Print Version|Feedback
Twenty years of the World Socialist Web Site: 1998–2018
உலக சோசலிச வலைத் தளத்தின் இருபது ஆண்டுகள்: 1998-2018
David North and Joseph Kishore
14 February 2018
இன்று உலக சோசலிச வலைத் தள (WSWS) வெளியீடு ஆரம்பிக்கப்பட்ட 20வது ஆண்டுதினமாகும். 1998 பிப்ரவரி 14 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு WSWS ஐ ஆரம்பித்து வாரத்திற்கு ஐந்து கட்டுரைகளைப் பதிவிட்டது. 1999 ஏப்ரலில், வாரத்திற்கு ஆறு கட்டுரைகளாக அதன் பதிவு அட்டவணையை WSWS விரிவுபடுத்தியது. இருபதாண்டு காலத்தில், உலக சோசலிச வலைத் தளமானது ஒருமுறையும் கூட அட்டவணைப்படியான வெளியீட்டை தவறவிட்டதில்லை.
இந்த ஆண்டுதினம், சர்வதேச சோசலிச மற்றும் தொழிலாளர்’ இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதாகும். WSWS மட்டுமே ஒரேயொரு சோசலிச மற்றும் மார்க்சிச சர்வதேச தினசரி வெளியீடாக இருந்தது மற்றும் இருந்து வருகிறது. WSWS இருபத்திநான்கு மணி நேர கால அட்டவணையில் இயங்குகிறது, ஒவ்வொரு நாளின் பதிவுகளும் நான்கு கண்டங்களில் இயங்குகின்ற ஆசிரியர் குழுக்களது செறிந்த ஒத்துழைப்பின் விளைபொருளாக இருக்கின்றன.
WSWS, சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஆவணபூர்வமான பிரசுரமாகும். கடந்த 20 ஆண்டு காலத்தில், உலக சோசலிச வலைத் தளத்தால் பிரசுரிக்கப்படாத, ஆய்வு செய்யப்படாத மற்றும் கருத்துரைக்கப்படாத ஒரேயொரு முக்கிய உலக நிகழ்வையும் கூட காண்பது அரிதாகும். ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், சிங்களம், தமிழ், நோர்வேஜியன், மண்டாரின், துர்கிஷ், கிரேக், அரபிக், ரஷ்ய மொழி மற்றும் போர்ச்சுகீசிய மொழி உள்ளிட்ட 22 வெவ்வேறு மொழிகளில் சுமார் 66,000 கட்டுரைகளை WSWS பதிவிட்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவிலான நிகழ்வுகள் தொடர்பாக 17,500க்கும் அதிகமான கட்டுரைகள் பதிவிடப்பட்டிருப்பது தவிர, இலத்தீன் அமெரிக்கா தொடர்பாக 1,300 கட்டுரைகளையும், ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டம் தொடர்பாக 6,000 கட்டுரைகளையும், ஆஸ்திரேலியா தொடர்பாக 5,300 கட்டுரைகளையும், ஐரோப்பா தொடர்பாக 13,000 கட்டுரைகளையும் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா தொடர்பாக 6,300 கட்டுரைகளையும் WSWS பதிவிட்டிருக்கிறது. உலக முதலாளித்துவ பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்கின்ற 1,000க்கும் அதிகமான கட்டுரைகளையும் WSWS பதிவிட்டிருக்கிறது.
உலகில் வேறெந்த வலைத் தளமும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை இத்தனை விரிவாகவும் இத்தனை இன்றியமையாததாகவும் செய்தியாக்கியிருக்கவில்லை. உலகின் அத்தனை பகுதிகளிலும் வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக 11,000க்கும் அதிகமான கட்டுரைகள் பதிவிடப்பட்டிருக்கின்றன. சொல்லப் போனால், வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகிய இரண்டு அம்சங்களையும் குறித்த கட்டுரைகள் எத்தனை என்று பிரித்துப் பார்த்து எண்ணுவதற்கு உண்மையாகவே இயலாத வண்ணம் WSWS இன் கட்டுரைகளில் அவை இரண்டறக் கலந்திருக்கின்றன. அவை ஆயிரக்கணக்கில் செல்லும் என்று குறிப்பிடுவதே போதுமானதாகும்.
