Print Version|Feedback
The political significance of India’s two-day general strike
இந்தியாவின் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தின் அரசியல் முக்கியத்துவம்
Keith Jones
12 January 2019
இந்தியா எங்கிலும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், அந்நாட்டின் மூர்க்கமான வலதுசாரி அரசாங்கத்தின் "முதலீட்டாளர்-சார்பு" கொள்கைகளுக்கு தங்களின் எதிர்ப்புக் குரலை எழுப்ப இந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்.
சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தித் தொழிலாளர்கள் தொடங்கி, வங்கிகள், போக்குவரத்து மற்றும் பிற அரசு சேவைகள் வரையில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் ஈடுபட்ட இந்த வேலைநிறுத்தம், இந்திய ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட "பிரித்தாளும்" மூலோபாயத்தின் பாகமாக தசாப்தங்களாக தூண்டிவிட்டு வந்துள்ள ஜாதி மற்றும் வகுப்புவாத பிளவுகளையும் ஊடறுத்து நடைபெற்றது.
மிகப் பெரிய வரலாற்று வேலைநிறுத்தங்களில் ஒன்றாக இந்தியாவின் இவ்வார பொது வேலைநிறுத்தம் உலகளவில் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் மேலெழுச்சியின் ஒரு பாகமாக உள்ளது.
அண்டைநாடான பங்களாதேஷில், வறுமையில் வாடும் பத்தாயிரக் கணக்கான ஆயத்த ஆடை தொழில்துறை தொழிலாளர்கள், இவ்வாரம் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற அரசு ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை எதிர் கொண்ட நிலையில், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். செவ்வாயன்று போராட்டம் நடத்தி வந்த தொழிலாளர்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியதில் 22 வயது தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தியாவுக்கு தென்கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இலங்கையில், தோட்டத் தொழிலாளர்கள் வறுமை கூலிகளுக்கு எதிராக மாதக் கணக்கில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசை ஆதரிக்கும் தொழிற்சங்கங்களை எதிர்த்து 10,000 தொழிலாளர்கள் டிசம்பரில் நடத்திய ஒன்பது நாள் வேலைநிறுத்தமும் இதில் உள்ளடங்கும்.
பிரான்சில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளுக்கு எதிராக "மஞ்சள் சீருடை" இயக்கத்தில் நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில், தொழிற்சங்கத்தின் ஆதரவு பெற்ற ஜனநாயக கட்சி தலைமையிலான கல்வித்துறை மாவட்டம் மற்றும் கலிபோர்னியா மாநில அரசாங்கமும், பொதுக் கல்வியை தகர்ப்பதை எதிர்த்து 30,000 க்கும் அதிகமான கல்வியாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்க ஐக்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் ஆசிரியர் சங்கம் பெரும் பிரயத்தனத்துடன் சூழ்ச்சி செய்து வருகிறது.
வேலைகளை வெட்டவும் மற்றும் ஆலைகளை மூடுவதற்குமான நாடு கடந்த வாகனத்துறை நிறுவனங்களின் திட்டங்களை போர்குணத்துடன் சவால்விடுப்பதற்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலுமான வாகனத்துறை தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரித்து கொண்டிருக்கிறது. கனடாவின் ஓஷாவா ஜிஎம் ஆலை நிர்வாகம் அந்த ஆலையையும் அமெரிக்காவில் உள்ள நான்கு ஏனைய ஆலைகளையும் மூடுவதென அதன் முடிவை மீளவலியுறுத்தியதும், அதன் தொழிலாளர்கள் பெருநிறுவன யூனிஃபர் சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக செயல்பட்டு, இவ்வாரம் தொடர்ச்சியாக ஆலை போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவற்றின் போலி-இடது தொங்குதசைகள் என போலி ஸ்தாபக "இடதால்" பல தசாப்தங்களாக வர்க்க போராட்டம் செயற்கையாக ஒடுக்கப்பட்டு வந்த பின்னர், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான நலன்களை நிலைநிறுத்த தொடங்கி உள்ளது.
