Print Version|Feedback
India adopts Hindu supremacist citizenship law
இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது
By Rohantha De Silva and Keith Jones
13 December 2019
இந்தியா அதன் “மதச்சார்பற்ற” அரசியல்-அரசியலமைப்பு ஒழுங்கை, நெஞ்சை உறைய வைக்கும் வகையில் கைவிடுவது தொடர்பான பரவலான மக்கள் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கைகளை எதிர்கொண்ட நிலையில் தான், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கமும் சட்டத்தை விடாப்பிடியாக நிறைவேற்றியுள்ளனர், அது இந்திய குடியுரிமை சட்டத்தை இந்து மேலாதிக்க அடிப்படைத் தன்மையுடையதாக மறு வரையறை செய்துள்ளது.
இந்தியாவின் இருசபை பாராளுமன்றங்களில் கீழ்சபையில் மட்டும் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டதான குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 அல்லது CAB க்கு நேற்று இரவு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டது.
CAB இன் உள்ளடக்கம், பிஜேபி அதன் திட்டப்படி தேசிய குடிமக்கள் பதிவேட்டை (National Register of Citizens-NRC) தயாரிப்பதை தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது, இதன் கீழ் இந்தியாவின் 1.3 பில்லியனுக்கு அதிகமாகவுள்ள அனைத்து குடியிருப்பாளர்களும், அதிகாரிகளின் திருப்திக்கு ஏற்ற வகையில், அவர்கள் இந்திய குடிமக்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியாதவர்கள் நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்பதுடன், அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள் மேலும் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
NRC இன் மறைமுக நோக்கம் “சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை” கண்டறிவதே. உண்மையில் – CAB இதை வெளிப்படையாகவே ஊர்ஜிதப்படுத்துகிறது - NRC இன் நோக்கம் இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினரை துன்புறுத்துவதும், அச்சுறுத்துவதும் மற்றும் பலியிடுவதும் ஆகும்.
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல, “கருணை மற்றும் சகோதரத்துவம்” என்பதாக மோடி குறிப்பிடும் வார்த்தைகளை பயன்படுத்தி CAB ஐ அலங்கரிக்க பிஜேபி இழிவாக முயன்று கொண்டிருக்கிறது.
CAB, 2015 க்கு முன்னர், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் கிறிஸ்துவர்கள் போன்ற முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறது.
தேசிய பாகுபாடு மற்றும்/அல்லது வகுப்புவாத வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களான பாகிஸ்தானின் அஹ்மதியாக்கள் அல்லது ஆப்கானிஸ்தானின் ஷியா ஹசாரஸ் போன்ற சிறுபான்மை முஸ்லீம் குழுக்களின் உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து வெளிப்படையாகவே விலக்கப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பாக ரோஹிங்கியாக்களும் அதில் இல்லாதவர்களாவர், அவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் 2016 பிற்பகுதியில் இந்தியாவின் கிழக்கு எல்லையாக இருக்கும் மியான்மரை (பர்மா) விட்டு வெளியேற நேரிட்டது. இந்நிலையில், உயிர்பிழைக்க தப்பியோடி இந்தியாவிற்குள் நுழைந்த இந்த ரோஹிங்கியாக்களை “பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள்” என்று கூறி பிஜேபி அரசாங்கம், அவர்களை தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்து மியான்மருக்கே நாடுகடத்தி வருகின்றது.
CAB உடன் இணைந்ததால், NRC இன் அடிப்படையான பாசிச முஸ்லீம் எதிர்ப்பு நோக்கம் தெளிவாகிறது.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் கல்வியறிவற்றவர்களாகவும் வறியவர்களாகவும் இருக்கும் நிலையில், குடியுரிமை இல்லாதவர்களுக்கான தேசிய சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் அவர்களது இந்திய குடியுரிமையை “நிரூபிக்க” தேவையான ஆவணங்களுடன் வருவது மிகவும் கடினமே. என்றாலும், அனைத்தும் இன்றியமையாததாக்கப்படும் நிலையில், முஸ்லீம்கள் மட்டுமே நாடற்றவர்களாக விடப்படுவதற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள், மற்றவர்களைப் பொறுத்தவரை CAB இன் பாரபட்சமான விதிமுறைகளின் கீழ் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுவிடும்.
CAB இன் படி, Indian Express செய்தியிதழின் கட்டுரையாளர் ஹர்ஷ் மந்தர், “தேவையான ஆவணங்களை வழங்க முடியாத முஸ்லீம்கள் அல்லாத வேறு அடையாளத்துடன் கூடியவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்படும் என்று அரசாங்கம் தெளிவாக செய்தி வெளியிடுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், (NRC இன் கீழ்) தாங்கள் இந்திய குடிமக்கள் தான் என்பதை நிரூபிப்பதற்கான உண்மையான சுமை முஸ்லீம்கள் மீது மட்டும் தான் சுமத்தப்படுகிறது, ஏனென்றால் நாடற்ற நிலையை எதிர்கொள்ளும் அபாயம் அவர்களுக்கு மட்டுமே உள்ளது. அதாவது, பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களைத் திரட்டுவது சாத்தியமற்றதாக இருக்கும், என்றாலும் ஆவணமில்லாத முஸ்லீம்கள் மட்டுமே தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதற்கான அல்லது அவர்களது அனைத்து குடியுரிமை உரிமைகளும் பறிக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்கொள்வர்” என்று குறிப்பிடுகிறார்.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிப்பு
மோடி அரசாங்கத்தின் தவறான விருப்பம் என்வென்பது பற்றிய விளக்கத்தை, வடகிழக்கு மாநிலமான அசாமில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் ஏற்கனவே வழங்கிவிட்டன. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலும், மற்றும் தனிப்பட்ட அசாமிய கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வர 1985 இல் இராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சி அரசாங்கம் ஒப்புக்கொண்ட பிற்போக்கு ஒப்பந்தத்திலுள்ள ஷரத்தை பேணுவதன் பேரிலும், அடக்குமுறை பாகிஸ்தானிய ஆட்சிக்கு எதிராக பங்களாதேஷ் தேசிய போராட்டம் 1971 மார்ச்சில் வெடித்ததற்கு முன்னர், அவர்கள் அல்லது அவர்களது மூதாதையர்கள் இந்தியாவில் தான் வாழ்ந்தனர் என்பதை நிரூபிக்க வேண்டுமென அம்மாநிலத்தின் 30 மில்லியன் குடியிருப்பாளர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.
தங்களை இந்திய குடிமக்கள் தான் என “நிரூபிக்க” அவர்கள் போராடிய நிலையில், உளவியல் ரீதியான துன்புறுத்தல், நிதி கஷ்டங்கள் மற்றும் உத்தியோகபூர்வ துஷ்பிரயோகங்களால் மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இன மற்றும் இந்து பேரினவாத அதிகாரிகளின் திருப்திக்கு மட்டுமாக அவர்களது குடியுரிமை கோரிக்கையை அவர்கள் நிரூபிக்க வேண்டியதாயிருக்கவில்லை. மாறாக, NRC இன் விதிமுறைகளின் கீழ், குடியுரிமைக்கான ஒரு தனிநபரின் கோரிக்கையை சவால் செய்ய மூன்றாம் தரப்பினருக்கு கூட உரிமை உண்டு. அனைத்து அசாம் மாணவர் ஒன்றியமும் (All Assam Students Union - AASU) மற்றும் பிற குழுக்களும் இதுபோன்ற 200,000 ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளன.
இறுதியில், கடந்த கோடையில், “இறுதி” NRC வெளியிடப்பட்டபோது, 1.9 மில்லியன் மக்கள், அவர்களில் பெரும்பாலானோர் ஏழை முஸ்லீம்கள், அவர்கள் பட்டியிலிலிருந்து விலக்கப்பட்டனர் – அதாவது குடிமக்கள் அல்லாதவர்கள் என கருதப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (See: India labels 1.9 million Assam residents “foreigners” as prelude to their mass expulsion).