தொழிலாள வர்க்கத்துக்கு அதன் அன்றாடப் போராட்டங்கள் குறித்த செய்திகள் முக்கியமானவையாக இருக்கின்ற போதிலும், அந்தச் செய்திகளுக்கும் மேலதிகமானவை அவசியமானதாக இருக்கின்றது என்பதை உலக சோசலிச வலைத் தளம் உணர்ந்திருக்கிறது. WSWS, நடப்பு போராட்டங்களின் ஒரு பதிவை ஒவ்வொரு நாளும் அது உருவாக்குகின்ற அதேநேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் எதிர்கால கடமைகளுக்கு அதனைத் தயார் செய்வதற்கான தனது பொறுப்பு குறித்தும் நனவுடன் இருக்கிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ஒரு சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதே WSWS இன் மைய நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகிய பிரச்சினைகளில் ஒரு தீவிர கவனக்குவிப்பு இதற்கு அவசியமாயிருந்திருக்கிறது. WSWS “வரலாற்று அறிவு, கலாச்சார விமர்சனம், விஞ்ஞான அறிவொளி மற்றும் புரட்சிகர மூலோபாயம் ஆகியவவை பற்றிய ஒரு களஞ்சியத்திற்காக முனையும். ஒரு நவீனகால சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்புக்கு தவிர்க்கவியலாத அத்தியாவசியமாக இருக்கின்ற அரசியல் மற்றும் கலாச்சார கலந்துரையாடலின் மட்டத்தை உயர்த்துவதே அதன் இலட்சியமாகும்” என்று புதிய வெளியீட்டை அறிவிக்கும் அதன் ஆரம்ப 1998 அறிக்கையில் WSWS எழுதியது.
2,000க்கும் அதிகமான திரைப்பட, நாடக மற்றும் இசை விமர்சனங்கள் வெளியீடு, மற்றும் பல்தரப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பிரபஞ்சவியல் மற்றும் இயற்பியல் தொடங்கி பரிணாம உயிரியல் மற்றும் தொல்லியல் வரையும் பலதரப்பான விஞ்ஞானத் தலைப்புகளிலான இன்னுமொரு 1,500 கட்டுரைகள் வெளியீடு ஆகியவற்றின் மூலம் இந்த உறுதிப்பாடு நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.
WSWS இல் பதிவிடப்படுகின்ற விடயங்களின் எண்ணிக்கையளவு அதிகரிப்பு, வலைத் தளத்தின் தரத்தை சிறிதும் நகர்த்தி விட்டதில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் ஸ்தாபகத்திற்கு பிந்தைய காலத்தில், முதலாளித்துவ உலகமானது, வரிசையாக பொருளாதார அதிர்ச்சிகள், முடிவில்லாத பயங்கரவாதத்தின் மீதான போரிலான இராணுவத் தலையீடுகள், உலகின் ஒவ்வொரு பகுதியில் அதிகரித்துச் செல்லும் அரசியல் செயலற்றதன்மை, மற்றும் சமூக உடைவின் அன்றாட வெளிப்பாடுகள் ஆகியவற்றால் உலுக்கப்பட்டு வந்திருக்கிறது. சமகால அபிவிருத்திகளின் தீவிரமான கொந்தளிப்புகளின் மத்தியிலும், WSWS காலத்திற்குத் தாக்குப்பிடித்து நிற்கின்ற பகுப்பாய்வுகளையும் வருணனைகளையும், ஒவ்வொருநாளும் வெளியிட கூடியதாக இருந்திருக்கிறது.
