Print Version|Feedback
India: Stalinist-led unions call token protest against frame up of Maruti Suzuki workers
இந்தியா: ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான தொழிற்சங்கங்கள் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கிற்கு எதிராக அடையாள எதிர்ப்புக்கு அழைப்பு விடுக்கின்றன
By Deepal Jayasekera
1 April 2017
இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இந்தியாவின் இரட்டை ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்புக்கள், “மாருதி சுசூகி தொழிலாளர்களுடனான ஒற்றுமையுணர்வுக்கு ஒரு அடையாளமாகவும்” மேலும் அவர்களது “நிபந்தனையற்ற விடுதலைக்கு” கோரிக்கை விடுக்கவும், ஏப்ரல் 5 புதன்கிழமையன்று, நாடு முழுவதிலுமான ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.
CPM, CPI ஆகிய இரு கட்சிகள் மற்றும் அவர்களது தொழிற்சங்கங்கள், இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions - CITU) மற்றும் அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress - AITUC) இவையனைத்தும் மாருதி சுசூகி தொழிலாளர்களை திட்டமிட்டே தனிமைப்படுத்தியுள்ளன. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதிலும், மோசமான ஊதியங்கள், ஒப்பந்த தொழிலாளர் முறை, மற்றும் கொத்தடிமை நிலை வேலை நிலைமைகள் குறித்த எந்தவொரு எதிர்ப்பையும் இல்லாதொழிக்க நிறுவனமும் அரசாங்கமும் இணைந்த கூட்டின் இலக்காக அவர்கள் இருந்துவரும் நிலைமையில் மாருதி சுசூகி தொழிலாளர் நிலையை பகிரங்கப்படுத்தவும், மேலும் அவர்களின் பாதுகாப்பிற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பொருட்டு எந்தவொரு பிராச்சாரத்தை மேற்கொள்ளவும் ஸ்ராலினிஸ்டுகள் இதுவரை எதையுமே செய்யவில்லை.
மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு வழக்கு தொடரப்பட்டதுடன், நிறுவனம் அதன் ஹரியானா மானேசர் வாகன அசெம்பிளி ஆலையின் 2,300 போர்க்குணம் கொண்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆன பின்னர் தற்போது CITU மற்றும் AITUC ஒரு நாள் அடையாள ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாட்டை செய்யும் நிர்ப்பந்தத்தில் இருப்பதாக உணர்கின்றன. ஏனெனில் அவை இந்திய நீதிமன்றங்களின் மூலமாக வழங்கப்பட்ட வர்க்க நீதி குறித்து தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஆழ்ந்த கோபம் உள்ளது என்பதை அவை உணர்ந்துகொள்வதாலாகும்.
ஒரு சட்ட மோசடியில், கடந்த மாதம் 13 தொழிலாளர்கள் மீதான இட்டுக்கட்டப்பட்ட கொலை குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றங்கள் அவர்களை கண்டித்து ஆயுள் தண்டனை விதித்தது. இந்த 13 பேரில் பன்னிரண்டு பேர் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தின் (Maruti Suzuki Workers Union-MSWU) தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஆவார்கள். இந்த தொழிற்சங்கம், ஒரு அரசாங்க ஆதரவுள்ள நிறுவனத்தின் தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிரான கசப்பான போராட்டத்தின்போது இந்த தொழிலாளர்களால் மானேசர் ஆலையில் 2011-12ல் ஸ்தாபிக்கப்பட்டது.
தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரும் வாகன தயாரிப்பு மற்றும் உற்பத்தி மையமான குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதி தொழிலாளர்களுள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவை காட்டும்விதமாக ஒன்றுகூடும் கூட்டத்திற்கு அரசாங்கம் விதித்திருந்த ஒரு தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
ஏப்ரல் 5 அன்று ஆர்ப்பாட்டங்களுக்கு ஸ்ராலினிஸ்டுகள் அழைப்பு விட்டிருப்பதன் நோக்கம், உள்ளடங்கியிருக்கும் கோபத்தை தணிப்பதாகும். அவர்களது அரசியல் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாள வர்க்கத்தை வைத்திருந்து தசாப்த காலமாக அவர்கள் செய்தது போன்று இந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கு அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது நல்லதென்று கருதி, பாதிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை ஆதரிப்பதாய் பாவனை செய்வதன் மூலமாக, தங்கள் கந்தலாகிப்போன நம்பகத்தன்மையை வலுப்படுத்திக்கொள்ள முனைகின்றனர். ஸ்ராலினிச தொழிற்சங்க தலைவர்கள், மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான நிறுவனம் மற்றும் மாநில அரசாங்கத்தின் ஜோடிப்பு வழக்கிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் தொழில்துறை தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலுக்கும் மற்றும் சுயாதீன அரசியல் வலிமைக்கும் உந்துதலாக மாறிவிடுவதையும் தடுப்பதற்கு தீர்மானித்து உள்ளனர்.
மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கிற்கு ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் எதிர்ப்பு என்பது அடிப்படையிலேயே மோசடியான தன்மையை கொண்டிருப்பதை இன்னும் மூன்று குறிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
முதலாவதாக, அவர்கள் ஏப்ரல் 4ம் தேதிக்கு மாறாக, ஏப்ரல் 5 புதன்கிழமையை அவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்ற நாளாக தேர்வு செய்திருந்தனர். ஏனென்றால் ஏப்ரல் 4ம் தேதி, சிறையிலடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக “அனைத்து இந்திய மற்றும் சர்வதேச எதிர்ப்பு தினமாக” MSWU நியமித்த நாளாகும்.
CITU மற்றும் AITUC இரண்டுமே இதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனால் சந்தேகத்திற்கு இடமில்லை அது ஏனென்றால், அவர்கள் எந்தவழியிலும் தங்களது நடவடிக்கைகளை எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் உட்பட தொழில் நடவடிக்கைக்கு ஏப்ரல் 4 ஏற்ற நாளாக இருக்கவேண்டும் என்ற தெரிவித்து பின்போடப்பட்ட பின்னர் MSWU இன் அழைப்புடன் தொடர்புபடுத்த விரும்பவில்லை.
இரண்டாவதாக, இன்னும் உண்மைகளை அம்பலப்படுத்தும் விதமாக, ஸ்ராலினிஸ்டுகள் வெளிப்படையாக பெருவணிக சார்பு கட்சிகளுடன் ஒழுங்கமைந்த பல்வேறு ஏனைய தொழிலாளர் கூட்டமைப்புக்களுடன் இணைந்து ஏப்ரல் 5 அன்று தங்களது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றனர். இவற்றில் பெரும்பாலும் முக்கியமானது இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (Indian National Trade Union Congress-INTUC), 1947ல் அது ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு கொண்டதாகும்.
மிக சமீபகாலம் வரையிலும் இந்திய முதலாளித்துவத்தின் பிரதான கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது மட்டுமல்ல; INTUC இடமிருந்து அந்த அளவுக்கு எதிர்ப்பு அலை எழும்பாத நிலையில், அது மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான சதி வேட்டையில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்தது.
தேசிய மற்றும் ஹரியானா மாநில அரசாங்கங்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகித்த சமயத்தில் தான் இந்த ஜோடிப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. நிறுவன கட்டுப்பாட்டிலிருந்த தொழிற்சங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியினை நசுக்கிவிட முயற்சிப்பதில் ஹரியானா காங்கிரஸ் அரசாங்கம் மாருதி சுசூகி நிறுவனத்திற்கு உடந்தையாக செயலாற்றியது. மேலும், இந்த “தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ஒரு தொழிற்சங்கம் உள்ளது” என்று கூறி MSWU சட்டபூர்வமற்றது என வலியுறுத்தி, போராளி தொழிலாளர்களின் ஒழுங்குபடுத்தப்பட்ட பணி நியமனத்துக்கும், பணிநீக்கத்துக்கும் வசதிசெய்யும் வகையில் நிறுவனம் வடிவமைத்த ஒரு “நன்னடத்தை பத்திரத்தில்” தொழிலாளர்கள் கையெழுத்திடவேண்டும் என்று கோரப்பட்டது; தொழிலாளர் நடவடிக்கைகளை ஒட்டுமொத்தமாக உடைப்பதற்கு பொலிஸ் மீண்டும் மீண்டும் அணிதிரட்டப்பட்டது; MSWU “பயங்கரவாதிகள்” மற்றும் “வெளியாட்களுடன்” இணைந்திருந்து நாட்டின் பொருளாதாரத்தை “முறியடித்துவிட” தீர்மானித்துள்ளது எனவும் ஆலோசனை வழங்கியது; போன்றவற்றை வலியுறுத்தியது.