எவ்வாறாயினும், இந்த முடிவு இந்து மேலாதிக்க பிஜேபி ஐ அல்லது AASU போன்ற இன-பிரத்தியேக அசாமிய அமைப்புக்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது. அதாவது, NRC இல் விடுபட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்துக்கள் என அறிவிக்கப்பட்டது குறித்து பிஜேபி கோபமடைந்தது; அசாமில் வசிப்பவர்களில் 1.9 மில்லியன் பேர் “மட்டுமே” சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அறிவிக்கப்பட்டது குறித்து AASU கோபமடைந்தது.
தற்போது NRC இந்தியா முழுவதுமாக நீட்டிக்கப்படவுள்ளது. இந்திய பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் CAB குறித்த திங்கள்கிழமை விவாதத்தில் பேசுகையில், மோடியின் முக்கிய ஆதரவாளரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தேசியளவில் NRC ஐ அரசாங்கம் விரைந்து முன்னெடுத்துச் செல்லும் என்று சபதம் செய்தார். மேலும், “சட்டவிரோதமான” முஸ்லீம் “புலம்பெயர்ந்தோரை” “கரையான்கள்” என்று பலமுறை விவரித்த ஷா, “NRC நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், நாட்டிற்குள் ஊடுருவியவர்கள் எவருமில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று மக்களவையில் தெரிவித்தார்.
தேசிய NRC இன் ஒரு பகுதியாகவும், மேலும் புதிதாக இயற்றப்பட்ட CAB க்கு ஒத்திசைவாகவும், மோடி அரசாங்கம், NRC செயல்முறையை அசாமில் மீண்டும் செயல்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது.
CAB மற்றும் NRC ஆகியவை இணைந்து, இந்தியாவின் 200 மில்லியன் முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக தரமிறக்கும்.
1947 சுதந்திர காலகட்டத்தின் போது, இந்தியாவை வெளிப்படையாக முஸ்லீம் பாகிஸ்தானாகவும், முக்கியமாக இந்து இந்தியாவாகவும் பிரித்து தெற்காசியாவின் பிற்போக்குத்தனமான வகுப்புவாத பிரிவினையை நடைமுறைப்படுத்திய போதிலும், இந்தியாவை இந்து இராஷ்டிரா அல்லது இந்து தேசம் என அறிவிக்க வேண்டும் என்பதான பிஜேபி இன் இந்து மேலாதிக்க முன்னோடி அமைப்புக்களான இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் கோரிக்கையை இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது. CAB திருத்தம் செய்யும், 1955 குடியுரிமைச் சட்டத்தின், குடியுரிமைக்கான அளவுகோலாக மதம் அல்ல, பிராந்தியம் (அதாவது, இந்தியாவில் அல்லது 1947 க்கு முந்தைய பிரிட்டிஷ் இந்திய சாம்ராஜ்யத்தில் பிறப்பு இருந்ததன் அடிப்படையில்) தான் இருந்தது.
முதலில் இந்தியா ஒரு இந்து தேசம் என்று கூறி இந்து வலது எப்போதும் இதை நிராகரித்து வந்தது. இந்துத்துவாவின் முதன்மை கருத்தியலாளரும், இந்து வலதின் சமகாலத்திய கதாநாயகருமான வி.டி.சாவர்க்கர், இந்தியாவின் முஸ்லீம்கள் உண்மையான இந்தியர்கள் அல்லர் என்று வாதிட்டார், ஏனென்றால் அவர்களைப் பொறுத்த வரை – இந்தியாவின் இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் புத்த மதத்தவர்களைப் போலல்லாமல் - இந்தியா அவர்களுக்கு “தாய்நாடு”, என்றாலும் அவர்களது “புனித பூமி” அல்ல. 1930 களின் பிற்பகுதியில், யூதர்களை நாஜிக்கள் நடத்தியது போல முஸ்லீம்களை நடத்தும் படி இந்தியாவின் இந்துக்களை சாவர்க்கர் வலியுறுத்தினார். இத்தகைய வாய்ச்சவடாலை இரண்டாம் உலகப் போரின் போது அவர் கைவிட்டார், ஏனென்றால், முஸ்லீம் “அச்சுறுத்தலை” எதிர்த்துப் போராடுவதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ அரசுடன் ஒரு “ஆங்கிலோ-இந்து” கூட்டணியை உருவாக்க அவரும் இந்து மகாசபாவும் நம்பிக்கை வைத்திருந்தது மட்டுமே அதற்கு காரணமாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாடுகள் சார்ந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் நடத்தப்படும் நிலையில், முஸ்லீம்கள் மட்டுமே தங்கள் இந்திய குடியுரிமையை நிலைநாட்ட வேண்டிய ஒரு செயல்முறையை நடைமுறைப்படுத்தும் விதமாக, இந்து ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி, குடியுரிமைக்கான அளவுகோலாக மதம் தான் பிராந்தியம் அல்ல என்பதான இந்து வலதுகளின் நீண்டகால இலக்குகளை அடைய பிஜேபி அரசாங்கம் பெரிதும் செயலாற்றியுள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த அல்லது தப்பியோடி வந்த கிறிஸ்தவர்களுக்கு CAB இன் கீழ் குடியுரிமை வழங்குவது ஒரு தந்திரமாகும். இது, சட்டத்தின் இந்து மேலாதிக்க தூண்டுதலின் ஏமாற்று வித்தையாகவே உள்ளது, வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க கிறிஸ்தவ வலதுகளின் ஆதரவைத் திரட்டுவதில் இது கவனமாக இருப்பது குறித்து எவ்வித சந்தேகமுமில்லை.
மக்களவையில் நடந்த CAB மீதான விவாதத்தில், “இந்த நாடு பிரிக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது” என்று கூறி, “மத அடிப்படையிலான” குடியுரிமை என்ற கருத்தை ஷா பாதுகாத்தார். அநேகமாக அவர் நினைத்ததை காட்டிலும் அதிகமாகவே அவரது மனநிலையை வெளிப்படுத்திய அவர், “இந்தியா ஒருபோதும் முஸ்லீம் சுதந்திர நாடாக (mukti ) இருக்காது” என்றும் அறிவித்தார்.
பிஜேபி பிரச்சாரத்தின் இந்து மேலாதிக்க வலியுறுத்தல்
கடந்த மே மாதம் தேர்தலில் மீண்டும் வெற்றியடைந்த பின்னர், இந்து வலதுசாரிகளின் திட்டநிரலின் முக்கிய கூறுகளை நிறைவேற்ற மோடி அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, இந்திய அரசின் பிற நிறுவனங்களின், மற்றும் இந்தியாவின் பேராசை மிக்க ஆளும் தட்டின் வெளிப்படையான ஆதரவை அல்லது ஒப்புதலை அது கொண்டிருந்தது.
ஆகஸ்ட் 5 அன்று, மோடியும் ஷாவும், இராணுவ மற்றும் உளவு அமைப்புக்களின் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து வேலைசெய்து, இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் பகுதியளவிலான சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தை இரத்து செய்து, மேலும் அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரம்குறைத்ததுடன், அதன்மூலம் சர்ச்சைக்குரிய அப்பிராந்தியத்தை மத்திய அரசின் நிரந்தர கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையிலான ஒரு அரசியலமைப்பு சதியை அங்கு நிறைவேற்றினர்.
காஷ்மீருக்கு எதிரான மோடியின் சதி, பெரும்பாலான பாரம்பரிய இந்திய-சார்புடைய ஆயிரக்கணக்கான முஸ்லீம் காஷ்மீர் உயரடுக்கினரை விசாரணையின்றி தடுத்துவைத்தது; ஏற்கனவே உலகின் மிகப்பெரிய இராணுவமயமாக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான அங்கு பல்லாயிரக்கணக்கான கூடுதல் பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்தியது; இணையம் மற்றும் கைபேசி சேவையை இடைநிறுத்தம் செய்தது உட்பட, ஒரு மாத காலமாக அங்கு நீடிக்கும் தகவல்தொடர்பு இருட்டடிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இன் விருப்பங்களுக்கு தலைவணங்கி, இந்திய உச்சநீதிமன்றம் சென்ற மாதம், பிஜேபி இன் உயர்மட்ட தலைவர்களின் தூண்டுதலின் பேரில் இந்து ஆர்வலர்கள் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியை இடித்து தகர்த்த அதே இடத்தில் ஒரு இந்து கோவில் கட்டமைக்கப்படுவதை மேற்பார்வையிடும் படி அரசாங்கத்தை அறிவுறுத்தியது. இந்த குற்றம், பிரிவினைக்குப் பின்னர் வகுப்புவாத வன்முறையின் இரத்தக்களரியான அலைகளைத் தூண்டியது.
