World Socialist Web Site www.wsws.org |
லியோன் ட்ரொட்ஸ்கியின் அத்தியாயம் 1 கட்சித் தலைமுறைகளின் பிரச்சினை மாஸ்கோவில் நடைபெற்ற விவாதங்களின்போது ஏற்கப்பட்ட தீர்மானங்கள் ஒன்றில் , கட்சி ஜனநாயகம் பற்றிய பிரச்சினை தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகள், தனிப்பட்ட தாக்குதல்கள் முதலியவை தொடர்பான விவாதங்களால் சிக்கலடைவதாக புகார்கூறப்பட்டது. இந்த புகார் ஒரு சிறிய மனத்தளவிலான குழப்பம் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது. தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையே உள்ள பரஸ்பர உறவுகள் என்ற இரண்டும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்களாகும். கட்சி உறுப்பினர்கள் பற்றி ஆராயாமல், கட்சி ஜனநாயகத்தின் பிரச்சனையைப்பற்றி தற்போது வலியுறுத்துவது சமூகப் பார்வை நிலைப்பாட்டிலிருந்தும், வயது, அரசியல் நிலைப்பாடு போன்றவற்றில் இருந்து பார்த்தாலும் இப்பிரச்சனையை வெற்றிடத்தில் கரைப்பது போலாகிவிடும். முதலாவதாக கட்சியின் ஜனநாயக பிரச்சினையே தலைமுறைகளுக்கு இடையே உள்ள உறவுகள் பற்றிய பிரச்சினை பற்றி எழுந்தது தற்செயலானது அல்ல. அது எமது கட்சியின் முழு வளர்ச்சியின் தர்க்கரீதியான விளைவாகும். அதன் வரலாறு முறையாக நான்கு காலகட்டங்களாக பிரிக்கப்படலாம்:A ) வரலாற்றில் ஒரே ஒரு தடவை நடந்துள்ள, அக்டோபருக்கான தயாரிப்பிற்கு முந்தைய 25 ஆண்டுகள்;B ) அக்டோபர்;C ) அக்டோபரைத் தொடர்ந்த காலகட்டம்; மற்றும்D ) புதிய பாதை, அதாவது, இப்பொழுது நாம் நுழைந்துகொண்டிருக்கும் காலம்அக்டோபருக்கு முந்தைய காலமானது, பெரும் செழிப்பையும், பன்முகச் சிக்கலையும், கடந்துவந்த காலத்தில் மாறுபட்ட கட்டங்களை கொண்டிருந்தபோதிலும்கூட, அது ஒரு தயாரிப்புக்காலம் மட்டும் தான் என்பது இப்பொழுது உணரப்பட்டுள்ளது. தத்துவத்தையும் கட்சியின் அமைப்பையும், அதன் அங்கத்துவர்களையும் பற்றியும் பரிசோதித்துக்கொள்வதை அக்டோபர் சாத்தியமாக்கியது. அக்டோபர் என்று கூறும்போது, அதிகாரத்திற்கான போராட்டத்தின் மிகக் கடுமையான காலகட்டம் என்று நாம் அறிகிறோம்; இது ஏறத்தாழ லெனினுடைய "ஏப்ரல் ஆய்வுரைகள்" [1] காலத்தில் தொடங்கி அரச இயந்திரத்தை உண்மையில் கைப்பற்றியதில் முடிந்தது. ஒரு சில மாதங்கள்தான் இது நீடித்திருந்தபோதிலும், பல ஆண்டுகளாலும், தசாப்தங்களாலும் அளவிடப்படும் தயாரிப்பு காலத்தினை விட உள்ளடக்கத்தில் இது முக்கியத்துவம் குறைந்தது அன்று. கட்சியின் முக்கிய கடந்தகாலத்தை பற்றி மிகப் பிரத்தியேகமான முறையில் (தன்மையில்), உண்மையான மதிப்பீட்டை செய்ய அக்டோபர் நமக்குக் கொடுத்ததோடு மட்டுமின்றி, அதுவே வருங்கால அனுபவத்திற்கு ஓர் மூல ஊற்றுமானது. அக்டோபருக்கு ஊடாகத்தான் அக்டோபருக்கு முந்தைய கட்சி முதல் தடவையாக தன்னுடைய உண்மையான தகுதியை மதிப்பீடு செய்ய முடிந்தது. அதிகாரத்தை வெற்றிகொண்டதை தொடர்ந்து ஒரு விரைவானதும் மற்றும் அசாதாரணமானது எனக்கூடக் கூறக்கூடிய வளர்ச்சியை கட்சி அடைந்தது. கட்சி ஒரு சக்தி வாய்ந்த காந்தம் போல், குறைந்த நனவுடைய தொழிலாளர்களை மட்டும் அல்லாமல், அதன் உணர்வுக்கு முற்றிலும் மாறுபட்ட சில கூறுபாடுகளைக்கூட, அதிகாரிகள், தம் தொழில் முன்னேற்றத்தை நாட்டமாக கொண்டவர்களையும் மற்றும் அரசியலில் தங்கி பிழைப்பவர்களையும் ஈர்த்தது. இந்த பெரும் குழப்ப காலத்தில், கட்சி தன்னுடைய போல்ஷிவிக் தன்மையை, அக்டோபரில் பரிசோதனைக்குட்பட்டிருந்த பழைய காப்பாளர்களின் (Old Guard) உட்சர்வாதிகாரத்தினால்தான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. அநேகமாக அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும், புதிய உறுப்பினர்களால் சவாலுக்குட்படுத்தப்படாமல் பழைய தலைமுறை தலைமை ஏற்கப்பட்டிருந்தது; தொழிலாளவர்க்க உறுப்பினர்களால் மட்டுமல்லாமல், அந்நியமான பிரிவுகள் கூட இதில் அடங்கும். அதிகாரத்தில் உயரவேண்டும் என்று கருதியவர்கள், இந்த பணிந்து நிற்கும் வகையை பயன்படுத்துவதானது கட்சியில் தங்களுடைய நிலைப்பாட்டை நிறுவிக்கொள்ள சிறந்ததாக நினைத்தனர். ஆனால் அவர்கள் தப்புக்கணக்குத்தான் போட்டனர். மிகக்கடுமையான முறையில் அதன் சொந்த அணிகளில் களையெடுப்பு செய்ததன் மூலம் கட்சி அத்தகையவர்களை தன்னிடமிருந்து விடுவித்துக்கொண்டது. கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தது: ஆனால் அதன் உணர்மை (நனவு) பெருகியது. தானே சோதித்துப்பார்த்துக் கொள்ளல் என்றும்கூட சொல்லலாம், இந்த களையெடுத்தல், அக்டோபருக்கு பிந்தைய கட்சியை முதல் முதலாக அரை மில்லியன் மக்களால் கூட்டாக தலைமை தாங்குவதை உணரவைத்து, அதன் பணி வெறுமே பழைய காப்பாளர்களால் வழிநடத்தப்படுதல் என்றுமட்டுமில்லாமல், கொள்கை பிரச்சினைகளின் அடிப்படைகளை ஆராய்ந்து தானே முடிவெடுக்கும் தன்மையையும் உடையது என்று உணர்த்தியது. இந்த அர்த்தத்தில் களையெடுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய காலகட்டம், கட்சியின் வாழ்வில் இப்பொழுது வெளிப்படுத்தப்படும் ஆழமான மாற்றத்திற்கு தயார்செய்தலாக இருந்தன, அவ்வாறு இருந்ததால், அம்மாற்றம் வரலாற்றில் "ஒரு புதிய பாதை" என்ற பெயரில் அழைக்கப்படக்கூடும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு விஷயம் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளப்பட வேண்டும்: இப்பொழுதுள்ள கருத்து வேறுபாடுகள், இடர்பாடுகள் ஆகியவற்றின் சாரம்சம் "செயலாளர்கள்" சிலவற்றில் தமக்குமீறிய முறையில் நடந்துள்ளனர், அவர்களை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற உண்மையில் அல்ல; மாறாக கட்சியே முழுமையாக ஓர் உயர்ந்த வரலாற்றுக் கட்டத்தை நோக்கி செல்லவுள்ளது. கம்யூனிஸ்டுகளின் பெரும்பாலானவர்கள் தலைவர்களுக்கு கிட்டத்தட்ட கூறுவது என்னவென்றால்: "அக்டோபருக்கு முந்தைய அனுபவத்தை தோழர்களாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள்; அது எங்களில் பெரும்பாலானோருக்கு கிடையாது; ஆனால் உங்கள் தலைமையின் கீழ் அக்டோபருக்கு பின்னர் நாங்கள் மிகப்பாரிய அனுபவத்தை பெற்றுள்ளோம்; அது தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பெருகி வருகிறது. நாங்கள் உங்களால் வழிநடத்தப்படுவதை விரும்புகிறோம் என்பது மட்டுமில்லாமல் உங்களுடன் சேர்ந்து வர்க்கத்தின் தலைமையில் பங்கு பெறவும் விரும்புகிறோம். கட்சி உறுப்பினர்களுடைய உரிமை என்பதால் மட்டும் நாங்கள் அதை விரும்பவில்லை; தொழிலாள வர்க்கம் முழுவதற்குமே அது முற்றுமுழுதாக அவசியம் என்பதால் விரும்புகிறோம். எங்களுடைய ஓரளவு அனுபவம் இல்லாவிடின், --இந்த அனுபவம் தலைமை மட்டத்தில் கருத்திற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லிது எங்களாலேயே கட்சியின் வாழ்க்கையிலும் அறிமுகப்படுத்தப்படவேண்டும், முன்னணி கட்சி அமைப்பானது அதிகாரத்துவ முறையில் வளர்ந்துகொண்டிருக்கிறது, கீழ்மட்ட அணியிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் கட்சியில் இல்லாதவர்களை எதிர்கொள்ளும்போது கருத்தியல் ரீதியாக போதியளவு ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறோம் என எங்களாலேயே உணரமுடியவில்லை." நான் குறிப்பிட்டபடி தற்போதைய மாற்றம் இதற்கு முந்தைய ஒட்டுமொத்த பரிணாமத்தின் விளைவாகும். முதல் பார்வையில் புலப்படாவிட்டாலும், நீண்டகாலமாகவே கட்சியின் வாழ்வினதும், நனவினதும் மூலக்கூற்று இயக்கப்போக்கு (Molecular Processes) நீண்டகால தயாரிப்பில் இருந்து வருகின்றன. சந்தை நெருக்கடி விமர்சனரீதியான சிந்தனைக்கு வலுவான ஊக்கத்தை கொடுத்தது. ஜேர்மனியில் நடந்த நிகழ்வுகள் பற்றிய அணுகுமுறை கட்சிக்கு ஒரு அதிர்வை கொடுத்தது. சரியாக இந்தக் கணத்தில்தான் அது கட்சி குறிப்பிடத்தக்க இரு தட்டுக்களாக வாழ்வது, அதாவது இரு அடுக்குகள் இருப்பது வெளிப்பட்டது: ஒன்று தீர்மானங்களை முடிவெடுக்கும் மேல் அடுக்கு, மற்றையது அத்தீர்மானங்களை மட்டும் அறிந்துகொள்ளும் கீழ்த்தட்டு என்பவையே அவை. ஆயினும்கூட, கட்சி உள்ளமைப்பு பற்றிய விமர்சனரீதியான மீள்பார்வை, ஜேர்மனியில் உடனடி பலப்பரீட்சையில் என்ன நிகழுமோ என்ற கவலைமிகுந்த எதிர்பார்ப்பால் ஒத்திப்போடப்பட்டது. அந்த பலப்பரீட்சை விஷயங்களின் சக்தியால் தாமதப்படும் என்று ஆனபின்னர், கட்சி "புதிய பாதை" பிரச்சினையை அன்றாட நிகழ்ச்சிநிரலில் சேர்க்க வேண்டியதாயிற்று. வரலாற்றில் அடிக்கடி நிகழ்வது போல், இந்த கடைசி மாதங்களில்தான் "பழைய பாதை" மிகவும் எதிர்மாறான சகித்துக்கொள்ளமுடியாத தனித்தன்மைகளை துல்லியமாக வெளிக்காட்டியது: கட்சி உட்குழுவாதம், அதிகாரத்துவ சுயதிருப்தி, கட்சியினரின் உணர்வுகளை, கருத்துக்களையும், தேவைகளையும் முற்றிலும் புறக்கணித்தல் என்பவையே அவை. அதிகாரத்துவ எதிர்ப்பு தன்மையில் இருந்து, அது ஆரம்பத்தில் இருந்தே உள்கட்சி ஆட்சி அமைப்பு பற்றிய முக்கிய விமர்சனரீதியான மீள்பார்வையை அன்றாட நிகழ்ச்சிநிரலில் கொண்டுவருவதற்கான தொடக்க முயற்சியை ஒரு விரோதப்போக்குடைய வன்முறையால் நிராகரித்தது. இதன் பொருள் அமைப்பு முற்றிலும் அதிகாரத்துவ கூறுபாடுகளேயே கொண்டிருந்தது என்றோ அல்லது உறுதியான, திருத்தமுடியாத அதிகாரத்துவத்தினரை கொண்டிருந்ததோ என்று ஆகாது. அப்படிப்பட்ட தன்மை இல்லை! இந்த முக்கிய காலகட்டத்தின் பொருளை அவர்கள் நன்கு உணர்ந்து பெரும்பான்மையான அமைப்பினருக்கு பிழைகளை எப்படி கைவிடவேண்டும் என்பதை தொழிலாளர்கள் விரும்புகின்றார்கள் என்பதை நன்கு படித்துக்கொள்வதற்கான நிலையை அவர்களுக்கு உருவாக்கும். அப்பொழுதைய நெருக்கடியில் இத்தகைய கருத்தியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான மறுகுழுவமைவு, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் கீழ்மட்ட அணியினருக்கும் அமைப்பிற்கும் ஆரோக்கியமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். ஆனால் பிந்தையவற்றில் தற்போதைய நெருக்கடியின் நுழைவாயிலில் அதிகாரத்துவம் மிகக்கூடுதலான, ஆபத்து தரக்கூடிய வளர்ச்சியடைந்துள்ளதாக தோன்றுகின்றது. அதுதான் கட்சியினுள் தற்போதைய கருத்தியல் மறுகுழுவமைவு ந¤யாயமான அச்சங்களை விளைவிக்கும் தன்மையை கொண்ட கூர்மையான பண்பை கொடுக்கிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் அமைப்பில் அதிகாரத்துவமயமாக்கல், குழுக்களின் மற்றும் செயலாளர்களின் அதிக அதிகாரம், என்று குறிப்பிடுதலே மத்திய, உள்ளூர் அமைப்புக்களில் இருந்த "பழைய பாதை"யின் பொறுப்பான பிரதிநிதிகளால் தோள்களை குலுக்கி அல்லது கோபமான மறுப்பு என்ற வகையில் எதிர்கொள்ளப்பட்டது என்று கூறுவது போதும். பதவி நியமனம் ஒரு அமைப்பு முறையாகிவிட்டதா? முற்றிலும் கற்பனையானது! சம்பிரதாயவாதம், அதிகாரத்துவவாதம்? வெறும் புனையுரைகள், எதிர்ப்புக் கூறுதலில் களிப்படையவேண்டும் என்பதற்காக எழுந்துள்ள எதிர்ப்பு, என்றல்லாம் கூறப்பட்டது. இந்த தோழர்கள், எவ்வளவு உண்மையாக இருந்தாலும், தாங்கள் பிரதிபலிக்கும் அதிகாரத்துவ ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. அடிமட்ட தொண்டர்களின் அழுத்தத்தின்பேரில்தான், சிறிது சிறிதாக தாங்கள் அதிகாரத்துவத்தின் வெளிப்பாடுகளாக உள்ளோம் என்பதை அறியத் தலைப்பட்டனர்; ஆனால் அதுவும் கூட அமைப்பின் வெளி எல்லையில், ஏதோ ஒரு சில மாநிலங்களில் மற்றும் மாவட்டங்களில் நடைமுறையின் நேர்கோட்டில் இருந்து சற்றி விலகிய முறையில் அவ்வாறு இருக்கலாம் என்று கருதினர். அவர்களை பொறுத்தவரையில், அதிகாரத்துவம் என்பது போர்க்காலத்தின் மிச்சசொச்சமாகும். அதாவது மறைந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஒரு நிகழ்வுப்போக்கு, அது அவ்வளவு விரைவில் இன்னும் மறையவில்லை என்று கருதினர். விஷயங்களை இவ்வாறு அணுகுவதும், இந்த விளக்கமும் எவ்வளவு தவறானவை என்பதைக்கூறத் தேவையில்லை. அதிகாரத்துவம் சில மாகாண அமைப்புக்களில் உள்ள தற்செயலான போக்கு அல்ல; அது ஒரு பொது நிகழ்வுப்போக்காகத்தான் இருந்தது. அது ஒன்றும் மத்திய அமைப்பிற்கு வட்டாரத்தில் இருந்து மாவட்ட அமைப்பு மூலம் பரவி வரவில்லை; மாறாக மத்திய அமைப்பில் இருந்து மாவட்ட அமைப்பு மூலம் வட்டாரங்களுக்கு பரவியதாகும். அது ஒன்றும் போர்க்காலத்தின் "மிச்சசொச்சம்" அல்ல; கடந்த சில ஆண்டுகளாக ஒன்றுசேர்ந்திருந்த நிர்வாக நடைமுறை வழிவகைகள் கட்சிக்கு மாற்றப்பட்டதின் விளைவுதான் அது. சில நேரங்களில் அது மிகைப்படுத்தப்பட்ட வடிவங்களாக கருதப்பட்டாலும், சமாதானகாலத்தில் வளர்ந்துள்ள அதிகாரத்துவத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது போர்க்காலத்தில் இருந்த அதிகாரத்துவம் சிறுவரின் விளையாட்டு போலத்தான் இருந்தது; ஆனால் அமைப்போ, கட்சியின் தத்துவார்த்த வளர்ச்சி இருந்தபோதிலும்கூட, கட்சிக்காக சிந்தித்து முடிவெடுக்கும் வழக்கத்தைத்தான் பிடிவாதமாகக் கொண்டது. எனவே கொள்கை நிலைப்பாட்டின்படி மத்திய குழு ஏகமனதாக கட்சி அமைப்பு பற்றிய தீர்மானம் ஒன்றை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஏற்றது; இதை கட்சி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். எடுக்கப்பட்ட முடிவுகளின் ஆழ்ந்த பொருளை, வெறுமனே செயலாளர்களாலும் குழுக்களாலும் வெகுஜனங்களுக¢கு "எளிமை" மற்றும் கூடுதலான "கவனத்தை" காட்டுவதற்காக அமைதிப்படுத்துவதாக நினைப்பது சரியாகாது; அதேபோல் அமைப்பின் தன்மையில் சில தொழில்துணுக்க மாற்றங்கள் தேவை எனக் கோருவதுபோலும் நினைக்கப்படக்கூடாது. மத்திய குழுவின் தீர்மானம் "ஒரு புதிய பாதை" பற்றிப் பேசுகிறது; இது பொருளற்றதும் அல்ல. கட்சி, வளர்ச்சியின் ஒரு புதிய பகுதியில் நுழைவதற்கு தயாராகின்றது. இது ஒன்றும் சிலர் நாம் நம்பவேண்டும் என்று கருதவதற்காக அவர்கள் கூறும் அமைப்பின் போல்ஷிவிச கொள்கைகளை உடைத்தல் என்னும் பிரச்சினை அல்ல; மாறாக கட்சியின் வளர்ச்சியில் புதிய கட்டத்திற்கு இந்த நிபந்தனைகளை சேர்க்க வேண்டும் என்பதாகும். பழைய காரியாளர்களுக்கும் அக்டோபருக்கு பின்னர் கட்சியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் இடையே ஆரோக்கியமான உறவுகளை தொடக்கும் முக்கிய பிரச்சினை ஆகும். கோட்பாட்டு தயாரிப்பு, புரட்சிகர உறுதிப்பாடு, அரசியல் அனுபவம் ஆகியவை கட்சியின் அடிப்படை அரசியல் மூலதனத்தை பிரதிபலிக்கின்றன; முதலில் இவற்றை முக்கியமாக கொண்டுள்ளவர்கள் கட்சியில் உள்ள பழைய காரியாளர்களாவர். ஆனால் மறுபுறத்தில் கட்சி என்பது அடிப்படையில் ஒரு ஜனநாயக அமைப்பு ஆகும்; அதாவது கூட்டாக, தான் செல்லும் பாதையை நிர்ணயிக்க அதன் அனைத்து உறுப்பினர்களின் சிந்தனையையும் விருப்பத்தையும் கருத்திற்கொள்ளும். அக்டோபருக்கு பிந்தைய உடனடிக்காலத்தில் இருந்த சிக்கல் வாய்ந்த நிலையில், பழைய தலைமுறை சேகரித்திருந்த அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தி கட்சி சரியான பாதையில் செல்லக்கூடியதாக இருந்தது என்பது முற்றிலும் தெளிவாகும்; மேலும் அத்தலைமுறையின் பிரதிநிதிகளுக்கு அமைப்பில் மிக முக்கியமான பொறுப்புக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. மறுபுறத்தில், இத்தகைய நிலைமையின் விளைவுக்கு காரணம், கட்சித் தலைமை பங்கை வகித்துக்கொண்டு நிர்வாக பிரச்சினைகளில் ஆழ்ந்துபோகும்போது, தானே சிந்தித்து முடிவெடுக்கும் பழக்கமுடைய பழைய தலைமுறை அவ்விதமே கட்சிக்காக இன்னமும் தொடர்ந்து செய்துவருகிறது. கம்யூனிச வெகுஜனங்களுக்கு முற்றிலும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, கற்பிக்கும் வகைகளில் அரசியல் வாழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை அது முன்னிறுத்துகிறது; அதாவது அடிப்படை அரசியல் பயிற்சி வகுப்புக்கள், உறுப்பினர்களின் அறிவுக்கூர்மை பற்றி தேர்வு, கட்சிப் பள்ளிகள், போன்றவை முன்வைக்கப்படுகின்றன. இதையொட்டித்தான் அமைப்பின் அதிகாரத்துவம், அதன் உட்குழுவாதம், அதன் பிரத்தியேகமான உள்வாழ்வு, சுருங்கக்கூறின் பழைய பாதையின் எதிர்மறை பகுதியின் ஆழ்ந்த தன்மைகள் அனைத்தும் வெளிப்படுகின்றன. இரு அடுக்குகளில் கட்சி வாழ்கிறது என்ற உண்மையில் பல ஆபத்துக்களும் உள்ளடங்கியுள்ளன; இதைப்பற்றி பழைய, இளைய உறுப்பினர்கள் என என்னுடைய கடிதத்தில் நான் எழுதியுள்ளேன். "இளைய" என்று குறிப்பிடும்போது நான் மாணவர்களை மட்டும் குறிப்பிடாமல், அக்டோபருக்கு பின்னர் கட்சிக்கு வந்த முழுத்தலைமுறையினர் அனைவரையும், முக்கியமாக தொழிற்சாலை குழுக்களில் இருந்து வருபவர்களையும் கூறுகிறேன். இந்த திருப்தியற்ற நிலை, அதிகரித்தளவில் கட்சியில் எப்படி வெளிப்பட்டது? பெரும்பான்மையான அதன் உறுப்பினர்கள் உணர்வது அல்லது கூறுவது யாதெனில்: "நன்றாகவோ, சரியற்ற முறையிலோ சிந்திப்பது, முடிவு எடுப்பது ஒரு புறம் இருக்க, அது சிந்திக்கிறது, முடிவு எடுப்பது என்பது அடிக்கடி நமக்காக, ஆனால் எம்மை சேர்க்காமல் செய்கிறது. ஒரு பொருளை புரிந்துகொள்ள நாம் தவறினாலும், சந்தேகங்களை கொண்டாலும், ஒரு மறுப்போ, விமர்சனத்தையோ தெரிவித்தாலும், நாம் கட்டுப்பாடு என்ற பெயரில் ஒழுங்கிற்கு கொண்டுவரப்படுகிறோம், பல நேரமும் நாம் குழப்புகின்றோம் என்ற குற்றம் சாட்டப்படுகிறோம் அல்லது குழுக்களை அமைக்க விரும்புகிறவர்கள் என்று கூறப்படுகிறோம். உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து நாம் கட்சியை போற்றுகிறோம், எந்த தியாகத்தையும் அதற்காக செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதன் கருத்துக்களை உருவாக்குவதிலும், நடவடிக்கையின் திசையை தீர்மானிப்பதிலும் தீவிரமாக, உணர்வுபூர்வமாக பங்கு பெற விரும்புகிறோம்." இத்தகைய மனநிலையின் முதல் வெளிப்பாடுகள் முன்னணி அமைப்பினரால் உணரப்படாமல் கடக்கப்பட்டுவிடுகின்றன; அது இதை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை; அதுதான் கட்சிக்குள்ளேயே கட்சி-எதிர் குழுக்கள் வளர்வதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். அவர்களுடைய முக்கியத்துவம், மிகைப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை என்பது உண்மைதான்; ஆனால் அதற்காக அவர்களுடைய பொருளுரையின் கருத்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படவேண்டியதில்லை; அக்கருத்துக்கள் நமக்கு ஓர் எச்சரிக்கை போல் அமைய வேண்டும். வரலாற்று பொதுக் காரணங்கள் மற்றும் எமது தவறுகளின் விளைவாக பழைய பாதையில் இருக்கும் முக்கிய ஆபத்தானது, கட்சி அமைப்பில் முன்னணி காரியாளர்களாக உள்ள சில ஆயிரம் பேரை கட்சியின் எஞ்சிய வெகுஜனங்களுக்கு எதிராக நிறுத்தும் போக்கை உருவாக்கியுள்ளது; ஏனெனில் முந்தையவர்கள் பிந்தையவரை வெறுமே சொல்வதை செய்ய வேண்டியவர்கள்தான் என்ற கருத்தை கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட முறை தொடர்ந்து நீடித்தால், நீண்டகால அடிப்படையில் கட்சியின் இரு பிரிவுகளிலும் அதாவது கட்சியின் இளைஞர்கள் மற்றும் முன்னணி காரியாளர்கள் என்று இரு வெவ்வேறு கோடியிலுள்ள பிரிவினிடையேயும் ஒரு சீரழிவை ஏற்படுத்தும் நிலை வந்துவிடும். கட்சியில் தொழிலாளவர்க்க அடித்தளம் என்பதை பொறுத்தவரையில், ஆலைகளில் இருக்கும் பிரிவுகள், மாணவர் பிரிவுகள் போன்றவற்றில் இந்த ஆபத்தின் தன்மை தெளிவாகத்தான் உள்ளது. கட்சியின் பொதுப்பணியில் தீவிரமாக பங்கு இல்லை, கட்சியை பற்றிய கேள்விகளுக்கு தங்களுக்கு சரியான நேரத்தில் விடைவருவதில்லை என்று உணர்ந்துள்ள நிலையில், பல கம்யூனிஸ்டுகள் சுதந்திரமான கட்சி நடவடிக்கைக்கு மாற்றாக குழுக்கள் மற்றும் கன்னைகள் வடிவத்தில் காண முற்படுகின்றனர். இந்த விதத்தில்தான் நாம் "தொழிலாளர்கள் குழு" [2] போன்ற குழுக்களின் முக்கியத்துவத்தின் அடையாளம் பற்றி துல்லியமாக பேசுகிறோம். மறுமுனையில், கட்சியின் ஆட்சிஅமைப்பில் நீண்ட காலமாக இருப்பவர்கள் கட்சியினுள் அதிகாரத்துவவாதத்தை அடையாளப்படுத்தும் ஆபத்தும் குறைவானது அல்ல. மத்திய குழுவில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிகாரத்துவாதத்தின் குற்றச்சாட்டு துல்லியமாக கட்சியின் தொண்டர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது என்று, காணவிரும்பாதது, புரிந்துகொள்ளாதது, எள்ளிநகையாடத்தக்கதாக, மதிப்பற்ற மற்றும் தலையை மண்ணுக்குள் புதைத்துகொண்டு இருக்கும் அரசியலாக இருக்கும். உயர்நிலை நடைமுறையில் இருந்து தனிமைப்பட்ட ஒதுங்கிய செயற்பாடுகள் பற்றிய பிரச்சினை அல்ல இது; அமைப்பின் பொதுக் கொள்கை, அதன் அதிகாரத்துவ போக்கு பற்றிய துல்லியமான பிரச்சினைதான் இது. அதிகாரத்துவம் தன்னகத்திலேயே சீரழிவை சந்திக்கும் ஆபத்தை கொண்டுள்ளதா இல்லையா? இதை மறுப்பவர்கள் குருடர்களாகத்தான் இருக்க வேண்டும். அதன் நீண்டகால வளர்ச்சியில், அதிகாரத்துவமயமாக்கல் தலைவர்களை வெகுஜனங்களிடமிருந்து பிரித்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது; தங்களுடைய கவனத்தை நிர்வாகப் பிரச்சினைகள் பற்றி, பதவி நியமனங்கள், இடமாறுதல்கள், தங்கள் சுற்றுவட்டத்தை குறுக்கிக் கொள்ளும் நிலை, தங்களுடைய புரட்சிகர உணர்வை வலுவிழக்கச் செய்தல், அதாவது பழைய காப்பாளர்களின் குறைந்த பட்சம் கணிசமானவர்களிடையே கிட்டத்தட்ட சந்தர்ப்பவாத சீரழிவை தூண்டுதலைத்தான் ஏற்படுத்தும். அத்தகைய வழிவகை மிக மெதுவாக, கிட்டத்தட்ட புலனாகாத முறையில் வளர்ந்த போதிலும், இறுதியில் திடீரென்று வெளிப்படுத்திக் கொள்ளும். புறநிலையான மார்க்சிச முன்கணிப்பை அடிப்படையாக கொண்டுள்ள இந்த எச்சரிக்கையை, "ஏற்கத்தகாத செயல்பாடு", "தாக்குதல்".... என்றெல்லாம் கூறுவதற்கு அதிகாரத்துவத்தினரின் திமிர்த்தனத்தையும் இயல்பையும்தான் கொண்டிருக்கவேண்டும். ஆனால், உண்மையிலேயே, அத்தகைய சீரழிவு நேரக்கூடிய ஆபத்து பெரிதாக உள்ளதா? இந்த ஆபத்தை அறிந்துள்ளது அல்லது உணர்ந்துள்ளது என்ற உண்மையும் அதை ஆற்றலுடன் எதிர்கொள்ளுகிறது என்பதும், அதுதான் மத்தியக்குழு தீர்மானம் இயற்றுவதற்கு முக்கிய காரணம், இதன் ஆழ்ந்த துடிப்பிற்கு சாட்சியாக