Print Version|Feedback
ශ්රී ලංකාවේ සමාජවාදී සමානතා පක්ෂය ජනාධිපතිවරනයට තරඟ වදියි
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றது
Statement of the Socialist Equality Party (Sri Lanka)
3 October 2019
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க), நவம்பர் 16 அன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறது. எங்கள் வேட்பாளர், கட்சியின் நீண்டகால மூத்த உறுப்பினரும் உலக சோசலிச வலைத் தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான பாணினி விஜேசிரிவர்தன ஆவார்.
பாணினி விஜேசிரிவர்தன
முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதற்காக முன்நிற்பது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியின் இந்தப் போராட்டம் சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் வீழ்ச்சி, மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்ற —அமெரிக்காவை மையமாகக் கொண்ட— பெரும் வல்லரசுகளின் புவி-அரசியல் போட்டிகள் மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சியினாலும் உருவாக்கப்பட்டுள்ள ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை ஆளும் வர்க்கம் சிக்கியுள்ளது.
சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவவாத உந்துதலில் இலங்கை சிக்கியுள்ளது. ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க இராணுவத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளது. அமெரிக்க படைகள் சுதந்திரமாக நாட்டிற்குள் நுழையவும், இலங்கையை இராணுவத் தளமாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கும் இராணுவ நிலைநிறுத்தல் ஒப்பந்தத்தில் (சோபா) கையெழுத்திட கொழும்பு அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. பிராந்தியத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானின் போட்டியாளரான அண்டை நாடான இந்தியா, அமெரிக்காவின் மூலோபாய நட்பு நாடாக மாறி அதனுடன் முகாம் அமைக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா தொழிலாளர்கள், புகையிரத தொழிலாளர்கள், அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளினதும் வேலை நிறுத்தம் உட்பட அடுத்தடுத்து போராட்டங்கள் வெடிக்கின்ற சூழ்நிலையிலேயே இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டங்கள், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சிக்கனக் கொள்கைகளுக்கும் மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிராக வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பின் ஒரு பகுதியாகும்.
உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கும் உலகப் போர் அச்சுறுத்தலுக்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த இயக்கமொன்றை உருவாக்குவதற்கே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதர கட்சிகளுடன் சேர்ந்து இலங்கையில் சோ.ச.க. போராடுகிறது.
இந்தியாவின் ஆதரவுடன் வாஷிங்டனால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்தார். இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஆதரவளித்திருந்தனர்.
அமெரிக்காவும் ஏனைய பெரும் வல்லரசுகளும் இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சியையும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தையும் ஆதரித்திருந்தாலும், பெய்ஜிங்குடனான அவரது நெருங்கிய பொருளாதார உறவுகளை எதிர்த்தன. சீனாவிற்கு எதிரான தனது "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கையை அதன் மூலோபாய சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கே வாஷிங்டன் விரும்பியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட அனைத்து முதலாளித்துவ கட்சிகளும், போலி-இடது அமைப்புகளும் கல்வியாளர்களின் ஒரு பகுதியும் இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்தன.
சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் வாஷிங்டன் மற்றும் புது டில்லிக்கு ஆதரவாக தீவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைத்தது. எனினும் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு அரசாங்கம், வாக்குறுதியளித்தபடி எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் தீர்க்கத் தவறிவிட்டது. மாறாக, அது வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டிய, சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு கடனுடன் இணைக்கப்பட்ட கொடூரமான நிலைமைகளை அமுல்படுத்தத் தொடங்கியது.
2018 பெப்பிரவரியில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஐ.தே.க. மற்றும் சிறிசேனவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) பிரிவினர் அடைந்த தோல்விகளில் இந்த சமூக எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. மக்கள் அரசாங்கத்தின் மீதான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வாக்களித்தமையால் புதிதாக அமைக்கப்பட்ட இராஜபக்ஷவின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) பல உள்ளூராட்சி சபைகளை வென்றது.
வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை எவ்வாறு நசுக்குவது என்பது குறித்து கொழும்பில் ஒரு அரசியல் போர் வெடித்தது. ஒரு “வலுவான அரசாங்கத்தை” உருவாக்கும் முயற்சியில், கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு அரசியல் சதியை அரங்கேற்றிய சிறிசேன, பிரதமர் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, அவருக்கு பதிலாக மஹிந்த இராஜபக்ஷவை நியமித்தார். இராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு திரும்புவதை அமெரிக்கா எதிர்த்ததால், ஆட்சி கவிழ்ப்பு தோல்வியடைந்ததுடன், சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது என்று நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க, ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டன. பாதுகாப்பு அதிகாரிகளைப் போலவே சிறிசேன, விக்ரமசிங்க மற்றும் இராஜபக்ஷவும் தாக்குதலை பற்றி நன்கு அறிந்திருந்தும் அது நடக்க அனுமதித்தனர் என்பதை சான்றுகள் காட்டுகின்றன. சிறிசேன அனைத்து பாராளுமன்றக் கட்சிகளின் ஆதரவோடு, கொடூரமான அவசரகால அதிகாரங்களுடன் ஆயுதபாணியாக்கப்பட்ட இராணுவத்தை நாடு பூராவும் கட்டவிழ்த்து விட்டதோடு, சமூக எதிர்ப்பைத் திசைதிருப்பி விடுவதற்காக முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தை வலுப்படுத்துவதே "தேசிய பாதுகாப்பின்" முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று ஐ.தே.க., ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. மற்றும் ஜே.வி.பி.யும் வலியுறுத்தின. ஜனாதிபதித் தேர்தலில், அதற்கான நல்ல திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறிக்கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக்கொள்வதோடு உண்மையில், இந்த திட்டம் ஒரு பொலிஸ் அரசை நோக்கிய நகர்வாகும். சர்வாதிகாரங்களையும் பாசிசத்தையும் தயார் செய்வதே ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சிக்கு ஆளும் வர்க்கங்களின் பதிலிறுப்பாக இருக்கின்றது.
அரசியல் ரீதியாக மதிப்பிழந்த சிறிசேன, தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் இராணுவத்தை பலப்படுத்தி வருகின்றார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. இல் போய் சேர்ந்துகொண்டதால் சிறிசேனவின் ஸ்ரீ.ல.சு.க. பிரிவினர் 65 முதல் 15 ஆக குறைந்துவிட்டனர்.
பெருமளவில் செல்வாக்கிழந்து போன ஐ.தே.க., அதனது வேட்பாளரை முடிவு செய்வதில் நீண்டகாலமாக நிலவிய கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர், கட்சியின் வேட்பாளராக துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவை தேர்வு செய்துள்ளது. பௌத்த உயர் மட்டத்தவர்களின் ஒரு பகுதியினருடனான அவரது உறவு, எதிர்க்கட்சி வேட்பாளர்களை முகங்கொடுக்கும் போது, சிங்கள-பௌத்த வாக்குகளை அவரால் ஈர்க்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வலதுசாரிக் கட்சி புதிய தாராளவாத சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது.
ஸ்ரீ.ல.பொ.ஜ.மு., அதன் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் மஹிந்த இராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய இராஜபக்ஷவை தேர்வு செய்துள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, புலிகள் மீது ஈவிரக்கமின்றி போரை நடத்தியதில் பேர்போனவர். அவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதைப் போலவே, தெற்கில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களையும் இரத்தக்களரியில் அடக்கியமை தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் கோட்டாபய இராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை பெற்றதனால், அவரது ஜனாதிபதி வேட்புமனு தொடர்பாக சர்ச்சைகள் தோன்றியுள்ளன. இது தொடர்பாக 2015 ஆட்சி மாற்றத்துக்கு உதவிய இரண்டு ஆதரவாளர்களான காமினி வியங்கொட, சந்திரகுப்த தேனுவர ஆகியோர் நீதிமன்ற வழக்கை தாக்கல் செய்துள்ளனர். பிற்போக்கு தேர்தல் சட்டங்களின்படி, கோட்டாபய இராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு இலங்கை குடியுரிமையை முறையாகப் பெறத் தவறிவிட்டார் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கில் கோட்டாபய இராஜபக்ஷ தனது தகுதியை நிலைநிறுத்தத் தவறினால், அவர் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதி பெற மாட்டார். அவர் ஆட்சிக்கு வருவது குறித்து மேற்கத்திய ஊடகங்களில் கவலை வெளிப்பட்டுள்ள நிலைமையிலயே இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோட்டாபய இராஜபக்ஷவைப் பற்றிய தனது மதிப்பீட்டில், லண்டனில் வெளிவரும் த எகோனமிஸ்ட் பத்திரிகையின் த எகோனமிஸ்ட் இன்டலிஜன்ஸி யுனிட் (இ.ஐ.யு.), அவர் ஆட்சிக்கு வந்தால், அவர் Òமேற்கு மற்றும் இந்தியாவுடனான உறவு குறைத்து மதிப்பிடப்பட்டு” சீனாவுடனான தனது உறவை மேம்படுத்துவார் என்று கூறியுள்ளது. இந்த கருத்துக்கள், இலங்கையில் சீனா-சார்பு வேட்பாளர் ஆட்சிக்கு வருவதையிட்டு மேற்கத்திய சக்திகளின் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமைப்பின் வேட்பாளராக ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015 இல் சிறிசேனவைச் சூழ அணிதிரண்ட பல பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் சில தொழில் வல்லுநர்களும் இப்போது திசநாயக்கவை ஆதரிக்க தேசிய மக்கள் சக்தியை ஸ்தாபித்துள்ளனர். 1999 இன் பின்னர், ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. வேட்பாளர்களை ஆதரித்த பின்னர், ஜே.வி.பி. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாக இருப்பதோடு 2004 இல் குமாரதுங்க அரசாங்கத்தினுள் நுழைந்து கொண்டதும் அதன் சரித்திரத்தில் அடங்கும்.
போலி இடது கட்சிகளான நவ சம சமாஜ கட்சி, முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் இந்த தேர்தலில் மற்றொரு இழிந்த பாகத்தை வகிக்கத் தயாராகி வருகின்றன. முன்நிலை சோசலிசக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் தாம் "சோசலிச" வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக கூறுகின்றன. இந்த இரு கட்சிகளுடன், நவ சம சமாஜக் கட்சியும் 2015 இல் சிறிசேனவை ஆதரித்தன. விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை அடிமைத்தனமாக ஆதரித்த பின்னர், நவசமசமாஜக் கட்சி ஐ.தே.க.வுக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலையை தமது கடமையாகக் கொண்ட ஒரு வேட்பாளரை முன்வைத்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.), சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் கொள்கைகளுக்காக போராடுவதில் சளைக்காத வரலாற்றைக் கொண்டுள்ளன. உள்நாட்டுப் போரை தொடர்ச்சியாக எதிர்த்த, வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை திரும்பப் பெற அழைப்பு விடுத்த, இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக போராடிய, இந்தப் போராட்டத்துக்காக விவசாயிகளையும் அணிதிரட்டப் போராடிய ஒரே கட்சி இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்தின் பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசின் வடிவத்திலான ஒரு தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் இந்த போராட்டம் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாகும்.
ஓய்வு பெற்ற ஆசிரியரான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணினி விஜேசிரிவர்தன, இந்த சோசலிச முன்னோக்கிற்காக போராடியதில் களங்கமற்ற சரித்திரத்தைக் கொண்டவர். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவரது போராட்டத்தின் காரணமாக தொழிலாளர்கள், ஏழைகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கௌரவமான வரவேற்பைப் பெற்ற அவர், 1980 களில் ஐ.தேக. அரசாங்கத்தால் இடைவிடாத வேட்டையாடலுக்கு உட்பட்டார். அவர், தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் அதன் துரோகங்களுக்கும் எதிரான கொள்கை ரீதியான போராளி ஆவார். 2015 ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ) அமைப்பும் விரைவில் கட்சி கொள்கைகளை சுருக்கமாக உள்ளடக்கிய ஒரு விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிடும். எங்கள் கொள்கைகளை விளக்க நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்துகிறோம். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட புத்திஜீவிகளையும் இன வேறுபாடுகளைக் கடந்து இந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் அதில் பங்கேற்குமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒரு மில்லியன் ரூபா நிதியைத் திரட்டத் தொடங்கியுள்ள சோசலிச சமத்துவக் கட்சி, அதற்காக ஆகக் கூடிய நிதி உதவியைக் கோருகிறது. எங்களது போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை நெருக்கடியை தீர்க்கும் போராட்டமாகும். இதன் அர்த்தம் சோசலிச சமத்துவக் கட்சியை ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியாக கட்டியெழுப்புவதாகும். எங்கள் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் உடன்படும் அனைவரையும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.