ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய பின்பு

காஸாவில் அமெரிக்க ஆதரவிலான மோசடி 'போர் நிறுத்தம்' தீர்மானத்தை இஸ்ரேலிய ஆட்சி பாராட்டுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

வெள்ளியன்று, அமெரிக்க ஊடகங்களால், “போர்நிறுத்த” தீர்மானம் என்று அபத்தமாக பிரகடனப்படுத்தப்பட்ட அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நிறைவேற்ற தவறியது.

உண்மையில், அந்த தீர்மானம் காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஐ.நா.வின் ஒப்புதலை வழங்கி, இஸ்ரேலிய இராணுவம் “நடந்து கொண்டிருக்கும் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு” நிபந்தனைகளை குறிப்பிட்டிருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க தூதுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியுமான லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் உரையாற்றுகிறார். 22, 2024.

இந்த தீர்மானம், எந்தவொரு “போர்நிறுத்தத்தையும்” இஸ்ரேலின் அறிவிக்கப்பட்ட போர் நோக்கங்களை அடைவதுடன் தொடர்புபடுத்தி, ஹமாஸ் “ஆயுதங்களைக் கீழே போடுவதன்” மூலமாக ஒரு போர்நிறுத்தத்தை அடைய முடியும் என்று இம்மாத தொடக்கத்தில் நாட்டு மக்களுக்கான உரையின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்ததை நடைமுறையளவில் மீள் எடுத்துரைத்தது.

உண்மையில், தீர்மானத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், அதன் நோக்கம் “ஹமாஸ் மீது அழுத்தம் கொடுப்பதுதான்”, இஸ்ரேல் மீது அல்ல என்று கூறினார்.

தீர்மானத்திற்கு எதிராக அல்ஜீரியாவின் வாக்களிப்பை விளக்கிய ஐ.நா.வுக்கான அல்ஜீரியாவின் பிரதிநிதி அமர் பென்ட்ஜாமா, இந்த தீர்மானம் “இரத்தக்களரியைத் தொடர்வதற்கான அங்கீகாரத்தை குறிக்கிறது” என்று கூறினார்.

“இன்று வழங்கப்பட்ட உரை சமாதானத்தின் தெளிவான செய்தியை தெரிவிக்கவில்லை. இது மறைமுகமாக பொதுமக்கள் இறப்புக்களை தொடர அனுமதிப்பதோடு, மேலும் போர் தீவிரமடைவதை தடுப்பதற்கு தெளிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்:

“இது பாலஸ்தீனிய பொதுமக்களை தொடர்ந்து கொல்வதற்கு ஒரு தடையற்ற வழியாகும்” என்று பென்ட்ஜாமா விளக்கினார். “தற்போதைய மற்றும் எதிர்கால நடவடிக்கைகளில் இருந்து பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் வலியுறுத்தாமல், தொடர்ந்து இரத்தக்களரிக்கு அங்கீகாரம் அளிப்பதைக் குறிக்கிறது.”

அல்ஜீரியாவுடன் சீனா மற்றும் ரஷ்யாவும் சேர்ந்தன. இவ்விரு நாடுகளும் தீர்மானத்தை வீட்டோ தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தன.

தனது அதிகாரிகளின் இனப்படுகொலை குறித்த ஐ.நா.வின் விமர்சனத்தை மீண்டும் மீண்டும் கண்டித்து வந்த இஸ்ரேல் அரசாங்கம், அமெரிக்காவின் தீர்மானத்தை முழுமையாக ஆதரித்தது.

“அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது ஐ.நா.வுக்கு ஒரு தார்மீக தருணத்தை குறிக்கும்” என்று ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டான் கூறினார், “ஹமாஸின் அரக்கர்களைக் கண்டிக்க” அமெரிக்கா தயாராக இருப்பதைப் பாராட்டினார்.

