World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இலங்கை

Socialist Equality Party holds election meeting in Sri Lanka

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் கூட்டத்தை நடாத்தியது

By a correspondent
1 December 2001

Back to screen version

இலங்கையில் டிசம்பர் 5ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பாகமாக கடந்த புதன் கிழமை தலைநகரான கொழும்பில் கட்சியின் கொள்கைகளையும் அரசியல் நிலைமைகளையும் விளக்கும் ஒரு பகிரங்க விரிவுரையை நடாத்தியது. சோ.ச.க. பொதுச் செயலாளரும் 24 அங்கத்தவர்களைக் கொண்ட வேட்பாளர் குழுவின் முதன்மை வேட்பாளருமான விஜே டயஸ் இன் விரிவுரையை 125க்கும் மேற்பட்ட புத்தி ஜீவிகளும் இளைஞர்களும் செவிமடுத்தனர்.

விஜே டயஸ் தனது விரிவுரையின் ஆரம்பத்தில், இரு பிரதான கட்சிகளான ஆளும் பொதுஜன முன்னணியினதும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினதும் பிரச்சாரங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகளதும் காடைத்தனங்களதும் அதிகரித்த மட்டம், தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள ஜனநாயக உரிமைகள் மீதான மேலதிக தாக்குதல்களுக்கான ஒரு சமிக்கையாகும் என எச்சரித்தார். இந்த இரண்டு கட்சிகளும், நாட்டின் நீண்ட உள்நாட்டு யுத்தத்துக்கும் வீழ்ச்சியுறும் வாழ்க்கை நிலைமைகளுக்கும் எந்த ஒரு தீர்வையும் வழங்க இலயக்கற்றுள்ள அதே வேளை பெரும் வர்த்தக சமூகத்தினர் கோரியுள்ள நிகழ்ச்சி நிரலை சர்வாதிகாரப் போக்கில் நடைமுறைக்கிடவுள்ளன எனத் தெரிவித்தார். தனது வர்க்க நலன்களுக்காக போராட தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார்.

கடந்த தேர்தல் இடம்பெற்று ஒரு ஆண்டுக்குள் இடம்பெறவுள்ள இந்தத் தேர்தலானது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான கொடூர யுத்தத்தின் மத்தியில் இடம்பெறவுள்ளது என டயஸ் தெரிவித்தார். மத்திய ஆசியாவின் எண்ணெய் எரிவாயு வளங்கள் மீதான கட்டுப்பாட்டை கவருவதன் பேரில் இடம்பெறும் இந்த யுத்தம் ஒரு புதிய காலனித்துவ யுகத்தை சுட்டிக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தனது நலன்களை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் மீண்டும் தமது இராணுவப் பலத்தை பயன்படுத்தி வருவதாக விளக்கினார். ஆப்கானிஸ்தானிலான இந்தத் தலையீடு 1990ல் ஈராக்கிலான ஆக்கிரமிப்பையும், 1999ல் சேர்பியா மீதான ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து இடம்பெறும் மூன்றாவது அமெரிக்கத் தலைமையிலான யுத்தம் என்றார். அமெரிக்கா தனது நிகழ்ச்சி நிரலை ஆக்கிரமிப்பு ரீதியில் முன்தள்ளுவதற்காக உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியிலும் நியூ யோர்க் மற்றும் வாஷிங்டனில் இடம்பெற்ற பிற்போக்கு பயங்கரவாத தாக்குதலையும் அப்பாவி பொதுமக்களின் உயிரிப்புக்களின் பேரிலான துயரத்தையும் சுரண்டிக்கொள்கின்றது என விரிவுரையாளர் தெளிவுபடுத்தினார்.

"புஷ் நிர்வாகம் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்த ஜனநாயக உரிமைகளை அமெரிக்காவினுள்ளேயே அழிப்பதற்காக பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை பயன்படுத்துகின்றது" என அவர் கூறினார். ஆப்கானிஸ்தானிலான யுத்தம் பெரும் வல்லரசுகளுக்கிடையிலான போட்டியை வளர்ச்சி காணச் செய்துள்ளதோடு துணைக்கண்டத்திலான பதட்ட நிலையையும் உக்கிரமாக்கியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை தத்தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதில் ஈடுபட்டுள்ளன. உலக நிலைமைகள் முற்றாக மாற்றமடைந்துள்ளதோடு இலங்கை உட்பட சகல நாடுகளிலும் நிலைமை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

டயஸ் கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் இராணுவம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளிடிமிருந்து பின்வாங்கியது தொடக்கம் இலங்கையின் அரசியல் நிலைமையை விபரித்தார்.

அவர் இலங்கை ஆழமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். யுத்த செலவீனம் கடந்தாண்டில் 52 மில்லியனிலிருந்து 85 மில்லியனாக அதிகரித்துள்ளது. அன்நிய செலாவணி ஆறு வாரகால இறக்குமதியை சமாளிக்க மட்டுமே போதுமானதாக உள்ளது. அரசாங்கம் மார்ச் மாதம் 253 மில்லியன் டாலர்களை கடனாகப் பெறுவதற்காக கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்றை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளத் தள்ளப்பட்டது.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்குமான நிலைமைகளை சிருஷ்டிக்க பொதுஜன முன்னணியும் யூ.என்.பி.யும் இணைய வேண்டும் என்பதே பெரு வர்த்தகர்கள் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வி கண்டதைத் தொடர்ந்து பொதுஜன முன்னணி தமது பாராளுமன்றப் பெரும்பான்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஜே.வி.பி.யுடன் ஒரு உடன்பாட்டுக்கு சென்றது. பெரும் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் புஷ் நிர்வாகம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்தியவுடன் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு தள்ள இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கணித்தனர். ஆனால் எந்த ஒரு தீர்வையும் பிடிவாதமாக நிராகரித்த பொதுஜன முன்னணி-ஜே.வி.பி. கூட்டு இந்தத் திட்டங்களுக்கு பாதகமாக அமைந்ததோடு வர்த்தக சமூகத்தினர் உரிய காலத்துக்கு முன்னரே ஒரு தேர்தலுக்குத் தள்ளினர்.

