400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட ஷிஃபா மருத்துவமனை படுகொலையை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துகிறது

கடந்த திங்களன்று காஸாவின் ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியமை, அந்த வளாகம் ஒரு கொலைக்களமாக மாற்றப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியது. அந்தப் பகுதி, நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள், கூட்டு மரணதண்டனைகள், சித்திரவதை மற்றும் உடல் உறுப்புக்கள் சிதைக்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன.

காஸாவில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக நீடித்த அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையில் இந்த படுகொலை மிகப்பெரிய ஒன்றாகும். காஸாவில் இதுவரை குறைந்தது 32,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

காஸா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் இடிபாடுகள், ஏப்ரல் 1, 2024 திங்கட்கிழமை. [AP Photo/Mohammed Hajjar]

காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகத்தின்படி, மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400 க்கும் அதிகமாக உள்ளது. திங்களன்று ஒரு அறிக்கையில், யூரோ-மெட் மானிட்டர், கொல்லப்பட்ட, காணாமல் போன அல்லது காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,500 க்கும் அதிகமாக இருக்கலாம், இது “பாலஸ்தீனிய வரலாற்றில் மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்று” என்று கூறியது. 

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட படங்கள், இஸ்ரேலிய புல்டோசர்களால் புதைக்கப்பட்ட மருத்துவமனையின் முற்றங்களில் இருந்து எண்ணற்ற அழுகிய உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டதைக் காட்டின. சடலங்களில் பெண்களும் குழந்தைகளும் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண்களும் இருந்தனர். 

நேரில் கண்ட சாட்சிகள் அல் ஜசீரா மற்றும் பிற செய்தி ஊடக நிறுவனங்களிடம் பணயக்கைதிகள் கைவிலங்கிடப்பட்டு அல்லது பள்ளங்களில் வீசப்பட்டு புல்டோசர்களால் உயிருடன் கொடூரமாக புதைக்கப்பட்டனர் என்று தெரிவித்தனர். 

இதுவரை நடந்த இனப்படுகொலையின் மிகப் பெரிய கொடூரமான படுகொலை என்ன என்பது பற்றிய வெளிப்பாடுகள் சமூக ஊடகங்களில் பரவலான மக்கள் சீற்றத்தைத் தூண்டியது. மில்லியன் கணக்கான மக்கள் இந்த படுகொலை தொடர்பான ஆவண ஆதாரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

[twitter]

https://twitter.com/HossamShabat?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1774741588226273379%7Ctwgr%5Ea6d72d78e8ca22dc4532d324002bd759a2b341e7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wsws.org%2Fen%2Farticles%2F2024%2F04%2F02%2Faauk-a02.html

[/twitter]

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில், அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்திற்குள் இருந்த அனைத்து கட்டிடங்களையும் அழித்து எரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முற்றங்களை புல்டோசர் கொண்டு தகர்த்து, டசின் கணக்கான தியாகிகளின் உடல்களை இடிபாடுகளில் புதைத்து, அந்த இடத்தை ஒரு வெகுஜன கல்லறையாக மாற்றினர்” என்று காஸாவின் அரசு அலுவலக இயக்குனர் இஸ்மாயில் அல்-தவாப்தா கூறினார். “இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்று அவர் மேலும் கூறினார்.

“மருத்துவ ஊழியர்களிலும் சிலர் கொல்லப்பட்டனர், மற்றவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், மற்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இரண்டு வாரங்களாக எந்த மருத்துவ பொருட்களும் அல்லது உணவு அல்லது தண்ணீரும் கூட இல்லாமல் முற்றுகையிடப்பட்டிருந்தனர்” என்று பாலஸ்தீனிய செம்பிறை சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரயீத் அல்-நிம்ஸ் அல் ஜசீராவிடம் தெரிவித்தார். 

“நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளின்படி, பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டனர். மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் அவர்கள் வேண்டுமென்றே கொல்லப்பட்டனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படுகொலை பற்றிய அதன் ஆரம்ப கள அறிக்கைகளின் அடிப்படையில், யூரோ-மெட் மானிட்டர் அமைப்பு, “நூற்றுக்கணக்கான இறந்த உடல்கள், சில எரிந்த நிலையில் உள்ளன, மற்றவர்களின் தலைகள் மற்றும் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், அல்-ஷிபா மருத்துவ வளாகத்திற்குள்ளும் மருத்துவமனையின் சுற்றியுள்ள பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்று அறிவித்தது. 

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு முக்கிய ஆதரவளித்த பைடென் நிர்வாகம், எந்த ஆதாரமும் இல்லாமல், ஷிபா மருத்துவமனை ஒரு முறையான இராணுவ இலக்கு என்று கூறி, ஹமாஸ் அதை ஒரு தலைமையகமாக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியது. 

