முன்னோக்கு

கெர்ஷ்கோவிச்சை விடுதலை செய், ஜூலியன் அசான்ஜ் மீதான கொடூர துன்புறுத்தலை நிறுத்து

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மார்ச் 29 இல் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிருபர் இவான் கெர்ஷ்கோவிச்சை உடனடியாக விடுவிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது. கெர்ஷ்கோவிச் கடந்த வாரம் ரஷ்ய ஆயுதத் தொழில்துறையின் மையமாக உள்ள யூரல் மலைத்தொடர் அருகில் யெகாதரின்பேர்க் நகரில் (முன்னர் ஸ்வெர்ட்லோவிஸ்க்) கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் உக்ரேன் போரில் ரஷ்ய சிப்பாய்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட  பாதிப்புகள் குறித்தும், அமெரிக்கா தலைமையிலான பொருளாதாரத் தடைகளின் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவு குறித்தும் எழுதி உள்ளார்.

31 வயதான இந்த நிருபர், 1970 களில் நியூஜெர்சிக்குப் புலம்பெயர்ந்து குடியேறிய ஒரு சோவியத் யூத குடும்பத்தில் அமெரிக்காவில் பிறந்தார். அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மாஸ்கோவில் நிருபராகப் பணி புரிந்துள்ளார். முதலில் மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகையிலும், பின்னர் ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸிலும் பணியாற்றிய அவர் ஜனவரி 2022 இல் இருந்து ஜேர்னலில் பணியாற்றி வருகிறார்.

பைடென் நிர்வாகமும், நேட்டோவும் இந்த நிருபர் கைது செய்யப்பட்டதற்குத் விரைவாக தமது பிரதிபலிப்பை காட்டியுள்ளனர். சூறாவளி சேதத்தை ஆய்வு செய்வதற்காக மிசிசிப்பிக்கு செல்லும் வழியில் ஜனாதிபதி பைடென், வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில் 'அவரை அனுப்பி விடுங்கள்' என்பதே மாஸ்கோவுக்கு அவர் கூறும் செய்தி என்று கூறுவதற்கு மட்டும் நேரம் எடுத்துக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் தொடர்பு கொண்டு அந்தக் கைது நடவடிக்கைக் குறித்து பேசினார். செவ்வாய்கிழமை நடைபெறும் நேட்டோ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் அந்தக் கைது நடவடிக்கை உள்ளடங்கி இருக்கும் என்று நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிடுகையில், கெர்ஷ்கோவிச் 'இரகசிய தகவல்களைப் பெற முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டார். ஒரு பத்திரிகையாளர் என்ற போர்வையில் அரசு இரகசியங்களை உள்ளடக்கிய தரவுகளை அவர் சேகரித்தார்,” என்று குறிப்பிட்டது.

கெர்ஷ்கோவிச்சிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை மதிப்பிடும் இடத்தில் WSWSஇல்லை. அமெரிக்க ஊடகங்களின் தன்மையைப் பொறுத்த வரை, பத்திரிகைகளுக்கும் அரசுக்கும் இடையே ஓர் தெளிவற்ற கோடு உள்ளது. அதே நேரத்தில், ரஷ்ய தன்னலக்குழுவின் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்யும் புட்டின் அரசாங்கம், அது வெளியிட விரும்பாத தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க முனைந்திருக்கலாம்.

எப்படியிருந்தாலும், கொள்கை அடிப்படையில், கெர்ஷ்கோவிச் மீதான கைது நடவடிக்கை எதிர்க்கப்பட வேண்டும். எங்கேயாவது ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவது எல்லாவிடங்களிலும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதை நியாயப்படுத்துகிறது.

இவ்வாறு இருந்தபோதும்,  பைடென் நிர்வாகம் மற்றும் நேட்டோ சக்திகளின் அதிர்ச்சியூட்டும் பாசாங்குத்தனம் மீது கவனத்தைக் கொண்டு வருவதும் அவசியமாகிறது. வெள்ளை மாளிகையின் எதிர்ப்பை, ஒரு குற்றம்செய்தவனே பிறர் மீது குற்றஞ்சாட்டுவது போலிருப்பதாகக் கூறினாலும் அது ஒரு குறைமதிப்பீடாக இருக்கும்.

