Print Version|Feedback
No to Chirac and Le Pen! For a working class boycott of the French election
An open letter to Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire, and Parti des Travailleurs
சிராக்கும் வேண்டாம், லு பென்னும் வேண்டாம்! தொழிலாள வர்க்கத்திற்காக பிரெஞ்சு தேர்தலை புறக்கணிப்போம்!
Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire, மற்றும் Parti des Travailleurs கட்சிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்
By the World Socialist Web Site Editorial Board
29 April 2002
இந்த அறிக்கை 2002 இல் தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன்-மரி லு பென்னுக்கும் (Jean-Marie Le Pen) பிரான்சின் அப்போதைய ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கும் இடையே மே 5 இல் நடந்த இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலின் போது எழுதப்பட்டதாகும். உலக சோசலிச வலைத் தளம் வலது சாரி சிராக்கிற்கு ஆதரவாக சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமை கட்சி மற்றும் ஏனையவர்கள் தொடுத்த பிரச்சாரத்தை எதிர்த்தது. அதற்கு மாறாக, உலக சோசலிச வலைத் தளம் யார் வென்றாலும் அவருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டுவதற்கு அத்தியாவசிய தயாரிப்பாக தேர்தல்களை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தது.
பிரான்சின் இப்போதைய தேர்தல் நவ-பாசிசவாத தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு (Marine Le Pen) எதிராக முன்னாள் வங்கியாளரும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் பொருளாதார அமைச்சருமான இமானுவல் மாக்ரோனை கொண்டு வந்துள்ள நிலையில், இதனை தொடர்புபடுத்தி 2002 தேர்தல் அனுபவங்களை மீளாய்வு செய்வது முக்கியமாகும். (பார்க்கவும்: “மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணி!”)
WSWS, April 27, 2017
*** *** *** ***
Lutte Ouvrière (LO), Ligue Communiste Révolutionnaire (LCR), Parti des Travailleurs (PT) ஆகிய கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களே, 2002 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் மாபெரும் அரசியல் பொறுப்பினை உங்கள் முன்வைக்கின்றது. முதல் சுற்றில் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எதிர்பார்த்திராத அளவில் உங்களது வேட்பாளர்களுக்கு வாக்குகளை வழங்கியுள்ளனர். ஆனால் முதல் சுற்றில் பாசிச வேட்பாளர் லு பென் இரண்டாம் சுற்றுக்கு வந்தடைந்து, மே 5 இல் நடக்கவுள்ள இரண்டாம் சுற்றில் ஜனாதிபதி சிராக் ஐ எதிர்கொள்ளவிருக்கின்ற நிலையில், தேசிய முன்னணியின் வளர்ச்சியையும் அது காட்டியிருந்தது.
உங்களது வேட்பாளர்களுக்கு வாக்களித்த மில்லியன் கணக்கானவர்கள், அரசியல் நெருக்கடி குறித்து தெளிவாகவும் சக்தி மிக்க வகையிலும் நீங்கள் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். மே 5 இன் வாக்குப்பதிவில் உங்களது இயக்கங்கள் எங்கே நிற்கின்றன? தங்களது சமூக நலன்களைப் பாதுகாப்பதற்கும் பாசிச அபாயங்களை தோற்கடிப்பதற்கும் பிரெஞ்சு தொழிலாளர்களும் இளைஞர்களும் எப்படி போராட்டத்தை முன்னெடுப்பது என்பதே தற்போது முன்வைக்கப்பட்டுள்ள மற்றும் கட்டாயம் பதிலளிக்கப்பட வேண்டிய கேள்வியாகும்.
உலக சோசலிச வலைத் தளம் ஜனாதிபதி பதவிக்கான மே 5 வாக்குப்பதிவைச் செயலூக்கத்துடன் புறக்கணிக்கும் ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்க விழைகின்ற எல்லா அமைப்புகளையும் வலியுறுத்துகிறது. ஜோன்-மரி லு பென்னுக்கோ அல்லது ஜாக் சிராக்கிற்கோ அரசியல் ஆதரவு தராதீர்கள்! பிரெஞ்சு உழைக்கும் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் இந்தப் போலியான மற்றும் ஜனநாயக விரோத "தேர்வுக்கு" எதிராக அணிதிரட்டுங்கள்.
உங்களது மூன்று கட்சிகளுக்கும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்கும் இடையில் நன்கறியப்பட்ட வரலாற்று மற்றும் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இதை நாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றாலும், இந்த பிரச்சாரத்தை முன்மொழிவதும் மற்றும் அதற்கான அரசியல் அடிப்படையை விளங்கப்படுத்துவதும் இன்றியமையாததென நாங்கள் உணர்கிறோம்.
தேர்தல் புறக்கணிப்பு ஏன்? ஏனென்றால் இந்த மோசடியான தேர்தலுக்கு எந்தவிதமான சட்டபூர்வத் தன்மையையும் மறுப்பது அவசியமாகும்; ஏனென்றால் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை ஸ்தாபிப்பது அவசியமாகும்; ஏனெனில் செயலூக்கமான மற்றும் ஆக்ரோஷமான இந்த தேர்தல் புறக்கணிப்பு தேர்தலுக்குப் பின்னர் வரவிருக்கும் அரசியல் போராட்டங்களுக்கு சிறந்த நிலைமைகளை உருவாக்கும்.
உங்கள் மூன்று கட்சிகளும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் மற்றும் ஆக்ரோஷமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுமான இந்த தேர்தல் புறக்கணிப்பு, தனிநபர்கள் அவரவர் வாக்களிப்பை தவிர்ப்பதை காட்டிலும் மிகவும் வேறுபட்ட குணாம்சத்தைக் கொண்டிருக்கும். இது வெகுஜனங்களையும், குறிப்பாக முதல் சுற்றில் லு பென்னின் அதிர்ச்சிகரமான வெற்றியால் செயலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள இளைஞர்களை அரசியல்ரீதியில் அறிவூட்ட சேவையாற்றும்.
இந்த புதிய சக்திகள் முக்கிய அரசியல் படிப்பினைகளை கட்டாயம் பெற வேண்டும். சிராக்கிற்கு வாக்களிப்பதானது ஜனநாயகத்தின் பாதுகாப்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும், பிரான்சின் "கௌரவத்தை" இரட்சிக்கிறது என்றும், “பாசிச-எதிர்ப்பு முன்னணியை" உருவாக்குவதற்காக என்றும், இன்னும் பல விதத்திலும் வாதிடும் அரசாங்க வலது (governmental right) மற்றும் அரசாங்க இடது (governmental left) அத்துடன் ஊடகங்கள் என ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் பொய்களினூடாக அவர்கள் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.
தொழிலாள வர்க்கம் அதன் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ அல்லது பாசிசத்தை எதிர்க்கவோ ஊழல்பீடித்த மற்றும் பிற்போக்குத்தனமான பிரெஞ்சு முதலாளித்துவத்தை நம்பியிருக்க முடியாது. ஒட்டுமொத்தமாக லு பென்னின் சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய வாய்ச்சவடால்களை ஏற்றுக் கொண்டுள்ள சிராக்கின் சொந்தப் பிரச்சாரமே இந்த உண்மைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.
மே 5 வாக்களிப்பைப் புறக்கணிப்பதானது, லு பென் மற்றும் அவரது பாசிச இயக்கத்தைப் பலப்படுத்துமென சிலர் வாதிடலாம். நாம் அத்தகைய கூற்றுக்களை முழுமையாக நிராகரிக்கிறோம். அரசியல் என்பது எண்கணிதம் அல்ல மற்றும் லு பென்னை எதிர்ப்பதற்கு சிராக்கை ஆதரிப்பது அவசியமற்றது. எதிர்முரணமாக, அது சிராக்கிற்கான உத்தியோகபூர்வ பிரச்சாரமாகி விடுவதுடன், அரசாங்க வலது மற்றும் அரசாங்க இடதை ஒன்றிணைக்கும் அது, லு பென்னின் முழுவதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் கூற்றான அவர் மட்டுமே அரசியல் அமைப்பிற்கு பரந்த எதிர்ப்பைக் குரல் கொடுப்பதாகக் கூறுவதை மேலும் வலுவூட்டுகின்றது.
சோசலிச இடதுகளால் கூர்மையாக முன்னெடுக்கப்படும் மே 5 வாக்களிப்பை எதிர்ப்பதற்கான மற்றும் புறக்கணிப்பதற்குமான ஒரு பரந்தளவிலான பிரச்சாரம், தொழிலாளர்களையும் இளைஞர்களையும் லு பென் மற்றும் சிராக் ஆகிய இருவருக்கும் எதிராக அணிதிரட்டும் என்பதுடன், லு பென்னின் போலி நடிப்புக்களை அம்பலப்படுத்தி, இப்போதைய இந்த சமூக மற்றும் அரசியல் ஒழுங்கமைப்பை சவால் செய்யும் முற்போக்கான சமூக சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை பரந்துபட்ட மக்களுக்கு எடுத்துக்காட்டும்.
LO மற்றும் LCR பிரதிநிதிகளின் இப்போதைய நிலைப்பாடு சிராக்கிற்கு வாக்களிப்பதை தந்திரமாக ஏற்றுக் கொள்வதற்கு ஒத்திருக்கின்றன என்பதை நாங்கள் வெளிப்படையாக குறிப்பிட்டாக வேண்டும். "இரண்டாம் சுற்றில் வாக்களிப்பதைத் தவிர்க்குமாறு" Lutte Ouvrière "தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை" என்று Lutte Ouvrière இன் ஜனாதிபதி வேட்பாளர் லாகியே (Laguiller) கூறுகிறார். LCR இன் அரசியல் குழு அறிக்கை ஒன்று குறிப்பிடுகையில், "மே 5 இல், ஞாயிறன்று லு பென் சாத்தியமானளவிற்கு மிகக் குறைந்த வாக்குகளைப் பெற LCR பிரச்சாரம் செய்கிறது. சிராக்கிற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் லு பென்னை எதிர்க்கவே வாக்களிக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோமே தவிர, தீவிர வலதின் ஒரு புதிய வளர்ச்சிக்கு எதிராக சிராக் காப்பு அரணாக இருக்க முடியும் என்று நாம் புரிந்து கொள்ளவில்லை,” என்று அறிவிக்கிறது.