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்தனர்” என்று குறிப்பிட்டார். 

“இந்த தாக்குதல் மருத்துவமனை மீது நடத்தப்பட்டது என்று நம்ப வேண்டாம். மருத்துவமனைக்குள் பதுங்கியுள்ள ஹமாஸ் போராளிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று மில்லர் கூறினார்.

“மருத்துவமனைகளுக்குச் செல்வதை நிறுத்துங்கள் என்று அதிகமான மக்கள் ஹமாஸை ஏன் கேட்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

“எனவே பாருங்கள், மருத்துவமனைகளில் இருந்து ஹமாஸ் செயல்படக் கூடாது, அது பொதுமக்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று நாங்கள் பலமுறை கூறி வருகிறோம்” என்று இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜோன் பியர் தெரிவித்தார்.

“அவர்கள் மருத்துவமனைகளில் இருந்து செயல்படுகிறார்கள், அதைத்தான் செய்கிறார்கள். அவர்கள் குடிமக்களிடையே தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இப்படுகொலைக்கு விடையிறுக்கும் வகையில் வெள்ளை மாளிகை ரஃபா மீது இஸ்ரேல் திட்டமிட்டுள்ள தாக்குதலுக்கு நேரடியாக பச்சைக்கொடி காட்டியுள்ளது. அங்கு 1 மில்லியனுக்கும் அதிகமான இடம் பெயர்ந்த மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். 

“ஹமாஸ் போராளிகளைப் பற்றி இஸ்ரேல் எதுவும் செய்யாத சூழ்நிலையில், ரஃபாவில் தொடர்ந்து அவர்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று அல்ல” என்று மில்லர் கூறினார்.

“ரஃபாவிலும் ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்றால், நாம் இந்த உரையாடலை நடத்த வேண்டும். அவர்கள் எப்படி முன்னேறப் போகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று ஜோன்-பியர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலிய படைகள் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் “அனைத்து பணிபுரியும் ஊழியர்களையும், குறிப்பாக மருத்துவ ஊழியர்களை – உடனடி மரணதண்டனை, கட்டாய இடப்பெயர்வு அல்லது கைது செய்வதன் மூலம்” காலி செய்தன என்று யூரோ-மெட் மானிட்டர் அமைப்பு கூறியுள்ளது. 

இந்த முற்றுகையின் போது 22 நோயாளிகள் தங்கள் மருத்துவமனை படுக்கைகளில் வைத்து கொல்லப்பட்டனர், ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாத நிலைமைகளில் கொல்லப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களில் இரண்டு மருத்துவர்களான, யுஸ்ரா அல்- மகத்மே மற்றும் அவரது மகன் அகமது அல்-மகத்மே ஆகியோர் அடங்குவர். 

காஸாவில் முன்பு பணியாற்றிய மருத்துவரான அபு சித்தா எழுதிய அஞ்சலியில், “ஒரு அழகான ஆன்மா மற்றும் ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். மகத்தான மீள்வருகை (Great March of Return) மற்றும் 2021 போர் மற்றும் பின்னர் இந்த சமீபத்திய போரில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். அவருடைய அர்ப்பணிப்பு நான் இதுவரை பார்த்திராத ஒன்று. நாங்கள் எப்பொழுதும் மறக்கமாட்டோம்” என்று குறிப்பிட்டிருந்தார். 

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அவர் மேலும் கூறுகையில், “அவர் இந்த போரை ஷிஃபா மருத்துவமனையில் இருந்து அல் குத்ஸ் மருத்துவமனைக்கு சென்று கழித்தார், அவர் சுதந்திரமாக இருக்கும்போது அவர் அல் அஹ்லியில் என்னுடன் சேருவார். எப்போதும் அர்ப்பணிப்பு, எப்போதும் கற்றுக்கொள்ள விரும்புபவர். அவர் வடக்கை விட்டு வெளியேற மறுத்து, தனது அறுவை சிகிச்சைகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். அவர் ஒரு மனைவியையும் ஒரு குழந்தையையும் விட்டுச் செல்கிறார்”. 

இந்த மாத தொடக்கத்தில், யூரோ-மெட் இஸ்ரேலிய படைகள் கைதிகளை மொத்தமாக படுகொலை செய்வதாக அறிவித்தது. இந்த அறிக்கைகள் அமெரிக்காவின் பிரதான ஊடகங்களால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. ஆனால், இப்போது ஷிஃபா மருத்துவமனையில் இருந்து வெளிவரும் காட்சிகள், பைடன் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் இஸ்ரேலிய துருப்புக்களால் மருத்துவமனை ஒரு பாரிய கொலைக்களமாக மாற்றப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது. 

Loading