அமெரிக்காவும் பிரிட்டனும் யேமன் மீது போர் தொடுக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஒரு அமெரிக்க கடற்படையின், துல்லியமாக திசையறியும் ஏவுகணை நாசகாரி போர்க்கப்பலில் இருந்து யேமனை நோக்கி தாக்குதல் தொடங்கியது. [Photo: US Central Command]

மக்கள் அடர்த்தியாக வாழும் நகரங்கள் உட்பட, அமெரிக்காவும் இங்கிலாந்தும் நேற்றிரவு யேமன் மீது குண்டுகளை வீசித் தாக்கத் தொடங்கியுள்ளன. அந்நாட்டின் மீதான தாக்குதலின் அளவுகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சவுதி அரேபியாவால் ஏற்கனவே ஒரு தசாப்த கால தாக்குதலால் அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தேசத்தை குறிவைத்து, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆதரவுடன் குண்டுவீச்சை மேற்கொள்வது என்பது சட்டவிரோதமான போர்ச் செயலாகும்.

இந்த தாக்குதல் ஒரு பரந்த மத்திய கிழக்கு மோதலின் வளர்ந்து வரும் ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது. காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை, ஈரானைக் குறிவைத்து பிராந்திய அளவிலான தாக்குதலாக மாற்ற அமெரிக்கா முயன்று வருகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த அறிக்கையில், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தலைநகரான சனாவையும், தென்மேற்கில் தாமர், வடமேற்கில் சத்தா, மற்றும் செங்கடலை ஒட்டிய யேமன் துறைமுக நகரான அல் ஹுதைதா நகரத்தையும் அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்கியதாக ஹூதி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர்கள் தலைநகர் சனாவில் ஐந்து வான்வழித் தாக்குதல்களின் ஒலியை கேட்டதாகத் தெரிவித்தனர். X/Twitter இல் வெளியிடப்பட்ட படங்கள், துறைமுக நகரான அல் ஹுதைதாவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய குண்டு வெடிப்புக்களை காட்டுகின்றன. இதை எழுதும் வரை, இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.

அல் மயாதீன் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட அறிக்கையில், ஹூதி துணை வெளியுறவு மந்திரி ஹுசைன் அல்-எஸி பின்வருமாறு கூறினார்: “எமது நாடு, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் பாரிய ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பின் அனைத்து மோசமான விளைவுகளுக்கும் அவர்கள் பெரும் விலையைச் செலுத்தத் தயாராக வேண்டும்”.

காங்கிரஸின் அல்லது பாராளுமன்றத்தின் ஒரு துண்டு ஒப்புதல் கூட இல்லாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் ஒரு புதிய போரை திறம்பட தொடங்கியுள்ளன. காஸா இனப்படுகொலை மீதான பரவலான மற்றும் தொடர்ச்சியான மக்கள் கோபத்தின் மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக்கும் இந்த நடவடிக்கையை அறிவிக்கவோ அல்லது குண்டுவீச்சுக்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ பத்திரிகைகளுக்கு முன் வரவில்லை.

இதற்கு மாறாக, தாக்குதலை தொடங்கியதை உறுதிப்படுத்தும் வகையில், பைடெனின் பெயரில் வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“இன்று, எனது வழிகாட்டுதலின் பேரில், உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றின் போக்குவரத்து சுதந்திரத்தை ஆபத்தில் ஆழ்த்திவரும் ஹூதி கிளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் யேமனில் உள்ள பல இலக்குகளுக்கு எதிராக, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றின் ஆதரவுடன், அமெரிக்க இராணுவம் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளன” என்று பைடெனின் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், பைடென், மேலும் போர்விரிவாக்கத்தை மேற்கொள்ளும் வகையில் அச்சுறுத்தி, “இந்த இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள், அமெரிக்காவும் எங்கள் கூட்டாளிகளும், எமது பணியாளர்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் அல்லது உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதைகளில் வழிசெலுத்துவதற்கான சுதந்திரத்தை கெடுக்க எதிரிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்கான தெளிவான செய்தியாகும். எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்தின் தடையற்ற போக்குவரத்தை பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நான் தயங்கமாட்டேன்” என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டத்தை காட்டி, குண்டுவீச்சுக்களை ஒரு தற்காப்பு நடவடிக்கையாக முன்வைக்கும் முயற்சி, 2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களின் அளவிலான மோசடியாகும்.

