முன்னோக்கு

ஹன்ஸ்-கியோர்க் மாஸன் நிகழ்வு: ஜேர்மன் அரசின் உயர்மட்டத்தில் ஒரு பாசிசவாதி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஹன்ஸ்-கியோர்க் மாஸன், 2023 இல் [Photo by Elekes Andor / wikimedia / CC BY-SA 4.0]

ஜேர்மனியின் பிரதான உள்நாட்டு உளவுத்துறை அமைப்பான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் (Federal Office for the Protection of the Constitution, Verfassungsschutz), அதன் முன்னாள் தலைவரான ஹன்ஸ்-கியோர்க் மாஸனை ஒரு “வலதுசாரி தீவிரவாத சந்தேகத்திற்குரியவர்” என்று கண்காணித்து பின்தொடர்ந்ததை கடந்த வாரம் வெளிப்படுத்தியது. இந்த உளவுத்துறை அமைப்பானது எட்டு ஆண்டுகளாக ஒரு வலதுசாரி தீவிரவாதியால் தலைமை தாங்கப்பட்டது என்பதை இது ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே மாஸன் ஒரு வலதுசாரி தீவிரவாதியாக மாறினார் என்று கூறப்பட்டு வருவது ஒரு வஞ்சகமான சாக்குப்போக்கு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. அவர் எப்போதுமே ஒரு வலதுசாரி தீவிரவாதியாகவே இருந்தார், அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். உண்மையில், இரகசிய சேவையின் உயர்மட்டத்திற்கு அவர் உயர்ந்திருப்பது, அரச இயந்திரத்திற்குள் பாசிச குழுக்கள் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதையே இது நிரூபிக்கின்றது.

பொதுத் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமான ARD இன் அரசியல் இதழான Kontraste இல் செய்தி வெளியிடப்பட்ட பின்னர், உள்நாட்டு உளவுத்துறை சேவையால் தான் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாஸன் அவரே அவரது வலைத் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மாஸன் குறித்து உள்நாட்டு உளவுத்துறை அமைப்பான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்திடம் இருந்து வரும் எழுத்துப்பூர்வ அறிக்கையானது, அவரது வலதுசாரி தீவிரவாத மற்றும் பாசிசவாத கண்ணோட்டங்கள் குறித்து எந்த சந்தேகத்திற்கும் இடமளிக்காதவகையில், அவர் பகிரங்கமாக வெளியிட்ட அறிக்கைகளில் இருந்தே பிரத்யேகமாக மேற்கோளிடுகிறது. 

உதாரணத்திற்கு, சுவிஸிலிருந்து வெளிவரும் Weltwoche இல் மாஸன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து மேற்கோளிடப்படுகிறது, அதில் சான்சிலர் ஓலாவ் ஷொல்ஸ் மற்றும் உள்துறை அமைச்சர் நான்சி பைசர் (இருவருமே சமூக ஜனநாயகக் கட்சியினர், SPD) இருவருமே அவர்களின் அகதிகள் மற்றும் புலம்பெயர்வு கொள்கை “இடிபாடுகளின் மீது ஒரு நவ-சோசலிச சமூக அமைப்புமுறையைக் கட்டியெழுப்புவதற்காக ஜேர்மன் சமூகத்தில் சரிவைக்” கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று அவர் அதில் உறுதியாகக்கூறுகிறார். புலம்பெயர்ந்தோரின் வருகையை புற்றுநோயுடன் அவர் சமப்படுத்தி, இதற்காக “கடுமையாக” எதிர்த்துப் போராடப்பட வேண்டும் என்று மேற்கோளிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிக்குள்ளே (CDU) வேலை செய்திருந்த விழுமியங்கள் ஒன்றியம் (Values Union) என்ற அமைப்புடன் சேர்ந்து மாஸன் ஜனவரியில் ஒரு புதிய கட்சியை ஸ்தாபித்தார். ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியுடன் கூட்டணிகளை உருவாக்க அவர் விருப்பம் கொண்டிருப்பதாக அறிவித்துள்ள அவர், குறிப்பாக கிழக்கு ஜேர்மன் கூட்டாட்சி மாநிலங்களில் பாசிசவாத கட்சி அதிகாரத்திற்கு வர உதவக்கூடும். புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட மில்லியன் கணக்கான மக்களை நாடு கடத்த திட்டமிட்ட போட்ஸ்டாம் மாளிகை ஒன்றில் நடந்த இழிவார்ந்த கூட்டத்தில், AfD இன் பிரதிநிதிகள் மற்றும் பிற வலதுசாரி தீவிரவாதிகளின் விழுமியங்கள் ஒன்றியம் (Values Union) அமைப்பின் பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். 