WSWS இன் வரலாற்று அடித்தளங்கள்
உலக சோசலிச வலைத் தளத்தின் தனித்துவமான தன்மையானது, மார்க்சிசத் தத்துவத்தையும் மற்றும், ஒட்டுமொத்த இருபதாம் நூற்றாண்டு முழுமையிலுமான சர்வதேச வர்க்கப் போராட்டத்திலிருந்து பெறப்பட்ட அத்தியாவசியமான மூலோபாய அனுபவங்களின் உட்கிரகிப்பு மற்றும் தொடர்ச்சியான மறுஆய்வையும், நனவுடன் தனக்கு அடித்தளமாகக் கொண்ட அதன் முன்னோக்கில் இருந்து தோன்றுவதாகும். முதலாளித்துவ ஊடகங்களில் நிலவுகின்ற நடைமுறைவாத பதிவுவாதத்திற்கு —குட்டி-முதலாளித்துவ இடதுகள் மற்றும் போலி-இடதுகளது வலைத் தளங்களிலான பதிவுகளில் இது இன்னும் கூடுதல் கொச்சையான வடிவத்தைப் பெற்றிருக்கிறது— நேரெதிரான விதத்தில் WSWS, அன்றாட நிகழ்வுகளை அவற்றுக்குரிய வரலாற்று உள்ளடக்கத்தில் பொருத்திக் காட்டுகிறது.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய வெறும் ஆறே ஆண்டுகளின் பின்னர் உலக சோசலிச வலைத் தளம் தனது வெளியீட்டைத் தொடக்கியிருந்தது. அந்நிகழ்வு அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு அலையை இயக்கி விட்டிருந்தது. ஆளும் வர்க்கம் “வரலாற்றின் முடிவு” ஐ கொண்டாடியதென்றால், விரக்திகொண்ட நடுத்தர-வர்க்க தீவிர இயக்கத்தினரும் லேசான இடது சாய்வு கொண்ட புத்திஜீவிகளும் “சோசலிசத்தின் முடிவு” ஐ பிரகடனம் செய்தனர். பல தசாப்தங்களாக அவர்கள் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச ஆட்சிகளது, மற்றும் சீனாவில் மாவோயிச ஆட்சியினது மோசடியான “உண்மையாக நிலவுகின்ற சோசலிச”த்திற்குத் (“real existing socialism”) தக்கவாறு தமது அரசியலைத் தகவமைத்து இருந்து வந்திருந்தனர். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கும் சீனாவில் முதலாளித்துவத்தின் மீட்சிக்கும் பின்னர், குட்டி-முதலாளித்துவ இடதின் பரந்த பகுதியினர் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான புரட்சிகர எதிர்ப்பின் நடிப்பு அத்தனையையும் கைவிட்டு விட்டு, தன்னைச் சுற்றியே சிந்திக்கின்ற இனவாத, நிறவாத, பாலினவாத மற்றும் பால் அரசியலின் பிற்போக்கான நச்சு சுழலுக்குள் தங்களை மூழ்கடித்துக் கொண்டனர்.
அக்டோபர் புரட்சியின் மீதான ஸ்ராலினிசக் காட்டிக்கொடுப்புக்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் தத்துவார்த்தப் பாரம்பரியத்தில் வேரூன்றியதான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சோவியத் ஒன்றியத்தின் பொறிவினால் அதிர்ச்சியடையவும் இல்லை, நோக்குநிலை பிறழவும் இல்லை. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் மற்றும் ”தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற அதன் பிற்போக்குத்தனமான மற்றும் தேசியவாத முன்னோக்கின் காட்டிக்கொடுப்பின் இறுதி நடவடிக்கையாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் உடைவு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முக்கியமான தோல்வியாக இருந்த அதேநேரத்தில், ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம், நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கின்ற அவரது முடிவு, மற்றும் ஸ்ராலினிச ஆட்சிகள் மற்றும் கட்சிகளுடன் நல்லிணக்கம் காண்பதன் மற்றும் அவற்றுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் அத்தனை வடிவங்களுக்கும் அனைத்துலகக் குழு காட்டிய எதிர்ப்பு ஆகியவற்றின் சரியான தன்மையை இது ஊர்ஜிதம் செய்தது.
ஆறு தசாப்தங்களாக, ஸ்ராலினிச அதிகாரத்துவமானது, பல உடந்தையாளர்களது உதவியுடன், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களைக் குழப்புவதற்கும், நோக்குநிலை பிறழச் செய்வதற்கும் மற்றும் தோற்கடிப்பதற்கும் தனது பரந்த ஆதாரவளங்களைப் பயன்படுத்தியது. ஆயினும் ஸ்ராலினிசத்தின் பிரளயகரமான உருக்குலைவானது, தொழிலாள வர்க்கத்தில், ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது புரட்சிகர மார்கிசத்தின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும், நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் முன்கண்டிராத வாய்ப்புகளை உருவாக்கியது.
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது தேசிய அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் கட்சிகள் அத்தனையினதும் வரலாற்றுத் திவால்நிலையின் மிகத் தீவிர வெளிப்பாடாய் இருந்தது. உலகப் பொருளாதாரத்தின் கட்டமைப்பில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் அத்தனை தேசிய சீர்திருத்தவாத வேலைத்திட்டங்களையும் பலவீனமாக்கியது. 1988 வாக்கிலேயே ICFI, முதலாளித்துவ உற்பத்தி உலகமயமாதல், நாடுகடந்த நிறுவனங்களின் தோற்றம், மற்றும் இந்த அபிவிருத்திகளுடன் தொடர்புடையதாய் இருந்த தொலைத்தொடர்பிலான புரட்சிகரமான மாற்றங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தின் மீது கவனம் ஈர்த்தது.