உங்கள் கட்சிகள் முதல் சுற்று பிரச்சாரத்தின் போது, சிராக் ஜனாதிபதி பதவி காலத்தின் வலதுசாரி குணாம்சத்தை ஆக்ரோஷத்துடன் கண்டனம் செய்ததுடன், சிராக்கை ஊழல்பீடித்த முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தின் உருவடிவமாக மிகச் சரியாகவே சித்தரித்தன. சிராக்கிற்கு வாக்களிப்பது அனுமதிக்கத்தக்கது, புரிந்து கொள்ளத்தக்கது அல்லது நியாயப்படுத்தக்கூடியதென இப்போது எவ்வாறு உங்களால் கூற முடிகிறது? உங்கள் கடந்தகால அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் அக்கறையுடன் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டாமா?
இரண்டாம் சுற்றில் சிராக்கிற்கு வாக்களிக்க கோரும் விவாதங்கள் ஏதோவிதத்தில் பதில் கூற முடியாதவை என்பதாக, அல்லது சிராக் மற்றும் லு பென் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்வதைப் புறக்கணிப்பதை பெருந்திரளான மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதை பகிரங்கமாக கூறியாக வேண்டும் என்பதாக LCR அறிக்கையின் மொழிநடை அமைந்துள்ளது. இது தற்போதைய சூழ்நிலையில் அரசியல் சாத்தியக்கூறுகளை மொத்தமாக குறைத்து மதிப்பிடுவதாகும்.
லு பென்னின் வெற்றிக்கு யார் பொறுப்பு?
தேசிய முன்னணி தொடர்பான ஆபத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும், முசோலினி அல்லது ஹிட்லர் மாதிரியிலான ஒரு பாரிய பாசிச இயக்கத்தின் தோற்றத்தை கொண்டிராத நிலையில், லு பென்னிற்கான வாக்கு பிரான்சில் ஒரு பாசிச வேலைத்திட்டத்திற்கான பரந்த ஆதரவை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. லு பென்னின் சொந்த வாக்காளர்களிடையே கூட, ஒரு சிறிய பகுதிதான் உண்மையில் அவரது சமூக வேலைத்திட்டத்துக்கும் வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கும் ஆதரவளிக்கிறது.
எதிர்பார்ப்புக்கு மாறாக, லு பென் ஜனாதிபதி வாக்கெடுப்பில் வென்றாலும் அவரால் பிரெஞ்சு மக்களை சர்வாதிகாரத்துக்கு கீழ்ப்படுத்த முடியாது. அரசியல் ஸ்தாபகம் மற்றும் செய்தி ஊடகம் நடத்தும் சிராக்கிற்கு ஆதரவான பிரச்சாரத்தில், லு பென் முன்னிறுத்தும் உடனடி அச்சுறுத்தலை பூதாகரமாக மிகைப்படுத்தும் ஒரு கூறுபாடு உள்ளது, அதன் நோக்கம் வர்க்கக் கூட்டுக் கொள்கைக்கு ஆதரவளிக்க தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதாகும். லு பென்னை எதிர்த்து போராடுவதற்கு, அவர் எதற்கு உருவடிவம் கொடுக்கிறாரோ அந்த அரசியல் நோய்க்கான காரணத்தை நாம் சரியான முறையில் கண்டறிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ அரசியலுக்கு எவ்விதமான சோசலிச மாற்றீடும் இல்லாதிருப்பதே இந்த சீரழிவுக்கான காரணமாகும்.
தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்ட கட்சிகளால் தொழிலாள வர்க்கமும் அதன் நலன்களும் கைவிடப்பட்டமையிலிருந்து அரசியல்ரீதியாகவும் மற்றும் கருத்தியல்ரீதியாகவும் லு பென் இலாபம் அடைந்துள்ளார். ஜோஸ்பன் அவர் பிரச்சாரத்தில் ஒப்புக் கொண்டதைப் போல, அவரது கட்சி அதனை "சோசலிஸ்ட்" என்று அழைத்துக் கொள்ளலாம், ஆனால் அதன் வேலைத்திட்டம் "சோசலிசம் அல்ல." சோசலிஸ்ட் கட்சியானது, முதலாளித்துவவாதிகளின் சார்பாக நிர்வகித்து வரும் ஒரு சமூகநல அரசு என்றாலும் அது இப்போது சமூகநலன்களை வழங்கவில்லை, அதற்கு மாறாக, தொடர்ந்து தொழிலாளர்களின் சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரங்களைக் குறைத்து வருகிறது. ஐரோப்பிய நாணய அமைப்பு நிறுவுதலுக்கும் மற்றும் யூரோவை அறிமுகப்படுத்துவதற்கும் நிபந்தனையாக அவசியப்பட்டவாறு, வேலைகள் மற்றும் சமூக திட்டங்களில் அனைத்துவிதமான தியாகங்களையும் திணிப்பதற்கு ஜோஸ்பனின் அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த மட்டில், அது பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்துக்குள் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பிரதான தூணாக இருந்தது. மிக சமீப காலகட்டத்தில், தொழிலாள வர்க்கத்துக்குள் புலம்பெயர்வோர்-விரோத பேரினவாத நஞ்சை அறிமுகப்படுத்தியதற்கான பிரதான பொறுப்பையும் இந்த ஸ்ராலினிச அமைப்பு கொண்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸ் புறநகர்ப்பகுதியின் மேயராக முதலில் முன்னிலைக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான Robert Hue, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த பீதியையும் வெறுப்பையும் தூண்டி விட்டார். இவ்விதத்தில் அவர் தொழிலாள வர்க்க புறநகர்ப்பகுதிகளிலும் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் பலமான கோட்டையாக விளங்கிய வடக்கு பகுதியிலும் லு பென்னுக்கு வழிவகுத்தளித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் என்றழைக்கப்படுபவை பின்பற்றிய வலதுசாரி கொள்கைகளின் காரணமாகவே, லு பென் பெரும்பான்மை பலத்தை ஈட்டியுள்ளார். இது உண்டாக்கிய அந்நியப்படல் மற்றும் விரக்தி மனோநிலையை தேசிய முன்னணி சுரண்டிக் கொண்டது. இவ்வாறு இருக்கின்ற போதினும், இந்த திவாலான சமூக ஜனநாயக அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில், மேற்கொண்டும் வலதிற்கு நகர்ந்து மே 5 இல் சிராக்கை அரவணைப்பதே பாசிச சவாலுக்கான தீர்வாக உள்ளது.
ஜோஸ்பன், ஹோலாண்ட், செவனுமோ, போன்றவர்களை பொறுத்த வரையில் சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பது இயல்பானதாக உள்ளது. அவர்களைப் பொறுத்தமட்டில் அதற்கு மிகப் பெரியளவில் மறுநோக்குநிலைப்படுத்தல் தேவைப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் அதே அரசியற் கட்டமைப்பை தான் பகிர்ந்து கொள்கிறார்கள். ஐந்தாண்டுகள் அவர்கள் சிராக்குடன் கூட்டு சேர்ந்து நெருக்கமாக வேலை செய்துள்ளதுடன், பிற்போக்குத்தனமான உள்நாட்டுக் கொள்கையை மட்டுமல்லாமல், பொஸ்னியா மற்றும் கொசோவா முதல் ஆப்கானிஸ்தான் வரையில் தொடர்ச்சியாக பல ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளில் பிரான்ஸ் தலையிட்டதையும் ஆதரித்துள்ளனர்.
"இடதுசாரிகளின் பிளவு" தான் லு பென் வெற்றிக்கு காரணம் என்ற ஜோஸ்பன் மற்றும் குழுமத்தின் வாதம், Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire மற்றும் PT இன் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்துக்கு எதிரானது மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து சுயாதீனமாக எந்தவொரு தொழிலாள வர்க்க அரசியல் அமைப்பு உருவாவதற்கு எதிராகவும் உள்ளது. இதன் தர்க்கம் என்னவென்றால் —அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இறுதியில் ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷை கொண்டு வருவதற்கான ஜனநாயகக் கட்சி போலவே— ஏதோவொரு மிக வலதுசாரி சக்திகளால் அமைக்கப்படும் அரசியல் நிலைப்பாட்டின் பரந்த நீரோட்டத்திற்குள் சோசலிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் அனைத்து அரசியல் போக்குகளையும் கலைக்க வேண்டும் என்பதாகும்.
லு பென்னின் வளர்ச்சிக்கு இடது சோசலிஸ்டுகளைக் குற்றம் சாட்டும் —ஜோஸ்பன் மற்றும் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அவருக்கு வக்காலத்து வாங்கும் Daniel Cohn-Bendit ஆகியோரின் சுயலாபத்திற்கான கூற்றை நாம் இகழ்ச்சியுடன் நிராகரிக்கிறோம். தொழிலாள வர்க்கத்தின் குறிப்பிட்ட சதவீதத்தினர் அவர்களின் மிகக் கசப்பான எதிரிக்கு வாக்களித்தார்கள் என்ற உண்மை, அனைத்து உண்மையான சோசலிஸ்டுகளுக்கும் பெரும் கவனத்திற்குரிய ஒன்றாகும். ஆனால் இந்த ஆபத்தான அபிவிருத்திக்கு பொறுப்பு பல தசாப்தங்களாக தொழிலாள வர்க்கத்தைத் திட்டமிட்டு காட்டிக் கொடுத்தவர்களையே சாரும்.
