Print Version|Feedback
Wigneswaran’s Tamil People’s Alliance: A trap for Sri Lankan workers
விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி: இலங்கை தொழிலாளர்களுக்கு ஒரு பொறிக்கிடங்கு
By K. Nesan and V. Gnana
6 November 2018
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் அக்டோபர் 24 அன்று, தமிழ் மக்கள் கூட்டணி (Tamil People’s Alliance - TPA) என்ற ஒரு புதிய கட்சியை தொடக்குவதாக அறிவித்தார். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய பொதுக் கூட்டங்களில் உரையாற்றியதோடு இலங்கையில் பரந்த ஆர்வத்தை பெற்ற ஊடக நேர்காணல்களையும் வழங்கியதற்கு பின்னர் இரண்டு வாரங்களும் கூட முழுதாக முடிந்திராதவொரு சமயத்தில் இவ் அறிவித்தல் வந்ததுள்ளது.
இலங்கையிலுள்ள பலதரப்பட்ட தமிழ் தேசியவாதக் குழுக்களுக்கு மறுபடியும் பங்களிப்பு செய்ய விக்னேஸ்வரன் எடுத்திருக்கும் முடிவானது இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் செல்வாக்கு பெருகுவதற்கான பதிலிறுப்பின் பகுதியாக உள்ளது. தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவினர், இலங்கையில் உள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இன, மத அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் அவர்களது வளர்ச்சியடைந்து வரும் இயக்கத்திற்கு ஒரு பொறிக்கிடங்கை அமைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மதிப்பிழந்திருப்பதை உணர்ந்திருக்கும் விக்னேஸ்வரன், அதே ஏகாதிபத்திய-ஆதரவு, சிக்கன நடவடிக்கை-ஆதரவு அரசியலைப் பின்பற்றுகின்ற, ஆனால் ஒரு புதிய பெயரின் பின்னால் ஒளிந்து கொள்கிறதான ஒரு கட்சியை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார்.
விக்னேஸ்வரன் தனது அங்குரார்ப்பண உரையில், “மக்கள் அரசியலை” ஊக்குவிப்பதற்கான 10 அம்ச வேலைத்திட்டம் ஒன்றை வரையறை செய்தார். ஆயினும், 1983-2009 இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்நிலைமைகளில் மேம்பாட்டைக் கொண்டுவருவதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அமெரிக்க-ஆதரவு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதே கொள்கைகளையே தானும் தொடரவிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “இன மோதலைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துடன் நின்றுபோயுள்ளன. பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடக்க, நாம் மீண்டும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அழுத்தங்களைக் கொடுக்க தொடங்கியாக வேண்டும்” என்றார்.
ஆயினும், கொழும்பில் ஒரு சிநேகிதபூர்வமான அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற விக்னேஸ்வரனின் முன்னோக்கு, அடுத்த இரண்டு நாட்களின் பின்னர், புஸ்வாணமாகிப் போனது. ஜனாதிபதி சிறிசேன இலங்கையை அரசியலமைப்பு நெருக்கடியில் மூழ்கடித்திருக்கும் ஒரு அரசியல் சதி நடவடிக்கையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கினார். 2009 இல் போர் முடிந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் நசுக்கப்படுவதையும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் மேற்பார்வை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக அவர் நியமித்தார்.
அது முதலாக, தமிழ் மக்கள் கூட்டணி (TPA) என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பாக விக்னேஸ்வரன் ஒரு அசாதாரண மௌனத்தைப் பராமரித்து வந்தார். இலங்கையில் ஒரு சோசலிச முன்னோக்கில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு போராட்டத்தை தமிழ் தேசியவாதக் குழுக்கள் எதிர்க்கின்றன. இலங்கையிலும் இந்தியாவிலும் தொழிற்துறை மற்றும் தோட்டத்துறை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களது வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களது அலையினாலும், சோசலிச மனோநிலையின் வளர்ச்சியினாலும் அவை அச்சமடைந்துள்ளன.
