முன்னோக்கு

ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு குறித்து எதைக் கூறாமல் பைடென் தவிர்த்துவிட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி ஜோ பைடென், டொனால்ட் டிரம்பின் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பென்சில்வேனியாவில் உரை நிகழ்த்தினார். ஒரு அமெரிக்க ஜனாதிபதி, தான் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதை முறியடிக்க முற்பட்டது இதுவே முதல் தடவையாகும். கேபிடல் ஹில் மீதான வன்முறை தாக்குதல் மற்றும் 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கான காங்கிரஸின் (பாராளுமன்றம்) சான்றிதழைத் தடுக்க முயன்ற ஒரு கும்பலை வரவழைத்து தூண்டிவிடுவதில் ட்ரம்பின் சொந்த பங்கை, பைடென் கூட்டத்தில் விவரித்தார்.

ஆனால், ஜனவரி 6 தொடர்பான இரண்டு மையப் பிரச்சினைகளை அவர் குறிப்பிடவில்லை. குறிப்பாக, சதி முயற்சிக்கு முன்னும், அது நடந்தபோதும், அதற்குப் பின்னரும் ஜனநாயகக் கட்சியின் பாத்திரம் குறித்தும், அமெரிக்க ஜனநாயகத்திற்கு பெருகி வந்த ஆபத்தின் புறநிலை ஆதாரம் பற்றியும் பைடென் கூறாமல் தவிர்த்துவிட்டார்.

அவரது உரையில், போலீஸ் தடைகளை உடைத்த கும்பல், கேபிட்டலில் அதன் அரங்குகள் வழியாக நுழைந்து, அமெரிக்க செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் தங்கள் உயிரைக் காப்பாற்ற தப்பி ஓடியபோது, டிரம்ப் மணிக்கணக்கில் அமைதியாக இருந்ததாக பைடென் குற்றம் சாட்டினார்.

'அமெரிக்கா உள்ளிருந்து தாக்கப்பட்டபோது, அதை டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு வெளியே உள்ள தனியார் சிற்றூண்டி அறையில் உட்கார்ந்தபடி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். ஒட்டுமொத்த தேசமும் திகிலுடன் பார்த்தது.  முழு உலகமே நம்பமுடியாமல் பார்த்தது. மேலும் டிரம்ப் எதுவும் செய்யவில்லை” என்று பைடென் கூறினார்.

இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடென் என்ன செய்து கொண்டிருந்தார்? கேபிட்டல் ஹில் மீதான தாக்குதலை அவர் பகிரங்கமாக கண்டிக்கவில்லை. அவர் இதுபற்றி எச்சரிக்கைகள் எதனையும் விடுக்கவில்லை. அமெரிக்க மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அவர் எந்த எச்சரிக்கை அழைப்பையும் விடுக்கவில்லை. மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவில்லை. அவர் இறுதியாக கேமராவில் தோன்றியபோது, ​​நம்பமுடியாத அளவிற்கு, அவர் வாஷிங்டனுக்கு அழைத்து வந்த கும்பலை நிறுத்துமாறு தலைமை சதித்திட்டக்காரரான டிரம்ப்பிடம் முறையிட்டார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த அரசு செயற்பாட்டாளரான பைடென், இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சதிப்புரட்சியின் நிலைமை குறித்து தீர்மானிக்க பல மணிநேரங்களைச் செலவிட்டார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆட்சிக்கவிழ்ப்பு தோல்வியில் முடிகிறது என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்ட பின்னரே, தொலைக்காட்சி கேமராக்கள் முன் வந்த பைடென், டிரம்பிடம் அவரது ஆதரவாளர்களை வீட்டிற்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.