காஸாவில் இப்போது மூன்று மாதங்களாக மேற்கொண்டு வரும் பாலஸ்தீனியர்கள் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்பதே இந்த குண்டுவீச்சுக்களின் தெளிவான நோக்கமாகும். போர்த் தளவாடங்கள் மற்றும் இராணுவம் தொடர்பான பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையும், காஸாவிற்கு எதிராக அவற்றை பயன்படுத்துவதையும் தடுக்கும் நோக்கத்துடன் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து ஹூதி படைகள் செங்கடலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்கா தலைமையிலான குண்டுவீச்சு தாக்குதலானது, காஸா மீதான இனப்படுகொலைக்கு பைடென் நிர்வாகத்தின் பல பில்லியன் டாலர்கள் நிதியுதவி, மற்றும் பாரிய படுகொலைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, சியோனிச ஆட்சிக்கு அதன் “அவசர” வெடிமருந்துகளை வழங்குவதன் மூலம் வெகுஜன படுகொலைகள் தொடர்வதை உறுதிப்படுத்துகிறது.

இந்தப் போர் பல வாரங்களாக தயாராகி வருகிறது. டிசம்பரில், பைடென் நிர்வாகம் செங்கடலில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சர்வதேச கூட்டணியின் “ஆபரேஷன் செழிப்பு காவலர்” (Operation Prosperity Guardian) நடவடிக்கையை அறிவித்தது. அந்த பிராந்தியத்திற்கு போர்க்கப்பல்களை அனுப்புவதற்கு ஐரோப்பிய மற்றும் நட்பு நாடுகளின் பொது பரப்புரையும் இதில் அடங்கும்.

ஜனவரி 3 ஆம் தேதி, அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட மற்றும் அதன் 13 “கூட்டாளி நாடுகளால்” கையெழுத்திடப்பட்ட ஒரு அறிக்கையில், ஹூதிகளுடனான மோதல் அச்சுறுத்தல்களும் அடங்கியிருந்தன. புதன் கிழமையன்று, ஹூதிகளை கண்டித்து யேமன் மீதான தாக்குதலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வெற்றிகரமாக நிறைவேற்றியது.

ஏகாதிபத்திய ஆதரவு போரினால் ஏற்கனவே சீரழிக்கப்பட்ட ஒரு நாட்டை அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குகின்றன.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், யேமனில் அதிபர் அப்த்ரப்பு மன்சூர் ஹாடியின் அரசுக்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தில், ஹவுதி இயக்கம் யேமனின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியது. 2011 ஆம் ஆண்டு, ஏகாதிபத்தியம் மற்றும் சவூதியுடன் இணைந்த அலி அப்துல்லா சலே ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியை அடுத்து ஹாடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அந்த எழுச்சிக்கு வழிவகுத்த சமூகப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

2015 மார்ச் மாதம், சவூதி அரேபியா முன்னேறி வந்த ஹூதிகளுக்கு பதிலடி கொடுத்து, ஹாடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கில் ஒரு கொடூரமான போரைத் தொடங்கியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சவூதியின் தாக்குதலில் 377,000 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இந்தப் போரின் போது, ​​சவூதி அரேபியா ஒரு இனப்படுகொலை தன்மையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது, சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேல் இப்போது காஸா மீது செலுத்தும் செயல்களுக்கு இணையாக இருந்தது. அதில், 2015 இல் தொடங்கப்பட்ட அனைத்து பொருட்களின் விநியோகங்கள் மீதான தடையும் அடங்கும், பின்னர் 2017 இல் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. சவூதி அரேபியா பின்னர் முற்றுகையை நீக்கியதாகக் கூறியது, ஆனால் நாட்டிற்கான விநியோகங்களைத் தடைசெய்து தாமதப்படுத்தியது.