இந்தியா 21 ஆம் நூற்றாண்டு முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்திற்கு முன்னுதாரணமாக உள்ளது. இந்திய மக்கள்தொகையில் எழுபது சதவீதத்தினர் அல்லது 900 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கு நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான தொகையில் வழிவகை தேடுகிறார்கள். இதற்கிடையே, உயரடுக்கும் அதன் ஊடகங்களும், 1990 களின் மத்தியில் சுமார் 3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டு பில்லியனர்களாக (மாபெரும் கோடீஸ்வரர்களாக) இருந்ததில் இருந்து இன்று 131 ஆக அதிகரித்திருக்கும் இந்தியாவின் பில்லியனர்களின் அதிவேக அதிகரிப்பை, அதாவது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 15 சதவீதத்திற்குச் சமமான செல்வவளக் குவியலுடன் இருப்பதை கொண்டாடுகின்றன.
நரேந்திர மோடி மற்றும் அவரின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளை இன்னும் அதிக கொடூரமாக சுரண்டுவதற்காகத் தான் 2014 இல் அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டார்கள். மோடி அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமான சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை நடத்தி உள்ளதுடன், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஊக்குவித்துள்ளது, தனியார்மயமாக்கலைத் தீவிரப்படுத்தி உள்ளது; அதேவேளையில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை முடுக்கிவிட்டுள்ளது மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ-மூலோபாய அத்துமீறல்களில் ஓர் முன்னிலை அரசாக இந்தியாவை மாற்றி உள்ளது.
ஆனால் இவ்வார வேலைநிறுத்தம், நன்கு உணரும்படியாக எடுத்துக்காட்டியதைப் போல, இந்திய தொழிலாள வர்க்கம் வெறுமனே சுரண்டலுக்கான ஒரு பொருள் அல்ல. அது அளப்பரிய சமூக சக்தியை பிரயோகிக்க கூடியது.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீள்எழுச்சி உலக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான—பூகோளரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட அதன் பன்னாட்டு பெருநிறுவனங்கள், அதன் போர்கள் மற்றும் சூழ்ச்சிகள், மற்றும் ஏதேச்சதிகார ஆட்சி முறைகளுக்கு அது திரும்புவதற்கு எதிரான மற்றும் அதிவலது பாசிசவாத சக்திகளை மேலுயர்த்துவதற்கு எதிரான- ஓர் எதிர்தாக்குதலுக்கான புறநிலை அடித்தளங்களை வழங்குகிறது.
இப்போதைய பணியானது, இல்லாமை மற்றும் போரிலிருந்து விடுபட்டு சுதந்திரமான ஒரு புதிய சமூக ஒழுங்கமைப்பாக சர்வதேச சோசலிசத்தை உருவாக்கும் வகையில், தொழிலாள வர்க்கத்தின் இந்த கிளர்ச்சிகரமான இயக்கத்தை ஒரு சர்வதேச மூலோபாயம் மற்றும் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளைக் கொண்டு அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்குவதாகும்.
தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு பிரகாசமான புதிய அரசியல் பாதையில் முக்கிய அம்சமாக இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் பெயரில் பேசுவதாக உரிமைகோரி வரும் முதலாளித்துவ-சார்பு அமைப்புகளை, அது அமெரிக்காவில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் ஆகட்டும், அல்லது பிரான்சில் CGT ஆகட்டும், அல்லது ஜேர்மனியில் இடது கட்சி ஆகட்டும் அவற்றை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்துவதாகும்.
இந்த அகில-இந்திய வேலைநிறுத்த போராட்டம், ஸ்ராலினிச கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மற்றும் அதன் தொழிற்சங்க அமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) ஆகியவற்றால் அரசியல்ரீதியில் தலைமை கொடுக்கப்படுகிறது. சிபிஎம் இன் சகோதரத்துவ ஸ்ராலினிச கட்சியான சிபிஐ இன் ஒன்றிய கூட்டமைப்பு மற்றும் பெருவணிக காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்நாட்டை மையமாக கொண்ட வலதுசாரி கட்சியான திமுக ஆகியவற்றின் தொழிற்சங்க தொங்குதசைகளும் இதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
இந்த கட்சிகள் அனைத்துமே பூகோள மூலதனத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு-உழைப்பு கூடமாக மாற்றுவதற்காக இந்திய முதலாளித்துவத்தின் முனைவை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. 1991 மற்றும் 2008 க்கு இடையே, சிபிஎம் மற்றும் சிபிஐ அடுத்தடுத்து ஆட்சி அமைத்த அரசாங்கங்களை அதிகாரத்தில் தாங்கிப்பிடித்தன, அவற்றில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலானதாகும், அது நவ-தாராளவாத திட்டநிரலை முன்னெடுத்ததுடன் வாஷிங்டன் உடன் நெருக்கமான உறவுகளைப் பின்தொடர்ந்தது.
