Print Version|Feedback
Sri Lankan plantation union discussing sellout deal with companies
இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கம் கம்பனிகளுடன் கொடுத்து வாங்கும் உடன்பாட்டைப் பற்றி கலந்துரையாடுகிறது
By Pani Wijesiriwardena
3 January 2019
இலங்கையின் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் 100 சதவீத தினசரி ஊதிய அதிகரிப்புக்கான தொழிலாளர்களின் கோரிக்கையை கைவிடத் தயாராகி வருவதுடன், மூடிய கதவுகளுக்குள் கம்பனிகளுடன் நடத்தும் கொடுக்கல் வாங்கல்களின் பாகமாக ஒரு புதிய கூட்டு ஒப்பந்தத்தை திணிக்வுள்ளன என்பதை அன்மைய செய்திகள் சமிக்ஞை செய்துள்ளன.
இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் ஒரு சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள் காட்டி டிசம்பர் 31 அன்று டெயிலி எப்.டி. வெளியிட்ட செய்தியில், பெருந்தோட்ட கம்பனிகள் வழங்கிய மூன்று சலுகைகளை பற்றி “அக்கறை காட்டுவதன் பேரில் தொழிற்சங்கங்கள் கொஞ்சம் வளைந்து கொடுப்பதற்கான தமது விருப்பத்தை” வெளிப்படுத்தியுள்ளன. “இது நான்கு மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அவர்களிடமிருந்து வந்த மிகவும் சாதகமான பிரதிபலிப்பாகும்" என்று அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி, மூன்று சலுகைகளைப் பற்றிய விபரங்களை வழங்கவில்லை அல்லது தொழிற்சங்கங்கள் எவ்வாறு "நெகிழ்வுத்தன்மையை" காட்டியுள்ளன என்பதை வெளிப்படுத்தவில்லை. எனினும், "பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா அடிப்படை ஊதியத்துக்கு இணங்குவதற்கான சாத்தியம் கிடையாது" என்பதை முதலாளிமார் சம்மேளனம் "ஆணித்தரமாக" சொல்லி வைக்கின்றது என அவர் அந்த பத்திரிகையிடம் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டு ஒப்பந்தம் அக்டோபரில் முடிவடைந்ததில் இருந்தே ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த பத்தாயிரக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள், டிசம்பர் 4 அன்று ஒரு கால வரையறையற்ற தேசிய வேலைநிறுத்தத்தை தொடங்கினர். தற்போதைய 500 ரூபாய் (2.80 அமெரிக்க டாலர்) தினசரி ஊதியம் 1,000 ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
போராடுவதற்கான தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை ஆவியாக்கிவிடுவதற்கான முயற்சியில் ஒரு வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பள கோரிக்கைகளை பற்றி கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்திருப்பதாக கூறி, ஒரு வாரத்திற்குள் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொண்டது. தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டதை மீறி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர் (பார்க்க: "Sri Lankan plantation workers end strike action under protest").
இ.தொ.கா. தலைமைத்துவமானது, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU), பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JPTUC) ஆகியவற்றுடன் இணைந்து, தற்போது முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
ஆரம்பத்தில் இருந்தே, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை அன்றாட ஊதியத்தை 20 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்க முடியும் என்று வலியுறுத்திய பெருந்தோட்டக் கம்பனிகள், பல்வேறு கொடுப்பனவுகளை அதிகரிப்பதன் மூலம், தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 940 ரூபா சம்பாதிக்க முடியும் என்று கூறிக்கொள்கின்றன. இந்த கொடுப்பனவுகளில், "வருகை மற்றும் உற்பத்தித்திறன் ஊக்குவிப்புக்கள் மற்றும் விலைப் பங்கு கொடுப்பனவும்" அடங்கும். இருப்பினும், பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளர்களால் இந்த இலக்கை அடைய முடியாது, இதனால் கொடுப்பனவுகளை அவர்களால் பெற முடியாது.
அந்த பெயர் குறிப்பிடப்படாத சிரேஷ்ட அதிகாரி, "கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை" முடிவுக்கு கொண்டுவருவதற்கே முதலாளிமார் சம்மேளனம் "முன்னுரிமை" கொடுத்துள்ளது என டெயிலி எப்.டி.க்கு கூறினார். உண்மையில், கம்பனிகளின் முன்னுரிமை என்பது, ஊதிய விவகாரத்தை தீர்ப்பது அல்ல, மாறாக, "வருவாய் பங்கீட்டு முறையை" திணிப்பதற்கு தொழிற்சங்கங்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்திக்கொள்வதே ஆகும். இது தற்போதைய "காலாவதியான" ஊதிய முறையையும் தூக்கி வீசி, தொழிலாளர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றி, ஊழியர் சேமலாப நிதி போன்ற சிறிய சலுகைகளையும் அபகரிக்கும்.
தொழிற்சங்கங்கள் கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்த திட்டத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்டாலும், இந்த சுரண்டல் முறையை ஈவிரக்கமின்றி அமுல்படுத்தும் தொழில்துறை பொலிஸ்காரனாக தொழிற்சங்கங்கள் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதே கம்பனிகளின் விருப்பமாகும்.
இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை, கடந்த மாதம் நடந்த வருடாந்த கூட்டத்தில், அறிவித்ததாவது: "தற்போதைய தொழில் மாதிரிகள் 150 ஆண்டுகளுக்கும் மேல் பழையதாகும் ... பெருந்தோட்ட உரமையாளர்கள் சங்கமானது வருமானப் பகிர்வு மாதிரியை பரிந்துரைக்கின்றது. இதன் கீழ் தொழிலாளர்கள் கடினமாக உழைத்து அவர்கள் இப்போது எதிர்பார்ப்பதை விட அதிகமாக சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஊக்குவிக்கப்படுவர்."