ஒபாமா-பைடென் நிர்வாகத்தில் தொடங்கி, முந்தைய ஒட்டுமொத்த அமெரிக்க வரலாறிலும் நடந்ததை விட கடந்த தசாப்தத்தில் தான் உளவுச் சட்டத்தின் கீழ் அதிகமான ஊடகவியலாளர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

விக்கிலீக்ஸின் ஸ்தாபக ஆசிரியரான ஜூலியன் அசான்ஜ்  மீது வழக்குத் தொடுத்திருப்பது, உலகளவில் கண்டனத்திற்கு உள்ளான மிகவும் பிரபல வழக்காகும்.

ஏப்ரல் 11, 2019 இல் லண்டனின் ஈக்குவடோர் தூதரகத்தைப் பிரிட்டிஷ் பொலிஸ் சோதனையிட்டதில் இருந்து கடந்த நான்காண்டுகளாக அசான்ஜ் பிரிட்டனின் உயர்பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2012 இல் இருந்து அவர் தூதரகத்தில் இருந்து தான் தஞ்சம் கோரி வந்தார். நடைமுறையளவில் பிரிட்டிஷ் பொலிஸ் கோட்டையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அசான்ஜ் போராடி வருகிறார். அமெரிக்காவில் அவர் உளவுபார்ப்பு குற்றங்களை முகங்கொடுக்கிறார். அங்கே அவர் பயங்கரவாதிகளும் தொடர் கொலைகள் செய்யும் கொலையாளிகளும் அடைக்கப்படும் ஒரு மிக உயர் பாதுகாப்பு சிறையில் 175 ஆண்டு காலம் அடைக்கப்படலாம்.

இப்போது இவான் கெர்ஷ்கோவிச் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டிக்கும் ஜனாதிபதி பைடென் நிர்வாகம் தான், ஜூலியன் அசான்ஜை 'உயர் தொழில்நுட்ப பயங்கரவாதி' என்று கண்டித்தது. ஏனென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய அட்டூழியங்களை ஆவணப்படுத்தும் பொது இராணுவ கோப்புகளை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. இவை இரசிகயங்களைத் துணிச்சலாக வெளியிட்டவரான செல்சியா மேனிங்கால் கசிய விடப்பட்டன. இவரும் கூட ஏழாண்டுகள் சிறையில் கழித்தார், அதில் கூடுதலான காலம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

உண்மையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இரண்டு பணியாளர்கள் உட்பட ஈராக்கில் ஒரு டசின் கணக்கான மக்களை அமெரிக்கா படுகொலை செய்ததை ஆவணப்படுத்தும் 'கூட்டுப் படுகொலை' காணொளி, மானிங் மற்றும் அசான்ஜின் மிக முக்கிய அம்பலப்படுத்தல்களில் ஒன்றாக இருந்தது.

அரசாங்கங்களைக் கவிழ்த்தி பதவியிலிருந்து தூக்கியெறிய அமெரிக்க இராஜதந்திர சதிகளை ஆவணப்படுத்தும் வெளியுறவுத்துறை கோப்புகளையும், குவாண்டனாமோ வளைகுடாவில் கைதிகள் சித்திரவதைச் செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பதிவுகளையும் மானிங் விக்கிலீக்ஸுக்கு வழங்கினார்.

மற்றொரு விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல் வால்ட் 7 (Vault 7) எனப் பெயரிடப்பட்டது. இது சி.ஐ.ஏ ஒட்டுக்கேட்பு மற்றும் உளவுபார்க்கும்  கருவிகளின் ஒரு மிகப்பெரிய தொகுப்பாகும். இந்த வெளியீடு, அப்போதைய ட்ரம்பின் CIA இயக்குநராக இருந்த மைக் பொம்பியோ, விக்கிலீக்ஸை 'விரோத, அரசு சாரா உளவுத்துறை சேவை' என்று முத்திரை குத்த வழிவகுத்தது. இது நடைமுறையளவில் இணைய பிரசுரங்கள் மீதான தாக்குதல்களை அறிவிப்பதாக இருந்தது. அப்போதிருந்து, அசான்ஜ் மற்றும் அவர் வழக்கறிஞர்கள் மீது சட்டவிரோத கண்காணிப்பை சி.ஐ.ஏ ஒழுங்கமைத்துள்ளதுடன், அவரைக் கடத்தி கொலை செய்யவும் விவாதங்கள் நடத்தி இருந்தது.

