World Socialist Web Site www.wsws.org


WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : சீனா

China's stake in the US "war on terrorism"

அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில்" சீனாவின் நலன்

By James Conachy
26 November 2001

Back to screen version

செப்டம்பர் 11லிருந்து ஆப்கானிஸ்தான் மீதான புஷ் நிர்வாகத்தின் யுத்தத்திற்கு அரசியல் ஆதரவை சீன அரசாங்கம் ஜாக்கிரதையாக நீட்டித்தது. அதேவேளையில் இதர நாடுகளைப் போலவே பெய்ஜிங்கும் இந்த சந்தர்ப்பத்தை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதன் சொந்த நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்கின்றது.

அமெரிக்காவுடனான அதன் உறவில் அது தற்காலிகமாக பதட்டங்களைக் குறைத்துள்ளது. 2000ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது சீனாவை "ஒரு மூலோபாயப் போட்டியாளன்" என்று புஷ் முத்திரை குத்தினார், பதவி ஏற்ற பின்னர் பெய்ஜிங் தொடர்பாக மிகவும் அதிகமான விரோத நிலைப்பாட்டை எடுத்தார். அது ஏப்ரலில் அமெரிக்க உளவு விமான மோதல் விஷயத்தில் முன்னிலைக்கு வந்தது. புஷ்ஷின் தேசிய ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு சீனாவின் எதிர்ப்பு போன்ற எந்த விஷயங்ளுமே தீர்க்கப்படவில்லை, ஆனால் அவை வேண்டுமென்றே கீழ் அமுக்கப்பட்டது.

நவம்பர்11ல், உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organisation), அமெரிக்கா எதிர்ப்புக்கள் எதையும் எழுப்பாது சீனா அதனுள் நுழைந்ததானது சார்பு ரீதியாக ஒரு தடங்கலற்ற விவகாரமாகும். அடுத்த நாள், புஷ் சீனத்தலைவர் ஜியாங் ஜெமினை (Jiang Zemin) அழைத்து சீனா, உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்தற்கு பாராட்டு தெரிவித்தார் மற்றும் பயங்கரவாதம் மீதான பூகோள யுத்தத்திற்கு ஜெமின் அளித்து வரும் ஆதரவுக்காக அவருக்கு நன்றி கூறினார்.

எவ்வாறாயினும் மூலோபாய மற்றும் வளங்கள் நிறைந்த மத்திய ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நேரடித் தலையீடு செய்திருப்பது பற்றி சீனா கலக்கம் அடைந்துள்ளது. இந்தப் பகுதியில் சீனாவுக்கு அதன் சொந்த பேராவல் இருப்பது மட்டுமல்ல, அது மத்திய ஆசியக் குடியரசுகளின் எல்லைகளில் உள்ள மேற்கு மாகாணமான சின்சியாங்கில் (Xinjiang) துருக்கிய மொழி பேசும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட, உவைகூர் (Uyghur) சிறுபான்மை இன மக்கள் மத்தியில் தொடர்ந்து நடந்து வரும் கிளர்ச்சியையும் கூட எதிர் கொண்டுள்ளது.

சீனா, அதன் ஒடுக்குதலை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்காவின் ''பயங்கரவாதம் மீதான யுத்தத்தை" பயன்படுத்தியது. நவம்பர் 14ல் சீன துணைப் பிரதமர் கியான் கிச்சென் (Qian Qichen), கடந்த காலத்தில் சின்ஜியாங்கில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக முறையீடு செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான கமிஷனிடம் கூறினார்- அதாவது ஒசாமா பின் லேடனின் அல்கொய்தா வலைப்பின்னலால் இயக்கப்படும் ஆப்கானிலுள்ள முகாம்களில், அந்த மாகாணத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் பயங்கரவாதப் பயிற்சி பெற்றனர் என்று. சமீப வாரங்களில், தலிபான்களுடன் சேர்ந்து போராடி பிடிபட்ட "வெளிநாட்டவர்கள் " மத்தியில் உவைகூர் இனத்தவரும் இருந்தனர்.

செப்டம்பர் 11க்குப் பிறகு சின்ஜியாங்கினுள் பத்தாயிரக் கணக்கான மேலதிக சீனத் துருப்புக்கள் அனுப்பப்பட்டன. அது எல்லை நிலைகளை பலப்படுத்தவும் மற்றும் இராணுவ சட்ட நிலைமைகளைத் திணிப்பதற்குமாகும். உத்தியோகபூர்வமான சின்குவா (Xinhua) செய்தி சேவையின் நவம்பர் 19 கட்டுரையின் படி, சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்திற்கு செப்டம்பரில் ஆணையிடப்பட்டது. மிகவும் பிரபலமான அச்சுறுத்தல்களாக பட்டியிலிடப்பட்டவை பின்வருமாறு: "விரோதமான வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவலும் நாசமும்", "தேசியவாத உடைக்கும் சக்திகளினால் இடையூறு" மற்றும் "மதவாத தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும்" ஆகும்.

