Print Version|Feedback
The way forward to win wages and social rights
Workers Action Committee in Sri Lanka calls plantation workers’ conference
ஊதியங்களையும் சமூக உரிமைகளையும் வெல்வதற்கான முன்னோக்கிய பாதை
இலங்கையில் தொழிலாளர் நடவடிக்கை குழு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கின்றது
By the Abbotsleigh Estate Workers Action Committee
12 February 2019
தொழிலாளர்களின் மாநாட்டிற்கு அழைப்புவிடுக்கும் பின்வரும் அறிக்கை எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுவினால் வெளியிட்டது.
டிசம்பர் மாதம் 1,000 ரூபா நாள் சம்பளத்துக்கான தோட்டத் தொழிலாளர்களின் சக்திவாய்ந்த ஒன்பது நாள் வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னரே எபோட்சிலி நடவடிக்கை குழு ஸ்தாபிக்கப்பட்டது. ஏனைய பல தோட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் எபோட்சிலி குழுவோடு தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதோடு, இதே போன்ற குழுக்களை உருவாக்க போராடுவதற்கும் சபதம் எடுத்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய இரண்டு பிரதான பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும், ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்த போதிலும், தொழிலாளர்களின் தற்போதைய எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் அதை வர்த்தமானியில் வெளியிடவில்லை. இந்த புதிய ஒப்பந்தத்தில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன் பிணைக்கப்பட்ட ஒரு அற்ப சம்பள உயர்வே வழங்கப்பட்டுள்ளது.
*** *** ***
எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழு, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) ஆதரவுடன், தொழிலாளர்களின் மாநாடு ஒன்றை மார்ச் 17 அன்று ஹட்டன் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில், "பெருந்தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின் படிப்பினைகள் மற்றும் ஊதியங்களையும் சமூக உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான முன்னோக்கிய பாதை," பற்றி கலந்துரையாடப்படும்.
தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் முற்போக்கான புத்திஜீவிகளை இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்குமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.
சுமார் 200,000 தோட்டத் தொழிலாளர்கள் பங்கெடுத்த எமது அண்மைய ஊதிய அதிகரிப்புக்கான வேலைநிறுத்தமானது, ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தால் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் தொழிலாள வர்க்கப் போராட்டம் மறு எழுச்சி பெறுவதன் ஒரு பாகமாகும்.
இந்தப் போராட்டமானது தொழிற்சங்கங்களையும் அவற்றின் அரசியல் நாசவேலைகளையும் மீறி, முதலாளிகளினதும் அரசாங்கத்தினதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலுமே நடத்தப்பட்டது. எங்களால் இளைஞர்கள், ஆசிரியர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரதும் உற்சாகமான ஆதரவை வெல்லக் கூடியதாக இருந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை தினசரி ஊதியத்தை 100 சதவிகிதத்தால் உயர்த்தக் கோரிய அதேவேளை, கம்பனிகளும் அரசாங்கமும் அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) மற்றும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் (LJEWU) போராட்டத்தை காட்டிக்கொடுத்ததோடு, ஜனவரி 28 அன்று, கம்பனிகளுடன் ஒரு விற்றுத்தள்ளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
ஒப்பந்தத்தின் கீழ், எங்கள் அடிப்படை தினசரி ஊதியமானது 500 ரூபாவில் இருந்து 700 ரூபா (3.92 டாலர்) வரை 200 ரூபாவால் காகிதத்தில் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை பங்கு கொடுப்பனவானது 30 முதல் 50 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், கம்பனிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த வருகைக்கான கொடுப்பனவு 60 ரூபாவையும் உற்பத்தி திறன் கொடுப்பனவு 140 ரூபாவையும் அபகரித்துக்கொண்டன. அதாவது மொத்தமாக தொழிலாளர்களுக்கு 750 ரூபா மட்டுமே கிடைப்பதுடன், முந்தைய சம்பளத்துடன் ஒப்பிடும்போது வெறும் 20 ரூபாவே அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் மேலாக, புதிய கூட்டு ஒப்பந்தத்தின் உட்பிரிவு 3 இன் கீழ், தொழிற்சங்கங்கள், "வருவாய் பகிர்வு வெளியார் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட, உற்பத்தி திறனோடு பிணைக்கப்பட்ட சம்பள மேலாதிக்கத்தை" தினிப்பதற்கு ஒத்துழைக்க உடன்பட்டுள்ளன.
இந்த "வருமானப் பகிர்வு வெளியார் உற்பத்தி மாதிரி" நடைமுறைப்படுத்தப்பட்ட தோட்டங்களில், குறைந்தபட்ச வாழ்கைக்கான வருமானத்தைக் கூட தொழிலாளர்களால் சம்பாதிக்க முடியவில்லை. இந்த முறையின் கீழ் ஒதுக்கப்படும் காணியில், முழு குடும்பமும் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுவதோடு எங்களை குத்தகை விவசாயிகளாக மாற்றிவிடுகின்றது. நாங்கள் எங்கள் ஓய்வு கால நிதிகளையும் ஏனைய மட்டுப்படுத்தப்பட்ட சமூக நலன்களையும் கூட இழந்து விடுவோம்.
தொழிற்சங்கங்கள் எங்கள் அனுமதியின்றி, "தோட்டங்களின் வினைத்திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்கவும் அதற்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ளவும் கூட" ஒப்புக்கொண்டுள்ளன. அத்துடன் "தோட்ட மட்டத்தில் இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு" வேலை செய்யவும் உடன்பட்டுள்ளன. இதன் அர்த்தம், தொழிலாளர்களை சுரண்டுவதை உக்கிரமாக்குவதற்காக தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் ஒத்துழைக்கவுள்ளன என்பதே ஆகும்.
பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.), அதே போல் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமும் இந்த ஒப்பந்தத்துக்கு இணங்கி ஒத்துழைத்துள்ளன.
இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் எங்கள் ஜனநாயக உரிமைகளை முழுமையாக புறக்கணித்து இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. புதிய உடன்படிக்கைக்கு எதிராக இந்த சங்கங்கள் காட்டும் போலி எதிர்ப்புக்களை தொழிலாளர்கள் நிராகரித்து, வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை சுயாதீனமாக ஏற்பாடு செய்வதன் மூலம், அவற்றின் துரோகத்திற்கு தங்கள் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இப்பொழுது, இந்த ஒப்பந்தத்தின் மீதான தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்பின் மத்தியில், NUW, ஜ.ம.மு. மற்றும் ம.ம.மு. தலைவர்களும், அரசாங்கத்தின் அமைச்சர்களுமான முறையே ப. திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் வி. ராதாகிருஷ்ணனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனான பேச்சுவார்த்தையின் மூலம், சில சோடனைகளை எதிர்பார்த்து இன்னொரு போலி வாக்குறுதியை வழங்கியுள்ளனர். ஆயினும், கம்பனிகள், கூட்டு ஒப்பந்தத்தில் இருப்பதற்கும் மேலாக, ஒரு சதமேனும் சம்பள உயர்வு கொடுக்க முடியாது என மீண்டும் கூறிவிட்டன.
தொழிலாளர்களின் எதிர்ப்பை பற்றி ஆழமாக கவலை கொண்டுள்ள அரசாங்கம், புதிய கூட்டு ஒப்பந்தத்தை முறையாக வர்த்தமானியில் அறிவிப்பதை தாமதப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கமோ அல்லது கம்பனிகளோ தொழிலாளர்களுக்கு நல்லதை செய்யும் என்று எவரும் நம்பக்கூடாது.
சம்பள உயர்வு கோரிக்கையை வழங்குமாறு "அரசாங்கத்துக்கும் தோட்ட அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்குமாறு" தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு குழு, "1,000 ரூபா இயக்கம்" என்ற பெயரில் புதிதாக தலை தூக்கியுள்ளது. கம்பனிகளும் அரசாங்கமும் மீண்டும் மீண்டும் எங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கின்ற போது, நாங்கள் ஏன் இத்தகைய பயனற்ற முயற்சிகளில் நேரத்தை வீணடிக்க வேண்டும்? எங்கள் உரிமைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்துவதிலிருந்து நம்மைத் தடுப்பது மட்டுமே அவர்களது ஒரே நோக்கமாகும்.
தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ அரசாங்கங்களால் சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். முதலாளித்துவ வர்க்கம், மோசமடைந்து வரும் பூகோள பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த தீர்மானித்துள்ளது.
தொழிற்துறையினால் செலவிட முடியாததன் காரணமாக, எமது சம்பளம் மற்றும் சமூக நலன்களை அதிகரிக்க முடியாது என பெருந்தோட்ட கம்பனிகளும் அரசாங்கமும் கூறுகின்றன. இலாப நோக்கு அமைப்பு முறையின் நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பு அல்ல என்று நாங்கள் கூறுகின்றோம். செல்வத்தை உற்பத்தி செய்வது தொழிலாளர்களாகிய நாங்களே, பெருந்தோட்ட உரிமையாளர்கள் அல்ல.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி போன்ற போதுமான அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. கென்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற மற்ற நாடுகளிலுள்ள எங்களது சக தோட்டத் தொழிலாளர்களைப் போலவே, சர்வதேச பெருந்தோட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களினதும் ஒரு சங்கிலி மூலம் நாங்கள் சுரண்டப்படுகிறோம்.
