Print Version|Feedback
The mass protests in France: A new stage in the international class struggle
பிரான்சில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள்: சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டம்
The World Socialist Web Site Editorial Board
3 December 2018
1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சின் மிக முக்கியமான வெகுஜனப் போராட்டமாக நடைபெற்று வருகின்ற, ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் தொழிலாளர்-விரோத எரிபொருள் வரியேற்றத்திற்கு எதிரான ஒரு தொடர் பாரிய “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களில், சனிக்கிழமையன்று, 100,000 பேர் பங்குபெற்றனர்.
இந்த நிகழ்வுகள் பிரான்சிற்கும் இன்னும் ஐரோப்பாவிற்கும் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இந்த சமூக போராட்டங்களது வெடிப்பானது வர்க்கப் போராட்டம் புத்துயிர் பெற்றுள்ளதைக் குறிக்கிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில், இன்னும் குறிப்பாக 2008 பொறிவுக்குப் பிந்தைய தசாப்தத்தில், சமூக முரண்பாடுகள் பிரம்மாண்ட அளவிலான பெருக்கத்தைக் கண்டிருக்கின்றன. திகைப்பூட்டும் மட்டத்திலான சமூக சமத்துவமின்மை, செல்வம் மக்களின் ஒரு சிறு சதவீதத்தினரிடமே முடிவற்றுக் குவிந்து செல்வது, வறுமை மற்றும் துன்பத்தின் முன்னெப்போதினும் பெரிய மட்டங்கள் ஆகிய முதலாளித்துவ சமூகத்தின் அழுகல்தன்மைகள் அனைத்தும் வெடித்து மேற்பரப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு வெறுக்கப்படும் கபடநாடக நபராகவும், முதலீட்டு வங்கியாளராக இருந்து ஜனாதிபதியாக ஆனவரும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளது கைப்பாவை என்பதை விட வேறொன்றுமில்லாதவராக உள்ள மக்ரோனில், ஆளும் உயரடுக்கு அதன் உண்மையான பிரதிநிதியைக் காண்கிறது. கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் முகம்கொடுக்கும் நிலையிலும், மக்ரோன், அவசியப்பட்டால் போலிஸ்-அரசு வழிமுறைகளின் மூலமாகவும் அவசரகாலநிலை ஒன்றை அறிவிப்பதன் மூலமாகவும் கூட, தனது தொழிலாள-வர்க்க விரோதக் கொள்கைகளை முன்னெடுக்க நோக்கம் கொண்டிருப்பதை தெளிவாக்கியிருக்கிறார். பரந்துபட்ட மக்கள் ஆளும் உயரடுக்கின் பொருளாதாரக் கோரிக்கைகளை சவால் செய்கின்ற அந்த தருணத்தில், அது வன்முறையாகவும் ஒடுக்குமுறையாகவும் மாறுகிறது.
பிரான்சின் நிகழ்வுகளுக்கு உந்துதலாக இருப்பது முக்கியமாக தேசிய நிலைமைகள் அல்ல, மாறாக உலக நிலைமைகள் ஆகும். மக்ரோன் என்ன செய்ய முடியும், அவர் எப்படி எதிர்வினையாற்ற முடியும் என்பது சர்வதேச மூலதனத்தின் கோரிக்கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க முதலாளித்துவம், ஜெனரல் மோட்டார்ஸில் அறிவிக்கப்பட்ட பாரிய வேலையிழப்புகளில் உச்சத்தை கண்ட ஒரு புதிய சுற்று செலவுக் குறைப்பை அமல்படுத்திக் கொண்டிருக்கும் அதேவேளையில் தான் பிரான்சில் மக்ரோன் தொழிலாளர்கள் மீதான தனது தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு புதிய பொருளாதார மந்தநிலையின் அறிகுறிகள் பெருகுவதன் மத்தியில், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கு தாக்குதலில் இறங்கிக் கொண்டிருக்கிறது.
மறுபக்கத்தில் தொழிலாள வர்க்கமானது, தான் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் மட்டுமன்று, ஒரு புரட்சிகர வர்க்கமுமாகும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் மற்றும் ஸ்திரத்தன்மையின் மேற்பரப்புக்குக் கீழே ஒரு உள்நாட்டுப் போர் கொதித்துக் கொண்டிருக்கிறது.
