Print Version|Feedback
Washington’s censorship regime goes global
Facebook deletes WSWS post on Sri Lanka
வாஷிங்டனின் தணிக்கை ஆளுகை உலகளவில் நீள்கிறது
இலங்கை குறித்த உலக சோசலிச வலைத் தள பதிவினை முகநூல் அகற்றியது
Andre Damon
14 November 2018
திங்கள்கிழமை உலக சோசலிச வலைத் தளத்தின் உத்தியோகபூர்வ தமிழ் மொழி பக்கத்தில் இலங்கை குறித்து இடப்பட்டிருந்த ஒரு பதிவினை முகநூல் (Facebook) அகற்றியது. ஒரு விளக்கமாக கருதப்பட முடியாத விதத்தில், முகநூல் ”சமூகத்தின் வரையறைகளுக்குள்” குறிப்பிடப்படாத கட்டுப்பாடுகளை மீறியதாக இதற்கு காரணம் காட்டப்பட்டது.
74 மில்லியன் மக்களால் பேசப்படும் தமிழ் மொழியானது, இலங்கையில் தமிழ் சிறுபான்மையின மக்களாலும் தென்னிந்தியாவிலும் மற்றும் பரந்த மட்டத்தில் புலம்பெயர்ந்தோராலும் பேசப்படும் மொழியாகும்.
இடதுசாரி, போர்எதிர்ப்பு மற்றும் சோசலிச அமைப்புகளின் மீது கூகுள், முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப ஏகபோகங்களால் நடத்தப்பட்டு வருகின்ற ஒடுக்குமுறையில் இது சமீபத்தியதாகும். இந்த நிறுவனங்கள், முன்னெப்போதினும் நெருக்கமாக அமெரிக்க அரசு எந்திரத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும் போது, உலகெங்கிலும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நோக்கங்களை ஊக்குவிப்பதற்கேற்ற ஆயுதங்களாக அவை அதிகமாய் பயன்படுத்தப்படுகின்றன. சோசலிச அரசியல் கண்ணோட்டங்களை ஒடுக்குவதே இதன் மையத்தில் இருக்கும் உந்துசக்தியாகும்.
உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி முகநூல் பக்கம் குறிவைக்கப்படுவது இது முதன்முறையல்ல. இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்ட பொதுக் கூட்ட விளம்பரப் பதிவுகளில் “பகிர்வு” தெரிவினை முகநூல் அகற்றியிருந்தது.
உலக சோசலிச வலைத் தளம் இணையத் தணிக்கையின் ஒரு மையமான இலக்காக விரிந்தளவில் இருந்து வந்திருக்கிறது; கூகுள், “மாற்றுக் கண்ணோட்டங்களை” கட்டுப்படுத்துகின்ற நோக்கத்துடன் அதன் தேடல் கணிப்புநெறியில் மாற்றம் செய்வதாக அறிவித்த பின்னர் இத்தளத்திற்கு தேடல் மூலமாக வருவோரின் எண்ணிக்கை 75 சதவீதத்திற்கும் அதிகமாய் வீழ்ச்சி கண்டது.
இலங்கையில் ஒரு அரசியல் நெருக்கடி ஆழமடைந்து செல்வதற்கு மத்தியில், இந்திய துணைக்கண்டத்தின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் இந்த தீவு நாட்டில், சீனாவின் செல்வாக்கை நீக்குவதற்கு அமெரிக்கா முனைந்து கொண்டிருக்கிறது. 21 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாடு உலகின் மிக அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க மேற்கு நோக்கிய வர்த்தகப் பாதையின் வழியில் அமைந்திருப்பதோடு அமெரிக்காவின் எந்தவொரு துறைமுகத்தை விடவும் பரபரப்பாக இயங்கும் ஒரு துறைமுகத்தின் சிறப்பைக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் 26 அன்று, இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். இராஜபக்ஷவின் நியமனம், நியூ யோர்க் டைம்ஸ் எழுதியதைப் போல “சீனாவுடன் அதீத நெருக்கமான உறவுகள்” அவர் கொண்டிருக்கும் காரணத்தால், ஏற்கமுடியாதது என்பதை வாஷிங்டன் தெளிவாக்கி விட்டிருக்கிறது.
இலங்கையின் நவீன வரலாறானது, நாட்டின் சிங்கள பெரும்பான்மையினர் மற்றும் தமிழ் சிறுபான்மையினருக்கு இடையில் பிளவுகளை விதைக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை கன்னைகளும் வகுப்புவாத அரசியலைப் பயன்படுத்துவதைக் கொண்டு மேலாதிக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. கொழும்பில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்-விரோத பாகுபாடு எரியூட்டிய பதட்டங்கள் ஒரு இரத்தம்தோய்ந்த உள்நாட்டுப்போராக வெடித்து 1983 முதல் 2009 வரை கொழுந்து விட்டு எரிந்ததோடு 100,000 க்கும் அதிகமான உயிர்களை காவு கொண்டது.
இலங்கையில் உள்ள ஒவ்வொரு முதலாளித்துவ அரசியல் கட்சியும் ஏதேனும் ஒரு இன அடிப்படையிலான கன்னையை தனக்கு அடித்தளமாகக் கொள்ள விழைந்த நேரத்தில், இலங்கையின் ட்ரொட்ஸ்கிச இயக்கமானது ஒரு பொதுவான சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான பல தசாப்தகால அரசியல் போராட்டம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறது.
இந்தப் போராட்டமானது இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சிக்கு பரவலான ஆதரவை வென்று தந்திருக்கிறது, அத்துடன் உலக சோசலிச வலைத் தளம் உலகின் வேறெந்த பகுதியை விடவும் அதிகமாக இலங்கையில் அதிகமான சராசரியில் வாசகர் எண்ணிக்கையை பெற்றுள்ளது.
2009 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கொடூரமாக ஒடுக்கப்பட்டது முதலாக, தமிழ் தேசியவாதக் கட்சிகள் முன்னெப்போதினும் அதிக நேரடியான விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பின்னால் அணிவகுத்து வந்திருக்கின்றன என்று உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்து வந்திருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் அமெரிக்கக் கூட்டாளிகளுக்கு அனுகூலம் கிடைப்பதற்காகவே இராஜபக்ஷவின் நியமனத்தை எதிர்த்திருக்கிறது என்பதை முகநூலினால் தணிக்கை செய்யப்பட்ட அந்தக் கட்டுரை விளக்குகிறது. அது கூறுகிறது:
“விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவிற்கும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. மாறாக இந்த அமைப்பு, 2015 இல் சிறிசேனவையும் விக்கிரமசிங்கவையும் அதிகாரத்தில் அமர்த்திய அமெரிக்க ஏற்பாட்டிலான ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்த அதே ஏகாதிபத்திய ஆதரவு பாதையையே இப்போதும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கை சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளது அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தை கொழும்பில் அமர்த்துவதை நோக்கமாய் கொண்டிருந்தது.”
விக்கிரமசிங்க நீக்கப்பட்டதற்கு முந்தைய நாட்களில், ஆயிரக்கணக்கான தமிழ்-பேசும் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட, “இலங்கையின் அத்தனை இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில்” பெருகிவரும் வேலைநிறுத்த இயக்கத்தை அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியது. “முன்னோக்கிய பாதை ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் அத்தனை தேசியங்களையும் சார்ந்த தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்காக சோசலிச சமத்துவக் கட்சியால் நடத்தப்படுகின்ற போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருக்கிறது” என்று அது வாதிட்டது.
இக் கட்டுரை நீக்கப்பட்டதற்கு முகநூல் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றபோதிலும், அதன் நோக்கங்கள் சுயவிளக்கம் கொண்டவை. இந்த நிறுவனம் அமெரிக்க உளவு நிறுவனங்களுள் கூடியளவில் ஒன்றிணைக்கப்படுவது மட்டுமன்றி அந்த நிறுவனங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்தி கொண்டிருக்கின்றது. இந்த அரசு நிறுவனங்கள், சர்வதேச சோசலிசத்துக்கு செவிமடுப்போர் எண்ணிக்கை பெருகுவதை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவியரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்காக வளரும் நாடுகளில் இனப் பிளவுகளை சுரண்டிக் கொள்ள தாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் காண்கின்றன.
சென்ற மாதத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்த் உரை நிகழ்த்துவதற்காக மேற்கொண்ட இலங்கை விஜயம் அந்நாட்டின் முன்னணி ஊடகங்களில் முக்கியத்துவமிக்க வெளிச்சம் பெற்றதும் அவரது உரைகள் தொழிலாளர்களால் நெருக்கமாக பின்தொடரப்பட்டதும் வாஷிங்டனில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இந்த சமூக ஊடகப் பெருநிறுவனம் வளரும் நாடுகளில், குறிப்பாக இலங்கையில் அரசியல் தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மேற்கத்திய ஊடகங்களில் கோரிக்கை பெருகிவருவதன் மத்தியில் தான் முகநூலின் இந்த நடவடிக்கை வந்து சேர்ந்திருக்கிறது.
இந்தப் பிரச்சாரத்தில் நியூ யோர்க் டைம்ஸ் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்து வந்திருக்கிறது, இணையத்தில் கருத்து சுதந்திரம் தான் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளில் வகுப்புவாத வன்முறைக்குக் காரணமாய் இருப்பதாக, அபத்தமாக, கூறுகின்ற வரிசையான கட்டுரைகளை அது வெளியிட்டிருக்கிறது.
“வளரும் நாடுகளில் முகநூல் துரிதமாக விரிவாக்கம்” காண்பதன் மத்தியில் அந்த நிறுவனம், “பாவிப்பவர்களை தளத்தில் நீண்டநேரம் வைத்திருக்கக் கூடிய உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவமளிக்கிறது. இது பலவீனமான நிறுவன அமைப்புகள் கொண்ட நாடுகளில் சேதமிழைக்கும் சாத்தியமுடைய ஒரு நடைமுறையாகும்” என்று ஏப்ரல் 21 அன்று வெளியான ஒரு முதல் பக்க கட்டுரையில் டைம்ஸ் குற்றமுறையீடு செய்தது.
கிட்டத்தட்ட இலங்கையின் மீது பிரத்யேகமாக கவனம் குவிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையில், “பலவீனமான நிறுவன அமைப்புகள் கொண்ட நாடுகள்” என்று மறைமுகமாக குறிப்பிடப்படுவது முன்னாள் காலனிகள் ஆகும். இத்தகைய நாடுகளில் முகநூல் உரைகளை தணிக்கை செய்யவில்லை என்றால், அந்நாடுகளது மக்கள், தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், வகுப்புவாத வன்மத்தால் ஒருவரையொருவர் படுகொலை செய்து கொள்வார்கள் என்பதே டைம்ஸ் கூற விழைவதாகும்.
அமெரிக்க உளவு முகமைகளின் “அமைதியான அமெரிக்கர்கள்” சார்பாக பேசும் டைம்ஸ், வளரும் நாடுகளின் மக்கள் வாயடைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களிடம் என்ன சொல்லப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் கருதுகின்றனவோ அவையே சொல்லப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இத்தகைய வாதங்கள் ஒரு வெளிப்படையான இனவெறியின் எல்லையைத் தொடுவதாக, “வெள்ளை மனிதனின் சுமையை” [white man’s burden, காலனி ஆக்கிரமிப்பை காலனித்துவ மக்களை நாகரிகப்படுத்துவதற்கு அவசியமான ஒரு சேவையாக சித்தரித்த ருட்யார்ட் கிப்லிங்கின் ஏகாதிபத்தியவாத கவிதை] இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு அழைத்து வருவதாக இருக்கின்றன. இந்த நவகாலனித்துவ குப்பைகளை உற்பத்தி செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் எழுத்துக்களை உதாசீனம் செய்வதே அவற்றுக்கான ஒரே நியாயமான பதிலிறுப்பாக இருக்கும்.
சென்ற மார்ச் மாதத்தில் இலங்கையின் சிறிசேன அரசாங்கம் முகநூல், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமை தற்காலிகமாக மூடியபோது, “முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்தான கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கு” அவசியமான நடவடிக்கையாக கூறி டைம்ஸ் அதனைப் பாராட்டியது. தணிக்கைக்கான இலங்கை அரசாங்கத்தின் சுயசேவைக்கான நியாயப்படுத்தல்களை எதிரொலிக்கின்ற இன்னுமொரு பொய்யாக அது இருந்தது.
இன வன்முறையை தடுப்பதல்ல, மாறாக அதனை மூடிமறைப்பதே முகநூலை சிறிசேன மூடியதன் நோக்கமாய் இருந்தது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க ஆதரவு ஆட்சியின் போலிசும் இராணுவப் படைகளும் சம்பவங்களில் உடந்தையாக இருந்ததை குறித்த செய்திகள் பெரும்பாலும் வெளிவராமல் தடுப்பதற்காகவே, இலங்கையின் ஆட்சி சமூக ஊடகங்களை மூடுவதற்கு விரும்பியது.
பாசிச கலகக்காரர்களுடன் இராணுவமும் போலிசும் நன்கறிந்த விதத்தில் கூடி வேலைசெய்தமை “இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான சிங்கள இனவாத வன்முறையை எதிர்ப்போம்” என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் மார்ச் 10 அறிக்கையில் மையமானதொரு புள்ளியாக இருந்தது. அந்த அறிக்கை கூறியது:
“கலகக்கும்பல் ஏனைய பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்தார்கள் என்பதையும் ஓய்வுபெற்ற மற்றும் பணியிலுள்ள பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்ற ஆதாரங்கள் அங்கே இருந்தன என்பதையும் அரசாங்கத்தின் மூத்த அமைச்சரான சரத் அமுனுகம புதனன்று ஒப்புக்கொள்ள தள்ளப்பட்டிருந்தார். கடைகள் மற்றும் வீடுகள் மீது கும்பல்கள் தாக்குதல் நடத்துவதை போலிசின் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதை காட்டுகின்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகப் பதிவுகள் காட்டின.”
வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்கும் அனைத்து தேசியங்களையும் சேர்ந்த தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் திறம்கொண்ட ஒரேயொரு முன்னோக்கு சோசலிச சர்வதேசியவாதம் மட்டுமே ஆகும். ஆனால் வாஷிங்டனின் உலகளாவிய மேலாதிக்கத்தை மேலும் ஆழப்படுத்துவதற்காக வகுப்புவாதப் பிளவுகளை சுரண்டிக் கொள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்கின்ற முயற்சிகளுக்கு இந்த முன்னோக்கு குறுக்கே நிற்கிறது என்ற துல்லியமான காரணத்தால், முகநூல், கூகுள் மற்றும் பிற தொழில்நுட்ப பெருநிறுவங்களின் முன்னோக்கு அதனை ஒடுக்குவதில் குறியாக இருக்கிறது.
அரசு தணிக்கைக்கான இந்த முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும்! அமெரிக்காவில், இலங்கையில் மற்றும் உலகெங்கிலும் இணையத் தணிக்கைக்கு எதிரான போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் அதன் வாசகர்களுக்கு அழைப்புவிடுக்கிறது!