ரஃபா மீதான இஸ்ரேலிய தரைவழி படையெடுப்பு உடனடியானது என்று நெதன்யாகுவும் கேலன்ட்டும் அறிவிக்கின்றனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

புதனன்று ஆக்கிரமிக்கப்பட்ட காஸா நகரத்தில் இராணுவ அதிகாரிகளை காணச்சென்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கேலண்ட், “[ரஃபாவின் மீதான படையெடுப்பை] தாமதப்படுத்துகிறோம் என்று நினைப்பவர்கள் விரைவில் நாம் அடைய முடியாத இடம் எதுவும் இல்லை என்பதை பார்ப்பார்கள்” என்று மிரட்டினார். “இங்கே, காஸாவிற்கு வெளியே, மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பான இடம் என்பது எங்கும் கிடையாது.”

ரஃபாவின் மீதான படையெடுப்பு உடனடியானது என்ற கேலண்டின் அறிவிப்பை, ஞாயிற்றுக்கிழமை மில்லியனுக்கும் மேற்பட்ட பாஸ்தீனர்களை அகதிகளாகக் கொண்டுள்ள நகரம் பற்றி கேள்வியெழுப்பிய போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர்வெறி மிக்க பதில் உறுதிப்படுத்துகிறது. ”நாங்கள் அங்கே செல்வோம். நாங்கள் அவர்களை விட்டுவிடப் போவதில்லை. உங்களுக்கு தெரியுமா, எனக்கு ஒரு சிவப்பு கோடு உள்ளது. சிவப்பு கோடு என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அந்த அக்டோபர் 7 மீண்டும் நடக்க கூடாது. இனி ஒருபோதும் நடக்கக்கூடாது…” என அவர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (இடது) 14 டிசம்பர் 2023 அன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் கேலண்டுடன் கைகுலுக்கினார். [Photo: Yoav Gallant]

“பயங்கரவாதப் படைப்பிரிவுகளை எதிர்த்து நட்த்திய போரில் ஹமாஸின் முக்கால்வாசி பேரை அழித்துவிட்டோம். நாங்கள் போரில் கடைசிப் பகுதியை முடிக்க நெருங்கிவிட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

செவ்வாயன்று அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழுவிடம் வீடியோ இணைப்பு மூலம் பேசிய நெதன்யாகு, “நாங்கள் ரஃபாவில் வேலையை முடிப்போம்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

மரண எண்ணிக்கையில் குறைவிருக்காது என்பதைத் தெளிவுபடுத்திய அவர், “என்ன நடந்தாலும் இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும். இந்தப் போரில் வெற்றிபெற, ரஃபாவில் எஞ்சியிருக்கும் ஹமாஸ் படைப் பிரிவுகளை நாம் அழிக்க வேண்டும்... இஸ்ரேலின் இருப்புக்கான மற்றும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையை ஆதரிப்பதாக கூறிவிட்டு பின்னர் அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது இஸ்ரேலை எதிர்ப்பதாகவும் கூற நீங்கள் முடியாது,” என அவர் அறிவித்தார்.

டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் வார்த்தைகளில், “ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் நோக்கங்களை அடைய ரஃபாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கை ஒன்று அவசியம்” என்று அவர் புதனன்று டச்சு பிரதமர் மார்க் ரூட்டிடம் கூறினார்.

கேலன்ட் மற்றும் நெதன்யாகுவின் கருத்துக்கள், இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் கூறும் “எச்சரிக்கைகள்” மற்றும் “முன்னறிவுப்புகள்” என்ற வார்த்தை ஜாலங்களின் திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும் யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், இந்த வார இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, நெதன்யாகு “அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்,” “அவர் இஸ்ரேலுக்கு உதவுவதை விட இஸ்ரேலை காயப்படுத்துகிறார்” என்று கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், “ஜனாதிபதியின் சிந்தனையை விவரிப்பதாக கருதப்படும் அறிக்கைகள் தகவல் அறியாத ஊகங்கள்,” என்று செவ்வாயன்று அப்பட்டமாகக் கூறினார். “ரஃபாவை அடித்து நொறுக்குவது” குறித்த பைடெனின் ஒரே கவலை என்னவென்றால், பாதிக்கப்படக் கூடிய, விசேடமாக பொது மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய “அங்குள்ள மக்களை சமாளிப்பதற்கு நம்பகமான திட்டம் வேண்டும்” என்ற முற்றிலும் கற்பனையான ஒன்றாகும், என அவர் தெரிவித்தார்.

