Print Version|Feedback
French protests spark media demands for Facebook censorship
பிரெஞ்சு போராட்டங்கள், ஊடகங்களிடம் இருந்து பேஸ்புக் தணிக்கைக்கான கோரிக்கைகளைத் தூண்டுகிறது
By Andre Damon
5 December 2018
பிரான்சில் வங்கியாளர்-ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் வெறுக்கப்படும் அரசாங்கம் கலைக்கப்பட வேண்டுமென கோரி, சமூக சமத்துவமின்மை மற்றும் சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, கடந்த மூன்று வாரங்களாக நூறாயிரக் கணக்கானவர்கள் "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துள்ளனர்.
உலகெங்கிலும், பிரதான பத்திரிகைகளின் தலையங்க பக்கங்கள் அந்த போராட்டங்களுக்கு விரோதத்துடன் எதிர்வினையாற்றி உள்ளன. ஒவ்வொரு மக்கள் எழுச்சியின் போதும் செய்வதைப் போலவே, உயரடுக்குகளும் அவற்றின் பக்கவாத்தியங்களும் பொங்கி பெருகி வரும் மக்கள் எதிர்ப்பை "கலகங்கள்,” என்றும், “குண்டர் ஆட்சி" என்றும், "ஒழுங்கின் சீர்குலைப்பு,” என்றும் அவதூறு பரப்புகின்றன.
இந்த பிற்போக்குத்தனமான வர்க்க ஆணவத்துடன் ஒரு புதிய விவாதமும் இணைக்கப்பட்டுள்ளது: அதாவது, தங்களின் சமூக நிலைமைகளுக்கு எதிராக போராட்டங்களை ஒழுங்கமைப்பதிலிருந்து உழைக்கும் மக்களைத் தடுப்பதற்காக, இணையம், அதுவும் குறிப்பாக சமூக ஊடகங்கள், மூடப்பட வேண்டும், தணிக்கை செய்யப்பட வேண்டும் அல்லது "கட்டுப்படுத்தப்பட" வேண்டும் என்பது.
நிச்சயமாக இந்த கருத்து "மஞ்சள் சீருடை" போராட்டங்களைக் குறி வைக்கிறது. 2016 அமெரிக்க தேர்தல்களுக்குப் பின்னர் உடனடியாக தொடங்கி, நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் உள்ளடங்கலாக ஜனநாயக கட்சியுடன் அணி சேர்ந்த அமெரிக்க ஊடங்களின் பிரிவுகள், “போலி செய்திகள்" மற்றும் "ரஷ்ய பிரச்சாரத்திற்கு" எதிராக போராடுகிறோம் என்ற பெயரில் கூகுள், பேஸ்புக் மற்றும் ட்வீட்டர், எதிர்ப்பு கண்ணோட்டங்களைத் தணிக்கை செய்யுமாறு கோரத் தொடங்கின.
இந்த முயற்சிகள் அந்த தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் ஒரு கடுமையான இணைய தணிக்கை முறையை நடைமுறைப்படுத்த இட்டுச் சென்றது, இடதுசாரி மற்றும் போர்-எதிர்ப்பு பக்கங்களை பேஸ்புக் நீக்கியதோடு, எதிர்ப்பு தளங்களுக்கு செல்லும் பயனர்களைக் கூகுள் குறைய செய்தது.
பிரதான பத்திரிகைகள், ஜனநாயக கட்சியினர் மற்றும் உளவுத்துறை முகமைகள் கோரிய நடவடிக்கைகளுக்கும், “போலி" செய்திகள் அல்லது "வெளிநாட்டு பிரச்சாரத்தை" நிறுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மாறாக அவை முதலாளித்துவத்திற்கு எதிரான பெருந்திரளான மக்கள் எதிர்ப்பை மவுனமாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தன. தங்களின் துன்பங்களை தெரிவிப்பதற்கும் மற்றும் எதிர்ப்பை ஒழுங்கமைப்பதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகின்ற உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான தொழிலாளர்களே இணைய தணிக்கையின் நிஜமான இலக்காக உள்ளனர்.
இது வரையில், தணிக்கைக்காக கூறப்பட்டவை மக்கள் போராட்டங்களை மவுனமாக்க வேண்டுமென்ற ஒருவித நேரடி கோரிக்கைகளுடன் நிறுத்தி கொண்டிருந்தன. ஆனால் பிரான்ஸைப் பற்றியுள்ள மக்கள் எதிர்ப்பின் மேலெழுச்சியால், தணிக்கைக்கான ஆதரவாளர்கள், தங்களின் கண்ணோட்டங்களை வெளியிட பேஸ்புக்கைப் பயன்படுத்த துணிந்த அருவருப்பான மக்கள் என்று யாரைக் கருதுகிறார்களோ அவர்கள் மீது தங்களின் வெறுப்பைத் வாரியிறைக்க அவர்கள் அதிகாரமுள்ளவர்களாக உணருகின்றனர்.
