பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு இந்து மேலாதிக்க கோவிலை மோடி திறந்து வைக்கிறார்: ஒரு வரலாற்று குற்றம் ஒன்றின் மேல் மற்றொன்று

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

திங்கட்கிழமை, ஜனவரி 22, அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட பாபர் மசூதி (பள்ளிவாசல்) இருந்த இடத்தில் தனது பாரதீய ஜனதா (BJP) அரசாங்கம் எழுப்பிய பிரமாண்டமான இந்துக் கோயிலைத் திறந்து வைக்கும் “புனித” மத விழாவுக்கு தலைமை தாங்கினார். இதன்மூலம், இந்து மேலாதிக்க வலதுசாரிகளின் நீண்டகால குறிக்கோளை அவர் நிறைவேற்றியுள்ளார்.

16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லீம் மசூதி, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் பாசிச RSS மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP, உலக இந்துக்கள் கவுன்சில்) ஆகிய அதன் கூட்டாளிகளினால் அணி திரட்டப்பட்ட இந்து அடிப்படைவாத ஆர்வலர்களால் டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. . இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் மசூதியைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பின் கீழ், சிறப்புப் பயிற்சி பெற்ற இந்து ஆர்வலர்கள் கோடாரிகள், சுத்தி, மற்றும் கிடுக்கிப்பிடி கொக்கிகளை பயன்படுத்தி சில மணிநேரங்களில் அதைத் தரைமட்டமாக்கினர்.

1947 பிரிவினையில் துணைக்கண்டம் வெளிப்படையான முஸ்லீம் பாகிஸ்தானாகவும், பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியாவாகவும் பிரிக்கப்பட்டதற்கு பிறகு மசூதி இடிக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவில் மிக மோசமான வகுப்புவாத வன்முறை தூண்டிவிடப்பட்டது. 1993 ஆம் ஆண்டு வரை வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பெரும்பகுதி முழுவதும் பரவிய கலவரங்கள் மற்றும் பிற வகுப்புவாத சீற்றங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் ஏழை முஸ்லிம்கள் ஆவர்.

அயோத்தியில் இந்துக் கடவுள் ராமர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்அவுட்களை தொழிலாளர்கள் வைக்கின்றனர். இந்தியா, வியாழன், ஜன. 18, 2024. இந்தியாவின் வடக்கு அயோத்தி நகரத்தில், பாபர் மசூதி கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளாக இருந்த இடத்தில் ராமர் கோவில் திறக்கப்படுவதைக் குறிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. [AP Photo/ Deepak Sharma]

பாஜக அரசாங்கமும் அவர்களின் இந்து வலதுசாரிக் கட்சிகளும் திங்கள்கிழமை ராமர் கோயில் திறப்பு விழாவை ஒரு தேசிய விழாவாகவும் கொண்டாட்டமாகவும் நடத்த விரும்பின. மத்திய அரசு ஊழியர்களுக்கு மதியம் 2 மணி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் உட்பட பெரும்பாலான பாஜக ஆளும் மாநிலங்களில் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டு இறைச்சி மற்றும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

கார்ப்பரேட் ஊடகங்கள் வெட்கமின்றி நிகழ்வை விளம்பரப்படுத்துவதால், - இந்து தெய்வமான பகவான் ராமரின் குழந்தை வடிவிலுள்ள ராம்லாலாவின் சிலையை –உண்மையில் 51 அங்குல (1.3 மீட்டர்) பொம்மையை மோடி ஆசீர்வதிப்பதை கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது - அது ராமர் கோயிலின் கருவறையில் திறக்கப்பட உள்ளது.

மத உணர்வுகளையும் பின்தங்கிய நிலையையும் பயன்படுத்திக் கொள்ள முற்படும் இந்து வலதுசாரிகள், பாபர் மசூதிக்கு எதிரான போராட்டத்தின் மையமாக, (இந்தியாவின் முஸ்லீம்களுக்கு எதிரான குரோதத்தைத் தூண்டிவிட்டு, இந்து மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு போராட்டம்) புராண கடவுள் ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்ற அபத்தமான கூற்றை வைத்தனர்.

திங்கட்கிழமை நடந்த பதவியேற்பு விழாவானது, மதம் சார்ந்த முட்டாள்தனம், மாயவாதம் மற்றும் சமூகத்தின் பின்னடைவு ஆகியவற்றின் கொண்டாட்டத்தை விட அதிகமானது.

இது ஒரு வரலாற்று குற்றத்தின் கொண்டாட்டம். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டுவதும், அதற்கு இந்தியப் பிரதமரின் ஆசீர்வாதமும் அடிக்கோடிட்டுக் காட்டுவது போல, இது தொடருகின்ற மற்றும் மேலும் சீற்றங்களைத் தோற்றுவிக்கிற ஒன்றாக இருக்கும்.

