Print Version|Feedback
Australian journalist calls on colleagues to defend Assange
அசான்ஜை பாதுகாப்பதற்கு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர், சக ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்
By Oscar Grenfell
12 June 2019
ஒரு பிரதான ஆஸ்திரேலிய பத்திரிகையாளரான ஆண்ட்ரூ ஃபவுலர் (Andrew Fowler), இன்று காலை Sydney Morning Herald நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துக் கட்டுரையில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை பாதுகாப்பது தொடர்பாக தனது சக ஊடகவியலாளர்களுக்கு ஒரு பலமான கோரிக்கை விடுத்துள்ளார்.
ஃபவுலர் ஒரு விருது பெற்ற புலனாய்வு நிருபர் ஆவார், இவர் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் (Australian Broadcasting Corporation-ABC) “Four Corners” மற்றும் “Foreign Correspondent” போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர். ஃபவுலர், முன்னர் Australian செய்தியிதழில் தலைமை பணியாளராகவும், ABC இன் புலனாய்வுத்துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இவர், the inside story of WikiLeaks , The Most Dangerous Man of the World மற்றும் சட்டவிரோதமாக்கிய செய்தித்துறை தொடர்பான Shooting the Messerger போன்ற நூல்களின் ஆசிரியரும் ஆவார்.
ஆண்ட்ரூ ஃபவுலர்
2012 இல், விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் மீதான சுவீடன் விசாரணை கொண்டிருந்த போலி தன்மையை விரிவாக அம்பலப்படுத்திய “பாலியல், பொய்கள் மற்றும் ஜூலியன் அசான்ஜ்,” என்ற தலைப்பிலான “Four Corners” நிகழ்ச்சிக்கு ஃபவுலர் இணை ஆசிரியராக பணியாற்றினார்.
அமெரிக்க போர் குற்றங்களையும் மற்றும் அதன் இராஜதந்திர சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்தியதில் அசான்ஜின் பங்கு குறித்து அவர் மீது வழக்குத் தொடர்வதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கும், மேலும், ஒரு News Corp ஊடக செய்தியாளருக்கும் மற்றும் ABC இன் சிட்னி அலுவலகத்திற்கும் எதிராக ஆஸ்திரேலிய மத்திய பொலிஸ் (AFP) சென்ற வாரம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளுக்கும் இடையிலான ஒரு நேரடி தொடர்பை ஃபவுலர் காட்டுகின்றார்.
AFP இன் இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள், பொதுமக்கள் மீதான கண்காணிப்பை விஸ்தரிப்பதற்கும், சட்டவிரோதமான கொலைகளில் ஆஸ்திரேலிய இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கும், மேலும் ஆப்கானிஸ்தானில் ஏனைய போர் குற்றங்களை நிகழ்த்துவதற்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் தயாரிப்புகளைப் பற்றி கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்தியதற்கு பதிலடியாக நடந்தேறின.
“ABC மீதான திடீர் சோதனை நடவடிக்கைகள், அசான்ஜை ஊசலாட விட்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கான விழிப்பூட்டும் ஒரு அழைப்பு” என்ற தலைப்பிலான கட்டுரையில், இந்த சோதனைகள் “எதிர்பாராத பலன்களை உருவாக்கியுள்ளன. ஏனென்றால், ஊடகவியலாளர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள், அடிப்படை பிரச்சினைகளை அம்பலப்படுத்தப்படுதல் மற்றும் அதை தெரிந்து கொள்வதற்கான பொதுமக்கள் உரிமை குறித்து அவர்களது நிலைப்பாடு என்ன? ஆகியவற்றைப் பற்றி தீர்மானிப்பதற்கு ஊடகவியலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர்” என்று ஃபவுலர் குறிப்பிட்டுள்ளார்.
அசான்ஜ் துன்புறுத்தப்படுவதற்கு உடந்தையாக இருப்பதிலும் சரி அல்லது அவருக்கு எதிரான தாக்குதல்களுக்கு தீவிரமாக ஆதரவளிப்பதிலும் சரி பெரும்பான்மையான ஆஸ்திரேலிய ஊடகங்கள் கொண்டிருக்கும் பங்கு வெட்ககேடானவை என்று ஃபவுலர் சுட்டிக்காட்டினார்.