தொழிலாளர்கள், ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் “சந்தை-சார்பு” சீர்திருத்தங்களால் ஏற்படுத்தப்பட்ட சமூக சீரழிவை எதிர்க்கவே இவ்வார வேலைநிறுத்தத்தில் இணைந்தார்கள். ஆனால் ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்த வரையில் இது ஏப்ரல்-மே பொது தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தலைமையிலோ அல்லது பல சிறிய வலதுசாரி பிராந்திய கட்சிகள் தலைமையிலோ ஒரு முதலாளித்துவ மாற்று அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போடுவதை நோக்கமாக கொண்ட ஒரு அருவருக்கத்தக்க அரசியல் சூழ்ச்சியாக இருந்தது.
ஸ்ராலினிசவாதிகள், பிஜேபி மற்றும் அதன் இந்து வலது கூட்டாளிகளின் குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு அவர்கள் முறைப்படியாக கீழ்ப்படிய செய்வதை நியாயப்படுத்த முனைகின்றன.
நிச்சயமாக, மோடியும் அவரது பிஜேபி கட்சியும் தொழிலாள வர்க்கத்திற்குக் கடுமையான எதிரிகள் தான். ஆனால் இந்து வலதுசாரியால் இந்தளவுக்கு அச்சுறுத்தும் வகையில் வளர முடிந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஸ்ராலினிசவாதிகள் பிற்போக்குதனம் வளர்வதற்கு உரமிட்டுள்ளனர். சமூக நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சோசலிச தீர்வை முன்னெடுப்பதில் இருந்து ஸ்ராலினிஸ்டுகள் அதை தடுத்து வருகின்ற நிலையில், பல்வேறு ஸ்ராலினிச-ஆதரவு "மதசார்பற்ற" அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்திய சந்தை-சார்பு கொள்கைகளின் அழிவுகரமான பாதிப்புகளால் எழுந்த உணர்ச்சிகரமான மக்கள் கோபத்தை பிஜேபி இனால் சுரண்ட முடிந்திருக்கிறது.
இந்தியாவில் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் பிற்போக்குத்தனத்தைத் தோற்கடிப்பதற்கான ஒரே நம்பகமான மூலோபாயம், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, நாடி தளர்ந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சர்வதேச வர்க்க போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணித்திரள்வு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது.
இந்திய தொழிலாளர்கள் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளைக் கட்டமைப்பதன் மூலமாக மோடி ஆட்சிக்கும் மற்றும் அடுத்த அரசாங்கத்திற்கும்—அது என்ன மாதிரியான கலவையாக இருந்தாலும், அது இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மீதான சுரண்டலை இன்னும் வேகமாக தீவிரப்படுத்தும்படி அதன் முதலாளித்துவ எஜமானர்களால் பணிக்கப்பட்டிருக்கும் என்கின்ற நிலையில்—அவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.
இதில் அவர்கள் இலங்கையின் அபோட்ஸ்லேக் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் முன்னுதாரணத்தைப் பின்தொடர வேண்டும், இவர்கள் பல தசாப்தங்களாக அவர்கள் மீதான மூர்க்கமான சுரண்டலுக்கு துணையாக இருந்து வந்துள்ள தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக சோசலிச சமத்துவக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் சாமானியத் தொழிலாளர் குழுக்களை ஸ்தாபித்துள்ளனர்.
