யேமனுக்கு எதிராக அமெரிக்காவும் இங்கிலாந்தும் போர் அச்சுறுத்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

துல்லியமாக திசையறியும் ஏவுகணை நாசகாரி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்னி, கிரீஸின் சௌடா விரிகுடாவில் [AP Photo/U.S. Navy]

புதனன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் யேமனைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்து, மிக நேரடியான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களையும் காஸாவில் இனப்படுகொலைக்கு உதவும் அமெரிக்க போர்க்கப்பல்களையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

“ஹூதிகளின் நடவடிக்கைகள் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இதர நாடுகளைப் போலவே நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது பஹ்ரைனின் மனமாவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

யேமனில் ஹூதிகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு அறிக்கைகளுக்குப் பின்னால், ஈரானுக்கு எதிரான பிரச்சாரத்தின் தீவிரம் உள்ளது. இஸ்ரேலிய இனப்படுகொலைக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு, ஈரானை அதன் முக்கிய இலக்காகக் கொண்டு, மத்திய கிழக்கு முழுவதும் பரந்த போர் உந்துதலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் ஈரானுக்கு பலமுறை தெளிவுபடுத்த முயற்சித்தோம், மற்ற நாடுகளைப் போலவே, இந்த நடவடிக்கைகள் உட்பட ஹூதிகளுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவை நிறுத்த வேண்டும்” என்று பிளிங்கன் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்ட ஒரு தனி அறிக்கையில், “இது தொடர முடியாது மற்றும் தொடர அனுமதிக்க முடியாது... இது நிறுத்தப்படாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ‘இந்த இடத்தைப் பாருங்கள்’ என்று சொல்வது மிகவும் எளிமையான விஷயம் என்று நான் பயப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

புதனன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, ஹூதி கிளர்ச்சியாளர்கள் “தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தால், பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்பார்கள்” என்று அச்சுறுத்தல் விடுத்தார்.

செங்கடல் பிராந்தியத்தின் இராணுவமயமாக்கலின் ஒரு பகுதியாக அமெரிக்கா 20 க்கும் மேற்பட்ட நாடுகளின் சர்வதேச கடற்படை கூட்டணியை உருவாக்கியுள்ளது என்று கிர்பி குறிப்பிட்டார்.

ஜனவரி 3 அன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அமெரிக்க இராணுவம் யேமனின் பிரதான நிலப்பகுதியைத் தாக்குவதற்கான “விருப்பங்களைத் தயாரித்துள்ளதாகத்” தெரிவித்தது.

“சாத்தியமான இலக்குகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கான ஏவுகணைகள், கடலோர ரேடார் நிறுவல்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கான சேமிப்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொள்ளலாம்” என்று ஜேர்னல் எழுதியது.

வெள்ளிக்கிழமை அன்று, “காஸாவில் போர் அதிகாரப்பூர்வமாக அதன் எல்லைகளுக்கு அப்பால் அதிகரித்துள்ளது ”என்பதை பைடென் நிர்வாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக பொலிட்டிகோ பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டது.

“பைடென் நிர்வாக அதிகாரிகள் அமெரிக்காவை மற்றொரு மத்திய கிழக்கு போருக்கு இழுக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கான திட்டங்களை வரைந்து வருகின்றனர்” என்று அந்தக் கட்டுரை தெரிவித்தது.

அதிகாரிகளில் ஒருவரின் கூற்றுப்படி, இந்தத் திட்டத்தில் “யேமனில் உள்ள ஹூதி இலக்குகளைத் தாக்குவது அடங்கும். இது இராணுவம் முன்பு முன்வைத்த ஒரு விருப்பத் தேர்வாகும். ஈராக் மற்றும் சிரியாவில் ஈரானிய ஆதரவுப் படைகளால் அமெரிக்காவிற்கு எதிரான சாத்தியமான தாக்குதல்களை எதிர்பார்த்து, அதனை தடுக்கவும் அமெரிக்கா முயல்கிறது” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது இன்றுவரை மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருவதாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான டுவைட் டி. ஐசன்ஹோவர் மற்றும் இதர நான்கு போர்க்கப்பல்கள் கடந்த 24 மணி நேரத்தில் 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்ததாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

“சியோனிச அமைப்புக்கு ஆதரவாக இருக்கும்” அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்து அவர்கள் “ஏராளமான எண்ணிக்கையிலான ஆயுதங்களை” ஏவியுள்ளனர் என்று ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ஷரியா புதன்கிழமையன்று தெரிவித்தார்.

