Print Version|Feedback
The poisoning of Skripal and the campaign against Russia
ஸ்கிரிபால் நஞ்சூட்டலும் ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரமும்
Bill Van Auken
28 March 2018
வாஷிங்டன் திங்களன்று 60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியிருப்பதும், அதன் ஒருங்கிணைப்பான நடவடிக்கைகளில் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் 20க்கும் அதிகமான மற்ற நாடுகள் ஒவ்வொன்றுமே கணிசமான எண்ணிக்கையில் ரஷ்யத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியிருப்பதும், ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ சக்திகள் நடத்திவரும் இடைவிடாத பிரச்சாரத்தில் ஒரு ஆத்திரமூட்டும் தீவிரப்படுத்தலாகும்.
மார்ச் 4 அன்று பிரிட்டனின் தெற்கு நகரமான சாலிஸ்பரியில் உள்ள ஒரு பூங்காவின் இருக்கையில் முன்னாள் ரஷ்ய உளவாளியும் பிரிட்டிஷ் இரட்டை முகவருமான சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது வயது வந்த மகளுக்கு நஞ்சூட்டப்பட்டது சம்பந்தமான ஒரு தெளிவற்ற சம்பவம்தான் இந்த நடவடிக்கைக்கான சாக்காக முன்தள்ளப்படுகிறது.
ஸ்கிரிபாலும் அவரது மகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்ததன் காரணமான இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் “அநேகமாய்” மாஸ்கோ இருக்க வேண்டும் என்பதாக கடந்த இரண்டு வாரங்களாக டோரி பிரதமர் தெரசா மேயின் அரசாங்கம் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கிறது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சரான போரிஸ் ஜோன்சன் இன்னும் ஒருபடி மேலே சென்று, விளாடிமிர் புட்டின் நேரடியாக இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டிருப்பதற்கான வாய்ப்பு “மிக அநேகமாக” இருப்பதாக் கூறியதோடு, ரஷ்ய ஜனாதிபதியை அடோல்ஃப் ஹிட்லருடன் ஒப்பிடும் அளவுக்குச் சென்று விட்டார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக இரண்டு விடயங்கள் தான் இல்லாதிருக்கிறது: 1) ஏதேனும் சரிபார்க்கத்தக்க ஆதாரம், மற்றும் 2) இத்தகையதொரு குற்றத்தை மேற்கொள்வதற்கு ரஷ்ய அரசாங்கத்திற்கு இருக்கக் கூடிய புரிந்துகொள்ளத்தக்க ஏதேனும் நோக்கம்.
தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதில் வாஷிங்டன் மற்றும் இலண்டனுடன் கரம்கோர்த்த பல அரசாங்கங்களும் —அநேகமானவை ஒன்று முதல் நான்கு ரஷ்யர்கள் வரை நாட்டை விட்டு வெளியேற பணித்துள்ளன, ஓசையற்ற மன்னிப்பாக மாஸ்கோ குறிப்பிட்டிருக்கின்ற ஒன்றுடன்— தங்களுக்கு எந்த விதமான ஆதாரமும் காட்டப்பட்டிருக்கவில்லை என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கின்றன.
பிரிட்டிஷ் அரசாங்கமும், தன் பங்கிற்கு, ஒரு சாதாரண வீதிக் குற்றத்திற்கு வழக்கமாக இருப்பதை விடவும் குறைவான அவகாசத்தையே நஞ்சூட்டலில் உண்மைக் குற்றவாளியை கண்டறிவதற்கான அதன் புலன்விசாரணையாக சொல்லப்படுவதற்கு அளித்திருக்கிறது.
எந்த ஆதாரமும் தாங்கிநிற்காத நிலையில், பிரிட்டனும் அமெரிக்காவும் முன்வைக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் ரஷ்ய-விரோதப் பிரச்சாரத்திற்கு அரசியல் நியாயத்தை வழங்கும் பொருட்டு இட்டுக்கட்டப்பட்டவையாக இருக்கின்றன என்பது வெளிப்படையாக இருக்கிறது. புட்டின் அவரது பதவியின் இறுதி பதவிக்காலத்திற்காய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட இருந்த அந்த சமயத்தில் புட்டின் அரசாங்கம் ஸ்கிரிபாலை —இந்த மனிதரை ரஷ்ய அதிகாரிகள் முன்னர் சிறையிலடைத்து பின்னர் விடுதலை செய்திருந்தனர்— கொலை செய்ய முயலுவதற்கு புரிந்துகொள்ளக் கூடியதாக எந்த முகாந்திரமும் இல்லாதிருக்கிறது.
இந்தக் குற்றத்தை நடத்துவதற்கு யாருக்கு முகாந்திரமிருக்கிறது? என்று எந்தவொரு போலிஸ் புலனாய்வாளராக இருந்தாலும் கேட்கின்ற அடிப்படையான கேள்வியை ஒருவர் கேட்டால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்பதே வெளிப்பட்ட பதிலாக இருக்கும், இவையே முன்கூட்டி தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு கொள்கையை அமல்படுத்துவதற்கான சாக்கை வழங்குவதற்கு இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மிகத் திட்டவட்டமான புவிமூலோபாய இலக்குகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவு முகமைகளால் வகுக்கப்பட்ட ஒரு சதியில், துர்பாக்கியசாலியான திரு.ஸ்கிரிபாலும், அவரது மகளும், துச்சமான பலிகடாக்களாக ஆகியிருந்தனர் என்பது மட்டுமே சாலிஸ்பரி நஞ்சூட்டல் சம்பவத்துக்கு இருக்கின்ற மிக புரிந்துகொள்ளத்தக்க விளக்கமாக இருக்கிறது.
ஆனால் அமெரிக்க சிஐஏ உம் பிரிட்டிஷ் MI6 உம் தமது புவியரசியல் இலக்கின் நலன்களின் பேரில் கிரெம்ளின் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரப் போரை தீவிரப்படுத்துவதற்காக இப்படி இரண்டு அப்பாவிகளைக் கொலைசெய்யுமளவுக்கு போவது என்பது உண்மையிலேயே சாத்தியமா?
ஈராக் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக “பேரழிவு ஆயுதங்களை” கண்டுபிடித்த ஏகாதிபத்தியக் குற்றவாளிகளது அதே கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் இந்த ஆத்திரமூட்டலையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா நிர்வாகத்திற்குப் பின்னர், சிஐஏ, ஆளில்லா விமான ஏவுகணைகளை தனது தெரிந்தெடுத்த ஆயுதமாகக் கொண்டு, உலகெங்கிலும் தொடர்ச்சியான படுகொலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு கொலைகார நிறுவனம் எனப் பெயரெடுத்துக் கொடுத்த முடிவில்லாத குற்றங்களில் இது சமீபத்தியது மட்டுமே. ட்ரம்ப் நிர்வாகம் இப்போது, இரகசிய விசாரணையிடத்தின் சித்தரவதையாளராக நன்கறியப்பட்ட ஒருவரை சிஐஏ க்கு பரிந்துரை செய்திருக்கிறது.
ஸ்கிரிபால் மற்றும் அவரது மகளின் மீதான கொலைமுயற்சிக்கு ஏற்பாடு செய்து அக்குற்றத்தை மாஸ்கோ மீது சுமத்துவது திட்டவட்டமான அரசியல் நோக்கங்களுக்காய் சேவைசெய்கிறது.
கடந்த தசாப்தத்தில், 2008 இல் உடைந்து சென்ற தெற்கு ஒசடியா மற்றும் அப்காசியா மாகாணங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு அமெரிக்க ஆதரவுடன் ஜோர்ஜியா நடத்திய போர் தோல்விகண்டதன் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலகளாவிய மேலாதிக்கத்திற்கான முனைப்புக்கு ஒரு சகிக்க முடியாத முட்டுக்கட்டையாகக் காண்கின்ற ரஷ்யாவுக்கு எதிராய் தனது மூர்க்கத்தனத்தையும் பிரச்சாரத்தையும் தொடர்ந்து தீவிரப்படுத்தி வந்திருக்கிறது.
2014 இல் அமெரிக்க ஆதரவுடனான பாசிச தலைமையிலான உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்புக்கு —ரஷ்ய மேலாதிக்கம் இருந்த பகுதியாகவும் அதன் கருங்கடல் கப்பல் வரிசைக்கான தளமாகவும் சேவை செய்த கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொள்ள இது தூண்டியது— பின்னர் பதட்டங்கள் அதிகரிக்க மட்டுமே செய்திருக்கின்றன.