இதுபோன்ற சாமானிய வேலையிட தொழிலாளர் குழுக்கள், இந்தியா எங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதன் மூலமாகவும் மற்றும் பூகோளமயப்பட்ட முதலாளித்துவ உற்பத்தியின் அதே நிகழ்முறையில் மிக நெருக்கமாக அவர்கள் பிணைந்துள்ள உலகெங்கிலுமான தொழிலாளர்களை எட்டுவதன் மூலமாகவும், தொழிலாள வர்க்க எதிர்-தாக்குதலை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இந்த குழுக்கள் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆயுள் தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்கும் போராட்டத்தை எடுக்க வேண்டும். வறுமை கூலிகள் மற்றும் ஒப்பந்த-தொழிலாளர் வேலை முறைகளுக்கு எதிராக போராடியதை மட்டுமே "குற்றமாக" கொண்டுள்ள இந்த தொழிலாளர்களின் முன்னுதாரணமான போர்குணம் குறித்து ஸ்ராலினிசவாதிகளும் அவர்களின் தொழிற்சங்கங்களும் அஞ்சுவதால் தான், அவர்கள் இந்த தொழிலாளர்களை மானம் கெட்ட முறையில் கைவிட்டுள்ளனர். மாருதி சுசூகியின் 13 தொழிலாளர்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை மலிவு உழைப்பு நிலைமைகள் மற்றும் நிலையற்ற வேலைவாய்ப்புகளுக்கு எதிரான பரந்த போராட்டத்துடன் தொடர்புபடுத்தும் ஒரு நடவடிக்கை தொழிலாள வர்க்கத்தின் முந்தைய வர்க்க-போர் கைதிகளுக்குப் பரந்த ஆதரவைப் பெற்றுத்தரும் என்பதுடன், வர்க்க போராட்டத்திற்கான தொடக்கப் புள்ளியாக சேவையாற்றும்.
இந்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒரு உறுதியான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டமைப்பதில் தெற்காசியா எங்கிலுமான மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களுடன் இணைய வேண்டும். வாஷிங்டனுடன் அணிசேர்வதன் மூலமாக, இந்திய முதலாளித்துவ வர்க்கம் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் முனைவை பொறுப்பின்றி ஊக்குவிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இந்தியாவின் ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தைப் பயமுறுத்தும் மற்றும் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் வகுப்புவாதத்தையும் போர்வெறியையும் தூண்டி விடுவதற்காக, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதன் பிற்போக்குத்தனமான இராணுவ-மூலோபாய மோதல்களைத் திட்டமிட்டு திறமையாக கையாள்கிறது.
அனைத்திற்கும் மேலாக, தொழிலாளர்களின் ஆட்சிக்கான போராட்டத்தை மேற்கொள்ள, உலக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மற்றும் மூலோபாய படிப்பினைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சர்வதேசவாத சோசலிச வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்தின் அடிப்படையில் இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியமாகும். அக்கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு (ICFI) மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி போன்ற அதன் தேசிய பிரிவுகள் ஆகும்.
1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்டு, 1917 ரஷ்ய புரட்சி மற்றும் அதன் ஸ்ராலினிச அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் உயிரூட்டப்பட்ட வேலைத்திட்டமான நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தை, ICFI பாதுகாத்து அபிவிருத்தி செய்துள்ளது. அதன் முக்கிய படிப்பினைகளில் ஒன்று என்னவென்றால், வரலாற்றுரீதியில் காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், ஜனநாயக மற்றும் சோசலிச புரட்சிகளின் பணிகள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன. நிலபிரபுத்துவம் மற்றும் ஜாதியவாதத்தை ஒழிப்பதில் இருந்து, தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகள் மற்றும் உண்மையான சமூக சமத்துவம் ஆகியவற்றை, முதலாளித்துவ—எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் மற்றும் தொழிலாளர்களின் ஆட்சிக்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் தனது அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டி அதன் பின்னால் கிராமப்புற மக்களை அணிதிரட்டும் போராட்டத்திற்கு வெளியே— ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படையான அபிலாஷைகள் எதையுமே பாதுகாக்க முடியாது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இந்திய பிரிவைக் கட்டமைக்கும் போராட்டத்தில் இணைந்து, சமூக சமத்துவமின்மை, முதலாளித்துவ பிற்போக்குத்தனம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்குமாறு இந்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.