இந்தக் குற்றங்கள் இன்னும் கொடூரமான ஒன்றை முன்னெடுத்து செல்வதாக இருக்கும் - இந்தியாவை ஒரு இந்து ராஷ்யமாக அல்லது அரசாக மாற்றுவது, இதில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் எந்த தலித்துகளும் (முன்னாள் தீண்டத்தகாதவர்கள்) இந்தியாவை முதலும் முதன்மையாகவும் ஒரு “இந்து தேசம்” என்று ஏற்றுக் கொள்ளவில்லை, அவர்கள் பெரும்பான்மையான இந்துக்களின் சகிப்புத் தன்மையில் வாழ்கின்றனர்.

திங்கட்கிழமை தொடக்கவிழாவானது, பின்னிப்பிணைந்த நோக்கங்களை கொண்டுள்ளது.

முதலாவதாக, இந்த வசந்த காலத்தில் தேர்தலுக்குச் செல்லும்போது, தொடர்ந்து மூன்றாவது தடவையாக ஐந்தாண்டு காலத்திற்குத் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்க மோடி மற்றும் பாஜக வுக்கு அதிகாரப்பூர்வமற்ற தளத்தை இது வழங்குகிறது.

மோடியும் அவரது ஆர்எஸ்எஸ் ஆலோசகர்களும் ராமர் கோவிலை இந்து தேசியவாத-மேலாதிக்கவாத கோவிலாக மாற்றுவதற்கான அவர்களின் பிரச்சாரத்தின் முடிசூடிய சாதனையாகவும் பார்க்கிறார்கள். இது அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கும் “புதிய இந்தியாவின்” அடையாளமாக இருக்க வேண்டும், அதன் இருப்பு சமகால இந்தியாவில் “இந்துத்துவ” உறுதிப்பாடு மற்றும் அரசியல் முன்னிலைக்கு சான்றாகும்.

பிடிவாதமான கார்ப்பரேட் ஊடகத்தின் உதவியுடன், பிஜேபியும் அதன் கூட்டாளிகளும் தொடர்ச்சியான பிற்போக்குத்தனமான, ஒன்றோடொன்று இணைந்த கதைகளை ஊக்குவித்துள்ளனர்.

இந்து வலதுசாரிகளின் வக்கிரமான வரலாற்றின் படி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு “இந்து தேசமாக” இந்தியாவின் “மறுபிறப்பு” என்பது, குழந்தை பகவான் ராமருக்கு (ராம் லாலா) கோவில் கட்டப்படுவது தான் என்று அவர்கள் கூறுகின்றனர். “அன்னிய” முஸ்லீம் ஆட்சிக்கு கீழிருந்த அந்த இடம், அடுத்து பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளின் கீழ் வந்தது என்கின்றனர்.

மோடி மற்றும் பிஜேபியின் கீழ் இந்தியா ஒரு இந்து தேசமாக மறுபிறப்பு எடுத்திருப்பது அதன் முதலாளித்துவ “எழுச்சி” மற்றும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் மதிப்புமிக்க கூட்டாளியாக உலக விவகாரங்களில் அதன் அதிக உறுதியான பாத்திரத்தில் இருந்து பிரிக்க முடியாததாக உள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியாவின் பில்லியனர்களுக்கு கௌரவமான இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டு பெரும் பணக்கார பில்லியனர்கள் தொடங்கி, அவர்களில் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் தீவிரமான மோடி ஆதரவாளர்கள் ஆவர். முகேஷ் அம்பானி (ஜனவரி 18 அன்று ஃபோர்ப்ஸின் தற்போதைய பில்லியனர்கள் தரவரிசைப்படி 105.4 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்பு கொண்டவர்) மற்றும் கௌதம் அதானி ($74.9 பில்லியன் டொலர்கள்) ஆகியோர்கள் ஆவர்.

ஒரு “தேசிய” கொண்டாட்டமாக மோடியின் ராமர் கோவில் திறப்பு விழா, இந்தியாவை “மதச்சார்பற்ற” நாடு என்ற எந்தவொரு கருத்தையும் நிராகரிக்கும் நோக்கத்தை மிகவும் நிரூபிக்கக்கூடிய பாணியில் உள்ளது. அரசியலமைப்பு முறைப்படி என்ன அறிவித்தாலும் கூட, மோடி அரசாங்கம், நீதித்துறையின் உதவியோடும், அம்பானி, அதானி மற்றும் பிற இந்தியத் தொழில்துறையின் பாரிய சக்திகளின் ஆதரவோடும், இந்தியாவை இன்னும் முழுமையாகச் சட்டப்படியாக இல்லை என்றாலும் நடைமுறையில் ஒரு இந்து அரசாக மாற்றுகிறது.

உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, இந்தியாவில் பெருவணிகம், வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பைக் கண்டு அஞ்சுவதுடன் சந்தைப் பங்கு மற்றும் இலாபங்களுக்கான வெறித்தனமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அது தீவிர வலதுசாரிகளை அதன் நலன்களை மூர்க்கமான முறையில் பாதுகாப்பவர்களாகவும் மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கு மூர்க்கமான எதிர்ப்பாளராகவும் அரவணைத்து வருகிறது.

ராமர் கோவில் விழாவின் மூலமாக, பாஜக தலைமை, அதன் தொண்டர்களாக இருக்கும் இந்து வலதுசாரி சக்திகளை வலுப்படுத்த விரும்புகிறது. மற்றும் பாஜக இந்தியாவின் மீது அதன் பிம்பத்தை வெற்றிகரமாக திணிப்பதாகவும் காட்டுகிறது மற்றும் மத அடிப்படையில் வாக்காளர்களை துருவமுனைப்படுத்தும் நோக்கில் இந்து வகுப்புவாதத்தைத் தூண்டுகிறது.

அது மோடியை ஒரு சர்வாதிகாரப் பிரமுகராக, தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு இந்து “வலிமையானவராக” கட்டமைக்க முயல்கிறது. திங்கட்கிழமை பிரான் பிரதிஷ்டா (உண்மையில் “சிலைக்கு உயிர் கொடுப்பது”) விழாவிற்கு முன்னதாக இந்து “சுத்திகரிப்பு” சடங்குகளை நடத்துவதாக அறிவித்த மோடி, தான் கடவுளின் வாகனமாக சேவை செய்வதாக அடக்கமாக அறிவித்தார். “கடவுள் என்னைப் படைத்தார்,” என்று அவர் ஜனவரி 12 அன்று ட்வீட் செய்தார். “பிரான் பிரதிஷ்டையின் போது” இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, இதை மனதில் வைத்து, இன்று முதல் 11 நாள் சிறப்பு அனுஷ்டானத்தை (சுத்திகரிப்பு) தொடங்குகிறேன்” என்றார்.

பல தசாப்தங்களாக இந்திய அரசியலில் ஒரு விளிம்பு சக்தியாக இருந்தது, பாஜக, 1980கள் வரை பாபர் மசூதி தொடர்பான சர்ச்சை அயோத்தி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஒரு உள்ளூர் பகுதியில் இருந்தது, அது ஒரு சில இந்து அடிப்படைவாதிகள் மற்றும் இந்து மகாசபை பாசிஸ்டுகளால் உயிரோட்டத்துடன் இருந்தது.

மற்ற இடங்களில் உள்ள பாசிச சக்திகளைப் போலவே இந்து வலதுசாரிகளின் எழுச்சியும், முதலாளித்துவம் மேலும் மேலும் வேகமாக வலது பக்கம் திரும்புவது மற்றும் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதில் பல தசாப்தங்களாக தாராளவாத மற்றும் “இடது” கட்சிகள் ஆற்றி வரும் பாத்திரத்துடன் அதாவது இராணுவம் மற்றும் போருக்குள் வளங்களைச் திருப்புவது மற்றும் மேலும் ஆழமான சமூக சமத்துவமின்மைக்குள் தள்ளுவதுடன் பிணைந்துள்ளது.

இந்திய அரசின் “மதச்சார்பற்ற” என்றழைக்கப்படும் எதிர்க்கட்சிகள் மற்றும் அமைப்புகள் இந்து வலதுசாரிகளுடன் இணக்கமாக செயல்படுவதன் காரணமாக பாஜக வின் எழுச்சி எளிதாக்கப்பட்டது. 1947 வகுப்புவாதப் பிரிவினைப் படுகொலைகள் உட்பட இந்து வலதுசாரிகளுடன் ஒத்துப்போயிருந்த மற்றும் இணைந்து வேலை செய்யும் காங்கிரஸ் கட்சியின் பதிவை இங்கு பட்டியலிடுவதாயின் அது மிக நீண்டதாக இருக்கும். ஆனால், பாபர் மசூதி இடிப்புடன் காங்கிரஸ் கட்சி அரசாங்கங்கள் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டன என்பதை மறந்துவிடக் கூடாது. ராமரின் இந்து பக்தர்களுக்காக மசூதியின் பூட்டுகளை அகற்றும் வகையில் 1986 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு ஆதரவாக மற்றும் டிசம்பர் 6, 1992 அன்று மசூதி இடிக்கப்படுவதை தடுப்பதற்கு அயோத்தியில் நிறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினருக்கு நரசிம்மராவ் அரசாங்கம் உத்தரவிட மறுத்ததும் இதில் உட்படும்.