சின்ஜியாங்கில் நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பிரிவினைவாதத்தை ஊக்குவித்ததற்காக ஒன்பது பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் உவைகூர் இனத்தைச்சேர்ந்த எதிர்ப்பு அமைப்புக்கள் குற்றம் சாட்டின. அமெரிக்கர்கள் சின்ஜியாங்கிற்கு வந்து அவர்களை சீன ஆட்சியில் இருந்து விடுவிப்பார்கள் என்று எள்ளி நகையாடிய ஒருவரும் கைது செய்யப்பட்டார். சமீப வாரங்களில் எதிர்ப்பு அமைப்புக்கள் சீனா மீது குற்றம் சாட்டின, அதாவது முஸ்லிம் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை சீனா தடுக்கிறது மற்றும் இஸ்லாமிய புனித மாதமான ரமலானின் போது நோன்பு கடமைப்பாடுகளைப் புறக்கணிக்குமாறு பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர், இல்லை எனில் வெளியேற்றப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்படுகின்றனர் என்றும் குற்றம் சாட்டின.

சீன மேல் தட்டினரின் பொருளாதாரப் பேராவல்களுக்கு சின்ஜியாங் முக்கியமானதாகும். அந்த மாகாணம் சீன நாட்டு மக்கள் தொகையின் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்களைக் கொண்டுள்ளது, ஆனால் முக்கியமான வளமாக இன்னமும் எடுக்கப்படாத எண்ணெய் சேமிப்புக்களையும், இயற்கை எரிவாயுவையும் , கனிப்பொருட்களையும் கொண்டுள்ளது. தற்போது சீனா 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் ஒரு பிரம்மாண்டமான இயற்கை எரிவாயு குழாய்வழித் திட்டத்திற்கு முதலீட்டைக் கவர முயற்சிக்கின்றது, அது அந்த மாகாணத்திலிருந்து ஷங்காயிற்குக் கட்டப்படுகிறது. மத்திய ஆசியாவிலுள்ள பெரும் எண்ணெய் மற்றும் வாயு கிடங்குகளுக்கான வாசல் கதவாக சின்ஜியாங்கை சீனா பார்க்கிறது. கஜக்கஸ்தான் மற்றும் ரஷ்யாவில் உள்ள வயல்களில் இருந்து குழாய் வழிகளைக் கட்டுவதற்கு சீனக் கம்பெனிகள் ஏற்கனவே வெளிநாட்டுப் பங்காளிகளை பார்க்கத் தொடங்கியுள்ளன. (பார்க்க: http://www.wsws.org/articles/2001/jan2001/oil-j03.shtml)

சீனா இப்படியான திட்டங்களுடன் மத்திய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை வளர்க்க முயற்சிக்கிறது. 1996ல் அது ரஷ்யா, கஜகஸ்தான், தஜிக்கிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானுடன் சேர்ந்து "ஷங்காய் குழு" வை அமைத்தது. இந்தக் குழுவின் பிரகடனம் செய்யப்பட்ட குறிக்கோள்களில் ஒன்று என்னவெனில், மத்திய ஆசிய வளங்களைச் சுரண்டுவதை ஒருங்கிணைந்து செய்வது மற்றும் இந்த பிராந்தியத்திலிருந்து பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை வேருடன் அழிப்பதாகும் -இவற்றில் பல ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவை அல்லது அங்கிருந்து இயங்குபவை.

உவைகூர் எதிர்ப்பு

உவைகூர் போராளிகளைப் பயிற்றுவிப்பதில் ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்ட அல்கொய்தா இயக்கத்தின் ஈடுபாடு என்னவாக இருந்தபோதிலும் சின்சியாங்கில் அமைதியின்மைக்கான மூலவளம் என்னவென்றால், சமூக சமத்துவமின்மை தொடர்பான மனக்கசப்பு மற்றும் பெய்ஜிங்கினால் பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் மத மற்றும் கலாச்சார ஒடுக்கு முறை ஆகும். சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஆப்கான் முஜாஹைதீன் இயக்கத்தின் வெற்றியினால் முன் உந்தப்பட்ட இஸ்லாமியப் பிரிவினைவாதம் 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் சின்ஜியாங்கில் ஆதரவைப்பெற்றது.

