Print Version|Feedback
“Yellow vest” assemblies meet in Commercy
The pseudo-left parties seek to intervene in France’s “yellow vest” movement
கொமெர்சி இல் “மஞ்சள் சீருடையாளர்களின்" ஒன்றுகூடல்களுக்கான சந்திப்பு
பிரான்சின் "மஞ்சள் சீருடை" இயக்கத்தில் போலி-இடது கட்சிகள் தலையீடு செய்ய முயல்கின்றன
By V. Gnana and Alex Lantier
5 February 2019
“மஞ்சள் சீருடை" இயக்கம் தொடங்கியதற்குப் பின்னர் இருந்து மக்கள் ஒன்றுகூடுவதற்கான சபையில் (Popular Assembly of Commercy) நடந்த இரண்டு கூட்டங்களுக்குப் பின்னர், “மஞ்சள் சீருடையாளர்களின்" கூட்டங்களின் கூட்டம் (Assembly of assemblies) ஜனவரி 26 இல் பிரான்சின் கொமெர்சி என்னும் சிறுநகரில் நடைபெற்றது.
பிரான்ஸ் எங்கிலும் இருந்து பல்வேறு "மஞ்சள் சீருடையாளர்" குழுக்களின் சுமார் 350 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் என்ன மேலோங்கி இருந்தது என்றால் "மஞ்சள் சீருடை" இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தொடர்புபட்ட குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் முயற்சியாகும்.
மக்கள் ஒன்றுகூடுவதற்கான சபையின் முந்தைய கூட்டம் நிதியியல் பிரபுத்துவம், ஆளும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான மக்களின் பரந்த பிரிவுகளுக்குள் நிலவிய வெடிப்பார்ந்த கோபத்தை வெளிப்படுத்தியது. அது ஸ்ராலினிசம், பப்லோவாதம் மற்றும் தொழிற்சங்கங்களால் தசாப்தங்களாக ஒடுக்கப்பட்ட, நிகழ்ந்து வரும் சர்வதேச வர்க்க போராட்டத்தின் வெடிப்பின் பாகமாக இருந்தது. இலங்கை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், அமெரிக்க ஆசிரியர்கள் மற்றும் மத்தாமோரொஸ் இல் மெக்சிகன் வாகனத்துறை தொழிலாளர்களைப் போலவே, பிரெஞ்சு தொழிலாளர்களும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராகவும் மற்றும் அவற்றிலிருந்து சுயாதீனமாகவும் அணிதிரண்டார்கள்.
இந்த கொமெர்சி (Commercy) சபையானது பலபடித்தான தன்மை கொண்டதாக இருந்தது, இது தொழிலாளர்கள், அமைப்புரீதியிலான சிறுவியாபாரிகள் மற்றும், ஒழுங்கமைப்பாளர்களில் மிக முக்கியமாக, தங்களின் அரசியல் விசுவாசத்தை மறைத்த பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் அடிபணியா பிரான்ஸ் (La France insoumise – LFI) போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் கீழ்மட்ட அங்கத்தவர்களையும் ஒன்றிணைத்திருந்தது. உலக சோசலிச வலைத் தளத்திற்குச் செய்தி சேகரிக்க சென்ற பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்கள் (Parti de l’égalité socialiste - PES) கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த கூட்டத்தின் பேஸ்புக் நேரடி ஒளிபரப்புக்கு அப்பாற்பட்டு, அக்கூட்டத்தைக் குறித்து கண்கூடாக செய்தி வெளியிட்ட ஒரே செய்தி ஆதாரமாக WSWS மட்டுமே இருந்தது.