இந்த நிலைப்பாடு ஜனவரி 6, 2021 வரையிலான மாதங்கள் முழுவதும் ஜனநாயகக் கட்சியின் நடத்தைக்கு ஏற்ப இருந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு டிரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்ய மறுத்ததே 2020 கோடையில் அவரது மோசமான கனவாக இருந்தது என்று பைடென்  கூறியிருந்தார். ஆனால் அது நடந்திருந்தால், இராணுவம் விரைவில் முன்னாள் படைத் தளபதியை அங்கிருந்து அகற்றி, அவரை ஓய்வுபெறச் செய்திருக்கும் என்று அவரது நம்பிக்கையை  தெரிவித்தார்.

இலையுதிர் காலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரம் முழுவதும், பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் ட்ரம்ப் தேர்தல் தோல்வியை ஏற்க மாட்டார் என்ற மிரட்டல்களை நிராகரித்தனர். மேலும், அந்த பக்கத்திலிருந்து எந்த ஆபத்தும் இல்லை என்றும் அமெரிக்க மக்கள் மற்றொரு அமைதியான அதிகார மாற்றத்தை எதிர்நோக்க முடியும் என்றும் கூறினர். தேர்தல் நடந்த காலத்திற்கும் ஜனவரி 6 க்கும் இடைப்பட்ட மாதங்களில் இந்த உறுதிமொழிகள் தீவிரப்படுத்தப்பட்டன, மற்றும் டிரம்ப் அதிகாரத்தில் நீடிப்பதில் தீவிரமாக இருப்பதாக சொல்லப்படும் எதையுமே பைடென் பகிரங்கமாக கேலி செய்தார்.

ஜனவரி 6 சதி முயற்சிக்குப் பிறகு, பைடென் குடியரசுக் கட்சியைப் பாதுகாக்க வேகமாக செயல்பட்டதால், மூடிமறைப்பு நடவடிக்கை தொடங்கியது. காங்கிரஸின் பெரும்பான்மையான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்கு சான்றளிக்க வேண்டாம் என்று வாக்களித்த ஒரு நாளுக்குப் பிறகு, கேபிட்டலைத் தாக்கிய கலகக்காரர்களின் நிலைப்பாட்டை திறம்பட ஏற்று, “எங்களுக்கு ஒரு குடியரசுக் கட்சி தேவை. கொள்கை ரீதியான மற்றும் வலுவான எதிர்க்கட்சி எங்களுக்குத் தேவை” என்று பைடென் அறிவித்தார்.

இது பைடென் வெள்ளை மாளிகைக்கு மட்டுமல்ல, காங்கிரசின் ஜனநாயகத் கட்சித்தலைமைக்கும் ஒரு மந்திரமாக மாறியது. அமெரிக்காவில் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு பயனுள்ள அரசியல் ஏகபோகத்தை அளிக்கும் பெருவணிக அரசியலின் முக்கிய அரணான இரு கட்சி முறையின் சரிவைத் தடுக்க அவர்கள் விரும்பினர்.

ஜனவரி 6 சம்பவம் குறித்த பல்வேறு விசாரணைகள், கேள்விகள் மற்றும் பதில்கள் பல முறை மாறுபட்டனவாகவும் மற்றும் பல தடவைகள் தளர்ந்து செல்வனவாகவும் இருந்தன. ஜனவரி 6 சம்பவம் குறித்த இந்த சதி முயற்சியில் அரசு முகமைகளின் பாத்திரத்தை மூடிமறைப்பதில் சபை தெரிவுக் கமிட்டியின் விசாரணை ஒரு முக்கிய பாத்திரம்  வகித்தது.

