ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

10

Witnesses to Permanent Revolution: A Significant Contribution to the Study of Marxist Political Strategy1

Witnesses to Permanent Revolution: The Documentary Record edited and translated by Richard B. Day and Daniel Gaido (Brill, 2009)

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: மார்க்கசிச மூலோபாயம் பற்றிய ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு1

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: ஆவணப் பதிவு தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ரிச்சார்ட் பி.டே மற்றும் டானியல் கெய்டோ (பிரில், 2009).

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: ஆவணப் பதிவு என்ற ஆவண நூல் வெளியீடு 1917 அக்டோபர் புரட்சியின் தத்துவார்த்த அடித்தளங்களின் ஆய்வில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த குறிப்பிடத்தக்க தொகுதியில் (677 பக்கங்கள்) வரலாற்றாசிரியர்களான ரிச்சார்ட் பி. டே மற்றும் டானியல் கெய்டோ இருவரும் தொகுத்து, மொழிபெயர்த்து, அறிமுகப்படுத்தியுள்ள ஆவணங்கள் நிரந்தரப் புரட்சி தத்துவம் உருவான கருத்துமோதல்கள் மற்றும் அரசியல் சர்ச்சை குறித்த ஒரு விரிவான மதிப்பாய்வை வழங்குகின்றன. இருபதாம் நூற்றாண்டில் மார்க்சிச தத்துவத்தினதும் மற்றும் புரட்சிகர மூலோபாயத்தினதும் அபிவிருத்தியை புரிந்து கொள்ள விரும்புவோருக்கு இன்றியமையாத ஒரு புத்தகத்தை டே மற்றும் கெய்டோ உருவாக்கியுள்ளனர்.

மிசிசாகாவில் உள்ள டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் பல வருடங்களாக பேராசிரியராக பணியாற்றிவரும் ரிச்சார்ட் டே சோவியத் வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விடயத்தில் ஆழ்ந்த அறிவுடையவராக மதிக்கப்படுபவராவார். லியோன் ட்ரொட்ஸ்கியும் பொருளாதார தனிமைப்படலின் அரசியலும் (1973) என்ற அவரது நூல் சோவியத் ஒன்றியத்தில் 1920களில் நடந்த பொருளாதாரக் கொள்கை மீதான போராட்டத்தின் பின்னமைந்த அதிமுக்கிய தத்துவார்த்த பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முக்கியமான படைப்பாக திகழ்கிறது. இ.எ.பிரெயோபிரசன்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் கருத்துக்கள் குறித்து டே எழுதியவை – அவர் எழுதிய முதலாளித்துவ வீழ்ச்சி என்னும் நூலை மொழிபெயர்த்ததும் (1985) இதில் உள்ளடங்கும் - ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பாளர் அணியில் இருந்த, 1937ம் ஆண்டின் இறுதியில் ஸ்ராலினால் படுகொலை செய்யப்பட்ட அந்த முக்கிய மனிதரை வரலாற்றின் மறக்கடிக்கப்பட்ட ஒரு இடத்தில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டு வந்தது. மார்க்சிச மெய்யியல் உள்ளிட்ட பல்வேறு வகையான விடயங்களில் பேராசிரியர் டே கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இப்போது பிரெயோபிரசன்ஸ்கியின் முன்னர் அறிந்திராத எழுத்துகளின் ஒரு புதிய தொகுப்பை வெளியிடுவதற்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்ஜென்டினாவில் பிறந்த டானியல் கெய்டோ ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக இஸ்ரேலில் கல்விகற்று, வாழ்ந்தவர். பாலஸ்தீனியர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் அவர் செயலூக்கத்துடன் பங்குபெற்றிருந்தார். கெய்டோ சமீபத்தில் அர்ஜென்டினா திரும்பி விட்டார். அவர் வெளியிட்டிருக்கும் படைப்புகளில் அமெரிக்க முதலாளித்துவத்தின் உருவாக்க காலம்: ஒரு சடவாத விளக்கம் (2006) என்ற நூலும் அடங்கும். அமெரிக்க வரலாறு மட்டுமே அவரது ஆராய்ச்சி விடயம் அல்ல. ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் வரலாறு குறித்தும் கெய்டோ விரிவாக எழுதியுள்ளார், அத்துடன் இரண்டாம் அகிலத்தின் காலகட்டத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் வரலாறு குறித்தும் இப்போது தயாரிப்பு செய்து வருகிறார்.

நிரந்தரப் புரட்சி தத்துவம் உருவாவதற்கு அடித்தளமாக இருந்த விவாதத்தின் ஆழப்பதியத்தக்க புத்திஜீவித்தன விரிவெல்லையை மீண்டும் கட்டியெழுப்புவதே நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் நூலின் முக்கிய நோக்கம். அத்தத்துவத்தின் விரிவாக்கத்திலும், இன்னும் முக்கியமாக, ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் அதன் மூலோபாய மற்றும் நடைமுறைப் பயன்பாட்டிலும், ட்ரொட்ஸ்கி ஆற்றிய தீர்மானமான பாத்திரத்தை மறுக்கவில்லை என்றபோதிலும், பிரான்ஸ் மேஹ்ரிங், ரோசா லுக்செம்பேர்க், அலெக்சாண்டர் ஹெல்ப்ஹாண்ட் (பார்வஸ்), கார்ல் காவுட்ஸ்கி, மற்றும் அதிகம் அறியப்பட்டிராத டேவிட் ரியாசனோவ் போன்ற மற்ற முக்கிய சோசலிச சிந்தனையாளர்கள் ஆற்றிய பங்களிப்பு குறித்து வாசகருக்கு பரிச்சயம் செய்ய டேயும் கெய்டோவும் விழைகின்றனர். தன் மீது தீவிரமாகவும் தனிப்பட்ட வகையிலும் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு தத்துவத்தின் மூலங்கள் குறித்த ஒரு விரிவான மதிப்பிடலுக்கு ட்ரொட்ஸ்கி நிச்சயம் ஆட்சேபித்திருக்கப் போவதில்லை.

1923ம் ஆண்டில் அரசியல் குழுவின் சினோவியேவ், காமனேவ் மற்றும் ஸ்ராலின் ஆகிய மூவர் குழு ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஆரம்பித்த கன்னை-மோதல் தாக்குதல்கள் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிரான பிரச்சாரமாக துரிதமாய் அபிவிருத்தியுற்றது. ட்ரொட்ஸ்கியின் தனிநபர் தவறுகளாகவும், அரசியல் பிழைகளாகவும் குறைகூறப்பட்டவை, அவரது “விவசாயிகள் பற்றிய குறைமதிப்பீடு” மற்றும் அவரில் உள்ளூறியிருந்த “போல்ஷிவிச எதிர்ப்பு” எல்லாவற்றிற்கும் இந்த மிக ஆபத்தான தத்துவமே மூலமாக இருந்ததாக திரும்பத் திரும்ப பிரகடனம் செய்யப்பட்டது. 1917ம் ஆண்டில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே, முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் மென்ஷிவிக் கூட்டணியினருக்கு எதிரான போல்ஷிவிக் கட்சியின் போராட்டத்திற்கு மூலோபாய அடித்தளத்தை நிரந்தரப் புரட்சி தத்துவம் வழங்கியது. ஆனால், ஆறே வருட காலத்திற்குப் பின்னர், அத்தத்துவம் மார்க்சிசக் கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்ற ஒன்றாக கண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தனது சொந்த கருத்துகளை திரிப்பதோடு மட்டுமல்லாமல் சோசலிச தத்துவத்தின் வரலாற்றையும் பொய்மைப்படுத்துவதை கண்ட ட்ரொட்ஸ்கி வெளிப்படையான கோபத்துடன் எழுதினார்:

நிரந்தரப் புரட்சி என்ற வார்த்தைப்பிரயோகம் மார்க்சினுடையதாகும். இதனை அவர் 1848ம் ஆண்டு புரட்சிக்கு பயன்படுத்தினார். மார்க்சிச இலக்கியத்தில், அதாவது திருத்தல்வாத மார்க்சிச இலக்கியத்தில் அல்லாது புரட்சிகர மார்க்சிச இலக்கியத்தில் இந்த வார்த்தைக்கு எப்போதுமே சிறப்பு இடம் இருந்து வந்திருக்கிறது. பிரான்ஸ் மேஹ்ரிங் 1905-07 புரட்சிக்கு இந்த வார்த்தையை பயன்படுத்தினார். சரியான மொழிபெயர்ப்பில், நிரந்தரப் புரட்சி என்றால் தொடர்ச்சியான புரட்சி, தடைப்படாத புரட்சி என்று அர்த்தமாகும்.2

மார்க்ஸ், ஏங்கெல்சும்நிரந்தரப் புரட்சியும்

நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மார்க்சிச பாரம்பரியம் குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை டேயும் கெய்டொவும் உறுதிப்படுத்துகின்றனர். அரசானது மதத்தை இல்லாதொழித்தலை சாதிக்க வேண்டுமாயின் “அதன் சொந்த வாழ்க்கை நிலைமைகளுடன் மோதல்மிக்க முரண்பாட்டிற்கு வருவதன் மூலம் மட்டுமே, புரட்சியை நிரந்தரமானதாக அறிவிப்பதன் மூலம் மட்டுமே” முடியும் என்று யூதப் பிரச்சினை மீதான கட்டுரையில் மார்க்ஸ் 1843ம் ஆண்டு வாக்கிலேயே எழுதியிருந்தார் என்பதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.3 இன்னும் குறிப்பிடத்தகுந்த வகையில் 1850 மார்ச்சில் ”கழகத்தின் மத்திய அதிகாரக் குழுவிற்கான” உரையில் மார்க்சும் ஏங்கெல்சும் ஜனநாயக குட்டி முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக பின்வருமாறு கூறினர்:

அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சொத்துடைமை கொண்ட அத்தனை வர்க்கங்களும் அவற்றின் ஆளும் நிலைகளில் இருந்து துரத்தப்படும் வரை, அத்துடன் ஒரு நாட்டில் மட்டுமல்லாது உலகின் அத்தனை முன்னணி நாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி போதியளவு முன்னேறி, அத்துடன் இந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கத்திடையே போட்டியுணர்வு மறைந்து, குறைந்தபட்சம் உற்பத்தியின் தீர்மானகரமான சக்திகளாவது தொழிலாளர்களின் கைகளில் இருக்கிறது என்ற மட்டத்தினை எட்டுகின்றவரை, புரட்சியை நிரந்தரமாக்குவது தொழிலாளர்களின் கடமையாக இருக்கிறது. நமது அக்கறை வெறுமனே தனியார் உடைமையில் திருத்தம் செய்வதாய் இருக்கக் கூடாது, மாறாக அதனை இல்லாதொழிப்பதாக இருக்க வேண்டும், வர்க்க முரண்பாடுகள் பற்றி பூசிமறைக்காமல் வர்க்கங்களை இல்லாதொழிப்பதாக இருக்க வேண்டும், நடப்பு சமூகத்தை மேம்படுத்துவதாக இருக்கக் கூடாது மாறாக ஒரு புதிய சமூகத்தை கண்டறிவதாக இருக்க வேண்டும். 4

புரட்சியின் நிரந்தரம் குறித்த கருத்தாக்கம் 1848ம் ஆண்டில் ஐரோப்பாவெங்கும் வீசிய வர்க்கப் போராட்ட அலையின் அனுபவத்தில் இருந்து அபிவிருத்தி செய்யப்பட்டதாகும். பிரான்சில் ஜனநாயக குட்டி பூர்சுவாக்களின் மிகத் தீவிரமுற்ற பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜாகோபின்கள், புரட்சிகர தீவிரவாதத்தின் உதவியுடன், பழைய பிரபுத்துவ ஆட்சியை சிதறடித்து ஒரு பூர்சுவா அரசை ஸ்தாபிப்பதற்கான அடித்தளத்தை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலம்தான் கடந்திருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பாவின் சமூக கட்டமைப்பு மிகவும் சிக்கலானதாக மாறியிருந்தது. பூர்சுவாக்களுக்கும் பழைய பிரபுத்துவ உயரடுக்கிற்கும் இடையில் நடந்து வந்த அரசியல் மோதலின் தன்மையும் மற்றும் அரசியல் தாக்கங்களும் ஒரு புதிய சமூக சக்தியாக எழுந்திருந்த உடைமையற்ற வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் மேலெழுச்சியால் மாற்றம் கண்டிருந்தன. பழைய பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு பரந்துபட்ட எழுச்சியினுள் புதிய பாட்டாளி வர்க்க வெகுஜனங்களும் உள்ளிழுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், நிலமானியத்துவ தனிச்சிறப்புரிமையின் எச்சசொச்சங்களுக்கு எதிராக மட்டுமல்லாது முதலாளித்துவ சொத்துடமைக்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடிய பரிமாணங்களை அந்த எழுச்சி எடுத்துவிடக்கூடும் என முதலாளித்துவத்தினர் அச்சம்கொண்டனர்.

இவ்வாறாக 1848 போராட்டங்களிலும் அதன் உடனடிப் பிந்தைய காலங்களிலும், பூர்சுவாசி தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் புரட்சிகரப் போராட்டத்தை அடக்கி வைக்க முயன்றது. முன்னாளில் புரட்சியின் மையமாகத் திகழ்ந்ததும் ஐரோப்பிய அரசுகளில் அரசியல்ரீதியாக மிகவும் முன்னேறியதாய் இருந்ததுமான பிரான்சில் 1848 ஜூனில் தளபதி கவாய்னாக் (General Cavaignac) தலைமையின் கீழான இராணுவப் படை மூலம் பாரிஸ் பாட்டாளி வர்க்கத்தினர் படுகொலை செய்யப்பட்டதில் புதிய வர்க்க உறவுகள் மிருகத்தனமான வெளிப்பாட்டைக் கண்டன. பிரான்சின் எல்லைகளுக்கு வெளியே பழைய பிரபுத்துவத்தினருடன் சமரசம் செய்து கொள்வதற்கு பூர்சுவாக்கள் விருப்பமுடையவர்களாய் இருந்தனர். ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கையை கைவிடுவது மற்றும் அரசில் பிரபுத்துவத்தின் ஆதிக்கத்தை தொடர ஒப்புக்கொள்வது என்ற மட்டத்திற்கும் கூட இது விரிந்து சென்றிருந்தது. இதுதான் ஜேர்மன் புரட்சியின் தலைவிதியானது, அதில் வெகுஜனக் கிளர்ச்சிகளாலும் “கம்யூனிசப் பூதத்தாலும்'' அதிர்ச்சியடைந்து போன ஜேர்மன் முதலாளித்துவம் பிரஷ்ய பிரபுத்துவத்திடம் அரசியல்ரீதியாக சரணாகதியடைந்தது.

ஒவ்வொரு அதிமுக்கிய தருணத்திலும் தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் நம்பத்தகாத கூட்டாளியாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கும் “இடது” குட்டி முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள்தான் முதலாளித்துவம் தன் “சொந்த” முதலாளித்துவ புரட்சியைக் காட்டிக் கொடுத்ததற்கு வசதி செய்து தந்தவர்களாய் இருந்தார்கள். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் “மத்திய அதிகாரக் குழுவிற்கான உரையில்” விளக்கியவாறாக:

ஜனநாயக குட்டி முதலாளித்துவமானது, சமூகம் மொத்தத்தையும் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்திற்கானதாய் மாற்ற விரும்புவதெற்கெல்லாம் வெகுஅப்பால், நடப்பு சமூகத்தை சாத்தியமான மட்டத்திற்கு தங்களுக்கு சகித்துக்கொள்ளக் கூடியதாகவும் வசதியானதாகவும் ஆக்குகின்ற வகையில் சமூக நிலைமைகளில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முனைகின்றது.”5

தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களும் நலன்களும் மட்டுப்படுத்தப்படுவதையோ காட்டிக் கொடுக்கப்படுவதையோ அனுமதிக்கக் கூடாது என்று மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் முடிவிற்கு வந்தனர். அதற்குப் பதிலாய் தொழிலாளர்கள்,

தங்களது வர்க்க நலன்கள் என்ன என்பதில் தங்களை தெளிவுபடுத்திக் கொள்வதன் மூலமும், எவ்வளவு விரைவாய் முடியுமோ அவ்வளவு விரைவாய் தங்களது நிலையை ஒரு சுயாதீனமான கட்சியாக அமைத்துக்கொள்வதன் மூலமும், மற்றும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் சுயாதீனமான அமைப்பாவதில் இருந்து பின்வாங்கச் செய்கின்ற ஜனநாயக குட்டி முதலாளித்துவ கபடநாடக வார்த்தைகளால் தவறாக வழிநடத்தப்பட ஒரு கணமும் கூட தங்களை அனுமதிக்காதிருப்பதன் மூலமும் தங்கள் இறுதி வெற்றிக்கு அவசியமான அனைத்தையும் செய்ய வேண்டும். ”நிரந்தரமான புரட்சி” என்பதே அவர்களது யுத்த முழக்கமாக இருந்தாக வேண்டும்.6

ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர், அதாவது இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், இதே யுத்த முழக்கத்தின் அரசியல் முக்கியத்துவமும் தாக்கங்களும்தான் துரிதமாய் வளர்ந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய சோசலிச இயக்கத்திற்குள்ளாக தீவிரமான விவாதப் பொருளாக ஆகவிருந்தது. எந்த சமரசத்திற்கும் இடமின்றி நாடு, 300 ஆண்டு கால எதேச்சாதிகார ஆட்சியை தூக்கியெறியும் ஒரு ஜனநாயகப் புரட்சியை நோக்கி போய்க் கொண்டிருந்தது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. ஆனால் அந்தப் பொதுவான முதற்கோளை தாண்டி, வர்க்க இயக்கவியல் குறித்தும், அரசியல் நோக்கங்கள் குறித்தும் மற்றும் இறுதியாக புரட்சிகர இயக்கத்தின் சமூக-பொருளாதார பின்விளைவுகள் குறித்துமான விடயங்களில் கூர்மையான வேறுபாடுகள் கொண்ட கண்ணோட்டங்கள் அபிவிருத்தியுற்றன. 1789-1794 இன் ”செவ்வியல்” பிரெஞ்சுப் புரட்சியில் நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிந்த பின் அது கடைசியாக முதலாளித்துவ பொருளாதார உறவுகளில் வேரூன்றிய முதலாளித்துவ அரசியல் ஆட்சிக்கு இட்டுச் சென்றதே, அந்தப் பாதையை ரஷ்ய புரட்சி பின்பற்றவிருக்கிறதா? அல்லது அதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கும் பின்னர் பரந்த அளவில் மாறுபட்ட சமூக-பொருளாதார நிலைமைகளின் கீழ் ரஷ்யாவில் அபிவிருத்தி கண்டிருக்கக் கூடிய ஜனநாயகப் புரட்சியானது அவசியமாக ஒரு ஆழமாய் வேறுபட்ட வடிவத்தை எடுக்கவிருந்ததா? 1790ம் ஆண்டின் பிரான்சைப் போல 1900ம் ஆண்டின் ரஷ்யாவில் ஒரு புரட்சிகர பூர்சுவாசி இருந்ததா? எதேச்சாதிகாரத்திற்கு எதிராக ஒரு புரட்சிகரப் போராட்டத்தை நடத்துவதற்கோ, அல்லது ஆதரிப்பதற்கோ கூட ரஷ்ய பூர்சுவாசி உண்மையாகவே தயாராய் இருந்ததா?