ஆனால் ஜனவரி 26 ஒன்றுகூடல்களுக்கான சபையின் வர்க்க குணாம்சம் மிகவும் வித்தியாசமான வர்க்க தன்மையை ஏற்றிருந்தது. பிரதான பாரீஸ் பத்திரிகைகள் அனைத்தும், Libération மற்றும் வலதுசாரி Le Figaro உட்பட, செய்திகள் வெளியிட்டன. Le Monde இன் பக்கங்களில், அலீன் லுக்கிளேர் அந்த கூட்டத்தை "அவர்களின் பொதுவான மதிப்புகள் மற்றும் கோரிக்கைகளை வரையறுக்க" “மஞ்சள் சீருடையாளர்களின்" ஒரு முயற்சி என்றும், “ஒவ்வொருவரின் கருத்துக்கு மிகவும் மதிப்பளிக்கும்" விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். “தொழிற்சங்கங்களுடன் ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்ப" அக்கூட்டத்தில் பேசியவர்களின் விருப்பத்தை Libération மனதார வரவேற்றது.
“மஞ்சள் சீருடை” இயக்கத்திற்கு குரோதமான பிரதான முதலாளித்துவ ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன ஆனால், உலக சோசலிச வலைத் தளத்திற்கு அல்ல. ஒன்றுகூடுவதற்கான கூட்டத்தின் கொமெர்சி சபை ஒருங்கிணைப்பாளர், இவர் Meuse பிராந்திய புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் பிராந்திய ஒழுங்கமைப்பாளராக மாறியிருந்த நிலையில், அக்கூட்டம் எங்கே நடத்தப்படவிருந்தது என்பதைக் குறித்து PES உறுப்பினர்களுக்குத் தகவல் அளிக்க மறுத்துவிட்டார்.
ஒரு வழியாக PES உறுப்பினர்கள் அக்கூட்டத்தை வந்தடைந்த போது, அவர்கள் கொமெர்சி சபையின் மற்றொரு ஒழுங்கமைப்பாளரைச் சந்தித்தனர், ஒழுங்கமைப்பாளர்கள் PES ஐ எதிர்த்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்து கொண்டார்: “நான் உங்களைப் பாதுகாக்க விரும்பினேன், ஆனால் அவர்கள் உங்களைத் தவறாக புரிந்து கொண்டிருந்தார்கள். நான் பார்த்த வரையில், நீங்கள் மட்டுமே தொழிலாளர்களைப் பாதுகாத்து வருகிறீர்கள். இதற்கு முன்னர், இந்த இடத்தில் நிறைய தொழிலாளர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள் இங்கே இல்லை.” சமூகத்தின் எல்லா வர்க்கங்களது நலன்களுக்காகவும் போராடுவது அவசியமென அவர் நம்புவதாகவும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டார்.
உண்மையில் முந்தைய கொமெர்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கே இடம் பெற்றிருக்கவில்லை. அதற்கு பதிலாக அங்கே என்ன மேலோங்கி இருந்தது என்றால் தம்மைத்தாமே இந்த இயக்கத்தின் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்திக் கொண்ட பல்வேறு பிரதிநிதிகளின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு கொள்கைகளே மேலோங்கி இருந்தன, "மஞ்சள் சீருடையாளர்களால்" நிராகரிக்கப்பட்ட NPA, LFI அல்லது LO (Lutte ouvrière) போன்ற கட்சிகளுடன் இவர்களுக்கு இருந்த தொடர்புகள் என்பது குறைத்துக் காட்டப்பட்டன என்றாலும் வெளிப்படையாக இருந்தன.
புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் ஒழுங்கமைப்பாளர் WSWS க்கு பேட்டி கொடுக்க மறுத்தார், ஆனால் கொமெர்சி இன் மக்கள் சபையின் மற்றொரு ஒழுங்கமைப்பாளருடன் WSWS கலந்துரையாடியது. அவர் 2017 ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்களில் ஒருவருக்காக பணியாற்றி இருந்தார், ஆனால் இந்த இயக்கத்தின் "அரசியல் அற்ற" தன்மையைக் கருத்தில் கொண்டு அவரது அரசியல் நம்பிக்கைகளை வெளியிட வேண்டி அவசியம் இல்லை எனக் கூறி, அது எந்த கட்சி என்பதை அவர் கூற மறுத்தார்.