இந்த திட்டத்தின் கீழ், பராமரிக்கவும் அறுவடை செய்யவும் ஒரு தொழிலாள குடும்பத்திற்கு தேயிலை செடிகள் ஒதுக்கி கொடுக்கப்படும். கம்பனியின் செலவுகள் மற்றும் இலாபங்கள் கழிக்கப்பட்ட பின்னர் வருமானத்தின் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும்.
சமீப ஆண்டுகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் இந்த முறையை நிராகரித்துள்ளனர். எபோட்சிலி தோட்டத்தில், தொழிலாளர்கள் நேரடியாக நிறுவனத்தினால் ஒவ்வொரு நாளும் 2 மணி வரை வேலை வாங்கப்படுகின்றனர், பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேயிலை செடிகளைப் பராமரிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதன் அர்த்தம், மொத்த குடும்பமும் தங்கள் வருமானத்தில் எந்த உண்மையான அதிகரிப்பு இல்லாமலேயே "தமது" தேயிலை செடிகளைப் பராமரிக்கத் தள்ளப்படும்.
அரசாங்கம் மற்றும் பொலிசின் ஆதரவுடன், தோட்டக் கம்பனிகள் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்பையும் நசுக்க முயற்சிக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், டிகோயாவில் என் ஃபீல்ட் தோட்டத்தின் சென் லீஸ் பிரிவின் இ.தொ.கா. தோட்டத் தலைவர் சுப்பையா பாலசுப்பிரமணியம் மீது, "ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதாக" தோட்ட நிர்வாகம் குற்றம் சாட்டியதுடன், அவருடன் மேலும் மூன்று தொழிலாளர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்த “ஒழுக்கக்கேடான” நடத்தை என்று அழைக்கப்படுவது, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின்போது ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியதே ஆகும்.
பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் நவின் திசாநாயக்க தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளுக்கு "பாரபட்சமற்ற தீர்வு" ஒன்றுக்கு ஆதரிவளிக்க உறுதியளித்துள்ளார். ஆனால் அவருடைய "பாரபட்சமற்ற தீர்வு" கம்பனிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கானதே ஆகும்.
எபோட்சிலி தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவின் தலைவரான பி. சுந்தரலிங்கம், நேற்று உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசும் போது, 1,000 ரூபா ஊதியக் கோரிக்கையை கைவிட்டமை "தொழிலாளர்களின் போராட்டத்தை மோசமாக காட்டிக் கொடுப்பதாகும்" என்று கூறியுள்ளார். என் ஃபீல்ட் தோட்டத்தின் தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலையும் கண்டனம் செய்த அவர், தொழிலாளர்கள் வேட்டையாடப்படுவதற்கு சாத்தியமான நிலைமைகளை தொழிற்சங்கங்களே பெரிதும் உருவாக்குகின்றன என்று எச்சரித்தார்.
எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது சமீபத்திய வேலைநிறுத்தத்தின்போது சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்டது. தொழிற்சங்க காட்டிக்கொடுப்புகளின் விளைவாக பல கசப்பான அனுபவங்களை சந்தித்த எபோட்சிலி தொழிலாளர்கள், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அவசியத்தை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
எந்தவொரு தொழிற்சங்க-கம்பனி ஒப்பந்தத்தையும் நிராகரிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுப்பாய்வுகளைப் படிக்குமாறும் அவர்களின் ஊதியக் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், உரிமைகளை பாதுகாக்கவும் போராட்டங்களைப் புதுப்பிப்பதற்கு அரசியல் ரீதியாக தயாராகுமாறும் நாம் அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் வலியுறுத்துகிறோம்.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாக்கின்றன.
கூட்டு ஒப்பந்த முறை 1992 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாப நலன்களை பாதுகாக்கும் ஒப்பந்தங்களை தொழிலாளர்கள் மீது சுமத்துவதற்காக, தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடன் ஒத்துழைத்து வந்துள்ளன.
இ.தொ.கா. போட்டியாளர்களான, தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.), மலையைக மக்கள் முன்னணி (ம.ம.மு.) போன்றவை இதில் இருந்து வேறுபட்டவை அல்ல. இந்த அமைப்புக்கள் இ.தொ.கா., LJEWU மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் கையெழுத்திட்டு வரும் கூட்டு ஒப்பந்தங்களை வழமையாகவே அங்கீகரித்து வந்துள்ளன. இந்த அனைத்து அமைப்புகளிலிருந்தும் தொழிலாளர்கள் விலகிக்கொண்டு, தங்கள் உரிமைகளுக்காப் போராடுவதற்கு தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்து, வருவாய் பகிர்வு முறை என அழைக்கப்படுவதை திணிப்பதற்கு மூடிய கதவுகளுக்குள் திட்டமிடுவதானது, முழு தொழிலாள வர்க்கத்தினதும் வாழ்க்கை நிலைமைகள் மீது முன்னெடுக்கப்படும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். சோசலிச சர்வதேசியவாதத்திற்காகவும் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்காகவும் முன்னெடுக்கும் போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாளர்களால் தமது உரிமைகளை பாதுகாக்க முடியும்.
ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்:
இலங்கை தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம்
[17 டிசம்பர் 2018]