இருக்கிறது; மேலும் அப்படி எதிர்கொள்ளுதல் என்பதே அதிகாரத்துவ விஷத்திற்கு எதிராக அதனிடம் மாற்று கொடுக்கும் திறனுடைய செயற்பாடு உள்ளது என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றது. அங்குதான் ஒரு புரட்சிகர கட்சி தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்பதற்கான முக்கிய உறுதிமொழி உள்ளது. ஆனால் பழைய பாதை தன்னை தக்கவைத்துக்கொள்ள எதையும் செய்யும், கட்டுப்பாட்டை இறுக்கும், செயற்கையான முறையை தேர்ந்தெடுக்கும், மிரட்டும், சுருங்கக்கூறின் கட்சியின் மீது நம்பிக்கையற்ற வகையில் செயல்படும் என்றால், காரியாளர்களின் குறிப்பிடத்தக்க பிரிவினர் சீரழிவை நோக்கிச் செல்லும் ஆபத்து தவிர்க்க முடியாமல் பெருகித்தான் போகும். கட்சி முற்றிலும் கடந்த கால இருப்புக்களில் மட்டும் உயிர்த்திருக்க முடியாது. கடந்த காலம் நிகழ்காலத்தை தயாரித்து கொடுத்துள்ளது என்பது போதுமானது. ஆனால் நிகழ்காலமும் கருத்தியல் ரீதியாகவும், நடைமுறையிலும் கடந்த கால உயர்வு நிலைக்கேற்ப விளங்கி, எதிர்காலத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தின் பணியானது, கட்சி செயல்பாட்டின் மையத்தை வெகுஜனங்களை நோக்கி மாற்றவேண்டும் என்பதாகும். ஆனால் இந்த மைய ஈர்ப்புத்தானத்தை மாற்றுதல் என்பது ஒரே நேரத்தில், ஒரே பாய்ச்சலில் சாதிக்க முடியாதது ஆகும்; கட்சி பழைய தலைமுறையை "ஆவண காப்பகத்தில்" இருத்திவிட்டு, உடனடியாக ஒரு புதிய வாழ்வை தொடங்க முடியாது. அத்தகைய மடைத்தனமான மக்களை திருப்தி செய்யும் வாதங்கள் பற்றி நேரத்தை செலவழிப்பது வீணேயாகும். பழைய தலைமுறையை ஆவணக்காப்பகத்தில் இருத்திவிட வேண்டும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனமாகும். இந்த பழைய தலைமுறை தன்னுடைய தகவமைவை மாற்றிக்கொண்டு, அதன் அடித்தளத்தில் தன்னுடைய விஞ்சிய செல்வாக்கை கட்சியின் சுதந்திர செயல்பாட்டின் முழுமைக்கு ஏற்ப நடந்துகொள்ளும் வகையில் உறுதியளிக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை ஆகும். "புதிய பாதை" என்பது ஏதோ ஒரு உத்தித்தந்திரம், இராஜதந்திர ரீதியான தாக்குதல், தற்காலிக சலுகை என்றெல்லாம் நினைக்காமல், கட்சியின் அரசியல் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம் என்றே கட்டாயம் கருதவேண்டும். அந்த விதத்தில், கட்சியை வழிநடத்தும் தலைமுறையும், முழுமையாக கட்சியும் மிகப்பெரிய நலன்களை பெற்றுக்கொள்ளும். குறிப்புக்கள் [1] ஏப்ரல் 14, 1917 ல் லெனின் பெட்ரோகிராட்டுக்கு திரும்பிவந்த பின்னர் வழங்கிய கருத்துக்களே ஏப்ரல் ஆய்வுரைகள் ஆகும். போல்ஷிவிக் தலைமை (காமெனேவ், சினோவிவ், ஸ்ராலின்) ஆகியோர் முதலாளித்துவ அரசாங்கத்தை நோக்கி சமரச நிலைப்பாட்டை கொண்டதை ஏப்ரல் ஆய்வுரைகள் தாக்கின. இவ்வாய்வுகள் கட்சியை தொழிலாள வர்க்கத்திற்கான கட்சியாக மாற்றி அதிகாரத்தை கைப்பற்றும் திறனுடையதாக ஆக்கியதுடன் அரசாங்கத்துடன் சமரசம் காணும் முயற்சிகளுக்கு எதிராகவும் செய்தது.[2] தொழிலாளர்கள் குழு என்பது போல்ஷிவிக் கட்சிக்குள் தலைமையை எதிர்த்த பல எதிர்ப்பு குழுக்களில் ஒன்றாகும். |