Print Version|Feedback
Build rank-and-file committees to unify struggles against austerity in France!
பிரான்சில் சிக்கன பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை ஒன்றிணைக்க கீழ்மட்ட அணிகளைக் கட்டியெழுப்பு!
By the Socialist Equality Party (France)
9 October 2018
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களாலும் மாணவர் அமைப்புகளாலும் அக்டோபர் 9 அன்று பிரான்ஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையின்பொழுது சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste) இன் ஆதரவாளர்களால் வினியோகிக்கப்பட்ட அறிக்கையின் தமிழ் மொழியாக்கம் இது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் இமானுவேல் மக்ரோன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பின்னர், அவரது கொள்கையான பொலீஸ்-அரச ஒடுக்குமுறை மற்றும் ஒரேயடியான சிக்கனப் பொருளாதாரக் கொள்கையானது அபரிமிதமான பிரெஞ்சு மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் அழைப்பில் இன்று அணிவகுத்தவர்களுக்கும் அப்பால், புரட்சிகர விளைபயன்களுடனான சமூக கோபம் அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துகொண்டிருக்கிறது. அரசாங்க அமைச்சர்கள் கூட்டம் கூட்டமாக விட்டு வெளியேறும்போது, கருத்துக்கணிப்புகளில் மக்ரோனின் பொறிவால் திகிலூட்டப்படுகிறது.
ஆனால் மக்ரோன் வெகுஜனக் கோபத்தால் பாதிக்கப்படவில்லை. தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயப்படுத்தி, இந்த வசந்த காலத்தில் இரயில்வே தொழிலாளர்களின் சம்பள மட்டங்களை வெட்டிய பின்னர், அவர் ஓய்வூதியங்கள், சுகாதார சேவை, வேலையின்மை இழப்பீடு மற்றும் பொதுத்துறை சம்பளங்கள் ஆகியவற்றை வெட்டிக்குறைக்கத் திட்டமிட்டிருக்கிறார். அவருடன் “சீர்திருத்தங்களுக்கு” பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொழிற்சங்கங்களின் முன்னோக்கானது ஒரு பொறிக்கிடங்கும் பிரமையும் ஆகும். மக்ரோன் எதிர்ப்புரட்சிக்கும் அவரது அரசாங்கத்தைக் கீழிறக்குவது என்பதற்கும் இடையில்தான் ஒரு தேர்வைச் செய்ய வேண்டும்; இங்கு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை எப்படி ஒரு புரட்சிகரப் போராட்டத்தைக் முன்னெடுப்பது என்பதுதான்.
இங்கு முக்கிய பிரச்சினை, மக்ரோனுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை ஒன்றிணைத்தலும் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் இயக்கத்தோடு அவற்றை ஒன்றிணைப்பதுமாகும்.
1936இன் பிரெஞ்சுப் பொதுவேலை நிறுத்தத்திற்கு முன்னர் 1935ல் தொழிலாளர்களது போராட்டங்கள் எழுகையில், நான்காம் அகிலத்தை நிறுவியவரான லியோன் ட்ரொட்ஸ்கி, நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு அழைப்புவிடுத்தார். தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமிருந்து சுயாதீனமாகக் கட்டப்பட்ட இந்தக் கீழணி மட்ட அமைப்புக்கள்தான் போராடும் மக்களது புரட்சிகரப் பிரிதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க முடியும் என்று விளக்கினார். 20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் மறுதலிப்பதை நோக்கமாகக் கொண்ட, மக்ரோனுடன் “சமூக உரையாடல்”” என்று தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் முன் வைக்கப்படும் பொறிக்கு, இது ஒரு மாற்றாகும்.
SNCF ஐ தனியார்மயமாக்கல் மற்றும் அவரது பல்கலைக்கழக சீர்திருத்தம் இவற்றுக்கு எதிரான இந்த வசந்தகாலப் போராட்டத்தின் ஒரு இருப்புநிலை கணக்கு பார்ப்பதற்கான நேரம் இதுவாகும். மக்ரோனின் திட்டங்களுக்கு SNCF தொழிலாளர்களின் 95 சதவீதத்திடமிருந்து எதிர்ப்பு இருப்பினும், சுழற்சிமுறையிலான வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைத்த சங்கங்களே பின்னர் முதுகில் குத்தின, வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த வேளையிலும் அவை மக்ரோனின் வெட்டுக்களுக்குக் கையெழுத்திட்டன. பரந்த இரயில்வே தொழிலாளர்களின் ஆதரவு இருந்தபோதும், அத்தகைய ஒரு பலவீனமான அரசாங்கத்திற்கெதிராக அவர்கள் ஒரு தோல்வியை தழுவினரென்றால், அவர்களால் காரணங்காட்ட முடியாத போராட்டம் எதுவும் இல்லை எனலாம்.
Air France, Carrefour மற்றும் பிரெஞ்சு மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் இருப்பினும், பிரிட்டிஷ் இரயில் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அமெரிக்க ஆசிரியர்களின், ஜேர்மன் மற்றும் துருக்கியின் உலோகவேலை மற்றும் பொறியியற் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் இருப்பினும் அவர்கள் மக்ரோனுக்கு எதிரான இரயில்வே வேலைநிறுத்தத்தையும் மாணவர் இயக்கத்தையும் தனிமைப்படுத்தினர். இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்தின்பால் திரும்ப முயற்சிக்கையில் கூட, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் முற்றுகைகளை நசுக்க கலவரப் பொலீசை அனுப்பும் நிலையில் அரசானது விடப்பட்டது.
புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA), தொழிலாளர் போராட்டம் (FO) மற்றும் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் (LFI) ஆகியவற்றால் அமைக்கப்பட்ட “புதிய மக்கள் முன்னணியை“ பொறுத்தவரை, இந்த வசந்தகாலத்தில் மக்ரோனுக்குத் தொழிற்சங்கங்கள் அழுத்தம் கொடுப்பதற்கு உதவுவதற்காக என்று கூறப்பட்டாலும், அது மக்ரோனுக்கு அழுத்தமே கொடுக்கவில்லை. அது தொழிற்சங்க அதிகாரத்துவம் போராட்டத்தைச் சீர்குலைக்க மற்றும் அதன் சொந்த சலுகைகளின் அதன் பாதுகாத்தலுக்குமே சாதாரணமாக ஆதரவளித்தது. இப்பொழுது, அடிபணியா பிரான்ஸ் இயக்கம் அதன் கோடைப் பள்ளியில் இராணுவ மூலோபாயம் பற்றி விவாதிக்க வலதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களை வரவேற்றது மற்றும் அடிபணியா பிரான்ஸ் இயக்க தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன், மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில் வலதுகளுடன் கூடுவதற்கு பொதுவான காரணம் இருப்பதாக தான் பார்ப்பதாகக் கூறினார்.
முன்னோக்கி செல்லும் பாதை எதுவெனில், ஒரு புரட்சிகர போராட்டமானது, அரசாலும் முதலாளிகளாலும் நிதியூட்டப்படும் பிரெஞ்சுத் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடமிருந்தும் அவற்றின் அரசியல் அடிவருடிகளிலிருந்தும் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மக்ரோனுடன் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகையில் தந்திரோபாய உதவிக்காக மட்டுமே தொழிலாளர்களின் அதிருப்திகளைப் பயன்படுத்தல் எனும் மார்க்சிச-விரோத மூலோபாயத்தின்மீது நிலைப்படுத்திக்கொள்வதானது, அவை தோல்விகளைத் தவிர ஒன்றையும் உருவாக்கப் போவதில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், பிரெஞ்சு தொழிலாள வர்க்கமானது தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் கைகளில் இருந்து தலைமையை எடுத்துக்கொண்டு 1968 மே-ல் பிரெஞ்சு பொது வேலை நிறுத்தத்தைத் தொடங்கியதானது, பிரெஞ்சு முதலாளித்துவத்தை பொறியும் விளிம்பிற்குக் கொண்டு வந்தது. ஆயினும், இன்று வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு ஒரு மட்டுப்பட்ட அளவாயினும் கிரெனல் (Grenelle) ஒப்பந்தங்களும் சமூக சலுகைககளும் விளைவாய் வரப் போவதில்லை. கடந்த அரை நூற்றாண்டாக, பிரெஞ்சு முதலாளித்துவம் தொழில்மயமகற்றப்பட்டு நிதிமயமாக்கப்பட்டு அதற்கான வளமில்லாததாக இருக்கிறது, அது பில்லியனர்களுக்கு பெருத்த அளவிலான வரி விலக்குகளைக் கோருவதுடன் இராணுவத்திற்காக பில்லியன் கணக்கான யூரோக்களைக் கோருகிறது.