சர்வதேச பரிமாணம்
முதல் சுற்று தேர்தல் பிரச்சாரம் தொழிலாள வர்க்கம் எதிர் கொண்டிருக்கும் நெருக்கடியின் சர்வதேச பரிமாணங்களை பெரிதும் அலட்சியப்படுத்தியது. லு பென்னும் புறுணோ மேக்ரேயும் தங்களை புரூஸெல்சின் எதிராளிகளாய் முன்நிறுத்திக் கொண்டதன் மூலம், வேலையின்மையின் அதிகரிப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பாலும் மற்றும் யூரோ அறிமுகத்தாலும் ஏற்பட்ட தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்களின் சீரழிவின் மீது பழிபோட்டு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பலிகடாவாக்கி ஆதாயம் அடைந்தனர் என்பதில் கேள்விக்கே இடமில்லை.
முதலாளித்துவ பூகோளமயமாக்கலுக்கு தொழிலாள வர்க்கம் பின்னோக்கிப் பார்க்கும் மாற்றீட்டை காட்டிலும் ஒரு முன்னோக்கிப் பார்க்கும் மாற்றீட்டை வழங்க வேண்டும். அது பேரினவாத மற்றும் புலம்பெயர்ந்தோர் விரோத வாய்ச்சவடாலை சோசலிச சர்வதேசியவாத அடித்தளத்திலான வேலைத்திட்டத்தை கொண்டு எதிர் கொள்ள வேண்டும். முதலாளித்துவ பூகோளமயமாக்கல் என்பது பெருநிறுவன அதிபர்களுக்கு மட்டுமே "எல்லைகள் இல்லாத ஐரோப்பாவை" அர்த்தப்படுத்துகிறது, அதேவேளை தொழிலாளர்கள் தேசிய எல்லைகளுக்குள் தொடர்ந்து அடக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மித்திரோனின் கீழ் கூட சாத்தியமற்றதாக இருந்த, ஒரு பிரெஞ்சு தேசியவாத வேலைத்திட்டத்திற்கு திரும்புதல் என்ற பிற்போக்கு கற்பனாவாதத்தை நாம் நிராகரிக்கிறோம். நாம் சகல இனத்தையும், தேசியத்தையும் சார்ந்த தொழிலாளர்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் வசிக்க, தொழில் புரிய மற்றும் விரும்பும் இடங்களுக்குப் பயணம் செய்வதற்கான முழு சுதந்திரத்துடன் கூடிய ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக போராடுகிறோம்.
சோசலிசத்தின் சாரம் சர்வதேசியவாதமாகும். பிரெஞ்சுத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து —அது அமெரிக்கா வகையிலானது மட்டுமல்லாது, பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜேர்மன் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்தும் பிரிக்க முடியாததாகும். ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, பால்கனில் மற்றும் மிக அண்மையில் ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் ஆதரவளித்தமை அதன் மாபெரும் குற்றமாகும். இவ்விதத்தில், முன்னாள் அல்ஜீரிய பாராசூட் படைவீரரும் சித்திரவதையாளருமான ஜோன்-மரி லு பென் இருக்கும் அதே முகாமில் ஜோஸ்பன் தன்னையும் நிறுத்தி இருந்தார்.
பிரான்சுக்குள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிடுப்பவர்கள், இத்தகைய தீர்க்கமான சர்வதேச பிரச்சினைகளில் பாராமுகமாக இருக்கிறார்கள். சிராக்கிற்கு வாக்களிப்பது, ஈராக் மீதான அமெரிக்க யுத்தத்தில் பங்கேற்க ஏற்கனவே தன்னை ஒப்படைத்திருக்கும் ஓர் அரசாங்கத்திற்கே அரசியல் பொறுப்பை வழங்குவதாக இருக்கும். இந்த ஏகாதிபத்திய தலையீடானது முழு மத்திய கிழக்கு பகுதியையும் சீர்குலைத்து, இன்னும் பொதுவான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான யுத்தத்திற்கு வழிவகுக்க கூடும்.
வரலாற்று படிப்பினைகள்
"ஜனநாயகத்தை பாதுகாக்கும்" பெயரில் பிற்போக்குத்தனமான சிராக்கிற்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுவது இடதுகளைப் பொறுத்தவரை சட்டபூர்வமாக இருக்கிறது என்றால், பின்னர் அவர் அரசாங்கம் பதவி ஏற்றதும், அவரது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு வாக்களிப்பதும் மற்றும் அவர் அரசாங்கத்தில் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது மந்திரிசபை அமைச்சராகவோ இணைவது கூட சட்டபூர்வமாகி விடுகிறது. இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்த முதல் சோசலிஸ்ட் அரசியல்வாதியான இழிபெயர் பெற்ற Alexandre Millerrand காலம் வரையில் பின்னோக்கி, பிரெஞ்சுத் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு நீண்ட துன்பகரமான வரலாறைக் கொண்டுள்ளது. Millerrand உம் கூட Dreyfusards க்கு எதிரான அதிவலது அச்சுறுத்தலுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்கும் தேவையால் உந்தப்பட்டிருப்பதாக கூறிக் கொண்டார். அவர் இணைந்த அந்த அரசாங்கம் இறுதியில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை இரத்த ஆற்றில் படுகொலை செய்தது.
1936 இல் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ தீவிர சோசலிஸ்டுகளின் ஒரு கூட்டணியான, மக்கள் முன்னணியை (Popular Front) அமைப்பதற்காக அதே மாதிரி கூற்றுக்கள் கூறப்பட்டன. தொழிலாள வர்க்க ஆதரவின் மூலம் அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்ட மக்கள் முன்னணி அரசாங்கம், பிரெஞ்சு முதலாளித்துவத்தை பாதுகாக்கவும் மற்றும் பரந்த பொது வேலைநிறுத்தத்தில் வெடித்தெழுந்த புரட்சிகர இயக்கத்தை கலைக்கவும் விடாப்பிடியாக வேலை செய்தது. தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தி, காட்டிக்கொடுத்து, சிதைத்த அதன் வேலைகள் முடித்ததும், 1940 இன் பொறிவிற்கும் மற்றும் பாசிச-ஆதரவு விச்சி ஆட்சியை ஸ்தாபிப்பதற்கும் களம் அமைக்கும் விதத்தில், அது வலதுசாரிகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தது.
சிராக்கிற்கு வாக்களிக்க கோருவதை நியாயப்படுத்துவதற்காக, ஸ்ராலினிச "மூன்றாவது காலகட்டத்தில்" குறிப்பாக ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்த ஆண்டுகளில் அதிதீவிர இடது கொள்கைகளுக்கு எதிரான லியோன் ட்ரொட்ஸ்கியின் போராட்டங்களை முன்னுதாரணமாக மேற்கோளிடும் எரிச்சலூட்டும் மோசடி முயற்சிகளும் சில வட்டாரங்களில் நடந்துள்ளன. அந்த காலக்கட்டத்தில் ட்ரொட்ஸ்கி, நாஜி அச்சுறுத்தலைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்க அமைப்புகளை எந்தவொரு கூட்டணியில் சிக்க வைப்பதையும் நிராகரித்து, பாசிசத்துடன் சமூக ஜனநாயகத்தை அடையாளப்படுத்திய ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச தலைமை பின்பற்றிய கொள்கையை எதிர்த்தார்.
எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி போராட்டத்திற்கான ட்ரொட்ஸ்கியின் பிரச்சாரமானது, “ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்" பெயரில் முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்த மக்கள் முன்னணியைக் கொண்டு ஸ்ராலினிஸ்டுகள் அடுத்தடுத்து வலது நோக்கி திரும்பியதுடன் எதையும் பொதுவாக கொண்டிருக்கவில்லை. ஸ்பானிய புரட்சியை அழித்ததுடன், பிரான்ஸ், சிலி மற்றும் டஜன் கணக்கான ஏனைய நாடுகளில் பேரழிவுகளுக்கு வழிவகுத்த அந்த கொள்கை தான், சிராக்கிற்கான பிரச்சாரத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
2002 இல் பிரான்சை 1932 ஜேர்மனியுடனோ, அல்லது லு பென்னை ஹிட்லருடனோ இயந்திரத்தனமாக அடையாளப்படுத்துவது தவறாக இருக்கும். தேசிய முன்னணிக்கும் நாஜிக்களுக்கும் இடையிலான அரசியல்ரீதியான மற்றும் கருத்தியல்ரீதியான ஒத்த தன்மைகள் என்னவாக இருந்தாலும், லு பென்னின் இயக்கம் இந்த கட்டத்தில் மிகப் பலவீனமாகவே உள்ளது. அதன் வெற்றிகள், உலகளாவிய முதலாளித்துவ பொறிவின் பாதிப்பின் கீழ், அழுகிப்போன குட்டி முதலாளித்துவப் பிரிவுகளின் ஒரு பரந்த தீவிரமயமாதலின் விளைவு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தொழிலாள வர்க்கத்தின் பழைய கட்சிகளின் திவால்நிலைமை மற்றும் நீண்ட சீரழிவால் உருவாக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் நோக்குநிலை பிறழ்ச்சியிலேயே பெரிதும் அவை வேரூன்றியுள்ளன.
இருந்தபோதும் வரலாற்று சமாந்தரங்கள் படிப்பினைகளைக் கொண்டுள்ளன. "லு பென்னைத் தடுத்து நிறுத்த" சிராக்கிற்கு வாக்களிக்குமாறு வாதிடுபவர்கள் ஜேர்மன் சமூக ஜனநாயவாதிகளின் அடியொற்றி நடக்கின்றனர், அவர்கள் 1932 இல், ஜேர்மன் ஜனாதிபதி தேர்தல்களில், "ஹிட்லரைத் தடுத்து நிறுத்துவதற்காக" பிற்போக்கு இராணுவவாத ஹிண்டன்பேர்க்கை (Hindenburg) ஆதரித்தனர். 1933 ஜனவரியில், ஜனாதிபதியாக, ஹிண்டர்பேர்க் தான் ஹிட்லரை ஜேர்மனியின் சான்செலராக அதிகாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜேர்மன் பேரழிவுகள் முழுவதும், சமூக ஜனநாயகமானது, பாசிசத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டும் எந்த முயற்சியையும் எதிர்த்து, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் முன்னால் அடிபணிந்து கிடந்தது.
லு பென் உடன் சிராக்கிற்கு கொள்கைரீதியில் எந்த அரசியல் வேறுபாடும் இல்லை. எதிர்காலத்தில், அரசியல்ரீதியில் அவர் உகந்த நிலைமையைக் கண்டால், முட்டுக் கொடுப்பதற்கு லு பென்னை நிச்சயமாக அழைக்கக்கூடும் அல்லது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அவர் கரத்தைப் பலப்படுத்துவதற்கு அவர் அரசாங்கத்தில் இணையக்கூடும்.
முக்கிய வரலாற்று பிரச்சினை என்னவென்றால் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் நிலைப்பாட்டை ஏற்பதும் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் பற்றிய எரியும் பிரச்சினைகள் உட்பட ஒவ்வொரு அரசியல் பிரச்சினை மீதும் அதன் சுயாதீனமான பலத்தை அபிவிருத்தி செய்வதும் அதற்கு அவசியமாகும். பகுப்பாய்வின் இறுதியில், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க கூடியது முதலாளித்துவ அரசு கட்சிகளும் அமைப்புகளும் கிடையாது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் பலமே அதன் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
இன்று முன்னிருக்கும் பாதை
இரண்டாம் சுற்று தேர்தலை புறக்கணிப்பதற்கான உறுதியான பிரச்சாரம், எந்த வேட்பாளர் ஜனாதிபதி பதவியை வென்றாலும் அவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கான சிறந்த தயாரிப்பாக இருக்கும். சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்பு விடுப்பவர்கள், வாக்குப்பதிவுக்குப் பின்னர் தவிர்க்க முடியாமல் அபிவிருத்தி அடையும் வர்க்க போராட்டங்கள் மற்றும் சமூக போராட்டங்களின் விளைவுகள் ஒருபுறம் இருக்கட்டும், வரவிருக்கின்ற மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல்களில் இந்த சிராக்-ஆதரவு பிரச்சாரத்தின் தாக்கங்களைக் கூட உதறி விட்டு, அரசியலானது மே 5 இல் தொடங்கி அன்றே முடிவடைந்து விடுவதைப் போல நடந்து கொள்கிறார்கள்.
கடந்த முறை சிராக் பிரான்சின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது என்ன நிகழ்ந்தது என்பதை நாம் நினைவு கூர்வோம். எலிசே மாளிகையில் அவர் நுழைந்து ஆறு மாதங்களுக்குள், பிரான்ஸ், 1968 மே-ஜூன் போராட்டங்களுக்குப் பிந்தைய மிகவும் சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் மாணவர் போராட்ட அலையால் அதிர்ந்தது. ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சமூக நலன்கள் மீது யூப்பே அரசாங்கத்தின் தாக்குதல்களால் தூண்டி விடப்பட்ட, 1995 நவம்பர்-டிசம்பர் போராட்டங்கள், பிரெஞ்சு முதலாளித்துவத்தை ஸ்தம்பிக்க செய்ததுடன், யூப்பே அரசாங்கத்தை கீழறுத்து, கோலிஸ்டுகளின் தோல்விக்கான நிலைமைகளை உருவாக்கி, ஜோஸ்பனுக்கும் மற்றும் உத்தியோகப்பூர்வ இடது தலைவர்களுக்கும் முற்றிலும் ஆச்சரியமூட்டிய விதத்தில், சோசலிஸ்டுகள் தலைமையிலான அரசாங்கம் தேர்ந்தெடுப்பதற்குரிய நிலைமைகளை உருவாக்கியது.