எல்லாவற்றிற்கும் மேல், ரஷ்யா இருபதாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்த நேரத்தில் அங்கு மிகவும் செயலூக்கமும் இயக்கமும் மிகுந்த சமூக சக்தியாக தொழிற்துறை தொழிலாள வர்க்கம்தான் இருந்தது என்ற உண்மை, ஜனநாயகப் புரட்சியின் அபிவிருத்தியை எவ்வாறு பாதிக்கவிருந்தது? அந்நிய மூலதனத்தின் பாய்ச்சலால் ரஷ்யாவில் பெருமளவிலான தொழில்மயமாக்கத்திற்கு நிதியாதாரம் கிட்டிய நிலையில் துரிதமாய் பெருகிக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் தீவிரமான சக்தி ஏற்கனவே 1890களின் வேலைநிறுத்தத்தில் வெளிப்பட்டிருந்தது. ஜனநாயகப் புரட்சியில் தொழிற்துறை பாட்டாளி வர்க்கம் ஆற்றப் போகும் பாத்திரம் என்ன? எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவதில் அதன் வலிமை தீர்மானகரமாய் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அப்படியிருந்தும் தொழிலாள வர்க்கம் தனது வர்க்க எதிரியான ரஷ்ய முதலாளித்துவத்திற்கு அரசியல் அதிகாரம் கைமாற்றப்படுவதை ஏற்றுக் கொள்ளப் போகிறதா? இல்லையெனில் தொழிலாளர்கள் 'பாரம்பரிய' ஜனநாயகப் புரட்சியின் வரம்புகளைக் கடந்து முன்னேறி, அதிகாரத்தை தங்களது சொந்தக் கரங்களில் எடுத்துக் கொண்டு, முதலாளித்துவ சொத்துடைமையின் புனிதத்தை மீறும், தொலைதூர விளைவுகளைக் கொண்ட சமுதாய பொருளாதார மறுகட்டமைப்பை பொறுப்பெடுப்பார்களா?

இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டமையானது, நிரந்தரப் புரட்சி குறித்த மார்க்ஸ்-ஏங்கெல்ஸின் கருத்தாக்கத்தை ஒரு மறுபரிசீலிப்புக்கும் மேலும் விரிவுபடுத்தலுக்கும் இட்டுச் சென்றது. இந்த தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் 1903 மற்றும் 1907 ஆம் ஆண்டுக்கு இடையே ரஷ்ய மற்றும் ஜேர்மன் சோசலிச இயக்கத்தில் நிகழ்ந்திருந்த விவாதத்தின் புத்திஜீவித்தன ஆழத்திற்கு சாட்சியமளிக்கின்றன. எதேச்சதிகாரத்தின் அரசியல் நெருக்கடி ஆழமுற்றிருந்த ஒரு பின்புலத்தில், ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது முதலாக அதற்கு வழிகாட்டி வந்திருந்த அரசியல் முன்னோக்கின் மீது அதிருப்தி பெருகிக் கொண்டிருந்தது. ஜாரைத் தூக்கியெறிந்த பின் தவிர்க்கவியலாமலும் அவசியமாகவும் அரசியல் அதிகாரம் ரஷ்ய முதலாளித்துவத்தின் கைகளில் சென்று சேர்வதை தயாராய் ஏற்றுக் கொள்கின்ற ஜனநாயகப் புரட்சி குறித்த ஒரு கருத்தாக்கத்திற்கு தத்துவார்த்த மற்றும் அரசியல் ஆட்சேபங்கள் தோன்றின.

பிளெக்ஹானோவின் பங்களிப்பு

இந்த முன்னோக்கானது முதன்மையாக “ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை” என்று அழைக்கப்பட்ட ஜி.வி.பிளெக்ஹானோவின் பணியுடன் அடையாளம் காணப்பட்டது. ஜாரிசத்திற்கு எதிரான போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் தாராளவாத முதலாளித்துவத்துடன் கூட்டு சேர்ந்திருக்க வேண்டும் என்ற நிலையையே பிளெக்ஹானோவ் பராமரித்து வந்தார். எதேச்சதிகாரம் தூக்கியெறியப்பட்டதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஒரு ரஷ்ய வடிவம் ஸ்தாபிக்கப்படும். தொழிலாள வர்க்கத்தின் கட்சி ரஷ்ய நாடாளுமன்றத்தில் சோசலிச எதிர்ப்பாளர்களாக நுழைந்து தாராளவாத ஜனநாயக ஆட்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடது நோக்கிச் செலுத்தத் தலைப்படும். ஆனால் நாடு முதலாளித்துவ அடிப்படையில் காலவரையற்ற காலத்திற்கு தொடர்ந்து அபிவிருத்தியடையும். இறுதியாக, ஆனால் ரஷ்யா அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் போதுமான அளவு சோசலிசத்திற்கான முதிர்ச்சியைப் பெறுவது எப்போது என்பது துல்லியமாக ஒருவருக்கும் தெரியாது. அந்தப் புள்ளியில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறிவதை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும்.

எந்த சூத்திரத்தை வரலாறு ஏற்கனவே கடந்துசென்றுவிட்டிருந்ததோ அந்தவொரு சூத்திரத்தைக் கொண்டு ஜனநாயக புரட்சியின் தன்மைக்கும் அதன் பணிகளுக்கும் பொருள்விளக்கம் கொடுக்க முனைந்ததுதான் இந்த முன்னோக்கின் மையமான பிரச்சினையாக இருந்தது. உண்மையில் 1889ம் ஆண்டளவிலேயே, ரஷ்யாவில் ஜனநாயக புரட்சியானது ஒரு தொழிலாளர்கள் புரட்சியாக மட்டுமே வெற்றிபெற முடியும் என்று பிளெக்ஹானோவ் வலியுறுத்தியிருந்தார். பிளெக்ஹானோவ் தொடர்ந்து வலியுறுத்தியபடி எதேச்சாதிகாரத்தை தூக்கியெறிவதில் தொழிலாள வர்க்கம்தான் தீர்மானகரமான சக்தியாக இருக்கப் போகிறது என்றால், பின் எதற்காக அரசியல் அதிகாரம் அவசியமாக தாராளவாத முதலாளித்துவத்தின் கைகளில் சென்று சேர வேண்டும்? இத்தகைய கேள்விகள் எழாமல் இருக்கச் செய்யும் முயற்சியில் பிளெக்ஹானோவ் முன்வைக்க முடிந்த ஒரே பதில் என்னவென்றால், தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொள்வதையும் சோசலிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவதையும் அனுமதிக்கும் மட்டத்திற்கு ரஷ்ய பொருளாதார அபிவிருத்தி போதுமான அளவில் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதுதான்.

காவுட்ஸ்கியின் பங்களிப்பு

முக்கியமாய், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் வழமையான மாதிரியில் எதிர்பார்க்கக்கூடிய ஒரு பாதையில் இருந்து, மிக வேறுபட்ட பாதையில் ரஷ்ய அபிவிருத்தி நடக்கக் கூடும் என்று தெரிவித்த முதல் முக்கிய தத்துவவியலாளர் கார்ல் காவுட்ஸ்கி ஆவார். 1902 மற்றும் 1907ம் ஆண்டுகளுக்கு இடையே காவுட்ஸ்கி தொடர்ச்சியாக பல ஆவணங்களை எழுதினார். அவை இந்த தொகுதியில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இவை பிளெக்ஹானோவின் தத்துவ முன்னோக்கின் அதிகாரத்தை கடுமையாய் கீழறுத்தன; காலங்கடந்துவிட்டிருந்த முன்மாதிரி நிகழ்வுகளை நோக்கி ஒரு விமர்சனப் பார்வையை அபிவிருத்தி செய்ய பங்களிப்பு செய்தன. அத்துடன் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ரோசா லுக்செம்பேர்க் உள்ளிட்ட ரஷ்ய மற்றும் போலந்து சமூக ஜனநாயக தத்துவவியலாளர்களின் ஒரு இளம் தலைமுறையின் திருப்பு முனையான வேலைகளுக்கு ஊக்கமளித்தன.

1902ம் ஆண்டில் "ஸ்லாவியர்களும் புரட்சியும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், ஜாரிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய பூர்சுவாசி ஒரு புரட்சிகர பாத்திரத்தை ஏற்கும் என்ற அனுமானத்தின் மீது காவுட்ஸ்கி கேள்வி எழுப்பினார். முந்தைய ஜனநாயகப் புரட்சிகளின் சகாப்தத்திற்குப் பின்னர் வர்க்க உறவுகளிடையேயான இயக்கவியல் ஆழமாய் மாற்றம் கண்டிருந்தது. காவுட்ஸ்கி எழுதினார்: "1870ம் ஆண்டிற்கு பின்னர் அனைத்து நாடுகளின் பூர்சுவாக்களும் புரட்சிகர இலட்சியத்தில் எஞ்சியிருந்த மிச்சசொச்சங்களையும் இழக்கத் தொடங்கி விட்டனர். அச்சமயம் தொடங்கி, புரட்சிகரவாதியாக இருக்க வேண்டுமென்றால் சோசலிஸ்டாகவும் இருந்தாக வேண்டும் என அர்த்தப்படுகின்றது."7

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எந்த மட்டத்திற்கு காலாவதியாகி இருக்கிறது?" என்று ஆத்திரமூட்டும் தொனியிலான தலைப்பில் எழுதப்பட்ட இன்னொரு கட்டுரையில் (1903ம் ஆண்டில் முதலில் எழுதப்பட்ட இக்கட்டுரை 1906ல் திருத்தப்பட்டது) காவுட்ஸ்கி கூறினார்:

அறிக்கையில் ஒரு “பிழை” இருக்கிறது என்று கூறி அதன் மீது விமர்சனம் அவசியமாய் இருக்கிறது என்று நாம் கருதுவோமேயானால், அந்த விமர்சனம் அரசியல் வார்த்தைகளில் பூர்சுவாசி புரட்சிகரமானது என்று உரைக்கப்படுகின்ற 'உறுதிக்கோட்பாட்டில்' இருந்து சரியாகத் தொடங்கியாக வேண்டும். கடந்த ஐம்பது வருடங்களில் புரட்சி என்பது பரிணாம வளர்ச்சியால் இடம்பெயர்க்கப்பட்டிருப்பதே புரட்சிகர பூர்சுவாசி இனியும் இருக்கவில்லை என்ற உண்மையில் இருந்து எழுகிறது."8

முதலாம் உலகப் போருக்கு முன்னதாக நிரந்தப் புரட்சி முன்னோக்கை அபிவிருத்தி செய்வதில் காவுட்ஸ்கி ஆற்றிய தீவிரமான பாத்திரத்தை உண்மையான வரலாற்று பதிவுகளைக் கொண்டு நினைவுகூர்ந்தது, டே-கெய்டோ தொகுப்பு நூலின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாய் திகழ்கிறது. ரஷ்ய புரட்சி குறித்த காவுட்ஸ்கியின் எழுத்துக்களை வெளியிடுவது அவரை "உள்அமைதிவாதத்தின் தூதராகவும் புரட்சிகர வார்த்தைஜாலத்தில் தோய்ந்த ஒரு சீர்திருத்தவாதி" யாகவும் பார்க்கும் வழக்கமான தவறான பார்வையை வெல்வதற்கு உதவும் என்று டே மற்றும் கெய்டோ நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.9 அவர்கள் மேலும் கூறுகின்றனர்:

1917க்கு பின்னரான காவுட்ஸ்கியின் போல்ஷிவிச விரோத விவாதவியலில் இருந்து எடுக்கப்பட்ட மிதமிஞ்சிப் பொதுமைப்படுத்தப்பட்டதான இந்த பார்வை முதன்முதலில் தீவிர இடது மெய்யியல் அறிஞரான கார்ல் கோர்ஸ்ச் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டது. காவுட்ஸ்கியின் சடவியல்ரீதியான வரலாற்றுப் பார்வை (Die materialistische Geschichtsauffassung-1927) என்ற படைப்பிற்கான தனது பதிலில் கோர்ஸ்ச் இதனை அபிவிருத்தி செய்தார். எரிக் மத்தியாஸ் எழுதிய காவுட்ஸ்கியும் காவுட்ஸ்கியவாதமும் என்னும் நூல் வெளியான பின்னர் கல்வியறிஞர்கள் மத்தியில் இக்கருத்து ஸ்தாபகம் பெற்றது. லெனின் அல்லது ட்ரொட்ஸ்கி பகிர்ந்து கொண்டிராத —இவர்கள் இருவரும் காவுட்ஸ்கியின் புரட்சிகர கால எழுத்துகளை கம்யூனிச தொழிலாளர்களுக்கு எப்போதும் பரிந்துரைத்து வந்திருக்கின்றனர்— இந்தக் கருத்தை மறுப்பதற்கு காவுட்ஸ்கியின் பிரதான வாழ்க்கைச்சரித ஆசிரியரான மாரெக் வால்டென்பேர்க் ஏராளமான விடயங்களை வழங்கினார்.10

லெனினும் ட்ரொட்ஸ்கியும் வலியுறுத்தியது போல, காவுட்ஸ்கி பின்னாளில் சோசலிசத்தை காட்டிக் கொடுத்தது அவரது சொந்த எழுத்துகளையே மறுதலிப்பதாய் அமைந்த ஒன்றாகும். "ஒரு காலத்தில் காவுட்ஸ்கி எப்படி எழுதினார்" என்று லெனின் குறிப்பிடுகையில், தனது ஆசிரியராய் திகழ்ந்த மனிதரின் அரசியல் மற்றும் புத்திஜீவித்தன நிலைக்குலைவைக் கண்டு ஆழமான அதிருப்தியும் கோபமும் அதில் வெளிப்படுகிறது. 1914 ஆகஸ்டில் காவுட்ஸ்கியின் காட்டிக் கொடுப்பானது புரட்சிகரவாதிகளின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறைக்கும் ஏன் அதிர்ச்சியளிப்பதாய் அமைந்தது என்பதை இத்தொகுதி தெளிவாக்குகிறது. இத்தொகுதி காவுட்ஸ்கியின் புரட்சிகர எழுத்துகளில் உண்மையிலேயே மிக அற்புதமான பல பத்திகளைக் கொண்டிருப்பதால், இரண்டாம் அகிலத்தின் "மார்க்சிச ஆண்டகையாக (போப்)" திகழ்ந்தவர் குறிப்பிடத்தக்க நுண்புல அறிவு மிக்கவராக, தொலை நோக்கில் சிந்திக்கத்தக்கவராக, கடுமையான தர்க்கவாதியாக இருந்தார் என்பதை வெளிப்படுத்துகின்ற மேற்கோள்களைக் கொண்டு இந்த திறனாய்விற்கு மேலும் சுமைகூட்டும் எண்ணத்தைத் தவிர்ப்பது கடினமான ஒன்றாகவே இருக்கிறது. திரும்பிப் பார்த்தால் காவுட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்ட சில கருத்தாக்கங்களில் அரசியல் பலவீனங்களை நாம் கண்டறிவது (நாம் பின்னால் குறிப்பிடவிருக்கிறோம்) சாத்தியமே. குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கும் அரசுக்கும் இடையில் ஒரு நேரடியான மோதலின் தாக்கங்கள் குறித்து அவர் எழுதியபோது. ஆனால், காவுட்ஸ்கி என்பவர் ஏதோ ஏனோதானோ ஞாபக மறதி பேராசிரியர், வரலாற்று அவசியத்தால் வழங்கப்படும் ஒரு பரிசு போல் புரட்சி வந்து சேரும்வரை சாவகாசமாக காத்திருப்பவர் என்பது போன்று வழக்கமாகக் காட்டப்படும் அவரது பிம்பத்திற்கும் அந்த உண்மையான மனிதருக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் பெரும் சக்தியுடன் எழுந்து நிற்கிறது. பல ஏட்டறிவு விமர்சகர்கள் எதனை அவரது கையிருப்பாக சித்தரித்தார்களோ ‘அரசியல் விதிவசவாதம்’ என்ற அதே விடயத்திற்கு எதிராக காவுட்ஸ்கி 1904 பிப்ரவரியில் வெளியான "புரட்சிகரப் பிரச்சினைகள்" என்ற தலைப்பிலான கட்டுரையில் வாதிடுகிறார்:

