முன்னோக்கு

இந்திய ஆளும் வர்க்கமும் ஏகாதிபத்திய சக்திகளும் ஒரு இந்து மேலாதிக்க அரசை கட்டமைக்கும் மோடியை அரவணைக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்தியாவின் அயோத்தியில் இந்து மதத்தின் ராமர் கோவிலைத் திறக்கும் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் கொட்டப்படுகின்றன. January 22, 2024. [AP Photo/Rajesh Kumar Singh]

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக பிரபலமான பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்துக் கோவிலை கும்பாபிஷேகம் செய்வதற்கு இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி (பாஜக ) அரசாங்கம் திங்கள்கிழமை ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியது. 1992ல் பாஜக மற்றும் அதன் பாசிசக் கூட்டாளிகளால் அணிதிரட்டப்பட்ட இந்து அடிப்படைவாத வெறியர்களால் மசூதி தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், திங்கட்கிழமை நடந்த நிகழ்வு ஒரு வரலாற்றுக் குற்றத்தின் கொண்டாட்டமாகவும், மிகக் கடுமையான குற்றத்தை உணர்ந்து கொள்வதற்கான முக்கிய படியாகவும் அமைந்தது. - இந்தியாவை ஒரு இந்து மேலாதிக்க நாடாக மாற்றுவது என்பது, இந்தியா முதலும் முதன்மையாகவும் ஒரு “இந்து தேசம்” என்பதை சகிப்புத் தன்மையுடன் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்கள் வாழ முடியும் என்பதாகும்.

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்ட கொடூரமானது, 1947 இல் துணைக்கண்டம் வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தானாகவும், பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியாவாகவும் பிரிந்ததற்கு பிறகு இந்தியாவில் மிகப்பெரிய வகுப்புவாத வன்முறை அலையைத் தூண்டியது. இதில் ஆயிரக்கணக்கானோர் அழிந்தனர், அவர்களில் பெரும்பாலோர் வறிய முஸ்லிம்கள் ஆவர்.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, தீவிர வலதுசாரி பாஜக, இந்திய ஆளும் உயரடுக்கின் விருப்பமான தேசிய அரசாங்க கட்சியாக மாறியுள்ளது. இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மோடியையும் பாஜக வின் முன் இருக்கைகளில் அமரும் குண்டர்களையும் அரவணைத்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், “முதலீட்டாளர் சார்பு கொள்கைகள்” மற்றும் புது தில்லியின் பெரும் வல்லரசாகும் லட்சியங்களைப் முன்னெடுக்கும் போது ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் சாசன பாதுகாப்புகள் மீது முரட்டுத்தனமாக ஏறி மிதிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதாகும்.

கடந்த திங்கட்கிழமை நிகழ்வு மிகச்சிறிய விவரங்களுடன் திட்டமிடப்பட்டிருந்தது - இவை அனைத்தும் இந்திய அரசியல்சாசனத்தின் மதச்சார்பற்ற எழுத்தை மீறுதல், இந்துப் பேரினவாதத்தைத் தூண்டுதல், மதப் பின்தங்கிய தன்மை மற்றும் பகுத்தறிவின்மையை ஊக்குவிப்பது மற்றும் இந்து பலசாலியான மோடிக்கு தெய்வீகத்தன்மையைக் கொடுக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டது.

கோயிலின் உள் கருவறையில் நடந்த ஒரு விழாவிற்கு மோடி தலைமை தாங்கினார், இது ஒரு விரிவான இந்து மந்திரங்கள் மற்றும் சடங்குகள் மூலம் குழந்தை ராமரின் சிலைக்கு - உண்மையில் ஒரு பெரிய பொம்மைக்கு - “உயிர் அளிப்பதாக” கூறப்பட்டது.

அதை அடுத்து ஆயிரக்கணக்கான பிரமுகர்கள் முன்னிலையில் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய மோடி, பல நூற்றாண்டுகளாக “முஸ்லிம்கள்” மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கைகளில் “அடிமையாக” இருந்த பின்னர், இந்து தேசமும் இந்தியாவும் ஒன்று என்று உறுதியாக கூறினார், கோவிலின் கும்பாபிஷேகம் “இந்து தேசத்தின்” “மறுபிறப்பு” என்று அறிவித்தார்.

இந்து தேசிய ஒற்றுமை பற்றிய உணர்ச்சிகரமான பிரகடனங்கள் நிச்சயமாக ஒரு மாபெரும் மோசடியாகும். இந்தியா வர்க்க மோதலால் பாதிக்கப்பட்டுள்ளது, மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் மொத்த வருமானத்தில் 22 சதவீதத்தை பெறுகின்றனர், அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 3 டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். ஒரு புராண இந்து தேசத்தின் “மறுபிறப்பை” மோடி அறிவிக்கும்போது, உண்மையில் மோடி கொண்டாடுவது, பாஜகவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் அரசியல் ஒப்புயர்வற்ற நிலையையே ஆகும்.

