Print Version|Feedback
Macron wins French presidency
மக்ரோன் பிரான்சின் ஜனாதிபதிப் பதவியை வென்றார்
By Alex Lantier
8 May 2017
முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளரும் வெளியேறும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் பொருளாதார அமைச்சருமான இமானுவல் மக்ரோன் ஞாயிறன்று பிரான்சின் ஜனாதிபதியாக தேர்வானார். நவ-பாசிச தேசிய முன்னணியின் வேட்பாளர் மரின் லு பென்னுக்கு எதிராய் அவர் 65 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.
இரண்டு வேட்பாளர்களுமே ஆழமான மக்கள் வெறுப்பை சம்பாதித்தவர்களாய் இருந்தனர். ஞாயிறன்றான தேர்தலின் இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்றில் 26 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை, இது 1969க்குப் பிந்தைய காலத்தில் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின்மையின் மிக அதிகமான எண்ணிக்கையாகும். முழுமையாய் 12 சதவீத வாக்காளர்கள், அதாவது முன்கண்டிராத அளவில் 4.2 மில்லியன் பேர், பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தால் முன்வைக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களுக்குமான தங்களது குரோதத்தை வெளிப்படுத்தும் விதமாக வெற்று வாக்குகளை அல்லது செல்லாத வாக்குகளை அளித்தனர். வாக்காளர்களில் 18 முதல் 24 வயதானோரில் 34 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதானோரில் 32 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பற்றோரில் 35 சதவீதம் பேரும், உடலுழைப்புத் தொழிலாளர்களில் 32 சதவீதம் பேரும் வாக்களிக்கவில்லை.
மக்ரோனுக்கு வாக்களித்தவர்களில் பெருவாரியானோர் அவரது சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் சட்டம்-ஒழுங்கு கொள்கைகளின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதன் அடிப்படையில் அவரைத் தேர்வு செய்யவில்லை, மாறாக FN ஐ அதிகாரத்திற்கு வர விடாமல் தடுப்பதற்காகவே வாக்களித்திருந்தனர். பிரெஞ்சு மக்களில் 61 சதவீதம் பேர் ஜூனில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்ரோனுக்கு தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது என்று விரும்புகின்ற அளவுக்கு மக்ரோனின் சமூக வெட்டுகள் மற்றும் போர் குறித்த திட்டநிரலின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்ததாக Ipsos கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்தது.
FN ஐப் பொறுத்தவரை, வாக்களிக்காதோர் அல்லது வெற்று வாக்கை அல்லது செல்லாத வாக்கை அளித்தோரின் மொத்த எண்ணிக்கையானது, லு பென்னுக்கு வாக்களித்தவர்களது எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமென்கிற உண்மையானது, அக்கட்சி மீதான பரந்த மக்கள்வெறுப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் இருக்கிறது.
எப்படியாயினும், மக்ரோன், அவர் வழங்கிய சுருக்கமான மற்றும் அக்கறையற்ற உரையில், அவருக்கு வாக்களித்த அல்லது வாக்களிக்க வராத பிரெஞ்சு மக்களின் பரந்த பெரும்பான்மையினரை உதாசீனப்படுத்தி விட்டு, லு பென்னின் கட்சிக்கும் அவரது வாக்காளர்களுக்கும் விண்ணப்பம் செய்தார். லு பென்னுக்கு ஒரு “குடியரசு வணக்கத்தை” செலுத்திய மக்ரோன், மில்லியன் கணக்கான மக்களை நவ-பாசிச வேட்பாளருக்கு வாக்களிக்கத் தள்ளியிருந்த “கோபம், கவலை மற்றும் சந்தேகங்களுக்கு” கவனம் செலுத்தவும் வாக்குறுதியளித்தார்.
அடிப்படை உரிமைகளை இடைநிறுத்தி வைத்திருக்கின்ற சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் அவசரகாலநிலை சட்டத்தின் ஒரு ஆதரவாளரான மக்ரோன், பிரெஞ்சு அரசின் சட்டம்-ஒழுங்கு கொள்கைகளை தீவிரப்படுத்தவும் வாக்குறுதியளித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பாய் அவசரகாலநிலையை திணித்தது முதலாக PS உத்தரவிட்டிருந்த பரந்த போலிஸ் மற்றும் இராணுவ நிலைநிறுத்தங்களை மேலும் கட்டியெழுப்பவிருப்பதை தெளிவாக்கிய மக்ரோன், “பாதுகாப்பையும், நாட்டின் ஒற்றுமையையும் ஒரு சமரசமற்ற மற்றும் தீர்க்கமான விதத்தில் உறுதிசெய்வதற்கு” வாக்குறுதியளித்தார்.
ஒரு இராணுவவாத தொனியில் பேசிய மக்ரோன், “பயங்கரவாதத்தின் மீதான போர்” மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதன் மீதும், அத்துடன் “நமது பொது வாழ்க்கையை தார்மீகரீதியில் உயர்த்துவதன் மீதும்” கவனம் குவிக்க இருப்பதாக அறிவித்தார்.
மரின் லு பென், தனது நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். “குடியரசின் ஒரு புதிய ஜனாதிபதியை பிரெஞ்சு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், தொடர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர்” என்ற அவர், “பிரான்ஸ் பிரம்மாண்டமான சவால்களுக்கு முகம்கொடுக்கின்ற நிலையில், அவர் வெற்றிகாண்பதற்கு எனது சிறந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொருட்டு” மக்ரோனை தொடர்பு கொண்டு பேசியதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.
புதிய ஜனாதிபதிக்கான ஒரேயொரு எதிர்க்கட்சியாக தனது வலது-சாரிக் கட்சியை காட்டும் பொருட்டு, மக்ரோனது பிரச்சாரத்திற்கு, PSம் அதன் கூட்டாளிகளும் வழங்கிய ஆதரவைக் குறிப்பிட்ட அவர், FNம் அதன் கூட்டாளிகளும் “புதிய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கான எதிர்ப்பில் முன்னிலை சக்திகளாய் இருக்கும்” என்று அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “மக்ரோனை ஆதரித்திருக்கும் கட்சிகள் தங்களைத் தாங்களே மதிப்பிழக்கச் செய்து கொண்டுள்ளன, அவை ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்குகின்ற அல்லது ஒரு அரசியல் எதிர்க்கட்சியை உருவாக்குகின்ற ஒரு சக்தியைக் கூட குறிப்பதாகக் கூறிக் கொள்ள முடியாது.”
FN இன் பிம்பத்தை புதுப்பித்து அதனை வாக்காளர்களின் பெரும்பான்மையானோரை வெல்லவும் இறுதியாய் அதிகாரத்தைக் கைப்பற்றவும் இலக்கு கொள்ளத்தக்க ஒரு பரந்த கட்சியாக ஆக்குவதற்காக FN இன் ஒரு ”ஆழமான உருமாற்ற”த்திற்கு முன்முயற்சி எடுக்கவும் லு பென் வாக்குறுதியளித்தார். எழுச்சி காண் பிரான்ஸ் (Debout la France) கட்சியின் தலைவரான டுப்போன்-எய்னியோன் அளித்த வழிமொழிவுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட லு பென், வரும் காலத்தில் இன்னும் பல வலது-சாரிக் கட்சிகள் தங்களின் பின்னால் அணிவகுத்து வரும் என்று கணிப்பும் கூறினார்.
மக்ரோனின் தேர்வானது எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப்போவதில்லை. வரவிருக்கும் மாதங்களில் இன்னும் பரந்த மற்றும் இன்னும் வெடிப்பான அரசியல் நெருக்கடிகளுக்கும் வர்க்க மோதல்களுக்குமான நிலைமைகளை மட்டுமே அது தோற்றுவித்திருக்கிறது. PS ஐயும் மற்றும் இப்போது குடியரசுக் கட்சி (LR) என்று அழைக்கப்படுகின்ற கோலிசக் கட்சியையும் கொண்டு, 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் பிரான்சை ஆட்சி செய்து வந்திருந்த இரண்டு கட்சி ஆட்சிமுறையின் ஒரு வரலாற்றுப் பொறிவுக்கு மத்தியில் அவர் பதவிக்கு வந்திருக்கிறார்.
PS வேட்பாளாரான பெனுவா அமோனும் LR இன் வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோனும் தேர்தலின் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டனர், இரண்டு கட்சிகளுமே தங்களது பல தசாப்த கால சிக்கன நடவடிக்கை மற்றும் போர் வேலைத்திட்ட செயல்வரலாற்றின் காரணமாய் மதிப்பிழந்து விட்டிருந்தன. முதலில் வலது-சாரி ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசியின் கீழும், பின்னர், குறிப்பாக, PS இன் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் அவசரகால நிலையின் கீழும் சட்டம்-ஒழுங்கு மற்றும் முஸ்லீம்-விரோத மனோநிலையானது பகிரங்கமாக வளர்த்தெடுக்கப்பட்டமையானது, பிரான்சின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் FN ஒரு முக்கியமான சக்தியாக எழுவதை முடுக்கி விட்டது.
ஹாலண்ட் தனது ஜனாதிபதிக் காலத்தின் போது, மரின் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு மீண்டும் மீண்டும் அழைத்தமை, சென்ற இரவில் தேசிய ஒற்றுமை என்ற பேரில் மக்ரோன் FN க்கு விண்ணப்பம் வைத்தமை, இரண்டுமே PS உம் மக்ரோனும், FN ஐ உரிமையுள்ள அரசியல் கூட்டாளிகளாக காண்பதை எடுத்துக் காட்டுகின்ற ஒரு பாத்திரத்தையே வகிக்கின்றன.
ஹாலண்டை போலவே மக்ரோனும் தனது ஆழமான மக்கள்வெறுப்புமிக்க வேலைத்திட்டத்திற்கான ஒரு அரசியல் அடித்தளமாக FN ஐ வளர்த்தெடுப்பதாக தெரிகிறது. ஒப்பந்தங்களையும், சமூகநல செலவுகளையும் உத்தரவுகளின் மூலமாக கிழித்தெறிவதற்கும், பாதுகாப்புச் செலவினத்தை அதிகப்படுத்துவதற்கும், பெரும் போர்களது ஒரு சகாப்தத்திற்கான தயாரிப்பாக கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர் சூளுரைத்திருக்கிறார்.
தேர்தல் முடிவுக்கு மக்ரோன் அளித்திருக்கும் பதிலிறுப்பானது தேர்தலின் இரண்டாம் சுற்றினை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste - PES) விடுத்த அழைப்பின் சரியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்கக் கூடிய, FN இன் செல்வாக்கு அதிகரிப்பதை தடுத்து நிறுத்தக் கூடிய, மற்றும் ஒரு உண்மையான அரசியல் மாற்றீட்டினை முன்வைக்கக் கூடிய ஒரு குறைந்த தீமையாக மக்ரோன் மீது நம்பிக்கை வைக்கப்பட முடியும் என்பதான கூற்றை PES நிராகரித்தது. அதற்குப் பதிலாக, லு பென்னோ அல்லது மக்ரோனோ புதிய ஜனாதிபதியாக யார் ஆகின்ற போதும் அவருக்கு எதிராக வெடிக்கவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாகத் தயாரிப்பு செய்வதே மையமான பணியாகும் என்று PES விளக்கியது.
இந்த புரட்சிகர முன்னோக்கானது, ஜோன் லூக் மெலோன்சோனின் France insoumise (அடிபணியா பிரான்ஸ்) இயக்கம் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற PS இன் பல்வேறு கூட்டாளிகளது நாடாளுமன்ற அபிலாசைகள் மற்றும் அதிக மறைப்பில்லாத மக்ரோன் ஆதரவு ஆகியவற்றுக்கு கூர்மையாக பேதப்பட்டதாய் இருந்தது. மெலோன்சோன் மக்ரோனுக்கு வாக்களிக்க வெளிப்படையாய் அழைப்பு விட மறுத்தார் என்ற அதேநேரத்தில், மக்ரோனுக்கு அவர் ஆதரவு அளித்தார் என்பதில் இரகசியம் எதையும் விட்டு வைக்கவில்லை, மக்ரோனது பிரதமராக செயல்பட முன்வருமளவுக்கு அவர் சென்றார், அந்தப் பதவியில் அவர் மக்ரோனின் மூர்க்கமான வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கைகளுக்கு பொறுப்பேற்பார்.
மெலோன்சோன், மக்ரோனின் பிரதமராகும் தனது முயற்சிக்கு வலுச்சேர்க்கும் பொருட்டு, ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், France insoumise க்கு ஒரு வலுவான பிரதிநிதிகள் எண்ணிக்கையை வழங்க வேண்டும் என்று நேற்றிரவு வாக்காளர்களிடம் விண்ணப்பம் செய்தார்.
மக்ரோன் ஒரு வலது-சாரி பிரச்சாரத்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில், PS மற்றும் கோலிசவாத LR இருதரப்புமே லு பென்னுக்கு எதிராய் மக்ரோனை ஆதரித்ததால், FN மக்ரோனுக்கு எதிரான ஒரு ஜனரஞ்சக மாற்றீடாக தன்னை வாய்வீச்சுடன் முன்நிறுத்திக் கொண்டு, முன்கண்டிராத அளவாய் 11 மில்லியன் வாக்குகளை வெல்ல முடிந்திருந்தது. லு பென் 30 சதவீதம் என்ற ஒரு திட்டவட்டமான வித்தியாசத்தில் தோற்றிருந்தார். ஆயினும் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய முந்தைய முறையைக் காட்டிலும் இந்தமுறை FN பெற்ற வாக்குகளை அவர் இரட்டிப்பாக்கியிருந்தார். 2002 இல், அவரது தந்தையான ஜோன்-மரி லு பென், கோலிச ஜாக் சிராக்குக்கு எதிராய் 17.79 சதவீத வாக்குகளை வென்றிருந்தார்.