சமூகத்தின் நலனுக்கு அத்தியாவசியமாக இருக்கும்போதெல்லாம் புரட்சியை எப்பொழுதுமே வெற்றிக்கு அழைத்துச் சென்று விடுகின்ற வகையில் மிகுந்த காரணநோக்கத்துடன் எல்லாம் இந்த உலகம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியின் அவசியம் குறித்தும் மற்றும் அதனை தொடர்ந்து வரக்கூடிய சோசலிசத்தின் அவசியம் குறித்தும் நாம் பேசுகையில், வெற்றி தவிர்க்கவியலாதது என்றோ, அல்லது நமது விமர்சகர்கள் பலரும் நினைப்பது போல, அது தன்னியல்பாகவும் இன்னும் புரட்சிகர வர்க்கம் செயலற்று இருந்தால் கூட விதிவச நிச்சயத்துடன் நடந்தேறும் என்றோ நாம் கருதவில்லை. புரட்சி மட்டுமே முன்னோக்கிய அபிவிருத்திக்கான ஒரே சாத்தியமாக இருக்கிறது என்ற பொருளில்தான் அவசியம் என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது எதிரிகளைத் தோற்கடிப்பதில் வெற்றி காணவியலாமல் போகும்போது, சமூகம் அதற்கு மேல் முன்னேறிச் செல்ல முடியாது, தேங்கி நிற்க வேண்டும் அல்லது அழுகத்தொடங்க வேண்டும். 11

"பிரெஞ்சுப் புரட்சியின் சான்-குலோட்டுகள்” என்ற இன்னொரு கட்டுரையில் புரட்சிகர வன்முறை குறித்த ஒரு உண்மையான புகழுரை இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் 1889ல் எழுதப்பட்ட இக்கட்டுரை 1905ம் ஆண்டில் மறுவெளியீடு செய்யப்பட்டது. காவுட்ஸ்கியின் கூற்றுப்படி, ஜாக்கோபின் ஆட்சியின் பயங்கரவாதம் “உள்ளே இருக்கும் கபட எதிரியை மிரளச் செய்வதற்கும் நடுங்கச் செய்வதற்கும் ஒரு போர் என்ற ஆயுதத்தை விட அதிகமான ஒன்றாய் இருந்தது. அத்துடன் புரட்சியின் காப்பாளர்கள் வெளிப்புற எதிரிகளுக்கு எதிராக தங்களது போராட்டத்தை தொடர்வதற்கு அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கும் இது சேவை செய்தது.”12

1905 புரட்சியின் தாக்கம்

அப்படியானால் ஒரு திருத்த முடியாத “கொச்சை” சடவாதியாக காவுட்ஸ்கி அரசியலில் அகநிலைக் கூறின் பாத்திரம் குறித்து எந்தவிதமான உணர்வும் இல்லாதிருந்தார் என்று கூறப்படுவது பற்றி என்ன சொல்வது? வெகுஜன நடவடிக்கைக்கு தூண்டும் சக்திகள் குறித்த அவரது கருத்தாக்கம் வறண்ட தனிநபர் சாராத பொருளாதாரத் துடிப்புகளை மட்டுமே அங்கீகரித்தது என்றும், உணர்ச்சிகளும் இலட்சியங்களும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கையில் எந்த முக்கியத்துவமான பாத்திரத்தையும் ஆற்றியதை அவர் ஒப்புக்கொள்ள தவறினார் என்றும் கூறப்படுவது பற்றி? காவுட்ஸ்கி குறித்த இந்த வழக்கமான விவரணத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்கள், அமெரிக்கத் தொழிலாளர்கள் இடையே “புரட்சிகர கவர்ச்சிவாதம்” இல்லாதிருப்பதும் அங்கு புத்திஜீவிகள் இடையே “ஆன்மாவின் மிக நேர்மையற்ற முதலாளித்துவம்” பரவலாய் நிறைந்திருப்பதும்தான் அமெரிக்காவில் சோசலிசத்தின் பலவீனத்திற்கான முக்கியமான காரணிகளாக இருப்பதாய் அவர் கருதினார் என்பதை அறியும்போது மிகவும் ஆச்சரியம் கொள்வார்கள்.13

இந்த படைப்புத்திரட்டு தெளிவாக்குவது போல, ரஷ்ய விடயங்களில் காவுட்ஸ்கி செயலூக்கத்துடன் ஈடுபட்டதன் காரணம் வெறுமனே, ஜார் தலைமையேற்றிருந்த ஒரு மூர்க்கத்தனமான பிற்போக்குவாத போலிஸ் அரசுக்கு எதிராக வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டு இரத்தத்தை வியர்வையாய் சிந்திக் கொண்டிருந்த தனது இளம் தோழர்களுக்கு ஒரு நல்லுள்ளம் படைத்த மூத்தவர் பேணும் அக்கறையின் வெளிப்பாடு மட்டுமன்று. ரஷ்ய நிகழ்வுகள், குறிப்பாக ரஷ்ய-ஜப்பான் போர் மற்றும் 1905 புரட்சி வெடித்ததன் பிந்தைய விளைவுகள், ஜேர்மனியில் சோசலிச இயக்கத்தின் தலைவிதிக்கு அதிமுக்கியமானவையாக காவுட்ஸ்கியாலும் அப்போது அவரது நெருங்கிய கூட்டாளியான ரோசா லுக்செம்பேர்க்காலும் நோக்கப்பட்டன.

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிப்பதில் தொழிற்சங்கங்களின் அதிகாரம் பெருகிக் கொண்டிருந்ததை கண்டு ரோசா லுக்செம்பேர்க் போலவே காவுட்ஸ்கியும் ஆழமாய் கவலையுற்றார். 1903 செப்டம்பரில் டிரேஸ்டன் நகர கட்சி காங்கிரசில் எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்தை மரபுவழி மார்க்சிஸ்டுகள் முறைப்படி வெற்றி கண்டனர் என்றாலும், தொழிற்சங்கங்களால் செலுத்தப்பட்ட அழுத்தமானது சமூக ஜனநாயகக் கட்சி ஒரு புரட்சிகர இயக்கமாக இருப்பதற்கு ஒரு மிகப் பெரும் அபாயமாக விளங்கியது. 1905 புரட்சி வெடிப்பானது கட்சிக்குள் அரசியல் மோதலை தீவிரப்படுத்தியது.

ரஷ்யாவில் நடந்த பாரிய வேலைநிறுத்தங்கள் ஜேர்மனியில் புரட்சிகரப் போராட்டம் மற்றும் சுய-தியாகத்தின் ஒரு புதிய அலைக்கு கட்டியம் கூறுவதாக சமூக ஜனநாயகக் கட்சிக்குள் இருந்த இடதுசாரி சக்திகளின் தலைவர்கள் கண்டனர். பின்னாளில் தீவிர சீர்திருத்தவாதியாக மாறிய ருடோல்ஃப் ஹில்பர்டிங் கூட ரஷ்ய எழுச்சியில் இருந்து உத்வேகத்தை பெற்றார். நவம்பர் 14, 1905 அன்று காவுட்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கூறினார்:

“ஜாரிச நிலைகுலைவு என்பது இப்போது நெருங்கிக் கொண்டிருக்கும் நமது புரட்சியின், நமது வெற்றியின் தொடக்கமாகும். வரலாற்று நகர்வு குறித்து மார்க்ஸ் தவறுதலாக முன்கூட்டியே 1848ல் வெளிப்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு இப்போது பூர்த்தி செய்யப்படும் என்று நாம் நம்புகிறோம்.”14

வெகுஜனப் போராட்டங்கள் குறித்து காவுட்ஸ்கி அதனினும் பேரார்வத்துடன் இருந்தார். 1905ம் ஆண்டில் அவர் எழுதினார்: “நிரந்தரமான ஒரு புரட்சி தான்… ரஷ்ய தொழிலாளர்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கும் ஒன்றாகும்.”15 காவுட்ஸ்கி அறிவித்தார்:

“புரட்சிகர அபிவிருத்திகளின் ஒரு சகாப்தம் தொடங்கியிருக்கிறது. மெதுவான, வலி மிகுந்த, ஏறக்குறைய புலப்படாத முன்னேற்றங்கள் எல்லாம் வழிவிட்டு, புரட்சிகள், முன்நோக்கிய திடீர் பாய்ச்சல்கள் கொண்ட சகாப்தம் திறக்கும். அவ்வப்போது சிலவேளை பெரும் தோல்விகளும் கிடைத்தாலும், ஆனாலும் இறுதியில் மாபெரும் வெற்றிகளுக்காக பாட்டாளி வர்க்கத்தின் செயல்திறனில் நாம் அத்தகையதொரு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.”16

ஆனால் சமூக ஜனநாயகக் கட்சிக்குள்ளாக போர்க்குணமிக்க போக்குகளின் உணர்வுகளுக்கு ஊக்கமூட்டிய அதே புரட்சி, தொழிற்சங்க தலைமையை அச்சத்தாலும் எரிச்சலாலும் நிரப்பியது. ரஷ்ய மாதிரியின் தாக்கத்தில் அச்சம் கொண்டு, 1905 மே மாதத்தில் கொலோன் (Köln) நகரில் நடந்த சமூக ஜனநாயக சுதந்திர தொழிற் சங்கங்களின் ஐந்தாவது காங்கிரஸ் வெகுஜன வேலைநிறுத்தத்தை நிராகரித்ததோடு அதனை ஊக்குவித்த கிளர்ச்சிகளையும் தடை செய்தது. சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஒகுஸ்ட் பேபெல் “தூய, தனித்த” தொழிற்சங்கவாதத்தை தாக்கியதோடு, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில், பாரிய வேலை நிறுத்தத்தை வழிமொழியும் தீர்மானத்தை ஆதரித்தார். இந்த தீர்மானம் 1905 செப்டம்பரில் ஜேனாவில் நடந்த கட்சி காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது.

ஆயினும், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையானது முந்தைய சகாப்தத்தில் இருந்த நிலையில் இருந்து கட்சிக்கு சாதகமற்ற வகையில் வெகுவாக மாறியிருந்தது. கட்சியின் தலைமையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டவை தான் என்றாலும் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் பெருகி அவற்றின் வங்கிக் கணக்குகளும் பெருத்து வளர்ந்த போது, அவை தனித்துவமான தீர்மானகரமான எதிர்ப்புரட்சிகர நலன்களை முன்வைத்தன. தியோடர் போமெல்பேர்க் என்னும் தொழிற்சங்கங்களின் செய்தித் தொடர்பாளர் வெளிப்படையாக அறிவித்தது போல, எல்லாவற்றுக்கும் மேல் அவர்கள் விரும்பியதெல்லாம் “நிம்மதியும் அமைதியும்” தான்.17

1905 வாக்கில் தொழிற்சங்கங்களின் ஆண்டு-வருமானம் சமூக ஜனநாயகக் கட்சியினுடையதைக் காட்டிலும் சுமார் ஐம்பது மடங்குகள் அதிகமானதாய் இருந்தது. தொழிற்சங்கங்களிலிருந்து கிடைத்த உதவித்தொகையை சார்ந்து சமூக ஜனநாயகக் கட்சி வளர்ச்சியுற்ற அளவில், அது அவற்றின் கோரிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டியிருந்தது. மேலும், தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொண்டு திருத்தல்வாதிகளது பிரிவுகளுடன் சேர்ந்து, எதிர்ப் புரட்சிகர சூளுரையுடன் “தொழிலாளர்கள்” கட்சியை உருவாக்கி விடக் கூடிய சாத்தியம் குறித்தும் பேபெல் போன்ற அனுபவம் வாய்ந்த சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அரசு, சமூக ஜனநாயகக் கட்சியின் மீது வன்மத்துடன் தாக்குவதற்கான நிலைமைகளை இது உருவாக்கும். தொழிற்சங்கங்களை சாந்தப்படுத்துவதற்கு சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமை மீதிருந்த அழுத்தம் பிரம்மாண்டமானதாய் இருந்தது. இவ்வாறாக, ஜேனா காங்கிரசில் பரந்துபட்ட வேலைநிறுத்த தீர்மானம் நிறைவேறிய போதிலும், சமூக ஜனநாயகக் கட்சியின் நிர்வாகக் குழு, தொழிற்சங்க பொது ஆணையத்துடன் (Trade Union General Commission) இரகசியமாக சந்தித்தது. ”ஒரு வெகுஜன வேலைநிறுத்தத்தை சமூக ஜனநாயகக் கட்சி முடிந்த அளவு தடுக்க முயல வேண்டும்” என்ற உறுதியைக் கோரிய தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு பேபெல் அடிபணிந்தார். [18] ஒரு அரசியல் வேலைநிறுத்தம் நிகழ்ந்தால், தொழிற்சங்கங்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்று பொது ஆணையம், சமூக ஜனநாயகக் கட்சியை எச்சரித்தது. வேலைநிறுத்தத்தை நிர்மூலமாக்க தொழிற்சங்கங்கள் வெளிப்படையாய் வேலை செய்யா என்ற ஒரேயொரு சலுகையை அவை வழங்கின. வர்க்க உறவுகளை தீவிரமயமாக்க அச்சுறுத்தும் எதற்கும் தொழிற்சங்க தலைமை காட்டிய கடுமையான குரோதத்தை மனதில் கொண்டு பார்த்தால், இந்த விட்டுக்கொடுப்பிலும் சமூக ஜனநாயகக் கட்சி நம்பிக்கை வைத்ததா என்பது சந்தேகமே.

காவுட்ஸ்கியின் நெடிய புரட்சிகர வாழ்க்கையில் இந்த காலகட்டம் தான் உயர்ந்த புள்ளியாகும். தொழிற்சங்கத் தலைவர்களின் கடுமையான தாக்குதல்களில் இருந்து இவர் லுக்செம்பேர்க்கை பாதுகாத்துப் பேசியதால், அவர் இவரை பாசத்துடனும் மரியாதையுடனும் “மாமனிதர் கார்ல்” (Karolus Magnus) என்று குறிப்பிட்டார். அதன்பின் காவுட்ஸ்கி வலதுநோக்கி நகர்ந்தபோது (இதனை தொழிற்சங்கங்களை சாந்தப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்பதாக தனிப்பட்ட உரையாடலில் காவுட்ஸ்கி நியாயப்படுத்தினார்) லுக்செம்பேர்க் கொண்ட பயங்கர ஏமாற்றத்தையும் கடுமையையும் அவர்களின் நெடிய உறவின் பின்புலத்தில் தான் புரிந்து கொள்ள முடியும்.

ரியாசனோவின்  பங்களிப்பு

இந்தத் திரட்டில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் (RSDLP) தத்துவாசிரியர்களால் எழுதப்பட்ட முக்கியமான, அதேசமயத்தில் அதிகம் அறியப்படாத ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. ரியாசனோவ் என்னும் கட்சிப் பெயர் கொண்ட டேவிட் போரிஸோவிச் கோல்’டெண்டா எழுதிய இரண்டு ஆவணங்களும் இதில் அடங்கும். 1870ல் ஓடிசாவில் பிறந்த ரியாசனோவ் பின்னர் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் ஆகியோரின் இலக்கிய பாரம்பரியத்தின் தளர்ச்சியற்ற வரலாற்றாசிரியராகவும் காப்பக அறிஞராகவும் சிறந்த வகையில் அறியப்பட்டார். போல்ஷிவிக் புரட்சிக்குப் பின்னர், இவர் அரசு காப்பக அமைப்பிற்கு (State Archive Association) தலைமை தாங்கியதோடு சோசலிஸ்ட் அகாதமி மற்றும் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகத்திற்கும் உதவினார். இவர் மேற்கு ஐரோப்பாவிற்குப் பயணம் செய்து பல்வேறு சமூக ஜனநாயக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் தொடர்பான பரந்த அளவிலான ஆவணங்களைப் பெற்றார்.

இந்த மிகச்சிறந்த மார்க்சிச அறிஞர் ஒரு முக்கிய புரட்சிகர தத்துவாசிரியராகவும் வாழ்ந்தார். ட்ரொட்ஸ்கியைப் போல இவரும் போல்ஷிவிக் மற்றும் மென்ஷிவிக் கன்னைகளுக்கு வெளியே நின்றார். 1917ம் ஆண்டிலும், ட்ரொட்ஸ்கியை போலவே, மாவட்டங்களுக்கு இடையிலான அமைப்பின் (Mezhraionka) உறுப்பினராகி பின் அக்கோடையில் போல்ஷிவிக் கட்சிக்குள் வந்தார். போல்ஷிவிக் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரான ரியாசனோவின் பாத்திரம் குறித்து அலெக்சாண்டர் ரபினோவிட்ச் எழுதிய அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள் என்னும் படைப்பில் தீவிரமான ஆய்வுக்கவனம் அளிக்கப்பட்டுள்ளது. மென்ஷிவிக்குகளின் ஒரு பிரிவினருடன் பொதுவான அடித்தளத்தை காண அவர் முயன்றிருந்தார். ரியாசனோவின் நெடிய புரட்சிகர வாழ்க்கை, மார்க்சிச தத்துவத்திலும் மற்றும் சோசலிச இயக்க வரலாற்றிலும் அவரது ஆழமான அறிவு, மற்றும் அவரது அகன்ற கலாச்சார ஆர்வங்கள் ஆகியவை சோவியத் ஒன்றியத்தில் புரட்சிகர மார்க்சிச புத்திஜீவிகளை அழிக்கும் ஸ்ராலினது பிரச்சாரத்தின் தவிர்க்கவியலாத ஆரம்ப இலக்காக அவரை ஆக்கின. முதலில் 1931 பெப்ரவரியில் ரியாசனோவ் கைது செய்யப்பட்டார், “மென்ஷிவிக் மைய”த்தின் பாகமாக இருந்ததாகவும் “வரலாற்று விடயத்தில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில்” ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரியாசனோவ் தனது “தனிநபர் நேர்மைக்குப் பலியானார்”19 என்று ட்ரொட்ஸ்கி எழுதினார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு சாரட்டோவுக்கு நாடு கடத்தப்பட்ட ரியாசனோவ் மீண்டும் 1937ல் கைது செய்யப்பட்டார். இராணுவ கண்காணிப்புக் குழு என அழைக்கப்பட்ட ஒன்று அவருக்கு ஜனவரி 21, 1938 அன்று மரண தண்டனை விதித்து, அதே நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தொகுதித்திரட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ரியாசனோவின் முதல் ஆவணமாக 1902-03 காலத்தின் “‘இஸ்காரா’வின் (தீப்பொறி) வேலைத்திட்ட வரைவு மற்றும் ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் கடமைகள்” என்ற தலைப்பு கொண்ட ஆவணம் இடம்பெற்றுள்ளது. மூல ஆவணம் 302 பக்கங்கள் வரை நீண்டு செல்கிறது என்பதால், டேயும் கெய்டோவும் ஆவணம் பிரதிநிதித்துவம் செய்கின்ற சாரமான பகுதிகளை மட்டும் எடுத்து வழங்கியுள்ளனர் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. கன்னை மோதலின் தீவிரத்தை பிரதிபலிக்கும் சுவாரசியமான ஆவணமாக இது இருக்கிறது. திரும்பிப் பார்த்தால், 1903 செப்டம்பரில் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரசில் வெடித்த பிளவினை முன்கூட்டி சித்தரித்ததாய் இருக்கிறது. மேலும் வரவிருந்த ரஷ்ய புரட்சியின் அத்தியாவசிய முதலாளித்துவத் தன்மை குறித்தும், வடிவம் குறித்துமான பிளெக்ஹானோவிச கருத்தாக்கம் குறித்தான அதிருப்தியும் இந்த ஆவணத்தில் நிச்சயமாய் வெளிப்படுகிறது. ஆயினும், “இஸ்காரா வேலைத்திட்டம் குறித்த ரியாசனோவின் விமர்சனம் மிகக் குறிப்பிடத்தக்க ஒன்று, ஏனெனில் ஏறக்குறைய ஒவ்வொரு அம்சத்திலும் அது நிரந்தரப் புரட்சி தத்துவத்தை முன் எதிர்பார்க்கிறது…” என்று டேயும் கெய்டோவும் திட்டவட்டமாய் கூறுகையில் அது சற்று மிகைப்பட்ட கூற்றாக சென்று விடுவதாகவே இம்மதிப்புரையாளர் நம்புகிறார்.20

