நியூ ஹாம்ப்ஷயரில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப் ஜனவரி 22, 2024 அன்று நியூ ஹாம்ப்ஷயரின் லாகோனியாவில் ஒரு பிரச்சார நிகழ்வின் போது பேசுகிறார். [AP Photo/Matt Rourke]

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று நியூ ஹாம்ப்ஷயரில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் தெற்கு கரோலினா ஆளுநரும் ஐ.நா தூதருமான நிக்கி ஹேலியை எளிதாக தோற்கடித்து, குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி நியமனத்தில் தனது பிடியை மேலும் பலப்படுத்தியுள்ளார்.

நாங்கள் இந்தக் கட்டுரையை பதிவிட தயாரிப்பு செய்கையில், வலையமைப்புகள் ட்ரம்புக்கான போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளன, ஆனால் வெற்றியின் துல்லியமான வித்தியாசம் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது, இருப்பினும் அது 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

நியூ ஹாம்ப்ஷயரில் ட்ரம்பின் வெற்றி, அயோவா காக்கஸ்ஸில் 51 சதவீத வாக்குகளைப் பெற்ற எட்டு நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. இது இரண்டாம் இடத்தைப் பிடித்த புளோரிடா ஆளுநர் ரோன் டிசாண்டிஸ் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த ஹேலி ஆகியோரின் மொத்த வாக்குகளை விட அதிகமாகும். ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இருந்து விலகிய டிசாண்டிஸ் டிரம்புக்கு தனது ஒப்புதலை அறிவித்தார். குடியரசுக் கட்சியின் முதல் முதனிலை கட்சித் தேர்தலான நியூ ஹாம்ப்ஷைரின் முடிவுகள், பிப்ரவரி 24 அன்று தென் கரோலினாவில் நடைபெறவிருக்கும் அடுத்த முதனிலை கட்சித் தேர்தலுக்கு முன்னரே, ஹேலியின் பிரச்சாரத்தின் முடிவையும் உச்சரிக்கக்கூடும்.

இதன்மூலம் குடியரசுக் கட்சியினுடைய தேர்தல் போட்டி விரைவில் முடிவடையும். ஒரு முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப், மறுதேர்வு முயற்சியில் கணிசமான வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கபிட்டோல் மீதான ஒரு பாசிசவாத தாக்குதல் மூலமாக தேர்தல் முடிவுகளைத் தூக்கியெறிய முனைந்தார். அவர் மீது 91 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நவம்பர் தேர்தலில் அவர் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடும், வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்ற உண்மையானது, முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவிற்கு சான்று பகர்கிறது.

இது, ஒரு பாசிசக் கட்சியாக உருமாற்றத்தில் நன்கு முன்னேறியுள்ள குடியரசுக் கட்சியின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இருகட்சி முறையின் மீதும் ஒரு குற்றச்சாட்டாகும். ட்ரம்பின் வெற்றியைப் புதுப்பிப்பதற்கான பிரதான அரசியல் பொறுப்பு பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடம் தங்கியுள்ளது. ஜனவரி 6, 2021 இல் ட்ரம்பின் ஏறத்தாழ வெற்றிகரமான ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்னதாகவும் அதற்குப் பின்னரும், ஒட்டுமொத்தமாக குடியரசுக் கட்சி தலைமையும் மற்றும் ட்ரம்ப்பின் சர்வாதிகார முயற்சியில் இராணுவம், உளவுத்துறை மற்றும் அரசு இயந்திரத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளும் உடந்தையாக இருந்ததை அமெரிக்க மக்களிடம் இருந்து மறைக்க அவைகள் முனைந்தன.

ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான பாரிய தாக்குதல்களுக்கான கட்டமைப்பாக இருகட்சி அமைப்புமுறையை வலுப்படுத்துவதற்காகவும், குடியரசுக் கட்சியை, முன்னுரிமையாக ஒரு புதிய தலைமையின் கீழ், காப்பாற்றுவதே ஆரம்பத்தில் இருந்து ஜனநாயகக் கட்சியின் மிதமிஞ்சிய கவலையாக இருந்து வந்திருக்கிறது.

ட்ரம்பின் வெற்றிகள் எந்த விதத்திலும் அவரது பாசிசவாத கொள்கைகளுக்கான ஒரு பாரிய மக்கள் ஆணையைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அயோவாவில் பதிவு செய்த குடியரசுக் கட்சியினரில் வெறும் 15 சதவீதத்தினர் மட்டுமே வாக்களித்தனர், ட்ரம்பின் “பெரும்பான்மை” 56,250 வாக்குகளைக் கொண்டிருந்ததுடன், மாநிலத்தில் பதிவு செய்த வாக்காளர்களில் வெறும் 2.7 சதவீதத்தை மட்டுமே கொண்டிருந்தது.

நியூ ஹாம்ப்ஷைரில், சுமார் 320,000 வாக்காளர்கள் GOP என்றழைக்கப்படும் குடியரசுக் கட்சியின் முதல்நிலைக் கட்சித் தேர்தலில் பங்கு பெற்றனர், அல்லது வாக்களிக்க தகுதி பெற்ற 1.1 மில்லியன் மக்களில் 29 சதவீதம் பேர்களே பங்கு பெற்றனர். நியூ ஹாம்ப்ஷயர் முதனிலைக் கட்சித் தேர்தல்கள் வழக்கத்திற்கு மாறானவை, அறிவிக்கப்படாத வாக்காளர்கள் -இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளுக்கு வெளியே இருப்பவர்கள்- மற்றும் முதன்மை வேட்பாளரை வைத்திருக்கும் கட்சியில் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் இரண்டிலுமுள்ளவர்கள் வாக்களிக்க முடியும். பதிவு செய்த குடியரசுக் கட்சியினரிடையே ட்ரம்புக்கு எதிர்பார்க்கப்பட்ட பரந்த வித்தியாசத்தை சமாளிக்க அல்லது குறைந்தபட்சம் கணிசமாக ஈடுசெய்ய அறிவிக்கப்படாத வாக்காளர்களின் தீர்க்கமான பெரும்பான்மையை வென்றெடுக்க ஹேலி நம்பினார். மேலும் அந்த அடிப்படையில் ஒரு வருத்தமான வெற்றியை அடையலாம் அல்லது எதிர்பார்த்ததை விட மிகக் குறுகிய தோல்வியுடன் வெளியேறலாம், அதன் மூலம் அவரது பிரச்சாரத்தை புதுப்பிக்கலாம்.

நியூ ஹாம்ப்ஷயர் வாக்கெடுப்புக்கு முன்னரே கூட, குடியரசுக் கட்சி அதிகாரிகள் ட்ரம்பை வழிமொழிவதற்கு திரண்டு வந்தனர். திங்களன்று இரவு, ட்ரம்ப் மாநிலத்தில் அவரது இறுதி பிரச்சார நிகழ்வில் போட்டியில் இருந்து விலகிய மூன்று முன்னாள் போட்டியாளர்களுடன் இணைந்துகொண்டார்: தென் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட் (2013 இல் அப்போதைய ஆளுநர் ஹேலியால் அவரது செனட் இருக்கைக்கு நியமிக்கப்பட்டவர்), பில்லியனர் தொழிலதிபர் விவேக் ராமசாமி மற்றும் வடக்கு டகோட்டா ஆளுநர் டக் பர்கம் (இவரும் ஒரு பில்லியனர்).

ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சி போட்டியாளர்கள் இருவராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்மையான கொள்கைகள் குறித்து பெருநிறுவன ஊடகங்களில் எந்த உருப்படியான விவாதமும் இல்லை. ட்ரம்ப் மற்றும் ஹேலி இருவருமே புலம்பெயர்ந்தவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மீதும், பாரிய நாடுகடத்தல்கள் மற்றும் அகதிகளை அடைத்து வைப்பதற்கான கோரிக்கைகள் மீதும் அவர்களின் வெறுப்பின் பெரும்பகுதியை ஒருங்குவித்துள்ளனர். சமூகக் கொள்கை விடயத்தில், ஹேலி ட்ரம்பை விட ஒரு படி மேலே சென்று, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவக் கவனிப்புக்கான ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். ட்ரம்ப் மீதான அவரது பிரதான விமர்சனம், உக்ரேனுக்கு வரம்பற்ற இராணுவ உதவிக்கு அவர் பொறுப்பேற்கத் தவறியதே ஆகும், உக்ரேன் தொடர்பான அவரது பிரச்சாரத்திற்கு ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த ஊடக நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசியலில் நீண்டகாலமாக மேலாதிக்கம் செலுத்தி வந்துள்ள பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களின் ஒரு கன்னையின் வெளிப்படையான அனுதாபத்தைப் பெற்றுள்ளது.

காஸாவில் நடந்து வரும் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலை குறித்து எந்த வேறுபாடுகளும் இல்லை.

GOP இல் அதாவது குடியரசுக் கட்சியில் ட்ரம்பின் மேலாதிக்கமும் கருத்துக்கணிப்புகளில் அவர் பெற்ற வெற்றிகளும் சர்வாதிகாரத்திற்கான பாரிய மக்கள் ஆதரவைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக, அவைகள் ஜனநாயகக் கட்சி மற்றும் முழு முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் வலதுசாரி பாய்ச்சலின் விளைவு ஆகும். தொழிலாள வர்க்கம் பரந்தளவில் இடது நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இது போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் பணிநீக்கங்கள், அதிர்ச்சியூட்டும் சமூக சமத்துவமின்மை மட்டங்கள், வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களின் பரவலில் காணப்படுகிறது. குறிப்பாக மில்லியன் கணக்கான இளம் தொழிலாளர்களும் மாணவர்களும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளின் முழு ஆதரவுடனும் நேரடி ஒத்துழைப்புடனும் நடத்தப்படும் காஸாவில் பாலஸ்தீனியர்களின் பாரிய படுகொலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

அங்கே ஆளும் வர்க்கத்தின் ஜனநாயக அல்லது முற்போக்கான கன்னை எதுவும் இல்லை, மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான உணர்வுகள் மற்றும் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கு தேர்தல் அரசியல் அரங்கில் எந்த வடிகாலும் இல்லை. அதற்கு பதிலாக, தாராளவாத மற்றும் இடது கட்சிகள் என்று சொல்லப்படுபவை மற்றும் அரசியல்வாதிகள், ஜனநாயகக் கட்சியின் போலி-இடது தொங்குதசைகளான அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்றவை, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான, இனப்படுகொலை-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அதிவலதின் ஜனநாயக-விரோத கொள்கைகளுக்கு அதிகரித்தளவில் தகவமைத்துக் கொள்கின்றன அல்லது ஏற்றுக் கொள்கின்றன, அவ்விதத்தில் மிகவும் வலதுசாரி அரசியல் சக்திகளைக் கட்டியெழுப்ப உதவுகின்றன. எனவே தேர்தல் அரங்கில் தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைப் பெறுகின்றன.

நியூ ஹாம்ப்ஷயர் வாக்காளர்கள் வாக்களிக்கச் சென்ற போதே கூட, பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் போர் வெறி மற்றும் ஜனநாயக விரோத கொள்கைகள் செவ்வாயன்று முழு காட்சிக்கு வந்தன. அமசேன் செல்வந்த தன்னலக்குழு ஜெஃப் பெசோஸுக்கு (நிகர மதிப்பு 177.56 பில்லியன் டாலர்கள்) சொந்தமான ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த வாஷிங்டன் போஸ்ட், ரஷ்யா, சீனா மற்றும் ஈரானின் “புனிதமற்ற கூட்டணிக்கு” எதிரான போரை ஹேலி ஆதரிக்கிறார் என்ற அடித்தளத்தில் ட்ரம்புக்கு எதிராக அவரை ஆதரித்து ஒரு தலையங்கத்தை எழுதியது. அதேவேளையில் ட்ரம்ப் “மனக்குறைகளால் விழுங்கப்பட்டு உள்நோக்கிப் பார்க்கிறார்.”