கூட்டாட்சி உள்துறை அமைச்சகத்தின் “புலம்பெயர்வு திட்டக் குழு” (“Immigration Project Group”) தலைவராக, மாஸன் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அகதிகள் கொள்கையை அறிவுறுத்தியதுடன், பிரேமனில் பிறந்து வளர்ந்த முராத் குர்னாஸ் (Murat Kurnaz) என்பவர் நிரபராதியாக இருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு குவாண்டநாமோ வளைகுடா தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

2012 இல், வலதுசாரி பயங்கரவாத தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு அமைப்பு (National Socialist Underground, NSU) உடனான அந்த உளவுத்துறை அமைப்பு கொண்டிருந்த நெருக்கமான உறவுகளை மூடிமறைப்பதற்காகவும், குறைந்தபட்சம் ஒன்பது புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒரு பெண் போலிஸின் படுகொலைக்குப் பொறுப்பான பாசிசவாத வலையமைப்பைப் பராமரிப்பதற்காகவும், உள்நாட்டு உளவுத்துறை அமைப்பான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் தலைவராக மாஸன் நியமிக்கப்பட்டார்.

AfD கட்சி நிறுவப்பட்ட பின்னர், அது மாஸனினதும் அவரது அமைப்பினதும் ஆதரவைச் சார்ந்திருந்தது. AfD இன் அப்போதைய தலைவர் ஃபிரவ்க் பெட்ரியை பலமுறையும், அவருக்குப் பின் பதவிக்கு வந்த அலெக்சாண்டர் கௌலாண்ட் மற்றும் குறைந்தபட்சம் பாசிசவாத பிரிவின் ஒரு பிரதிநிதியையாவது மாஸன் வெளிப்படையாக சந்தித்தார். அவர்களுடன் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கைகள் குறித்து விவாதித்தார். 

அவர் உளவுத்துறை அமைப்பை அதிவலது வட்டாரத்துடன் மிக நெருக்கமாக தொடர்புபடுத்திய அதேவேளையில், அரசியல் உரிமையின் வழியில் நிற்கும் யாரொருவராக இருந்தாலும் அவர் அவர்களை தாக்கினார். 2018 இல், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை (Sozialistische Gleichheitspartei , SGP) ஒரு “இடதுசாரி தீவிரவாத அமைப்பாக” உளவுத்துறையான அரசியலமைப்பு பாதுகாப்பு கூட்டாட்சி அலுவலக அறிக்கையில் சேர்த்துக் கொள்ளுமாறு மாஸன் உத்தரவிட்டார், அவ்விதத்தில் உளவுத்துறை கண்காணிப்புக்கு அது உட்படுத்தப்பட வேண்டும். ஒரு நியாயப்படுத்தலாக, உளவுத்துறையான அரசியலமைப்பு பாதுகாப்பு கூட்டாட்சி அலுவலகமானது, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியானது “தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதம் என்று கூறப்படுவதற்கு எதிரானது” என்றும் முதலாளித்துவத்தை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டது.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மீதான பிஸ்மார்க் தடை மற்றும் ஹிட்லரின் கீழ் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளைத் துன்புறுத்தியது ஆகிய பாரம்பரியங்களை கூட்டாட்சி அரசாங்கம் நேரடியாக புதுப்பித்து வருகிறது என்பதை நிரூபிக்க ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியானது இந்த முடிவுக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது, இவ்விதத்தில்தான் கூட்டாட்சி அரசாங்கம் நேரடியாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டியது: அதாவது “இப்போது மகா கூட்டணியும் அதன் இரகசிய சேவையும் சோசலிச-விரோத சட்டங்களின் மூன்றாவது பதிப்பைத் தயாரித்து வருகின்றன, “ SGP பின்வருமாறு மேலும் எழுதியது. “அவர்கள் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் கொள்கைகளை ஏற்று வருவதுடன், இந்த வலதுசாரி தீவிரவாத கட்சியை விமர்சிக்கும் எவரொருவரையும் தடைவிதிப்பதைக் கொண்டு அச்சுறுத்துகின்றனர்.”

உள்நாட்டு உளவுத்துறை அமைப்பின் தலைவராக மாஸன் நியமிக்கப்பட்டதற்கு துல்லியமான காரணம் இதுதான். அது வலதுசாரி வலையமைப்புகளைப் பலப்படுத்துவதையும் மார்க்சிசத்தை சட்டவிரோதமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. 2018 இல் கெம்னிட்ஸ் நகரில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரான வலதுசாரி தீவிரவாத அட்டூழியங்களை அவர் பாதுகாத்தார் என்பதாலும், “SPD இல் உள்ள இடதுசாரி தீவிரவாத சக்திகள்” குறித்து ஆவேசமாக பேசினார் என்பதாலும் பொதுமக்களின் சீற்றம் வெடித்த பின்னரே அவர் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். 