ஜுலை 18, 2012க்கு பின்னர் நிறுவனம் கைகலப்புக்கும், நெருப்பிடலுக்கும் தூண்டிவிட்டது, ஹரியானா காங்கிரஸ் அரசாங்கம் தொழிலாளர்கள் மீது பொலிஸை ஏவிவிட்டது. இது, போலியான ஜோடிப்பு குற்றச்சாட்டுக்களின் பேரில் பாரியளவிலான கைது நடவடிக்கைக்கும், ஒட்டுமொத்த MSWU இன் தலைவர்கள் உட்பட 150 தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டுக்கும் வழிவகுத்தது. மாருதி சுசூகி தொழிலாளர் தொகுப்பிலிருந்து பெரும் தொழிலாளர்களின் பணிநீக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கம் முழுமையாக ஆதரவளித்தது, மேலும் நிறுவனம் பெருமளவிலான புதிய தொழிலாளர்களை கொண்டு மீண்டும் திறக்கப்பட்டபோது, தொழிற்சாலைக்குள் நூற்றுக்கணக்கான பொலிஸை நிலைநிறுத்தியது.
மூன்றாவதாக, CITU மற்றும் AITUC இரண்டும் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கு குறித்த எதிர்ப்பை ஒழுங்கமைக்க உரிமை கோருகின்ற போதும், அவற்றின் மூல அரசியல் கட்சிகள் அது குறித்து மூச்சுக்கூட விடவில்லை.
13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு மார்ச் 10ம் தேதி தண்டனை வழங்கப்பட்டது குறித்தும், இந்தியாவின் தண்டனைக்குரிய அமைப்பு எனும் வாழும் நரகமான சிறையில் தள்ளும் விதமாக 18 ஏனைய தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்தும், CPM அல்லது CPI எதுவும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கு பற்றி அவர்களது இணைய தளங்கள் முற்றிலும் மௌனம் சாதிக்கின்றன. CPM இன் வாராந்திர ஆங்கில மொழி பத்திரிகையான People’s Democracy யிலும் இதுவே உண்மையாகிறது. மார்ச் 10 லிருந்து இது மூன்று செய்தி வெளியீடுகளை பிரசுரித்துள்ளது, அவற்றில் மாருதி சுசூகி தொழிலாளர்களை பற்றி தெரிவிக்கக்கூடிய பொருத்தமான ஒரு வார்த்தையை கூட காணமுடியவில்லை.
ஆயினும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற அனைவரும் முதலீட்டாளர் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காகவும், இந்தியாவை உலகின் மலிவுகூலி உழைப்பின் தலைநகராக உருவாக்குவதற்கும் நோக்கம் கொண்டுள்ள இந்திய பிரதம மந்திரி மோடியின் “இந்தியாவில் உற்பத்திசெய்வோம்” திட்டத்தின் வெற்றியை உறுதிபடுத்துவதற்காகவும், வழக்கு விசாரணையின் இறுதி கட்டங்கள் உட்பட, மாருதி சுசூகி தொழிலாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக தண்டிக்கப்படவேண்டும் என்று திரும்ப திரும்ப அறிவித்து வருகின்றனர்.
சந்தேகமே இல்லை, மாருதி சுசூகி நிறுவன ஜோடிப்பு வழக்கு மீதான எந்தவொரு விமர்சனமும் இந்திய அரசியல் ஸ்தாபகத்துக்குள் அதன் வசதியான உறவுகளை பாதிக்கும் என்றே CPM மற்றும் CPI இன் தலைவர்கள் கணக்கிடுகின்றனர். இந்துமத மேலாதிக்கவாத BJP க்கு எதிராக மதசார்பின்மையை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணியை புதுப்பிப்பதற்கான அவர்களது முயற்சிகளையும் இவை உள்ளடக்கியுள்ளது.
ஸ்ராலினிச அரசியல் தலைவர்களின் இந்த ஆழ்ந்த மௌனம், CITU-AITUC தலைமையிலான ஏப்ரல் 5ம் தேதிய ஆர்ப்பாட்டங்களின் முற்றிலும் இழிந்ததும், அரசியல்ரீதியாக மோசடியான தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்தவித தீவிர நடவடிக்கை எடுக்கவும் முற்றிலும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதுடன் இந்திய தொழிலாளர்களின் மத்தியிலுள்ள போர்குணத்தையும் மற்றும் வர்க்க ஒருமைப்பாட்டினையும் தணித்து, ஊக்கத்தை கெடுத்துவிட்டோம் என்று அவர்களுக்கு நம்பிக்கை வந்தவுடன் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவர்.