அற்ப ஊதிய உயர்வையும் வேலை வேகப்படுத்தலுக்கான கோரிக்கையையும் நாங்கள் நிராகரிக்க வேண்டும். முழு ஊதியத்துடனான விடுமுறை, மருத்துவ நலன்கள் மற்றும் முறையான ஓய்வூதியத் திட்டத்துடன், ஒரு கெளரவமான மாத சம்பளத்திற்கான உரிமை எங்களுக்கும் உள்ளது. 150 வருடங்களுக்கும் மேலாக தோட்டத் தொழிலாளர்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அடிமைத்-தொழிலாளர் நிலைமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்துவதற்கு, நம்முடைய கடந்த கால மற்றும் தற்போதைய போராட்டங்களது படிப்பினைகளையும், அதே போல் நமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளது போராட்டங்களது படிப்பினைகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் எல்லையோரமாக உள்ள மெக்சிக்கோவில், மத்தாமோரொஸில் வாகன உதிரிப் பாக தொழிற்சாலைகளில் சுமார் 70,000 தொழிலாளர்கள், 20 சதவிகித ஊதிய உயர்வை கோரி, பல வாரங்களாக போராடி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான வேலைகள் அகற்றப்படுவதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிரான்சில், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சிறு வியாபாரிகளும் சமூக சமத்துவம், சம்பள உயர்வு, அதி செல்வந்தர்களின் சலுகைகளை அகற்றுதல், நாட்டின் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்தல் ஆகியவற்றை கோரி, "மஞ்சள் சீருடை" இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம், இந்தியாவில் கோடிக் கணக்கான பொதுத்துறை ஊழியர்களும், தமிழ்நாட்டில் 700,000 ஆசிரியர்களும் பொதுத்துறை தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர்.
இந்த போராட்டங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மகத்தான பலத்தையும், பொது எதிரியான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான சாத்தியத்தையும் நிரூபிக்கின்றன.
தோட்டத் தொழிற்சங்கங்களுடனான எங்களது சொந்த கசப்பான அனுபவங்களின் பின்னரே எபோட்சிலி தோட்டத்தின் தொழிலாளர் நடவடிக்கை குழுவை நாங்கள் ஸ்தாபித்தோம். அவர்கள் தொழிலாளர்களின் பக்கம் நிற்கவில்லை, மாறாக கம்பனிகள், அரசாங்கம் மற்றும் பொலிசின் பக்கமே நின்றனர். எங்களது தற்போதைய ஊதிய போராட்டத்தில், தொழிற்சங்கங்களின் துரோகம் மிகவும் வெளிப்படையாக இருந்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழிநடத்தல் எங்களுக்கு உள்ளது. ஏனைய நாடுகளில் உள்ள அதன் சகோதர கட்சிகளும், சோசலிசக் கொள்கை வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடமிருந்து சுயாதீனமாக தொழிலாளர்களை அணிதிரட்ட போராடுகின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் எல்லா பிரிவு தொழிலாளர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறது. திட்டமிடப்பட்டுள்ள இந்த மாநாட்டில், எமது அவசரமான ஜனநாயக மற்றும் சமூக கோரிக்கைகளை அடைய, ஒரு அரசியல் முன்னோக்கு ஊடாக இந்தக் குழுக்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து, ஜனநாயக முறையில் கலந்துரையாடப்படும்.
சோசலிச சமத்துவக் கட்சியால் முன்மொழியப்பட்ட சோசலிச வேலைத்திட்டம், அனைத்து தொழிலாளர்களுக்கும் அவசியமானது என்று நாங்கள் நம்புகிறோம். பெருந்தோட்டங்கள், வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அதன் மூலம் உற்பத்தி மற்றும் விநியோகத்தை, ஒரு சிலரின் இலாப-பசிக்காக அன்றி, பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளை இட்டு நிரப்பக் கூடியவாறு ஒழுங்குபடுத்த முடியும்.
அத்தகைய முன்னோக்கை அமுல்படுத்துவதற்கு, தெற்காசியாவிலும் உலகம் முழுதும் சோசலிசத்திற்கான ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக தொழிலாள வர்க்கம் போராட வேண்டும்.
விபரங்கள்:
மாநாட்டுத் திகதி: மார்ச் 17, ஞாயிறு, காலை 10 மணி
இடம்: ஹட்டன் நகர மண்டபம்