்களாகும்.
இது தீவின் வடக்குக் கிழக்கில் தற்போது இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தை தொடர்வதற்காக இராணுவச் செலவில்
சேர்க்கப்பட்ட 85 பில்லியன் ரூபாவில் ஒரு மிகச் சிறிய பகுதியாகும். ஏனையப் பிரச்சினைகளைப் போலவே வீடில்லாப்
பிரச்சினைக்கான தீர்வும், யுத்தத்துக்கு முடிவு கட்டுவதுடனும் சமுதாயத்தை சில செல்வந்தர்களின் இலாபத் தேவைகளுக்காக
அன்றி தொழிலாளர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சோசலிசப் பாதையில் அதை மீளமைப்பதோடும்
இணைந்துகொண்டுள்ளது. |