சீன ஆட்சிக்கு எதிரான பெரிய அளவிலான கிளர்ச்சி மூர்க்கமாக நசுக்கப்பட்டது. 1990களின் நடுப்பகுதியில் சின்ஜியாங்கிலுள்ள 80 லட்சம் சீன இன சிறுபான்மையினரின் மத்தியிலிருந்து திரட்டப்பட்ட துணைநிலை இராணுவப் படையினரின் ஆதரவுடன் சீனா மூன்று லட்சம் துருப்புக்களை அந்த மாகாணத்தில் நிறுத்தியது. 1997 மே மாதத்தில் சர்வதேச பொது மன்னிப்பு சபை கூறியதன்படி, வைனிங் நகரத்தில் நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு நூற்றுக் கணக்கானோர் மரண தண்டனை பெற்றனர், ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த நான்கு வருடங்களில் உவைகூர் தீவிரவாதிகளின் குண்டு வைப்புகள் மற்றும் படுகொலைகள் போன்ற கொரில்லா நடவடிக்கைகள், அங்கும் இங்குமாக நடப்பதாக செய்திகள் வந்தன.

உவைகூர் பிரிவினைவாதிகளுக்கு பாதுகாப்பான இடத்தை இல்லாமல் செய்த மற்றும் ஆப்கானிஸ்தானில் சீனா ஒரு பரிசைப் பெற்றுக் கொள்ள செய்த தலிபான் ஆட்சியின் வீழ்ச்சியை பெய்ஜிங் வரவேற்றது. காபூலில் ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்கால நிர்வாகத்தில் ஒரு பாத்திரம் வேண்டு மென்று சீனா கேட்டுள்ளது, அது அந்த நாட்டினை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அரசியல், தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை அளிப்பதற்காக என்று கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இதர பெரும் வல்லரசுகள் தலையீடு செய்வதற்கான சாக்காக உவைகூர் பிரிவினைவாதத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்றூம் கூட சீனா கவலை கொண்டுள்ளது. பிரதான உவைகூர் வெளிநாட்டு அமைப்புகள் துருக்கி, ஜேர்மனி மற்றும் இதர ஐரோப்பிய யூனியன் நாடுகளை தளமாகக் கொண்டுள்ளன, அங்கே அவற்றுக்கு அவ்வப்போது அனுதாபக் குரல்கள் கிடைக்கின்றன. அண்மையில், அக்டோபரில், பிரெஸ்ஸெல்சில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அறைகளில் கூடுவதற்கு 16 உவைகூர் குழுக்களின் ஒரு கூட்டணி அமைப்பான -"கிழக்கத்திய துர்கிஸ்தான் தேசிய காங்கிரசுக்கு"- அனுமதி வழங்கப்பட்டது.

அமெரிக்காவினுள் பொதுவாக சீன எதிர்ப்பு கிளர்ச்சியின் குறி மையமாக தைவானும் ஒரு குறைந்த மட்டத்துக்கு திபெத்தும் உள்ளது, உவைகூர் தேசியவாத லட்சியம் ஒருசில சமயங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. உதாரணமாக 1999ல் யூகோஸ்லாவியா மீதான நேட்டோ யுத்தத்தின் பின்தறுவாயில், "கிழக்கத்திய துர்கிஸ்தான் தேசிய சுதந்திர மையத்தின் "தலைவரான அன்வர் யுசுவ் ஜனாதிபதி கிளின்டனுக்கு அமெரிக்க காங்கிரஸ்காரர்களினால் அறிமுகம் செய்யப்பட்டார்.

உவைகூர் குழுக்களை பயங்கரவாதிகளாக சர்வதேச ரீதியாக நடத்த வேண்டும் என்று இப்போது சீனா கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பர்12ல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் சீன வெளிநாட்டு அமைச்சர் டாங் சியா சுவான் கூறியதாவது: "கிழக்கத்திய துர்கிஸ்தான் பயங்கரவாத சக்திகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளினால் பயிற்றுவிக்கப்படுகின்றனர், ஆயுதங்கள் மற்றும் நிதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றின் மீது சொல்லும் படியான தாக்குதல்களை நடத்த வேண்டும்." அமெரிக்காவும் மற்றும் இதர பெரும் சக்திகளும் இதற்கு பதிலளிப்பார்களா என்பது, மத்திய ஆசியாவில் ஆதிக்கத்திற்காக நடந்துவரும் சிக்கலான போட்டியில் "உவைகூர் பிரச்சினையை" பயன்படுத்தலாமா இல்லையா என்பதனாலேயே தீர்மானிக்கப்படும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved