Print Version|Feedback
The international upsurge of working class struggle in 2019
2019 இல் தொழிலாள வர்க்க போராட்டத்தின் சர்வதேச மேலெழுச்சி
Niles Niemuth
12 February 2019
2019 இன் முதல் வாரங்கள் சர்வதேச வர்க்க போராட்டத்தில் ஒரு வியத்தகு மேலெழுச்சியால் குறிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் நடைமுறையளவில் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் கட்டவிழ்ந்து வந்துள்ளன. தொழிற்சங்கங்களால் வர்க்க போராட்டம் தசாப்தங்களாக நசுக்கப்பட்டு வந்த பின்னர், உலக அரசியலின் கிளர்ச்சிகரமான ஜாம்பவான், தொழிலாள வர்க்கம், அதன் காலில் எழுந்து நடக்கத் தொடங்கி உள்ளது.
வட அமெரிக்கா
- திங்களன்று, கொலொராடோ டென்வரில் 5,600 ஆசிரியர்கள் கால் நூற்றாண்டில் முதல்முறையாக வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் மிகவும் செலவு மிக்க நகரங்களில் ஒன்றில் அவர்கள் வேலை செய்து வாழக் கூடிய வகையில் கணிசமாக சம்பள உயர்வுகளைப் பெறுவதை இந்த ஆசிரியர்கள் பிரதான கோரிக்கையாக கொண்டுள்ளனர்.
- இரண்டாண்டுகளாக ஒப்பந்தமின்றி பணியாற்றி வரும் கலிபோர்னியா ஒக்லாந்து ஆசிரியர்கள் அடுத்த வார வாக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். தங்களின் சங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தும் மற்றும் திடீர் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் இந்த நிகழ்ந்து வரும் ஆசியர்களின் வேலைநிறுத்தங்களின் அலையைத் தூண்டிவிட்ட மேற்கு வேர்ஜீனியா ஆசிரியர்கள், மாநில சட்டமன்றம் ஊடாக வழிநடத்தும் தனியார்மயமாக்கல் சார்பான சட்டமசோதாவுக்கு எதிராக ஒரு வேலைநிறுத்த நடவடிக்கை அல்லது பணியிட நடவடிக்கை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
- கடந்த மாதம் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்களின் தொழிற்சங்கங்களை எதிர்த்து வேலையிலிருந்து வெளிநடப்பு செய்த போது, மெக்சிகோ மத்தாமோரொஸில் தொடங்கிய மக்கில்லாடோரா தொழிலாளர்களின் வேலைநிறுத்த இயக்கம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையை ஒட்டி பரவி வருகிறது. அதற்கு அண்டைபகுதியான ரெய்னோசாவில் 45 ஆலைகளின் சுமார் 8,000 தொழிலாளர்கள் மத்தாமோரொஸில் அவர்களின் சகோதர சகோதரிகள் வென்றதைப் போல அவர்களுக்கும் அதே 20 சதவீத சம்பள உயர்வும், 1,700 டாலர் கொடுப்பனவும் (போனஸ்) கோரி வருகின்றனர்.
ஐரோப்பா
- பெல்ஜியத்தில் இன்றிரவில் இருந்து 24 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடங்க இருக்கிறது. இந்த வேலைநிறுத்தத்தில் தபால்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளடங்கி இருப்பார்கள். விமானத்துறை தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இருப்பார்கள். சார்லெருவா-தெற்கு புரூசெல்ஸ் விமானநிலையம் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கும். புரூசெல்ஸ் விமானச்சேவை 200 விமானங்களை இரத்து செய்துள்ளதுடன், 16,000 பயணியர்களுக்காக விமானங்களை வடக்கு பிரான்சின் லீல் விமான நிலையம் உட்பட பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விட்டுள்ளது.
- போலிஸ் ஒருதலைபட்சமாக போராட்டங்களைச் சட்டவிரோதமாக்க அனுமதிக்கும் வகையில் சமீபத்தில் தேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மக்ரோன் அரசாங்கத்தின் "குண்டர்கள்-எதிர்ப்பு" சட்டத்தை எதிர்த்து, மஞ்சள் சீருடை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை பிரான்ஸ் எங்கிலும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக 13 வது வாரமாக அவர்களின் போராட்டத்தை நடத்தினர். நாடெங்கிலும் இருந்து 116,000 பேர் அணிவகுத்ததாக அதை ஒழுங்கமைத்தவர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆசியா
- தங்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீட்டமைக்க வேண்டுமென கோரி கடந்த புதன்கிழமை வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 200,000 க்கும் மேலான அரசு பணியாளர்கள் வேலையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அந்த வேலைநிறுத்தத்தை ஒருங்கிணைத்து வரும் தொழிற்சங்க குழுவோ இன்று அந்த வெளிநடப்பின் இறுதி நாளாக அறிவித்துள்ளது. இது, இந்தியா எங்கிலும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மோடி அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்ததைத் தொடர்ந்தும், தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் பாரியளவில் வெளிநடப்பு செய்திருந்ததைத் தொடர்ந்தும் வருகிறது.
- வெள்ளிக்கிழமையிலிருந்து தாய்வானை மையமாக கொண்ட சீன விமானச் சேவையின் அண்ணளவாக 700 விமானிகள் வேலைநிறுத்தத்தில் உள்ளனர், இதன் விளைவாக தைப்பெய்யில் இருந்து ஹாங்காங், பாங்காக், லாஸ் ஏஞ்சல்ஸ், மணிலா மற்றும் டோக்கியோக்கு செல்லவிருந்த விமானங்கள் உட்பட, குறைந்தபட்சம் 60 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஏனைய கோரிக்கைகளோடு சேர்ந்து, விமானிகள் எட்டு மணி நேரத்திற்கு மேல் பறக்கும் விமானங்களில் துணை விமானிகளையும் மற்றும் ஆண்டு முடிவு கொடுப்பனவு (போனஸ்) தொகைகளையும் கோரி வருகின்றனர்.
- நியூசிலாந்தில் அண்ணளவாக 1,700 இளநிலை மருத்துவர்கள் அவர்களின் வேலையிட நிலைமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்க்க செவ்வாய்கிழமை அன்று இம்மாதத்தில் மூன்றாவது 48 மணி நேர வேலைநிறுத்தத்தை தொடங்கினர். இது 12 மணி நேரம் வரை தொடர்ந்து வேலைகளை அதிகரிப்பது, மேலும் தனி ஷிப்டுகளை 16 மணிநேரங்கள் வரை நீட்டிக்கும் திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. மருத்துவர்களின் போராட்டத்துடன் 1,000 எண்ணிக்கையிலான கர்ப்பிணிகளுக்கான தாதிமார்களும் கலந்து கொண்டிருந்தனர், இவர்கள் கூலிகளைப் பணவீக்க விகிதத்திற்கு கூடுதலாக அதிகரிக்க அழுத்தமளிக்க 12 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆபிரிக்கா
- Sibanye-Stillwater தங்கச் சுரங்கத்தில் சுரங்கத்துறை மற்றும் கட்டுமானத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பின் பதினைந்தாயிரம் உறுப்பினர்கள் மாதாந்தர சம்பளத்தை 72 டாலராக உயர்த்துவதற்கான கோரிக்கைகள் மீது நவம்பரில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 11 வாரங்களுக்குப் பின்னர் Sibanye-Stillwater இன் பிளாட்டின சுரங்கத்தின் அவர்களது சக தொழிலாளர்களும் தங்கச் சுரங்க தொழிலாளர்களுடன் இணைந்தனர்.
- சுமார் 80,000 சிம்பாப்வே ஆசிரியர்கள் கடந்த வாரம் வேலைநிறுத்தத்தில் இருந்தனர். பணவீக்க வேகத்திற்கு ஏற்ப சம்பள உயர்வுகள் உட்பட ஆசிரியர்களின் எந்த கோரிக்கைகளையும் அரசாங்கம் ஏற்க மறுத்ததற்கு இடையிலும், அவர்களின் போராட்டத்தை சிம்பாப்வே ஆசிரியர் சங்கம் மற்றும் சிம்பாப்வே முற்போக்கு ஆசிரியர் சங்கம் திங்களன்று முடித்துவிட்டன.
இந்தாண்டின் இத்தகைய ஆரம்ப காட்சிகளே சர்வதேசியவாதத்தின் மிகவும் பலமான ஊர்ஜிதப்படுத்தலாக உள்ளன. ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் போராட்டங்கள் நெருக்கமாக ஒன்றோடொன்று பிணைந்திருப்பதைப் புரிந்து கொள்ள தொடங்கி வருகிறார்கள். எப்போதும் அதிகரித்து கொண்டிருக்கும் சமூக சமத்துவமின்மையின் மட்டங்களால் ஊக்குவிக்கப்பட்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களில் பொதுத்தன்மையும் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம், மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் அமெரிக்க எல்லை வரை அணிவகுத்ததுடன், அவர்களின் அமெரிக்க சகோதர சகோதரிகளை "விழிக்குமாறு" அழைப்புவிடுத்தனர். அவர்களில் பலர் அமெரிக்கா, கனடா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களைச் சுரண்டும் அதே வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களில் தான் பணியாற்றுகிறார்கள். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் தொழிலாளர்களால் ஒன்றுசேர்க்கப்படும் உதிரி பாகங்களை அவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
உண்மையில் அமெரிக்க தொழிலாளர்கள் விழிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதையே அமெரிக்காவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்களின் அலை எடுத்துக்காட்டுகிறது. 2018 இல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 32 ஆண்டில் இல்லாத உயரத்தை எட்டியதாக அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிபர ஆணையம் (BLS) இம்மாதம் குறிப்பிட்டிருந்தது.
உலக முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியில் ஆரம்ப கட்டத்தில் 1930 இல் லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, சோசலிச புரட்சியை தேசிய அரங்கில் நிறைவடைய செய்வது சாத்தியமில்லை. “சோசலிச புரட்சியானது தேசிய அரங்கில் தொடங்கி, சர்வதேச அரங்கில் கட்டவிழ்ந்து, உலக அரங்கில் முழுமை அடைகிறது,” என்று ட்ரொட்ஸ்கி விவரித்தார்.
1988 இன் ஆரம்பத்திலேயே நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) விவரித்ததைப் போல, இன்று வர்க்க போராட்டமானது உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, மாறாக அதன் வடிவத்திலும் சர்வதேசமயமாகி உள்ளது.
வர்க்க போராட்டத்தின் மீள்எழுச்சி பழைய, அதிகாரத்துவ மற்றும் தேசியவாத தொழிலாளர் அமைப்புகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியின் வடிவத்தை எடுக்கும் என்பதை ICFI வலியுறுத்தியது. இதுவும் அதிகரித்து வரும் போராட்டங்களின் எண்ணிக்கையில் —அமெரிக்காவில் ஆசிரியர்களின் வெளிநடப்பு மற்றும் மெக்சிகோவில் மக்கில்லாடோரா தொழிலாளர்களின் வெடிப்பார்ந்த போராட்டம் ஆகியவற்றில்— உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது, இவை தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும் அவற்றுக்கு எதிராகவும் நடத்தப்படும் சாமானிய தொழிலாளர் கிளர்ச்சிகளின் வடிவத்தை எடுத்துள்ளன.
இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜிஎம் ஆலைமூடல்கள் மற்றும் வேலைநீக்கங்களுக்கு எதிராக டெட்ராய்டில் பெப்ரவரி 9 இல் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நனவுப்பூர்வமான வெளிப்பாட்டைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை WSWS வாகனத்துறை தொழிலாளர் செய்தியிதழும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டிணைவிற்கான வழிகாட்டல் குழுவும் ஒழுங்கமைத்திருந்தன.
இந்த ஆர்ப்பாட்டம், மெக்சிகோ மத்தாமோரொஸின் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள், இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், இந்தியாவில் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் துருக்கியில் உலோகத்துறை தொழிலாளர்களின் பிரதிநிதிகளிடம் இருந்து வாழ்த்துக்களைப் பெற்றது.
இந்த பேரணிக்கு உரையாற்றிய ஒரு காணொளியில், மெக்சிகோ மத்தாமோரொஸில் வேலைநிறுத்தம் செய்து வருகின்ற தொழிலாளர்கள், “பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் மிச்சிகன் டெட்ராய்டில் உள்ள எங்களின் நான்கு நண்பர்களுக்கான எங்களின் ஆதரவு! மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் மிச்சிகன் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்துள்ளோம்!” என்று அறிவித்தனர்.
மத்தாமோரொஸ் தொழிலாளர்கள் வாகனத்துறை வேலைநீக்கங்களுக்கு எதிரான SEP ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கின்றனர்
உலகின் வெவ்வேறு பாகங்களைச் சேர்ந்த இந்த தொழிலாளர்கள் அமெரிக்க மற்றும் கனேடிய தொழிலாளர்களுடன் அவர்கள் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்வதாக உணர்கிறார்கள் என்பதோடு, உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் இந்த வர்க்கப் போராட்டம் அபிவிருத்தி அடைந்து வருவதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் உணர்கிறார்கள்.
இருப்பினும் அவர்களின் சர்வதேச ஐக்கியத்திற்கான உயிரோட்டமான போராட்டங்களுக்கு விடையிறுக்கும் ஒரு பாரிய அமைப்போ அல்லது கட்சியோ எந்தவொரு நாட்டிலும் இல்லை என்ற கடுமையான யதார்த்தத்தை தொழிலாளர்கள் இன்னமும் முகங்கொடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் முற்றிலுமாக அழுகிப் போயுள்ளன என்பதோடு, அவை தங்களைத் தேசியவாத வேலைத்திட்டத்தில் நிலைநிறுத்திக் கொண்டு, அவற்றின் "சொந்த" பெருநிறுவன உயரடுக்குகள் மற்றும் அவற்றுக்கு கையூட்டு வழங்கிய அரசு அதிகாரிகளின் கோரிக்கைகளுக்குத் தொழிலாளர்களின் தேவைகளை அடிபணிய செய்து வருகின்றன.
தொழிற்சங்கங்கள் திணிக்கும் தேசியவாதத்திற்கு நேரெதிராக—வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாப்பதற்காக போராட தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் ஆலை குழுக்களையும் மற்றும் அண்டைஅயலார்களுடன் இணைந்த குழுக்களையும் ஸ்தாபிக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்த இந்த சனிக்கிழமை போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இருந்தது.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்தை அபிவிருத்தி செய்ய போராடுகின்ற மற்றும் நனவுபூர்வமான வெளிப்பாட்டை அளிக்கின்ற ஒரே அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), மற்றும் உலகெங்கிலும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) மட்டுமே ஆகும்.
சனிக்கிழமை சம்பவம் 2019 இன் தொடக்கத்தில் WSWS வழங்கிய பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது, அது குறிப்பிட்டது, “அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த மற்றும் அரசியல் பணி தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான இயக்கத்தில் குறுக்கிட்டு வருகிறது. அதன் முக்கிய நடைமுறை புரட்சிகர நடவடிக்கை புரட்சிகர வர்க்க போராட்டத்தின் அபிவிருத்தி மற்றும் விளைவில் ஓர் இன்றியமையா காரணியாக மாறி உள்ளது.”
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிச புரட்சிக்கான உலக கட்சியாக கட்டமைப்பதே தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதில் மற்றும் சுதந்திரப்படுத்துவதில் மத்திய பணியாகும். வர்க்க நனவுள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.