கெர்ஷ்கோவிச் மற்றும் அசான்ஜிற்கு இடையே மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு, தூதரக அணுகல் பிரச்சினை ஆகும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த பத்திரிகையாளரின் உரிமைகளை உரிய முறையில் நிலைநாட்டுவதற்காக, மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை சிறையில் அடைத்துள்ள நிருபரிடம் நேரடியாக பேச அனுமதிக்குமாறு ரஷ்ய அதிகாரிகளை கோருவதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிரமாக முயன்றது. ஜூலியன் அசான்ஜ் ஓர் ஆஸ்திரேலிய பிரஜை, ஆனால் தற்போதைய பிரதம மந்திரி அந்தோனி அல்பனீஸின் தொழிற்கட்சி அரசாங்கம் உட்பட அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்களால் அசான்ஜை இயன்றளவில் அணுகுவதற்கு எதையும் செய்யவில்லை என்பதோடு, அவரை விடுவித்து ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்புவதை வலியுறுத்த எதுவும் செய்யவில்லை.

பெருநிறுவன ஊடகங்களைப் பொறுத்த வரை, அசான்ஜைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை நடைமுறையளவில் அவை இருட்டடிப்பு செய்யும் அளவுக்கு அவை அசான்ஜ் மீது மிகவும் விரோதமாக உள்ளன. அவர் தந்தையும் சகோதரரும், ஜான் ஷிப்டன் மற்றும் கேப்ரியல் ஷிப்டன், தற்போது அமெரிக்காவுக்கு வருகை தந்து, அசான்ஜின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இத்தாகா (Ithaka) என்ற ஆவணப்படத்தை அமெரிக்க நகரங்களின் பொது நிகழ்ச்சிகளில் காட்டி வருகின்றனர். 'பிரதான' ஊடகங்களில் இதுபற்றிய செய்திகள் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளன. அவர்களுக்கு இடமளிக்கும் ஒருசில நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஃபாக்ஸ் நியூஸில் பாசிசவாதி டக்கர் கார்ல்சன் நிகழ்ச்சியில் ஷிப்டன்கள் கலந்து கொள்ள அவர்கள் விட்டுள்ளனர்.

அசான்ஜ் கையாளப்படும் விதம், பத்திரிக்கை சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தும் மிக மோசமான எடுத்துக்காட்டாகும். அமெரிக்காவில் 'குறைந்தபட்சம் 110 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது அவர்களின் அறிக்கை தொடர்பாக அவர்கள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 இல் சுமார் 300 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். பெரும்பான்மையானவர்கள் சட்ட அமுலாக்கத் துறையால் தாக்கப்பட்டனர்'.  இவை முதன்மையாக அந்தாண்டு பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களை மிருகத்தனமாக அடக்கியதுடன் தொடர்புடையதாகும்.

அமெரிக்க ஆளும் வர்க்கமும் ஊடகங்களும், ஆதாரமற்ற வெளிப்படையான உளவுக் குற்றச்சாட்டுக்களுடன், அத்துடன் சீனாவின் சமூக ஊடக செயலிகளான டிக்டாக் ஆகியவற்றை நசுக்கும் விதத்தில், தற்போது சீன கல்வியாளர்களை இலக்கு வைத்து ஒரு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன.

கெர்ஷ்கோவிச் கைது தொடர்பாக பைடென் நிர்வாகத்தின் பாசாங்குத்தனம், ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ போரைக் குணாம்சப்படுத்தி உள்ள பாசாங்குத்தனதுடன் இணைந்த ஒன்றாகும். இரத்தம் மற்றும் ஒடுக்குமுறையில் ஊறிப் போயுள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம், உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக பிரகடனம் செய்வதுடன், பொய்களை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று கருதுகிறது.

ஜூலியன் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸைத் துன்புறுத்துவதற்கு எதிரான போராட்டம், இப்போது அதன் 13வது ஆண்டில் உள்ளது. இது 21ம் நூற்றாண்டின் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாகும். இந்த நீடித்த அனுபவத்தில் ஒரு சிறந்த படிப்பினை உள்ளது: அதாவது, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவிலோ அல்லது அது கட்டுப்படுத்தும் பெருநிறுவன ஊடகங்களிலோ ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதரவான எவரும் இல்லை. போர் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் மூலமாகவே, இந்த போராட்டம் நடத்தப்படவேண்டும்.

Loading