இந்த உலகளாவிய உருமாற்றங்களின் முக்கியத்துவம் குறித்த அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு, முன்பு கற்பனை செய்தும் பார்த்திர முடியாத மட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒன்றிணைவும் ஒருங்கிணைப்பையும் சாத்தியமாக்கக் கூடிய இணையத்தின் சாத்தியவளத்திற்கு மிக உயர்ந்த அளவில் அது தன்னை பக்குவப்படுத்தியிருந்தது என்பதன் அர்த்தமாக இருந்தது. அச்சுச் செய்தித்தாள்களில் இருந்து இணைய அடிப்படையிலான ஒரு வலைத் தளத்திற்கு பிரசுரத்தை மாற்றுவது என்ற ஆலோசனை முதன்முதலில் 1997 பிப்ரவரியில் முன்வைக்கப்பட்ட அந்தசமயத்தில், உலகளவில் வெறும் 40 மில்லியன் மக்கள் மட்டுமே இணைய அணுகலைக் கொண்டிருந்தனர். முக்கிய அமெரிக்க பெருநிறுவனங்களிலும் வெறும் 55 சதவீதம் மட்டுமே ஒரு வலைத் தளத்தையும் கூட நடத்தி வந்தன.
ஒரு இணைய-அடிப்படையிலான வெளியீட்டுக்கு நகர்வது மற்றும் அச்சுச் செய்தித்தாள்களை வெளியிடுவதை நிறுத்துவது என்ற முடிவானது மாபெரும் அரசியல் தீர்க்கதரிசனத்தை காட்டியது. பெரிய முதலாளித்துவ வெளியீடுகளும் கூட அப்போது முன்கணித்திராத ஒரு சாத்தியவளத்தை அது உணர்ந்து கொண்டது. ஆயினும், அதற்குக் காரணம் அதன்பின்னிருந்த தொழில்நுட்பம் குறித்து ICFI மேம்பட்ட புரிதல் கொண்டிருந்தது என்பதல்ல. மாறாக, புதிய தொழில்நுட்பத்தில், தான் எதிர்நோக்கியிருந்த ஒன்றை, மிக சக்திவாய்ந்த புரட்சிகர சிந்தனைகளை உலகெங்கிலும் இருக்கும் பாரிய எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்குக் கொண்டுசெல்வதற்கான ஒரு வழிவகையை, அது கண்டுவிட்டிருந்தது என்பதே ஆகும்.
1998 பிப்ரவரியில் வலைத் தளத்திற்கான அறிமுகத்தில், அதன் சர்வதேச ஆசிரியர் குழு தெரிவித்தது:
சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டுவதற்கும் அதனை ஐக்கியப்படுத்துவதற்குமான ஒரு முன்கண்டிராத கருவியாக WSWS ஆகும் என்பதில் நாங்கள் முழுநம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாடுகடந்த நிறுவனங்கள் எவ்வாறு தொழிலாளர்களுக்கு எதிரான தமது போரை தேசிய எல்லைகளைக் கடந்து ஒழுங்கமைக்கின்றனவோ, அதைப் போலவே, வெவ்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களும் மூலதனத்திற்கு எதிரான தமது போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு அது உதவி செய்யும். அனைத்து தேசங்களது தொழிலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கு இது வழிவகையளித்து, அவர்கள் தமது அனுபவங்களை ஒப்பிட்டு ஒரு பொதுவான மூலோபாயத்தை அபிவிருத்திசெய்யவும் அனுமதிக்கும்.
இணையம் விரிந்து செல்கையில் உலக சோசலிச வலைத் தளத்தின் உலகளாவிய வாசகர் எண்ணிக்கையும் வளர்ந்து செல்லும் என்று ICFI எதிர்பார்க்கிறது. ஒரு துரிதமான மற்றும் உலகளாவிய தகவல்தொடர்பு வடிவமாக இணையமானது அசாதாரணமான ஜனநாயக மற்றும் புரட்சிகர தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. பாரிய எண்ணிக்கையிலான வாசகர்களுக்கு நூலகங்கள் மற்றும் காப்பகங்கள் முதல் அருங்காட்சியகங்கள் வரை உலகின் புத்திஜீவித வளங்களுக்கான அணுகல் பெறுவதற்கு இது வழிவகையளிக்கும்.
உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வும் எதிர்பார்ப்புகளும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. இணைய பயன்பாடு 1998 டிசம்பரில் சுமார் 147 மில்லியனாக (உலக மக்கள்தொகையில் 3.6 சதவீதம்) இருந்ததில் இருந்து 2017 ஜூனுக்குள்ளாக 3.8 பில்லியனாக (51.7 சதவீதம்) வளர்ந்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களின் பரவலான பயன்பாடு பொருளாதாரரீதியாக அதிகமாகப் பின்தங்கிய நாடுகள் உள்ளிட தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கும் இணையத்திற்கான அணுகலை விரிவுபடுத்தியிருக்கிறது. கையடக்கக் கருவிகள் மற்றும் சமூக ஊடகத் தளங்களின் விரிந்த பரவலானது வேலையில் இருக்கும் தொழிலாளர்களுக்கும் தகவல் அணுகலை அனுமதித்திருக்கிறது, பெரிய தொழிற்சாலைகளை தனிமைப்படுத்துவதன் மூலமும் அவற்றை நகர மையங்களுக்கு வெளியில் மாற்றுவதன் மூலமும் அரசியல் விடயங்களில் இருந்து தொழிலாளர்களைத் துண்டிப்பதற்கு, குறிப்பாக அமெரிக்காவில், ஆளும் வர்க்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இது கடுமையாகப் பலவீனப்படுத்தியது.
WSWSம் நான்காம் அகிலமும்
டிஜிட்டல் தகவல் மற்றும் தொலைதொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் விளைபொருளாக இருக்கின்ற இணையத்தின் மூலமாக உலக சோசலிச வலைத் தளம் பிரசுரிக்கப்படுகிறது, சுற்றில் விடப்படுகிறது. ஆயினும் இந்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் புதுமையுடன் பயன்படுத்துகின்ற அதேவேளையில், அனைத்துலகக் குழுவின் WSWS உருவாக்கமும் பயன்பாடும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதில் “கட்சிப் பிரசுர”த்தின் மையமான பாத்திரம் குறித்த அடிப்படை தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான கருத்தாக்கங்களில் வேரூன்றியிருக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், ரஷ்யாவின் பரந்த நிலப்பரப்பு முழுவதிலும் ஒரு சக்திவாய்ந்த சோசலிச அமைப்பின் அடித்தளங்களை அமைப்பதற்கு போராடிக் கொண்டிருந்த லெனின் எழுதினார்:
ஒரு அனைத்து-ரஷ்ய அரசியல் செய்தித்தாளை ஸ்தாபிப்பதே, நமது நடவடிக்கைகளின் தொடக்கப் புள்ளியாக, விரும்பிய அமைப்பை உருவாக்குவதை நோக்கிய முதல் படியாக, அல்லது, இப்படிச் சொல்லலாம், எந்த பிரதான திரியை பின்தொடர்ந்து சென்றால் அந்த அமைப்பை சீராக அபிவிருத்தி செய்வதற்கும், ஆழப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் நமக்கு வழிவகை கிட்டுமோ அத்திரியாக இருந்தாக வேண்டும் என்பதே எமது கருத்தாகும். நமக்கு அநேக தேவையாக இருப்பது ஒரு செய்தித்தாளாகும்; அது இல்லாமல் பொதுவாக சமூக ஜனநாயகத்தின் தலைமையான மற்றும் நிரந்தரமான கடமையாக இருப்பதும், குறிப்பாக இத்தருணத்தின், மக்களின் மிகப் பரந்த அடுக்கின் மத்தியில் அரசியல் மற்றும் சோசலிசத்தின் பிரச்சினைகளிலான ஆர்வம் தட்டியெழுப்பப்பட்டிருக்கும் நேரத்தின், அதிஅவசர கடமையாக இருப்பதுமான, கொள்கையில் சீருடைய, முறையான, முழுமூச்சான பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நம்மால் நடத்த முடியாது... ஒரு அரசியல் பத்திரிகை இல்லாமல், இன்றைய ஐரோப்பாவில் ஒரு அரசியல் இயக்கம் அந்தப் பெயருக்குத் தகுதியுடையதாய் இருப்பது நினைத்துப் பார்க்கவும் இயலாததாகும். அத்தகைய ஒரு செய்தித்தாள் இல்லாமல், அரசியல் அதிருப்தி மற்றும் எதிர்ப்பின் அத்தனை அம்சங்களையும் குவிப்பது, அதன்மூலம் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்துக்கு உயிரூட்டுவது என்ற நமது கடமையை நிறைவேற்றுவது நமக்கு சாத்தியமில்லாமல் போகலாம். [”எங்கே தொடங்குவது?”, லெனின் சேகரப் படைப்புகள், தொகுதி 5 (மாஸ்கோ 1961), பக் 20-21]
