Print Version|Feedback
The Economist: Humanity teeters on the brink of world war
The Economist பத்திரிகை: மனிதயினம் உலகப் போரின் விளிம்பை நோக்கி தள்ளாடிச் செல்கின்றது
James Cogan
30 January 2018
கார்ல் மார்க்ஸ் ஆல் 150 ஆண்டுகளுக்கு முன்னர் "நிதிய பிரபுத்துவத்தின்" “ஐரோப்பிய அங்கமாக" வர்ணிக்கப்பட்ட பிரபல இலண்டன் வாரயிதழ் Economist பத்திரிகை, அதன் சமீபத்திய பதிப்பை "அடுத்த போர்", “அதிகரித்து வரும் வல்லரசு மோதலின் அச்சுறுத்தல்" ஆகியவற்றை விவாதிப்பதற்காக அர்ப்பணித்துள்ளது. அதன் பிரதான தலையங்கம் நடுங்க வைக்கும் ஓர் எச்சரிக்கையுடன் தொடங்குகிறது:
கடந்த 25 ஆண்டு கால போர், நிறைய உயிர்களைப் பறித்துள்ளது. இவ்வாறு உள்நாட்டு மற்றும் மதரீதியிலான சச்சரவுகள், சிரியா, மத்திய ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சீரழித்த போதும் கூட, உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான ஒரு பேரழிவுகரமான மோதல் ஏறத்தாழ கற்பனை செய்யவியலாததாக இருந்துள்ளது.
இனி அவ்வாறு இருக்காது … புவிசார் அரசியலின் சக்தி வாய்ந்த, நீண்ட காலத்திய மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பெருகிய வளர்ச்சி ஆகியவை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அனுபவித்து வந்துள்ள அசாதாரண இராணுவ மேலாதிக்கத்தை இல்லாதொழித்து வருகின்றன. இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பார்த்திராத மோதலின் அளவும் தீவிரமும் மீண்டுமொருமுறை சாத்தியமானது போல் தென்படுகின்றன. உலகமோ அதற்கு தயாராக இல்லை.
ஒவ்வொரு இடத்திலும் அதன் மேலாதிக்கத்திற்கான சவால்கள் என்று கூறப்படுவனவற்றை மிரட்டவோ அல்லது அழிக்கவோ அமெரிக்க இராணுவம் நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், Economist பத்திரிகை ஒரு தரந்தாழ்ந்த, வன்முறையான எதிர்காலத்தை எதிர்நோக்குகிறது.
அடுத்த 20 ஆண்டுகளில், “காலநிலை மாற்றம், மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வகுப்புவாத அல்லது இனவாத மோதல்", பெரும்பான்மை உலகை "நாடுகளுக்கு இடையிலான போருக்குள் அல்லது உள்நாட்டு போர்களுக்குள்" இருப்பதை உறுதிப்படுத்தக்கூடும். அதுபோன்ற மோதல்கள், “சேரிகளை" மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி, "நெருக்கமான குடியிருப்புக்கள், கட்டிடம் கட்டிடமாக", அதிகரித்தளவில் நகரங்களில் சண்டை நடக்கும். ஈராக்கிய நகரமான மொசூலிலும் மற்றும் சிரிய நகரம் அலெப்போவிலும் கடந்த ஆண்டு நடந்த மரணகதியிலான சண்டைகளின் போது கண்ணுற்றவாறு, மனிதயினத்தின் பெரும் பிரிவுகளது எதிர்காலம் மனிதயின படுகொலைகளாக இருக்கும் என்று Economist அனுமானிக்கிறது.
ஆனால், அமெரிக்காவுக்கும், அதன் மூலோபாய எதிர்விரோதிகளாக சித்தரிக்கப்படும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள், எத்தருணத்திலும் அணுஆயுத மனித பேரழிவாக மாறும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ள நிலையில், அவற்றின் ஒரு பாரிய தீவிரப்பாட்டை வரையறுத்து, அப்பத்திரிகை குறிப்பிடும் பல தொடர்ச்சியான சூழல்களே மிகவும் நடுங்க வைப்பதாக உள்ளது.
ஜூலை 2016 இல், டேவிட் நோர்த்தின் ஒரு கால் நூற்றாண்டு போர் நூலை மெஹ்ரிங் புக்ஸ் பிரசுரித்தது, அந்நூல் சுட்டிக்காட்டியது:
1990-91 இன் முதல் பாரசீக வளைகுடா மோதலில் தொடங்கி, ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஒரு கால் நூற்றாண்டாக தொடர்ந்து போரில் இருந்துள்ளது. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, மற்றும் ஆபிரிக்காவில் அதன் தலையீடுகளுக்கான நிஜமான நோக்கங்களை மூடிமறைக்கவும், அத்துடன் ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைஜால பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஒரு மோதலில் ஈடுபட்டு வந்துள்ளது. அமெரிக்கா அதன் பொருளாதார பலவீனம் மற்றும் மோசமடைந்து வரும் உள்நாட்டு சமூக பதட்டங்களுக்கு எதிர்வினையாற்ற முயல்கையில், அதன் இடைவிடாத தீவிர இராணுவ நடவடிக்கைகள், அணுஆயுத நாடுகளுக்கு இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்க அச்சுறுத்துகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு சற்று குறைவான காலத்திற்கு முந்தைய இந்த மதிப்பீட்டில் பெரும்பாலானவை, ஆங்கிலோ-அமெரிக்க முதலாளித்துவத்தின் மிக முக்கிய அரசியல் சாதனங்களில் ஒன்றால் எதிரொலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்துடன் தங்களது செல்வ வளத்தை பிணைத்துள்ள நிதிய மற்றும் பெருநிறுவன செல்வந்த தன்னலக் குழுக்களின் அப்பட்டமான பிரதிநிதியாக பேசும் Economist இன் முடிவான தீர்மானங்கள், ஒரு "புதிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக்" கட்டியெழுப்ப உதவுவதற்கான நோர்த்தின் குறிப்பிட்ட நோக்கத்திற்கு முற்றிலும் எதிர்தரப்பில் உள்ளன.
விரோதிகளை முற்றிலுமாக அழிக்கவல்ல அமெரிக்காவின் தகைமையாலேயே சமாதானம் சிறப்பாக பாதுகாக்கப்படும் என்ற சமூகவெறி கூற்றை பிரதியீடாக முன்நிறுத்தும் Economist, “தீர்மானகரமான மற்றும் வல்லமை மிக்க எதிர்ப்பாளர்களுக்கு" எதிராக தன்னை பாதுகாக்க, அமெரிக்கா "கடுமையான பலத்தை" அபிவிருத்தி செய்யுமாறு வலியுறுத்துகிறது.
அமெரிக்காவினது மேலாதிக்க வீழ்ச்சியைத் தடுக்க அது அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இந்த சிறப்பு அறிக்கையின் மூலக்கூற்றாக உள்ளது. சீன மற்றும் ரஷ்ய ஆளும் வர்க்கங்கள் அவற்றின் சொந்த பிராந்தியங்களில் மேலாதிக்க செல்வாக்கு பெறுவற்கான அவற்றினது அபிலாஷைகளை அடைய விட்டுவிட்டால், பின், “சாத்தியமாகக்கூடிய" விளைவு, "உலகின் வல்லரசுகளுக்கு இடையிலான பேரழிவுகரமான மோதலாக"—அணுஆயுதங்களுடன் சண்டையிடப்படும் ஓர் உலகப் போராக—இருக்குமென அது வலியுறுத்துகிறது.
ஜனவரி 27 பதிப்பில் வந்த அதன் தலையங்கம் அறிவிக்கிறது, சீனாவும் ரஷ்யாவும் "இப்போது திருத்தல்வாத நாடுகளாகும், அவை நடைமுறையில் இருப்பதை சவால் விடுக்க விரும்புவதுடன், அவற்றின் பிராந்தியங்களை மேலாதிக்கத்தில் வைத்திருப்பதற்கான செல்வாக்கு பிரதேசங்களாக பார்க்கின்றன. சீனாவைப் பொறுத்த வரையில், அதற்கு கிழக்கு ஆசியா; ரஷ்யாவைப் பொறுத்த வரையில், அதற்கு கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா.”
அமெரிக்காவில் அடுத்தடுத்து வந்த நிர்வாகங்களின் கீழ், “ரஷ்யா மற்றும் சீனா சாதகமாக்கிக் கொண்டதாக" கூறப்படும் "20 ஆண்டுகால மூலோபாய தடுமாற்றத்தை" அது முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே Economist முன்வைக்கும் தீர்மானமாக உள்ளது. இதுவரையில் அமெரிக்கா "அதன் எதிரிகளுக்கு கிலியூட்டிய" இராணுவ மேலாளுமையைப் பேணி உள்ளது, இதை உறுதிப்படுத்தி வைக்க, ரோபாடிக் தானியங்கி எந்திரங்கள் (robotic), செயற்கை அறிவு (artificial intelligence - AI) தொழில்நுட்பம் உட்பட அணுசக்தி அல்லாத ஆயுதங்களுக்காகவும் மற்றும் அணுஆயுதங்களுக்காகவும் அது மலைப்பூட்டும் அளவிலான தொகையைச் செலவிட்டுள்ளதாக பல தொடர்ச்சியான கட்டுரைகளில் அதன் சிறப்பு அறிக்கை குறிப்பிடுகிறது.
Economist எச்சரிக்கிறது: “அழுத்திக் கொண்டிருக்கும் அபாயம் கொரிய தீபகற்பம் மீதான போராகும், அனேகமாக இந்த ஆண்டே. … பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படலாம், அணுஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் இன்னும் அதிகமானவர்கள் கொல்லப்படலாம்.”
அமெரிக்க இராணுவம் அதுபோன்றவொரு போரைத் தொடங்க தயாராக உள்ளது. அது குவாமில் B-2 மற்றும் B-52 ரக அணுஆயுதம் ஏந்திச் செல்லும் குண்டுவீசிகளையும், நூற்றுக் கணக்கான போர்விமானங்களையும், ஏனைய பசிபிக் தளங்களில் போர்க்கப்பல்களின் தொகுப்பையும் முன்நோக்கி நிலைநிறுத்தி உள்ளது. பியொங்யாங் அதன் அணுஆயுத திட்டத்தைக் கைவிட வேண்டுமென்ற அதன் கோரிக்கை மூலமாக வட கொரியாவுடன் வாஷிங்டன் தூண்டியுள்ள மோதல், எதிர்காலத்தில் சீனாவுடனான ஒரு விட்டுக்கொடுப்பற்ற அணுஆயுத நிலைப்பாட்டுக்கான ஒரு பாரிய ஒத்திகை என்று நம்புவதற்கு அங்கே நிறைய காரணம் உள்ளது.
Economist குறிப்பிடுகையில், “ஈரான் அணுஆயுதங்கள் பெறுவதைத் தடுப்பதற்கான ஒரு போர் இப்போது மிகவும் ஊகம்மிக்க ஒரு சாத்தியப்பாடாகவே, ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்குள் இது மிகவும் சாத்தியமான ஒன்றாகலாம்” என்றது கருத்துரைக்கிறது.
சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பிற நாடுகளும் ஒரு பகிரங்கமான மோதலைத் தூண்டாமலேயே "சுரண்ட" முனைந்துள்ள, அமெரிக்காவின் "பாதிப்பிற்குரிய" உலகப் பகுதிகளான “மங்கலான பிரதேசங்கள்” (grey zone) என்றழைக்கப்படுவதில் அமெரிக்கா அச்சுறுத்தப்பட்டுள்ளதாக அது வலியுறுத்துகிறது. அது, தென் சீனக் கடலில் சீனா உரிமை கோரும் பகுதிகளையும், கிரிமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதையும், ஈராக், சிரியா மற்றும் லெபனானில் ஈரானின் அரசியல் செல்வாக்கையும் எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கிறது.
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளோ, Economist ஆல் முற்றிலும் நியாயமாக கருதப்படுகிறது. சிரியாவில், ரஷ்ய மற்றும் ஈரானிய ஆதரவிலான அரசாங்கத்தைத் தூக்கி வீச அமெரிக்கா ஏழாண்டு காலம் ஆட்சி மாற்றத்திற்கான சதியில் ஈடுபட்டிருந்தது. அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு பகுதியை நடைமுறையளவில் ஆக்கிரமிக்கவும், குர்திஷ் மற்றும் இஸ்லாமிய போராளிகள் குழுக்களில் இருந்து 30,000 பலமான பினாமி இராணுவத்தை ஒன்றுதிரட்டவும் உத்தேசித்துள்ளதாக வாஷிங்டனின் இம்மாத அறிவிப்பு, ஈரான் அல்லது ரஷ்யாவுடன் மட்டுமல்ல, மாறாக அதன் பெயரளவிலான நேட்டோ கூட்டாளி துருக்கி உடனும் நேரடி மோதல்களுக்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.
இணையத்தின் மீது அரசு கட்டுப்பாடு மற்றும் தணிக்கையைத் திணிக்க அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நடத்தப்பட்டு வரும் வெறித்தனமான நகர்வுகளுக்கு இடையே, அனுமானிக்கத்தக்க வகையில், அப்பத்திரிகை "மேற்கத்திய அமைப்புகள் மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தவும், தேர்தல்களில் தலை நுழைத்து வெகுஜன இயக்கங்களை ஊக்குவிக்கவும், சமூக ஊடகங்களில் விதிமீறிய கணினி நிரல்கள் (bots) மற்றும் "இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைப் பயன்படுத்தி மனக்குறைகள் மற்றும் தப்பெண்ணங்களைத் தூண்டிவிடவும்" ரஷ்யா முனைந்துள்ளதாக அப்பத்திரிகை ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இராணுவத்துடன் இன்னும் அதிகமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், அதேவேளையில் "செல்வாக்கு மிக்க நடவடிக்கைகளையும்" மற்றும் "மக்கள் கருத்துக்களில் பாரியளவில் தந்திரம் செய்வதையும்" எதிர்ப்பதற்காக என்ற மோசடியான சாக்குப்போக்கில், எதிர்ப்பு கண்ணோட்டங்களை அணுகுவதைத் தடுப்பதற்காக அரசு எந்திரத்துடன் பெருநிறுவனங்கள் இணைந்து இயங்க வேண்டுமென்றும் அது வலியுறுத்துகிறது.
அமெரிக்க அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், அது ஏற்கனவே 700 பில்லியன் டாலரை நெருங்கி வரும் வருடாந்தர வரவு-செலவு திட்டக்கணக்கு பற்றாக்குறையில் சென்று கொண்டிருக்கையில், "பணத்தைத் தேடுவது மற்றொரு பிரச்சினையாக இருக்கும்" என்று அது போகிற போக்கில் குறிப்பிட்டு செல்கிறது.
போர் தயாரிப்புகளுக்காக சமூகத்தின் ஒவ்வொரு அம்சமும் அடிபணிய செய்யப்படுவதானது, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் நிலைமைகள் தொடர்ந்து அழிக்கப்படுவதன் மூலமாகவும், அத்துடன் சேர்ந்து அதன் ஜனநாயக உரிமைகள் அகற்றப்பட்டும் மற்றும் எதிர்ப்பு ஒடுக்கப்படுவதுடனும் சேர்த்து விலை கொடுக்கப்படும் என்பதே உண்மை.
Economist பத்திரிகை நிறைவு செய்கையில், ஜோர்ஜ் ஓர்வெல் "நியூஸ்பீக்" (Newspeak) இன் எதிர்பாரா எதிரொலியாக, கோரப்பற்களுடன் ஆயுதமயப்பட்ட மற்றும் அதன் போட்டியாளர்களைத் துடைத்தழிக்க நிரந்தரமாக அச்சுறுத்துகின்ற, “ஒரு பலமான அமெரிக்கா", “உலக சமாதானத்திற்கு சிறந்த உத்தரவாதமளிப்பவராக" இருக்குமென நிறைவு செய்கிறது.
எவ்வாறிருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதன் போட்டியாளர்களை அடிபணிய வைக்க மிரட்ட முடியுமென்ற அதன் சொந்த ஆய்வு முடிவை அது திடமாக நம்புகிறது என்பதுதான் அந்த அறிக்கையின் மிகவும் உறைய வைக்கும் அம்சமாகும். சீனா மற்றும் ரஷ்யாவை நோக்கிய முன்பினும் அதிக ஆக்ரோஷமான இராணுவ நிலைப்பாட்டின் அபிவிருத்தியானது, போர் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை, குறைக்கவில்லை, அதிகரிக்கவே செய்கிறது.
“ஓர் எதிரியின் உள்நோக்கங்களைப் புரிந்து கொள்ளத் தவறி, கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடிய, ஒரு திட்டமிடப்படாத தீவிரப்பாட்டுக்கு இட்டுச் செல்லும் தவறான கணக்கீட்டில் தான்,” “மிகப்பெரிய அபாயம் தங்கியுள்ளது,” என்றது குறிப்பிடுகிறது.
இங்கு என்ன குறிப்பிடப்படுகிறது என்றால் ஓர் அணுஆயுத மனித பேரழிவுக்குள் இட்டுச்செல்லும் மோதலாகும். அக்கட்டுரை RUSI சிந்தனை குழாமின் ஒரு பகுப்பாய்வாளர் ரொம் பிளான்ட் ஐ மேற்கோளிடுகிறது: “ரஷ்யா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்த வரையில், அணுஆயுதங்களே அவற்றின் முதன்மையை பேணி வைத்துள்ளது. அவர்கள் அவர்களது பணத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை மட்டுமே நீங்கள் கவனிக்க வேண்டும்.”
வரவிருக்கும் தசாப்தங்களில் அமெரிக்கா 1.2 ட்ரில்லியன் டாலர் செலவில் அதன் ஒட்டுமொத்த அணுஆயுத தளவாடங்களையும் மேம்படுத்துகிறது. ரஷ்யா அதன் அணுஆயுத தகைமை கொண்ட ஏவுகணைகள், குண்டுவீசிகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை மேம்படுத்துகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்சைப் போலவே, சீனா அதன் மிகச் சிறிய அணுஆயுதப் படைகளின் அளவையும் தகைமையையும் வேகமாக விரிவாக்கி வருகிறது. அணுஆயுதமேந்திய நாடுகளைத் "தடுப்பதற்காக", ஜேர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கூட அணுஆயுதங்களைப் பெறுவதன் மீது ஆளும் வட்டாரங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன.
21 ஆம் நூற்றாண்டில் இந்த மடத்தனமான அணுஆயுத போட்டியானது, தவிர்க்கவியலாத வகையில் முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளில் இருந்து எழுகிறது. உலகளாவிய புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார மேலாதிக்கத்திற்காக எதிர்விரோத தேசிய-அரசுகளுக்கு இடையிலான இந்த மோதலானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் கையாளவியலாத நெருக்கடியினதும் மற்றும், சந்தைகள் மற்றும் ஆதார வளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான மூர்க்கமான மோதலினதும் தவிர்க்கவியலாத விளைவாகும்.
மார்க்சிச புரட்சியாளர் விளாடிமீர் லெனின் எழுதினார், உலகப் போர் சகாப்தம் என்பது உலக புரட்சியின் சகாப்தமாக இருக்கும். போர் அபாயத்தை அதிகரிக்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கி வீசுவது, மனித நாகரீகம் உயிர் பிழைப்பதற்கான அத்தியாவசிய அவசியமாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் (ICFI) மற்றும் அதன் பிரிவுகளும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச, போர்-எதிர்ப்பு, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடி வருகின்றன. Economist போன்ற பத்திரிகைகளின் பக்கங்களில் அணுஆயுத போருக்கான சாத்தியக்கூறு மீதான பகிரங்க விவாதம், ஆழ்ந்து சிந்திக்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் அனைவரையும் நமது போராட்டத்தில் இணைய உத்வேகப்படுத்தும்.