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆதரவாக அமெரிக்கா மத்திய கிழக்கில் பாரிய ஆயுதங்களை குவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், கவச வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட 10,000ம் டன் இராணுவ உபகரணங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் காஸா மீது ஆளில்லா விமான கண்காணிப்பு விமான பறப்புக்களை மேற்கொண்டுள்ளன.

புதனன்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஹவுதி தாக்குதல்களை கண்டித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்திற்கு ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை. ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட், ஹூதிகளின் நடவடிக்கைகள் “உலகளாவிய பதிலடிக்கு” தகுதியானவை என்று கூறினார். ஈரானை அச்சுறுத்திய அவர், “இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம்” ஈரான் என்று அவர் கூறினார். “ஹூதிகளின் சீர்குலைவு நடவடிக்கைகளை ஈரான் நீண்டகாலமாக ஊக்குவித்து வருவதாக” அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா கொண்டு வந்த இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மீதான சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு முன்னதாக இந்த அறிக்கைகள் வந்துள்ளன. இந்த விசாரணையானது, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஸாவிற்கு எதிரான போர் ஒரு “புதிய கட்டத்திற்குள்” நுழைந்துள்ளதாக இஸ்ரேல் கூறினாலும், காஸாவின் குடிமக்கள் மீதான திட்டமிட்ட குண்டுவீச்சு மற்றும் பட்டினி நிலைமைகள் சிறிதளவும் நிறுத்தப்படவில்லை.

புதன்கிழமையன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பு (WHO) காஸாவிற்குத் திட்டமிடப்பட்ட மருத்துவப் பணியை தற்போது குண்டுவெடிப்பு காரணமாக ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியது.

WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஒரு அறிக்கையில், “தீவிர குண்டுவீச்சு, மனித நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகள், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சீர்குலைந்த தகவல் தொடர்புகள் ஆகியவற்றால் உலக சுகாதார அமைப்பு மற்றும் எமது கூட்டுழைப்பாளர்கள், காஸாவில் உதவி தேவைப்படுபவர்களை சென்றடைவதைத் தடுக்கின்றன” என்று கூறினார்.

காஸாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அவசர மருத்துவக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சீன் கேசி, “நான் ஐந்து வாரங்களாக காஸாவில் இருக்கிறேன்... மோதலின் தீவிரத்தில் எந்தக் குறைவையும் நான் காணவில்லை” என்று கூறினார்.

இனப்படுகொலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையானது, “வான், நிலம் மற்றும் கடலில் இருந்து தீவிர இஸ்ரேலிய குண்டுவீச்சுகள் ஜனவரி 9 அன்று காஸா பகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட்டன, இதன் விளைவாக மேலும் பல பொதுமக்களுக்கு உயிரிழப்பு மற்றும் அழிவுகள் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேலால் மேலும் மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக, அதன் அரசாங்க ஊடக அலுவலகம் (GMO) புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது. தற்போது மொத்த எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் பெயர்கள் அகமது பதிர், ஷெரிப் ஒகாஷா மற்றும் ஹெபா அல்-அபத்லா என்று GMO கூறியுள்ளது.

காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் அதிகரித்து வரும் எதிர்ப்புகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தியதா என்று கேட்கப்பட்டபோது, இதுகுறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கிர்பி, “அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பை நம்புங்கள். மிகவும், மிகவும் இறுக்கமான, மிகவும் வலுவான இணைப்பு” என்று தெரிவித்தார்.

Loading