டிசம்பர் 3 இல், பாரீசின் மிகவும் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான Libération இன் முன்னாள் ஆசிரியர் Frederic Filloux, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கு பேஸ்புக் அனுமதிப்பதற்காக அதை கண்டித்து, ஊடகத்தில் நீண்ட நெடிய கட்டுரை ஒன்றை எழுதினார்.
“பிரான்சில் முன்னொருபோதும் பார்த்திராத மிக மோசமான உள்நாட்டு அமைதியின்மை ஒன்றில்,” பேஸ்புக் "ஒரு முக்கிய பாத்திரம் வகித்து" வருகிறது என்று Filloux எழுதினார். பிரான்சின் "குறைந்த கட்டண நம்பத்தகுந்த" கைத்தொலைபேசி கட்டமைப்பு "எண்ணற்ற சுய-புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் நேரடி பதிவுகளைப்" பதிவிட இட்டுச் சென்றுள்ளது, “இவை கோபம் மற்றும் கற்பனைகளை எரியூட்டியது.” “நாடெங்கிலுமான நூற்றுக் கணக்கான சிறிய மற்றும் பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு பேஸ்புக் நம்பவியலாதளவில் துல்லியமான தகவல் பரிமாற்ற உதவியை வழங்கியது,” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.
பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடக தளங்களால் வழங்கப்பட்ட சுதந்திரமான மற்றும் பகிரங்கமான சுய-வெளிப்பாடு, "நச்சுத்தன்மையானது" என்றவர் அறிவிக்கிறார். “மக்கள் கோபத்தைக் கேள்விக்கிடமின்றி பரப்பும் மற்றும் தீவிரப்படுத்தும் கருவியாக, பேஸ்புக், ஜனநாயக நிகழ்சிப்போக்கிற்கு அதன் நச்சுத்தன்மையை எடுத்துக்காட்டி உள்ளது,” என்றார்.
“வெறுப்பு, போலி செய்திகள் மற்றும் நெருப்பை ஊதி விட ஏதுவாக தகவல் பரிமாற்ற உதவி கருவிகள் என இந்த அபாயகரமான கலவையைப் பரப்புவதற்கான பேஸ்புக் தகைமையைக் கட்டுப்படுத்துவதற்கான" வழிகளுக்கு Filloux அழைப்பு விடுக்கிறார்.
பேஸ்புக்கை தடை செய்ய வேண்டும் அல்லது இன்னும் அதிக கடுமையோடு தணிக்கை செய்யப்பட வேண்டும் என்பதே Filloux அறிக்கையின் வெளிப்படையான உள்நோக்கமாக உள்ளது. மேற்கூறியதை எட்டுவதற்காக, அவர் “பேஸ்புக் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட வேண்டுமா?” என வினவுகிறார்.
Filloux இதுபோன்றவொரு நடவடிக்கை போக்கிற்கு நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என்பது, முற்றிலுமாக தந்திரோபாய அடித்தளத்தில் ஆகும்: ஏனென்றால் பேஸ்புக் "மேற்கத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட சேவைகளால்" பிரதியீடு செய்யப்படலாம் என்பதால் ஆகும்.
Filloux இன் கூற்று அமெரிக்க பத்திரிகைகளில் அங்கீகரிப்பைப் பெற்றுள்ளது. “ஒரு மக்கள் இயக்கத்திற்கான செய்தி தொடர்பாளர்களாக பேஸ்புக் குழு நிர்வாகிகள் மேலெழுந்திருப்பதில், அங்கே எதுவுமே ஜனநாயகம் இல்லை,” என்று புளூம்பேர்க்கில் Leonid Bershidsky எழுதுகிறார்.
“ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை ஊக்குவிப்பதில் சமூக ஊடகங்கள் ஒரு முற்போக்கு பாத்திரம் வகிக்க முடியும் என்று எஞ்சியிருக்கும் எந்தவொரு நப்பாசைகளையும் ஒதுக்கி விடுவதற்கு இதுவே சரியான நேரம்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார்.
Bershidsky இவ்வாறு நிறைவு செய்கிறார், “ஒரு சுதந்திரமான சமூகம் பேஸ்புக்கிற்குத் தடை விதிக்க முடியாது, அல்லது அதன் வெறுப்பை-ஊக்குவிக்கும் நடவடிக்கையை முற்றிலுமாக நெறிப்படுத்தவும் கூட முடியாது; ஆனால் பேஸ்புக் மற்றும் அதுபோன்ற தளங்கள் ஜனநாயக அமைப்புமுறைகளுக்கு எதிர்நிறுத்தும் அபாயம் குறித்து அது உணர்ந்திருக்க வேண்டும்.”
