ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French president bans fuel tax protest in Paris as strikes expand

வேலைநிறுத்தங்கள் விரிவடைகின்ற நிலையில் பாரிஸில் எரிபொருள் வரியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரெஞ்சு ஜனாதிபதி தடைவிதிக்கிறார்

By Alex Lantier
24 November 2018


பிரான்சில் எரிபொருள் வரியேற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள்

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் அதன் எரிபொருள் வரியேற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடைசெய்வதை நோக்கி நகர்ந்த நிலையில், எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவான வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் நேற்று பிரான்ஸ் எங்கிலும் பரவின.

இப்போதைக்கு, “மஞ்சள் சீருடையாளர்கள்” என்று தங்களைக் குறிப்பிடுகின்ற எரிபொருள் வரியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான முகநூல் பக்கங்கள் அரசாங்கத்தின் உத்தரவை மீறி Place de la Concorde இல் ஆர்ப்பாட்டங்களுக்கு விடுத்த அழைப்பை தொடர்ந்து பராமரிக்கின்றன. தொடர்ந்து இரண்டாவது சனிக்கிழமையாக தலைநகரில் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க நாடெங்கிலும் உள்ள பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பத்தாயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகருக்கு கட்டணமில்லாமல் பயணம் செய்ய இரயில்வே தொழிலாளர்கள் அனுமதிப்பார்கள் என்பதான வதந்திகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கலகத் தடுப்பு போலிசார் மற்றும் அதிகாரிகளை அவர்கள் எதிர்கொள்வார்கள்.

உள்துறை அமைச்சர் கிறிஸ்தோஃப் கஸ்டானேர், ஆர்ப்பாட்டம் தொடர்பாக விடுத்த ஒரு செய்தி அறிக்கையில், “வெளிப்படையான பாதுகாப்புக் காரணங்களால் Place de la Concordes இல் ஆர்ப்பாட்டம் நடக்கத்தக்க சாத்தியத்தை” தான் விலக்கி விட்டிருந்ததை சுட்டிக்காட்டினார். இந்த சதுக்கம் அமெரிக்க தூதரகத்தையும், ஜனாதிபதி வசிக்கின்ற எலிசே அரண்மனையையும் அடுத்து அமைந்துள்ளது. “பிரச்சினை ஏற்பட்டால் நீதித்துறையின் பதிலிறுப்பு சமரசமற்றதாக இருக்கும்” என்றும் கஸ்டானேர் மிரட்டினார்.

போர்தோ பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரியான, Didier Lallement, நகரின் மையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை சட்டவிரோதமாக ஆக்கும் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

அரசாங்கத்தின் மிரட்டல்கள் பிரான்ஸ், பெல்ஜியம் —இங்கும் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன— மற்றும் சர்வதேசத் தொழிலாளர்களால் பெரும்பாலும் கோபத்துடனும் நிராகரிப்புடனும் எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது. நவம்பர் 17 அன்றான முதலாவது ஆர்ப்பாட்டம் முதலாகவே, மக்ரோனின் எரிபொருள் வரியேற்றத்திற்கு எதிரான இயக்கமானது ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையே நிலவுகின்ற வெடிப்பான சமூக அதிருப்தியின் ஒரு ஆரம்ப கட்ட வெளிப்பாடாக மட்டுமே இருந்தது என்பது தெளிவாகியுள்ளது.

பல்வேறு வேலையிடங்களுக்கும் வெளியில் சாலைகளில் தடையரண்கள் ஒழுங்கமைப்பட்டதன் பின்னர், மக்ரோனுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கின்றனர்.

ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அமசன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பிரான்சின் வடக்கில் உள்ள Lauwin-Planque இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த அமசன் தொழிலாளர்கள் அவர்களின் மையத்திற்கு அருகில், மறியல் ஒன்றினால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த இடத்தில், “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர். டிரக் ஓட்டுநர்கள் அங்கே கடந்து சென்ற சமயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஹாரன் ஒலியெழுப்பிச் சென்றனர்.

பிரான்சின் தெற்கில் உள்ள Fos-sur-Mer இல் இருக்கும் எஸ்ஸோ எண்ணெய் சுத்திகரிப்பு மையத்திற்கு வெளியிலான மறியல்களை போலிஸ் படைகள் அகற்றி விட்டதன் பின்னர், நாட்டின் ஏழு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆறில் வேலைநிறுத்த இயக்கம் வெடித்திருக்கிறது.

ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கங்கள் —அவற்றின் தலைமை இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு பகிரங்கமான குரோதம் கொண்டிருப்பதோடு அதனை நவ-பாசிச வகையானது என்று கண்டனம் செய்திருக்கிறது— இந்த வேலைநிறுத்தங்களுக்கும் மக்ரோனுக்கு எதிரான “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று வலியுறுத்துகின்றன. CGT இன் தலைவரான பிலிப் மார்ட்டினேஸ் நேற்று ஆர்ப்பாட்டங்களின் மீது இன்னுமொரு தாக்குதலைத் தொடுத்தார், அவை “அதி-வலது கூறுகளை” கொண்டிருப்பதாக அவர் எச்சரித்தார்.

"துறை-ரீதியாக வருடாந்திர ஊதியப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கின. இது வேலைவெட்டுகளை முகம்கொடுக்கின்ற அத்தனை வேலைத்தளங்களிலும் ஒரு நடவடிக்கை தினமாகும்” என்று La Mede எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் Fabien Cros என்ற ஒரு CGT அங்கத்தவர் கூறினார். எவ்வாறெனினும், La Mede இல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 150 தொழிலாளர்கள் நிலையத்தின் ஒரு சுற்றுவழி நுழைவாயிலில் கிட்டத்தட்ட 50 “மஞ்சள் சீருடை”க்காரர்களின் ஒரு மறியலில் இணைந்து கொண்டிருந்தனர் என்பதை Cros ஒப்புக்கொள்ளத் தள்ளப்பட்டிருந்தார். “எந்த பொருளும் கிடங்கிற்குள் நுழையவுமில்லை அல்லது அங்கிருந்து வெளியேறவும் இல்லை” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது வேலைநிறுத்தத் தொழிலாளி ஒருவர் AFP இடம் இவ்வாறு கூறினார்: “நாங்கள் எந்தப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள் இல்லை; மக்ரோனுக்கு எதிரான ஒவ்வொன்றும் நன்றே. நாங்கள் ஒட்டுமொத்தமாய் வெறுப்படைந்து போயுள்ளோம்.”

தொழிற்சங்கங்கள், புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன், மக்ரோனைப் பாதுகாப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், தொழிலாளர்களின் பெரும் பிரிவுகள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் துரிதமாய் நுழைந்து விட்டிருப்பதைக் கண்டு அவை விக்கித்து நிற்கின்றன.

தொழிலாளர்களின் கோபத்தைக் கட்டுப்பாட்டில் பராமரிக்கவும் தாங்கள் ஒதுக்கித் தள்ளப்படுவதை தவிர்க்கவும், சில தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஓரளவு ஆதரவளிப்பதற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். CGTயின் துறைமுக மற்றும் சரக்குக்கூண்டு தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை அறிவித்திருக்கின்றன. Herve Caux என்ற ஒரு நிர்வாகி பின்வருமாறு விளக்கினார்: “எங்களது தொழிலாளர்களில் ஏராளமானவர்கள் ‘மஞ்சள் சீருடை’ ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவர், அரசாங்கம் கண்ணியமற்று நடந்து கொள்கிறது. அதனை வளைந்து கொடுக்க நிர்ப்பந்திப்பதற்கு, நாம் ஒன்றுபட்டு நிற்பது அவசியமாகிறது.”

Reunion தீவில் -இங்கு மக்ரோன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராய் இராணுவத்தை அனுப்புவதற்கு மிரட்டி வந்திருக்கிறார்- சரக்குக்கூண்டு தொழிலாளர்கள் East Port இல் மறியலில் இணைந்து கொண்டனர், அதேவேளையில் தீவின் பிரதான சாலைகளில் 16 மறியல்கள் குறித்து செய்திகள் வெளியாகின.