டயஸ், சகல பிரதான கட்சிகளும் அமெரிக்க தலைமையிலான யுத்தத்தை சூழ அணிதிரண்டுகொண்டுள்ளதை சுட்டிக் காட்டினார். "செப்டம்பர் 11ம் திகதிய தாக்குதலின் பின் ஜனாதிபதி குமாரதுங்க இலங்கையின் துறைமுகங்களையும் விமானத் தளங்களையும் புஷ் நிர்வாகத்தின் 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்துக்காக' உடனடியாக வழங்கினார். தமது ஏகாதிபத்திய அடிவருடித் தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் எந்த ஒரு கட்சியும் குமாரதுங்கவின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை."

பெரு வர்த்தகர்களின் சிந்தனையின் எதிரொலியாக யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொலைக் காட்சி பேட்டியொன்றில் "உலக நிலைமை பயங்கரவாதத்திற்கு எதிராக மாறியுள்ளதால் இந்த நிலைமையை நான் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு தள்ள பயன்படுத்துவேன்" என குறிப்பிட்டார். தனது அரசாங்கம் "சட்டத்தையும் ஒழுங்கையும" "ஒழுக்கத்தையும்" நிலைநாட்டும் எனக் குறிப்பிட்டார். யூ.என்.பி. விடுதலைப் புலிகளுடனான ஒரு ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியம் தொடுக்கும் தாக்குதல்களை எதிர்க்கும் ஏழைகளையும் தொழிலாளர்களையும் அடக்க இலங்கை இராணுவத்தை வடக்கு-கிழக்கு யுத்தத்திலிருந்து விடுவிக்கும் என கணிக்கின்றது.

சோ.ச.க. செயலாளர், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் உரையும் கூட ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க யுத்தத்தை வரவேற்கின்றது என சுட்டிக் காட்டினார். "ஒரு புறத்தில் பிரபாகரன் ஏகாதிபத்தியவாதிகளின் பின்னால் அணிதிரள்வதோடு மறுபுறத்தில் அவர் யூ.என்.பி.க்கான தமது ஆதரவை சுட்டிக் காட்டுகின்றார். இந்த நிலைப்பாடு விடுதலைப் புலிகளது வர்க்க நலனை சுட்டிக் காட்டுகின்றது. அவர் விக்கிரமசிங்கவுடனான ஒரு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்த போதிலும், அது தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு மாறாக தமிழ் முதலாளித்துவ கும்பல்களுக்கு சுரண்டலுக்கான ஒரு பிரதேசத்தை பெற்றுக் கொள்ளவேயாகும்" என அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் எதிர்கொண்டுள்ள எரியும் பிரச்சினைகளைத் -யுத்த முடிவு, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல், மற்றும் வாழ்க்கை நிலைமைகளையும் தொழிலையும் பாதுகாத்தல்- தீர்ப்பதற்கு தொழிலாளர் வர்க்கம் சோசலிச வழியில் சமுதாயத்தை மீளக் கட்டியெழுப்ப ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என டயஸ் தெளிவுபடுத்தினார். இந்த வேலைத் திட்டத்தை அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக மாத்திரமே அபிவிருத்தி செய்ய முடியும். சோ.ச.க. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தோழமைக் கட்சிகளுடன் உலக சோசலிச வலைத் தளத்தினூடாக இம்முன்நோக்குக்காக போராடுகின்றது என அவர் கூறினார்.

சோ.ச.க.வின் பிரச்சாரத்துக்கு தொடர்புசாதனங்களில் ஒரு வரையறுக்கப்பட்ட சலுகையே வழங்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற வகையில் அரச தொலைக் காட்சி, வானொலி ஊடகங்களில் தனது வேலைத் திட்டத்தை தமிழ் சிங்கள மொழிகளில் வெளியிட சோ.ச.க.வுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. பிரபல தனியார் தொலைக் காட்சியான சிரச, தனது "2001 தேர்தல் அரங்கு" நிகழ்ச்சியில் சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் கட்சியின் கொள்கையை மூன்று நிமிடத்தில் சுருக்கமாக விளக்க அழைப்பு விடுத்திருந்தது. தமிழ் தினசரியான தினக்குரல் சோ.ச.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பூரணமாக மீள்பிரசுரம் செய்ததுடன் இன்னுமொரு தமிழ் தினசரியான வீரகேசரி சோசலிச சமத்துவக் கட்சியின் பத்திரிகையாளர் மகாநாட்டின் சாராம்சத்தை போதுமானளவு பிரசுரித்திருந்தது.

ஆனால் தீவிரவாதக் குழுக்களான நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி உட்பட்ட ஏனைய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட பரந்த பிரச்சாரங்களுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர் வர்க்கத்தின் நியாயமான சோசலிசப் பதிலீடாக விளங்கும் ஒரே ஒரு கட்சியான சோ.ச.க.வுக்கு ஊடகங்கள் கணிசமானளவு இருட்டடிப்பை செய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved