The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

முதலாவது (ரஷ்ய) பதிப்பின் முன்னுரை (பேர்லினில் பிரசுரிக்கப்பட்டது)

Use this version to print | Send feedback 

இந்த நூல் மூன்று ரஷ்ய புரட்சிகளின் வரலாறுகளோடும் நெருக்கமாக பிணைந்துள்ள ஒரு விடயத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரலாற்றோடு மாத்திரம் பிணைந்ததல்ல. அண்மைக்காலங்களில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்டங்களிலும் இந்த பிரச்சினை பாரிய பாத்திரம் வகித்தது. அந்த பிரச்சினை பின்பு கம்யூனிச அகிலத்தினுள்ளும் கொண்டு வரப்பட்டது. சீனப் புரட்சியின் வளர்ச்சியில் மிகத் தீர்க்கமான பாத்திரத்தை வகுத்ததோடு கீழை நாடுகளின் புரட்சிகர போராட்டத்துடன் கட்டுண்டிருந்த பிரச்சினைகள் மீதான முக்கியமான முடிவுகள் முழுவதையும் நிர்ணயம் செய்வதாயும் அமைந்தது. இந்த விடயம் நிரந்தரப் புரட்சி தத்துவத்தோடு தொடர்புபட்டுள்ளதுடன், லெனினிசத்தின் இழிபாசாங்கினர்களது (Epigones ) (சினோவியேவ், ஸ்ராலின், புக்காரின் இன்னும் ஏனையோரின்) போதனையின்படி, இது "ட்ரொட்ஸ்கிசம்" என்ற மூல பாவத்தை பிரதிநிதித்துவம் செய்தது.

நிரந்தரப் புரட்சி பிரச்சினை நீண்டநாள் இடைவெளிக்கு பின்பு 1924-ல் மீண்டும் எதிர்பாராத விதமாக கிளப்பப்பட்டது. அப்படி கிளப்பியதற்கான அரசியல் நியாயப்படுத்தல்கள் எதுவுமில்லை. அது எப்பவோ நடந்து முடிந்த அபிப்பிராயபேதமாகும். ஆனால் அதற்கான முக்கியமான உளவியல் நோக்கம் ஒன்று உண்டு. ஒரு கூட்டம் "பழைய போல்ஷிவிக்குகள்" என்று சொல்லப்படுபவர்கள் எனக்கு எதிரான ஒரு போராட்டத்தை தொடக்கினார்கள். தாங்கள் "போல்ஷிவிக்கின் பழைய காவலர்கள்" என்ற அந்தஸ்த்தால் என்னை எதிர்கொள்ள முற்பட்டார்கள். ஆனால் அவர்கள் கடந்து வந்த பாதையின் பெரிய தடைக்கல் 1917ம் வருடமாகும். அதற்கு முந்திய காலங்களில் நடந்த தத்துவார்த்த போராட்டங்களும் தயாரிப்புகளும் மிக முக்கியமாக இருந்தாலும் கூட, முழுக்கட்சியை பொறுத்தவரை மட்டுமல்ல வெவ்வேறு தனிநபர்களை பொறுத்தவரையிலும் கூட, அக்டோபர் புரட்சியில் இத்தயாரிப்புக் காலகட்டமானது மிகவும் உயர்ந்த மற்றும் தீர்மானகரமான பரீட்சையாக இருந்தது. இழிபாசாங்கினர்களில் ஒருவராவது அந்த பரீட்சைகளுக்கு தாக்குப்பிடித்தவர்கள் அல்ல. ஒருவரும் தப்பாமல் எல்லோருமே 1917 பெப்ரவரி புரட்சியின்போது ஜனநாயக இடது கன்னையின் இழிந்த நிலைப்பாட்டை எடுத்தார்கள். அவர்களில் ஒருவராவது தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வரவேண்டும் என்ற சுலோகத்தை எழுப்பியவர்களல்ல. அவர்கள் எல்லோருமே சோசலிசப் புரட்சியை நோக்கிப்போவது முட்டாள்த்தனமென்றும் அல்லது அதனிலும் கேவலமானதென்றும், அது "ட்ரொட்ஸ்கிசம்" என்றும் கூறினார்கள். லெனின் வெளிநாட்டில் இருந்து வந்த பிரசித்திப்பெற்ற ஏப்பிரல் ஆய்வுரைகளை பதிப்பிக்கும் வரையும் இந்த நோக்கிலேயே கட்சிக்கு தலைமை கொடுத்தார்கள். இதன் பின்பு கமெனேவ் லெனினுக்கு நேர் எதிராகவே போராடினார். வெளிப்படையாகவே போல்ஷிவிசத்தினுள் ஒரு ஜனநாயக கன்னையை உருவாக்க முயன்றார். அதன் பின்பு அவரோடு சினோவியேவ் இணைந்து கொண்டார். அவர் லெனினோடு வெளிநாட்டில் இருந்து வந்திருந்தார். ஸ்ராலின் அதிகபட்சமாக தனது சமூக தேசபக்த நிலைப்பாட்டோடு சமரசம் செய்து கொண்டு ஒரு பக்க நிலைப்பாட்டுக்கு நழுவினார். அவர் தனது மார்ச் முக்கிய கிழமைகளில் பரிதாபகரமான கட்டுரைகளையும் சொற்பொழிவுகளையும் கட்சி பவ்வியமாக மறந்து போகும்படி விட்டுவிட்டு மெல்ல மெல்ல லெனினது நிலைபாட்டுக்கு கிட்ட வந்தார். இப்படித்தான் இந்தக் கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஏனிந்த லெனினிசத்தில் இருந்து கிடைத்த பழைய தலைமை போல்ஷிவிக்குகளில் ஒருவராவது கட்சியின் தத்துவங்களினாலும் நடைமுறையினாலும் கிடைத்த அனுபவங்களையும் அறிவையும் ஒரு முக்கியமானதும் தீர்மானகரமானதுமான வரலாற்றுக் கணத்தில், தாங்களே சுயாதீனமாக பிரயோகிக்க இலாக்கற்றவர்களாக போனார்கள்? கவனத்தை எந்த விலை கொடுத்தும் இந்தப் பிரச்சினைகளில் இருந்து வேறு திசைக்குத் திருப்பி அதற்கு பிரதியீடாக வேறோர் பிரச்சினையை சொருகுகிறார்கள். இன்று வரைக்கும் அது நிரந்தரப் புரட்சியை சுட்டெரிப்பதற்கே சக்தி முழுவதையும் கூட்டி குவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு செயற்கையான போராட்ட அச்சை உருவாக்கி அவர்களுக்கு தெரியாமல் அவர்களே அதைச்சுற்றி வரவும் தலைகீழாக்கும் விதிமுறையால் தங்களுக்கு என்று ஒரு புதிய உலகப்பார்வையையும் உற்பத்தி செய்ய நிர்பந்திக்கப்படுவர் என்பதை எனது விரோதிகள் முன்கூட்டியே பார்க்கவில்லை.

1905ன் தீர்மானகரமான சம்பவத்திற்கு முன்னரே, என்னால் உருவகப்படுத்தப்பட்ட (சூத்திரப்படுத்தப்பட்ட) நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முக்கிய அம்சங்களை காணலாம். ரஷ்யா முதலாளித்துவ புரட்சியை நோக்கி நெருங்கி வந்தது. ரஷ்ய சமூக ஜனநாயகவாத அங்கத்தவர்கள் ஒருவருக்கும் (அந்நாளில் நாம் எம்மை சமூக ஜனநாயகத்தவர் என்றே கூறிக்கொண்டோம்) நாம் ஒரு முதலாளித்துவப் புரட்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்கவில்லை. அதாவது முதலாளித்துவ சமூகத்தினது உற்பத்தி சக்திகளுக்கும் காலத்திற்கொவ்வாத மத்தியகால சாதி முறையினதும், பண்ணையடிமை முறையினதும் அரசு உறவுகளிடையேயும் உள்ள முரண்பாட்டால் உண்டாகும் ஒரு புரட்சியாகும். நரோத்னிக்குகளுக்கும் அராஜகவாதிகளுக்கும் எதிரான போராட்டத்தின் போது வரப்போகும் புரட்சியின் முதலாளித்துவ குணாம்சத்தை மார்க்சிச ஆய்வு செய்வதில் அந்நாளைய சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் என்னை நான் கொஞ்ச நெஞ்சமாக அர்ப்பணிக்கவில்லை.

இருந்தபோதும், புரட்சியின் முதலாளித்துவ குணாம்சம் முன்கூட்டியே எந்த வர்க்கங்கள் அந்த ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை செய்யப் போகின்றன என்பதையும் அந்த வர்க்கங்களிடையேயுள்ள பரஸ்பர உறவுகள் என்ன என்பதையும் தெளிவாக்கவில்லை. துல்லியமாக இந்தப் புள்ளியில்தான் இந்த அடிப்படை மூலோபாய பிரச்சினைகள் தொடங்கப்பட்டன.

பிளெக்கானோவ், அக்செல்ரோட், சாசுலிச், மார்ட்டோவ் இவர்களைத் தொடர்ந்து அனைத்து ரஷ்ய மென்ஷிவிக்குகளும் ஆட்சி அதிகாரத்திற்கு இயற்கையான உரிமையுடையது தாராளவாத முதலாளித்துவ வர்க்கம் என்றவகையில், முதலாளித்துவ புரட்சியில் வகிக்கும் முன்னணிப்பாத்திரம் அதனையே சார்ந்தது என்ற கருத்தை வழிபிறழும் புள்ளியாகக் கொண்டார்கள். இந்த திட்டத்தின் பிரகாரம், பாட்டாளி வர்க்கத்தின் கட்சி ஜனநாயக முன்னணியின் இடது கன்னைப் பாத்திரம் ஆற்ற ஒதுக்கப்பட்டது. சமூக ஜனநாயகவாதிகள், பிற்போக்குத்தனத்திற்கு எதிராக தாராளவாத முதலாளிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அதே நேரத்தில் தாராளவாத முதலாளிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் நலனை பாதுகாக்க வேண்டும். வேறுவிதமாக சொல்வதென்றால் முதலாளித்துவ புரட்சியென்பது பிரதானமாக தாராளவாத அரசியலமைப்பு சீர்திருத்தமென்றே மென்ஷிவிக்குகள் விளங்கியிருந்தார்கள்.

லெனின் இந்த பிரச்சினையை முழுமையாக வேறுவிதமாகக் கண்டார். முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்திச் சக்திகளை, பண்ணை அடிமை முறையின் கட்டுக்களில் இருந்து விடுதலை செய்வதென்பது முதலாகவும் முதன்மையாகவும், விவசாயப் பிரச்சினையை தீர்ப்பதாகும். அதன் அர்த்தம் என்னவென்றால் நிலவுடமை வர்க்கத்தை பூரணமாக நிர்மூலமாக்கி புரட்சிகர முறையில் நிலங்களை மறு விநியோகம் செய்வது என்பதாகும். இதனோடு பிரிக்க முடியாதபடி முடியாட்சியை தகர்க்க வேண்டும் என்பது தொடர்புடையதாகும். பெரும்பான்மை மக்களின் உயிர்வாழ் நலனை பாதித்த அதே நேரத்தில் முதலாளித்துவ சந்தையின் அடிப்படைப் பிரச்சினையை கொண்டிருந்த விவசாயப் பிரச்சினையை லெனின் உண்மையான புரட்சிகரத் துணிவுடன் தாக்கினார். ஏனென்றால் தாராளவாத முதலாளிகள், தொழிலாளர்களை தமது எதிரியென்று பாவித்து அவர்களோடு முட்டி மோதுகின்றார்கள். அதே நேரத்தில் பெரிய நிலப்பிரபுக்களோடு எண்ணற்ற பிணைப்புகளால் அன்னியோன்னியமாகி இருக்கின்றார்கள். அப்படியானால் விவசாயிகளின் உண்மையான ஜனநாயக விடுதலையை, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் புரட்சிகர கூட்டுறவால் மாத்திரந்தான் சாதிக்க முடியும். லெனினை பொறுத்தவரையில் பழைய சமூக முறைக்கு எதிரான அவர்களது இணைந்த கிளர்ச்சி அத்தியாவசியமானது. அது வெற்றிவாகை சூடினால், "பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரத்தை" நிர்மாணிப்பதற்கு இட்டுச் செல்லும்.

இச் சூத்திரத்தை இப்பொழுது கம்யூனிச அகிலத்தினுள் கடந்த கால்நூற்றாண்டு உயிரோட்டமான வரலாற்று அனுபவத்தோடு ஆய்வு செய்ய முயற்சிக்காமல், நாங்கள் 1905 புரட்சியிலும் 1917 பெப்ரவரி புரட்சியிலும் பங்குபற்றியவர்கள் என்றும் சாட்சிகள் என்றும் எண்ணாமல், மேன்மையான வரலாற்றுக்கு அப்பாற்பட்ட ஒருதலைப்பட்சமான மந்திரமாக மீண்டும் கூறப்படுகிறது. அப்படியான வரலாற்று ஆய்வு அத்தியாவசியமானது ஏனெனில் வரலாற்றிலே "பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற ஆட்சிமுறை இருக்கவில்லை.

1905ல் லெனினுக்கு இது ஒரு மூலோபாய அனுமானமாகவே இருந்தது, இன்னும் உண்மையான வர்க்கப் போராட்ட மார்க்கத்தின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சூத்திரம், அதன் பெரும் பகுதி வேண்டும் என்றே செய்யப்பட்ட அட்சர கணிதத்திற்கு உரிய குணாம்சத்தை உடையது. அமையப்போகும் சர்வாதிகாரத்தில் பங்குகொள்ளும் இரண்டு பங்காளர் ஆன பாட்டாளிகளுக்கும் விவசாயிகளுக்குமான அரசியல் உறவு என்ன என்ற பிரச்சினையை லெனின் முன்கூட்டியே தீர்த்து வைக்கவில்லை. அவர் புரட்சியிலே சுயாதீனமான கட்சியின் மூலம் விவசாயிகள் பிரதிநிதித்துவம் பெறும் சாத்தியப்பாட்டை விலக்கி விடவில்லை. ஒரு சுயாதீனமான கட்சியென்பது இரண்டு அர்த்தத்தில், முதலாளித்துவத்தை பொறுத்தமட்டில் மாத்திரமல்ல, பாட்டாளி வர்க்கத்தை பொறுத்துங்கூடத்தான், அதேநேரத்தில் அது தாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளிகளது போராட்டத்திலே பாட்டாளி வர்க்கத்தோடு கூட்டு கொண்டு ஜனநாயகப் புரட்சியை நிதர்சனமாக்க தகைமையுடைய கட்சியாக இருக்க வேண்டும். புரட்சிகர விவசாயிகளது கட்சியானது ஜனநாயக சர்வாதிகார அரசாங்கத்திலே பெரும்பான்மை பங்கை வகிக்கும் சாத்தியப்பாட்டை கூட அனுமதித்திருந்தார் என்பதை வெகுசீக்கிரத்தில் பின்னே நாம் காணலாம்.

முதலாளித்துவ புரட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் விவசாயிகள் புரட்சியென்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் நான் 1902 இலையுதிர்காலத்திலிருந்தே, அதாவது அதுதான் எனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்திலிருந்தே நான் லெனின் மாணவனாகினேன். விவசாயப் புரட்சியும் அதன் காரணமாக வரும் பொதுவான ஜனநாயகப் புரட்சியும் கூட தாராளவாத முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களதும் விவசாயிகளதும் இணைந்த சக்திகளின் போராட்டத்தினூடேதான் நிதர்சனமாகுமென்பது எனக்கு அண்மைக்காலத்து அர்த்தமற்ற பாட்டி கதை போலன்றி சந்தேகத்திற்கு இடமற்ற ஒன்றாகும். இப்பொழுது நான் "பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற சூத்திரத்திற்கு எதிராக வெளியாலே வந்துள்ளேன் ஏனெனில் அதிலேயுள்ள குறைபாடுகளை கண்டுள்ளேன் ஆதலால் இங்கே உள்ள உண்மையான கேள்வி என்னவெனில் எந்த வர்க்கம் சர்வாதிகாரத்தை வைத்திருப்பது என்பது தான். விவசாயிகளிடம் அளவற்ற சமூகரீதியானதும் புரட்சிகரமானதுமான சக்தி இருந்தாலும்கூட அவர்களால் ஒரு சுயாதீனமான கட்சியை உருவாக்க முடியாது என்பதையும், அப்படியொரு கட்சி உருவாகி அதன் கையிலே புரட்சிகர ஆட்சி அதிகாரத்தை செறிவடைய செய்ய இயலாது என்பதையும் நிறுவிக்காட்டுவதற்கு நான் பெருமுயற்சி செய்தேன். பழைய புரட்சிகளில் நடந்ததைப் போலவே 16ம் நூற்றாண்டின் ஜேர்மன் சீர்திருத்தத்தின் போதும் ஏன் அதற்கு முன்பும் கூட விவசாயிகள் தங்களது கிளர்ச்சி எழுச்சிகளோடு நகர்ப்புற முதலாளிகளின் ஒரு பகுதியினருக்கு ஒத்தாசை வழங்கி அவர்களுக்கு அநேக தடவை வெற்றியை ஈட்டிக் கொடுத்தது போலவே எங்களது தாமதமான முதலாளித்துவ புரட்சியிலும் விவசாயிகள் தங்களது உச்சக்கட்ட போராட்டத்தின்போது அதே மாதிரியான உதவியை பாட்டாளி வர்க்கத்திற்கு வழங்கி, அது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு உதவி செய்வர். இதிலிருந்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். எங்களது முதலாளித்துவ புரட்சி தனது கடமையை தீவிரமாக எப்பொழுது செய்யும் என்றால் பாட்டாளி வர்க்கம் பல மில்லியன் விவசாயிகளின் உதவியோடு புரட்சிகர சர்வாதிகாரத்தை தனது சொந்தக் கைகளிலே குவிய வைக்க தகைமையுள்ளது என்று நிறுவிக் காட்டினால் மாத்திரம்தான்.

இந்த சர்வாதிகாரத்தின் சமூக உள்ளடக்கம் என்ன? முதலில் இது விவசாயப் புரட்சியை கடைசிவரை செய்து முடித்து அரசை ஜனநாயக முறையில் திரும்ப கட்டியமைக்க வேண்டும். வேறுவிதமாக சொல்வதென்றால், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வரலாற்றுரீதியாக தாமதமான ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை செய்து முடிக்கும் கருவியாக வேண்டும். விடயம் இதனோடு நில்லாது, ஆட்சியைக் கைப்பற்றிய பாட்டாளி வர்க்கம் பொதுவாக தனிச்சொத்துடமை உறவுகளை பறித்தெடுக்கும்படி நிர்பந்திக்கப்படும், அதாவது சோசலிச நடவடிக்கைகளின் பாதையில் பயணம் செய்ய வேண்டி வரும்.

1905ல் இருந்து 1917 வரைக்கும் ஸ்ராலின், ரிக்கோ மற்றும் மொலோடோவ் வகையறாக்கள் எத்தனை டஜன் தரம் என்னைக் கேட்டார்கள் ரஷ்யா சோசலிசப் புரட்சிக்கு முதிர்ந்து விட்டது என்று நீ நம்புகிறாயா என்று, நான் அதற்கு விடையளித்தேன். இல்லை, நான் அதை நம்பவில்லை. ஆனால் உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவும் முதற்கண் ஐரோப்பிய பொருளாதாரம் சோசலிசத்திற்கு முற்றிலும் முதிர்ந்துவிட்டது. ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோசலிசப் புரட்சியை நோக்கி இட்டுச்சென்றாலும் அல்லது இல்லாவிட்டாலும் என்ன கதியினூடோ என்ன படிநிலைகளினூடாக அது வளர்ந்து சென்றால் என்ன, அது ஐரோப்பிய முதலாளித்துவத்தினதும் உலக முதலாளித்துவத்தினதும் தலைவிதியை பொறுத்தேயுள்ளது.

இவைகள் தான் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அதன் பிறப்புக்காலமான 1905ன் முன் மாதங்களில் இருந்த முக்கியமான அம்சங்கள். அந்த காலத்தின் பின்பு மூன்று புரட்சிகள் நடந்து முடிந்துவிட்டன. பலம் பொருந்திய விவசாய கிளர்ச்சி எழுச்சி அலையின் மேல் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு உயர்ந்தது. மற்றைய அளவிட முடியாத அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு முன்னதாக ரஷ்யாவிலே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிதர்சனமாகியது ஓர் உண்மையாகும். 1924-ல் அதுவும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் வரலாற்று ரீதியான எதிர்வு கூறல் உண்மையென்று மிகப்பாரிய சக்தியினால் நிரூபிக்கப்பட்டு 7 வருடங்களின் பின்பு நான் எப்பவோ எழுதி மறந்த விடயங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களையும் வாக்குவாத புணர்ச்சிகளையும் பிடுங்கி எடுத்து இழிபாசாங்கினர் அந்த தத்துவத்திற்கு எதிராக வன்மத்தமான தாக்குதலை தொடுத்துள்ளார்கள்.

ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சி அலைகள் தோன்றி அரைநூற்றாண்டிற்கு பின்பும், கிளைக்கதை போன்ற பாரிஸ் கம்யூன் எழுச்சி வெடித்து 35 வருடங்களின் பின்புந்தான் ரஷ்யாவிலே புரட்சி வெடித்தது என்பதை இங்கே நினைத்துப் பார்ப்பது மிகப் பொருத்தமானது. புரட்சிக்கு பழக்கமில்லாமல் வளர்வதற்கு ஐரோப்பாவிற்கு போதுமான காலம் இருந்தது. ரஷ்யாவிற்கு அப்படியொரு அனுபவம் கிடையாது. புரட்சியின் அனைத்துப் பிரச்சினைகளும் புதிதாகவே தோன்றியது. அந்நாட்களில், எவ்வளவு தெரியாத மற்றும் உய்த்துணரக்கூடிய பாரத்தை எதிர்காலப் புரட்சி எங்களுக்காக வைத்திருக்குமென்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. அனைத்துக் குழுக்களின் சூத்திரங்களும் அவர்களது சொந்த வழியில் வேலை செய்வதற்கான அனுமானங்கள் ஆகும். விடயங்கள் எல்லாம் நடந்து முடிந்ததன் பின்பு 1905இனை பற்றிய ஆய்வுகளும் மதிப்பீடுகளும் நடந்த முடிந்தவை, நேற்று எழுதப்பட்டது போன்று கருதுவதற்கு ஒருவர் வரலாற்று எதிர்வுகூறலுக்கு முற்றிலும் தகைமை இல்லாமையை கட்டாயம் கொண்டிருக்க வேண்டியதுடன் மற்றும் அதன் வழிமுறைகளை புரியாதிருக்கவும் வேண்டும். நான் எனக்கும் எனது நண்பர்களுக்கும் அடிக்கடி சொல்லிய விடயம் ஒன்றுண்டு. எனது 1905 எதிர்வு கூறலில் பல குறைபாடுகள் உண்டு என்பதில் சந்தேகமில்லை. சம்பவங்கள் நடந்து முடிந்ததன் பின்பு அவைகளை இப்பொழுது காட்டுவதும் கஷ்டமான விடயமல்ல. ஆனால் என்னை விமர்சிப்பவர்கள் சரியாகவும் அதற்கப்பாலும் பார்த்தார்களா? நான் எனது பழைய எழுத்துக்களை நீண்ட நாட்களுக்கு திருப்பி வாசிக்கவில்லை. மாறாக அதிலே ஏதும் பாராதூரமானதும் முக்கியமானதுமான குறைபாடுகள் உண்மையிலே இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முன்கூட்டியே தயாராயிருந்துள்ளேன். 1928ல் எனக்கு அரசியல் ஓய்வு திணிக்கப்பட்டு நான் அல்மா அட்டாவில் அஞ்ஞாதவாசம் அனுபவித்த பொழுது நிரந்தரப் புரட்சி பிரச்சினை பற்றிய எனது பழைய எழுத்துக்களையும் பென்சிலும் கையுமாக வாசிக்க அவகாசம் கிடைத்த பொழுது நான் அதை நம்பினேன். இனி வரப்போகும் பக்கங்களை வாசித்தால் வாசகர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி அதை நம்புவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருந்தபோதும் இந்த அறிமுக எல்லைக்குள் எவ்வளவு நறுக்காகத் தரமுடியுமோ அவ்வளவு நறுக்காக நிரந்தரப்புரட்சி தத்துவத்தின் உள் மூலங்களின் குண விவேஷங்களையும் அதற்கு எதிரான முக்கியமான மறுப்புரைகளையும் தருவது அத்தியாவசியமானது. சர்ச்சையானது சாரம்சத்தில் உலகப் புரட்சிகர இயக்கத்தினுள் உள்ள முக்கியமான பிரச்சினைகள் அனைத்தையும் இப்பொழுது தழுவும் அளவுக்கு விசாலமாகவும் ஆழமாகவும் ஆகிவிட்டிருக்கிறது.

மார்க்சின் அர்த்தத்தின்படி நிரந்தரப் புரட்சியென்பது எந்த ஒரு வர்க்க ஆட்சியோடும் சமரசமாகாத ஒரு புரட்சி, அது ஜனநாயக ஆட்சி வடிவக் கட்டத்தோடு நில்லாது மேலும் முன்னேறி சோசலிச நடவடிக்கைகளை மேற்கொண்டு பிற்போக்குத்தனத்தோடு தானே யுத்தத்தை தொடுக்கும், அந்த தொடர் புரட்சி. அதன் ஒவ்வொரு அடுத்தடுத்த கட்டங்களிலும், அதன் முன்னைய ஆட்சி வடிவத்தில் வேரூன்றி, முழு வர்க்க சமுதாயத்தையும் நிர்மூலமாக்குவதில்தான் முடிவடையும்.

நிரந்தரப் புரட்சி தத்துவத்தை சூழ படைக்கப்பட்ட குழப்பத்தை இல்லாமல் செய்ய வேண்டுமானால், இந்த தத்துவத்திலே ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கும் மூன்று நிலைப்பாடுகளை வேறுபட்டுத்திப்பார்த்தல் அவசியமானது.

முதலாவது இது ஜனநாயகப் புரட்சியில் இருந்து சோசலிசப் புரட்சியாக மாற்றம் அடையும் பிரச்சினையை தழுவியுள்ளது. இதுதான் சாராம்சத்தில் அத்தத்துவத்தின் வரலாற்று ஊற்றிடம்.

நிரந்தரப் புரட்சி என்ற கருத்துரு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மகத்தான கம்யூனிச சிந்தனையாளர்களான மார்க்சும் அவரோடு இணைந்து சிந்திப்பவர்களும் சேர்ந்து, ஜனநாயக சிந்தனைக்கு எதிராக, அதாவது அது எமக்குத் தெரிந்ததுபோல், அனைத்துப் பிரச்சினைகளையும் சமாதானமாக, சீர்திருத்த முறையில் அல்லது பரிணாமமுறை நடவடிக்கைகள் மூலம் தீர்க்கலாம் என்கின்ற "அறிவார்ந்த" அல்லது ஜனநாயக அரசை நிறுவுதல் பற்றி கூறும் ஜனநாயக கருத்தியலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. 1848-ன் முதலாளித்துவ புரட்சியை, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னோடியென்றே மார்க்ஸ் கருதினார். அது மார்க்சின் "தவறு". அவரது தவறு, நிகழ்வுகள் சம்பந்தமான தவறேயொழிய ஆய்வுமுறை சார்ந்த (Methodology ) தவறல்ல. 1848 புரட்சி சோசலிசப் புரட்சியாக மாறவில்லை. ஆதலால் மாத்திரம் தான் அங்கே ஜனநாயகமும் சாதிக்க முடியாமற் போனது. 1918 ஜேர்மன் புரட்சியை பார்ப்போமெனில், இது முதலாளித்துவ புரட்சியின் ஜனநாயகப் பூரணப்படுத்தலல்ல, அது சமூக ஜனநாயக கட்சியால் சிரச்சேதம் செய்யப்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சியாகும். இன்னும் சரியாக சொல்வதென்றால் பாட்டாளி வர்க்கத்தை வென்ற பின்னர், போலி ஜனநாயக வடிவங்களை பாதுகாக்க நிர்பந்திக்கப்பட்ட, ஒரு முதலாளித்துவ எதிர்ப் புரட்சியாகும்.

கொச்சை 'மார்க்சிசம்', அனைத்து முதலாளித்துவ சமுதாயமும் உடனேயோ தாமதித்தோ ஒரு ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்ளும், இந்த ஜனநாயகச்சூழலில் பாட்டாளி வர்க்கம், சோசலிசத்திற்காக படிப்படியாக ஒழுங்கமைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படும் என்ற ஒரு வரலாற்று வளர்ச்சியின் மாதிரியினால் திட்டமிடப்பட்டிருக்கிறது. சோசலிசத்திற்கான உண்மையான மாற்றம் வெவ்வேறு விதமாக கிரகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான சீர்திருத்தவாதிகள் இந்த மாற்றத்தை, சோசலிச உள்ளடக்கத்துடன் (Jaurès ) ஜனநாயகத்தை சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நிரப்ப வேண்டுமென்றார்கள். சம்பிரதாய புரட்சியாளர்கள் (Formal Revolutionist ) சோசலிசத்திற்கு மாற்றமடையும் பொழுது (Guesde ), புரட்சிகர பயங்கரவாதத்தை பிரயோகிப்பது தவிர்க்க முடியாதது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இரு சாராருமே, முந்தியவர்களும் பிந்தியவர்களும் ஜனநாயகமும் சோசலிசமும் அனைத்து மக்களுக்கும் எல்லா நாட்டிற்கும் சமுதாய அபிவிருத்தியின் போது வித்தியாசமான இரண்டு வெவ்வேறு கட்டங்களாக வருமென்று மட்டும் கருதவில்லை, அவை இரண்டும் ஒன்றிலிருந்து மற்றது நீண்டகால இடைவெளிகளால் பிரித்து வைக்கப்படும் என்றும் கருதினார்கள். இந்தப் பார்வை 1905 காலகட்டத்தில் இரண்டாம் அகிலத்தின் இடது கன்னையை சேர்ந்த ரஷ்ய மார்க்சிசவாதிகளிடத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. ரஷ்ய மார்க்சிசத்தின் மகோன்னத மூலகர்த்தாவான பிளெக்கானவ் அவர் காலத்து ரஷ்யாவில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தே ஏமாற்று என்று கருதினார். இதே நிலைப்பாட்டை மென்ஷிவிக்குகள் மட்டும் பாதுகாக்கவில்லை. முன்னணி போல்ஷிவிக்குகளில் மிகப் பெரும்பான்மையோரும் இந்த நிலைப்பாட்டை பாதுகாத்தார்கள். குறிப்பாக இன்றைய கட்சியின் தலைவர்கள் எல்லோரும் ஒருவர் கூட விதிவிலக்கு இல்லாமல், அந்நாட்களில் அசைக்க முடியாத உறுதியுடன் புரட்சிகர ஜனநாயகவாதிகளாக இருந்தவர்கள்தான். அவர்களுக்கு சோசலிச புரட்சி 1905-ல் மாத்திரமல்ல 1917 புரட்சி காலத்திலுங்கூட அது தூரத்து எதிர்காலத்தின் தெளிவற்ற சங்கீதமாகவே தோன்றியது.

1905-ல் தோன்றிய நிரந்தரப் புரட்சி தத்துவம் இப்படியான சிந்தனைகளுக்கும் மனோநிலைகளுக்கும் எதிராக யுத்தப்பிரகடனம் செய்தது. எமது சகாப்தத்தில் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளின் ஜனநாயகக் கடமைகள் நேரடியாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும். அந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோசலிசப் பணிகளை நாளின் நடப்பாக்கும் என்று இது சுட்டிக்காட்டியது. இந்த தத்துவத்தின் மைய கருத்து அங்கே தான் உண்டு. நீண்டகால ஜனநாயகத்தின் ஊடாகவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் என்பதே மரபுவழி கண்டோட்டமாக இருந்தது. பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் ஜனநாயகத்திற்கான பாதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தினூடேயாகும் என்ற உண்மையை, நிரந்தரப் புரட்சி தத்துவம் நிர்மாணித்தது. ஏனெனில் ஜனநாயக ஆட்சிமுறை பல தசாப்தங்களுக்கு தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கக்கூடியதல்ல. ஆனால் அது சோசலிசப் புரட்சிக்கான நேரடி முன்னோடிதான். இரண்டுமே, உடையாத சங்கிலிபோல ஒன்று மற்றதில் பிணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கு ஜனநாயகப் புரட்சிக்கும் சமூகத்தை சோசலிச மறுகட்டமைத்தலுக்குமிடையே ஒரு நிரந்தரமான புரட்சிகர அபிவிருத்திநிலை இருக்குமென்பது ஸ்தாபிக்கப்படுகிறது.

"நிரந்தர" தத்துவத்தின் இரண்டாவது அம்சம் சோசலிசப் புரட்சியை பற்றியதாகும். ஒரு வரையறுக்க முடியாத நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து உட்போராட்டங்கள் நிகழுமென்றால், அனைத்து சமூக உறவுகளுமே உருமாற்றமடையும். சமுதாயம் தனது புறத்தோலை தொடர்ந்து மாற்றிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு கட்ட உருமாற்றமும் அதற்கு முதற்கட்ட மாற்றத்திலிருந்தே நேரடியாக தொடர்ந்து தோன்றும். இந்த நிகழ்வுகள் கட்டாயத்தின்பேரில் ஓர் அரசியல் குணாம்சத்தை எடுக்கும். அதாவது இது சமூகத்தின் உருமாற்றமடைந்து கொண்டிருக்கும் குழுக்களிடையே தோன்றும் முட்டிமோதலோடு அபிவிருத்தியடையும். உள்நாட்டு யுத்தவெடிப்பு, வெளிநாட்டு யுத்தவெடிப்பு "சமாதான" சீர்திருத்த காலங்கள் என்று மாறி மாறி வந்து போகும், பொருளாதாரத்தில் புரட்சி, தொழில்நுட்பத்தில் புரட்சி, விஞ்ஞானத்தில் புரட்சி, குடும்பத்தில் புரட்சி, அறநெறிகளில் புரட்சியென்று ஒவ்வொரு நாள் வாழ்வும் சிக்கலான பரஸ்பர செயற்பாடுகளினோடு அபிவிருத்தியடைந்து சமூகத்திலே சமநிலையை உருவாக்க விடாது. இங்கேதான் சோசலிசப் புரட்சியின் நிரந்தர குணாம்சம் தங்கியுள்ளது.

நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மூன்றாவது அம்சம் சோசலிசப் புரட்சியின் சர்வதேசிய குணாம்சமாகும். இது இன்றைய பொருளாதாரநிலை, மானிட சமூக கட்டுமானம் என்பவற்றிலிருந்து தோன்றும். சர்வதேசியம் ஓர் அருவமான கோட்பாடல்ல மாறாக அது உலகப் பொருளாதாரத்தின், உற்பத்தி சக்திகளின் உலக அபிவிருத்தியின் மற்றும் உலக அளவிலான வர்க்கப் போராட்டத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரதிபலிப்பு ஆகும். சோசலிசப் புரட்சி தேசிய அடித்தளத்திலேயே தொடங்கும். ஆனால் அது தேசிய அடித்தளத்தினுள் பூரணத்துவம் அடைய முடியாது. பாட்டாளி வர்க்கப் புரட்சியை தேசிய கட்டமைப்புக்குள் பராமரிப்பதென்பது, சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் காட்டியவாறு, நீண்டகால காலப்போக்கில் ஒன்றாக இருந்தபோதிலும், அது தற்காலிகமான நிலையாகத்தான் இருக்கமுடியும். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில், சாதித்த வெற்றியோடு கூடவே தவிர்க்க முடியாமல், உள்முரண்பாடுகளும், வெளிமுரண்பாடுகளும் வளரும். அந்த பாட்டாளி வர்க்க அரசு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் இறுதியில் கட்டாயமாக அந்த முரண்பாடுகளுக்கு பலியாகிவிடும். அதிலேயிருந்து தப்புவதற்குள்ள ஒரே வழி அபிவிருத்தியடைந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிகள்தான். இந்த நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், ஒரு தேசியப் புரட்சி தனக்குள்ளேயே முழுவதையும் வைத்திருக்கும் ஒன்றல்ல. அது சர்வதேச சங்கிலியின் ஒரு பிணைப்பு மாத்திரம்தான். சர்வதேச புரட்சியென்பது தற்காலிக எழுச்சி மற்றும் வீழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்த போதிலும் அது ஒரு நிரந்தரமான நிகழ்வுப் போக்காகும்.

இழிபாசாங்கினர்களது போராட்டம், ஒரு பொழுதும் அதே தெளிவோடு நடைபெறாத போதும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மூன்று அம்சங்களுக்கும் எதிராக திருப்பப்பட்டதேயாகும். இது மூன்று பிரிக்க முடியாது தொடுக்கப்பட்ட பகுதிகளை கொண்ட ஒரு முழுமை பற்றிய பிரச்சினையாக இருப்பதால் வேறு எவ்வாறு இருக்க முடியும்? இழிபாசாங்கினர்கள் ஜனநாயக சர்வாதிகாரத்¬யும் சோசலிச சர்வாதிகாரத்தையும் எந்திரரீதியான முறையில் பிரிக்கிறார்கள். அவர்கள் தேசிய சோசலிச புரட்சியை சர்வதேசிய புரட்சியிலிருந்து பிரிக்கிறார்கள். சாராம்சத்தில் தேசிய எல்லைக்குள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது ஒரு ஆரம்ப செயல் என்று கருதாமல் அதை புரட்சியின் முடிவான செயலென்று கருதுகிறார்கள். 1905-ல், மேற்கு ஐரோப்பாவிற்கு முன்னதாக பாட்டாளி வர்க்கம் ரஷ்யாவில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் என்ற யோசனையை அங்கீகரிக்கவில்லை. 1917-ல் அவர்கள் ரஷ்யாவிலே சுய தேவை பூர்த்தியுள்ள ஜனநாயக புரட்சி பற்றி உபதேசித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வெறுத்து உதைத்து தள்ளினார்கள். 1925-27-ல் அவர்கள் சீனாவை தேசிய முதலாளித்துவத்தின் தலைமயின் கீழ் தேசிய புரட்சியை நோக்கி முடுக்கினார்கள். அதன் பின்பு அவர்கள் சீனாவுக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சுலோகத்திற்கு எதிராக தொழிலாளர் விவசாயிகள் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சுலோகத்தை பிரேரித்தார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதும் சுயதேவை பூர்த்தியோடானதுமான சோசலிச சமுதாயத்தை சோவியத் ஒன்றியத்திலே கட்டி வளர்க்க கூடிய சாத்தியப்பாடு உண்டு என்று அதிகாரபூர்வமாக அறிக்கை விட்டார்கள். அவர்களுக்கு, உலகப் புரட்சியானது வெற்றிக்கான ஒரு தவிர்க்க முடியாத நிபந்தனை என்றில்லாமல், அது ஒரு வெறும் சாதகமான சூழ்நிலை என்றாகியது. இழிபாசாங்கினர் மார்க்சிசத்தோடான இந்த ஆழமான உடைவினோடு நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிரான நிரந்தரப் போராட்ட நிகழ்வுப்போக்குக்கு வந்தார்கள்.

வரலாற்றின் மிச்சசொச்சங்களை செயற்கையாக புதுப்பித்தும், எப்போதோ நடந்து முடிந்த விடயங்களை பிழையாக திரித்துக் கூறியும் ஆரம்பமான போராட்டமானது புரட்சியின் ஆளும் தட்டுக்களை உலகப் பார்வையில் இருந்து பூரணமாக மாறுவதற்கு இட்டுச் சென்றது. சோவியத் அதிகாரத்துவத்தின் சமூகத் தேவையின் செல்வாக்கின் கீழ் பெற்றுவிட்ட மதிப்புக்களை மீள்மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், அந்த அதிகாரத்துவம் மேலும் மேலும் பழமை பேணுவதாகிவிட்டதோடு, தேசிய அமைதிக்கு பாடுபட்டுக் கொண்டு, அவர்களுக்கு வசதியான வாழ்வை கொடுத்து உத்தரவாதம் அளித்த, ஏற்கனவே நடந்து முடிந்த அந்த புரட்சியானது, சமாதான முறையில் சோசலிசத்தை கட்டி வளர்க்க போதுமானதென்று கருதவேண்டுமென்று அது கோருகிறது என்பதை நாம் ஏற்கனவே விளங்கப்படுத்தி காட்டினோம். இந்த விடயத்திற்கு நாம் மீண்டும் வரவிரும்பவில்லை. அதிகாரத்துவம் தேசியவாத சோசலிச தத்துவத்துடனான சடரீதியான நிலைப்பாட்டுடனும் தத்துவார்த்த நிலைப்பாட்டோடும் உள்ள தொடர்பு சம்பந்தமாக ஆழமான நனவை உடையது என்பதை கருத்தூன்றிக் கவனித்தால் போதும். இது மிக அவசரமாக இப்போது வெளிப்படுத்தப்படுகிறதாக இருந்த போதிலும் உண்மை என்னவென்றால் ஸ்ராலினிச அரசாங்க எந்திரம், தான் முன்கூட்டியே காணாத முரண்பாடுகளின் நெருக்குவாரத்தினால் தனது வல்லமை முழுவதையும் கூட்டி இடது பக்கம் பயணம் செய்யப் பார்ப்பதோடு, தனது நேற்றைய வலதுசாரி ஊக்கத்தை தந்தவர் மேல், பாரிய தண்டனையை சுமத்தப் பார்க்கிறது. மார்க்சிச ரீதியான எதிர்ப்பாளர்கள் மேலுள்ள பகைமையானது அவர்களது சுலோகங்களையும் விவாதங்களையும் பெரிய அவசரத்தில் கடன் வாங்கினாலும் கூட, எங்களுக்கு தெரிந்தது போலவே, அது இம்மியளவும் குறையாது. தொழிற்துறைமயமாக்கல் போன்றவற்றிற்கு ஒத்தாசை வழங்குவதற்காக தங்களை மீண்டும் கட்சிக்குள் அனுமதிக்கும் படி கேட்ட எதிர்ப்பாளர்களிடம், முதலாவதாகவும் முதன்மையாகவும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை நிந்திக்கும் படி குறைந்தபட்சம் மறைமுகமாவது தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை ஏற்கும் படியும் கோரப்படுகிறது. தனது தேசியவாத சீர்திருத்தவாத மூலோபாய அடித்தளத்திலேயே போய்க்கொண்டிருக்கும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் வெளிப்படுத்தும் இடது திருப்பம் வெறுமனே தந்திரோபாய குணாம்சத்தை உடையது. இதன் அர்த்தம் என்னவென்று விவரிக்க வேண்டியதில்லை யுத்தத்தில் நடப்பதை போலவே அரசியலிலும் தந்திரோபாயமானது நீண்டகால நோக்கில் மூலோபாயத்திற்கு அடிபணிந்ததாக இருக்க வேண்டும்.

பிரச்சினை எப்போதோ "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டம் என்பதன் பேரில், குறிப்பிட்ட எல்லைக்கப்பால் போய்விட்டது. அது மெல்ல மெல்ல தானே விரிவடைந்து, இன்று, புரட்சிகர உலகப்பார்வையின் அனைத்து பிரச்சினைகளையும் எழுத்தினோடு தழுவிக் கொண்டுவிட்டது. நிரந்தரப் புரட்சியென்றால் என்ன தனியொரு நாட்டில் சோசலிசம் என்றால் என்ன - இம் மாற்றீடுகள் அந்த நேரத்தில் சோவியத் ஒன்றியத்தின் உள்நாட்டு பிரச்சினைகளை, கீழைத்தேச புரட்சிகளின் வாய்ப்பு வளத்தை, ஈற்றில் முழுமையாக கம்யூனிச அகிலத்தின் தலைவிதியை தழுவி விடுகின்றன.

இந்த நூலும் இப்பிரச்சினையின் அனைத்துப் பக்கங்களையும் ஆராயவில்லை. மற்றைய எழுத்துக்களிலே ஏற்கனவே சொன்ன விடயங்களை மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கம்யூனிச அகிலத்தின் நகல் வேலைத் திட்டத்தை விமர்சித்ததில், நான் தேசிய சோசலிசத்தின், அரசியல், பொருளாதார ரீதியில் நிலைநிறுத்தப்படுத்த முடியாத விடையங்களை தத்துவார்த்த ரீதியில் வெளிக்கொணர பெரு முயற்சி எடுத்துள்ளேன். (பிற்குறிப்பு: "இது லெனினுக்குப்பின் மூன்றாம் அகிலம்" என்ற நூலில் உள்ளது). கொமின்டேர்னின் தத்துவார்த்த ஆசான்கள் மௌனம் சாதிக்கிறார்கள். கட்டாயம் அது ஒன்றைத்தான் அவர்களை செய்யச்சொல்லி விடப்பட்டிருக்கின்றது. இந்த நூலிலே எல்லாவற்றிற்கும் மேலாக நான் 1905-ல் ரஷ்ய புரட்சியின் உட்பிரச்சினைகளோடு தொடர்புப்படுத்தப்பட்டு என்ன மாதிரி நிரந்தரப் புரட்சி தத்துவம் சூத்திரப்படுத்தப்பட்டதோ அதை திருப்பிக் கொணர்ந்துள்ளேன். எங்கே லெனினது நிலைப்பாட்டோடு எனது நிலைப்பாடு உண்மையிலே வித்தியாசப்பட்டதோ எப்படி, ஏன் ஒவ்வொரு தீர்க்கமான நிலவரத்தினுள்ளேயும் இருவரது நிலைப்பாடும் பொருந்தி வந்ததென்றும் காட்டியுள்ளேன். இறுதியில் நான் இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை, பின்தங்கிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்திற்கும், அதன் மூலம் கம்யூனிச அகிலம் முழுமைக்கும் சொல்வதற்கு பெருமுயற்சி எடுத்துள்ளேன்.

இழிபாசாங்கினர்களால் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிராக என்ன குற்றச்சாட்டு கொணரப்பட்டுள்ளது? எனது விமர்சனத்திலுள்ள எண்ணுக்கடங்காத முரண்பாடுகளை அங்கேயே தள்ளி வைத்துவிட்டால் அவர்களின் மொத்த உண்மையில் பெருவாரியான எழுத்துக்களின் பிரதான பாகம் பின்வருமாறு சுருங்கிவிடும்.

1. ட்ரொட்ஸ்கி முதலாளித்துவ புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை உதாசீனம் செய்துவிட்டார். ஏற்கனவே 1905 இலேயே ரஷ்ய பாட்டாளி வர்க்கம் சோசலிச புரட்சி பணிகளை நேரடியாக முகம் கொடுத்ததென்று கருதினார்.

2. ட்ரொட்ஸ்கி பூரணமாகவே விவசாயப் பிரச்சினையை மறந்துவிட்டார். அவருக்கு விவசாயிகள் என்பது அவனியில் இல்லாத ஒன்று. அவர் புரட்சியை பாட்டாளி வர்க்கத்திற்கும் சாரிசத்திற்குமிடையே தனித்து நடக்கும் போராட்டம்தான் என்று விபரித்தார்.

3. உலக முதலாளித்துவ வர்க்கம், ரஷ்ய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நீண்ட நாட்களுக்கு சகித்துக்கொள்ளும் என்பதை ட்ரொட்ஸ்கி நம்பவில்லை, அத்தோடு மேற்கிலேயுள்ள பாட்டாளி வர்க்கம் வெகு சீக்கிரத்தில் ஆட்சியைக் கைப்பற்றி எங்களுக்கு உதவிக்கு வராவிடில் அது தவிர்க்க முடியாமல் விழும் என்று நோக்கினார். இதன் பிரகாரம் அவர் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் தங்களது சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் மேல் கொடுக்கும் நெருக்கு வாரத்தை குறைத்து மதிப்பிட்டார்.

4. பொதுவாகவே ட்ரொட்ஸ்கி ரஷ்ய பாட்டாளி வர்க்கத்தின் சக்தியை நம்பவில்லை, சுயாதீனமாக சோசலிசத்தினை கட்டி வளர்க்கும் அதன் வல்லமையை நம்பவில்லை. ஆதலாலேயே அவர் தனது நன்னம்பிக்கை முழுவதையும் சர்வதேச புரட்சியிலேயே வைத்திருந்தார். இப்பொழுதும் அதையே வைத்திருக்கின்றார்.

இப்படியான எண்ணங்கள் சினோவியேவ், ஸ்ராலின், புக்காரின் போன்றோரின் எண்ணற்ற பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் மாத்திரம் ஆதிக்கம் செலுத்தவில்லை. அவை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியினதும் கம்யூனிச அகிலத்தினதும் முக்கியமான அதிகார தோரணையிலான தீர்மானங்களிலும் சூத்திரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அவை எல்லாமே அறியாமையும் நேர்மையின்மையும் கலந்த கலவையை அடிப்படையாக கொண்டவை என்பதை நாம் சொல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

விமர்சனத்தின் முதல் இரண்டு வாதங்களுமே அடிப்படையில் தவறானவை என்பது பின்பு காட்டப்படும். இல்லை, நான் துல்லியமாய், புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயக குணாம்சத்திலிருந்து தொடங்கி, விவசாய நெருக்கடியின் ஆழம், பின்தங்கிய ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கத்தை, ஆட்சிக்கு கொண்டுவரும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆம் சுருக்கமாக இந்த கருத்தைத்தைத்தான் 1905 புரட்சியின்போது நான் பாதுகாத்தேன். சுருக்கமாக இந்த கருத்திற்குத்தான் புரட்சியின் சிறப்புப்பெயர் "நிரந்தரம்" என்று வெளிப்படுத்தப்பட்டது. அதாவது தங்குதடையற்ற ஒன்று, ஒரு புரட்சி நேரடியாக முதலாளித்துவ கட்டத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வது. இதே கருத்தை எதிர்காலத்தில் லெனின் வெளிப்படுத்தும்பொழுது ஓர் அருமையான வார்த்தைப் பிரயோகமான முதலாளித்துவப் புரட்சி 'மேலும் வளர்ந்து' (growing over ) சோசலிசமாவது என்று உபயோகித்தார். "மேலும் வளர்ந்து" என்ற எண்ணக்கரு பிற்காலத்தில், (1924ல்) நிகழ்விற்கு பின்னர், ஸ்ராலினால் நிரந்தரப் புரட்சி என்பதற்கு எதிரானதாய் முன்வைக்கப்பட்டு, முடியரசிலிருந்து சோசலிசத்திற்கு நேரடியாகப் பாய்வது என்று வியாக்கியானப்படுத்தப்பட்டது. இந்த துர்அதிர்ஷ்டமுள்ள 'தத்துவார்த்தவாதி' அந்தப் பிரச்சினை பற்றி ஆழ்ந்து சிந்தித்துப்பார்க்க அக்கறைகூட எடுக்கவில்லை. அதை வெறும் பாச்சல் என்பதோடு நிறுத்திவிட்டால், ஒரு புரட்சி "நிரந்தரமாவது" என்பதன் அர்த்தமென்ன? ஒரு புரட்சி தங்கு தடையின்றி வளர்வதென்பதன் அர்த்தமென்ன?

மூன்றாவது குற்றச்சாட்டு என்னவெனில் இழிபாசாங்கினர்களால் கட்டளையிடப்பட்ட அற்ப ஆயுசுள்ள நம்பிக்கையான, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எல்லையற்ற காலத்தில் "விவேகமுடன்" அணிதிரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் அழுத்தத்தால் சமநிலைப்படுத்தலாம் என்னும் சாத்தியப்பாடு பற்றியது. 1924-1927ல் ஸ்ராலினது மையச் சிந்தனை இதுதான். ஆங்கிலோ-ரஷ்யன் கமிட்டி, இதன் பலாபலனாகும். உலக முதலாளித்துவத்தின் காலையும் கையையும் பூர்செல், (Purcel ) றாடெக் (Radic), லாபொலெற் (LaFollette ), சியாங் கேய்-சேக் போன்றோரின் உதவியுடன் கட்டிப்போடும் சாத்தியப்பாட்டின் ஏமாற்றம் உடனடி யுத்த அபாயப்பயம் என்ற உக்கிர வியாதிக்கு இட்டுச் சென்றது. கொமின்டேர்ன் இன்னமும் இந்த காலகட்டத்தினூடேதான் சென்று கொண்டிருக்கிறது.

நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு நான்காவது ஆட்சேபனையை இலகுவாக இப்படிச் சொல்கிறார்கள்: நான் 1905ல் ஒரு நாட்டில் சோசலிசம் நிலைப்பாட்டை பாதுகாக்கவில்லையாம். இதை முதன் முதலாக 1924ல் ஸ்ராலின் சோவியத் அதிகாரத்துவத்திற்காக உற்பத்தி செய்தார். இந்தக் குற்றச்சாட்டு வெறும் வரலாற்று வினோதம்தான். சிலர் உண்மையிலேயே, எனது எதிரிகளை நம்பி, அரசியல்ரீதியாக 1905ல், ரஷ்யா சுயாதீனமான சோசலிசத்திற்கு முதிர்ந்திருந்ததாக அபிப்பிராயப்படக்கூடும். உண்மை என்னவென்றால் 1905-1917 வரையுள்ள காலங்களில், அவர்கள் களைப்புச்சளைப்பின்றி என்னை ஓர் கற்பனாவாதியென்று குற்றஞ்சாட்டினார்கள். ஏனெனில் நான் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்திற்கு முன்னதாக ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடிய சாத்தியக்கூற்றை அனுமதித்திருந்தேன். கமேனேவும் ரிக்கோவும் 1917 ஏப்பிரலில் லெனினை கற்பனாவாதியென்று குற்றம்சாட்டியதோடு, சோசலிசப் புரட்சி ரஷ்யாவுக்கு வருவதற்கு முன்னதாக கட்டாயமாக முதலில் இங்கிலாந்தில் சாதிக்கப்பட்டு அடுத்து மற்றைய வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு வரும் என்று லெனினுக்கு இலகுவான மொழியில் விளங்கப்படுத்தினார்கள். இதே நிலைப்பாட்டையே ஸ்ராலின் 1917 ஏப்பிரல் 4 வரை பாதுகாத்தார். அவர் மெல்ல மெல்லவும் சிரமத்தோடுமே ஜனநாயக சர்வாதிகாரத்திற்கு எதிரும் புதிருமான லெனினிச சூத்திரமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு அடிபணிந்தார். 1924 வசந்த காலத்தில் ஸ்ராலின் மீண்டும் மற்றவர்கள் தனக்கு முன்பு சொன்னதையே தானும் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதனால் சோசலிசத்தைக் கட்டி வளர்க்க இன்னும் அது முதிரவில்லை என்று சொன்னார். 1924 இலையுதிர் காலத்தில்தான், ஸ்ராலின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கு எதிரான தனது போராட்டத்தின்போது, முதன் முதலாக தனிமைப்படுத்தப்பட்ட சோசலிசத்தை ரஷ்யாவிலே கட்டி வளர்க்கக் கூடிய சாத்தியக் கூற்றை கண்டுபிடித்தார். அப்பொழுது மட்டுந்தான் செம்பேராசிர என்ன கொடுமை!— மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் ஒத்தாசையோடு மட்டுந்தான் சோசலிசத்தை வந்தடைய முடியும் என்று 1905ல் ட்ரொட்ஸ்கி நம்பியதாக குற்றம்சாட்டும் மேற்கோளை ஸ்ராலினுக்காக சேகரித்தார்கள்.

கால் நூற்றாண்டு தத்துவார்த்த போராட்ட வரலாற்றை ஒரு கத்திரிக்கோலால் துண்டு துண்டாக நறுக்கி, கலந்து உரலில் இடித்துவிட்டு, ஒரு கண்கெட்டவனை மீண்டும் அத்துண்டுகளை சேர்த்து ஒட்டும்படி செய்ததால் ஏற்பட்ட ஒரு தத்துவார்த்த வரலாற்று அர்த்தமற்ற கல்வியைத்தான் இந்த இழிபாசாங்கினர்கள் தங்களது வாசகர்களுக்கும் கேட்போர்க்கும் ஊட்டுகிறார்கள்.

நேற்றைய பிரச்சினைகளுக்கும் இன்றைய பிரச்சினைகளுக்கும் தொடர்புகளை ஒளிரச் செய்ய வேண்டுமானால், பொதுவாக என்றாலும் பரவாயில்லை, கொமின்டேர்ன் தலைவர்களான ஸ்ராலினும் புக்காரினும் சீனாவில் செய்த அக்கிரமங்களை நினைவு கூரவேண்டும்.

சீனா ஒரு தேசிய விடுதலையைத்தான் முகங்கொடுக்கின்றது என்ற சாக்குப்போக்கின் பேரில் 1924-ல் தலைமைப்பாத்திரம் சீன முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக, தேசிய முதலாளித்துவத்தின் கட்சியான கோமிண்டாங் தலைமைக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. 1905ல் ரஷ்ய மென்ஷிவிக் கட்சிகூட தாராளவாத முதலாளித்துவ கட்சியான காடேட்டோடு (Cadets ) இந்தளவுக்கு உறவு வைக்கவில்லை.

ஆனால் கொமின்டேர்ன் தலைமை இத்துடன் நின்றுவிடவில்லை. அது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை கோமிண்டாங்கினுள் நுழையும்படியும் அதன் கட்டுப்பாட்டிற்கு அடங்கும்படியும் நிர்ப்பந்தித்தது. ஸ்ராலின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அனுப்பிய விசேஷ தந்தி, விவசாய இயக்கத்தை தடுக்கும்படி தூண்டியது. ஷங்காய் எதிர்ப்புரட்சி சதி நடைபெற்று முடிந்த கொஞ்ச நாட்களுக்கு முன்பு 1927 ஏப்பிரல் தொடக்கத்தில் மொஸ்கோவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் எதிர்ப்புக் கன்னையின் நிலைப்பாட்டிற்கு எதிராக "நம்பக நேசசக்தி" என்று ஸ்ராலினால் பாதுகாக்கப்பட்ட சியாங் கேய்- சேக்கை பகைக்கக்கூடாது என்பதற்காக, தொழிலாளர் விவசாயிகளது கிளர்ச்சி எழுச்சியானது தனது சொந்த சோவியத்துக்களை ஏற்படுத்துவது தடைசெய்யப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியை உத்தியோகபூர்வமாக முதலாளித்துவ தலைமைக்கு அடிபணிந்து போகும்படி செய்ததும், உத்தியோகபூர்வமாக சோவியத்துக்களை அமைப்பதை தடைசெய்ததும் (கோமின்டாங், சோவியத்தின் "இடத்தை வகிக்கும்" என்று ஸ்ராலினும் புகாரினும் கற்பித்தார்கள்) 1905-1917களில் மென்ஷிவிக்குகள் கூட செய்யத் துணியாத மட்டத்திற்கு, மிகப் பெரிதாகவும் மன்னிக்க முடியாத அளவிற்கும் மார்க்சிசத்தை காட்டிக்கொடுத்ததாகும்.

1927 ஏப்பிரலில் சியாங் கேய்-சேக்கின் எதிர்ப் புரட்சிக்கு பின்பு, வாங் சிங்-வெய் (wang ching-wei ) இன் தலைமையிலான ஓர் இடது கன்னை தற்காலிகமாக கோமின்டாங்கிலிருந்து பிரிந்தது. உடனடியாகவே பிராவ்தாவில் வாங் சிங்-வெய் ஒரு நம்பகமான நேச சக்தியென்று பிரகடனப்படுத்தப்பட்டது. கெரென்ஸ்கி, மில்யுக்கோவோடு என்ன உறவை வைத்திருந்தாரோ சாராம்சத்தில் அவ்வாறே வாங் சிங்-வெய், சியாங் கேய்-சேக்கோடு உறவை வைத்திருந்தார். ஒரு வித்தியாசம் என்னவென்றால் சீன மில்யுக்கோவும் கோர்ணிலோவும் தனி ஒரு நபரான சியாங் கேய்-சேக்குடன் ஐக்கியப்படுத்தப்பட்டிருந்ததுதான்.

