Print Version|Feedback
The way forward for French workers
Build rank-and-file committees to oppose Macron’s austerity measures!
பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கான முன்னோக்கிய பாதை
மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராய் சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!
Alex Lantier
24 May 2018
தேசிய இரயில்வே அமைப்பை தனியார்மயமாக்கும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் திட்டங்களை நிராகரித்து பிரெஞ்சு தேசிய இரயில்வே (SNCF) தொழிலாளர்கள் நிறுவன அளவிலான வாக்கெடுப்பில் மிகப் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். வாக்களிக்காமல் இருப்பதற்கு நிர்வாகத்திடம் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தை மீறியும் மக்ரோனுக்கு ஆதரவான ஒரு ஊடகப் பிரச்சாரத்தைத் தாண்டியும், SNCF தொழிலாளர்களில் 61.15 சதவீதம் பேர் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 94.97 சதவீதம் பேர் இந்த தனியார்மயமாக்க நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.
மக்ரோனுக்கு எதிராய் பின்வாங்குவதற்கு எல்லாம் வெகுதொலைவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் மேலும் மேலும் அதிகமாய் போராட்டக்குணம் பெற்று வருகின்றனர். மக்ரோனுக்கு எதிரான பொதுத்துறையின் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அடுத்த நாளும், ஏர் பிரான்ஸ் தொழிலாளர்கள் ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை நிராகரித்ததன் மூலம் நிர்வாகத்தையும் தொழிற்சங்கங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் இந்த வாக்களிப்பு வந்திருந்தது. பணக்கார குடும்பங்களின் மாணவர்களுக்கு ஆதரவான விதத்திலமைந்த பல்கலைக்கழக தேர்வு அனுமதி நடைமுறைகளுக்கு எதிராக மாணவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்குள் நுழைகின்ற தொழிலாள வர்க்கத்தின் முன்னெப்போதினும் பரந்த பிரிவுகளை ஒன்றுபடுத்துவதும், இந்தப் போராட்டங்களை தனிமைப்படுத்தி கலைந்து விடச் செய்வதற்கான முயற்சிகளை எதிர்த்து நிற்பதும், அத்துடன் அவற்றை சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து செல்லும் இயக்கத்துடன் இணைப்பதுமே இப்போதிருக்கும் இன்றியமையாத பிரச்சினை ஆகும்.
1936 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தின் வெடிப்புக்கு முந்தைய தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படலுக்கு மத்தியில் 1935 இல், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி, நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்க அழைப்பு விடுத்தார். தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான விதத்தில் ஒழுங்கமைக்கப்படுகின்ற இந்த சாமானியர் அமைப்புக்கள், “போராடும் பரந்த மக்களின் புரட்சிகரப் பிரதிநிதித்துவமாக” இருக்கவிருந்ததாக ட்ரொட்ஸ்கி எழுதினார்.
1968 பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தின் 50வது ஆண்டில், இன்று, பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்ற நிலையில், சாமானியர் நடவடிக்கைக் கமிட்டிகளை உருவாக்குவதற்கான கோரிக்கையை மீண்டும் முன்னெடுப்பது இன்றியமையாததாக இருக்கிறது.
தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்திற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளது முதுகெலும்பற்ற கொள்கைகளுக்கும் இடையில் ஒரு பிளவு பிரித்துநிற்கிறது. SNCF வாக்களிப்பில் அவர்கள் காண்பது மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத் திட்டநிரலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மறுதலிப்பை அல்ல, மாறாக வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தருவதன் மூலமாக தொழிலாளர்களை விலையாகக் கொடுத்து தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சமூக சலுகைகளைப் பத்திரப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் அரசாங்கத்துடன் அவை நடத்தி வருகின்ற பேச்சுவார்த்தைகளில் அவற்றுக்கு சாதகமான ஒரு புள்ளியாகவே அதைக் காண்கின்றன.
ஐரோப்பிய ஒன்றிய-உத்தரவின் படி இரயில்வேயை போட்டிக்காய் திறந்து விடுவது, தொழிலாளர்களது ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளிலான வெட்டுக்களுக்கு பாதை அமைக்கின்ற விதமாக இரயில்வே தொழிலாளர்களது சிறப்பு சட்டப்பிரிவை நீக்குவது, மற்றும் SNCF ஐ தனியார்மயமாக்குவது ஆகியவற்றுக்கு தொழிற்சங்கங்கள் உடன்பட்டால் மட்டுமே அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்த பிரதமர் எட்வார்ட் பிலிப் உடன் இரயில்வே தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையை திறந்திருக்கின்றன. SNCF கடனுக்கு அரசு நிதியாதாரமளிப்பது மட்டுமே ஒரே விவாதப்பொருளாக இருக்கும் என்று பிலிப் கூறினார்.
ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) -இரயில்வேயின் தலைவரான லோரோண்ட் பிறன் புதனன்று கூறுகையில், SNCF நிர்வாகம் “முழுமையாக மதிப்பிழந்து விட்டது” என்று கூறியதுடன் அரசாங்கம் “அதன் சீர்திருத்தங்களை” விட்டுச் செல்லக் கேட்டுக் கொண்டார். ஆனால் மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் கட்சி (LREM) SNCF வாக்கெடுப்பை அது கண்டுகொள்ளாமல் விட திட்டம் கொண்டுள்ளதை தெளிவாக்கியிருக்கிறது. மாறாக, தொழிலாளர் பொதுக் கூட்டமைப்புடனான (CGT) அதன் பேச்சுவார்த்தையில் வெட்டுக்களைத் திணிப்பதற்கான ஆகச்சிறந்த வழிமுறையை அது கடைந்தெடுக்க இருக்கிறது.
SNCF வாக்கெடுப்பின் போது, LRM இன் பிரதிநிதியான Gilles Le Gendre, “சீர்திருத்தத்திற்கு பாரிய எதிர்ப்பு இருக்கிற காரணத்தால் மட்டும், அதில் நாங்கள் பின்வாங்கப் போகிறோம் என்பதான பிரமைகளை” கேலிசெய்தார். “அது உண்மையன்று” என்று அவர் அறிவித்தார்.
அரசு, SNCF நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் சேர்ந்து வேலைசெய்யும் என்று அவர் வலியுறுத்தினார். “யார் முகத்திலும் கரிபூசா வண்ணம் இந்த நெருக்கடியில் இருந்து வெளிவருகின்ற ஒரு வழியை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். “அது தான் எங்கள் இலட்சியம். அது தான் நாங்கள் விரும்புவது, ஆயினும் அது உள்ளடக்கம் மாற்றமில்லாத ஒரு சீர்திருத்தத்தின் பொருட்சூழலுக்குள்ளாகவே இருந்தாக வேண்டும்.”
வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிலாளர்களிடம் இருந்து அரசாங்கம் முகம்கொடுக்கின்ற எதிர்ப்பு எந்த மட்டத்திற்குப் பெரிதாக இருக்கிறதோ, அந்த மட்டத்திற்குப் பெரிய காட்டிக்கொடுப்பை தொழிற்சங்கங்களிடம் இருந்து அது கோரும்.
பிரான்சின் வசதியான நடுத்தர வர்க்கக் கட்சிகள் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கைக்கு மறைப்பு அளித்துக் கொண்டிருக்கின்றன, CGT தலைமையில் மக்ரோனுக்கு எதிரான ஒரு தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப மக்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) ஆகியவற்றின் ஆதரவுடன் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியானது ஒரு “புதிய மக்கள் முன்னணி”க்கும் மே 26 அன்று “மனித அலை” போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது, இது சலுகைகளுக்காக மக்ரோனுக்கு நெருக்குதல் அளிப்பதில் தொழிற்சங்கங்களுக்கு உதவுவதற்காக என்பது வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
இது, தொழிலாளர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிக்குபொறியாகும். தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதற்கும், வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்துவதற்கும், மக்ரோனுக்கு எதிரான போராட்டத்திற்கு குழிபறிப்பதற்கும் LFI, NPA, LO, மற்றும் பிற குட்டி-முதலாளித்துவக் கட்சிகள் தமது ஒப்புதலை வழங்கிக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் ஏர் பிரான்சில் ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியின் பெயர் அறிவிக்கப்படுகின்ற வரை வேலைநிறுத்தங்களை நிறுத்தி வைத்திருக்கின்றன, பொதுத் துறை வேலைநிறுத்தங்களை அடையாள ஒருநாள் நடவடிக்கைகளாக சுருக்கியிருக்கின்றன, அத்துடன் இரயில் வேலைநிறுத்தங்களை மற்ற பொதுத் துறை வேலைநிறுத்தங்களில் இருந்து பிரித்து வைத்திருக்கின்றன.
தொழிலாள வர்க்கத்துக்கு வர்க்கப் போராட்டத்தின் செயல் நடவடிக்கைகளை தொழிற்சங்கங்களும் அவற்றின் அரசியல் கூட்டாளிகளும் கட்டளையிடுவது அனுமதிக்கப்படக் கூடாது என்பதையே கசப்பான வரலாற்று அனுபவம் காட்டுகிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, இதே நாளில், 1968 பொது வேலைநிறுத்தம் உச்சகட்டத்தில் இருந்தசமயத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் வணிகக் குழுக்களுடன் CGT பேச்சுவார்த்தைகளைத் தொடக்கி அது கிரேனெல் உடன்பாடுகளை (Grenelle Accords) உருவாக்கியது. அந்த பொது வேலைநிறுத்தம், CGT தலைமையின் கீழ் அல்ல, மாறாக அதற்கு எதிரான கிளர்ச்சியில் தான் வெடித்திருந்தது. அதற்கு இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்தின் பின்னர், அந்த பொது வேலைநிறுத்தம் பிரெஞ்சு முதலாளித்துவத்தை மண்டியிடச் செய்திருந்தது.