ஜனவரி 6 வரை நடந்த சதி நிகழ்வுகள் பற்றிய மதிப்புமிக்க சான்றுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, தேசிய காவலர்களை அனுப்புவதை உயர் தளபதிகள் தடுத்ததாக அறிக்கைகள் வெளிவந்த நிலையில், பென்டகன், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களின் பாத்திரத்தை ஆராய்வதற்கு, இந்தக் கமிட்டி மறுத்துவிட்டது. இதன் பொது விசாரணைகளின் போதும், இறுதி அறிக்கையிலும், கமிட்டியானது கேபிட்டல் மீதான தாக்குதல் ட்ரம்ப்பே, அதாவது அந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியதாக ஒரு தனிநபர் ட்ரம்ப் மட்டுமே தனிப்பட்டமுறையில் பொறுப்பேற்க வேண்டிய ஒரு நிகழ்வாக விபரித்தது. இந்த விபரிப்பை பைடென் தனது வெள்ளிக்கிழமை உரையில் எதிரொலித்தார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கான பரந்த பொறுப்பு குறித்த மெளனத்தையும் அதன் ஆழமான சமூகக் காரணங்கள் தொடர்பான மவுனத்தையும் ஒன்றிணைத்தார். 2024 தேர்தலின் விளைவாக டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதில் வெற்றி பெற்றால், அவர் சர்வாதிகாரத்திற்கான தனது திட்டங்களை புத்துயிர் பெறச் செய்வார் என்று பைடென் வெள்ளிக்கிழமை தனது உரையில் கூறியது முற்றிலும் உண்மையாகும். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

டிரம்ப் கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இது அவரை அமெரிக்காவின் தெருக்களில் அமெரிக்க இராணுவப் படைகளை நிலைநிறுத்துவதற்கு அனுமதிக்கிறது. (சாதாரண சூழ்நிலைகளில் செய்ய அனுமதிக்க முடியாது) தன்னை எதிர்ப்பவர்களை 'ஜந்துக்கள்' என்று அழைக்கிறார். நாஜி ஜேர்மனியில் பயன்படுத்தப்பட்ட அதே மொழியை எதிரொலித்து, அமெரிக்கர்களின் இரத்தத்தில் விஷம் கலந்ததைப் பற்றி அவர் பேசுகிறார்.

ஆனால் இந்த யதார்த்தம் எழுப்பிய மிக முக்கியமான கேள்விக்கு பைடென் மௌனம் காத்தார். இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டு, அரசியலமைப்பை கவிழ்க்க முயன்ற முன்னாள் ஜனாதிபதி எப்படி மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்?

ஜனநாயகக் கட்சியினர், ஜனவரி 6 குறித்த எந்தவொரு தீவிர விசாரணையையும் தடுப்பதன் மூலம், டிரம்பின் அரசியல் அதிர்ஷ்டத்தின் மறுமலர்ச்சிக்கு நிச்சயமாகப் பங்களித்துள்ளனர். டிரம்ப் இருக்க வேண்டியது சிறையிலேயே அன்றி பல உயர்மட்ட கூட்டு சதிகாரர்களுடன் சேர்ந்து பிரச்சாரப் பாதையில் அல்ல.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதை தனது நிர்வாகத்தின் அச்சாணியாக  ஆக்குவது என்ற பைடெனின் கூற்று மற்றும் அவரது மறுதேர்தல் பிரச்சாரம் வெளிப்படையான பொய்யாகும். அவரது நிர்வாகத்தின் மையத்தில் கவனமாக இருப்பது போராகும். முதலில் உக்ரேனில் ரஷ்யாவுடனான பினாமிப் போர், இப்போது காஸா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை தாக்குதல். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக நடத்தப்பட்டுவரும் இந்த இரண்டு போர்களும், எந்த ஒரு ஜனநாயக ஒப்புதல் ஆணையும் இல்லாமல், பெருகிவரும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ளும் நிலையில் நடத்தப்படுகின்றன

ட்ரம்புக்கு சற்றும் சளைத்தவரில்லாத பைடென், அமெரிக்க ஆளும் வர்க்கத்தையும் அதன் பூகோளரீதியான நலன்களையும் பாதுகாப்பதில் எவ்வித மாற்றமின்றி உறுதியாக இருக்கிறார். இந்தப் போர்களை தொடர, 2024 தேர்தலில் பாசிச ட்ரம்ப்பை நியமிக்க குடியரசுக் கட்சி தயாராகும் அதே வேளையில், பைடெனுக்கு இருகட்சி ஆதரவும் தேவைப்படுகிறது.