இந்த வரலாறைக் கருத்தில் கொண்டு பார்த்தால், "சிராக்கிற்கு 100 சதவீத வாக்கு" என்ற தற்போதைய பிரச்சாரம், 1995 போராட்டங்களையும் விட பல பரிமாணங்களை எடுக்கும் போராட்டங்களுக்கு முன்கூட்டியே தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக கடிவாளமிடும் ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. தேர்தல் முடிவில் சிராக்கிற்கு பெருவாரியான வாக்குகள் கிடைப்பது, ஒரு அரைப் பொனபாட்டிச உருவாக அவர் அரசியல் அதிகாரத்தை மிகப் பெரியளவில் விரிவுபடுத்தும். அவர் தொழிலாள வர்க்க நலன்களுக்கு எதிராக தனது அதிகாரத்தை ஈவிரக்கமின்றி பயன்படுத்துவார்.
சோசலிஸ்ட் கட்சி தலைவர்களும் மற்றும் "அரசாங்க இடதுகளின்" ஏனைய அமைப்புக்களது தலைவர்களும் இந்த நோக்கம் குறித்து முழு நனவுடன் உள்ளனர் என்பதற்கு அங்கே பல அறிகுறிகள் தென்படுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் நடத்த உள்ள தனியார்மயமாக்கல், வேலை நிலைமைகளை அழித்தல், வேலைகள் மற்றும் சம்பள வெட்டுக்கள் ஆகிய வலதுசாரி வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுவதற்கு அத்தகைய போராட்டங்கள் மிகக் கடினமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, இவ்வாறு அவர்கள் லு பென்னுக்கு எதிரான பரந்த ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறு வலியுறுத்துகின்றனர்.
ஒரு சமயம் தொழிலாள வர்க்கத்திற்காகப் பேசிய பழைய, காலாவதியாகிப் போன, புதைவடிவமாகிவிட்ட அமைப்புக்களின் பிற்போக்கு அரசியல் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது அத்தியாவசியமாகும் என்பதே கடந்த கால் நூற்றாண்டின் மாபெரும் படிப்பினையாகும். இந்த அமைப்புகள் இன்று அதிகாரத்துவ சுயநலன்கள் மற்றும் அரசு மானியங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு, வெற்று ஓடுகளுக்கும் சிறிது அதிகமாகி விட்டன.
இத்தகைய பழைய அமைப்புக்களுடன் பல தசாப்தங்களாக பொருந்தி இருந்ததன் பெருங்கேடான விளைவுகளை ஜோஸ்பனின் சொந்த அரசியல் போக்கில் (Trajectory) காணலாம். லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் கோட்பாடுகள் மற்றும் வரலாற்று நன்மதிப்புகளை சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு மூடுமறைப்பாக பயன்படுத்த முயலும் ஒருவருக்கு பாடநூல் வடிவிலான ஒரு உதாரணத்தை அவர் வழங்குகிறார். அவர் பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் மரணகதியிலான அபாயங்களை எதிர்கொண்டுள்ள ஒரு காலத்தில், சரியாக சொல்வதானால் அரசியல் பொறுப்பைக் கைவிட்டு, அவரின் அரசியல் தொழில்வாழ்வை அவமானகரமான விதத்தில் நிறைவு செய்துள்ளார்.
பிரெஞ்சு அரசியலும் மற்றும் உலக அரசியலும் ஒரு வரலாற்றுத் திருப்பு முனையில் உள்ளன. நீண்ட காலத்திற்கு முன்னரே ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, அனைத்தும் "அகநிலைக் காரணிகளை" அதாவது, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவையும் மற்றும் புரட்சிகர தலைமையையும் சார்ந்துள்ளன. முதலாளித்துவ பொதுக்கருத்தால் வசியப்படுத்தி ஒரு தலைமையை உருவாக்க முடியாது என்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் மீதும் மற்றும் அதன் அரசியல் பலத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பார்த்தால், ஜோஸ்பன் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் தோல்வி சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒரு பாரிய அரசியல் இயக்கத்தின் அபிவிருத்திக்கு வழியைத் திறந்துவிடும்.
ஏப்ரல் 21 இல் LO, LCR மற்றும் PT க்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உண்மையான உணர்வுகள் மட்டுமே வெளிறிய பிரதிபலிப்பைக் கண்டன. இந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது அவசியமானது: உங்களது தலைவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில், உங்களது அமைப்புக்கள் அவற்றின் முன் இப்போது வைக்கப்பட்டிருக்கும் முக்கிய பொறுப்பினைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இந்நாள வரை எடுத்துக்காட்டி உள்ளன என்று கூற வேண்டியுள்ளது. தற்போதைய நெருக்கடியில் தெளிவான வகையில் தலைமை கொடுக்குமாறு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். இதன் அர்த்தம் உறுதியாக மே 5 ஜனாதிபதிக்கான வாக்குப்பதிவைப் புறக்கணிப்பதற்கான அழைப்பை ஏற்பதாகும். உலக சோசலிச வலைத் தளம், பிரான்சிலுள்ள அனைத்து சோசலிஸ்டுகளையும் இந்தக் கோரிக்கையை எழுப்புமாறும் மற்றும் அதற்காக போராடுமாறும் கேட்டுக் கொள்கிறது.