இந்த புரட்சிகர சந்தர்ப்பதைக் காட்டிக்கொடுப்பதற்கான வழிமுறையாக CGTக்கு கிரேனல் பேச்சுவார்த்தைகள் இருந்தன. அந்தப் பேச்சுவார்த்தைகள் ஊதிய சலுகைகளுக்கு இட்டுச் சென்றன, டு கோல் இன் அரசாங்கத்தைக் காப்பாற்றும் விதமாக தொழிலாளர்களை ஆலைகளுக்கும் வேலையிடங்களுக்கும் திரும்பச் செய்வதற்கு CGT இதனை பயன்படுத்திக் கொண்டது.
இன்று வர்க்கப் போராட்டத்தில் இருந்து அதுமாதிரியான எந்த சீர்திருத்தவாத விளைவுகளும் வந்துசேரப் போவதில்லை. போருக்குப் பிந்தைய எழுச்சியின் உச்சத்தில் 1968 பொது வேலைநிறுத்தம் வெடித்திருந்தது. ஆயினும், அதற்குப் பின்னர், பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகளாலும் செல்வந்தர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரி சலுகைகளாலும் பிரான்சிலும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளிலும் தொழிற்துறை நாசம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சமூக விட்டுக்கொடுப்புகளுக்கு இனியும் பிரெஞ்சு முதலாளித்துவத்திடம் ஆதாரவளம் ஏதுமில்லை. ஈரான், சிரியா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோவின் போர் மிரட்டல்கள் பெருகி வருவதன் மத்தியில் இராணுவ நிதி ஒதுக்கீட்டுக்கு 300 பில்லியன் யூரோக்களைத் திரட்ட மக்ரோன் முனைகின்ற நிலையில், தொழிலாளர்களை விலைகொடுத்தே அவர் உடன்பாடுகளை மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த நிலைமைகளின் கீழ், சாமானிய தொழிலாளர் அமைப்புகளை கட்டியெழுப்புவதற்கான போராட்டமானது மிகப்பெரும் அவசர அவசியத்தைப் பெறுகிறது. இத்தகைய கமிட்டிகள் மட்டுமே “தொழிற்சங்கம் மற்றும் கட்சி எந்திரத்தின் எதிர்-புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே வழிமுறை” என்பதை 1935 இல், பிரான்ஸ் எங்கே செல்கிறது இல் ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். 1917 இல் போல்ஷிவிக்குகளின் தலைமையின் கீழ் அக்டோபர் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய, ரஷ்யத் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட சோவியத்துகளுடன் அவற்றை ஒப்பிட்ட ட்ரொட்ஸ்கி எழுதினார்:
பிரான்சின் உழைக்கும் பரந்த மக்களை ஒரு தற்காப்புப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதையும், இதன்மூலமாக வரவிருக்கும் தாக்குதல்களில் அவர்களது சொந்த சக்தி குறித்த நனவை அவர்களுக்கு ஊட்டுவதையுமே இப்போதைய கட்டத்தில் நடவடிக்கைக் கமிட்டிகள் தமது கடமையாகக் கொண்டிருக்கின்றன. விடயங்கள் உண்மையான சோவியத்துகளின் மட்டத்தை எட்டுமா என்பது, பிரான்சிலான இப்போதைய அதிமுக்கியமான சூழ்நிலை, இறுதியான புரட்சிகர நிறைவுகளாகக் கட்டவிழ்கிறதா என்பதைச் சார்ந்தவையாக இருக்கும்.
இந்த முன்னோக்கு வேலையிடங்களிலும், பள்ளிகளிலும் மற்றும் இணையத்திலும் பரந்த அளவில் விவாதிக்கப்படுவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (The Parti de l'égalité socialiste - PES) வலியுறுத்துகிறது. இந்தப் போராட்டத்தில் பங்குபெற விரும்புவோர் PES இல் இணைந்து அதனைக் கட்டியெழுப்புவதற்கு அது அழைப்பு விடுக்கிறது.
எழுந்து கொண்டிருக்கின்ற இயக்கத்தின் தன்மை மற்றும் இலக்குகள் குறித்த ஆகச் சாத்தியமான நனவினை ஊட்டுவதற்காக செயற்பட்டு வருகின்ற PES, தொழிற்சாலைகளிலும் மற்ற வேலையிடங்களிலும் சாமானியர் கமிட்டிகளை உருவாக்குவதற்கு ஆலோசனையளிக்கும், உதவி செய்யும். எழுந்துவரும் இயக்கத்தை போர், சிக்கன நடவடிக்கைகள், மற்றும் சமூக சமத்துவமின்மைக்கான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அத்தனை வெளிப்பாடுகளுடனும் இணைக்கவும், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் சமூகத் தேவையின் அடிப்படையில் மறுஒழுங்குபடுத்துவதற்குமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்யவும் அது போராடும்.