Print Version|Feedback
Sri Lankan Supreme Court rules against President Sirisena’s decision to dissolve parliament
பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி சிறிசேன எடுத்த முடிவுக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
By Deepal Jayasekera
14 December 2018
நேற்று மாலை, இலங்கை உயர் நீதிமன்றமானது பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. பிரதம நீதியரசர் நலின் பெரேரா, நாட்டின் உயர் நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளின் ஏகமனதான முடிவை அறிவித்தார்.
இந்த தீர்ப்பு சிறிசேனவுக்கு மற்றொரு அடியாகும். அவர் அக்டோபர் 26 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அந்தப் பதவியில் அமர்த்தி செய்த பாராளுமன்ற சதிக்குப் பின்னர், அடுத்த மாதம் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தார்.
தீவில் முதலாளித்துவ ஆட்சியின் தீவிரமான அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு மாறாக இந்த நீதிமன்ற தீர்ப்பு நெருக்கடியை இன்னும் மோசமடையச் செய்யக்கூடும்.
இந்த தீர்ப்பு இராஜபக்ஷவின் சட்டவிரோதமான நியமனத்தையும், அவரது அமைச்சரவை நியமனங்களையும் இரத்து செய்யவில்லை. மேலும், இராஜபக்ஷ, தனது அரசாங்கத்தை இடைநிறுத்திய முந்தைய மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
சிறிசேன நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டுமெனில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், என நீதிமன்றம் நேற்றைய தீர்ப்பில் அறிவித்தது.
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பதவிக்கு வந்த முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், நாட்டின் அரசியலமைப்பில் 19வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதன் மூலம் அது பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்தது.
அக்டோபர் 26 அரசியல் சதிக்குப் பின்னர், பேரம்பேசலில் ஈடுபடுவதற்கு இராஜபக்ஷவிற்கு போதுமான நேரம் கொடுப்பதன் பேரில் சிறிசேன பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் நிதி இலஞ்சங்கள் கொடுத்து இராஜபக்ஷ முயன்றார். அந்த முயற்சி தோல்வியடைந்த போது, சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இராஜபக்ஷவின் காபந்து அரசாங்கத்தின் கீழ் தேர்தல்களை நடத்துவதானது அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி பயன் பெறும் வாய்ப்பை இராஜபக்ஷவுக்கு வழங்கும் என்று சிறிசேன கணக்கிட்டார். மேலும், பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இராஜபக்ஷ முகாம் கணிசமான வெற்றிகளைப் பெற்ற பின்னர், அந்த வாக்குகள் பாராளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மையை வழங்க கூடும் என்றும் அவர் கணக்கிட்டார்.
எவ்வாறெனினும், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சில "சிவில்" அமைப்புக்கள் உள்ளிட்ட பல போட்டி அரசியல் கட்சிகள், சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து அடிப்படை மனித உரிமை வழக்குகளை தாக்கல் செய்தன.
சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதை இடைநிறுத்தி ஆரம்பத்தில் இடைக்கால உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. இது விக்கிரமசிங்கவின் அமைச்சரவை இல்லாமல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுத்தது.
நேற்று ஒருமனதான தீர்ப்பு, தொடர்ச்சியான கன்னை மோதல்கள் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சியை முழுமையாக இழிவுக்கு உட்படுத்தும் என ஆளும் செல்வந்த தட்டிற்குள் வளர்ந்து வரும் கவலைகளின் தெளிவான சமிக்ஞை ஆகும். அனைத்து சமூகங்களின் உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் பரந்த பிரிவினர் ஏற்கனவே ஆட்சியில் உள்ள அரசாங்கங்களால் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களுக்குள் இழுக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்கா, மேற்கத்தைய சக்திகள் மற்றும் இந்தியா ஒரு பக்கமும், மறுபக்கம் சீனாவுக்கும் இடையிலான வளர்ச்சியடைந்து வரும் பூகோள அரசியல் பதட்டங்கள், இலங்கை மற்றும் அனைத்து தெற்காசிய நாடுகளையும் நெருக்கடிக்குள் மூழ்கடித்துள்ள ஒரு சூழ்நிலையிலேயே தீவிலான அரசியல் நெருக்கடி வெடித்தது. 2008 நிதிய நெருக்கடியிலிருந்து பூகோள பொருளாதார நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது.
சிறிசேனாவின் ஜனநாயக விரோத நகர்வுகள், பெருகி வரும் சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கு எதேச்சதிகார ஆட்சி வடிவத்தை நோக்கி முழு ஆளும் வர்க்கமும் நகர்ந்து வருவதை பிரதிபலிக்கின்றன. சிறிசேன-இராஜபக்ஷ வின் கன்னையும் சரி அல்லது விக்கிரமசிங்கவின் யூ.என்.பி. கன்னையும் சரி, ஆளும் உயரடுக்கின் எந்தவொரு பிரிவும், தாம் கூறிக்கொள்வதற்கு மாறாக, அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கப் போவதில்லை. ஐ.தே.க. மற்றும் விக்ரமசிங்கவும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வந்துள்ளன.