சவூதி அரேபியா வேண்டுமென்றே பஞ்சத்தைத் திட்டமிட்டு எற்படுத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக, யேமனின் விவசாயப் பயிர்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மீது திட்டமிட்ட முறையில் குண்டுவீசித் தாக்கியது. 60 சதவீதமான இறப்புகள் பட்டினியால் ஏற்பட்டதாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதல் 34 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில், ஒரு மில்லியன் மக்களை பாதித்த கொலரா தொற்றுநோய் உட்பட பாரிய தொற்றுநோய் தாக்கங்களுக்கு பங்களிப்பு செய்தது.

2019 ஆம் ஆண்டில், உலகிலேயே அவசரகால மனிதாபிமான உதவி தேவைப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மக்கள் யேமனில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது. இது, மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 75 சதவிகிதம் என்று ஐ.நா மதிப்பீடு செய்தது. உலகளாவிய பசிபட்டினி குறியீட்டில், உலகில் இரண்டாவது மோசமான இடத்தில் உள்ள நாடாக யேமன் இருந்தது. அதே போல் பலவீனமான நாடுகளின் குறியீட்டில் மிக உயர்ந்த தரவரிசை நாடாகவும் இருந்தது.

ஒபாமா தொடங்கி, அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்களால் இந்தப் போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு நிதியளிக்கப்பட்டன. 2015 மற்றும் 2021 க்கு இடையில், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையானது, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு இராணுவ ஆதரவாக 54.6 பில்லியன் டொலர்களை ஒதுக்கி, யேமன் மீதான குண்டுவீச்சுகளை மேற்கொள்வதற்கு முக்கிய பங்கு வகித்தது. அத்தோடு, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, சவுதி விமானிகளுக்கு பயிற்சி அளித்ததோடு, உளவுத்துறை தகவல்களை வழங்கி, தாக்குதலை அரசியல் ரீதியாக பாதுகாத்தது.

யேமன் மீது குண்டுவீசித் தாக்கியதன் மூலம், அமெரிக்காவும் பிரிட்டனும் முந்தைய குற்றத்தின் இடத்திலிருந்து, ஒருபோதும் முடிவடையாத குற்றத்தைத் தொடர்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், நேற்றிரவு குண்டுவீச்சுக்களுக்கு உள்ளான நகரங்களில் ஒன்றான அல் ஹுதைதா, ஒரு துறைமுக நகரம் என்பதால் சவுதி அரேபியாவின் குறிப்பிட்ட இலக்காக இருந்தது. செங்கடலுக்கான ஹவுதிகளின் அணுகலை மறுப்பதும் சவுதியின் முற்றுகையின் முக்கிய அங்கமாகும்.

சவூதி தாக்குதலுக்கான அமெரிக்காவின் ஆதரவு, ஹூதிகள் ஈரானுடன் உறவுகளைக் கொண்ட ஒரு ஷியைட் இயக்கம் என்ற உண்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஹூதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம், அவர்கள் ஏகாதிபத்திய மேலாதிக்க நிலைமைக்கும் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீண்டகால நகர்வுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தனர்.

காஸாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெரிய அளவிலான அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலை, லெபனான் மற்றும் சிரியாவை இலக்காகக் கொண்ட சியோனிச குண்டுவீச்சு நடவடிக்கைகள், மற்றும் ஈரானுக்கு எதிராக வாஷிங்டனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தற்போதைய தாக்குதல் வந்துள்ளது. இது, பிராந்தியம் முழுவதிலும் இன்னும் பரவலாகவும் ஒரு பாரியளவில் போர் வெடிக்கும் அபாயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading