Print Version|Feedback
French President Macron proposes 35 percent increase in military spending
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் இராணுவ செலவினங்களில் 35 சதவீத உயர்வை அறிவிக்கிறார்
By Alex Lantier
9 February 2018
நேற்று பிரெஞ்சு அமைச்சரவை 2019-2025 காலகட்டத்திற்கான இராணுவ திட்டமிடல் விதிமுறைகளை (la Loi de programmation militaire - LPM) பார்வையிட்டு, இராணுவ செலவுகளில் ஒரு பாரிய அதிகரிப்பைத் திணிக்கிறது. இக்காலக்கட்டத்திற்கான மொத்த செலவு 300 பில்லியன் யூரோவுக்கும் அதிகமாக இருக்கும், ஆண்டு வரவு-செலவு திட்டக்கணக்கில் 44 பில்லியன் யூரோவை எட்ட 35 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப்படும். இது, இராணுவச் செலவுகளை மொத்த உள்நாட்டு உள்பத்தியில் (GDP) 2 சதவீதமாக உயர்த்துவதென, கடந்த ஆண்டு பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது இமானுவல் மக்ரோன் அளித்த வாக்குறுதியைப் பூர்த்தி செய்யும்.
செலவுகளின் அதிகரிப்புக்கு அப்பாற்பட்டு, பிரான்ஸ், வரவு-செலவு பற்றாக்குறை மீதான ஐரோப்பிய ஒன்றிய வரம்புகளைக் கடுமையாக கடைபிடிக்க முயலும் என்பதை பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரென்ஸ் பார்லி (Florence Parly) சுட்டிக்காட்டினார். “பாதுகாப்பு துறைக்கான இந்த 2 சதவீதம் புரூசெல்ஸின் 3 சதவீதத்துடன் [அதாவது அரசு வரவு-செலவு திட்டக்கணக்கு பற்றாக்குறைகள் மீதான மட்டுப்படுத்தலுடன்] இணைந்து செல்லுமென்பது எனக்கு தெரியும்,” என்றவர் Le Monde க்கு தெரிவித்தார். அதாவது, இராணுவ செலவுகளின் அதிகரிப்பு தானாகவே சமூக செலவினங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை பாரியளவில் குறைப்பதுடன் தொடர்புபட்டிருக்கும்.
பேர்லினில் அமைக்க முயற்சிக்கப்பட்டு வரும் ஜேர்மன் முதலாளித்துவத்தின் பெரும் கூட்டணி அரசாங்கத்தினதும் மக்ரோன் அரசாங்கத்தினதும் வழிகாட்டுதலின் கீழ், ஐரோப்பா எங்கிலும் பின்பற்றப்பட உள்ள கொள்கைகளை இது அம்பலப்படுத்துகிறது. ஐரோப்பாவை இராணுவமயப்படுத்துவதற்கான தொகையை தொழிலாளர்களையே வழங்க செய்வதற்காக, வங்கிகளும் ஆயுதப் படைகளும் அவர்கள் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. புதிய போர்களுக்கு அக்கண்டத்தைத் தயார் செய்வதற்காக, அக்டோபர் 1917 ரஷ்ய புரட்சிக்குப் பின்னரும் மற்றும் சோவியத் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னரும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பாவில் பாசிச ஆட்சிகளின் பொறிவுக்குப் பின்னரும், போராட்டங்களினூடாக வென்றெடுக்கப்பட்ட சமூக உரிமைகளை அவை நசுக்க விரும்புகின்றன.
பிரான்சில், மக்ரோனின் தொழில் உத்தரவாணைகள் மூலமாக நடப்பில் உள்ள தொழில் விதிமுறைகளைச் செல்லாதாக்கவும், குறைந்தபட்ச கூலிகளுக்கும் குறைந்த சம்பளங்களைத் திணிக்கவும், வாகனத்துறையில் பாரிய வேலை வெட்டுக்கள், இரயில்வே துறையைத் தனியார்மயமாக்கல், இரயில்வே தொழிலாளர்களின் உத்தரவாதமான உரிமைகளை நீக்குதல் மற்றும் அரச சேவையில் உள்ள வாழ்நாள் கால வேலைவாய்ப்பை முடிவுக்குக் கொண்டு வரவும் அவை திட்டமிட்டு வருகின்றன. ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு மீதான ஆழ்ந்த வெட்டுக்கள் மக்ரோனின் பதவிக்காலத்தின் இறுதியில் அறிவிக்கப்பட உள்ளன. அதேநேரத்தில், மக்ரோன் சொத்து வரியை (Impôt de solidarité sur la fortune - ISF) நீக்கியதன் மூலமாக செல்வந்தர்களுக்கு பில்லியன்களை ஒப்படைத்துள்ளார் என்பதோடு, தலைமை தளபதிகளுக்கு நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை வழங்கி வருகிறார்.