தொழிலாள வர்க்கத்தின் கடமைகளை வரையறுக்கையில், புரட்சிக்குப் பின்னர் முதலாளித்துவ ஆட்சிக்கு அடிபணிவது என்ற பிளெக்ஹானோவின் எண்ண ஓட்டத்தைக் கடந்ததொரு வகையிலான சில சூத்திரப்பாடுகளை கொண்டு ரியாசனோவ் முயற்சித்தார். அத்துடன் புரட்சிகரப் போராட்டத்தில், விவசாயிகள் ஒரு முக்கியமான சுயாதீனமான பாத்திரத்தை ஆற்றக் கூடும் என்பதாக அமைந்த ஆலோசனைகள் மீதான ஒரு ஐயுறவுவாத மனப்போக்கையும் ரியாசனோவ் வெளிப்படுத்துகிறார் - இது விடயத்தில் பின்னர் பர்வஸ் மற்றும் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களில், வலுவான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இருந்தபோதிலும், வரவிருந்த புரட்சிகர ஆட்சி குறித்த ரியாசனோவின் சூத்திரங்கள் எல்லாம் சற்று தற்காலிகவயப்பட்டவையாக உள்ளன. “புரட்சியானது சந்தேகத்திற்கிடமில்லாமல் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் தான் நிகழும், அந்த அர்த்தத்தில் அது நிச்சயமாக ‘முதலாளித்துவ’ புரட்சியே....” என்று அவர் எழுதுகிறார். ஆனால் “ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை புரட்சியின் தலைமைக் கூறாக பாட்டாளி வர்க்கம் இருக்கும் என்பதாலும், ஒட்டுமொத்த இயக்கத்தின் மீதும் அது தனது வர்க்க முத்திரையை பதிக்கும் என்பதாலும் அந்த அர்த்தத்தில் அது பாட்டாளி வர்க்கப் புரட்சியாகவும் இருக்கும்.”21 ஆவணத்தின் இன்னொரு பகுதியில் அவர் உறுதிபடக் கூறுகிறார் “முதலாளித்துவத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் சுதந்திரமாக அபிவிருத்தியுற வசதியான ஒரு வடிவம்தான் ஒரு ஜனநாயகக் குடியரசாகும்”.22 ஆயினும் இந்த சூத்திரமாக்கல்கள் எல்லாம் ட்ரொட்ஸ்கியால் பின்னர் முன்வைக்கப்பட்டவற்றுடன் ஒப்பிட்டால் கணிசமாகப் பின்தங்குகின்றன. தொழிலாள வர்க்கம் புரட்சியில் தனது தடத்தைப் பதிப்பதோடு நின்றுவிடாமல் அரசு அதிகாரத்தையும் கைப்பற்றும் என்று ட்ரொட்ஸ்கி வாதிட்டார்.

ரியாசனோவ் ஆவணத்தின் பெரும் பகுதி —அதன் மிகப் பலவீனமான பகுதிகள்— லெனினின் என்ன செய்ய வேண்டும்? மீதான தாக்குதலுக்கு, அதிலும் குறிப்பாக சோசலிச நனவு தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக தன்னியல்பாய் அபிவிருத்தியுறுவதில்லை, மாறாக அது வெளியில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டு வரப்படுகிறது என்று லெனின் வலியுறுத்தியதன் மீதான தாக்குதலுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. லெனினின் இந்தக் கருத்துக்கு எதிரான வலுவானதொரு விவாதவியல் வாதத்தில் “தோழர் லெனின் வரம்பு கடந்து செல்கிறார்” என்று ரியாசனோவ் எழுதுகிறார். டே மற்றும் கெய்டோவின் வர்ணனை ரியாசனோவின் நிலைப்பாட்டில் அவர்கள் ஓரளவுக்கு அனுதாபத்துடன் இருப்பதையே சுட்டிக்காட்டுவதாய் அமைந்திருக்கிறது. ஆயினும், சரியாக இந்த விடயத்தில் தான் — அதாவது, சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்கள் மற்றும் நடைமுறை செயல்பாடுகளின் வட்டத்திற்கு வெளியில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கொண்டு வரப்படுகிறது என்பதில் — லெனின் மீதான காவுட்ஸ்கியின் தாக்கம் மிகவும் திட்டவட்டமானதாய் இருந்தது. தனது என்ன செய்ய வேண்டும்? என்னும் படைப்பில் லெனின், காவுட்ஸ்கி எழுதிய ஒரு நீளமான பத்தியை இடம்பெறச் செய்திருந்தார். அதில் காவுட்ஸ்கி, “சோசலிச நனவு என்பது பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்குள் வெளியில் இருந்து [von Außen hineingetragenes] உள்கொண்டுவரப்படும் ஒன்றே தவிர உள்ளுக்குள்ளேயே தன்னியல்பாய் [urwüchsig] எழுவதல்ல” என்று விளக்கியிருந்தார்.23 சீர்திருத்தவாதத்தை ரியாசனோவ் எதிர்த்து வந்திருந்த போதிலும், சில வெகுமுக்கிய அம்சங்களில் என்ன செய்ய வேண்டும்? படைப்பின் பிரதான இலக்காக இருந்த பொருளாதாரவாதிகளின் நிலைப்பாடுகளை ஒத்த நிலைப்பாடுகளையே அவரது ஆவணம் முன்னெடுக்கிறது. இஸ்காரா மீதான ரியாசனோவின் விமர்சனத்தை ஒரு வரலாற்றாசிரியர் 1970ல் எழுதுகையில் “புரட்சிகர பொருளாதாரவாதம்” என விவரித்ததாய் டே மற்றும் கெய்டோ குறிப்பிடுகின்றனர்.24

சுமார் மூன்று வருட காலம் கழித்து 1905 புரட்சியின் மத்திய சமயத்தில் எழுதப்பட்ட ரியாசனோவின் இரண்டாவது ஆவணம் ட்ரொட்ஸ்கி மற்றும் பர்வஸ் அபிவிருத்தி செய்த சூத்திரப்பாடுகளுக்கு நெருக்கமாக வரும் சூத்திரமாக்கங்களை கொண்டிருக்கிறது. “சொத்துடைமை குறித்த பிரச்சினை”யின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ரியாசனோவ் அறிவித்தார்:

தொழிலாள வர்க்கமானது தனது சொந்தக் கடமைகளை நிறைவு செய்வதில் தனது அனைத்து முயற்சிகளையும் ஒன்றுபடுத்துகின்ற அதே சமயத்தில், ஒரு தற்காலிக அரசாங்கத்தில் பங்கேற்பதல்ல பிரச்சினை மாறாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் ‘முதலாளித்துவ’ப் புரட்சியை சோசலிசப் புரட்சிக்கான ஒரு நேரடி முன்நிகழ்வாக மாற்றுவதும் தான் உண்மையான பிரச்சினை என்பதான தருணத்தை நெருங்குகிறது.25

லெனினின் பங்களிப்பு

ரஷ்ய புரட்சிக்கான தத்துவம் மற்றும் மூலோபாயத்தின் பரிணாமத்தில், “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்” குறித்த லெனினின் கருத்தாக்கமானது 1905ல் பிளெக்ஹானோவின் மரபுவழி கருத்தாக்கத்திற்கான ஒரு முக்கிய மாற்றீடாக எழுந்தது. நீண்டகால அரசியல் மற்றும் நடைமுறைத் தாக்கங்களைக் கொண்டிருந்த இரண்டு அடிப்படை அம்சங்களில் லெனினின் முன்னோக்கு பிளெக்ஹானோவினுடையதில் இருந்து வேறுபட்டது. முதலாவதாக, வரவிருக்கும் புரட்சி முதலாளித்துவப் புரட்சி என்றே லெனின் குணாம்சப்படுத்தினார் என்றாலும் அந்தப் புரட்சிக்கு ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் தலைமையேற்க முடியும் என்ற கருத்தை —புரட்சியை முதலாளித்துவ வர்க்கம் ஒரு தீர்க்கமான நிறைவு வரை நடத்தி முடிப்பதெற்கெல்லாம் போகவே வேண்டாம்— அவர் நிராகரித்தார். பிளெக்ஹானோவ் இன் கருத்துக்கு நேரெதிராய், முதலாளித்துவ தாராளவாதிகளுடனான எந்த அரசியல் கூட்டணி உறவையும் லெனின் திட்டவட்டமாய் நிராகரித்தார்.

மேலும், லெனினைப் பொறுத்தவரை, “முதலாளித்துவ” புரட்சியின் அத்தியாவசியமான வரலாற்று முக்கியத்துவமானது ஜனநாயக நாடாளுமன்ற ஸ்தாபனங்களை நிறுவுவதில் அடங்கியிருக்கவில்லை, மாறாக கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ உறவுகளின் அனைத்து சுவடுகளையும் தீவிரமாய் அழிப்பதில்தான் அடங்கியிருந்தது. இதனால் தான் “விவசாயப் பிரச்சினை” என்பதான ஒன்றை ஜனநாயகப் புரட்சியின் மையத்தில் லெனின் இருத்தினார். நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மூலங்கள் குறித்த தனது கடைசி முக்கிய கட்டுரையில் ட்ரொட்ஸ்கி வலியுறுத்திக் கூறியவாறாக, “பிளெக்ஹானோவை காட்டிலும் கணக்கிடமுடியாத பெரும் சக்தியுடனும் உறுதியுடனும் லெனின், விவசாயப் பிரச்சினையை ரஷ்யாவில் ஜனநாயக மாற்றத்தின் மையப் பிரச்சினையாக முன்னெடுத்தார்”.26

பிளெக்ஹானோவ் கூறியதில் இருந்து அடிப்படையாக வேறுபட்ட ஒரு அரசியல் மூலோபாயம் இந்த பகுப்பாய்வில் இருந்து எழுந்தது. நாட்டுப்புறங்களில் பழைய நில உடைமை வர்க்கங்களின் பரந்த நிலப்பரப்புகளை பறிமுதல் செய்வதை அவசியமாக்கிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றியானது, ரஷ்யாவின் மில்லியன் கணக்கான விவசாயிகளின் பாரிய அணிதிரட்டலால்தான் சாதிக்கப்பட இயலக் கூடியதாய் இருந்தது. தனியார் உடைமைக்கு எதிராகச் செலுத்தப்படும் வெகுஜன நடவடிக்கையின் எந்த வடிவத்திற்கும் விரோதம் காட்டிய ரஷ்ய முதலாளித்துவம் கிராமப்புறத்தில் நிலவும் உடைமை உறவுகளைப் புரட்சிகரமாய் தலைகீழாய் புரட்டிப் போடுவதை அனுமதிக்கவோ அல்லது அதற்கு தலைமையேற்கவோ முடியவில்லை. ஆனால் ரஷ்ய மக்களில் மிகப் பெரும்பான்மையினராக இருந்த விவசாயிகளின் அத்தகையதொரு பாரிய அணிதிரட்டல் மூலமாக மட்டும்தான், ஜாரிச ஆட்சி தூக்கியெறியப்படக் கூடியதாக இருந்தது.

லெனினைப் பொறுத்தவரை, தாராளவாத முதலாளித்துவத்தை நோக்கிய பிளெக்ஹானோவின் நோக்குநிலையானது புரட்சிக்கு அழிவுவழி தான். ஜாரிச ஆட்சிக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான கூட்டாளி விவசாயிகள்தான். ஜனநாயகப் புரட்சியின் இயக்கவியல் குறித்த இந்த மதிப்பீட்டில் இருந்துதான், ஜாரிச எதேச்சாதிகாரத்தை பிரதியீடு செய்யவிருந்த புரட்சிகர அரசு அதிகாரத்தின் புதிய வடிவமாக பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம் குறித்த கருத்தை லெனின் அபிவிருத்தி செய்தார்.

ஜனநாயகப் புரட்சி குறித்த லெனினின் கருத்தாக்கமானது, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் போல்ஷிவிக் பிரிவை (1912 வரை போல்ஷிவிக்குகள் தங்களை சுயாதீனமான கட்சியாக அறிவித்துக் கொள்ளவில்லை), முதலாளித்துவத்துடனும் மற்றும் ஜார் தூக்கியெறியப்படுவதன் நியாயபூர்வமான ஒரே விளைபொருளாக இருக்கத்தக்கது, ஒரு தாராளவாத முதலாளித்துவ நாடாளுமன்ற குடியரசு மட்டுமே என ஏதேனும் ஒரு வடிவத்தில் வலியுறுத்திய அனைத்து மென்ஷிவிக் போக்குகளுடனும் சமரசப்படுத்த முடியாத அரசியல் குரோதமுடையதாக்கியது. ஆயினும் ஜனநாயகப் புரட்சிகளுக்கும் சோசலிசப் புரட்சிகளுக்கும் இடையில் லெனின் தெளிவாய் வித்தியாசப்படுத்திக் காட்டினார். லெனின் கருத்தில் கொண்ட, பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவ உறவுகளின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்படும். 1905ல் எழுதுகையில் லெனின் விளக்கினார்:

ஆனாலும் அது ஒரு ஜனநாயக சர்வாதிகாரமாக இருக்குமே அன்றி சோசலிச சர்வாதிகாரமாக இருக்காது என்பது உண்மையே. முதலாளித்துவத்தின் அத்திவாரங்களை பாதிக்க (புரட்சிகர அபிவிருத்தியின் தொடர்ச்சியான இடைக் கட்டங்கள் இன்றி) அதனால் முடியாது. ஆகக்கூடியதாக அது விவசாயிகளுக்கு சாதகமாக நில உடைமையில் தீவிரமான மறுபங்கீட்டைக் கொண்டுவரலாம், ஒரு குடியரசை உருவாக்குவது உட்பட உறுதியான மற்றும் முழுமையான ஒரு ஜனநாயகத்தை ஸ்தாபிக்கலாம், ஒரு குடியரசை உருவாக்குவது உட்பட சீர்மையான மற்றும் முழுமையான ஒரு ஜனநாயகத்தை ஸ்தாபிக்கலாம், கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாது தொழிற்சாலை வாழ்க்கையிலும் ஆசிய அடிமைத்தனத்தின் ஒடுக்குமுறை அம்சங்கள் அனைத்தையும் நீக்கலாம், தொழிலாளர்களின் நிலைமைகளில் ஒரு முழுமையான மேம்பாட்டிற்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு மேம்பாட்டுக்குமான அடித்தளத்தை அமைக்கலாம், மற்றும் கடைசியாக ஆனாலும் முக்கியத்துவத்தில் குறைவில்லாது, ஐரோப்பாவிற்குள் புரட்சிகர நெருப்பை சுமந்து செல்லலாம். எவ்வாறாயினும் இத்தகையதொரு வெற்றி எந்த வகையிலும் நமது முதலாளித்துவப் புரட்சியை ஒரு சோசலிசப் புரட்சியாக மாற்றி விடாது; ஜனநாயகப் புரட்சியானது முதலாளித்துவ சமூக மற்றும் பொருளாதார உறவுகளின் வரம்புஎல்லைகளை உடனடியாகக் கடந்து விட முடியாது; எப்படியிருப்பினும், ரஷ்யா மற்றும் மொத்த உலகத்தின் வருங்கால அபிவிருத்திக்கு இத்தகையதொரு வெற்றியின் முக்கியத்துவம் மிகத் தீவிரமானதாய் இருக்கும்.27

ட்ரொட்ஸ்கி பின்னர் எழுதியதைப் போல, லெனினின் வேலைத்திட்டமானது முதலாளித்துவ புரட்சி குறித்த பிளெக்ஹானோவின் கருத்தாக்கத்தைக் கடந்து “முன்னால் எடுத்து வைக்கப்பட்ட ஒரு மிகப்பெரும் அடியை” பிரதிநிதித்துவப்படுத்தியது.28 ஆயினும் லெனினின் சூத்திரமாக்கலின் இரட்டை அர்த்தம்கொண்ட தன்மையையும் மட்டுப்படுத்தப்பட்ட தன்மையையும் வெளிப்படுத்துவதாய் அமைந்த தொடர்ச்சியான பல தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகளை அது எழுப்பியது. குறிப்பாக, லெனினின் கருத்தாக்கத்தில், அதிகாரமானது பாட்டாளிகள் மற்றும் விவசாயிகள் ஆகிய இரண்டு வர்க்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற ஒரு புதிய மற்றும் முன்கண்டிராத அரசு வடிவத்தின் உருவாக்கம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த இரண்டு வர்க்கங்களுக்கு இடையே அதிகாரம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட முடியும்? மேலும், லெனின் தெளிவாய் அங்கீகரித்ததைப் போல, பழைய நிலப் பண்ணைகள் அழிக்கப்பட்டு நிலம் மறுபங்கீடு செய்யப்பட்டிருப்பதால், நிலம் தனியார் உடைமையாய் இருப்பது முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமல்ல. சற்று சமநிலைப்பட்ட அடிப்படையில் என்றாலும் விவசாயி வர்க்கம் தனிச்சொத்துடைமையில் உறுதி கொண்டதாகவே இருந்தது. எப்படியாயினும், விவசாயி வர்க்கம் பாட்டாளி வர்க்கத்தின் தனிச்சொத்துடைமைக்கு எதிரான சோசலிச அபிலாசைகளுக்கும் மற்றும் நோக்குநிலைக்கும் குரோதமாகத்தான் இருக்கும். இந்த இரண்டு வர்க்கங்களின் சமூக நோக்குநிலையிலான இந்த அடிப்படை முரண்பாடு, லெனினின் ஜனநாயக சர்வாதிகாரம் குறித்த கருத்தின் செல்தகைமையை கேள்விக்குட்படுத்தியது.