அவர் கூறினார், “ஆகவே நாங்கள் உங்களுடன், உங்கள் சக பணியாளருடன் ஏற்கனவே பேசியிருக்கிறோம் என்று நினைக்கிறோம், எங்களது, “எதிரிகள்” (எதிரி என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை), அல்லது குறைந்தபட்சம் எங்களின் பிரச்சினைகள் நாடுகடந்த பெருநிறுவனங்களில் இருந்து வருகிறது என்பதால், இதுவொரு சர்வதேசப் போராட்டம் என்ற உங்களின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்திருந்தார். ... ஒரு சர்வதேச நெருக்கடி, நல்லது, அது தற்போதைய தருணத்தில் பொருத்தமானதாக இல்லை. உங்களின் சகா இங்கே இருந்தபோது அவருக்கு என்ன பதில் அளித்தேனோ அதே பதிலை உங்களுக்கும் வழங்குவேன்: இப்போதைக்கு நாங்கள் நகரசபை மற்றும் பிராந்திய மட்டத்தில் தான் ஒழுங்கமைத்து வருகிறோம் என்று நான் கூறினேன்.”
ஒன்றுகூடல்களுக்கான சபை முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு தீர்மானத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று வினவிய போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “எங்களிடம் எந்த தீர்வும் இல்லையென்று நீங்கள் கூறுகிறீர்களா, அப்படியா? ஆனால் ஆம், உண்மையில் ஒரு தீர்வு உள்ளது, அது குறித்து தான் சிறிது நேரத்திற்கு முன்னர் நாங்கள் பேசினோம். அது சுய-நிர்வாகம் (autogestion) பற்றிய கேள்வியாகும். ... இந்த இயக்கம் ஏதோவொன்றுக்கு, எங்களிடையே ஒற்றுமைக்கு, பிறப்பு கொடுத்துள்ளது.”
இந்த தொனியைத் தான் பல தசாப்தங்களாக LFI ஐ சுற்றியுள்ள ஸ்ராலினிச தலைமையிலான தொழிற்சங்கங்கள் முடுக்கி விட்டு வந்திருந்தன. தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவதன் மூலமாக ஐரோப்பா எங்கிலும் நிறுவனங்களை தேசியமயப்படுத்துவது மற்றும் வங்கிகளைப் பறிமுதல் செய்வதற்கான ஒரு புரட்சிகர சோசலிச கொள்கையை நிராகரித்து, போட்டித்தன்மை இல்லாத ஆலைகளை தொழிலாளர்கள் அவர்களின் முதலாளிமார்களிடம் இருந்து விலைக்கு வாங்கி அவர்களே "சுய-நிர்வாகம்" (autogérer) செய்யலாம் என்று அவர்கள் வாதிட்டார்கள். இது பெரும்பாலும் தவிர்க்கவியலாமல் அதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் நிதிப் பேரழிவிலேயே போய்முடிந்தனர். எப்போதும் உலக சந்தையின் இலாபகரத்தன்மையினது ஆணைகளுக்கு உட்பட்டு இந்த நிறுவனங்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர் ஏறத்தாழ மூடப்பட்டன.
ஒரு சோசலிச சர்வதேசியவாத கொள்கையை ஒழுங்கமைப்பாளர்கள் நிராகரிப்பதானது, நேரடியாக குட்டி-முதலாளித்துவ தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் வர்க்க போராட்டம் நிராகரிக்கப்படுவதுடன் பிணைந்துள்ளது. இவ்விதத்தில், அவர் தொடர்ந்து கூறினார், “இன்னும் சற்று கூடுதல் உறுதியோடு கூறுவோமானால், நாங்கள் இந்த இயக்கத்தைப் பரவச் செய்ய விரும்புகிறோம். நாங்கள் எங்களை வர்க்க போராட்டத்துடன் மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை, நாங்கள் ஏதாவது விதத்தில் வர்க்க பிரச்சினையை நசுக்க விரும்புகிறோம், ஏதாவது விதத்தில்,” என்றார்.