ரமலான் போர்நிறுத்தம் பற்றிய ஊடக ஊகங்களை அடுத்தே பைடெனின் கருத்துக்கள் வெளிவந்தன. இந்த பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்ரேலிய பேச்சுவார்த்தையாளர்கள் கெய்ரோவிற்கு கலந்துரையாடுவதற்கு செல்வது குறித்து கூட அக்கறை கொள்ளாத தோடு கத்தார் மத்தியஸ்தர்கள் ஒரு “உடன்பாட்டை எட்டவில்லை” என்பதை இப்போது ஒப்புக்கொண்டனர்.

களத்தில், இஸ்லாமியப் பண்டிகையின் மூன்றாவது நாள் தொடர்ச்சியாக பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும போர் நடவடிக்கைகள் தொடர்ந்தன. அவற்றில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையின் (UNRWA) உணவு விநியோக மையத்தின் மீது ரஃபாவில் ஒரு தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு ஊழியர் கொல்லப்பட்டதுடன் மேலும் 22 பேர் காயமடைந்தனர். UNRWA ஆனையாளர் நாயம் பிலிப் லாஜாரினி கருத்து தெரிவிக்கையில், “இன்றைய தாக்குதல்களில் ஒன்று. காஸா பகுதியில் மீதமுள்ள சில UNRWA விநியோக மையங்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போகும் நிலையில் நடைபெற்றது, பசி பரவலாக உள்ளது மற்றும் சில பகுதிகளில் பஞ்சமாக மாறுகிறது.

“ஒவ்வொரு நாளும், காஸா பகுதி முழுவதும் உள்ள எங்களின் அனைத்து வசதிகளின் ஒருங்கிணைப்புகள் பற்றி, மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினருடன் பகிர்ந்து கொள்கிறோம். இஸ்ரேலிய இராணுவம் இந்த வசதி உட்பட ஒருங்கிணைப்புகளை பற்றிய தகவல்களை நேற்றும் பெற்றுக் கொண்டது.

பாலஸ்தீனியர்கள் மார்ச் 12, 2024 அன்று காஸா பகுதியில் உள்ள ரஃபாவில் இலவச உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர். [AP Photo/Fatima Shbair]

பல பிள்ளைகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் வசதிகளில் தங்கியிருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 157 பேர் இஸ்ரேல் ஏற்படுத்திய தீயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019-2022 வரையிலான நான்கு ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள அனைத்துப் போர்களையும் விட இந்த அக்டோபர் முதல் நான்கு மாதங்களில் (12,300 க்கும் அதிகமானோர்) காஸாவில் அதிகமான பிள்ளைகள் கொல்லப்பட்டதாக லாஸரினி இந்த நாளின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டினார்.

அந்த பிள்ளைகளில் குறைந்தபட்சம் 113 பேர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளாலும், தீவிர வலதுசாரி படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது

ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள 9,000 பாலஸ்தீனியர்களுக்கு மேல், கைதிகளின் புதிய வருகைக்குத் தயாராகுமாறு நெதன்யாகு சிறைச்சாலைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீனிய கைதிகளை ஆதரிப்பதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் முதாஃபர் தூகான், “சித்திரவதை மற்றும் மருத்துவ புறக்கணிப்பு காரணமாக” அக்டோபர் 7 முதல் காவலில் வைக்கப்பட்டிருந்த 12 பேர் இறந்துவிட்டனர் என்று அல் ஜசீராவிடம் கூறினார்.

ஜெனின் மற்றும் சௌஃப்ட் அகதிகள் முகாம்கள் மற்றும் அல்-ஜிப் நகரம் உட்பட பிரதேசங்கள் மீது கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்களில் அக்டோபர் 7 முதல் மேற்குக் கரையில் 427 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு வீடுகள் இடிக்கப்பட்டது, சாலைகள் சிதைக்கப்பட்டன், மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டது, தண்ணீர் குழாய்கள் வெடித்தன மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன்.

பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்கையில், “24 மணி நேரத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பால் குழந்தைகள் உட்பட 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை சர்வதேச சட்டத்தின்படி போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும்.

“அரசியல் மற்றும் இராணுவத் தளமும், எந்த வகையிலும் தங்களை ஆபத்தில் ஆழ்த்தாத பாலஸ்தீனிய குடிமக்களை படையினரும் குடியேறியவர்களும் சுடுவதை சாத்தியமாக்கி உள்ளன. வன்முறைச் சுழற்சியை விரிவுபடுத்துவதற்காக ஆளும் கூட்டணி நெருப்பில் எண்ணெய் வார்க்கின்றது என்பதற்கு இந்த விரிவாக்கம் சான்றாகும் என்பது வெளிப்படையானது.

கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுவன் ரமி ஹம்தான் அல்-ஹல்ஹோலி, பொலிஸ் அதிகாரியால் மார்பில் சுடப்பட்டார். பாதுகாப்புப் படையினர் தங்கள் மீது நேரடியாக வெடிபொருட்களை அவர் வீசியதாகக் கூறிய போதிலும், அவை வானத்தை நோக்கி சுடப்பட்டன எனபதை காட்சிகள் காட்டுகின்றன. அதிகாரியிடம் உள்நாட்டுக் காவல் புலனாய்வுத் துறை விசாரித்த நிலையில், பாசிச தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இதமர் பென்-க்விர் கொலையாளிக்கு தனது ஆதரவை அறிவித்தார். “பயங்கரவாதிகளுக்கு எதிராக நீங்கள் இப்படித்தான் உறுதியுடனும் துல்லியத்துடனும் செயல்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

லெபனானுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படுகின்றன, அங்கு புதன்கிழமை நாட்டின் எல்லைக்குள் கடுமையான தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர். திங்களன்று இஸ்ரேல்-லெபனான் எல்லைக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நபி ஷேத் மற்றும் சராயின் மீது போர் விமானங்களும் ஏவுகணைகளை ஏவின. இதில் மூன்று மாடி கட்டிடம் அழிக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டதுடன் எட்டு பேர் காயமடைந்தனர்.

லெபனானின் வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்கும் எண்ணத்தை அறிவித்து, குடியிருப்புப் பகுதிகளுக்குள் உள்ள இலக்குகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்தது. ”மோதலை அதிகரிக்கவும், முழு பிராந்தியத்தையும் ஒரு போருக்குள் இழுப்பதற்குமான இஸ்ரேலின் விருப்பத்தை இது வெளிப்படுத்துவது கவலை அளிப்பதாக உள்ளது,” என அது எச்சரித்தது.

லெபனானில் சமீபத்திய சண்டை தொடங்கியதில் இருந்து 220 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா போராளிகளும் கிட்டத்தட்ட 40 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான உதவிகளை வழங்குவது பற்றிய ஏகாதிபத்திய சக்திகளின் இழிந்த தோரணையைப் பொறுத்தவரை, உலக உணவுத் திட்டமானது காஸா நகருக்கு இந்த செவ்வாய்கிழமை செய்யப்பட்ட உணவு விநியோகம் தான் “பெப்ரவரி 20க்குப் பிறகு வடக்கே முதலாவது வெற்றிகரமான பாதுகாக்கப்பட்ட விநியோகம்” என்று அறிவித்தது. மேலும் அது வெறும் 25,000 பேருக்கு மட்டுமே போதுமானது. மக்கள். “வடக்கு காஸாவில் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதால், ஒவ்வொரு நாளும் விநியோகங்கள் தேவை,” என்று அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்பாம் மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் உட்பட இருபத்தைந்து உதவிக் குழுக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், மிகவும் பிரபலமான விமான மற்றும் கடல்சார் உதவிப் பாதைகளை ஒரு ஏமாற்று என்று விமர்சித்துள்ளன. “அரசுகள் விமானத்தில் இருந்து போடப்படும் பொதிகளுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது, மற்றும் கடல்வழி பாதைகளைத் திறக்கும் முயற்சிகள், அவர்கள் காசாவின் தேவைகளை இட்டு நிரப்ப போதுமான அளவு செய்கிறார்கள் என்ற மாயையை உருவாக்கும் முயற்சிகளும். அட்டூழியக் குற்றங்கள் வெளிவருவதைத் தடுப்பதும், இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் மனிதாபிமான உதவிகளை பாதுகாப்பாக வழங்குவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பயனுள்ள அரசியல் அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் அவர்களின் முதன்மைப் பொறுப்பாகும்.”

காஸா மக்களுக்கு, “வானத்திலிருந்து போடப்படும் அற்பமான தர்ம பொருட்களை விட அதிகம் பெறுவதற்கு உரிமை உண்டு,” என அவர்கள் மேலும் தொடர்ந்தனர். “கடந்த வாரம் ஒரு விமானத்திலிருந்து வீசப்பட்ட பொதியினால் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்தனர். “குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன, கடல் மற்றும் கரையோர உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு நேரம் இல்லை: அவர்களின் உயிரைக் காப்பாற்ற உணவு மற்றும் மருந்து நிறைந்த மனிதாபிமான டிரக்குகளை உடனடியாக அனுமதிக்க வேண்டும், அவை காஸாவில் நுழைவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.”

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைவர் ஜோசப் பொரெல், “பட்டினி ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது” என்று ஒப்புக்கொண்டார். “கடல் அல்லது விமானம் மூலம் ஆதரவை வழங்குவதற்கான மாற்று வழிகளைத் தேடும்போது, சாலைகள் வழியாக ஆதரவை வழங்குவதற்கான இயற்கையான வழி மூடப்பட்டுள்ளது, அதாவது செயற்கையாக மூடப்பட்டுள்ளது என்பதை நாங்கள் நினைவுபடுத்த வேண்டும்,” என அவர் விளக்கினார்.

Loading