லெனினின் வேலைத்திட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகள் இருந்தபோதிலும், ஒரு புறநிலையான வரலாற்று அர்த்தத்தில், அது ரஷ்ய புரட்சிகர சிந்தனையின் அபிவிருத்தியில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறித்தது. ஆகவே, லெனினின் நிலைப்பாடு குறித்த டே மற்றும் கெய்டோவின் பலவீனமான அணுகுமுறை மற்றும் ஏறக்குறைய நிராகரிக்கும் மனோநிலை இந்த மதிப்புரையாளரை சற்று குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இந்த ஒரு இடத்தில் தான் ஆசிரியர்களின் அரசியல் நிலைப்பாடு உரசுகின்றதான ஒரு சத்தத்தை ஒருவர் ஏறக்குறைய கேட்க முடிகிறது, நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் மீதான விவாதம் குறித்த பொதுவாக மிகச் சிறந்ததாய் அமைந்திருக்கும் அவர்களின் இத்திறனாய்வை இது பலவீனப்படுத்துகிறது. அவர்கள் தெரிவிப்பதாவது:

"லெனின் கூறிய 'பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வாதிகாரம்' எனும் கருத்தின் பிரச்சினை வெளிப்படையானது. ரஷ்யாவில் சேர்ந்து செயல்படத்தக்க புரட்சிகர குட்டி-முதலாளித்துவக் கட்சி எதுவும் இருக்கவில்லை. அத்தகையதொரு கட்சி இறுதியில் எழுந்தாக வேண்டும் என்று லெனின் நினைத்தார். ஆனால் இது அரசியல் தந்திரோபாயத்திற்கு அடிப்படையாக கொள்ளக் கூடிய ஒரு நடைமுறை அடித்தளமாக இருக்கவில்லை."29

இந்த முடிவு ஒருவரை ஆச்சரியப்படச் செய்கிறது. லெனினின் தத்துவத்தில் என்ன மட்டுப்படுத்தப்பட்ட தன்மைகள் இருந்திருந்தாலும், அவை நிச்சயமாக "வெளிப்படையாய்" இருந்தவையில்லை. அப்படி இருந்திருக்குமானால், "ஜனநாயக சர்வாதிகார" முன்னோக்கு மீதான ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களும், அதனைக் கடந்து நிரந்தரப் புரட்சி தத்துவமாக அதனை அவர் அபிவிருத்தி செய்ததும் இத்தகையதொரு ஆழப்பதியத்தக்க புத்திஜீவித்தன சாதனையாக இருந்திருக்கமுடியாது. மேலும் ரஷ்யாவில் ஒரு வெகுஜன விவசாயக் கட்சிக்கான சாத்தியத்தை திறந்து வைத்திருந்ததற்காக லெனினை அதிகமாய் குறைகாண முடியாது. சோசலிசப் புரட்சிகர கட்சி (Socialist Revolutionary Party) விவசாயிகளிடையே வெகுஜன ஆதரவைப் பெற்று —இந்த ஆதரவு ஸ்திரமானதாக இல்லாது போனாலும்— வருங்காலத்தில் அபிவிருத்தி கண்டதானது லெனின் எண்ணியது சரியென நிரூபித்தது.

இறுதியாக, லெனின் பாரிஸ் கம்யூனின் பெருந்துயர முடிவுக்குப் பின்னர் அரசியல் முதிர்ச்சிக்கு வளர்ச்சியடைந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பாரிஸ் தொழிலாளர்கள் பிரெஞ்சு விவசாயிகளை தங்களது பக்கத்திற்கு அணிதிரட்ட முடியாமல் போனது வேர்சாய் இல் இருந்த முதலாளித்துவ ஆட்சி 1871 மே மாதத்தில் கம்யூனை அழிப்பதற்கு வழிவகை செய்தது. அது எளிதாய் மறந்து விடத்தக்க ஒரு அரசியல் தோல்வி அல்ல. லெனினைப் பொறுத்தவரை, ரஷ்யாவில் (இந்த விஷயத்தில், ஒரு பெரும் விவசாய மக்களைக் கொண்ட எந்த ஒரு நாட்டுக்கும்) தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியானது விவசாயிகளின் ஆதரவை வெல்லும் அதன் திறனின் மீது தங்கியிருந்தது. வரலாற்றுக் காலகட்டத்தை கருத்தில் கொள்வது எப்போதும் சிறந்தது. பாரிஸ் கம்யூனுக்கும் 1905 புரட்சிக்கும் இடையில் வெறும் 34 வருட இடைவெளியே இருந்தது. 1975 மே மாதத்தின் சைகோன் (Saigon) வீழ்ச்சி இன்றைய நாளுக்கு எவ்வளவு அருகில் உள்ளதோ, கம்யூன் அழிவானது 1905ம் ஆண்டில் லெனின் தலைமுறைக்கு அதனினும் மிக அருகிலமைந்த நிகழ்வாய் இருந்தது!

ஜனநாயக சர்வாதிகாரம் குறித்த லெனினின் சூத்திரமாக்கலில் மிகப் பெரும் முக்கியத்துவம் கொண்ட இன்னொரு அம்சமும் உள்ளது. விவசாயி வர்க்க புரட்சிகர இயக்கத்தின் முரண்பாடான தன்மை குறித்த லெனினின் புரிதல் — எல்லாவற்றுக்கும் மேல், விவசாயிகளின் கிளர்ச்சிகளும், நிலங்களின் பாரிய பறிமுதலும் முதலாளித்துவ உறவுகளின் அழிவுக்கு இட்டுச் செல்லும் கட்டாயம் இல்லை என்ற அவரது வலியுறுத்தல்— நுண்மையானதாகவும் ஆழ்ந்துணர்ந்ததாகவும் இருந்தது. இடதுகளுக்குள்ளாக (உதாரணமாக காஸ்ட்ரோ, மாவோ, நக்சலைட்டுகள் மற்றும் மெக்சிகோவின் "sub-Comandante" மார்கோஸ் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே) மீண்டும் மீண்டும் அரசியல் குழப்பத்திற்கு காரணமாய் அமையும் ஒரு பிரச்சினையை கையாளுகின்ற லெனின், விவசாயி வர்க்கத் தீவிரவாதம் —அது கிராமப்புற ஏழைகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகத்தான் போராடுகிறது என்றபோதிலும்— சோசலிச வகையைச் சேர்ந்தது என்ற பரவலாக இருக்கும் தவறான கருத்துக்கு எதிராக வாதிட்டார். நிலங்களை தேசியமயமாக்குவது ஜனநாயகப் புரட்சியின் ஒரு முக்கிய பாகம் என்பதோடு குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்கு வெகு முக்கியமானதாகவும் ஆகின்றதாகும் என்று லெனின் வலியுறுத்தினார். நிலங்களை தேசியவுடைமையாக்குவது சோசலிச நடவடிக்கை என்பதைக் காட்டிலும் ஒரு ஜனநாயக நடவடிக்கை ஆகும் என்பதை விளக்க முற்படும் லெனின் பின்வருமாறு எழுதினார்:

"இந்த உண்மையை புரிந்து கொள்ள மறுப்பது சோசலிசப் புரட்சியாளர்களை (Socialist Revolutionaries) குட்டி முதலாளித்துவத்தின் நனவற்ற சித்தாந்தவாதிகளாக ஆக்கிவிடுகிறது. இந்த உண்மையின் மீது வலியுறுத்தி ஊன்றி நிற்பதென்பது சமூக ஜனநாயகக் கட்சியை பொறுத்தவரை தத்துவத்தின் பார்வையில் மட்டுமல்லாது நடைமுறை அரசியலின் பார்வையில் இருந்தும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் தற்போதைய "பொதுவான ஜனநாயக" இயக்கத்தில் பாட்டாளி வர்க்க கட்சியின் முழுமையான வர்க்க சுயாதீனம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத நிபந்தனை என்பது இதில் இருந்து தான் வருகிறது."30

ஜப்பானுடனான போரில் ரஷ்யா சந்தித்த இராணுவப் பேரழிவுகள் ஒரு புரட்சியின் வெடிப்புக்கு அழைத்துச் சென்றது. குளிர்கால அரண்மனைக்கு 1905 ஜனவரி 9 அன்று எதிர்ப்புப் பேரணி நடத்திய செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதன் அறிவிப்பு அடையாளமானது. ரஷ்ய சாம்ராஜ்யத்திற்குள்ளான சமூக வெடிப்பு புரட்சிகர தத்துவத்தின் அபிவிருத்திக்கு சக்திவாய்ந்ததொரு உத்வேகத்தை அளித்தது. பார்வஸ், ட்ரொட்ஸ்கி இருவரும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் சூத்திரமாக்கலில் மையப் பாத்திரம் ஆற்றியவர்களாவர்.

பார்வஸின் பங்களிப்பு:

ஜேர்மனியில், பார்வஸ் (1867-1924) இறந்து 85 வருடங்கள் ஆகியும் எளிதில் புரிந்துகொள்ள வழியில்லாத ஒருவகை புதிரான மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலும் ஒரு மார்க்சிச தத்துவாசிரியராக இவர் ஆற்றிய மிகச் சிறந்த பணியைக் காட்டிலும் முதலாம் உலகப் போரின் போதான தனது மோசமான வர்த்தக நடவடிக்கைகளுக்காகத்தான் பார்வஸ் அதிகமாக நினைவுகூரப்படுகிறார். அச்சமயத்தில் அவர் புரட்சிகர இயக்கத்தைக் கைவிட்டிருந்தார். ஆனால் அலெக்சான்டர் ஹெல்ப்ஹான்ட் என்னும் இயற்பெயர் கொண்ட பார்வஸ், ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும் புரட்சிகர இயக்கத்தின் வாழ்வில் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றினார் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்தின் மீதான தனது தாக்குதல்கள் மூலம் இவர் முதன்முதலில் ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்தார். காவுட்ஸ்கியை விடுங்கள், லுக்செம்பேர்க் கூட களமிறங்கியிராத 1898 ஜனவரி மாத சமயத்திலேயே அவரது முதல் பேர்ன்ஸ்டைன்-எதிர்ப்பு கட்டுரைகள் ஜேர்மன் சோசலிச ஊடகங்களில் தோன்றின. பொருத்தமான தருணத்தில் வெளியானதால் மட்டுமே பார்வஸின் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறவில்லை; பேர்ன்ஸ்டைனுக்கு அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பதே தெரியவில்லை என்ற ஒரு முத்திரை பதியுமளவிற்கு ஜேர்மன் மற்றும் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீதான ஒரு மிகச் சிறந்த புரிதலை அக்கட்டுரைகள் வெளிப்படுத்தின.

ட்ரொட்ஸ்கியே பின்னர் ஒப்புக்கொண்டது போல, ரஷ்ய புரட்சிகர அபிவிருத்தியின் இயக்கவியல் குறித்த ட்ரொட்ஸ்கியின் சொந்த சிந்தனைகளில் பார்வஸின் ஆழமான தாக்கம் இருந்தது. ‘பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஏதோ நட்சத்திர மண்டலத்திலான ‘இறுதி’ இலட்சியம் என்பது போல் பார்க்கப்பட்டதை நமது சொந்த நாளின் நடைமுறைப் பணியாக திட்டவட்டமாக உருமாற்றியது’ பார்வஸ் தான் என்று ட்ரொட்ஸ்கி எழுதினார்.31 1905 அக்டோபரில் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் சோவியத் எழுந்தமையானது தொழிலாள வர்க்கத்திற்கு ஏராளமான சாத்தியக்கூறுகளை திறந்து விட்டது என்பதை பார்வஸ், ட்ரொட்ஸ்கி இருவரும் அங்கீகரித்தனர். ஒரு புரட்சிகர சூழ்நிலையில், கட்டவிழும் வர்க்க சக்திகள் குறித்த புறநிலை இயக்கவியலை போதியளவு கவனத்தில்கொள்ளாத அதேவேளை, தேசிய உற்பத்தி சக்திகளின் “புறநிலை” அபிவிருத்தி குறித்த அருவமான கணிப்பீடுகளில் இருந்து முன்னெடுக்கப்படும் புரட்சியின் பொருத்தமான “பணிகள்” பற்றிய கருத்துப்பாடுகள் போதாதவை என்று பார்வஸ் வாதிட்டார். தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது சாத்தியமாக ஆகியிருந்ததாய் பார்வஸ் வாதிட்டார். இருக்கும் பொருளாதார ஆதாரவளங்கள் குறித்த விதிவசவாத கணக்கீட்டை மனதில் இருத்தி தொழிலாள வர்க்கமானது, முதலாளித்துவம் அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக் கொள்வதை தள்ளி நின்று மரியாதையுடன் கவனிக்க வேண்டும் என்பதான மென்ஷிவிக்குகளின் வாதத்தை அவர் நிராகரித்தார். அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான இடைத்தொடர்பினை அற்புதமாய் முன்வைத்துக் காட்டுகின்ற பார்வஸ், பாட்டாளி வர்க்க புரட்சிகர மூலோபாயத்தின் ஒரு மிகத் தீவிரமான சூத்திரமாக்கலுக்கு பாதையை தெளிவாக்கினார்:

வர்க்க உறவுகள், வரலாற்று நிகழ்வுகளின் பாதையில் சற்று எளிமையான நேர்கோடான வகையில் தீர்மானிக்கப்படுவதாய் இருந்தால், அப்போது நமது மூளைகளை நாம் உலுக்க வேண்டியதே இருந்திருக்காது: வானவியல் அறிஞர்கள் ஒரு கோளின் இயக்கத்தை குறிப்பது போன்ற அதே வழியில் சமூகப் புரட்சிக்கான தருணத்தை கணக்குப் போட்டுவிட்டு சாய்ந்து உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தாலே போதுமாயிருந்திருக்கும். ஆனால், யதார்த்தத்திலோ மற்ற எல்லாவற்றிற்கும் மேலாய் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுதான் அரசியல் போராட்டத்தை உருவாக்குகிறது. அதுவும் தவிர, அந்தப் போராட்டத்தின் விளைபொருளானது வர்க்க சக்திகளின் அபிவிருத்தியால் தீர்மானிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளில் வளர்ந்து வந்திருக்கும் ஒட்டுமொத்த வரலாற்று நிகழ்ச்சிப்போக்கானது எண்ணிலடங்கா இரண்டாம்நிலை பொருளாதார, அரசியல், மற்றும் தேசிய கலாச்சார நிலைமைகளை சார்ந்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாய் அது சார்ந்திருப்பது போராடும் தரப்புகளின் புரட்சிகர சக்தி மற்றும் அரசியல் நனவு —அவர்களின் தந்திரோபாயம் மற்றும் அரசியல் தருணத்தை பற்றிக் கொள்வதில் அவர்களின் திறன் — ஆகியவற்றையே ஆகும்.32

சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கு ரஷ்யா முதிர்ச்சியுற்று விட்டது என்று பார்வஸ் கூறவில்லை. “மேற்கு ஐரோப்பாவில் ஒரு சமூகப் புரட்சி இல்லாமல், ரஷ்யாவில் சோசலிசத்தை நனவாக்குவது இப்போது சாத்தியமில்லாதது” என்று அவர் திட்டவட்டமாய் தெரிவித்தார்.33 ஆனால் வர்க்கப் போராட்டத்தின் இயங்குவிசை தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற இயலுகின்றதான நிலைமைகளை உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார். தொழிலாள வர்க்கம் அதன்பின் தனது நலன்களை சாத்தியமான அளவு முன்னேற்றும் வகையில் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.

பார்வஸ் புரட்சிகர அபிவிருத்தியின் துல்லியமான பாதையை முன்கணிக்க முயலவில்லை. அவரது பார்வையில் அரசியல் என்பது, அபிவிருத்தியின் ஏராளமான வகைகளை அனுமதிப்பதாக இருக்கின்ற சக்திகள், பாதிப்புகள் மற்றும் காரணிகளின் ஒரு சிக்கலான இடைத்தொடர்பு சம்பந்தப்பட்டதாகும். ஜாரிச சர்வாதிகாரத்தை தூக்கியெறிவதானது புரட்சியின் ஆரம்பப் புள்ளியை மட்டுமே குறித்ததாக அமைகின்ற, போராட்டத்தின் ஒரு நெடிய நிகழ்ச்சிப்போக்கை அவர் முன்கணித்தார். பார்வஸ் வாதிட்டார்:

சமூக ஜனநாயகக் கட்சியானது, ஒட்டுமொத்த மக்களின் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் புரட்சிகர இயக்கத்தின் மையத்திலும் மற்றும் தலைமையிலும் பாட்டாளி வர்க்கத்தை அமர்த்துகின்ற அதே சமயத்தில், சர்வாதிகாரத்தை தூக்கியெறிந்த உடன் தோன்றும் உள்நாட்டு யுத்த காலத்திற்கும், விவசாய மற்றும் முதலாளித்துவ தாராளவாதத்தால் தாக்குதலுக்குள்ளாகும் காலத்திற்கும் மற்றும் அரசியல் தீவிரவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகளால் காட்டிக்கொடுக்கப்படும் காலத்திற்கும் பாட்டாளி வர்க்கத்தை தயாரிப்பு செய்யவும் வேண்டும்.