வாஷிங்டன் போஸ்ட் தொடர்ந்தது:

ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் முதல் சீனாவின் ஜி ஜின்பிங் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் வரை சர்வாதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பதாக திருமதி ஹேலி சமீபத்திய நாட்களில் திரு டிரம்ப்பை தாமதமாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் நண்பர்களுடனான கூட்டணிகளை இழிவுபடுத்தி, நாட்டின் எதிரிகளின் கரங்களில் விளையாடியதால், ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் அமெரிக்காவை தீர்மானகரமாக குறைந்த பாதுகாப்பாக மாற்றும்.

தினசரி வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பில், யேமனில் ஈரானிய ஆதரவிலான ஹௌதிக்களுக்கு எதிரான மேலதிக தாக்குதல்கள் குறித்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பியிடம் இருந்து வந்த அறிவிப்புகளும், “நமது இரண்டு பங்காளிகளும் (உக்ரேன் மற்றும் இஸ்ரேல்) தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையானதை உறுதிப்படுத்துவதற்கும்” வாஷிங்டனின் பொறுப்புறுதியை உறுதிப்படுத்தும் அறிவிப்புகளும் ஆதிக்கம் செலுத்தின. பைடெனின் துணை நிதி கோரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள உக்ரேனுக்கான கூடுதல் இராணுவ உதவியாக 60.1 பில்லியன் டாலர்கள் கூடுதல் இராணுவ உதவிக்கு பிரதிபலனாக தஞ்சம் கோரும் உரிமையை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் மற்றும் நாடுகடத்தல்களை விரிவுபடுத்துவதன் மூலமாகவும் “உடைந்த புலம்பெயர்வு அமைப்புமுறையை” சரிசெய்வதற்கான ஒரு உடன்படிக்கைக்காக செனட்டில் நடந்த “இருகட்சி” பேச்சுவார்த்தைகளை வெள்ளை மாளிகையின் பத்திரிகைத்துறை செயலர் கரீன் ஜீன்-பியர் மீண்டும் மீண்டும் பாராட்டினார்.

செவ்வாயன்றும், நியூ யோர்க் டைம்ஸ், நியூ யோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தலைமையில் ஒன்பது ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள், அமெரிக்காவிற்குள் அகதிகள் நகர்வதைத் தடுக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் கோரி பைடென் மற்றும் காங்கிரஸுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக அறிவித்தது.

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய ரோ வி வேட் தீர்ப்பின் 51 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வேர்ஜீனியாவின் மனசாஸில் நடந்த பைடென் பிரச்சார நிகழ்வில் இருந்து குறைந்தது 14 காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர். பாலஸ்தீனர்களுக்கு எதிரான அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலையைக் கண்டிக்கும் கோஷங்களுடன் பைடெனின் கருத்துக்களை அவர்கள் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டபோது அவர்கள் வெளியே இழுத்துச் செல்லப்பட்டனர்.

உலகப் போர் மற்றும் பாசிசவாதத்தை நோக்கிய உந்துதலை முதலாளித்துவ இருகட்சி அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் தடுத்து நிறுத்த முடியாது என்ற உண்மையை இந்த அபிவிருத்திகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கமானது, இனப்படுகொலை, போர் மற்றும் சர்வாதிகாரத்தின் ஆதாரமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு நனவான போராட்டம் என்ற வடிவத்தை எடுக்க வேண்டும்.

Loading