ஒரு ஊடகவியலாளர், 2017 இல் “Four Corners” நிகழ்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளர் Sally Neighbour, அசான்ஜ் “புட்டினின் நாய்” என்று விவரித்த பதிவை டுவீட் செய்ததைக் குறிப்பிட்டார். இது “ஆஸ்திரேலியாவில் செய்தித்துறையின் நிலைப்பாடு பற்றி நிறையவே குறிப்பிடுகிறது” என்று ஃபவுலர் குறிப்பிட்டார்.
Neighbour இன் டுவீட், “அசான்ஜை தாக்குவதற்கான முழு கடிவாளத்தையும் ஹில்லாரி கிளின்டனின் கையில் வழங்கிய அவருடனான Four Corners இன் நேர்காணலைத் தொடர்ந்து பதிவிடப்பட்டது” என்று ஃபவுலர் எழுதினார்.
அசான்ஜ் ஒரு ரஷ்ய முகவர் என்று பரப்பப்பட்டதான ஆதாரமற்ற அவதூறுகள், பேர்னி சாண்டர்ஸூக்கு எதிராகவும் கிளின்டனுக்கு ஆதரவாகவும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் திருகுதாளங்களை செய்ய முயன்றதை ஜனநாயகக் கட்சியின் தேசிய குழுவின் மின்னஞ்சல்கள் நிரூபிக்கின்றன என்பதை தெரிவித்த விக்கிலீக்ஸின் 2016 பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று ஃபவுலர் விவரித்தார்.
அசான்ஜ் மீது ஊடகவியலாளர் பீட்டர் கிரெஸ்டெ தொடுத்த தாக்குதல்களுக்கும் ஃபவுலர் கண்டனம் தெரிவித்தார். கிரெஸ்டெ நன்கு அறியப்பட்டவர், ஏனென்றால் 2013 இல் எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்தால் இவர் சிறையிலிடப்பட்டிருந்தார், மேலும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை “ஒரு ஊடகவியலாளர் அல்ல” என்று இவர் பலமுறை அறிவித்துள்ளார்.
செய்தித்துறையை குற்றகரமானதாக்குவது குறித்த ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு அவர்கள் உதவினார்கள் என்று கூறி, இந்த அடிப்படையற்ற வலியுறுத்தல்களை ஃபவுலர் நிராகரித்தார்.
“அசான்ஜின் ஊடகவியலை மறுத்தவர்கள், அவர் பாதுகாக்கப்படுவதையும் பெரும்பகுதி மறுக்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார். அதாவது, “அசான்ஜ் ஒரு பத்திரிகையாளர் அல்ல… என்று விவாதிப்பதன் மூலம், ஆயுள் தண்டனையை சாத்தியப்படுத்தக்கூடிய குற்றமாக கருதப்படும் உளவு பார்த்தல் குற்றத்தை அசான்ஜ் மீது சுமத்த முனையும் அமெரிக்க நிர்வாகத்திற்கு ஊடகவியலாளர்கள் வெடிமருந்துகளை கொடுத்து வருகின்றனர்.”
அசான்ஜிற்கு எதிரான பிரச்சாரத்தில் பல ஊடகவியலாளர்கள் இணைந்து கொண்டதற்கான சில காரணங்களைப் பற்றி ஃபவுலர் மேலோட்டமாக குறிப்பிட்டார். “ஊடகவியலாளர்கள், சக்திவாய்ந்தவர்களுக்கு எதிராக சாதாரண மக்களை முக்கியமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற பழைய கருத்து, பல சந்தர்ப்பங்களில் ஏதோவொரு விதத்தில் கடந்தகாலத்தைச் சேர்ந்ததாக உள்ளது. அரசியல் கட்சிகள் வலதுக்கு மாறிவிட்ட நிலையில், நிறைய ஊடகவியலாளர்களுக்கும் அவ்வாறு செய்வது தேவையுள்ளது” என்று பகுத்தறிந்து எழுதினார்.
ஜூலியன் அசான்ஜ்
“ஜூலியன் அசான்ஜ் போன்ற ஊடகவியலாளர்களின் சக்தி பற்றி கேள்வி எழுப்பியவர்கள் விடுத்த சவால் ஊடகவியலாளர்களின் ‘சங்கத்தை’ கோபமூட்டி வந்தது. அவரது வெளிபடுத்துகைகள் அவர்களை அச்சுறுத்தின” என்றும் ஃபவுலர் சேர்த்துக் கூறினார்.