விக்னேஸ்வரனின் 10-அம்ச வேலைத்திட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேலைத்திட்டத்தில் இருந்து எந்த அடிப்படையான வேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. உள்நாட்டுப் போர் முடிந்ததற்குப் பின்னர் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும், காணாமல் போனவர்களைக் குறித்த விவரங்களைக் கண்டுபிடிப்பதற்கும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்கள் விடுவிக்கப்படுவதற்கும், “சர்வதேச சமூக”த்தின் மத்தியஸ்தத்தில் கொழும்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதைத் தவிர்த்த வேறெந்த ஆலோசனைகளையும் அவர் முன்வைக்கவில்லை.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த சோசலிச சமத்துவக் கட்சி அயராது போராடிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்போ சிறிசேனவை ஆதரித்துக் கொண்டிருந்தது. தமிழ் மக்கள் கூட்டணியின் முன்முயற்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு குரோதம் காட்டவில்லை என்பதும் தெளிவாகியிருக்கிறது. தமிழ் மக்கள் கூட்டணியின் (TPA) உருவாக்கம் குறித்து கருத்துக்கூற மறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், விக்னேஸ்வரனின் உரையை வாசிக்க தனக்கு நேரம் கிட்டவில்லை என்று கூறிக் கொண்டார். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், அத்தனை தமிழ் கட்சிகளையும் வெளிநாடு வாழ் அமைப்புகளையும் ஐக்கியப்படுத்துவதற்கு விக்னேஸ்வரன் செயற்படுவாரேயானால், அவரது முன்னணிப் பாத்திரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு “மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்” என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்த விக்னேஸ்வரனது சொந்த விமர்சனங்கள் முற்றிலும் தந்திரோபாயரீதியானவை, அவை விக்னேஸ்வரனின் சொந்த ஏகாதிபத்திய-ஆதரவு, தொழிலாள-வர்க்க விரோத முன்னோக்கினை பிரதிபலிக்கின்றன. “சர்வதேச சமூகத்துடன்”, அதாவது பிரதானமாக வாஷிங்டனுடன், கையாளுவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திறனற்றதாய் இருப்பதாக அவர் புகார் கூறி வந்திருக்கிறார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக 2016 இல் ஒரு எதிர்க்கட்சி, வரவு-செலவுத் திட்ட அறிக்கை விவாத நிகழ்வில், சிறிசேனவின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கை வரவு-செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்த பின்னரும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்தார்.
இலங்கை அரசு எந்திரத்தில் முன்னாள் தலைமை நீதிபதியாக பதவி வகித்திருந்த அவர், பழமைவாத இந்து மத விழுமியங்களை ஊக்குவிப்பவரும் ஒரு சட்டம்-ஒழுங்கு பேணும் மனிதரும் தனது உரைகளை சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிப்பதுடன் ஆரம்பிப்பவருமாவர். வெளிநாடுவாழ் தமிழ் தொழிலதிபர்களுக்கு வட இலங்கையின் இராணுவ-ஆக்கிரமிப்பிலுள்ள பகுதிகளில் உள்ள மலிவு உழைப்பை பெறுவதற்கு சிறப்புச் சலுகை வழங்குமாறு அவர் சிறிசேனவிடம் அழைப்பு விடுத்தார். தெற்கிலான சிங்கள இனவாத அரசியல்வாதிகளுடன் போட்டிபோடும் விதத்தில், பொதுக் கூட்டங்களில் அவர் சிங்களத் தொழிலாளர்களை இனவாத வார்த்தைகளில் கண்டனம் செய்தார்: “சிங்கள மக்களுக்கு நான் எதிரானவன் அல்ல, ஆனால் சிங்கள கட்டுமானத் தொழிலாளர்கள் வடக்கிற்கு வந்து வேலைசெய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது” என்றார்.
விக்னேஸ்வரனின் முன்னோக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு முட்டுச்சந்தாகும். சிறிசேனவின் நான்காண்டு கால ஆட்சி, தமிழ் தேசியவாதிகளின் திவால்நிலையை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. பல தசாப்த கால இரத்தக்களரியான உள்நாட்டுப் போருக்குப் பின்னரும் தொடரும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு பரந்த தமிழ் மக்களின் முன்னே இருக்கும் ஒரே வழி ஏனைய தேசியங்களை சேர்ந்த தமது வர்க்க சகோதர சகோதரிகளை நோக்கித் திரும்புவதும், சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச முன்னோக்கை நோக்கி திரும்புவதும் மட்டுமேயாகும்.