இறுதியாக, ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் அரசாங்கத்திற்கு ரஷ்ய -மற்றும் ஈரானிய- ஆதரவு சிரியாவில் ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற சிஐஏ ஆதரவுடனான ஆட்சி-மாற்றத்திற்கான போரை நிலைதடுமாறச் செய்திருக்கிறது, அமெரிக்க படைகள் ரஷ்ய இராணுவத்தின் ஒப்பந்த வீரர்களைக் கொல்வதும், சிரியாவில் தனது படைகள் அச்சுறுத்தப்படுமானால் பதிலடி கொடுக்கப் போவதாக வாஷிங்டனுக்கு ரஷ்ய இராணுவம் எச்சரிக்கை விடுப்பதுமாக இராணுவப் பதட்டங்களுக்கும் இது இட்டுச் சென்றிருக்கிறது.
ஸ்கிரிபால் நஞ்சூட்டப்பட்டது தொடர்பான, ஏற்பாடு செய்யப்பட்ட கூக்குரலானது, ஒலிம்பிக்கின் போதைமருந்து “ஊழல்” முதல் அமெரிக்க தேர்தலில் ரஷ்ய “தலையீடு” தொடர்பான முடிவற்ற பிரச்சாரம் வரையிலும் ஒரு முடிவற்ற ஆத்திரமூட்டல்களின் பகுதியாகும், இவை அனைத்துமே மக்களை போருக்குத் தயாரிப்பு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும்.
அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளாகவும் சரி வாஷிங்டனுக்கும் அதன் வெளிப்பட்ட ஐரோப்பியக் கூட்டாளிகளுக்கு இடையிலும் சரி இந்தக் கொள்கை தொடர்பாக ஆழமான விரிசல்கள் நிலவுகின்றன. வாஷிங்டனிலும் இலண்டனிலும் அரசு எந்திரத்துக்குள்ளாக இருப்பவர்களுக்கு ஸ்கிரிபால் நஞ்சூட்டலானது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு கூடுதல் மூர்க்கமான கொள்கைக்கு ஒரு ஆயுதமாக சேவைசெய்கிறது. இது மற்ற ஐரோப்பிய சக்திகள் மீது —குறிப்பாக அதிகமான அளவில் தனது சொந்த வல்லரசு நலன்களைப் பின்பற்றி வருவதோடு, வாஷிங்டனின் மூலோபாய இலக்குகளுக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் இலாப நலன்களுக்கும் குறுக்கீடு செய்யும் விதமாக ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்ற ஜேர்மனியின் மீது— அழுத்தமளிக்கின்ற ஒரு வழிவகையையும் அளிக்கிறது.
ஸ்கிரிபால் நஞ்சூட்டலானது ஒரு திட்டமிட்ட அரசுப் பிரச்சாரத்தின் பகுதி என்பதற்கான தெளிவான அறிகுறியாக செவ்வாயன்று, அமெரிக்க ஆளும் ஸ்தாபகம் மற்றும் அதன் உளவு முகமைகளின் கருத்துக்களுக்கும் பிரச்சாரத்துக்குமான இரண்டு பிரதான வழிகளாக இருக்கின்ற நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்டில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான தலையங்கங்கள் வெளியாகியிருந்தன.
“மேற்கின் அரசாங்கங்கள் மற்றும் தேர்தல்களுக்கு இடையூறு செய்வது, உக்ரேன் போன்ற அண்டை நாடுகளை ஆட்டுவிப்பது, மற்றும் மேற்கத்திய நகரங்களில் தனது எதிரிகளை தடை செய்யப்பட்ட இரசாயனப் பொருட்களைக் கொண்டு கொலை செய்வது” ஆகிய குற்றச்சாட்டுகளை ரஷ்யா மீது சுமத்தும் போஸ்ட், “திருவாளர். புட்டின் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். அவரது உளவாளிகளில் ஒரு சில டசன் பேரை வெளியேற்றுவது என்பது அதில் ஒரு படிதான், ஆனால் அது மட்டுமே அநேகமாய் போதுமானதாய் இருக்காது” என்று வலியுறுத்துகிறது.
ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றத்தை வரவேற்றிருக்கும் டைம்ஸ், ஆயினும் ”அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஜனநாயகங்களில் தேர்தல்களில் தலையீடு செய்வது முதல் உக்ரேன் மற்றும் சிரியாவில் போர்களை முன்தள்ளுவது வரையிலும் பலதரப்பட்டதாய் இருக்கும் திரு.புட்டினின் சேட்டைகளை எதிர்த்து நின்று அவரை நெருக்கிப் பின்னால் தள்ளுவதற்கு திரு.ட்ரம்ப் இன்னும் அதிகமாக முன்னால் போக வேண்டியிருக்கும்” என்று அறிவிக்கிறது.
டைம்ஸ் தலையங்கத்துடன் சேர்ந்து அதன் செய்திப் பக்கங்களில் ஒன்றில் “இது பனிப் போர் அல்ல, மாறாக ரஷ்யாவுடனான உறவுகள் கொந்தளிப்பானவையாக மாறுகின்றன” என்ற தலைப்புடனான ஒரு திகிலூட்டும் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ஈராக்கின் “பேரழிவு ஆயுதங்கள்” குறித்த பொய்களை ஊக்குவிக்கும் விதமாக இப்பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதிய ஜூடித் மில்லரால் இழிபுகழ் பெறச் செய்யப்பட்ட “புலனாய்வு பத்திரிகைத்துறை” பள்ளியின் பாகமாய் இருக்கின்ற டைம்ஸ் இன் மாஸ்கோ செய்தியாளர் ஆண்ட்ரூ ஹிக்கின்ஸ் இக்கட்டுரையை எழுதியிருந்தார்.
ஹிக்கின்ஸ், 2014 இல், சிஐஏ ஆதரவுடனான கவிழ்ப்பை ஒட்டி கிழக்கு உக்ரேனை புரட்டிப் போட்ட கியேவ்-எதிர்ப்பு கலகம் முழுக்க முழுக்க ரஷ்ய உளவாளிகள் மற்றும் சிறப்புப் படைகள் துருப்புகளின் வேலையாக இருந்தது என்பதற்கான திட்டவட்டமான புகைப்பட ஆதாரத்தைக் காட்டுகின்ற நோக்கத்துடன் வெளியாகியிருந்த டைம்ஸ் முதற்பக்க கட்டுரையின் பிரதான எழுத்தாசிரியர் ஆவார். அமெரிக்க வெளியுறவுத் துறையால் டைம்ஸ்க்கு வழங்கப்பட்டிருந்த இந்த “புகைப்பட ஆதாரம்” அதற்குப் பின்னர் முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாக நிரூபணமானது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த ஹிக்கின்ஸ் அதன்பின், அமெரிக்க உளவு நடவடிக்கையாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்கு பெயர்பெற்ற வேர்மாண்ட்டில் உள்ள மிடில்பரி கல்லூரியில் ரஷ்ய மற்றும் அரபி மொழியை படித்தார். டைம்ஸுக்கு வேலை செய்வதற்கு முன்பாக, அவர் வாஷிங்டன் போஸ்டின் சீன செய்தியாளராக இருந்தார், அவரது பயணப்பெட்டியில் இரகசிய அரசாங்க ஆவணங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றத்தை திரும்பப் பெறச் செய்யும் முயற்சியில், போஸ்ட், தனது சார்பாக பெய்ஜிங்கை தாஜா செய்வதற்கு ஹென்றி கிஸ்ஸிங்கரை பணியமர்த்தியது.
வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான இன்றைய பதட்டங்கள் பனிப் போர் சமயத்தில் நிலவியவற்றை ஒத்தவையல்ல, மாறாக “1917 போல்ஷிவிக் புரட்சியைப் பின்தொடர்ந்து வந்த ஒரு முடக்கும் அவநம்பிக்கைக் காலகட்டத்தை” நினைவுக்குக் கொண்டுவரக் கூடியவை என்பதே ஸ்கிரிபால் விவகாரத்தில் ஹிக்கின்ஸ் எழுதியிருக்கும் கட்டுரையின் ஆய்வுமுடிவாகும்.
ரஷ்யாவின் ஆளும் முதலாளித்துவ நிதிப்பிரபுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற புட்டினின் அரசாங்கமானது உலகளாவிய புரட்சியை எல்லாம் ஊக்குவிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கின்ற அதேநேரத்தில், அது “ஸ்தாபகமான நிர்ணயங்களை உதாசீனப்படுத்துவதன் மூலமாக வெளிநாட்டு அரசாங்கங்களில் தவறாகக் கால்வைப்பதில் சிறந்து விளங்குகிறது” என்று ஹிக்கின்ஸ் எழுதுகிறார்.