அதேநேரத்தில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியமெங்கிலும் ஆயிரக்கணக்கானோர் நேற்றும் தொடர்ந்து சாலைமறியல்களுக்கு ஏற்பாடு செய்தனர். பிரான்சின் தென்கிழக்கு ட்ரோம் துறையில் Montelimar அருகில், Brittany இல், Normandie இல், மற்றும் Agen, Toulouse, Narbonne மற்றும் Beziers ஆகிய பகுதிகளில் அவர்கள் நெடுஞ்சாலைகளை முடக்கினர். “கறுப்பு வெள்ளி” அனுசரிப்பில் Carpentras இல் பல வணிக பேரங்காடிகளையும் பெல்ஜியத்தில் பல இடங்களையும் அவர்கள் முடக்கினர்.

மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கத்தை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை கொள்ளச் செய்வதும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டு அதனை ஒழுங்கமைப்பதுமே தீர்மானகரமான பிரச்சினையாக தொடர்கிறது. தொழிலாளர்கள் வெறுமனே ஒரு பொருளாதாரப் போராட்டத்திற்கு முகம்கொடுக்கவில்லை, மாறாக மக்ரோன் அரசாங்கத்திற்கும் அதன் பின்னால் நிற்கும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்கு முகம்கொடுத்துள்ளனர். ஆகவே அத்தகையதொரு போராட்டத்தை நடத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிசத் தலைமையைக் கட்டியெழுப்புவது அவசியமாக உள்ளது.

மக்ரோன் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கும், தேசியவாதத்தையும் இராணுவவாதத்தையும் ஊக்குவிப்பதற்காக கட்டாய இராணுவ சேர்ப்பை மீண்டும் கொண்டுவருவதற்கும் விழைகின்ற நிலையில், ஒரு சர்வதேசிய, சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்குக்கான போராட்டம் இன்றியமையாததாக இருக்கிறது. நிதியப் பிரபுத்துவமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் தமது விருப்பத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் திணிப்பதற்கு தீர்க்கமான உறுதிகொண்டுள்ளதற்கு எதிராய், தொழிலாள-வர்க்கப் போராட்டங்களின் அபிவிருத்தியானது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை அதன் கரங்களில் எடுப்பதன் அவசியத்தை முன்னெப்போதினும் நேரடியாக முன்நிறுத்துகிறது.

“மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்கள் இப்போதைய நிலையில் அரசியல்ரீதியாக பலகூறுகள் கொண்ட ஒரு இயக்கமாக இருக்கிறது. வலது-சாரி அதி-வலது குணம் கொண்ட போக்குகள் அதில் செல்வாக்கு செலுத்த முனைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தொழிலாள வர்க்கம் மக்ரோனுக்கு எதிரான போராட்டத்திற்குள் நுழைகின்ற நிலையில், வலது-சாரிப் போக்குகள் அதிகமான அளவில் ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டு வருகின்றன. சென்ற சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டிருந்த குடியரசுக் கட்சியின் தலைவரான Laurent Wauquiez, இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்பதை தெளிவாக்கியிருக்கிறார்.

அதேநேரத்தில், முகநூலில் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முதன்முதலில் அழைப்பு விடுத்திருந்தவர்களில் ஒருவரான டிரக் ஓட்டுநர் Eric Drouet உள்ளிட, “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தில் இருக்கும் சில பிரபலங்கள் வலது-சாரிகளிடம் இருந்து பகிரங்கமாக தங்களை தள்ளி நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Eric Drouet ஒரு முகநூல் பதிவில் எழுதினார்: “தோல்நிற பேதமின்றி, எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற பேதமின்றி, பாலியல் நோக்குநிலை, பாலினம் அல்லது மத பேதமின்றி இந்த இயக்கத்தில் பங்கேற்க விரும்புகின்ற எவரொருவரும் பங்கேற்க இயலுவது என்பது முக்கியமானதாகும்.... எங்களது இயக்கம் எப்படி எந்த கட்சி அல்லது தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இல்லாதிருக்கிறதோ, அதைப் போலவே மஞ்சள் சீருடையாளர்கள் தேசியவாதிகள், பாசிஸ்டுகள் மற்றும் ஏனைய தீவிரப்பட்ட இயக்கங்களது மந்தையாடுகளும் அல்லர். தேவைகள் மிகுந்தவர்கள் மீது விதிக்கப்படுகிறதும் அதேசமயத்தில் அதி-செல்வந்தர்களை மேலும் வளப்படுத்துவதாகவும் இருக்கின்ற அரசாங்கத்தின் வரியை நாங்கள் கண்டனம் செய்கிறோம்.”