ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Maruti Suzuki India workers challenge cheap-labor regime

We are determined this time to fight to the end”

இந்தமுறை நாங்கள் இறுதிவரை போராட தீர்மானித்துள்ளோம்"

மலிவுக்கூலி ஆட்சிக்கு மாருதி சுஷூகி இந்தியா தொழிலாளர்கள் சவால் விடுக்கின்றனர்

By Rajesh Tyagi
22 September 2011

ஹரியானா, மானேசரிலுள்ள மாருதி சுஷூகி கார் அசெம்பிளி ஆலையிலிருந்து கதவடைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களோடு நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில், டெல்லியிலுள்ள உலக சோசலிச வலைத் தள ஆதரவாளரால் பின்வரும் அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. இது, பதிப்பிற்கு ஏற்ற விதத்தில் சிறியளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


மாருதி சுஷூகி மானேசர் கார் அசெம்பிளி ஆலையின் சாலையோரத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாருதி சுஷூகி தொழிலாளர்கள். ஆலைக்கு நேர்எதிரில் ஒன்றுகூடுவதற்கு ஆலை நிர்வாகமும், பொலிஸூம் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

போராட்டத்தில் இறங்கிய தொழிலாளர்களுக்கு கதவடைப்பு அறிவித்த பின்னர், மாருதி சுஷூகி இந்தியா நிர்வாகம் புதிய தொழிலாளர்களை நியமித்தும், நிர்வாகத்தின் பிடியிலிருக்கும் ஒரு தலையாட்டி தொழிற்சங்கமான மாருதி உத்யோக் காம்கார் தொழிற்சங்கத்தில் இணைந்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய தற்போதைய தொழிலாளர்களின் உதவியுடனும் உற்பத்தியை உயிர்ப்போடு வைத்திருக்க தேவையான அனைத்து முயற்சிகளிலும் ஒருமுனைப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைக்கவும், மாருதி சுஷூகி தொழிலாளர்கள் சங்கம் (MSEU) என்ற அவர்களின் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பதற்கான மற்றும் பதிவு செய்வதற்கான அவர்களின் கோரிக்கையைக் கைவிடும்படி அவர்களை அடிபணியச் செய்யவும் அவ்வாறு செய்யப்படுகிறது. மானேசர் MSI தொழிலாளர்கள் நீண்டகாலமாக இந்த கோரிக்கைக்காக போராடி வருகின்றனர்.

ஒரு "நன்னடத்தை பத்திரத்தில்" கையெழுத்திட மறுத்தமைக்காக, ஆகஸ்ட் 29 இல் தொழிலாளர்களுக்கு கதவடைப்பை அறிவித்ததில் இருந்து, குர்காவ்வில் உள்ள மானேசரின் Phase-III, பிரிவு 8இல் அமைந்துள்ள ஆலையின் இரண்டாவது கதவிற்கு வெளியில் தொழிலாளர்கள் ஒரு தர்ணா (sit-down) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழில்துறை சட்டத்திலுள்ள எந்த விதிக்கோ அல்லது நெறிமுறைக்கோ பொருந்தாத அத்தகைய ஒரு பத்திரத்தில் கையெழுத்திட நிர்பந்திப்பதென்பது, சட்டவிரோதம் மட்டுமல்ல, மாறாக அது சட்டத்திற்குப்புறம்பான தொழில் நடைமுறையுமாகும். அதற்காக கட்டாயப்படுத்தும் நிர்வாகிகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கையும் எடுக்கலாம் என்பதைக் கூற வேண்டியதே இல்லை. ஆனால் நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஹரியானா அரசாங்கம், அதன் கடுமையான வடிவங்களோடு அதற்கு உடந்தையாகவும் உள்ளது.

மாருதி சுஷூகி நிர்வாகத்துடன் சேர்ந்து கொண்டு, ஹரியானா மாநில முதலமைச்சர் புபீந்தர் சிங் ஹோடா தாம் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட அனுமதிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இந்த பகிரங்கமான சட்டத்திற்குப்புறம்பான அறிவிப்பு வெளியான உடனே, MSEUஐ பதிவு செய்வதற்கான தொழிலாளர்களின் விண்ணப்பத்தை தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலுவலகம் நிராகரித்தது.