மாஸன் நீக்கப்பட்டமையானது அந்த அமைப்பின் ஜனநாயக-விரோத திட்டநிரலை இம்மியளவும் மாற்றிவிடவில்லை. அவரை உள்ளடக்கிய வலதுசாரி தீவிரவாத வலையமைப்புகள் அப்படியே இருந்தன, மேலும் அவரது பதவிக்காலத்தில் அவர் பணியமர்த்திய நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் அப்படியே இருந்தனர். உள்நாட்டு உளவுத்துறை அமைப்பான அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் (Verfassungsschutz) துணைத் தலைவராக ஐந்து ஆண்டுகள் மாஸன் உடன் முன்னர் நெருக்கமாக வேலை செய்திருந்த தோமஸ் ஹால்டென்வாங் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியானது (SGP) தொடர்ந்து உளவுத்துறை கண்காணிப்பின் கீழ் இருப்பதுடன், தாக்குதல்களானது காலநிலை மாற்ற போராட்ட குழுவான Ende Gelände  மற்றும் தினசரி செய்தித்தாளான Junge Welt போன்ற ஏனைய இடதுசாரி சக்திகள் வரையிலும் இது விரிவாக்கப்பட்டன.

உள்நாட்டு உளவுத்துறை அமைப்பின் நீடித்திருப்பு என்ற பிரச்சினையானது வெறுமனே ஒரு தனிநபர் சம்பந்தபட்டதல்ல, மாறாக ஆளும் வர்க்கத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரல் என்பதை நிரூபிக்கிறது. இதனால்தான் மாஸனை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரித்தன. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) உள்துறை மந்திரி ஓட்டோ ஷில்லி தான் அவரை 2001ல் “புலம்பெயர்ந்தோர் திட்டக் குழுவின்” தலைவராக நியமித்தார். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU) மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகள் (FDP) ஆகியவை இணைந்து அவரை அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவராக்கின. இடது கட்சியும் (Left Party) அவருடன் நெருக்கமான தொடர்பைப் பராமரித்து வந்ததுடன், 2013 இல் ஒரு பொதுக் கூட்டத்திற்கும் கூட அவரை அழைத்தது.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியானது இந்த அரசியல் சதியின் இலக்கிற்கு உள்ளாகியிருக்கிறது ஏனென்றால் அது ஜேர்மன் அரசியல் நிறுவனத்தின் உயர்மட்டங்களில் இருந்த வலதுசாரி வலையமைப்புகளை அம்பலப்படுத்தி, ஜேர்மனியில் ஆளும் வர்க்கம் அதன் பாசிசவாத பாரம்பரியங்களை மீண்டுமொருமுறை புதுப்பித்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டியது. AfD ஆனது திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்டது, அதன் வலதுசாரி தீவிரவாத அகதிகள் கொள்கைகள், போர் மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ஓலாவ் ஷொல்ஸின் அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜேர்மனியில் பாசிசத்தின் மீள்வருகையை ஆய்வு செய்தபோது அவர்கள் ஏன் மீண்டும் திரும்பி வருகிறார்கள்? (Why Are They Back?) என்ற புத்தகத்தில் நாம் இவ்வாறு விளக்கியிருந்தோம்:

1933 இல் ஆளும் உயரடுக்கின் சதி அப்போதிருந்த ஒரு பாசிச இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்றால், இன்று அதற்கு நேரெதிரான உண்மை உள்ளது. அதாவது AfD இன் வளர்ச்சியானது அத்தகைய ஒரு சதியின் விளைவாகும். அரசாங்கம், அரச இயந்திரம், கட்சிகள், ஊடகங்கள் மற்றும் அதற்கு வழி வகுக்கும் பல்கலைக்கழகங்களிலுள்ள சித்தாந்தவாதிகளின் பாத்திரத்தை ஆராயாமல் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

வலதுசாரி பயங்கரவாத நிலைப்பாடுகளை ஏற்கத்தக்கதாக ஆக்குவதற்காகவும் மற்றும் “இரண்டு உலகப் போர்களின் [ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின்] இலக்குகளைப் புதுப்பிப்பதற்காக” ஜேர்மன் இராணுவவாதத்தை அதன் வரலாற்று குற்றங்களில் இருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் நாஜிக்களின் அட்டூழியங்கள் எவ்வாறு ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் அற்பமாக்கப்பட்டு வருகின்றன என்பதை இந்தப் புத்தகம் குறிப்பாக ஆராய்கிறது.