இராஜபக்ஷவை நியமித்தமைக்கு எதிராக சிறிசேன மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கொடுத்து வரும் அழுத்தத்தையும் உயர் நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக பிரதிபலிக்கின்றது. இந்த சக்திகள் எந்தவொரு ஜனநாயக நெறிகளை பாதுகாப்பதைப் பற்றி கவலை கொள்ளவில்லை.
சீனாவிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான இராணுவ-மூலோபாய தாக்குதலுக்குள் இலங்கையை ஒருங்கிணைப்பதன் பேரில், இராஜபக்ஷவை அகற்றி சிறிசேனவை நியமிப்பதற்காக 2015ல் ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு வாஷிங்டன் அனுசரணை கொடுத்தது. இராஜபக்ஷ பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியிருந்தார். இராஜபக்ஷவின் வருகையானது விக்கிரமசிங்கவின் கீழ் உருவாக்கப்பட்ட இராணுவ உறவுகளை கீழறுக்கும் என்பதையிட்டு இந்தியா உட்பட அமெரிக்கா தலைமையிலான சக்திகள் கவலை கொண்டுள்ளன.
உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற விக்ரமசிங்க, "ஜனாதிபதியை உடனடியாக தீர்ப்புக்கு மதிப்பளிப்பார் என்று கட்சி நம்புகிறது" என தெரிவித்தார். அவர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது: "சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகிகளும் ஜனநாயகத்தின் முக்கிய தூண்கள், அவற்றின் குறுக்கீடுகளும் கட்டுப்பாடுகளும் பிரஜைகளின் இறையாண்மையை உறுதி செய்வதற்கு தீர்க்கமானவை."
நீதிமன்ற தீர்ப்பை பாராட்டிய ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்கவும், ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக நியாயாதிபதிகள் மீது அபாயகரமான பிரமைகளை பரப்ப முயன்றார். அதே நேரத்தில், அவர் ஜே.வி.பி. நெருக்கமாக அணிதிரண்டிருக்கும் ஐ.தே.க.யில் இருந்து அதை தூர விலக்கி காட்ட முயற்சித்தார்.
"மைத்திரிபால சிறிசேன, மஹிந்த இராஜபக்ஷ ஆகிய இருவரும் அரசியலமைப்புக்கு முரணாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் செயல்பட்டுள்ளனர் என்பது தெளிவு. ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமற்ற தந்திரோபாயங்களையும் நாம் மறந்துவிடக் கூடாது" என திஸ்ஸநாயக்க கூறினார்.
ஆளும் வர்க்கத்தின் இரு முகாம்கள் மீதும் பரந்த மக்கள் விரோதப் போக்கு காணப்படுவதை ஜே.வி.பி. நன்கு அறிந்திருப்பதுடன், தானே ஒரு பெரிய அரசியல் பாத்திரத்தை ஆற்றுவதற்கு இந்த அதிருப்தியை சுரண்டிக்கொள்ள அது முயற்சிக்கிறது.
சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ள எதேச்சதிகார நடவடிக்கைகளை நோக்கிய மாற்றத்தின் மூலம் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை எதிர்கொள்ளும் ஆபத்துக்களை நேற்றைய நீதிமன்ற தீர்ப்பு எந்த வகையிலும் குறைத்துவிடவில்லை.
இராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்களை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டுமென்ற நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வந்ததில் இருந்து, சிறிசேன, எந்தவொரு பாராளுமன்ற மேற்பார்வையையும் தவிர்த்து, அனைத்து அதிகாரங்களையும் தனது கைகளில் குவித்துக் கொண்டு, உயர்மட்ட அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத் தலைவர்களுடனும் சேர்ந்து நேரடியாக செயற்பட்டு வருகின்றார்.
அரசியல் கொந்தளிப்பின் தொடக்கத்திலிருந்தே சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விடுத்த எச்சரிக்கையை இந்த அபிவிருத்திகள் வலுவாக நிரூபிக்கின்றன. மோதலில் ஈடுபடும் உயரடுக்கின் பிரிவுகளில் எந்தவொரு கன்னையையும் தொழிலாள வர்க்கமும் ஆதரிக்கக் கூடாது. சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத் திட்டத்தின் ஊடாக, ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை தன் பின்னே அணிதிரட்டிக்கொண்டு, தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடியில் தனது சொந்த தலையீட்டை செய்ய வேண்டும்.
தெற்காசியாவிலும் உலகம் முழுதும் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டிய தேவையை வலியுறுத்தி, சுயாதீனமான அரசியல் பாதையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் அரசியல் போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி தீவிரமாக்கியுள்ளது.