அவர் பகிரங்கமான சர்வாதிகாரங்கள் குறித்து, எவ்வித ஒளிவுமறைப்புமின்றி பொறாமையோடு எழுதுகிறார்: “ஏதேச்சதிகார ஆட்சிகளுக்கான அச்சுறுத்தல் குறைவாக உள்ளது: அவை இந்த தளங்களில் பிரச்சாரத்தைக் கொண்டு கருத்துக்களைச் சூழ்ச்சியோடு கையாள கற்று கொண்டுள்ளன,” என்றவர் எழுதுகிறார்.
அவர் கட்டுரையை வாசிக்கும் எவரொருவரும், பாரீஸ் வீதிகளின் "கும்பல் ஆட்சிக்கு" அக்கட்டுரையாளர் ஏதேச்சதிகார போக்கை முன்மொழிகிறார் என்ற உணர்வைப் பெறக்கூடும்.
ஆனால் இந்த பிற்போக்குத்தனமான வாதத்தின் மிகவும் அப்பட்டமான வெளிப்பாடு, Verge இல் உள்ள சிலிக்கன் பள்ளத்தாக்கு பதிப்பாசிரியர் கசெ நியூட்டனால் (Casey Newton) முன்வைக்கப்பட்டது, இவர் வாதிடுகையில், சமூக சமத்துவமின்மை குறித்து பிரெஞ்சு தொழிலாளர்களின் கோபம் செல்வவள ஏற்றத்தாழ்வுகள் அதிவேகமாக வளர்ந்திருப்பதால் ஏற்பட்டதல்ல, மாறாக மக்கள் அது குறித்து பேஸ்புக்கில் பதிவு செய்ததால் ஏற்பட்டது என்றார்.
அவர் எழுதுகிறார், “மஞ்சள் சீருடையாளர்கள் எவ்வாறு வந்தார்கள் என்று சிந்தியுங்கள். பேஸ்புக்கில் விவாதிக்கப்பட்டு, ஓர் அரசியல் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு சிறிய குழு, குழுக்களாக அது பற்றி விவாதிக்க தொடங்கியது. மென்பொருள் வழிமுறை அல்காரிதம்களும் அதிவேக பரிமாற்ற தொழில்நுட்ப நுணுக்கங்களும் அக்குழுவின் பகிர்வுகள் பெரிதும் அனேகமாக செய்தி ஓடைகளுக்குள் செல்ல ஊக்குவித்தன. அடுத்த சில மாதங்களில், பேஸ்புக் பயன்படுத்தும் பிரான்சின் பெரும்பான்மையினர் ஒருவேளை உண்மையில் இருப்பதை விட அதிகமாக செய்தி ஓடைகளில் அவர்கள் நாட்டைக் குறித்த கடுமையான கோபமான பிரதிபலிப்பைக் கண்டார்கள். சரியான நேரத்தில் கருதுகோள்கள் யதார்த்தமாக மாறியது. இப்போது Arc de Triomphe தாக்குதலின் கீழ் உள்ளது,” என்று குறிப்பிடுகிறார்.
இதைத் தான் ஒவ்வொரு சர்வாதிகாரமும் கூறியது. இப்போதைய இந்த சமூக ஒழுங்கே "அனைத்து சாத்தியமான உலகங்களிலும் சிறந்தது,” என்றும், மக்களுக்கு இதில் உடன்பாடு இல்லையென்றால், அது ஏனென்றால் அவர்கள் வனப்புரையாளர்களால் தவறான பாதையில் வழி நடத்தப்பட்டு வருகிறார்கள், பத்திரிகைகளைத் தணிக்கை செய்வதன் மூலமாக அந்த வனப்புரையாளர்களை மவுனமாக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில், இத்தகைய சர்வாதிகார கூற்றுகள் பத்திரிகைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகளின் வடிவத்தை எடுக்கவில்லை, மாறாக சமூக ஊடகங்கள் மற்றும் எதிர்ப்பு செய்தி தளங்களைத் தணிக்கை செய்வது மற்றும் முடக்கும் வடிவத்தை எடுக்கிறது.
உலகெங்கிலுமான தொழிலாளர்கள் போராட்டத்தினுள் நுழைகின்ற நிலையில், அவர்கள் சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் தணிக்கை செய்யப்படாத இணையத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். உலக சோசலிச வலைத் தளம் இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறது என்பதோடு, இணைய தணிக்கையை எதிர்க்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் இந்த போராட்டத்தில் இணைய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.