புரட்சியும் எதேச்சாதிகாரத்தின் வீழ்ச்சியும் ஒரே விடயம் அல்ல என்பதையும், அரசியல் புரட்சியை இறுதிவரை கொண்டு செல்ல முதலில் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் அதன்பின் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராட வேண்டியது அவசியம் என்பதையும் தொழிலாள வர்க்கம் புரிந்து கொள்வது கட்டாயமாகும்.34

"ஜனவரி 9-ல் என்ன சாதிக்கப்பட்டது” என்ற பார்வஸின் சிறப்பான கட்டுரை ஏராளமான அரசியல் ஆழ்நோக்குப் பார்வைகளை கொண்டிருக்கிறது. அவை, குறைந்தபட்சம் வர்க்கப் போராட்ட யதார்த்தங்கள் குறித்த புரிதலிலேனும், நம் காலத்தை விடவும் ஒப்பிலா உயரிய மட்டத்திலானதொரு அரசியல் காலகட்டத்தின் அனுபவ அறிவைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. தற்காலிகமான மற்றும் ஸ்திரமற்ற கூட்டணியினருடன் சேர்ந்து போராடும்போதான பிரச்சினைகளை விவாதிக்கையில் பார்வஸ் அறிவுறுத்துகிறார்:

1. அமைப்புரீதியான வரிசைகளை குலைக்காதீர்கள். தனித்தனியாய் அணிவகுத்து செல்லுங்கள், ஆனால் சேர்ந்து தாக்குங்கள்.

2. நமது சொந்த அரசியல் கோரிக்கைகளில் ஊசலாட்டம் காணாதீர்கள்.

3. வர்க்க நலன்களிலான வித்தியாசங்களை மறைக்காதீர்கள்.

4. நமது எதிரிகளை கண்காணிக்கும் அதே விதத்தில் நமது கூட்டணியினரையும் கண்காணித்து வாருங்கள்.

5. ஒரு கூட்டணியாளரை பராமரிப்பதற்கு செலவிடுவதைக் காட்டிலும் அதிகமான கவனத்தை போராட்டத்தால் உருவாக்கப்படும் சூழ்நிலையை அனுகூலமாக்குவதற்காய் செலவிடுங்கள்.35

1905ம் ஆண்டின் பிற்பகுதியில் ட்ரொட்ஸ்கி “ஜனவரி 9 வரை” என்ற படைப்பை எழுதினார். இந்த படைப்பின் ஒரு முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு முதன்முறையாக இந்த தொகைத்திரட்டு நூலில் காணக்கிடைக்கிறது. ரஷ்ய முதலாளித்துவத்தின் தாராளவாத பிரதிநிதிகளது அரசியலின் அழுகிப்போன தன்மையை கூர்மையாகவும் அப்பட்டமாகவும் அம்பலப்படுத்தும் ஒரு படைப்பாக இது இருக்கிறது. ஜப்பானுடனான போரில் ரஷ்ய இராணுவத்தின் படுமோசமான தோல்விகளால் நேர்ந்த ஒரு நெருக்கடி குவிந்த காலகட்டத்தில் ஜாரிச ஆட்சியை நோக்கி அவர்கள் கொண்டிருந்த முதுகெலும்பற்ற மண்டியிடும் மனோநிலையை ட்ரொட்ஸ்கி காலவரிசையில் பட்டியலிடுகிறார். போரில் தாராளவாத அரசியல்வாதிகள் சத்தமின்றி அடங்கிப் போன விதத்தை ஏளனம் செய்யும் விதமாய் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்:

அவமானகரமான ஒரு படுகொலையின் இழிவான வேலையில் கைகோர்த்துக் கொண்டதும் மற்றும் மக்களின் மீது சுமத்துவதற்கு செலவினங்களின் ஒரு பகுதிக்கு தாங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டதும் இவர்களுக்கு (தாராளவாதிகளுக்கு) திருப்தி தந்து விடவில்லை. மறைமுக அரசியல் சம்மதம் மற்றும் ஜாசாரிசத்தின் வேலைகளை சத்தமில்லாமல் மறைத்ததுடன், அவர்கள் திருப்தி அடையாது மாபெரும் குற்றங்களை இழைத்தமைக்கு பொறுப்பானவர்களுக்கு தங்களது தார்மீக ஆதரவு இருப்பதை அனைவருக்கும் அவர்கள் பகிரங்கமாய் அறிவித்தனர்.... தங்களின் அரசியல் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தும் உத்தியோகபூர்வ அலங்காரப்பேச்சு கருத்தரங்குகள் மூலமாக ஒருவர் பின் ஒருவராய் இவர்கள் போர் அறிவிப்பிற்கான தமது விசுவாசப் பிரகடனங்களைக் கொண்டு பதிலிறுப்பு செய்தனர்…

இந்த தாராளவாத ஊடகங்களைப் பற்றி என்ன சொல்ல? இந்த பரிதாபத்திற்குரிய, முணுமுணுக்கின்ற, மண்டியிடுகின்ற, பொய்யுரைக்கின்ற, வாலைச் சுருட்டிக் கொள்கின்ற, அதிகாரமற்ற, ஊழலுற்றுக் கொண்டிருக்கும் தாராளவாத ஊடகங்கள்! 36

இளம்வயது ட்ரொட்ஸ்கி இந்த வார்த்தைகளைக் கொண்டு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியையும் இன்றைய நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையையும் விவரித்திருந்ததாய் ஒருவர் நம்பினால் அதற்காக அவரை மன்னிக்கலாம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்கு முன்பே, முதலாளித்துவ தாராளவாதத்தின் அழுகிப்போன தன்மையை சோசலிஸ்டுகள் நன்கு புரிந்து வைத்திருந்தனர்.

ட்ரொட்ஸ்கியின் பங்களிப்பு:

மற்ற சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை உள்ளடக்கிய இந்த தொகைத்திரட்டிலும் கூட, இளம்வயது ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் தனித்துவத்துடன் மிளிர்கின்றன. ஒரு புதிய முன்னோக்கினை உண்மையான சக்திவாய்ந்ததொரு குரலில் அவர் முன்வைக்கிறார். இந்த ஆரம்ப கால எழுத்துகளில் மிக அருமையான விடயம் என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுறும் வெகுஜனப் புரட்சிகர இயக்கம் மற்றும் அதிகாரத்துக்கான அதன் போராட்டத்தின் அடிப்படையான சக்தி ஆகியவை குறித்த கருத்தாக்கமும் விவரிப்பும் அத்தனை நேர்த்தியாக அமைந்திருக்கின்றன. இந்த அர்த்தத்தில், காவுட்ஸ்கியின் எழுத்துகளுடன் இருக்கும் வித்தியாசம் வெளிப்பட்டதாய் இருக்கிறது. ஒரு புரட்சிகர முன்னோக்கை சூத்திரப்படுத்தி அதனைப் பாதுகாத்து எழுதிய சமயத்திலான காவுட்ஸ்கியின் சிறந்த படைப்பிலும் கூட எதிரெதிர் வர்க்க சக்திகளிடையேயான மோதல் குறித்த காவுட்ஸ்கியின் சித்தரிப்பு ஏதோ விடுபட்டதாய் இருக்கிறது, இது ஆசிரியரின் உள்முக சந்தேகங்களைப் பிரதிபலிப்பதாய் அமைகிறது. தொழிலாள வர்க்கம் தனது வர்க்க எதிரியை வன்முறையில் இறங்காமலேயே அதிகாரத்தை சரணடையச் செய்ய அச்சுறுத்த முடியும் என்பதற்கான சாத்தியத்தை அவர் திறந்தே வைத்திருந்தார்! (மிகவும் நம்பிக்கை உறுதியூட்டும் வகையில் இதனை அவரால் செய்ய இயலவில்லை என்றாலும்). அவர் எழுதினார்:

ஒரு எழுச்சியுறும் வர்க்கம், பழைய ஆளும் வர்க்கத்தை துரத்துவதற்கு விரும்பினால் அதற்கு பலத்தை பயன்படுத்த அவசியமான சாதனங்களை தன்னகத்தே கொண்டிருந்தாக வேண்டும். ஆனால் அவற்றை பயன்படுத்தியாக வேண்டும் என்பது நிபந்தனையற்ற கட்டாயமில்லை. குறிப்பிட்ட சிலசூழ்நிலைகளில், இத்தகைய சாதனங்கள் இருக்கின்றன என்ற விழிப்புணர்வே ஒரு வீழ்ந்து கொண்டிருக்கும் வர்க்கத்தை பலம்கொண்டுவரும் ஒரு எதிராளியுடன் அமைதியான முறையில் உடன்பாட்டிற்குக் கொண்டு வர போதுமானதாக இருக்க முடியும்.37

சமூக ஜனநாயகக் கட்சியின் பிரிவுகளுக்கு உள்ளாக, குறிப்பாக தொழிற்சங்கங்களுக்குள்ளாக, அதிகாரத்துக்கான ஒரு ஆயுதப் போராட்டத்தை கட்சி அறிவுறுத்தியது என்று கூட வேண்டாம், அதன் தவிர்க்கவியலாத தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்தது எனக் கூறுவதைக் கூட விரும்பாத நிலை நிலவியதை காவுட்ஸ்கி நன்கு அறிந்து வைத்திருந்தார் என்பதையும் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல், முன்னெச்சரிக்கையில்லாத சூத்திரமாக்கல் எதனையும், அது ஒரு தத்துவார்த்த பத்திரிகையில் என்றாலும் கூட, சமூக ஜனநாயக கட்சியின் மீதான ஒரு தாக்குதலுக்கான சாக்காக பிரஷ்ய அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்பதையும் அவர் அறியாதவரல்ல. அரசின் உயர் மட்டங்களில் இருந்த செல்வாக்கான குரல்கள் சமூக ஜனநாயகத்துடன் ஒரு குருதி கொட்டும் மோதலுக்கு தொடர்ந்து ஆலோசனையளித்துக் கொண்டிருந்தன என்ற உண்மை நன்கறியப்பட்டதே. அவ்வாறிருந்தும், 'அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் இருக்கும் இராணுவப் படைகளின் எதிர்ப்பை வெல்வது எப்படி?' என்ற ஒரு நவீன முதலாளித்துவ அரசில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட ஒரு தவிர்க்கவியலாத பிரச்சினைக்கு காவுட்ஸ்கியிடம் எந்த தெளிவான பதிலும் இல்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஒரு கட்டுரையில், இராணுவ வலிமையைத் திரட்டிக் கொள்வதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தை தோற்கடிப்பது சாத்தியமில்லாமல் போகலாம் என்று கூறுமளவுக்கு காவுட்ஸ்கி சென்று விட்டார். "அவசியமான மூர்க்கத்தனத்தை கொண்டிருக்கக் கூடிய எந்த அரசாங்கத்திற்கும் தொழில்நுட்ப இராணுவ மேலாதிக்கத்தைக் கொண்டிருப்பதான ஒரு நனவு, ஒரு ஆயுதமேந்திய வெகுஜனக் கிளர்ச்சியை அமைதியாக எதிர்கொள்ள முடிவதை சாத்தியமாக்குகிறது." ...38

டே மற்றும் கெய்டோ சுட்டிக் காட்டுவதைப் போல, ட்ரொட்ஸ்கி இதற்கு நேரெதிரான வாதத்தை வைக்கிறார்: ஒரு வெகுஜன வேலைநிறுத்தமானது அவசியமாக ஒரு ஆயுதமேந்திய மோதலுக்கு இட்டுச் செல்லும், அப்போது அரசாங்கம் வேலைநிறுத்தம் செய்பவர்களை சுட்டுத்தள்ளுவதற்கான உத்தரவுகளைக் கொண்டு பதிலளிக்கும்."39 காவுட்ஸ்கியை பொறுத்தவரை தொழிலாளர்களை சுடச் சொல்லி படைவீரர்களுக்கு உத்தரவிடப்படுவதென்பது புரட்சி முடிவுக்கு வரவிருக்கிறது என்று அர்த்தமளிக்கக் கூடியதாய் இருக்கிறது. ட்ரொட்ஸ்கிக்கோ இத்தகைய உத்தரவுகள் ஒடுக்குமுறை அரசின் முடிவுக்கு இட்டுச் செல்லத்தக்கதாகவே அர்த்தமளிக்கின்றன. புரட்சியை தோற்கடிக்க அடக்குமுறை படையை போதுமான அளவு பயன்படுத்தினால் போதும் என்று பிற்போக்குவாதிகள் நம்பத் தலைப்படுகின்றனர் என்று ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுக் காட்டினார். ட்ரொட்ஸ்கி சுருக்கமாய் விவரிக்கிறார்:

"தன்னுடைய நாட்களை பாரிஸின் பரத்தையர் இல்லங்களை மட்டுமல்லாது மகா புரட்சியின் நிர்வாக-இராணுவ வரலாற்றைப் படிப்பதிலும் செலவிட்டவரான Grand Duke என்றழைக்கப்பட்ட இராணுவத் தளபதி (மகா கோமகன்) விளாடிமிர், லூயியின் அரசாங்கம் புரட்சியின் ஒவ்வொரு முளையையும் எந்தவொரு ஊடாட்டமும் தயக்கமும் இன்றி நசுக்கியிருக்குமானால், அவர் பாரிஸின் மக்களை துணிச்சலான பரந்த ஒழுங்கமைக்கப்பட்ட குருதி கொட்டலின் மூலம் வழிக்குக் கொண்டு வந்திருப்பாரேயானால் பழைய ஒழுங்கு காப்பாற்றப்பட்டிருக்க முடியும் என்று முடிவு கட்டியிருந்தார். ஜனவரி 9 அன்று, நமது மிகப் பண்பட்ட குடிகாரர் அதனை எவ்வாறு துல்லியமாகச் செய்ய வேண்டும் என்று காட்டினார் .... சாதாரண துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், ரவைகள் எல்லாம் உத்தரவுக்கு அப்படியே கீழ்ப்படிபவை தான், ஆனாலும் அவற்றை பயன்படுத்த ஆள் வேண்டுமே. அதற்கு மனிதர்கள் தானே வேண்டியிருக்கிறது. அந்த மனிதர்கள் படையினர் தான் என்றாலும், அவர்கள் துப்பாக்கிகளில் இருந்து வித்தியாசப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்களால் சிந்திக்க முடியும், உணர முடியும், அப்படியானால் அவர்களை நம்ப முடியாது. அவர்கள் தயங்குகிறார்கள், தங்களது தளபதிகளின் முடிவெடுக்கா நிலை அவர்களைத் தொற்றிக் கொள்கிறது, விளைவு அதிகாரத்துவத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் ஒழுங்கின்மையும் பீதியும் பற்றிக் கொள்கிறது.40

நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ட்ரொட்ஸ்கியின் வரையறையளிக்கும் விரிவான விளக்கம் முதலில் இடம்பெற்ற 1906ம் ஆண்டில் வெளியான முடிவுகளும் வாய்ப்புகளும் (Results and Prospects) இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. ஆனால், ட்ரொட்ஸ்கியின் அரசியல் சிந்தனை அபிவிருத்தியை —ரஷ்ய தாராளவாதத்தின் பிற்போக்குத்தனத்தை ஏளனமாய் அம்பலப்படுத்துவது தொடங்கி 'வர்க்கப் போராட்டத்தின் தர்க்கம் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்தை கைப்பற்றத் தள்ளும்' என்று அவர் முடிவுக்கு வருவது வரை— விவரிக்கும் ஏராளமான அதி முக்கிய ஆவணங்களை டே மற்றும் கெய்டோ வழங்கியிருப்பதைக் காணமுடியும். இந்த முக்கியமான தயாரிப்பு ஆவணங்களில் ட்ரொட்ஸ்கி எழுதிய "நீதியவைக்கு பெர்டினாண்ட் லஸ்சாலின் உரையின் அறிமுகம்", "சமூக ஜனநாயகமும் புரட்சியும்", மற்றும் "கார்ல் மாக்ஸ், பாரிஸ் கம்யூன் படைப்புக்கான அணிந்துரை" ஆகியவையும் அடங்கும். இந்த கட்டுரைகள் எல்லாமே ட்ரொட்ஸ்கி செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் தலைவராகி முதல் ரஷ்ய புரட்சியின் மாபெரும் பேச்சாளராகவும் வெகுஜனத் தலைவராகவும் உருவெடுத்த 1905ம் ஆண்டு தொடங்கி எழுதப்பட்டவை.