உண்மை என்னவென்றால், ரஷ்யா, அதன் அளவினாலும் யூரோஆசிய நிலப்பரப்பின் மத்தியில் அமைந்திருக்கிற அதன் புவியியல் இடஅமைவுநிலையின் காரணத்தாலும், அத்துடன் அது உலகின் இரண்டாவது பெரும் அணு ஆயுத வல்லமையைப் பெற்றிருப்பதாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க நோக்கங்களுக்கான ஒரு முட்டுக்கட்டையாக அது இருக்கிறது. “ஸ்தாபகமான நிர்ணயங்களுக்கு” அதாவது அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு அது கீழ்ப்படிய மறுப்பது சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
”1920களில் மாஸ்கோவின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை” எப்படிக் கையாளுவது என்பது மேற்கத்திய சக்திகளுக்குத் தெரியாதிருந்தது என்று எழுதுகின்ற ஹிக்கின்ஸ் “அன்றைய நாளின் முன்னிலை சக்தியாகவும் சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்த முதல் மேற்கத்திய நாடாகவும் இருந்த பிரிட்டனைப் பொறுத்தவரை, அந்த நிகழ்ச்சிப்போக்கானது இன்றைய காலத்தின் எதிரொலிகளைக் கொண்டிருந்தது” என்று சேர்த்துக் கொள்கிறார்.
“புதிய போல்ஷிவிக் அரசாங்கத்தை 1924 இல்” அங்கீகரித்த பிரிட்டன், அதன்பின் “குழப்பத்தை விதைப்பதில் சோவியத் உளவாளிகள் வட்டம் ஒன்று ஈடுபட்டிருந்ததை போலிஸ் கண்டறிந்ததன் பின்னர்” சோவியத் தூதர்களை வெளியேற்றியது என்று அவர் எழுதுகிறார்.
வரலாறு குறித்த ஹிக்கின்ஸின் மிகவும் தெரிந்தெடுத்த பதிப்பில் இழிபுகழ் பெற்ற “சினோவியேவ் கடிதம்” விடுபட்டிருக்கிறது, M16 என்று அறியப்படுகின்ற பிரிட்டனின் இரகசிய உளவு சேவையால் மோசடியாக தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் அதன்பின் இராணுவத்திற்கும், பழமைவாதக் கட்சிக்கும் வலது-சாரி ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டது.
கம்யூனிச அகிலத்தின் செயற்குழுவின் தலைவராக அப்போதிருந்த கிரிகோரி சினோவியேவ் எழுதியதாக சொல்லப்பட்டு கையளிக்கப்பட்ட அந்த மோசடிக் கடிதம் தேர்தலுக்கு நான்கு நாள் முன்பாக டெய்லி மெயிலிடம் அளிக்கப்பட்டு, அந்தப் பத்திரிகை இவ்வாறாக பதாகைத் தலைப்பை அச்சிட்டது: “சோசலிஸ்ட் தலைவர்களது உள்நாட்டுப் போர் சதித்திட்டம்; மாஸ்கோ நமது சிவப்புகளுக்கு உத்தரவிடுகிறது; மாபெரும் சதி வெளிப்பட்டது.”
1924 இல் முதன்முறையாக அதிகாரத்துக்கு வந்து சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்திருந்த தொழிற் கட்சி, மிகப்பெருவாரி எண்ணிக்கையில் டோரிக்களிடம் தோல்வியடைவதற்கு இந்த மோசடி ஆவணம் பங்களிப்பு செய்தது.
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் பிரிட்டிஷ் அரசியல் ஊழல்களில் ஒன்றான சினோவியேவ் கடிதம், ஒரு தேர்தலைத் தலைகீழாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஹிக்கின்ஸ், டைம்ஸ் மற்றும் சிஐஏ இல் இருக்கும் அவர்களது “ஆதாரங்கள்” ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஸ்கிரிபால் நஞ்சூட்டலைச் சுற்றிய இட்டுக்கட்டல்கள் ஒரு உலகப் போருக்கு தயாரிப்பு செய்வதற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.