1927 ஏப்பிரலுக்கு பின்னர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, "இடது" கோமின்டாங்கோடு சேரும்படியும் சீனக் கெரென்ஸ்கிக்கு எதிராக நேரடியாக பகிரங்க யுத்தத்தை தயார்ப்படுத்துவதை விடுத்து அவரது கட்டுப்பாட்டிற்கு அடிபணியும்படியும் கட்டளையிடப்பட்டது. ஸ்ராலினால் "நம்பகமான" நேச சக்தியென்று சொல்லப்பட்ட வாங் சிங்-வெய், கம்யூனிஸ்ட் கட்சியையும் அதனோடு சேர்த்து தொழிலாளர் விவசாயிகள் இயக்கத்தையும் சியாங்கை கேய்-சேக் ஐ விட கொஞ்சமும் குறைவற்ற காட்டுமிராண்டித்தனத்தோடு நசுக்கினார்.

மென்ஷிவிக்குகள் 1905இலும் அதற்குப் பின்பும் மில்யுக்கோவிற்கு ஒத்தாசை வழங்கினார்கள். ஆனால் ஒருபோதும் தாராளவாத முதலாளித்துவ கட்சிக்குள்ளே நுழையவில்லை. 1917ல் மென்ஷிவிக்குகள் கெரென்ஸ்கியோடு கையோடு கைகோர்த்துச் செயல்பட்டபோதும் அவர்கள் தங்களது சொந்த கட்சியை கரையவிடாது பாதுகாத்தனர். சீனாவிலே ஸ்ராலினது கொள்கை மென்ஷிவிசத்திலும் பார்வைக்குதவாத கேலிக்கூத்தாக இருந்தது. இதுதான் இங்கே முக்கியமானதும் முதன்மையானதுமான அத்தியாயம் ஆகும்.

தவிர்க்கவொண்ணா இந்த பலாபலனின் பின், தொழிலாளர் விவசாயிகள் இயக்கம் பூரணமாக வீழ்ச்சி கண்டது. கம்யூனிஸ்ட் கட்சி சோர்விழந்து உடைந்தது. கொமின்டேர்னின் தலைமை "முழுமையாய் இடதுக்கு திரும்பு!" ("Left about turn!") என உத்தரவு கொடுத்து, உடனடியாக தொழிலாளர் விவசாயிகள் ஆயுதக் கிளர்ச்சிக்கு மாற்றமுற வேண்டுமென்று கோரியது. நேற்றுவரை நசுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட இந்த இளைய கம்யூனிஸ்ட் கட்சி, சியாங் கேய்-சேக்கினதும் வாங் சிங் வேயினதும் வாகனத்தின் ஐந்தாவது சக்கரமாகவே சேவையாற்றியது, அதே நேரத்தில் அவர்களுக்கென்று சுயாதீனமான அரசியல் அனுபவம் அற்ப சொற்பமும் இருக்கவில்லை. இப்பொழுது திடீரென்று கொமின்டேர்ன் இந்தக் கட்சிக்கு, --கோமிண்டாங் பதாகையின் கீழ் இழுத்து, நேற்று வரை பின்னுக்குப் பிடித்துவைத்திருந்த தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்-- ஆயுதமேந்திய கிளர்ச்சி எழுச்சிக்கு தலைமை கொடுக்கும்படி அதுவும் இதற்கிடையில் தனது அதிகாரம் முழுவதையும் கூட்டிக்குவிக்கவும், இராணுவத்தை தனது கைக்குள் போட்டுக்கொள்ளவும் நேரத்தைப் பெற்ற, அதே கோமின்டாங்கிற்கு எதிராக, ஆயுதமேந்திய கிளர்ச்சி எழுச்சியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 24 மணி நேரத்தில் கன்ரோனில் (Canton ) எந்தவொரு முன் ஆயுத்தமும் இன்றி ஒரு போலியான சோவியத் அமைக்கப்பட்டது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பதினைந்தாவது காங்கிரஸ் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற ஆயுதக் கிளர்ச்சியானது, அதே நேரத்தில் முன்னணி சீனத் தொழிலாளர்களின் போராட்ட வீரியத்தையும் கொமின்டேர்ன் தலைவர்களின் குற்றச்செயலையுமே வெளிப்படுத்தியது. கன்ரோன் எழுச்சியில் சிறிய சாகசமே வெளிப்பட்டு தொடர்ந்தது. கொமின்டேர்னின் சீனாவுக்கான மூலோபாயத்தின் இரண்டாவது அத்தியாயம் இதுவாகும். இதை கெடுநோக்கமுள்ள போல்ஷிவிக் கேலிக்கூத்தென்று குணாம்சப்படுத்த முடியும். தாராளவாத-சந்தர்ப்பவாத சாகசப்பாடங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரியதோர் அடியை வேண்டிக்கொடுத்தது. இதிலிருந்து மீள்வதற்கு ஒரு சரியான கொள்கையை கடைப்பிடித்தாலுங்கூட பல வருடங்கள் தேவைப்படும்.

கொமின்டேர்னின் ஆறாவது காங்கிரஸ் அதன் அனைத்து வேலைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, அது தனது ஒளிவுமறைவற்ற சம்மதத்தை அளித்துள்ளது. இது எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை, ஏனெனில் அவ்வேலைக்காகவே காங்கிரஸ் கூட்டப்பட்டது. எதிர் காலத்துக்கென காங்கிரஸ், "பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்" என்ற சுலோகத்தை பிரேரித்துள்ளது. இச் சர்வாதிகாரம், ஒருபுறம், கோமின்டாங்கின் வலது அல்லது இடது சர்வாதிகாரத்தில் இருந்தும், மறுபுறம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதிலிருந்தும் வேறுபடும். இதை அவர்கள் சீன கம்யூனிஸ்டுக்களுக்கு விளங்கப்படுத்தவில்லை. இது என்ன விளங்கப்படுத்தி விடப்படக்கூடிய காரியமா.

ஆறாவது காங்கிரஸ் அதிகாரபூர்வமாக ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சுலோகத்தை வெளிப்படுத்திக்கொண்டு அதே நேரத்தில் ஜனநாயக சுலோகங்கள் (சட்ட நிர்ணய சபைகள், வெகுஜன வாக்குரிமை, பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் போன்றவை) அனுமதிக்கப்பட முடியாதவை என்று கண்டனம் செய்கின்றார்கள். அந்த செயலினோடு அதுவும் இராணுவ தன்னலக்குழுவின் சர்வாதிகார (Military Oligarchy ) சூழலில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை பூரணமாக நிராயுதபாணியாக்கினார்கள். ஒரு நீண்ட தொகை வருடங்களாக ரஷ்ய போல்ஷ்விக்குகள் ஜனநாயக சுலோகங்களை சூழவே, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டினர். 1917இலும் ஜனநாயக சுலோகங்கள் பெரிய பாத்திரத்தை வகித்தன. சோவியத் ஆட்சி அதிகாரம் உண்மையிலே தோன்றிய பின் மாத்திரமே மற்றும் அரசியல் நிர்ணய சபையோடு அரசியல் ரீதியாக மோதலுற்றது மாத்திரமே, முழுப் பரந்துபட்ட ஜனங்களின் சமரசம் காணமுடியாத பூரண நோக்கு, உண்மையான சோவியத் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக, அதாவது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை ஏற்படுத்த சம்பிரதாய ஜனநாயகத்தின் (Formal Democracy ) ஸ்தாபனங்களையும் சுலோகங்களையும் அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தை நிர்மூலமாக்கியது.

ஸ்ராலின் புக்காரின் தலைமையிலான கொமின்டேர்னின் ஆறாவது காங்கிரஸ் இவை எல்லாற்றையும் தலைகீழாக மாற்றியுள்ளது. "பாட்டாளி வர்க்க" சர்வாதிகார சுலோகத்தை நிராகரித்து "ஜனநாயக" சர்வாதிகார சுலோகத்தை கட்சி கடைப்பிடிக்க செய்யும் அதே வேளையில், இந்த சர்வாதிகாரத்தை தயாரிப்பதற்காக ஜனநாயக சுலோகங்களை பிரயோகிப்பதை தடை செய்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிராயுதபாணியாக்கப்பட்டது மாத்திரமல்ல நிர்வாணமாக உரியப்பட்டது. எதிர்ப்புரட்சியின் ஆதிக்கம் கட்டுக்கடங்காது இருந்தபொழுது ஈற்றில் ஒரு வழியில் சமாதானப்படுத்துவதற்காக சோவியத் சுலோகம் அனுமதிக்கப்பட்டது. அது புரட்சியின் கிளர்ச்சி எழுச்சி காலம் முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. ரஷ்ய புராணக்கதையொன்றிலுள்ள மிகப் பிரசித்திபெற்ற வீரன் ஒருவன், சவ அடக்கத்தின்போது மங்கள கீதத்தையும் (பூபாளம்) கல்யாணவீட்டிலே சோக கீதத்தையும் (முகாரி) பாடியது போன்றிருக்கின்றது. அவன் இரண்டு சம்பவங்களின்போதும் நையப்புடைக்கப்பட்டான். இப்பொழுது கொமின்டேர்னில் பதவி வகிக்கும் தலைவர்களின் மூலோபாயவாதிகளுக்கு இவ்வாறான நையப்புடையலுடன் மட்டுப்படுத்தப்பட்டால் ஒருவர் சிலவேளை அத்துடன் திருப்தியடைந்துகொள்ளலாம். ஆனால் இன்னும் பெரிய விடையங்கள் ஆபத்திலேயுள்ளன. கொமின்டேர்னின் தந்திரோபாயமானது நனவற்ற, ஆனால் அதற்கும் மேலாக, சீனப்புரட்சிக்கு வேண்டுமென்றே நாசம் விளைவிக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட நாச வேலையாகும். 1924-1927 வலது மென்ஷிவிக் வேலைத் திட்டத்தின் வெற்றியின் உத்தரவாதத்திற்காக போல்ஷிவிசத்தின் அனைத்து உரிமைகளாலும் தம்மை போர்த்திக்கொண்ட கொமின்டேர்னாலேயே இந்த நாச வேலையானது செய்து முடிக்கப்பட்டது. அதே நேரத்தில் அது சோவியத் அதிகாரமென்ற பெரிய சக்தியால், அதன் மிகப்பெரிய ஒடுக்குமுறை எந்திரத்தின் துணைகொண்டு இடது எதிர்ப்பின் விமர்சனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது.