2018-2022 இல் ஆண்டொன்றுக்கு 1.7 பில்லியன் யூரோவாக இருக்கும் பாதுகாப்புத்துறை செலவு அதிகரிப்பு விகிதம், 2023-2025 இல் ஆண்டொன்றுக்கு 3 பில்லியன் யூரோவாக அதிகரிக்கப்பட உள்ளது. மக்ரோனின் பதவிக்கால இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஓய்வூதியங்கள் மற்றும் மருத்துவக் கவனிப்பு மீதான ஆழ்ந்த வெட்டுக்கள், பெரிதும் பிரான்சின் இராணுவ எந்திரத்திற்கு நிதி வழங்குவதற்கு போய் சேரும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
அல் கொய்தாவை இல்லாதொழிப்பதில், இரண்டு அணுஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவுமே பிரதான இலக்குகள் என சமீபத்தில் வாஷிங்டன் அறிவித்த பின்னர், நேட்டோவில் உள்ள அரசுகள் ஆண்டுக்கு நூறு பில்லியன் கணக்கிலான யூரோக்களை ஆயுதப் படைகளுக்குள் பாய்ச்சி வருகின்றன. அமெரிக்க இராணுவ செலவுகளை 180 பில்லியன் யூரோவாக அதிகரிக்க அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சியினர் இப்போது உடன்பட்டுள்ளனர், அதேவேளையில் அதன் வருடாந்தர இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக 18.47 பில்லியன் யூரோவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
ஜேர்மனியில் பழமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு இடையே ஒரு பெரும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் எட்டப்பட்ட உடன்படிக்கை, ஜேர்மனியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான இராணுவ சக்தியாக ஆக்கும் வகையில், ஜேர்மன் இராணுவ செலவுகளை ஆண்டுக்கு 35 பில்லியன் யூரோ அதிகரிக்க, பாரியளவில் நிதி ஒதுக்குவதற்காக சிக்கன திட்டங்களை அடித்தளத்தில் கொண்டுள்ளது.
பிரெஞ்சு LPM, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய சக்திகள் நடத்தி வரும் இந்த சர்வதேச ஆயுத போட்டியின் பாகமாக உள்ளது. பத்திரிகைகளது ஆரம்ப செய்திகளின்படி, 6,000 புதிய நியமனங்கள் உட்பட ஆயுத படைகளுக்கான சம்பளச் செலவுகள் 14 சதவீதம் அதிகரிக்குமென அனுமானிக்கப்படுகிறது.
இராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளுக்கான செலவுகள் 34 சதவீதம் அதிகரிக்க உள்ளது, இத்துடன் Scorpion கவச வாகனங்கள், நான்கு Barracuda ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், மூன்று பன்முக நடவடிக்கைகளுக்கான சிறிய போர்க்கப்பல்கள் (FREMM) ஆகியவற்றின் உற்பத்தியை வேகப்படுத்துவதற்கான ஒரு காலஅட்டவணையும் உள்ளது. இறுதியாக, பிரெஞ்சு அரசின் நீண்டகால இராணுவ பலத்தைப் பேணும் நோக்கில், “மூலோபாய" செலவுகள் என்றழைக்கப்படுவது, உத்தேசமாக அனைத்தையும் தகர்த்தெறியும் அளவுக்கு மதிப்பிடப்படுகிறது.
அணுஆயுதங்கள் மீதான அதிகரித்த செலவுகள் மட்டுமே சட்டத்திற்குட்பட்ட காலத்திற்குள் 17 பில்லியன் யூரோ அளவுக்கு இருக்கும். அங்கே இணைய-போர்முறைக்கான செலவுகளிலும், புதிய ஆயுதங்கள் (விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள்) வடிவமைப்பதிலும், எரிபொருள் நிரப்பும் ஐரோப்பிய விமானங்களைத் திட்டமிடுவதிலும் பெரும் அதிகரிப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன—இவை அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமாக போர் தொடுப்பதற்கு முக்கியமானவை. தற்போது, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆயுதப் படைகள் வெளிநாடுகளில் அவற்றின் ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு இன்னமும் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்களையே சார்ந்துள்ளன.