இதுபோன்ற கருத்துக்கள், தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளுக்கும் மற்றும் ஒருபுறம் “மஞ்சள் சீருடை” இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட நடுத்தர வர்க்க மக்களுக்கும், மறுபுறம் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான புறநிலையான வர்க்க முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த இயக்கம் தொடங்கிய போது NPA மற்றும் பிரதான பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் இதில் பங்கெடுப்பதை வெளிப்படையாக எதிர்த்தன என்பதை நினைவுகூர வேண்டும். “பணக்காரர்களின் ஜனாதிபதி" இமானுவல் மக்ரோனுக்கு எதிராக பெருந்திரளான தொழிலாளர்கள் அணிதிரண்ட நிலையில், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான அவர்களின் தேசியவாத முயற்சிகள் அரசியல்ரீதியில் பிற்போக்குத்தனமானவை ஆகும்.
மிகவும் தீர்க்கமான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டாக வேண்டும்: இத்தகைய சக்திகளது கட்டுப்பாட்டிலான அமைப்புகள் தொழிலாளர்களுக்கு விரோதமான மற்றும் "மஞ்சள் சீருடையாளர்களுக்கு" விரோதமான கொள்கையைப் பின்தொடரும். “மஞ்சள் சீருடை" இயக்கம் ஒரு விதிவிலக்கு இல்லை, மாறாக அது சர்வதேச வர்க்க போராட்ட மேலெழுச்சியின் ஓர் பிரிக்கமுடியாத பாகமாகும். தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளிடமிருந்து சுயாதீனமாக தொடுக்கப்பட்ட, முதலாளித்துவத்திற்கு-எதிரான மற்றும் போருக்கு-எதிரான ஒரு போராட்டத்தில், பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும், நிதியியல் பிரபுத்துவத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு கோருவதன் மூலமாகவே அது முன்நகர முடியும்.
மறுபுறம், “மஞ்சள் சீருடை" இயக்கத்தின் மீது செல்வாக்கு பெறுவதற்கான குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் தகைமை, இந்த இயக்கத்தின் நிஜமான முரண்பாடுகளையும் பலவீனத்தையும் பிரதிபலிக்கிறது. “மஞ்சள் சீருடையாளர்கள்" அவர்களே வர்க்க போராட்டத்தைக் குறித்தோ மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தைக் குறித்தோ பேசவில்லை, இந்த சொற்களைத் தொழிலாளர்கள் மத்தியில் இழிவுபடுத்த பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) பல தசாப்தங்களாக செயற்பட்டுள்ளது, மாறாக அவர்கள் "மக்கள்" என்றும், “ஜனநாயகத்திற்கான" போராட்டம் என்றும் மேலோட்டமாக பேசுகிறார்கள். அவர்கள் ஆளும் அரசியல் கட்சிகளை நிராகரிப்பதை மேற்கோளிட்டு, தங்களை "அரசியல் அற்றவர்கள்" (apolitical) என்றும் வரையறுக்கிறார்கள்.
இந்த "அரசியல் அற்ற" ஜனரஞ்சகவாத மொழி "மஞ்சள் சீருடை" போராட்டங்களில் பங்கெடுத்து வருகின்ற பத்தாயிரக் கணக்கானவர்களை, பிரான்சிலோ அல்லது அதற்கு அப்பாலோ, பெருந்திரளான பரந்த தொழிலாளர்களை அணிதிரட்ட போதுமானதல்ல. ஆனால் இது பரந்தளவில் மதிப்பிழந்த குட்டி-முதலாளித்துவ கட்சிகளின் அதிகாரிகள் இந்த இயக்கத்தின் மீது பகுதியளவில்-மறைவாக செல்வாக்கு செலுத்த வாய்ப்பை வழங்குகிறது.