ஹிட்லர் “கொடூரமானவர் அல்ல” என்றும், யூத இனப்படுகொலையானது அடிப்படையில் ரஷ்ய உள்நாட்டுப் போரின் போது நடந்த பாரிய வெகுஜனத் துப்பாக்கிச் சூடுகளைப் போன்றதே என்றும் Der Spiegel இல் அறிவித்ததற்காக ஹம்போல்ட் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை நாம் விமர்சித்த போது, அனைத்து நாடாளுமன்ற கட்சிகள் மற்றும் பெரும்பாலான ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அதிவலது பேராசிரியரின் தரப்புக்குத் தாவினர். டஜன் கணக்கான மாணவர் குழுக்களும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் SGP இன் விமர்சனத்தை ஏற்று வலதுசாரி தீவிரவாத சித்தாந்தத்திற்கு எதிராக போராடிய போது, இரகசிய சேவையானது தலையீடு செய்து ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது. 

நமது மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதை மாஸன் சம்பந்தப்பட்ட நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. அரசு இயந்திரத்திலுள்ள வலதுசாரி பயங்கரவாத வலையமைப்புகள் மற்றும் பாசிசவாத AfD ஆகியவைகளானது ஒரு ஆரோக்கியமான உடலமைப்பிலுள்ள வெளிப் பொருட்கள் அல்ல, மாறாக ஒரு முற்றிய நோய்வாய்ப்பட்ட அமைப்பின் மிக மோசமான அறிகுறிகளாகும். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி போலவே, முதலாளித்துவம் சமத்துவமின்மையின் அதீத வடிவங்களுக்கும் அதிகரித்தளவில் மிருகத்தனமான ஏகாதிபத்திய போர்களுக்கும் இட்டுச் செல்கிறது. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை ஆகியவற்றில் இது தெளிவாக உள்ளது.

ஜேர்மன் ஆளும் வர்க்கமானது மீண்டுமொருமுறை ஏகாதிபத்திய போரின் பூகோளரீதியான வெடிப்பில் குறிப்பாக, தீவிரமான பாத்திரம் வகித்து வருகிறது. அது பகிரங்கமாக ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நேரடிப் போருக்கு தயாரிப்பு செய்து வருவதுடன், ஜேர்மனியை மீண்டும் “போரிற்காக தயாரிப்புச் செய்ய” இராணுவத்தை பாரியளவில் மீள்ஆயுதபாணியாக்கி வருகிறது. அகதிகள் கொள்கையிலும் கூட, தீவிர வலதுசாரிகளின் வேலைத்திட்டமானது நீண்டகாலமாக அரசாங்க கொள்கையாக இருந்து வந்துள்ளது. மிக சமீபத்தில், ஜனவரி 18 இல், நாடாளுமன்றமானது, ஆளும் SPD, பசுமைக் கட்சி மற்றும் FDP கூட்டணி கட்சிகளின் வாக்குகளுடன், “திருப்பியனுப்பும் மேம்பாட்டு சட்டம்” என்றழைக்கப்படுவதை நிறைவேற்றியது, இது அகதிகளை பாரியளவில் நாடுகடத்துவதற்கு அடித்தளம் அமைக்கிறது. 

இந்த ஈவிரக்கமற்ற கொள்கையை மக்களின் பிரம்மாண்டமான எதிர்ப்புக்கு எதிராக சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத வழிமுறைகளைக் கொண்டு மட்டுமே திணிக்க முடியும். அதனால் தான் ஜேர்மனியில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அனைத்து கட்சிகளாலும் அதிவலது பலப்படுத்தப்பட்டு அரவணைக்கப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும், ஆளும் வர்க்கம் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்பி வருகிறது.

ஆனால், இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகிறது. பல வாரங்களாக AfD க்கு எதிராக நடந்து வருகின்ற பாரிய ஆர்ப்பாட்டங்கள், ஜேர்மனியில் பாசிசம் மற்றும் போர் மீண்டும் வருவதற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அவை அரசியல் முன்னோக்கு குறித்த பிரச்சினையையும் மிக அவசரமான சாத்தியமான முறைகளில் முன்வைக்கின்றன. பாசிச வலதிற்கு எதிரான போராட்டத்தில், முதலாளித்துவ அரச இயந்திரத்தையோ அல்லது அதை பாதுகாக்கும் கட்சிகளையோ மற்றும் முதலாளித்துவம் மற்றும் வலதுசாரிகளுடன் இணைந்த கட்சிகள் மீதோ எந்த நம்பிக்கையையும் வைக்கப்படக் கூடாது. முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தால் மட்டுமே போர் மற்றும் பாசிசவாதத்தை நிறுத்த முடியும்.

Loading