இந்த போர் உந்துதலின் ஒரு பகுதியாக, வெவ்வேறு வாய்வீச்சுக்களுடன் பைடென் ஜனநாயகத்தின் மீதான டிரம்பினுடைய அதே தாக்குதல்களைத் தொடர்கிறார். புலம்பெயர்ந்தோர் இன்னும் முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மற்றும் மில்லியன் கணக்கில் நாடு கடத்தப்படுகிறார்கள், ஆனால் வெள்ளை மாளிகையில் இருந்து ஆரவாரமான உரைகள் இல்லாமல் அது நடக்கிறது. உக்ரேனில் மற்றும் குறிப்பாக காஸாவில் நடக்கும் போர்கள், மற்றும் அவை தொடர்பாக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையின் மீதான தாக்குதலுடன் சேர்ந்து, இப்போது 'யூத எதிர்ப்பை' எதிர்ப்பது என்ற போலியான பேச்சுக்களுடன் கல்லூரி வளாகங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஜனவரி 3ம் திகதியிலிருந்து 6ம் திகதிவரை, நான்கு பகுதிகளாக வெளியிடப்பட்ட அதன் புத்தாண்டு அறிக்கையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு, அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெற்று வரும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நெருக்கடி மற்றும் உடைவு குறித்து விரிவான பகுப்பாய்வை வழங்கியுள்ளது.

இவ் அறிக்கையானது இந்த வீழ்ச்சிக்கு அடிப்படையான சமூக மற்றும் பொருளாதார வேர்களை தொடர்புபடுத்துகிறது: அதாவது ஒரு சில பிரமாண்டமான நிதி நிறுவனங்களால் சமூகத்தின் மீது அதிகரித்து வரும் கட்டுப்பாடு மற்றும் சமூக சமத்துவமின்மையின் இணையற்ற விரிவாக்கத்திலிருந்து எழும் தீவிர சமூக பதட்டங்கள் ஆகும். இந்த சமத்துவமின்மையால் ஒரு சில பில்லியனர்கள் பெரும்பான்மையான மக்களை விட அதிக செல்வத்தை சொந்தமாக வைத்துள்ளனர். இந்த முதலாளித்துவ தன்னலக்குழுக்களால் சமூகம் மேலாதிக்கம் செய்யப்படும் நிலையில் அது ஜனநாயக உரிமைகளுடன் பொருந்தாது என்று, அந்த அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

வர்க்கம் மற்றும் பொருளாதார அதிகாரத்தின் அடிப்படைப் பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது பற்றிய அனைத்துப் பேச்சுக்களோடும், முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக பூகோளரீதியாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதை மறுப்பதென்பது, சிடுமூஞ்சித்தனமான மற்றும் அரசியல்ரீதியாக கையாலாகாத வாய்வீச்சுகள் ஆகும். பில்லியனர்களின் செல்வம் பறிமுதல் செய்யப்பட வேண்டும் மற்றும் பிரமாண்டமான பெருநிறுவனங்கள், மிகப்பெரும் பங்குதாரர்களுக்கு இழப்பீடு வழங்காமல், தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல், சமூகத் தேவையின் அடிப்படையில் இயக்கப்படுவதற்கு பொது கட்டுப்பாட்டிலுள்ள பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும். உலக அளவில் ஒரு ஜனநாயக மற்றும் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை ஸ்தாபிக்க, முதலாளித்துவ அரசின் ஜனநாயக-விரோத நிறுவனங்கள் மற்றும் ஒடுக்குமுறை அமைப்புகள் (தொழில்முறை இராணுவம், பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகள்) ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தின் அமைப்புகளால் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு அடிப்படையாக இருக்கும் அத்தகைய ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் மூலம் மட்டுமே அடைய முடியும்.

Loading