அவர்கள், "மஞ்சள் சீருடையாளர்களின்" “ஜனநாயக" நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக தொழிற்சங்க அதிகாரத்துவம், கல்வித்துறை ஆராய்ச்சி மற்றும் ஊடகங்களுக்கான உத்தியோகபூர்வ நிதி வழங்கல்களில் ஆதாயமடையும் ஒரு சமூகத்தின் உயர்மட்ட 10 சதவீதத்தினரில் நடுத்தர வர்க்கத்தின் குறிப்பிட்ட அடுக்குகளது சடரீதியிலான நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச போக்கிற்கு எதிராக "மஞ்சள் சீருடையாளர்களின்" பாதுகாவலர்களாக அவர்கள் காட்டிக் கொள்வதற்கான முயற்சிகள் எரிச்சலூட்டுவதும் பொய்யானதும் ஆகும். அவர்கள் இந்த இயக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதை தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் அடிபணிய செய்ய நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல தசாப்தங்களாக அவர்கள் வர்க்க போராட்டத்தை ஒடுக்கி அதை சோசலிஸ்ட் கட்சி உடனான ஒரு கூட்டணிக்கு அடிபணிய வைத்தனர் என்ற உண்மையிலிருந்து, இப்போதைக்கு, NPA, LFI மற்றும் LO ஆதாயமடைகின்றன. அதில் பெருந்திரளான மக்களால் சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளின் சமூக செலவினக் குறைப்பு கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போர்களுடன் சோசலிசம் தவறாக தொடர்புபடுத்தப்பட்டு நோக்கப்பட்ட நோக்குநிலை பிறழ்ந்த ஒரு சூழலை உருவாக்க உதவியது. “மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களுக்கு எதிரான மக்ரோனின் காட்டுமிராண்டித்தனமான போலிஸ் ஒடுக்குமுறைக்கு இடையிலும், அவர்களுக்கு அதற்கு எதிரான ஒரு தெளிவான புரட்சிகர முன்னோக்கு இல்லாமல் உள்ளது.
இவ்விதத்தில், WSWS அக்கூட்டத்தில் ஒரு பிரிட்டிஷ் இளைஞருடன் கலந்துரையாடியது, அவர் பிரிட்டனில் “நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் இடதில்” அவருக்கு நண்பர்கள் இருப்பதாகவும், அவர், LFI இல் இணைந்த ஒரு ஸ்ராலினிச நிர்வாகியான José Espinosa தலைமையில் பாரீசில் உள்ள "மஞ்சள் சீருடை" குழுவில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவவாதம் மற்றும் சமூக செலவினக் குறைப்பை எதிர்த்து தொழிலாளர்கள் எவ்வாறு போராட முடியும் என்று அவரிடம் WSWS வினவிய போது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “இதுவொரு நல்ல கேள்வி தான். ஆனால் எனக்குத் தெரியாது. விடயங்கள் அவசியமானரீதியில் அந்த அளவுக்கு முன்நிறுத்தப்படுவதாக நான் நினைக்கவில்லை. இந்த தருணத்தில் என்ன நடந்து வருகிறதோ அது பாரீசில் நடந்த ஒரு சில கலகங்களுக்குப் பிந்தைய நிலைமையில்தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன்,” என்றார்.
ஒன்றுகூடல்களுக்கான சபையின் ஜனநாயக தன்மை எனப்படுவதற்கு தலைவணங்கிய போதினும், அவர் பின்வரும் அறிவிப்பை வழங்கினார்: “மக்களின் உள்ளூர் ஒன்றுகூடல்களைப் பிரதிநிதித்துவம் செய்ய அவர்களுக்கு உரிமையோ அல்லது அதிகாரமோ உள்ளதா என்பதுதான் பல ஒன்றுகூடல் சந்திப்புகளில் இருந்த கேள்வியாக இருந்தது, ஏனென்றால் நாடெங்கிலும் இருந்து வந்த பிரதிநிதிகள் அங்கே இருந்தனர். ... கோரிக்கைகள் மற்றும் இந்த விதமான அனைத்து விடயங்களையும் குறித்த சுமார் இரண்டு மணி நேர விவாதத்திற்குப் பின்னர், வாக்கெடுப்பு தருணம் வந்த உடனேயே திடீரென ஒவ்வொருவரும் சபையில் முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை என்பதாக உணர்ந்தார்கள். ஆகவே அது மிகவும் சுவாரசியமாக இருந்தது,” என்றார்.