“இது வெறும் தெய்வீகக் கோவில் அல்ல” என்று உறுதிபடத் தெரிவித்த மோடி, “இது இந்தியாவின் பார்வை, தத்துவம் மற்றும் வழிகாட்டுதல் … ராமர் இந்தியாவின் சிந்தனை, இந்தியாவின் சட்டம் ... இந்தியாவின் கௌரவம், இந்தியாவின் வலிமை” என்றார்.

இந்த பிற்போக்கு வெறியை ஆசீர்வதிப்பதில், பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மோடியின் பக்கத்திலேயே இருந்த பாசிச RSS தலைவர் மட்டுமல்ல, இந்தியாவின் கோடீஸ்வரர்களும் இருந்தனர். ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் இரண்டாவது பணக்காரரான கெளதம் அதானி ஆகியோர் தலைமையில், அவர்கள் விழாக்களில் கலந்துகொள்ளவும், மோடியின் அதிகாரப்பூர்வமற்ற துவக்கம் மற்றும் பிஜேபியின் பிரச்சாரம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலத்துக்கு வெற்றி பெறுவதற்கும் அதிகப் பொலிவைச் சேர்த்தது. இந்த வசந்த காலத்தில் இந்தியா தேர்தலுக்கு செல்லும் போது. “இந்தியாவின் புதிய சகாப்தத்தை காண நான் மிகவும் பாக்கியமாக இருக்கிறேன்” என்று அம்பானி கூறினார்.

கார்டியன், பைனான்சியல் டைம்ஸ், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் ஜப்பான் டைம்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய ஊடகங்களின் பிரிவுகள் “மதச்சார்பற்ற இந்தியாவின் மரணம்” குறித்து கவலை தெரிவித்துள்ளன. உலக மூலதனத்தின் முதலீடுகளை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் மோடி ஒரு சூறாவளியை அறுவடை செய்யக்கூடும் என்ற அச்சம் மற்றும் அவரது இடைவிடாத வகுப்புவாத தூண்டுதல் இந்தியாவை “சர்வாதிகார” சீனாவிற்கு “ஜனநாயக” எதிர்முனையாக ஊக்குவிக்கும் அவர்களின் மோசடி முயற்சிகளை அம்பலப்படுத்துகிறது என்ற அச்சத்தால் இந்த கவலைகள் முதன்மையாகவும் முக்கியமாகவும் தூண்டப்படுகின்றன.

எந்த நிகழ்வாக இருந்தாலும், ஆளும் வர்க்க எழுத்தர்கள் எழுதுவது ஒன்றாகவும் அவர்களின் அரசாங்கங்களின் கொள்கைகள் வேறாகவும் இருக்கிறது. 2002 குஜராத் முஸ்லீம் எதிர்ப்புப் படுகொலையைத் தூண்டுவதற்கு தலைமை தாங்கிய, குஜராத் முதல்வராக இருந்த மோடியின் பங்கு காரணமாக, ஒரு தசாப்த காலமாக, அவர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இப்படுகொலையில் சுமார் 2,000ம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதோடு, நூறாயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

ஆனால், 2014ல் பிஜேபி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, முஸ்லிம் மாடு வியாபாரிகளுக்கு எதிரான விழிப்பு குழுக்களின் தாக்குதல்களை ஊக்குவிப்பதில் இருந்து, முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவதற்கு வழி வகுக்கும் தேசிய குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவது வரையிலான - முடிவில்லாத மதவாத வெறித்தனங்களை முன்னெடுக்கும் போது, வாஷிங்டன், லண்டன், பேர்லின், பாரிஸ் மற்றும் டோக்கியோ ஆகிய அனைத்தும், மோடியின் அரசாங்கத்தை ஆக்ரோஷமாக அரவணைத்து மரியாதை செய்து வருகின்றன.

இந்த நாடுகள் அவ்வாறு செய்வதற்கான காரணம், மூலோபாய ரீதியில் சீனாவை சுற்றி வளைத்து அதன் மீது போர் தொடுக்கும் அவர்களின் திட்டங்களின் மையமாக இந்தியா இருக்கிறது.