மேலும், விக்கிலீக்ஸின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டு, அது, “ஊடகவியலாளர்கள், முதன்மை ஆதார ஆவணங்களை எங்கிருந்து பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டும்,” என்பது குறித்த, மற்றும் “பொது மக்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்வது” குறித்த செய்தித்துறையின் எதிர்காலத்திற்கான பாதையை வகுத்துக் கொடுத்துள்ளது” என்றும் ஃபவுலர் கூறினார்.
“அடுத்த இலக்கு அவர்களாக இருக்கலாம் என்பதையும் ஊடகவியலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ஃபவுலர் எச்சரித்தார். மேலும், சென்ற வாரம் நடந்த ஒரு ஊடகவியலாளர்கள் மாநாட்டில், AFP இன் தற்காலிக ஆணையர் Neil Gaughan, ஆஸ்திரேலியா ‘முக்கியமான தகவல்கள் கசியவிடப்படுவதை தீவிரமாக’ பார்க்கிறது என்பதை “சர்வதேச சமூகத்திற்கு” எடுத்துக்காட்டுவதற்குத்தான் அதன் திடீர் சோதனை நடவடிக்கைகளை AFP மேற்கொண்டது எனத் தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த விடயத்தை பொறுத்தவரை ‘சர்வதேச சமூகம்’ என்பது ஆஸ்திரேலியாவின் மிகவும் முக்கியமான உளவுத்துறை பகிர்வுக்கான கூட்டாளி நாடான அமெரிக்காவை மட்டும் தான் குறிக்கும்,” என்று ஃபவுலர் எழுதினார்.
“அசான்ஜ் காற்றில் ஊசலாடுவதற்கு விடப்படுவாரானால், எதிர்வரும் காலத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான செய்திகளை பத்திரிகையாளர்கள் வெளியிட்டுள்ளனர் என்று அமெரிக்க நிர்வாகம் கருதுமானால், உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்தவொரு ஊடகவியலாளரையும் அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான ஒரு பகிரங்க அழைப்பாக அது இருந்துவிடக் கூடும்” என்று நிறைவு செய்தார்.
அசான்ஜூக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து உத்தியோகபூர்வ ஊடகங்கள் கொண்டிருக்கும் இணக்கமான மவுனத்தில் ஒரு மீறலுக்கான பிற அடையாளங்கள் இருப்பதை ஃபவுலரின் கட்டுரை பின்தொடர்ந்தது.
Sydney Morning Herald நாளிதழில் சென்று வாரம் வெளிவந்த ஒரு கட்டுரையில், “மிகுந்த புலனாய்வு செய்தித்துறையின் அடிப்படைக் கூறுகளாக” இருக்கின்றதான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் பின்தொடரப்பட்டு வருகிறார் என்ற உண்மையை Waleed Aly சுட்டிக்காட்டினார். மேலும், “கோழைத்தனமான இருகட்சி அரசியல் காட்சி” மற்றும் “எந்தவொரு விடயம் குறித்தும் பொதுமக்கள் விவாதம் இல்லாத நிலையில் ‘தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பின் கீழ் அதை முற்றிலும் ஒழித்துக்கட்ட முடியும்” என்பது போன்ற சூழலில்தான் AFP இன் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் Aly தெரிவித்தார்.
ஞாயிறன்று, Sydney Morning Herald நாளிதழின் ஐரோப்பிய செய்தியாளர், அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டிருப்பாரானால் நியாயமான விசாரணையை எதிர்கொள்ளும் “ஒரு வாய்ப்பை” அசான்ஜ் கொண்டிருக்க முடியாது என்று சிஐஏ தொடர்பாக இரகசிய செய்தி வெளியிட்ட John Kiriakou விடுத்த எச்சரிக்கைகளை எடுத்துக்காட்டும் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
அசான்ஜின் நிலை குறித்த இரங்கத்தக்க பரப்புரைகள், விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை குற்றம்சாட்டுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள், ஊடகத்துறை சுதந்திரம் மீதான ஒரு பரந்த தாக்குதலுக்கு மடைதிறந்துவிட்டுள்ளமை அதிகரித்தளவில் அங்கீகரிக்கப்படுவதை சுட்டிக்காட்டுகின்றன. இது, AFP இன் திடீர் சோதனை நடவடிக்கைகள் மற்றும் பிரெஞ்சு அரசாங்கம், யேமனுக்கு எதிரான சவுதி அரேபிய போரில் அதன் உடந்தை பற்றி அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களை குற்றம்சாட்டுவதற்கு முனைந்து வருவது ஆகியவற்றின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
செவ்வாயன்று விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியர் கிரிஸ்டின் ஹ்ராஃப்ஸன் ஒரு இலண்டன் செய்தியாளர் கூட்டத்தில் கூறியது போல, அசான்ஜ் மீதான துன்புறுத்தல்கள், ஆஸ்திரேலியா உட்பட, “சமீபத்திய வாரங்களில், நாம் கண்ட ஏனைய கடும் நடவடிக்கைகளுடன் ஒரு தொடர்பை கொண்டுள்ளன”. “தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி தகவல் தெரிவிப்பது என்று வரும்போது புலனாய்வு செய்தித்துறை மீதான அதே திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பாகமாகவே இது உள்ளது,” என்று அவர் கூறினார். மேலும், “இது ஒரு நடுங்க வைக்கும் விளைவை கொண்டுள்ளதான ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது” என்றும் கூறினார்.
அசான்ஜை பாதுகாப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு ஹ்ராஃப்ஸன் அழைப்பு விடுத்ததுடன், இவ்வாறு அறிவித்தார்: “இது செய்தித்துறை மீதான ஒரு தாக்குதலாகும், மேலும் இவையனைத்தும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை. இது செய்தித்துறையை பாதுகாப்பதற்கான ஒரு கடும் நெருக்கடியான தருணமாகும்.” வெள்ளியன்று அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடுகடத்தும் கோரிக்கை மீது நடத்தப்படவிருக்கும் ஒரு பிரிட்டிஷ் விசாரணைக்கான முன்னோட்டமாக அவரின் கருத்துக்கள் இருந்தன.
அசான்ஜின் தந்தை ஜோன் ஷிஃப்டனும், மற்றும் சீன கலைஞர் Ai Weiwei யும் நேற்று பெல்மார்ஷ் சிறைக்குச் சென்று அசான்ஜைப் பார்த்தனர். அது குறித்து ஷிஃப்டன், அவரது மகனின் மோசமடைந்து வந்த உடல்நிலை “நிலைப்பட்டுள்ளது” என்றாலும், அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையில் இரண்டு மாதங்களாக அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கணிசமான உடல் எடை இழப்பு அவருக்கு நேர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
பார்வையிடல்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, மற்றும் நூலகம், கணினிகள் அல்லது ஆவணங்கள் போன்றவற்றை அணுக முடியாத நிலையில், அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான தயாரிப்புக்களை மேற்கொள்வதில் தனது மகன் தடை செய்யப்பட்டு வருவது உட்பட அசான்ஜின் சிறைவாச நிலைமைகள் பற்றி ஷிஃப்டன் குறிப்பிட்டார்.
மேலும், அசான்ஜ், “அவரது வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும், கடைசி நிமிட மூச்சுக்கு கடுமையாக போராடும் நிலையிலான ஒரு மனிதராக” இருந்தார் என்று Weiwei கூறினார். மேலும் அவர், “அவரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன், குறிப்பாக அவரது உளவியல்நிலை பற்றி கவலைப்படுகிறேன். அத்தகைய அழுத்தத்தின் கீழ் அந்த மனிதர் இருந்து வருகிறார்… நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று மேலும் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
“இன்றைய உலகில் எப்படிபட்ட மனித உரிமை மீறல்கள் உள்ளன” என்பது பற்றி அவர்கள் விவாதித்ததாக Weiwei கூறினார்.
அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவது குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராகவும் மற்றும் அசான்ஜை விடுதலை செய்யக் கோரியும் இந்த வாரம் உலகெங்கிலும் பல பேரணிகளை விக்கிலீக்ஸ் மற்றும் ஜனநாயக உரிமைகளின் ஆதரவாளர்கள் நடத்தி வந்துள்ளனர். வெள்ளியன்று, இலண்டனில், அசான்ஜ் மீதான விசாரணை நடத்தப்படவுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு வெளியே காலை 9 மணியளவில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவில், சோசலிச சமத்துவக் கட்சி, இந்த மாதம் பிற்பகுதியில் சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதற்கு அறிவித்துள்ளது. அவற்றின் மூலம், அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிரான உத்திரவாதத்துடன், அவர் பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்புவதற்கு அதன் சட்டரீதியான சாத்தியப்பாடுகளையும் மற்றும் இராஜதந்திர அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஒரு ஆஸ்திரேலிய குடிமகனான அசான்ஜிற்கு அதன் கடமைகளை நிறைவேற்றுமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் SEP கோரிக்கை விடுக்கின்றது.