1984ல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்களால் தூண்டப்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் 2002 இல் குஜராத்தில் முஸ்லிம் விரோத படுகொலைகள் போலவே பாபர் மசூதியை இடிக்க ஏற்பாடு செய்ய காரணமாக இருந்தவர்களை - பாஜக மற்றும் சிவசேனாவின் தலைவர்கள் இவற்றில் தங்கள் ஈடுபாட்டைப் பற்றி அல்லது அதைத் தொடர்ந்து நடந்த பரந்த வன்முறைகளை தூண்டியது குறித்து பெருமையாக பேசியபோதிலும் கூட – பொலிசும் நீதிமன்றங்களும் விசாரித்து வெற்றிகரமாக தண்டனை வழங்க தவறிவிட்டன

2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதியை இடித்து தள்ளிய குற்றவாளிகளுக்கு வெகுமதி அளித்தது. பாஜக அரசாங்கத்தின் மிகவும் நேசத்துக்குரிய குறிக்கோள்களில் ஒன்றை நனவாக்கவும் மற்றும் ஒரு காலத்தில் அது இருந்த காலி இடத்தில் பகவான் ராமருக்கு ஒரு கோயிலைக் கட்டவும் “உத்தரவிட்டது”. இந்து பெருமை மற்றும் துணிந்துரைத்தல் என்ற பெயரில் அதன் குற்றச் செயல்களின் ஒப்புதலை இருட்டடிப்பு செய்யும் வெளிப்படையான முயற்சியில், மற்றொரு இடத்தில் ஒரு மசூதி மற்றும் மருத்துவமனை மற்றும் பல்வேறு சமூகத் திட்டங்களால் இந்தியாவின் முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஐந்து வருடங்கள் ஆகியும் இவற்றில் எதுவுமே நிறைவேறாததில் ஆச்சரியமில்லை.

பல சலசலப்புகளுக்குப் பிறகு, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்தன. ஆனால் அவர்கள் அதை குற்றத்திற்கு வருத்தம் தெரிவிப்பது போல் செய்தார்கள். இந்திய ஸ்ராலினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM இன் தலைவர் சீதாராம் யெச்சூரி உட்பட பலர் கலந்துகொள்ள விரும்புவதாகவும், ஆனால் மோடியும் அவரது பிஜேபியும் இந்த நிகழ்வை “அரசியலாக்க” முடிவு செய்த சூழ்நிலையில் முடியாது என்றும் கூறினர்.

ராம ஜென்மபூமி (’ராமர் பிறந்த இடம்) இயக்கம் அதன் தொடக்கத்திலிருந்தே அரசியல் இல்லை என்பது போல! பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பரந்த வகுப்புவாத வன்முறை பற்றிய எந்தக் குறிப்பும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கிட்டத்தட்ட அனைத்து அறிக்கைகளிலும் வெளிப்படையாக இல்லை.

எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்தையும், அவை இந்து வலதுசாரிகளுக்கு, தழுவியதையும் எடுத்துக்காட்டும் வகையில், சில எதிர்க்கட்சிகளும் எதிர்க்கட்சி தலைமையிலான அரசாங்கங்களும் திங்கள்கிழமை ராமர் கோயில் அல்லது பிற இந்துக் கடவுள்களுக்கு மரியாதை செலுத்த தங்கள் சொந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்தன. தில்லியில் ஆம் ஆத்மி அரசாங்கம் முந்தையதைச் செய்தது, அதே நேரத்தில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி இந்துக் கடவுளான காளிக்கு அஞ்சலி செலுத்தினார்.

திங்களன்று வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை கொண்டாடுவது மற்றும் எதிர்க் கட்சிகளின் அராஜகம் மற்றும் சிரம் தாழ்த்துவது ஆகியவை சோசலிச சர்வதேசியத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் பாதையைத் திறக்க தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு உத்தரவாக இருக்க வேண்டும்.

பாஜக அரசாங்கம் தவறும் பட்சத்தில், ஸ்ராலினிச ஆதரவு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான, எதிர்கட்சியான இந்தியா தேர்தல் கூட்டணி, முதலாளித்துவத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமே தவிர வேறொன்றுமில்லை, அது ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை வழங்குகிறது, மேலும் முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தம் மற்றும் சீன-விரோத இந்திய -அமெரிக்க “பூகோள மூலோபாய கூட்டாண்மை” க்கு மோடியை போலவே மேலும் அர்ப்பணம் செய்ததாக இருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், வகுப்புவாதப் பிற்போக்குத்தனத்தைத் தோற்கடிப்பதற்கும், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டப்பட வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக தொழிலாளர்களின் ஆட்சி மற்றும் சமூக-பொருளாதார வாழ்க்கையை சோசலிச மறு ஒழுங்கு செய்வதற்கான போராட்டத்திலும் கிராமப்புற உழைப்பாளிகளை அதன் பின்னால் அணிதிரட்ட வேண்டும்.

Loading