இந்து மேலாதிக்கவாதியும் படுகொலையாளருமான மோடியை ஏகாதிபத்திய சக்திகள் அரவணைப்பது என்பது, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது தீவிர வலதுசாரி அரசாங்கம் காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதலையும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்தும் ஸ்டீபன் பண்டேராவின் பாசிச சீடர்களுடன் கூட்டணி வைத்துள்ள அவர்களின் முழு ஆதரவையும் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ளதைப் போலவே, இந்தியாவிலும் தீவிர வலதுசாரிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு வெகுஜன எதிர்ப்பு உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளால் தூண்டப்பட்ட வகுப்புவாத, ஜாதி மற்றும் இனப் பிளவுகளைக் கடந்து, தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான ஒற்றுமையை வெளிப்படுத்தும் போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட அலைகள் எழுந்துள்ளன.

ஆனால், உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, இந்தியாவிலும், தொழிலாள வர்க்கத்தின் சார்பாக பேசுவதாகக் கூறும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ ஒழுங்கை ஆதரித்து, திட்டமிட்ட முறையில் அதன் போராட்டங்களை நசுக்குகின்றன. இதன் மூலம் பெருகிவரும் சமூக கோபத்தையும் விரக்தியையும் சுரண்டுவதற்கு தீவிர வலதுசாரிகளுக்கு கதவு திறக்கின்றன. பல தசாப்தங்களாக, இரட்டை ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும், மற்றும் “பாசிச” பாஜக வை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் வலதுசாரி சாதிய மற்றும் இன-வகுப்புவாதக் கட்சிகளின் ஒரு நட்சத்திரக் கூட்டத்துடனும் தொழிலாள வர்க்கத்தை பிணைத்துள்ளன.

இன்று அவர்கள் பாஜக வின் குற்றங்களை சுட்டிக்காட்டுவது என்பது, இந்திய ஆளும் வர்க்கத்தின் மீது குற்றம் சாட்டி தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு வரவழைப்பதற்கு அல்ல, மாறாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா தேர்தல் கூட்டணிக்கு பின்னால் அதை இணைக்க முயற்சிக்கின்றனர். மேலும் இவை, மோடியின் “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகள் மற்றும் இந்திய-அமெரிக்க “பூகோள மூலோபாய கூட்டாண்மை” ஆகியவற்றில் மோடியின் பாஜக வை விட குறைவான அர்ப்பணிப்பு கொண்டவை அல்ல. இந்த “மதச்சார்பற்ற, ஜனநாயகக் கூட்டணி” என்றழைக்கப்படுவதில் முக்கியமான உறுப்பினர்கள் நீண்டகால பாஜக கூட்டாளிகளாகவும், சிவசேனா போன்ற இந்து மேலாதிக்கத்தை முன்னெடுக்கும் கட்சிகளாகவும் இருக்கின்றன.

முதலாளித்துவ ஸ்தாபனத்தின் வலதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய குடியரசின் அழுகிய “ஜனநாயக” அமைப்புகளை பற்றிக்கொண்டு இந்தியாவின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் வகுப்புவாத எதிர்வினையை எதிர்த்துப் போராட முடியாது. இந்தக் கட்சிகளும் நிறுவனங்களும், இதில் முதலாவதாகவும் முதன்மையானதாகவும் இருக்கும் காங்கிரஸ் கட்சியே, தெற்காசியாவின் அரசுக் கட்டமைப்பிலேயே, இந்தியப் பிரிவினை உட்பட, வகுப்புவாதத்தைப் புகுத்திய இந்து வலதுசாரிகளுடன் இணங்கித் தழுவிக்கொண்ட கட்சியாகும். மோடி தனது திங்கட்கிழமை உரையில் குறிப்பாகப் பாராட்டிய உச்ச நீதிமன்றம், இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவான 2019 தீர்ப்பு உட்பட, ஜனநாயக உரிமைகள் மீதான பாஜகவின் தாக்குதல்களை எளிதாக்கும் வகையில் ஒன்றன் பின் ஒன்றாக தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்து மேலாதிக்கம் மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை தோற்கடிக்க, இந்தியாவின் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை, ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சோசலிசத்திற்கான போராட்டத்தை நடத்த வேண்டும். தனியார்மயமாக்கல், அபாயகரமான ஒப்பந்த வேலைகள், சிக்கன நடவடிக்கைகள், வகுப்புவாத ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பிற தாக்குதல்களுக்கு எதிரான அனைத்துப் போராட்டங்களையும் ஒரு வெகுஜன தொழிலாள வர்க்க அரசியல் தாக்குதலாக அவர்கள் ஒன்றிணைக்க வேண்டும். அத்தகைய தாக்குதல், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் மற்றும் தொழிலாளர் அதிகாரத்துக்கான போராட்டமாக மற்றும் சமூகப் பொருளாதார வாழ்வினை சோசலிச மறுஒழுங்கு செய்வதாக இருக்க வேண்டும்.

Loading