லெனினின் செய்தித்தாள் தீப்பொறி (Iskra), ஒரு “அனைத்து-ரஷ்ய” அச்சு செய்தித்தாளாய் இருந்தது. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், உலக சோசலிச வலைத் தளம் இணையத்தில் பதிவிடப்படுகின்ற ஒரு உலகளாவிய வெளியீடாக இருந்தது. அன்றாட வாசகர்களது எண்ணிக்கையை பல பத்தாயிரங்களில் கொண்டிருக்கின்ற இது, உலகெங்கிலும் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதில் முன்னெப்போதினும் கணிசமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய காலத்தில் பக்குவப்பட்டு வந்திருக்கக் கூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு, மார்க்சிச தத்துவம் மற்றும் ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு அரசியல் கல்வியூட்டப்படுவதில் WSWS ஒரு மையமான மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. முதலாளித்துவ ஊடகங்களின் பேரினவாதப் பிரச்சாரங்கள் மற்றும் பொய்களது மத்தியில், வாசகர்கள் அவர்களது அரசியல் நோக்குநிலைக்கு WSWS ஐயே சார்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் WSWS இல் காண்பது நாளின் நிகழ்வுகளின் ஒரு மார்க்சிசப் பகுப்பாய்வை மட்டுமல்ல, புரட்சிகர மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் இருந்து எழுகின்ற இன்றியமையாத தத்துவார்த்த, அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகள் குறித்த விளக்கங்களையும் மற்றும் பதில்களையும் கூடக் காண்கின்றனர். ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் நாசகரமான பாரம்பரியங்களை வெற்றிகாண்பதிலும், குட்டி-முதலாளித்துவ, போலி-இடது அடையாள அரசியலால் சோசலிசத் தத்துவமும் அரசியலும் சமகாலத்தில் மதிப்பிழக்கசெய்வதையும் பொய்மைப்படுத்தப்படுவதையும் அம்பலப்படுத்துவதிலும் WSWS ஒரு மிக அத்தியாவசியமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசப் போராட்டம் மறுமலர்ச்சி காண்பதற்கான உறுதியான அரசியல் அடித்தளங்களை இருபது ஆண்டுகளின் பாதையில் அது அமைத்திருக்கிறது.
அரசியல் சூழல் மென்மேலும் கூர்மையடைந்து செல்கின்றதும் வர்க்கப் போராட்டம் மென்மேலும் தீவிரப்படுகின்றதுமான நிலையில், WSWS வாசகர்களில் முன்னெப்போதினும் அதிகமான ஒரு பகுதியினர் அரசியல்ரீதியாக செயலூக்கம் பெற்றவர்களாய் ஆகி வருகின்றனர், முதலாளித்துவத்தின் சமத்துவமின்மைக்கும் ஏகாதிபத்தியப் போருக்குமான சோசலிச மாற்றுக்காகப் போராடுவதற்கும், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியில் இணைந்து அதனைக் கட்டியெழுப்புவதற்குமான முடிவை மேற்கொண்டு வருகின்றனர்.
இணையத் தணிக்கையும் WSWS கறுப்புப் பட்டியலிடப்படுதலும்
அமெரிக்கா முன்னிலை வகிக்க, ஏகாதிபத்திய சக்திகள் அனைத்துமே உலகப் போருக்காகத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன. சமூக சமத்துவமின்மையும் சொத்துக்கள் ஓரிடத்தில் குவிதலும் நீடிக்கமுடியாத மட்டங்களை எட்டியிருக்கின்றன. ஆழமாய் மதிப்பிழந்தும் உள்முக அரசியல் மோதல்கள் சூழ்ந்தும் இருக்கின்ற முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினர், எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து இடங்களிலும், தொழிலாள வர்க்கத்தில் சமூக எதிர்ப்பு வளர்ச்சி காண்பதைக் கண்டு ஆளும் வர்க்கம் மிரட்சியடைந்திருக்கிறது.