மோடியும் ஷாவும், மோசமான சமூக சமத்துவமின்மையால் உருவாகியுள்ள சமூக பதட்டங்களையும், பிற்போக்குத்தன மற்றும் போர்க்குணமிக்க வெளியுறவுக் கொள்கையின் பின்னணியில் விரைந்து மோசமடைந்து வரும் பொருளாதாரத்தையும் வழிமுறைப்படுத்தவும், மேலும் அதிகரித்தளவில் எதிர்க்கும் மற்றும் போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் நோக்கம் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாத விரோதத்தை முறையாக தூண்டி வருகின்றனர்.
CAB இன் உள்ளடக்கத்துடனும், மேலும் NRC ஐ விரைந்து தொடங்குவதற்கான அதன் உறுதிமொழியுடனும், இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றுவதற்கும், முஸ்லீம்களை இரண்டாம் தர குடியுரிமை கொண்டவர்களாக தரமிறக்குவதற்கும் பிஜேபி தனது உந்துதலை மிகப்பெரியளவில் துரிதப்படுத்தி வருகிறது. இது ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள், வெகுஜன எதிர்ப்பைத் தூண்டும் என்றும், இந்திய அரசை இழிவுபடுத்தும் மற்றும் சட்டபூர்வமற்றதாக்கும் என்றும், மேலும் இராணுவம் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களை சீர்குலைக்கும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஏற்கனவே அரசாங்கம் அசாமிற்கு துருப்புக்களை விரைந்து அனுப்பி, அம்மாநில தலைநகரம் குவஹாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது, மேலும் CAB க்கு எதிராக வெகுஜன போராட்டங்கள் வெடித்ததையடுத்து பத்து அசாம் மாவட்டங்களில் கைபேசி சேவையை நிறுத்தி வைத்துள்ளது. பங்களாதேஷிய இந்து குடியேறியவர்களுக்கு CAB குடியுரிமை வழங்குவதை எதிர்க்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அசாம் இன-பேரினவாத அமைப்புக்கள் தலைமை தாங்குகின்றன, குடியேறியவர்களில் சிலர் வகுப்புவாத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாவர்.
ஊடக அறிக்கைகளின் படி, குவாஹாத்தி ஊரடங்கு உத்தரவை மீறிய போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தியாவின் தொழிலாளர்களையும் உழைப்பாளிகளையும் அரசியல் ரீதியாக கட்டுப்படுத்துவதற்கும் நசுக்குவதற்குமான ஒரு முக்கிய மூலோபாயமாக பல தசாப்தங்களாக வகுப்புவாதமும் சாதியவாதமும் ஊக்குவிக்கப்பட்டு வருவதானது, நச்சுத்தன்மை வாய்ந்த இந்து மேலாதிக்க பிஜேபி ஐ அதன் மிகப்பெரிய கட்சியாக மாற்றியுள்ளதுடன், ஜனநாயக உரிமைகளையும் தாக்கியது என்ற நிலையில், இந்திய முதலாளித்துவமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் இந்து மேலாதிக்கத்தின் வளர்ச்சிக்கும் இந்திய “ஜனநாயகத்தின்” அழிவிற்கும் முற்றிலும் உடந்தையாக உள்ளனர்.
இச்சூழ்லையில், வகுப்புவாத பிற்போக்கை தோற்கடிக்கவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்திலும், ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளர்களை தன் பின்னால் அணிதிரட்டும் வகையில், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டப்பட வேண்டும்.
ஆசிரியர் பின்வரும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்:
Modi’s assault on Kashmir and the Indian working class
[5 November 2019]
India labels 1.9 million Assam residents “foreigners” as prelude to their mass expulsion
[5 September 2019]