“துரதிர்ஷ்டவசமாக, முற்றிலும் அரசியல் காரணங்களுக்காக, இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மேலும் பயங்கரவாதிகள் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க இந்த கவுன்சிலின் மூலம் தொடர்ந்து பயனடைய முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

இதன்பின் எர்டான் இனப்படுகொலை மறுப்பைத் தொடங்கி, அபத்தமாக அப்பாவி மக்கள் இறப்பு பற்றிய உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இட்டுக்கட்டப்பட்டவை என்றும் காஸாவில் எவரும் பட்டினியால் இறக்கவில்லை என்றும் அறிவித்தார்.

இஸ்ரேலிய பிரதிநிதி “காஸா பஞ்சம் குறித்த அவதூறான விவரிப்பை” கண்டித்தார். “காஸாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகள் மீது இஸ்ரேல் திணிப்பதற்கு எந்த வரம்பும் இல்லை “ என்று அபத்தமாக அறிவித்தார்.

காஸாவில் பாரிய உயிரிழப்புகள் குறித்த ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்கள் ஒரு மோசடி என்று கூறிய அவர், “பயங்கரவாதிகளால் வழங்கப்பட்ட [பொதுமக்கள் உயிரிழப்புகள்] எண்ணிக்கை சுற்றி வீசப்பட்டு, அவை கடவுளின் வார்த்தையைப் போல மேற்கோளிடப்படுகின்றன. ஆயினும்கூட, சாராம்சத்தில், இந்த எண்ணிக்கை வெறுமனே ஹமாஸின் பொய்கள் மட்டுமே, ஐ.நா மிக விரைவாக கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

“பொதுமக்கள் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, வேறு எந்த மோதலிலும் வேறு எந்த இராணுவமும் எடுக்காத நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்துள்ளது” என்று அவர் கூறினார்.

1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய அகதிகள் தஞ்சம் புகுந்துள்ள தெற்கு காஸா நகரமான ரஃபாவை தாக்குவதற்கான இஸ்ரேலின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர் தனது உரையை நிறைவு செய்தார். “தீ மீண்டும் வளர்ந்து பரவும். ரஃபாவில் நடவடிக்கை இல்லாமலேயே இதுதான் நடக்கும். இஸ்ரேலுக்கு வேறு மாற்றீடு தெரியவில்லை. நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பாதை ரஃபா வழியாக செல்கிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ரஷ்யா மற்றும் சீனா தனது தீர்மானத்தை ரத்து செய்ததற்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், அந்த நாடுகள் “ஹமாஸைக் கண்டிக்க மறுக்கின்றன” என்று கூறி, அடிப்படையில் இஸ்ரேலின் அதே மொழியைப் பயன்படுத்தினார்.

“மக்களை உயிருடன் எரித்தது முதல் இசை நிகழ்ச்சியில் அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்றது, பெண்கள், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது, நூற்றுக்கணக்கானோரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தது வரை ஹமாஸை ரஷ்யாவும் சீனாவும் கண்டிக்க மறுக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

தோமஸ்-கிரீன்ஃபீல்ட் ஒரு உண்மையான போர்நிறுத்தத்திற்கான எந்தவொரு அழைப்பையும் தடுப்பதிகாரத்தை பயன்படுத்துவதற்கான தனது தீர்மானத்தை வெளிப்படுத்தினார், “எனவே இந்த மாற்றுத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்து, களத்தில் நடக்கும் இராஜதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்றால், இந்த கவுன்சில் மீண்டும் முட்டுக்கட்டையாக இருப்பதைக் காணலாம்.”

இதற்கிடையில், தனது சமீபத்திய இஸ்ரேல் பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கனை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை சந்தித்தார். கூட்டத்திற்குப் பின்னர், நெத்தென்யாகு இஸ்ரேல் ரஃபாவை தாக்கும் என்ற தனது அறிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

“ரஃபாவுக்குள் நுழைந்து அங்குள்ள மீதமுள்ள படைகளை அழிக்காமல் ஹமாஸை தோற்கடிக்க எங்களுக்கு வழி இல்லை” என்று நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவின் ஆதரவுடன் நாங்கள் அதைச் செய்வோம் என்று நான் நம்புகிறேன் என்று நான் அவரிடம் கூறினேன். ஆனால் நாங்கள் செய்ய வேண்டும் என்றால், நாங்கள் அதை தனியாக செய்வோம்” என்று குறிப்பிட்டார்.

காஸாவில் பஞ்சம் மற்றும் வெகுஜன படுகொலைகளின் பின்னணியில் நெதன்யாகு மற்றும் பிளிங்கன் இடையே இனப்படுகொலையின் அடுத்த கட்டம் குறித்த விவாதங்கள் நடந்தன. இந்த வாரத் தொடக்கத்தில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், இஸ்ரேல் வேண்டுமென்றே மக்களை பட்டினி போடுகிறது என்று கூறினார்.

“காஸாவுக்குள் உதவிகள் நுழைவதில் இஸ்ரேலின் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் அளவும், அது தொடர்ந்து விரோதப் போக்குடன் நடத்தும் விதமும் சேர்ந்து, பட்டினியை ஒரு போர் முறையாகப் பயன்படுத்துவதாக இருக்கலாம், இது ஒரு போர்க் குற்றமாகும்” என்று அவர் கூறினார்.

பஞ்சத்தை குறிக்கும் உத்தியோகபூர்வ உலகளாவிய அமைப்பான ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு வகைப்பாடு (ஐபிசி) கூட்டாண்மை அமைப்பு, செவ்வாயன்று வெளியிட்ட ஒரு தனி அறிக்கையில், “பஞ்சம் தவிர்க்க முடியாதது” என்றும், “இறப்புகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டில் பெரும் அதிகரிப்பு” உள்ளதை கண்டறிந்துள்ளது.

காஸாவில் 1.1 மில்லியன் மக்கள் பேரழிவுகரமான பட்டினி மற்றும் பஞ்ச அபாயத்தை முகங்கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐபிசி மதிப்பீடு குறிப்பிடுகிறது, இது தற்போதைய வகைப்படுத்தல் முறை தொடங்கியதில் இருந்து இந்த பிரிவில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

அல்-ஷிபா மருத்துவமனை மீதான இஸ்ரேலின் முற்றுகை ஐந்தாவது நாளாக தொடர்ந்தது, 160 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வார தொடக்கத்தில், மனித உரிமைகள் அமைப்பான யூரோ-மெட் மானிட்டர், மருத்துவமனையில் இஸ்ரேல் பாரிய விசாரணையற்ற கூட்டு மரணதண்டனைகளை நடத்தியதாக அறிவித்தது.

வெள்ளிக்கிழமை, காஸாவின் சுகாதார அமைச்சகம் இனப்படுகொலையில் இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 32,070 என்று கூறியது. இந்த எண்ணிக்கையில் காணாமல் போனவர்களையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாக உயரும்.

அதே நாளில், அல் ஜசீரா காஸாவில் நடக்கும் தினசரி படுகொலைகளில் ஒன்றின் வீடியோ காட்சிகளை வெளியிட்டது, அதில்

ஒரு சாலையில் நடந்து செல்லும் நிராயுதபாணியான நான்கு இளைஞர்கள் கொண்ட குழுவினர் மீது தொடர்ச்சியான ட்ரோன் (ஆளில்லா விமானங்கள்) தாக்குதல்களால் தகர்க்கப்படுவதைக் காட்டுகிறது.

இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் ரஃபாவின் மீது இடைவிடாமல் வட்டமிடுகின்றன, இதனால் நகரத்தில் திரண்டிருக்கும் 1.2 மில்லியன் அகதிகள் உடனடி தாக்குதலை எதிர்பார்க்கிறார்கள் என்று அல் ஜசீரா அறிவித்துள்ளது.

Loading