”போலிச் செய்தி”களை எதிர்த்துப் போராடுகின்றதான நடிப்பின் கீழ், இணையத்தை தணிக்கை செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் கீழமைந்திருப்பது இந்த அச்சமே ஆகும். இணையத்தின் புரட்சிகரத் தாக்கங்களைக் குறித்து ஆளும் வர்க்கம் விழித்துக் கொள்ளும் போது, அதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அல்லது அதனை மூடிவிட முயற்சிக்கும் என்பதை WSWS ஐ ஸ்தாபித்த சமயத்திலேயே ICFI எச்சரித்திருந்தது. அதுவே இப்போது நடந்து கொண்டிருப்பதாகும்.
அமெரிக்க அரசாங்கமானது, கூகுள், ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் பிற பெருநிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன், இணைய அணுகலின் மீது பாரிய கட்டுப்பாடுகளை அமலாக்கிக் கொண்டிருக்கிறது. 2017 இல், ட்ரம்ப் நிர்வாகமானது, இணைய வழி தகவல் பாய்வின் மீதான பிடியை சக்திவாய்ந்த தகவல் தொழில்நுட்ப ஏகபோக நிறுவனங்களுக்கு அளிக்கின்ற வகையில், வலையத் தளத்தின் நடுநிலையை ஒழிக்கும் தனது முடிவை அறிவித்தது. ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்களும் இதேபோன்ற ஒடுக்குமுறைக் கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
உலக சோசலிச வலைத் தளம் இந்தத் தாக்குதலின் ஒரு மைய இலக்காக இருந்து வந்திருக்கிறது. 2017 மார்ச்சில், ஜேர்மன் இராணுவவாதம் புத்துயிர் பெறுவதற்கு எதிரான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) பிரச்சாரத்திற்கு அளித்த பதிலிறுப்பில், நாட்டின் முக்கிய முதலாளித்துவ செய்தித்தாள்கள் WSWS மீதான கண்டனங்களை பிரசுரித்தன. The Frankfurter Allgemeine Zeitung என்ற ஜேர்மனியின் முன்னணி முதலாளித்துவ செய்தித்தாள், WSWS ஐ “தீவிர வீரியமுடையது” [Wirkungsmächtig] என வருணித்தது. 2017 ஏப்ரல் ஆரம்பத்தில், ஜேர்மன் அரசாங்க அதிகாரிகள் பேர்லினில் கூகுள் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்புகளில், WSWSக்கான அணுகலைக் கட்டுப்படுத்த அந்த நிறுவனத்துக்கு நெருக்குதலளித்தனர்.
கூகுள், 2017 ஏப்ரலின் பின்பகுதியில், WSWS மற்றும் பிற இடது-சாரி, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களுக்கான அணுகலை வரம்புபடுத்துகின்ற அல்லது தடுக்கின்ற புதிய மென்பொருள் வழிமுறைகள் அமலாக்கப்படுவதை அறிவித்தது. இணையப் பயனர்களுக்கு புரட்சிகர சோசலிச மற்றும் எதிர்ப்புஅரசியல் விவரங்கள் மற்றும் வருணனைகளின் அணுகலை மறுக்கின்ற இதேபோன்ற நடவடிக்கைகள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களாலும் அமலாக்கப்பட்டிருக்கின்றன.
இணையத்தை தணிக்கை செய்வதற்கு நடக்கின்ற இந்த சதியை அம்பலப்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்ற உலக சோசலிச வலைத் தளம், கருத்து சுதந்திரத்தின் மீதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதுமான இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களின் ஒரு சர்வதேசக் கூட்டணி உருவாக்கப்படுவதற்கு அழைப்புவிடுத்திருக்கிறது.
ஆளும் உயரடுக்கினரின் சர்வாதிகார நடவடிக்கைகளும் மற்றும் அவர்களது தணிக்கை நடவடிக்கைகளும் தோற்கடிக்கப்பட்டாக வேண்டும். இதற்கு, பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த சமூக சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக அணிதிரட்டப்படுவது அவசியமாக இருக்கிறது. கருத்து சுதந்திரத்தின் மற்றும் அனைத்து ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது போர், சமூக சமத்துவமின்மை மற்றும் எதேச்சாதிகாரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாகும். முதலாளித்துவ அமைப்புமுறை ஒழிக்கப்பட்டு உலகளாவிய விதத்தில் ஒருங்கிணைக்கப்படுகிறதும் ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்படுகின்றதுமான ஒரு சோசலிச சமூகத்தைக் கொண்டு பிரதியிடப்படுவது இதற்கு அவசியமாயுள்ளது.