சிறிசேன தமிழ் சிறுபான்மை மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று வாக்குறுதியளித்து அவரை பதவியில் அமர்த்திய 2015 ஆம் ஆண்டிலான அமெரிக்க-பொறியமைவிலான ஆட்சி-மாற்ற நடவடிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் வாக்காளர்கள் தமது வாழ்க்கை நிலைமைகளில் மேம்பாடுகளை எதிர்பார்த்து 16 தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வாக்காளர்களை முற்றிலுமாகக் கைகழுவி விட்டதோடு, சிறிசேன அரசாங்கத்தின் ஒரு முட்டுத்தூணாகி, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புகளை நோக்கி வெளியுறவுக் கொள்கை நோக்குநிலையை மாற்றுவதை நிபந்தனையற்று அது ஆதரித்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்தது. இதில், உழைக்கும் மக்களுக்கு எதிரான சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதை ஆதரித்தமையும் அடங்கும்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் கதி, இடம்பெயர்ந்த அப்பாவி மக்கள் மற்றும் போரின்போது அழிக்கப்பட்டிருந்த வீடுகள், யுத்த விதவைகளின் எதிர்காலம் ஆகிய தமிழ் மக்களின் பிரதான கவலைகளை அது கைவிட்டது. சிறிசேனவுக்கு எதிரான பெருகிச் சென்ற வெகுஜன அதிருப்தியையும் கோபத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சிடுமூஞ்சித்தனத்துடனும் அலட்சியத்துடனும் எதிர்கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தன் 2016ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பான கேள்விக்கு, சிறைச்சாலை சாவிகள் தன்னிடம் இல்லை என்று சிடுமூஞ்சித்தனமாக தெரிவித்தார்.
விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் மூடுதிரை போட முயன்று வந்திருந்தார். சிறிசேனவுடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டு தொடர்பாக அமைதியின்மை பெருகியதன் மத்தியில், 2015 டிசம்பரில் அவர், தமிழ் தேசியவாதக் கட்சிகள், புத்திஜீவிகள் தொழில்வல்லுநர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை (TPF) என்ற அமைப்பை உருவாக்குவதற்கு முன்முயற்சி எடுத்தார். இப்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பிற தமிழ் தேசியவாதக் குழுக்களின் ஆதரவாளர்கள் கலந்துகொண்ட தமிழ் மக்கள் பேரவையின் (TPF) கூட்டத்தில், தனது புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் (TPA) உருவாக்கத்தை அவர் அறிவித்தார்.
முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் (TPF) உருவாக்கத்தை பகுப்பாய்வு செய்த உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது: “2015 டிசம்பர் 19 அன்று, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை (TPF) என்ற ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க-ஆதரவு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவால் முன்னெப்போதினும் அதிகமாய் மதிப்பிழந்து விட்டிருந்த நிலையில், தமிழ் தேசியவாதத்தின் திவாலடைந்த அரசியலுக்கு முக அலங்காரம் செய்வதற்கான ஒரு கீழ்த்தரமான சூழ்ச்சியாக அது உள்ளது.”
இலங்கையிலும் இந்தியாவிலும் போராட்டத்திற்குள் நுழைகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்தவரை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை நோக்கியும், ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குக்கான அதன் போராட்டத்தை நோக்கியும் திரும்புவது மட்டுமே ஒரு மாற்று ஆகும்.
நான்காம் அகிலம் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்டதன் 80வது ஆண்டையும் சோசலிச சமத்துவக் கட்சியின் 50வது ஆண்டையும் கொண்டாடும் விதமாக வழங்கப்பட்ட விரிவுரைகளின் சமயத்தில், டேவிட் நோர்த், இலங்கை தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில், தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பின்வருமாறு வலியுறுத்தினார்:
“நான்காம் அகிலம் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச மூலோபாயத்தைக் கொடுக்கிறது என்பதுதான் துல்லியமாக அதன் அடிப்படை அரசியல் அடித்தளமாக இருக்கிறது. சோசலிசத்திற்கான போராட்டம் தேசியப் போராட்டமல்ல. அது சர்வதேசப் போராட்டமாகும். அதற்கு தேசியப் பாதை எதுவும் கிடையாது. தேசியப் பாதையானது தவிர்க்கவியலாது வலதுசாரி அரசியலுக்கு, அதாவது தொழிலாளர்களை தமது சொந்த ஆளும் உயரடுக்குகளின் பின்னால் அணிதிரட்ட முயற்சி செய்யும் வர்த்தகப் போர்களுக்கு இட்டுச் செல்கிறது, அது போருக்கான பாதையாகும். ஆக, ஒன்று தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சர்வதேச சோசலிசக் கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும், இல்லையேல் தேசிய அரசுகளுக்கு இடையிலான கலகம் மற்றும் போர் என்ற முதலாளித்துவக் கொள்கையே மிஞ்சியிருக்கும் என்பதுதான் இன்று ஒரே தெரிவாக இருக்கிறது”.