இதன் பலனாய் நாங்கள் ஆரம்பத்திலிருந்து முடியுமட்டும், நிரந்தரப் புரட்சிக்கு எதிரான போராட்டம் என்ற பதாகையின் கீழ் நிறைவேறிய ஸ்ராலினிசத்தின் முற்றுப்பெற்ற மூலோபாயத்தின் பரிசோதனையை பார்த்தோம். ஆகவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை, தேசிய முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு அடிபணிய வைத்த பிரதம ஸ்ராலினிச தத்துவாசிரியராக மார்ட்டினோவ் இருந்திருப்பது மிகவும் இயல்பானதுதான். இதே மார்ட்டினோவ்தான், 1905ல் இருந்து தனது வரலாற்றுப் பணியை போல்ஷிவிச அங்கத்தவர்களினுள் நிறைவேற்றத் தொடங்கிய ஆண்டான 1923 வரைக்கும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மீதான முக்கிய மென்ஷிவிக் விமர்சகராக இருந்திருந்தார்.

இந்த புத்தகத்தின் முதலாவது அத்தியாயம், இது பிறந்ததன் அவசியத்தின் முக்கியமான உண்மைகளை கூறுகின்றது. அல்மா-ஆட்டாவில் (Alma-Ata) நான் அவசரப்படாமல் இழிபாசாங்கினர்களுக்கு எதிரான தத்துவார்த்த மறுப்பொன்றை எழுதிக் கொண்டிருந்தேன். நிரந்தரப் புரட்சி தத்துவமே இந்தப் புத்தகத்தின் பெரும்பாகத்தை பிடித்துள்ளது. நான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, லெனினினது மூலோபாய நிலைப்பாடு நிரந்தரப்புரட்சிக்கு எதிரானது என்று கூறும், றடெக்கால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியொன்று கிடைக்கப்பெற்றேன். அவர் ஸ்ராலினின் சீனக் கொள்கையிலே தானே தனது மூக்கு மட்டும் மூழ்கியுளளதால் றடெக்கிற்கு இதை எழுத வேண்டிய அவசியம் வந்துவிட்டது. ஏனெனில், கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங்கிற்கு அடிபணிந்து போவதை, சியாங் கேய் சேக்கின் திடீர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முன்பு மாத்திரமல்ல அதன் பின்பும்கூட றடெக் (சினேவியேவுடன் சேர்ந்து) பாதுகாத்தார்.

பாட்டாளி வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணியச்செய்வதற்கான ஒரு காரணத்தை வழங்குவதற்கு, உண்மையாக விவசாயிகளுடன் கூட்டுச் சேரவேண்டுமென்ற அவசியத்தையும், நான் அந்த அவசியத்தை "குறைத்து மதிப்பிடலையும்" றடெக் இயல்பாகவே மேற்கோள் காட்டிக் கூறுகின்றார். ஸ்ராலினினை பின்பற்றி, அவருங்கூட மென்ஷிவிக் கொள்கைகளை போல்ஷிவிக் வசன அடுக்கின் மூலம் பாதுகாக்கின்றார். ஸ்ராலினை பின்பற்றி, பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சூத்திரத்தின் மூலம் சீனப் பாட்டாளி வர்க்கம் விவசாய வெகுஜனங்களிற்கு தலைமை தாங்கி ஆட்சியைக் கைப்பற்ற சுயாதீனமாக போராடுவதை திசை திருப்பியதை மீண்டும் ஒருமுறை பூசி மெழுகிவிட்டார். நான் இந்தத் கருத்தியல் மாறுவேடத்தை அம்பலப்படுத்தியபொழுது, சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான எனது போராட்டமும் கூட உண்மையிலே, நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கும் லெனினிசத்திற்கும் இடையேயுள்ள முரண்பாடே இதுவென்று லெனினது மேற்கோளால் மூடி அவசர அவசரமாக நிரூபித்துக்காட்ட றடெக்கை இட்டுச் சென்றது. தனது சொந்தப் பாவத்தை இல்லையென்று மறுக்கும் வக்கீலாக பேசிக்கொண்டிருந்த றடெக் தனது பேச்சை நிரந்தரப் புரட்சிக்கு எதிராக எரிச்சலடைந்த வழக்குத்தொடுனரின் பேச்சாக மாற்றியுள்ளார். இது அவர் ஸ்ராலினிசத்திற்கு சரணாகதியடைவதற்கு மாத்திரமே பலமாக சேவை செய்தது. நான் சந்தேகப்படுவதற்கு எல்லா ஆதாரமும் உண்டு. ஏனெனில், சில வருடங்களுக்கு முன்பு றடெக் நிரந்தரப் புரட்சியை பாதுகாக்கும் முகமாக, ஒரு குறு நூலை எழுதத்திட்டமிட்டிருந்தார். இப்பொழுதுங்கூட நான் றடெக்கை கை கழுவிவிட அவசரப்படவில்லை. நான் கபடமின்றியும் திட்டவட்டமாகவும் அவரது கட்டுரைக்கு விடையளிக்க முயன்றுள்ளேன். அதே நேரத்தில் அவரது பின்வாங்கும் வழியை தடுத்துவிடாமல், நான் றடெக்குக்கு எழுதிய விடையிறுப்பை உண்மையாகவே அவருக்கு எழுதிய மாதிரியே எனது சில விளக்க குறிப்புகளோடும் எழுத்து நடைத்திருத்தங்களுடனும் பிரசுரிக்கிறேன்.

றடெக்கின் கட்டுரை பத்திரிகையிலே பிரசுரிக்கப்படவில்லை அது பிரசுரிக்கப்பட மாட்டாது என்றே நான் நம்புகிறேன். 1928ல் அது என்ன நோக்கத்தில் எழுதப்பட்டதோ, அதேபோல அது ஸ்ராலினிச தணிக்கை சல்லடையூடாக செல்ல முடியாது. றாடெக்குக்கூட அந்த கட்டுரை இன்று பெரிய ஆபத்தானதாகும். ஏனெனில் அது அவரது கருத்தியல் பரிணாமத்தை தெளிவாகப் படம் பிடித்துக்காட்டும். அது ஆறாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தானே விழுந்த ஒரு மனிதனைப் போல அவரது 'பரிணாமத்தை' கடுமையாக நினைவு கூரும்.

இந்நூல் ஏன் பிறந்தது என்பதை விளக்கும் பகுதி, அதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் இல்லாமல் இருந்தபோதும் கூட றடெக் ஏன் இந்தப் புத்தகத்தில் அதிக இடத்தைப் பிடித்துள்ளார் என்பதை போதுமான அளவிற்கு விளக்கப்படுத்தியுள்ளது. நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிராக றடெக் ஒரு புதிய வாதத்தைக்கூட யோசியாதவர். அவர் இழிபாசாங்கினர்களாகவே முன் வந்துள்ளார். ஆகவே வாசகர்கள் றடெக்கைப் பார்க்கும்பொழுது வெறுமனே றடெக்கை பார்க்காமல், ஒரு குறிப்பிட்ட ரக கூட்டுறவின் பிரதிநிதியை பார்க்க வேண்டும். அதிலே அவர் சேர்ந்து கொள்ளும் தனது அங்கத்துவத்தை, மார்க்சிசத்தை சேறடிப்பதை விலையாக கொடுத்து பெற்றுக் கொண்டார் என்பதை பார்க்கும்படி வாசகர்களுக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. அதிகபட்ச உதை (பரிகாசங்கள்) தன்பங்குக்கு விழுந்துவிட்டதென்று றடெக் தனிப்பட்ட முறையில் உணருகின்றாரோ தெரியாது, அப்படியானால் அவர் தனது சொந்த தீர்மானத்தின்படி எல்லாவற்றையும் அது சேரவேண்டிய முகவரிக்கு திருப்பிவிட வேண்டும். அது அந்த வியாபார ஸ்தாபனத்தின் பிரத்தியேக பிரச்சினை. என் பங்குக்கு நான் அதை ஆட்சேபிக்க மாட்டேன்.

அதிகாரத்திற்கு வந்த அல்லது அதிகாரத்திற்கு வர போராடிய ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் வெவ்வேறு குழுக்கள், நிரந்தரப் புரட்சிக்கு எதிரான தங்களது விமர்சன பயிற்சிகள் மூலம் தங்களுக்குள்ள தலைமை கொடுக்கும் தகைமையை விளக்கிக்காட்டினார்கள். ஆனால் இந்த முழு இலக்கியங்களும் மாஸ்லோவ், தால்கைமர் தொடக்கம் மற்றும் ஏனையோருமே இந்தப் பரிதாப மட்டத்திற்கு ஓர் விமர்சன பதிலுக்கு நொண்டிச் சாக்கைக்கூட சொல்லமுடியாமற் போயிற்று. தால்மான், றெம்லஸ் மற்றும் நியமிக்கப்பட்ட மற்றைய தற்போதைய உயர்பதவி வகிப்பவர்களும் இந்தப் பிரச்சினையை இன்னும் ஒரு படி மதிப்பு குறைந்ததாகவே எடுத்துள்ளனர். இந்த அனைத்து விமர்சகர்களும் அந்தப் பிரச்சினையின் நுழைவாயிலை கூட தங்களால் அடையமுடியாது என்பதை வெறுமனே காட்டுவதிலேயே வெற்றி கண்டார்கள். இந்தக் காரணத்தினால் தான் நான் அவர்களை நுழைவாயிலுக்கு அப்பாலேயே விட்டுவிடுகின்றேன். யாருக்காவது மாஸ்லோவ், தால்கைமர் போன்றவர்களின் தத்துவார்த்த விமர்சனங்களை வாசிக்கும் ஆர்வமிருந்தால் இந்தப் புத்தகத்தை வாசித்த பின்பு, அவர்களது எழுத்துப்பக்கம் திரும்பி அவர்களது எழுத்துக்களிலே எவ்வளவு முட்டாள்தனமும் எவ்வளவு நேர்மையீனமும் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்காகவாவது அவைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். சொல்லப்போனால் இது, நான் வாசகர்களுக்கு அளித்த வேலையின் பக்கவிளைபொருளாகும்.

லி. ட்ரொட்ஸ்கி
பிறிங்கிப்போ

நவம்பர் 30, 1929.

 
 
©World Socialist Web Site
All rights reserved