ட்ரொட்ஸ்கி எழுதிய "நீதியவைக்கு பெர்டினாண்ட் லஸ்சாலின் உரையின் அறிமுகம்" அவரது ஆரம்ப கால மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். 1848 ஜேர்மன் புரட்சியில் ஜனநாயக சக்திகளின் அதீத இடது பிரிவின் ஒரு பிரதிநிதியாக லஸ்சால் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருந்தார். பிரஷ்யாவிற்கு எதிரான கிளர்ச்சிக்காக கைது செய்யப்பட்ட நிலையில், லஸ்சால் தனது தரப்பு உரை ஒன்றை எழுதினார். இந்த உரை நீதியறையில் உண்மையில் பேசப்படவேயில்லை என்றாலும் எழுத்துமூலமான உரையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் ஜேர்மனி முழுவதிலும் விநியோகிக்கப்பட்டு ஒரு ஆழமான தாக்கத்தை உருவாக்கின. டே மற்றும் கெய்டோ குறித்துக் காட்டுவது போல், "ட்ரொட்ஸ்கி நீதியவைக்கான லஸ்சாலின் மகா உரையை போற்றினார் என்பது வெளிப்படையான விடயம்", அத்துடன் 1905 புரட்சியின் தோல்விக்குப் பின்னர் 1906ம் ஆண்டில் ட்ரொட்ஸ்கி மீது விசாரணை சுமத்தப்பட்ட போது அதற்குச் சளைக்காத அளவுக்கு நினைவு கூரத்தக்கதாய் ட்ரொட்ஸ்கி வழங்கிய உரையின் வடிவத்தில் இது நிச்சயமாய் தாக்கத்தைக் கொண்டிருந்தது.41

தனது "அறிமுக"ப் பகுதியில் ட்ரொட்ஸ்கி, 1848 புரட்சியின் அனுபவத்தில் பெற்ற பாடங்களைக் கொண்டு, ஜாரிச எதேச்சாதிகாரத்திற்கு எதிரான சமகாலப் போராட்டத்தில் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிரி என்ற அத்தியாவசியமான அரசியல் கருத்தை விளங்கப்படுத்த முனைந்தார். தனது நலன்களை நனவாக்க புரட்சி எவ்வளவுதான் அதிமுக்கியமானதாய் அமைந்தாலும் அது எதிர்பார்த்திராத பின்விளைவுகளின் அபாயத்தையும் எழுப்பி விடுகிறது என்பதை 1789-95 நிகழ்வுகளில் இருந்து முதலாளித்துவ வர்க்கம் கற்றுக் கொண்டிருந்தது. தனது சொந்த சமூக மற்றும் பொருளாதார நிலையை உறுதிப்படுத்துவதில் அது வெற்றிபெற்றதால், அதேயளவுக்கு வெகுஜனங்களின் கோரிக்கைகளை எதிர்ப்பதற்கு அது கூடுதல் தீர்மானத்துடன் உறுதிப்பட்டது. இதனையொட்டிய மோதலில், சமூகத்தின் முன்னர் மறைந்திருந்த தன்மை வெளிப்பார்வைக்கு வந்து விட்டது. மிகவும் ஞாபகத்தில் இருக்கவேண்டிய ஒரு பத்தியில், ட்ரொட்ஸ்கி ஒரு புரட்சிகர சகாப்தம் என்பது "அரசியல் சடவாதத்தின் ஒரு பள்ளி" என விவரித்தார்.

அது அனைத்து சமூக விதிமுறைகளையும் வலிமையின் மொழியில் மொழிபெயர்க்கிறது. வலிமையை நம்புபவர்களுக்கு, ஒன்றுபட்டு ஒழுங்கமைந்து நடவடிக்கைக்கு தயாராய் இருப்பவர்களுக்கு செல்வாக்கை அளிக்கின்றது. அதன் வலிமை மிகுந்த அதிர்வுகள் வெகுஜனங்களை போராட்டக் களத்திற்கு துரத்துவதுடன் ஆளும் வர்க்கங்களை —அகன்று செல்பவர்கள் மற்றும் வந்து சேர்பவர்கள் இருவரையுமே— அவர்களுக்கு அடையாளமும் காட்டுகிறது. சரியாக இதே காரணத்தால் தான் அதிகாரத்தை இழக்கின்ற வர்க்கத்திற்கும் சரி அதிகாரத்தை பெறுகின்ற வர்க்கத்திற்கும் சரி இது திகிலூட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தப் பாதைக்கு வந்து விட்ட பின் வெகுஜனங்கள் தங்கள் சொந்த தர்க்கத்தை அபிவிருத்தி செய்து கொள்கின்றனர் என்பதோடு புதிதாய் வந்து சேரும் முதலாளித்துவ வர்க்கத்தின் பார்வையில் அவசியமானதற்கும் அதிக தூரம் போகின்றனர். ஒவ்வொரு நாளும் புதிய முழக்கங்களை சுமந்து வருகிறது, அவை ஒவ்வொன்றும் முந்தையதை விட கூடுதல் தீவிரப்பட்டதாய் இருக்கின்றன, அவை மனித உடலின் இரத்த ஓட்டம் போல் துரிதமாய் பரவி சுற்றி வருகின்றன. முதலாளித்துவ வர்க்கம் புரட்சியை ஒரு புதிய அமைப்பு முறைக்கான தொடக்கப் புள்ளியாக ஏற்றுக் கொள்ளுமானால், வெகுஜனங்களின் புரட்சிகர ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த கோரிக்கை வைப்பதற்கான எந்த வாய்ப்பையும் அது தனக்கு இல்லாது செய்து கொள்ளும். அதனால்தான் மக்களின் உரிமைகளை பலியிட்டு, பிற்போக்குவாதத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது தாராளவாத முதலாளித்துவத்திற்கான ஒரு வர்க்கக் கட்டாயமாக உள்ளது.

புரட்சிக்கு முந்தைய, புரட்சியின் சமயத்தில் மற்றும் புரட்சிக்குப் பிந்தைய நிலைக்கு இது சமமாய் பொருந்துகிறது.42

1848 ஜனநாயகப் புரட்சியை, ஜேர்மன் பூர்சுவாசி காட்டிக் கொடுத்ததை கவனமாய் மதிப்பாய்வு செய்தபின், அதற்கு ஒரு அரை நூற்றாண்டுக்குப் பின்னர் பூர்சுவாசி எந்த வகையான முற்போக்கு அரசியல் பாத்திரத்தையும் ஆற்றுவதற்கான சாத்தியம் இன்னும் குறைந்து விட்டிருந்தது என்ற அரசியல் முடிவிற்கு ட்ரொட்ஸ்கி வந்தார். மேலும் முந்தைய அரை நூற்றாண்டு காலத்தில் முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்தியானது ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதார சுரண்டலின் ஒரு உலகளாவிய அமைப்பிற்குள் இழுத்து விட்டிருந்தது. இந்த புள்ளியில் தான் ட்ரொட்ஸ்கி ரஷ்யப் புரட்சியின் அபிவிருத்தியில் ஒரு புதிய மற்றும் தீர்மானகரமான காரணிக்கு கவனத்தைக் கோருகிறார்:

தனது சொந்த பொருளாதார வகையையும் சொந்த உறவுகளையும் அனைத்து நாடுகளின் மீதும் திணிக்கும் முதலாளித்துவம் ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு ஒற்றை பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பாக மாற்றி விட்டிருக்கிறது. எப்படி நவீன கடன் ஆயிரக்கணக்கான நிறுவனங்களை கண்ணுக்குத் தெரியாத ஒரு இழையினால் இணைத்து மூலதனத்திற்கு மலைப்பூட்டும் நகர்வுதன்மையை கொடுத்து ஏராளமான சிறிய மற்றும் பகுதிவாரியான நெருக்கடிகளை எல்லாம் நீக்கி விட்டு அதேசமயத்தில் பொதுவான பொருளாதார நெருக்கடிகளை ஒப்பிடமுடியா அளவுக்கு அதீத தீவிரமாக ஆக்குகிறதோ, அதேபோல் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் செயல்பாடும், அதன் உலக வர்த்தகம், அதன் பிரம்மாண்டமான அரசுக் கடன்களின் அமைப்பு மற்றும் அனைத்து பிற்போக்குவாத சக்திகளையும் உலகளாவிய ஒரு ஒற்றை கூட்டுப் பங்கு நிறுவனமாக ஒன்றிணைக்கும் சர்வதேச அரசியல் கூட்டணிகள் ஆகியவற்றுடன் இணைந்து அனைத்து பகுதியான அரசியல் நெருக்கடிகளையும் எதிர்த்து நின்றது மட்டுமன்றி மட்டுமன்றி முன்கண்டிராத பரிமாணங்களுடனான ஒரு சமூக நெருக்கடிக்கான நிலைமைகளையும் தயாரித்திருக்கிறது. நோயறி நிகழ்முறைகள் அத்தனையையும் தன்னகத்தே உள்ளடக்கியிருப்பதுடன், சிக்கல்கள் அத்தனையையும் தீர்க்காமல் அதனைச் சுற்றிக் கடந்து செல்வது, உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலின் ஆழமான பிரச்சினைகள் அத்தனையையும் உதாசீனம் செய்வது, அத்துடன் முரண்பாடுகள் அத்தனையையும் இருட்டடிப்பு செய்வது இவற்றின் மூலமாக முதலாளித்துவமானது சிக்கல்-அவிழ்ப்பை தள்ளிப் போட்டிருப்பதோடு அதேவேளையில் தனது மேலாதிக்கமானது தீவிரப்பட்டதான மற்றும் உலகளாவிய வகையில் நீர்த்துப் போகும் நிலைக்கும் தயாரிப்பு செய்து விட்டிருக்கிறது. மூலங்கள் குறித்த எந்தக் கேள்வியுமின்றி ஒவ்வொரு பிற்போக்குத்தனமான சக்தியுடனும் அது ஆர்வமுடன் ஒட்டிக் கொண்டு விட்டிருக்கிறது...

வெகு ஆரம்பத்தில் இருந்தே, இந்த உண்மையானது தற்போது கட்டவிழும் நிகழ்வுகளுக்கு ஒரு சர்வதேசத் தன்மையை கொடுப்பதுடன் கம்பீரமான வாய்ப்புகளுக்கும் கதவைத் திறக்கிறது. ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான அரசியல் விடுதலை அதனை வரலாற்றுரீதியாக முன்கண்டிராத உயரங்களுக்கு உயர்த்துகிறது. அதற்கு பிரம்மாண்டமான சாதனங்களையும் ஆதாரவளங்களையும் அளித்து உலகளாவிய ரீதியில் முதலாளித்துவத்தின் கலைப்புக்கான முன்முயற்சியாளராக அதனை ஆக்குகிறது. இதற்கான அத்தனை புறநிலை முன்நிபந்தனைகளையும் வரலாறு தயாரித்துத் தந்துள்ளது.43

இந்தப் பத்திகள் உலக சோசலிசப் புரட்சிக்கான ஒரு மூலோபாய ஆசிரியராக ட்ரொட்ஸ்கியின் எழுச்சியை அடையாளப்படுத்துகின்றன!

1905ம் ஆண்டின் பிரம்மாண்டமான வேலைநிறுத்தம் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் உருவாக்கம் ஆகியவற்றின் தாக்கத்தின் கீழ், ரஷ்யாவின் பொருளாதாரப் பின்தங்கிய நிலைமைக்கும் —மார்க்சிசத்தின் மரபுவழி பொருள்விளக்கத்தின் படி இது சோசலிசப் புரட்சிக்கு தயாரிப்பு இல்லாத நிலை— மற்றும் கட்டவிழும் புரட்சிகர சூழ்நிலையில் தொழிலாள வர்க்கம்தான் தீர்மானகரமான சக்தியாக இருக்கின்ற மறுக்கவியலா யதார்த்தத்திற்கும் இடையே முன்னெப்போதையும் விட அப்பட்டமாய் நிற்கும் முரண்பாட்டை சமரசப்படுத்தும் அரசியல் சூத்திரத்தைக் கண்டறிவதற்கு மிகவும் முன்னேறிய சோசலிச சிந்தனையாளர்கள் போராடிக் கொண்டிருந்தனர். புரட்சி எங்கே சென்று கொண்டிருந்தது? தொழிலாள வர்க்கம் எதனைச் சாதிக்கும் என எதிர்பார்க்கலாம்?

1905 நவம்பரில் எழுதிய பார்வஸ் இவ்வாறு அறிவுறுத்தினார்:

தொழிலாளர்’ ஜனநாயகத்தின் கோரிக்கைகள் நனவாகக்கூடிய ஒரு அரசு அமைப்பு வகையை சாதிப்பதே ரஷ்ய பாட்டாளிகளின் நேரடிப் புரட்சிகர இலக்கு ஆகும். தொழிலாளர்’ ஜனநாயகம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அதீத கோரிக்கைகள் அத்தனையையும் உள்ளடக்கியிருக்கும், ஆனால் அவற்றில் சிலவற்றுக்கு இது ஒரு சிறப்பு குணாம்சத்தை அளிக்கிறது என்பதோடு திட்டவட்டமாய் பாட்டாளி வர்க்க குணாம்சம் கொண்டதான புதிய கோரிக்கைகளையும் கொண்டிருப்பதாகும்.44

”சமூக ஜனநாயகத்தின் குறைந்தபட்ச வேலைத்திட்டத்திற்கும் அதன் இறுதி இலக்கிற்கும் இடையே ஒரு சிறப்புத் தொடர்பை” ரஷ்யப் புரட்சி உருவாக்குகிறது என அவர் விளக்கினார். பார்வஸ் மேலும் கூறினார்:

“நாட்டில் உற்பத்தி உறவுகளில் ஒரு அடிப்படையான மாற்றத்தை நடைமுறைப்படுத்துவதை தனது கடமையாகக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக இது அர்த்தமாகி விடுவதில்லை என்றாலும், இது ஏற்கனவே முதலாளித்துவ ஜனநாயகம் என்பதைக் கடந்து செல்கிறது. முதலாளித்துவ புரட்சியை, ஒரு சோசலிச புரட்சியாக மாற்றுகின்ற கடமையை கையிலெடுக்கின்ற அளவுக்கு, ரஷ்யாவில் நாம் இன்னும் ஆயத்தமாகியிருக்கவில்லை, ஆனால் அதே அளவுக்கு முதலாளித்துவ புரட்சியின் முன் மண்டியிடுவதற்கும் நாம் அதனினும் தயாராயில்லை. அது நமது ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தின் முதல் அடிக்கோள்களுடன் முரண்படும் என்பது மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் நம்மை முன்நோக்கி செலுத்துகிறது. முதலாளித்துவப் புரட்சியின் வரம்புகளை விரிவாக்கி அதற்குள்ளாக பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை சேர்ப்பதும், முதலாளித்துவ அரசியல் சட்ட அமைப்பிற்கு உள்ளாகவே சமூக-புரட்சிகர எழுச்சிக்கு மாபெரும் சாத்திய வாய்ப்புகளை உருவாக்குவதும் நமது பணியாக இருக்கிறது.45 (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

ரஷ்ய பொருளாதார அபிவிருத்தியின் பின்தங்கிய நிலைமை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கவேகம் ஆகியவை முன்நிறுத்திய பிரச்சினைக்கு முன்னால் பார்வஸும் கூட பின்வாங்குவதாகவே தோன்றியது.

ஒரு மாதத்திற்குப் பின்னர், பாரிஸ் கம்யூன் மீதான மார்க்ஸின் உரைக்கு தான் எழுதிய அணிந்துரையில் ட்ரொட்ஸ்கி, இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு இருந்ததென உறுதிபடக் கூறினார். ஆனால் அதனைக் கண்டறிய வேண்டுமாயின், குறிப்பிட்ட ஒரு நாட்டின் உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி மட்டத்திற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு தொழிலாள வர்க்கம் பெற்றுள்ள திறனுக்கும் இடையில் ஒரு உத்தியோகபூர்வமான மற்றும் எந்திரத்தனமான உறவு நிலவவில்லை என்ற புரிதல் அத்தியாவசியமாக இருந்தது. மற்ற இன்றியமையாத காரணிகளையும் - அதாவது “வர்க்கப் போராட்ட உறவுகள், சர்வதேச சூழ்நிலை, மற்றும் இறுதியாக, பாரம்பரியம், முன்முயற்சி, போராடுவதற்கு ஆயத்தமாய் உள்ள நிலை ஆகிய ஏராளமான அகநிலைக் காரணிகளையும்” -  புரட்சிரகரக் கட்சி கணக்கில் எடுத்திருக்க வேண்டும்.46 இந்த ஆழ்நோக்கில் இருந்து பிறக்கும் முடிவு என்ன? ட்ரொட்ஸ்கி அறிவித்தார்: “பொருளாதார ரீதியாக பின்தங்கியதொரு நாட்டில், மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடு ஒன்றைக் காட்டிலும் விரைவாக பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வர முடியும்.”47 இந்த முடிவுக்கு வருவதற்கு ஒரு அரை நூற்றாண்டு கால சமூக-பொருளாதார அபிவிருத்தி, பல தசாப்த தத்துவ வேலைகள் மற்றும் ஒரு புரட்சியின் அனுபவம் ஆகியவை தேவைப்பட்டிருந்தது.

இந்த புள்ளியில் ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படை உருவரையை முடிவு செய்திருந்தார். உண்மையில், லஸ்சால் உரைக்கான அவரது “அறிமுகம்” மற்றும் பாரிஸ் கம்யூன் மீதான மார்க்ஸின் உரைக்கு அவரது “அணிந்துரை” ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த பத்திகள் முடிவுகளும் வாய்ப்புவளங்களும் (Results and Prospects) படைப்பில் மறுபிரசுரம் பெற்றன. இருப்பினும், இந்த முக்கிய படைப்பை எழுதுவதற்கு அவர் தயாரித்துக் கொண்டிருந்த வேளையிலும் காவுட்ஸ்கியின் எழுத்துகளில் ட்ரொட்ஸ்கி தொடர்ந்து ஊக்கமும் உத்வேகமும் பெற்றிருந்தார்.