சமகால சமூகத்தில் சமத்துவமின்மை மையமான பிரச்சினை அல்ல என்றும் பாட்டாளி வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கம் இல்லை என்றுமான நடுத்தர-வர்க்க போலி-இடதுகளது பிற்போக்குத்தனமான அரைவேக்காட்டு கதைகள் அனைத்துமே உடைந்து சுக்குநூறாகிக் கிடக்கின்றன. பாலினம், நிறம் மற்றும் பால்விருப்பம் ஆகிய பிரச்சினைகள் மீதான அவர்களது விடாப்பிடி கவனக்குவிப்பானது பொருத்தமற்றதாக நிரூபணமாகிக் கொண்டிருப்பது மட்டுமல்ல; அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கும் தொழிலாள-வர்க்க இயக்கத்தை நோக்குநிலை தவறச் செய்வதும் அதற்கு நஞ்சூட்டுவதுமே அவர்களது ஒரே நோக்கமாகும்.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட “வரலாற்றின் முடிவு” குறித்த கூற்றுக்களை பொறுத்தவரை, அவை வெறுமனே கற்பனைக்கனவாகவே நிரூபணமாகியிருக்கின்றன. ஒரு வருடத்திற்கு முன்பாகத்தான், ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டின் மத்தியில், முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள் அக்டோபர் புரட்சிக்கும் நவீன உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரகடனம் செய்து கொண்டிருந்தனர். ஆயினும் இப்போதோ, ஒரு புரட்சிகர சூழ்நிலை எழத் தொடங்குகிறது.
WSWS முன்கணித்திருந்ததைப் போலவே, வர்க்கப் போராட்டத்தின் மேலெழுச்சி கடந்த ஆண்டின் தனித்துவமான அம்சமாக இருந்திருக்கிறது. ஈரானில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், ஜேர்மனியில் தொழிற்துறை தொழிலாளர்களது, ஐக்கிய இராச்சியத்தில் விரிவுரையாளர்களது மற்றும் அமெரிக்காவில் ஆசிரியர்களது வேலைநிறுத்தங்களுடன் இந்த ஆண்டு தொடங்கியது. இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிலும் சமூக எதிர்ப்பின் கணிசமான வெளிப்பாடுகளை இந்த ஆண்டு கண்ணுற்றிருக்கிறது.
பிரான்சில் வெகுஜனப் போராட்டங்கள், அமெரிக்காவில் வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் மத்தியில் பெருகும் அமைதியின்மை மற்றும் தென்கொரியா, கிரீஸ் மற்றும் சிலியில் பாரிய வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த ஆண்டு முடிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் அமெரிக்க இராணுவப் படைகளை எதிர்த்து நிற்கும் மத்திய அமெரிக்காவில் இருந்தான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்களையும் இதனுடன் சேர்த்துக் கூறியாக வேண்டும்.
நிலவும் அரசியல் ஸ்தாபகங்கள் மற்றும் தொழிற்சங்கங்களது கட்டமைப்பிற்குள்ளாக பரந்துபட்ட மக்களின் நலன்களின் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதற்கு திறனற்றதாக இந்த அமைப்புமுறை இருப்பதையே —இதற்கு பிரான்ஸ் விதிவிலக்கல்ல— கடந்த ஆண்டின் அனுபவங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றன. அரசியல் அமைப்புமுறையின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் —அது வலதாயினும் சரி “இடது” ஆயினும் சரி— தொழிலாள வர்க்கத்தின் அக்கறைகளில் இருந்து முற்றிலும் பிரிந்து நிற்பவையாகவும் அவற்றுக்குக் குரோதமானவையாகவும் இருக்கின்றன.
பிரான்சில், அரசுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்திருக்கும் தொழிற்சங்கங்களின் கட்டமைப்புக்கு முற்றிலும் வெளியில் இந்த எதிர்ப்பு எழுந்து வந்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்களுக்கு இவற்றின் ஆரம்பகட்ட பதிலிறுப்பு அவற்றைக் கண்டனம் செய்வதாய் இருந்தது. பிற்போக்குத்தனத்தின் ஒரு கூட்டு எலிஸே மாளிகை முதல் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி போன்ற நடுத்தர-வர்க்கக் கட்சிகளின் அலுவலகங்கள் வரையில் நீண்டுசெல்கிறது. அவர்கள் அனைவருக்கும் ஒரே கவலை தான்: இந்த இயக்கத்தை எவ்வாறு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது, எவ்வாறு நிறுத்துவது?
இப்போது எழுகின்ற மையமான பிரச்சினை முன்னோக்கு மற்றும் மூலோபாயம் குறித்ததாகும். இந்தப் போராட்டத்தை ஆழப்படுத்தி அதனை தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் மிகப் பரந்த பிரிவுகளுக்குள் கொண்டு செல்வதற்கு அவசர அவசியம் இருக்கிறது. ட்ரொட்ஸ்கி, 1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக 1935 இல் எழுதியதைப் போல, “கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரங்களின் எதிர்ப்புரட்சிகர எதிர்ப்பை உடைத்து நொருக்குவதற்கான ஒரே வழிவகை”யாக உள்ள தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கான சுயாதீனமான அமைப்புகளான நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்குவது இதற்கு அவசியமாக உள்ளது. “ஒரு பாதுகாக்கும் போராட்டத்தில் பிரான்சின் பரந்த உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்துவதும் அதன்மூலம் வரவிருக்கும் தாக்குதலின் போது அவர்களின் சொந்த சக்தி குறித்த நனவை இந்த மக்களுக்குப் புகட்டுவதுமே” இத்தகைய அமைப்புகளின் கடமையாக இருக்கும்.
தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை உருவாக்குவது என்ற அனைத்திலும் மிகமுக்கிய கேள்வியானது, உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வது என்பதுடன் பிணைந்ததாய் இருக்கிறது.
வர்க்கப் போராட்டம் ஒரு உலகளாவிய மட்டத்தில் வளர்ச்சி காண்பதென்பது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் இயல்புடன் பிணைந்ததாய் இருக்கிறது. மீண்டும் அழுத்திச் சொல்வதற்குரியது என்னவென்றால், பிரான்சில் அபிவிருத்தி கண்டு கொண்டிருப்பது பிரெஞ்சு நிலைமைகளின் ஒரு வெளிப்பாடு மட்டுமல்ல, அது உலகளாவிய நிலைமைகளின் வெளிப்பாடாகும். மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசுகளின் தலைவர்கள் உலகின் தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் மற்றும் உலகளாவிய போருக்கு தயாரிப்பு செய்வதற்குமான தமது திட்டங்களுக்கு உருக்கொடுப்பதற்காக நடத்திய உலகளாவிய சந்திப்பான ஜி-20 இல் இருந்து மக்ரோன் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இந்த ஆர்ப்பாட்டங்கள் வெடித்தமையானது, அதற்கேயுரிய வழியில், மிகவும் முக்கியத்துவமானதாகும்.
உலக முதலாளித்துவத்தின் அபிவிருத்தியானது, “ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரேயொரு பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பாக மாற்றிவிட்டிருக்கிறது” என்று 1907 இல் ட்ரொட்ஸ்கி எழுதினார்.
அதன் உலக வர்த்தகம், அதன் இராட்சச அரசுக் கடன்களின் அமைப்புமுறை மற்றும் சர்வதேச அரசியல் கூட்டணிகள் -இவை பிற்போக்கு சக்திகள் அத்தனையையும் ஒரே உலகளாவிய கூட்டுப்பங்கு நிறுவனத்திற்குள் இழுக்கின்றன- ஆகியவற்றுடன் சேர்த்து முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் செயல்பாடும் அத்தனை பகுதியான அரசியல் நெருக்கடிகளை எதிர்த்து வந்திருப்பதோடு மட்டுமல்ல, முன்கண்டிராத பரிமாணங்களுடனான ஒரு சமூக நெருக்கடிக்கான நிலைமைகளையும் கூட தயாரிப்பு செய்திருக்கின்றன.
இந்த வார்த்தைகள் ஒவ்வொரு நாட்டிலும் இன்றும் உண்மையாக நிரூபணமாகின்றன. உலகெங்குமான தொழிலாளர்கள் பிரெஞ்சு தொழிலாளர்களது கோரிக்கைகளுடன் அடையாளம் காண்கின்றனர். உலகெங்கிலும் ஆளும் வர்க்கமானது, சமூக செல்வத்தை தமது சொந்த பைகளுக்குள் திருப்பி விடுவதை உறுதிசெய்வதற்கு மட்டுமல்லாமல், அடுத்த வரிசையான போர்களுக்கு நிதியாதாரம் வழங்குவதற்காகவும், மூலதனத்தின் நலன்களின் பேரில் சமூக வாழ்க்கையை மறுகட்டுமானம் செய்துகொண்டிருக்கிறது.
நவ-பாசிச சக்திகளைக் கட்டியெழுப்புவது உள்ளிட போர் மற்றும் ஒடுக்குமுறைக்கான தமது தயாரிப்புகளை முடுக்கி விடுவதே இந்த நிகழ்வுகளுக்கு முதலாளித்துவ வர்க்கம் அளிக்கவிருக்கும் பதிலிறுப்பாக இருக்கும். ஆளும் உயரடுக்கு அதன் ஏவல்கட்டளையில் பல ஆயுதங்களைக் கொண்டுள்ளது. ஆயினும், மனித வரலாற்றின் மாபெரும் புரட்சிகர வர்க்கமாக பில்லியன் கணக்கில் எண்ணிக்கை கொண்ட உலகத் தொழிலாள வர்க்கம் என்ற அதனினும் பெரியதொரு ஆயுதத்தை தொழிலாளர்கள் கொண்டுள்ளனர்.
சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், அதன் தேசிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியையும் (Parti de l'égalité socialiste) கட்டியெழுப்புவதே பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் மையமான கடமையாகும். இதில் தான் பிரான்சிலும் மற்றும் உலகெங்கிலும் அபிவிருத்தி கண்டுவருகின்ற பாதையின் பயணம் தீர்மானிக்கப்படுவதாய் அமையும்.