உலக சோசலிச வலைத் தளமும் எதிர்காலமும்
20 ஆண்டு கால வெளியீட்டை தாண்டியிருக்கும் WSWS, உலகெங்கிலும் விரிந்து செல்லும் சமூகப் போராட்டங்களது சூறாவளிச் சுழலுக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது எழுத்தாளர்கள் வெறும் அவதானிப்பாளர்கள் மட்டுமல்ல, அபிவிருத்தி காண்கின்ற வர்க்க போராட்டங்களில் பங்கேற்பாளர்கள் ஆவர். தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற WSWS வாசகர்கள் விடயத்திலும் இதனைக் கூற இயலும். WSWS ஆரம்பிக்கப்பட்ட போது, கைக்குழந்தையாக இருந்திருக்கக் கூடிய அல்லது இன்னும் பிறந்தும் கூட இருந்திராத இளைஞர்கள் இப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும், அதன் உலகளாவிய இளைஞர் இயக்கமான IYSSEயிலும் (சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு) இணைந்து கொண்டிருக்கின்றனர், செயலூக்கம் பெற்று வருகின்றனர். மார்க்சிசப் பகுப்பாய்வு மற்றும் புரட்சிகர நடைமுறை இந்த இரண்டும் சங்கமிப்பதன் மற்றும் கலந்துரையாடுவதன் உதாரணவடிவமாக உலக சோசலிச வலைத் தளம் திகழ்கிறது.
சென்ற ஆண்டில், தொழிலாளர்கள் மத்தியிலான வாசிப்பு மிகத் துரிதமாகவும் கணிசமாகவும் வளர்ச்சி கண்டது குறிப்பாக எங்களுக்கு விருப்பம்தரும் செய்தியாக உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் மற்றும் Autoworkers Newsletter போன்ற அதன் துணைப் பிரசுரங்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான சாமானியத் தொழிலாளர்களால் அணுகப்படுகின்றன.
பெருகிச் செல்லும் வாசகர் எண்ணிக்கைக்கு தக்கதாக, நாங்கள் வலைத் தளத்தின் தொழில்நுட்ப அடித்தளங்களை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம், அத்துடன் காணொளி, நேரலை ஒளிபரப்பு மற்றும் பிற பல்துறை தகவல் தொழில்நுட்ப (multi-media) வடிவங்களையும் பயன்படுத்துகிறோம். உலக சோசலிச வலைத் தளம் இப்போது, வாசிப்பையும் செயல்திறனையும் மிகப்பெருமளவில் மேம்படுத்துவதாக இருக்கக் கூடிய ஒரு திறம்பட்ட மறுவடிவமைப்பின் இறுதிக்கட்டங்களில் உள்ளது.
உலக சோசலிச வலைத் தளத்திற்கான போராட்டத்தைக் கையிலெடுப்பதற்கு எமது வாசகர்கள் அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். WSWS கட்டுரைகளை பகிர்வதன் மூலமும், அவற்றை அச்சிட்டு உங்களது நண்பர்கள், வகுப்புத்தோழர்கள் மற்றும் சக-தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதன் மூலமும் இணையத் தணிக்கையை முறியடிப்பதில் உதவுங்கள். உங்களது வேலையிடம் மற்றும் பகுதியிலான அபிவிருத்திகள் குறித்த செய்திகளை அனுப்புவதன் மூலம் WSWS க்கான ஒரு செய்திசேகரிப்பாளராக ஆகுங்கள்.
கடந்த இருபது வருடங்கள் தத்துவார்த்த மற்றும் அரசியல் தெளிவுபடல் மற்றும் தயாரிப்பின் தசாப்தங்களாய் இருந்து வந்திருக்கின்றன. இப்போது நாம் தீவிரமான வர்க்க மோதல் மற்றும் சமூக எழுச்சியின் ஒரு காலகட்டத்தில் நுழைந்து கொண்டிருக்கிறோம். முதலாளித்துவச் சுரண்டலுக்கும் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும் எதிரான, அத்துடன் உலகை சோசலிச அடித்தளங்களின் மீது மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவான போராட்டத்தில் உலக தொழிலாள வர்க்கத்தின் குரலாக உலக சோசலிச வலைத் தளம் கட்டாயம் ஆக வேண்டும், ஆகும்.