குட்டி-முதலாளித்துவ போலி-இடதின் கீழ்மட்ட உறுப்பினர்களுடன் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் இந்த "மஞ்சள் சீருடை" இயக்கம் தற்காலிகமாக நல்லிணக்கத்துடன் இருப்பது வர்க்கப் போராட்ட அபிவிருத்தியின் ஆரம்பக் கட்டத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால் மக்ரோனும் அவருக்கு பின்னால் நிற்கும் சர்வதேச வங்கிகளும் நுகர்வு சக்தி மீதோ, அல்லது வேறெதன் மீதும் எதையும் தொழிலாளர்களுக்கு வழங்கப் போவதில்லை; அவர்கள் சமூக செலவினக் குறைப்பு மற்றும் போரைத் தீவிரப்படுத்துவார்கள். தொழிலாள வர்க்கத்தில் ஒரு பரந்த சர்வதேச மேலெழுச்சி நடந்து வருகிறது, இது தேசியவாதத்திற்கான முறையீடுகள் மூலமாக வர்க்க போராட்டத்தை ஒடுக்குவதற்கான போலி-இடதின் முயற்சிகளைச் சிதைக்கும்.
மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளை ஏகபோகமாக்க மற்றும் தலையீடு செய்வதற்கான போலி-இடதின் இப்போதைய ஆற்றல், சுயாதீனமான அமைப்புகளை உருவாக்குவதே அவசியமான முதல் அடி என்ற PES இன் மதிப்பீட்டை மறுத்தளிக்காது. இறுதியாக, “மஞ்சள் சீருடையாளர்கள்" அதுபோன்ற அமைப்புகளை அமைக்க முயன்றுள்ளனர் என்பதல்ல பிரச்சினை, மாறாக அரசியல் முன்னோக்கு ஆகும். இப்போதைக்கு, பெருந்திரளான மக்களுக்கான போராட்டத்தில் அவர்களின் இயக்கத்திற்கு விரோதமாக உள்ள குட்டி-முதலாளித்துவக் கட்சிகளின் செல்வாக்கை நனவுபூர்வமாக நிராகரித்து எதிர்க்க, அவர்களுக்கு அரசியல் பிரச்சினைகள் போதுமானளவுக்குத் தெளிவாக இல்லை.
இது அனைத்திற்கும் மேலாக PES ஐ கட்டியெழுப்புவதற்கான கேள்வியை உயர்த்துகிறது. கொமெர்சி மக்கள் சபை போன்ற அமைப்புகளை உருவாக்குவது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர போராட்டத்திற்கு வழி வகுக்கிறது என்பதை அது விவரித்துள்ளது. தேசியளவில் அடித்தளம் கொண்ட தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான அதுபோன்ற அமைப்புகளின் ஒரு சர்வதேச வலையமைப்பு, உற்பத்திக் கருவிகளைப் பறிமுதல் செய்யவும் மற்றும் அரசியல் அதிகாரத்தை அவர்களின் சபைகளுக்கு மாற்றுவதற்கும் தொழிலாளர்களை அனுமதிக்கும். அவ்விதத்தில் அவர்கள் ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதத்தால் நிராகரிக்கப்பட்ட அக்டோபர் 1917 புரட்சியின் பாரம்பரியங்களைப் புதுப்பிப்பார்கள்.
பிரான்சிலும் சர்வதேச அளவிலும் வரவிருக்கின்ற வர்க்கப் போராட்டங்களில், பெருந்திரளான தொழிலாளர்கள் போலி-இடது கட்சிகளின் பிற்போக்குத்தனமான பாத்திரத்துடனான கசப்பான அனுபவங்களினூடாக செல்வார்கள். இத்தகைய போராட்டங்களைப் பலன் கொடுக்குமாறு கொண்டு வருவதில் உள்ள தீர்க்கமான பிரச்சினை, சர்வதேச வர்க்க போராட்டத்திற்கு தொழிலாளர்களை நோக்குநிலை கொள்ள செய்யவும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் போலி-இடது குழுக்களின் எதிர்-புரட்சிகர பாத்திரத்தைக் கடந்து வரச் செய்யவும், பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியை மற்றும் உலகெங்கிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஏனைய பிரிவுகளையும் கட்டமைப்பதாக இருக்கும்.