அமெரிக்க வர்க்கப் போராட்டம் குறித்த காவுட்ஸ்கியின் பகுப்பாய்வு

பிப்ரவரி 1906-ல் காவுட்ஸ்கியால் எழுதப்பட்டிருக்கும் “அமெரிக்கத் தொழிலாளி” என்ற ஏறக்குறைய அறியப்படாத ஒரு படைப்பு டே-கெய்டோ தொகைத்திரட்டில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஜேர்மன் சமூகவியல் அறிஞர் வேர்னெர் சோம்பார்ட் (1863-1941) அமெரிக்க சமூகம் குறித்து செய்த ஆய்வுக்கு, (அமெரிக்காவில் ஏன் சோசலிசம் இருக்கவில்லை? என்ற குழப்பமானதொரு தலைப்பை அது தாங்கியிருந்தது) அளித்த பதிலாக இது எழுதப்பட்டது. இது ஒரு முக்கிய கேள்வியே. அரசியல் பார்வையில் இருந்து, அது பதில் கூறப்பட வேண்டிய ஒன்று என்பது வெளிப்படை. மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாட்டிற்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் பின்னால் வெகுஜனங்களை சோசலிசத்திற்கு ஆதரவாய் திரட்ட முடியவில்லை என்றால் சோசலிசத்தின் எதிர்காலம் என்ன? மேலும், உதாசீனம் செய்ய முடியாத இன்னுமொரு முக்கிய தத்துவார்த்தப் பிரச்சினையும் இருந்தது. மார்க்சிச தத்துவக் கட்டமைப்புக்குள்ளாக பின்வரும் மெய்யியல்-புதிருக்கு விளக்கம் காண வேண்டியிருந்தது: மிகவும் முன்னேறிய முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் சோசலிசம் சற்றுங் கூட முன்நகர்வதாய் தெரியவில்லை, ஆனால் முதலாளித்துவம் குறைந்த மட்டத்தில் அபிவிருத்தியுற்றிருந்த நாடான ரஷ்யாவில் சோசலிசம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருந்தது. இந்த புதிருக்கு என்ன விளக்கம்? இன்னொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. மார்க்ஸ் சுட்டிக் காட்டியதைப் போல, முன்னேறிய நாடுகள் வெளிப்படுத்தும் அபிவிருத்தி “வடிவமைப்பு மாதிரி” (pattern) குறைந்த அபிவிருத்தி நாடுகள் அவசியமாய் மறுஉற்பத்தி செய்யும் என்றால், உலகின் மிகவும் முன்னேறிய மற்றும் சக்திவாய்ந்த நாட்டில் நடந்தேறும் ‘சோசலிசம்-அற்ற’ அபிவிருத்தி வடிவமைப்பு மாதிரியின் தாக்கங்கள் என்னவாய் இருக்கும்? மிகவும் பழமைவாத முடிவுகளைத் தேற்றம் செய்த சோம்பார்ட், அமெரிக்கா ஐரோப்பாவுக்கு அதன் எதிர்காலத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாக வாதிட்டார்.

காவுட்ஸ்கி ஒரு ஆட்சேபம் கிளப்பினார். சோம்பார்டின் கூற்றை ”பெரும் நிபந்தனைகளுடன் தான் ஏற்றுக் கொள்ள முடியும்” என்று அவர் எழுதினார். முதலாளித்துவத்தின் உலகளாவிய அபிவிருத்தியின் அடிப்படையில் உருவாகியிருந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உறவுகளின் ஒரு சிக்கலான மொத்த வடிவில் இருந்து ஒரு தரப்பான வகையில் அமெரிக்க நிலைமைகளை மட்டும் பிரித்தெடுத்ததுதான் இந்த சமூகவியலாளர் செய்த பிழை. மார்க்ஸ் மிகவும் பரிச்சயம் கொண்டிருந்த இங்கிலாந்தின் அபிவிருத்தி வடிவமைப்பு மாதிரி மற்ற நாடுகளில் அப்படியே மறுஉருவாக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதை கவனிக்க சோம்பார்ட் தவறினார். மார்க்ஸ் காலத்து இங்கிலாந்து மிகவும் அபிவிருத்தியுற்ற தொழில்துறையைக் கொண்டிருந்தது. ஆனால் தொழிற்துறை முதலாளித்துவத்தின் முன்னேற்றம் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்ப்பு மற்றும் அதன் அமைப்பில் எதிரெதிர் போக்குகளை உருவாக்கியது. இதனால் இங்கிலாந்து சார்ட்டிசம் (Chartism), பின்னர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூகநலச் சட்டங்களின் எழுச்சியை கண்டது. ஆனால், முதலாளித்துவ அபிவிருத்திக்கும் தொழிலாள வர்க்க எதிர்-நடவடிக்கைக்கும் இடையில் இடைத்தொடர்பு நிலவிய இந்த அபிவிருத்தியானது ஒரு உலகளாவிய “வடிவமைப்பு மாதிரியை” ஸ்தாபிக்கவில்லை.

காவுட்ஸ்கி விளக்கினார்:

இன்று, மொத்த பொருளாதார வாழ்க்கையையும் மூலதனம் கட்டுப்படுத்தக் கூடிய நிலைக்குள் ஏராளமான நாடுகள் தொடர்ச்சியாய் வந்திருக்கின்றன. என்றாலும் இவற்றில் எதுவும் உற்பத்தியின் முதலாளித்துவ வகைமுறையின் அனைத்து அம்சங்களிலும் ஒரேமட்டத்திற்கு அபிவிருத்தி கண்டிருக்கவில்லை. குறிப்பாக, ஒன்றுக்கொன்று நேரெதிர்த்து நிற்கும் நிலையில் இரண்டு அரசுகள் நிற்கின்றன, இரண்டிலுமே இந்த உற்பத்தி வழிமுறையின் இரண்டு கூறுகளில் ஒன்று விகிதாசார பொருத்தமற்ற வலிமையுடன், அதாவது அதன் அபிவிருத்தி மட்டத்திற்குரியதை விடவும் மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது: அதாவது அமெரிக்காவில், முதலாளித்துவ வர்க்கம்; ரஷ்யாவில், தொழிலாள வர்க்கம் ஆகியவையே இந்த விகிதாசார பொருத்தமற்ற வலிமையுடன் இருந்தன. 48

அப்படியானால் எந்த நாடு ஜேர்மனிக்கு அதன் எதிர்காலத்தைக் காட்டியது?  காவுட்ஸ்கி பதிலளித்தார்:

ஜேர்மனியின் பொருளாதாரம் அமெரிக்காவினுடையதற்கு நெருக்கமான ஒன்று; ஆனால் அதன் அரசியலோ ரஷ்யாவினுடையதற்கு நெருக்கமாய் இருக்கிறது. இந்த வழியில் இரண்டு நாடுகளுமே நமக்கான வருங்காலத்தைக் காட்டுகின்றன. இது பாதி அமெரிக்க, பாதி ரஷ்ய குணாம்சத்தைக் கொண்டிருக்கும். ரஷ்யாவையும் அமெரிக்காவையும் குறித்து எந்த அளவிற்கு அதிகமாய் நாம் கற்கிறோமோ, எவ்வளவு மேம்பட்ட விதத்தில் இரண்டு நாடுகளையும் நாம் புரிந்து கொள்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் நமது சொந்த வருங்காலத்தைப் புரிந்து கொள்ள முடியும். அமெரிக்க உதாரணத்தை மட்டும் எடுத்தால் அல்லது அதேபோல ரஷ்ய உதாரணத்தை மட்டும் எடுத்தால் அது தவறாகவே வழிநடத்திச் செல்லும்.

சரியாக ரஷ்ய பாட்டாளி வர்க்கம்தான் நமது எதிர்காலத்தை — தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி விடயத்தில் தான், மூலதனத்தின் ஒழுங்கமைப்பு விடயத்தில் அல்ல— நமக்குக் காட்ட வேண்டும் என்பது நிச்சயமாக ஒரு தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுப்போக்காகும், ஏனென்றால் முதலாளித்துவ உலகின் அனைத்து பெரும் அரசுகளிலும் ரஷ்யா தான் மிகவும் பின் தங்கியதாய் இருக்கிறது. பொருளாதார அபிவிருத்திதான் அரசியலுக்கான அடிப்படையை தனக்குள் கொண்டிருக்கிறது என்ற வரலாறு குறித்த சடவாத கருத்தாக்கத்திற்கு இது முரண்படுவது போல் தோன்றலாம். ஆனால், உண்மையில், வரலாற்றுச் சடவாதம் என்று நமது எதிரிகளும் விமர்சகர்களும் ஏதோவொன்றைக் கருதிக் கொண்டு நம்மை குற்றம்சாட்டுகின்றார்களே அந்த வரலாற்று சடவாத வகைக்கு மட்டுமே அது முரண்படுகிறது. அவர்கள் அதனை ஒரு ஆயத்த-தயாரிப்பு மாதிரிவகை (ready-made model) போல் புரிந்து கொள்கிறார்களே அன்றி ஆய்வுக்கான ஒரு வழிமுறையாக புரிவதில்லை. அவர்கள் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை, பயனுள்ள வகையில் செயற்படுத்தவும் முடியவில்லை என்பதால்தான் வரலாறு குறித்த சடவாத கருத்தாக்கத்தை அவர்கள் நிராகரிக்கின்றனர்.49

அமெரிக்காவின் அரசியல் அபிவிருத்தியின் பிரத்யேகத்தன்மை குறித்த காவுட்ஸ்கியின் விளக்கத்தை ஆராய வேண்டுமென்றால், இந்தத் திறனாய்வை குறிப்பிடத்தக்க அளவு நீட்டாமல் அது சாத்தியமில்லை. சோசலிசம் ஐரோப்பாவில் போல் அமெரிக்காவில் முன்னேறுவதை அசாதாரண சிரமமாக்கிய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலை குறித்த ஒரு வெகு ஆழமான பகுப்பாய்வை காவுட்ஸ்கி வழங்கினார் என்று கூறுவது இங்கு போதுமானது. அமெரிக்க முதலாளித்துவத்தின் பெரும் செல்வம், புத்திஜீவித் தட்டின் ஒரு கணிசமான பகுதியை சீரழித்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக தேவைகளுக்கு அது அலட்சியம் காட்டும் வகையில் செய்தது என்பதும் அவர் சுட்டிக் காட்டிய காரணிகளில் ஒன்றாகும். எப்படியிருப்பினும், பல தடைகள் இருந்தாலும் அமெரிக்காவில் இறுதியாக சோசலிசம் முக்கியமானதொரு அரசியல் சக்தியாக மாறியே தீரும் என்று காவுட்ஸ்கி நிறைவு செய்தார்.

காவுட்ஸ்கியின் “அமெரிக்கத் தொழிலாளி” ட்ரொட்ஸ்கியின் மீது ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கை செலுத்தியது. அதனை முடிவுகளும் வாய்ப்புவளங்களும் படைப்பில் அவர் வெளிப்படையாய் ஒப்புக் கொண்டார். அவர் தனது படைப்பில் மேலே கூறப்பட்ட பத்திகளில் இருந்தான மேற்கோள்களை சேர்த்துக் கொண்டார். காவுட்ஸ்கிக்கு தானும் தனது தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களும் ஆழமாய் கடன்பட்டிருந்ததை ட்ரொட்ஸ்கி ஒருபோதும் மறுத்ததில்லை. காவுட்ஸ்கியின் பிந்தைய காட்டிக் கொடுப்புகளை ட்ரொட்ஸ்கி மன்னிக்கவில்லை, ஆனால் அவரது சாதனைகளை மறுப்பதற்கோ அல்லது குறைத்துக் காட்டுவதற்கோ அவசியமிருப்பதாய் அவர் கருதவில்லை. 1938-ல் காவுட்ஸ்கி இறந்தபோது ட்ரொட்ஸ்கி அவரை இவ்வாறு நினைவுகூர்ந்தார்: “ஒரு சமயம் நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாய் இருந்த நமது முன்னாள் ஆசிரியர் இவர். ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியிடம் இருந்து அவராகவே பிரித்துக் கொண்டார். அதனையடுத்து அவரிடம் இருந்து நாம் பிரித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.”50

நிரந்தரப் புரட்சி தத்துவம் குறித்த ட்ரொட்ஸ்கியின் விளக்கத்திற்கு காவுட்ஸ்கி அளித்திருக்கும் முக்கிய பங்களிப்பு குறித்து வலியுறுத்துவது அவசியமாயிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் குட்டி முதலாளித்துவ மார்க்சிச-விரோத இடதுகள் எந்த சோசலிச தத்துவார்த்த பாரம்பரியத்தினை முழுமையாக மதிப்பிழக்கச் செய்வதற்கான முயற்சிகளில் ஏராளமான மையை வீணடித்திருக்கிறதோ, அந்த பாரம்பரியத்தின் அபிவிருத்தியில் காவுட்ஸ்கி ஒரு பெரும் பாத்திரம் வகித்திருந்தார் என்பதால் தான். காவுட்ஸ்கியின் மொத்த பணிகளின் மீதுமான கண்டனங்கள் பிராங்க்பேர்ட் பள்ளியால் முன்னெடுக்கப்பட்டும் பல்வேறுபட்ட இடது-தீவிரவாத போக்குகளால் உருப்பெருக்கப்பட்டும் வந்திருக்கின்றன. வலதின் பக்கமிருந்தான இக்கண்டனங்கள், 1914க்கு முந்தைய சமூக ஜனநாயகக் கட்சியின் பலவீனங்களது தன்மை மற்றும் புறநிலை மூலங்களைப் பற்றி விளக்குவதற்கு மாறாக, அதன் மிகப்பெரும் பலத்திற்கு எதிராக, அதாவது அக்கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல்ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கல்வியூட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது மற்றும் அதற்கான முனைப்புக் காட்டியது என்பதை நோக்கி செலுத்தப்பட்டதாக இருந்தது. 1914க்கு முந்தைய சமூக ஜனநாயகக் கட்சியின் மீது அழுத்திக் கொண்டிருந்த அரசியல் அழுத்தங்களுக்கு பலியாகும் முன்னதாக காவுட்ஸ்கி எழுதிய எழுத்துக்களைக் கற்பதானது மார்க்சிச சிந்தனையின் —லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியினுடையது உட்பட— அபிவிருத்தி குறித்த ஒரு ஆழமான புரிதலை சாத்தியமாக்கும். இந்த சிறந்த தொகுதிக்கு வழங்கிய அறிமுகத்தை நிறைவு செய்வதற்கு டே மற்றும் கெய்டோ பயன்படுத்தும் வார்த்தைகளை இம்மதிப்புரையாளர் முழுமையாக வழிமொழிகிறார்:

நிரந்தரப் புரட்சி தத்துவமானது, ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது விமர்சகர்கள் இடையே மட்டுமன்றி கல்வியியல் வரலாற்றாசிரியர்கள் இடையேயும், பல தசாப்த காலங்களாய் விவாதத்திற்கான மையப்பொருளாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் வரலாற்றின் நீதியவையில், காவுட்ஸ்கிக்கு தீர்ப்பளிப்பதில் ட்ரொட்ஸ்கி நன்கு புரிந்து வைத்திருந்ததைப் போல, பங்கேற்பவர்கள் தங்களுக்கான வாதத்தை எடுத்து வைப்பதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உறுதி செய்வது தான் நியாயமும் கண்ணியமும் ஆகும். 51

1903 மற்றும் 1907ம் ஆண்டுகளுக்கு இடையில் மார்க்சிச சமூக மற்றும் அரசியல் சிந்தனையானது ஒரு அசாதாரண வளர்ச்சிக்கு உட்பட்டது. இந்த ஆவணங்களை கற்பதென்பது, அரசியல் சிந்தனை இன்றிருப்பதை விட ஒப்பிட முடியாத அளவு உயரத்தில் இருந்த ஒரு காலத்திற்கு திரும்புவதாகும். இந்த மதிப்புரை நீளமானதாய் இருந்தாலும் கூட, நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் செறிந்த வளத்திரட்சி மீதான ஒரு சிறிய அனுபவத்தை மட்டுமே இது வழங்கியிருக்கிறது. இந்த தொகைத் திரட்டில் வழங்கப்பட்டிருப்பது போன்ற சிக்கலானதும் தொலைசிந்தனையானதுமான ஆவணங்கள் பன்முகப்பட்ட பொருள் விளக்கங்களுக்கு வழிவகுப்பது தவிர்க்கவியலாதது. ரிச்சார்ட் டே மற்றும் டானியல் கெய்டோவின் முடிவுகளுடன் நான் உடன்படாத சில பகுதிகளை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டில் புரட்சிகர தத்துவத்தின் அபிவிருத்தி குறித்த ஆர்வத்திற்கு புத்துயிரூட்ட அவர்கள் செய்திருக்கும் மிக முக்கிய பங்களிப்புக்கு நான் கொண்டிருக்கக் கூடிய மிகப் பெரும் பாராட்டுகளை அது கொஞ்சமும் குறைத்து விடாது என்பதை அநேக சோசலிஸ்டுகள் உணர்ந்து கொள்வார்கள்.

1 Published 19 April, 2010 on the World Socialist Web Site.

2 Leon Trotsky, “The New Course,” The Challenge of the Left Opposition 1923–25 (New York: Pathfinder Press, 1975), p. 113.

3 Richard B. Day and Daniel Gaido, ed. and trans., Witnesses to Permanent Revolution (Leiden, The Netherlands: Brill Academic Publishers, 2009), p. 3.

4 Ibid., pp. 9–10.

5 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 10 (London: Lawrence & Wishart, 1978), p. 280.

6 Ibid., p. 287.

7 Witnesses to Permanent Revolution, p. 63.

8 Ibid., p. 181.

9 Ibid., p. 569.

10 Ibid.

11 Ibid., p. 223.

12 Ibid., p. 541.

13 Ibid., pp. 642–643.

14 Ibid., p. 36.

15 Ibid., p. 376.

16 Ibid., p. 407.

17 Ibid., p. 374.

18 Ibid., p. 375.

19 Ibid., p. 70.

20 Ibid.

21 Ibid., pp. 133–134.

22 Ibid., pp. 121–122.

23 Lenin, Collected Works, Volume 5 (Moscow: Foreign Languages Publishing House, 1961), p. 384.

24 Witnesses to Permanent Revolution, p. 70.

25 Ibid., p. 473.

26 Writings of Leon Trotsky 1939–40 (New York: Pathfinder Press, 1973), p. 58.

27 Lenin, Collected Works, Volume 9 (Moscow: Progress Publishers, 1972), pp. 56–57.

28 Writings of Leon Trotsky 1939–40, p. 59.

29 Witnesses to Permanent Revolution, p. 257.

30 Lenin, Collected Works, Volume 9, p. 48.

31 Witnesses to Permanent Revolution, p. 252.

32 Ibid., p. 261.

33 Ibid.

34 Ibid., 267.

35 Ibid., pp. 267–268.

36 Ibid., pp. 282–284.

37 Ibid., p. 247.

38 Ibid., p. 236.

39 Ibid., p. 334.

40 Ibid., p. 347.

41 Ibid., p. 411.

42 Ibid., p. 416.

43 Ibid., p. 444–445.

44 Ibid., p. 493.

45 Ibid.

46 Ibid., p. 502.

47 Ibid.

48 Ibid., pp. 620–621.

49 Ibid., p. 621.

50 Ibid., p. 58.

51 Ibid.