மக்ரோன் கடந்த மாதம் துலோன் (Toulon) கடற்படைத் தளத்தில் ஆற்றிய ஓர் உரையில் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வருவதற்கான அவரின் அழைப்பை மீளவலியுறுத்தி இருந்த நிலையில், எவ்வாறிருப்பினும், வரவிருக்கும் ஆண்டுகளில் இராணுவ செலவுகளில் இன்னும் அதிக அதிகரிப்பை அவர் கோரக்கூடும். கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் தொடங்குவது மற்றும் பெண்களுக்கும் அதை நீடிப்பது ஆகியவற்றிற்கான செலவுகள் பல பத்து பில்லியன் யூரோ கணக்கில் இருக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்து நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்படும் இந்த இராணுவவாத கொள்கை, சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். ஸ்ராலினிச அதிகாரத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ள ஒரு கால் நூற்றாண்டு ஏகாதிபத்திய போர்களில், மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட நிலையில், உலக முதலாளித்துவம் மீண்டும் மிகப் பெரியளவிலான ஒரு போரின் விளிம்பில் உள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின் உலக மேலாதிக்க நிலைப்பாட்டைப் பேணும் நோக்கில், மக்ரோனும் நேட்டோ சக்திகளும் தயாரித்து வருகின்றன மோதல், ஒரு பேரழிவுகரமான உலக மோதலாக இருக்கும்.
நேட்டோவின் அபிலாஷைகளைக் குறித்து ஏகாதிபத்திய பத்திரிகைகள் மிக பகிரங்கமாக பேசுகின்றபோது, நேட்டோ இதற்கு தான் தயாரிப்பு செய்து வருகின்றது என்பதையும் ஒப்புக் கொள்கின்றன. அவ்விதத்தில், ஜனவரியில், பிரபலமான பிரிட்டிஷ் வாரயிதழ் The Economist எழுதியது, "புவிசார் அரசியலின் சக்தி வாய்ந்த, நீண்ட காலத்திய மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பெருகிய வளர்ச்சி ஆகியவை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அனுபவித்து வந்துள்ள அசாதாரண இராணுவ மேலாதிக்கத்தை இல்லாதொழித்து வருகின்றன. இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பார்த்திராத மோதலின் அளவும் தீவிரமும் மீண்டுமொருமுறை சாத்தியமானது போல் தென்படுகின்றன. உலகமோ அதற்கு தயாராக இல்லை.”
இந்த வரிகள், மனிதயினம் ஒரு புதிய உலக போரின் விளிம்பில் தள்ளாடி கொண்டிருக்கிறது என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகும். பேர்லின், மாட்ரிட், பாரீஸ் மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் ஆகியவை எதற்கு தயாரிப்பு செய்து வருகின்றனவோ, அதாவது, "அளவிலும் தீவிரத்திலும் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பார்த்திராத" ஒரு மோதலை இந்த வரிகள் பிரகாசமாக வெளிச்சமிட்டு காட்டுகின்றன. மேலும் இதனால் தான், சுவீடன், அணுஆயுத போர் சமயத்தில் என்ன செய்வது என்பதை இட்டு ஒட்டுமொத்த சுவீடன் மக்களுக்கும் விவரிக்கும் வருடாந்தர நூல் பிரசுரிப்பை மீண்டும் தொடங்கி உள்ளது, மற்றும் கிரெம்ளினோ ரஷ்ய தொழில்துறை முழுமையாக போர் அணிதிரள்வுக்கு தயாரிப்பு செய்ய வேண்டுமென நவம்பரில் அறிவிப்புக்களை வெளியிட்டது.
ஐரோப்பிய தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இருந்து ஐரோப்பா எங்கிலும் திணிக்கப்பட்ட கூலி வெட்டுக்கள் அல்லது தேக்கங்கள் மற்றும் சமூக செலவினக் குறைப்பு திட்டத்திற்கு இவர்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெற்று வரும் போராட்டங்களுக்கும் அதுவொரு எச்சரிக்கையாகும். 2018 இல், ஜேர்மன் மற்றும் துருக்கிய உலோகத்துறை தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் இரயில்வே துறை தொழிலாளர்களால் ஏற்கனவே பெரியளவில் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில், மக்ரோனின் தனியார்மயமாக்கல் திட்டங்களை முகங்கொடுத்து, முதியோர் பராமரிப்பு இல்ல தொழிலாளர்களின் போராட்டங்களும் அத்தோடு இரயில்வே துறை வேலைநிறுத்தங்களுக்கும் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டம் இல்லாமல் ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் கூலிகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பது சாத்தியமில்லை, இதில் பிரெஞ்சு தொழிலாளர்களின் பிரதான கூட்டாளிகளாக ஏனைய நாடுகளில் உள்ள அவர்களின் வர்க்க சகோதரர்களும் சகோதரிகளும் இருப்பார்கள்.