முதலாளித்துவத்தின் திவாலை எதிர்கொள்ளும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு புதிய தலைமுறையானது சோசலிசத்திற்கான போராட்டத்தின் வழியில் செல்வதற்கு உலகம் முழுவதிலும் தயாரிப்புச் செய்து கொண்டிருக்கிறது. பெருந்திரளான அமெரிக்க இளைஞர்கள் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் ஆதரவு தருவது, நிலவும் சமூக ஒழுங்கிற்கு எதிரான ஒரு பரந்த எழுச்சியில் பங்கேற்பதில் பெரும்பான்மை இளம் ஐரோப்பியர்கள் விரும்புவது ஆகியன வரவிருக்கும் புரட்சிகரப் புயலின் பலவாறான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
நடவடிக்கைக் குழுக்களைக் கட்டி அமைப்பதற்கான போராட்டம் என்பது, இப்பொழுது அன்றாட நடப்பாகிவிட்டது. 1935ல், ட்ரொட்ஸ்கி பிரான்ஸ் எங்கே செல்கிறது (Whither France) என்ற நூலில், இந்தக் குழுக்கள், “கட்சி, எந்திரம் மற்றும் தொழிற்சங்கத்தின் எதிர்ப்புரட்சிகர எதிர்ப்பை துண்டித்துக் கொள்வதை மட்டுமே அர்த்தப்படுத்துகிறதாக” இருந்தன என்று விளக்கினார். போல்ஷிவிக்குகளின் தலைமையில் அக்டோபர்ப் புரட்சியின் பொழுது, தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை எடுத்ததன் மூலம், 1917ல் ரஷ்யத் தொழிலாளர்களால் அமைக்கப்பட்ட சோவியத்துக்களுடன் அவற்றை ஒப்பிட்டு, அவர் எழுதினார்:
“பிரான்சின் உழைக்கும் மக்களை ஒரு தற்காப்பு போராட்டத்தில் ஒன்றுபடுத்துவதும் இதன்மூலம் எதிர்வரும் தாக்குதல்களில் தங்களது சொந்த ஆற்றல் குறித்த நனவை அவர்களுக்கு புகட்டுவதும் இப்போதைய கட்டத்தில் நடவடிக்கை குழுக்கள் கொண்டுள்ள கடமைகளாகும். உண்மையான சோவியத்துகளின் புள்ளி வரை விடயங்கள் செல்லுமா என்பது, பிரான்சில் நிலவும் தற்போதைய கொந்தளிப்பான சூழ்நிலை, இறுதியான புரட்சிகர முடிவுகளாய் கட்டவிழுமா என்பதைப் பொறுத்தது. இது நிச்சயமாக புரட்சிகர முன்னணிப்படையின் விருப்பத்தை மட்டும் சார்ந்ததல்ல மாறாக ஏராளமான புற நிலைமைகளையும் சார்ந்தது; எப்படியாயினும், இன்று மக்கள்’ முன்னணி என்ற முட்டுக்கட்டைக்கு முகம்கொடுத்து நிற்கின்ற வெகுஜன இயக்கமானது நடவடிக்கைக் குழுக்கள் இன்றி முன்னால் செல்ல முடியாது”.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste — PES), இந்த முன்னோக்கை வேலைத்தளங்களில், பள்ளிக்கூடங்களில் மற்றும் இணையத்தில் மிகப் பரந்த அளவிலான ஒரு கலந்துரையாடல் செய்யுமாறு வலியுறுத்துகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க விரும்புவோரை PES இல் இணையுமாறும் அதைக் கட்டி எழுப்புமாறும் அழைக்கிறது.
தொழிலாளர்களினாலான நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கு அழைப்புவிடுத்து மற்றும் அதில் உதவி செய்கின்ற அதேவேளை, PES ஆனது வளர்ந்து வரும் இயக்கத்தின் புரட்சிகர மற்றும் சர்வதேசத்தன்மையின் ஒரு பரத்துபட்ட நனவுக்காகப் போராடுகிறது. அது எழுந்து வரும் அத்தனை வேலைநிறுத்த போராட்டங்களையும் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாளர்களின் அனைத்துவிதமான வடிவங்களுடனும் இணைப்பதற்கு போராடுகிறது. அரசு அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய இயக்கத்தை வளர்த்தெடுக்க மற்றும் பொருளாதார வாழ்வை தனியார் இலாப நோக்கிற்கு அல்லாமல் சமூகத் தேவைக்கான அடிப்படையில் மறு ஒழுங்கு செய்வதற்கும் அது போராடுகிறது.