கதவடைப்பு அறிவிக்கப்பட்ட முதலிரண்டு வாரங்களில், யாருடைய உதவியோடு நிர்வாகத்தால் உற்பத்தியின் வினியோகம் மற்றும் ஒப்படைப்பு வேலைகளைச் செய்ய முடிந்ததோ, MSI மானேசர் ஆலையிலுள்ள அந்த 350 சரக்கு-கையாளும் தொழிலாளர்களும் கூட, கதவடைப்பிற்கு ஆளான உற்பத்தி தொழிலாளர்களின் கரங்களை பலப்படுத்த செப்டம்பர் 14இல் இருந்து வேலையை நிறுத்தினர். சரக்கு-கையாளும் தொழிலாளர்கள் அவர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச கூலிகளுக்கு மாறாக, ஓட்டுனர்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஒரேசீரான விகிதத்தில் தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டுமென்ற அவர்களின் சொந்த கோரிக்கையோடு வந்துள்ளனர். சரக்கு-கையாளும் தொழிலாளர்களின் போராட்டத்தோடு, மானேசரிலுள்ள மாருதி சுஷூகி ஆலையின் நடவடிக்கைகள் ஏறத்தாழ நிறுத்தப்படும் நிலைக்கு வந்துவிட்டது. தொழிலாளர்களின் மனதிடத்தைக் குலைக்க நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கும் பெயரளவிற்கான உற்பத்தி, தரங்குறைந்துள்ளது. அத்தோடு தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் பூர்த்தி செய்ய முடியாததால், அவை வினியோகத்திற்கு அனுப்ப முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

சுஷூகி பவர்-ட்ரைன், சுஷூகி காஸ்டிங்க்ஸ் மற்றும் சுஷூகி மோட்டார்-சைக்கிள் இந்தியா ஆகிய மூன்று சுஷூகி துணைநிறுவனங்களில் இம்மாதம் 14ஆம் தேதி 7,000 தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆதரவு வேலைநிறுத்த போராட்டத்தால், மாருதி சுஷூகி நிர்வாகத்தின் மீது பெரும் அழுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த ஆதரவு நடவடிக்கையானது, குர்காவிற்கு இந்திய ஜனாதிபதி வரவிருந்த 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு பாரிய தொழிலாளர்களின் போராட்டத்தைத் தோற்றுவித்திருந்தது.

எவ்வாறிருந்த போதினும், அந்த முக்கிய தருணத்தில், ஏஐடியுசி (அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ்) மற்றும் சிஐடியு (இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) ஆகியவற்றின் ஸ்ராலினிய தொழிற்சங்க தலைவர்கள் தலையீடு செய்தனர். தொழில்வழங்குனர்களின் பொய்யான வாக்குறுதிகளிலும், ஏமாற்றுத்தனத்திலும் நம்பிக்கை வைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்த அவர்கள், 16ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பேரணியையும் ஒருதலைபட்சமாக இரத்து செய்விட்டு, மூன்று சுஷூகி துணைநிறுவனங்களிலும் நடந்துவந்த வேலை நிறுத்தங்கள் முடிந்துவிட்டதாகவும் அறிவித்தனர்.

மானேசர் மாருதி-சுஷூகி தொழிலாளர்களுக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையாதலால், தாங்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடரப் போவதாக கூறி, சுஷூகி துணைநிறுவனங்களின் தொழிலாளர்கள் ஸ்ராலினிய தொழிற்சங்க தலைவர்களின் பேச்சைக் கேட்க மறுத்த பின்னர், ஸ்ராலினிஸ்ட் தலைவர்கள் ஆதரவு நடவடிக்கையை முடித்துக் கொள்ள அழைப்புவிடுக்குமாறு MSEU தொழிலாளர்களுக்கு அழுத்தமளித்தனர். ஸ்ராலினிய தொழிற்சங்க அதிகாரிகளின் அழுத்தத்தின்கீழ், மாருதி சுஷூகி மானேசர் ஆலை தொழிலாளர்களின் தலைவர் ஆதரவு வேலைநிறுத்த நடவடிக்கையை முடித்துக் கொள்ளுமாறு முறையிட்ட பின்னரே அது முடிவுக்கு வந்தது.

ஸ்ராலினிஸ்டுகளின் இந்த நேரடியான காட்டிக்கொடுப்பால் மகிழ்ச்சியடைந்த மற்றும் துணிச்சல் பெற்ற தொழில்வழங்குனர்களும், அரசாங்கமும் சுஷூகி துணைநிறுவன தொழிலாளர்களிடம் செய்திருந்த பல வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கின. அத்தோடு MSI தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் அனுமதிக்கப்பட வேண்டுமானால், அதற்கொரு நிபந்தனையாக கதவடைப்பிற்கு உள்ளாகியிருக்கும் தொழிலாளர்கள் "நன்னடத்தை பத்திரத்தில்" கையெழுத்திட வேண்டுமென்ற அதன் கோரிக்கையை MSI மீண்டும் தூக்கிப்பிடித்தது.

பின்னர், தொழில்வழங்குனருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திட்டத்தின்படி, உள்ளூர் ஜிம்கானா கிளப்பில் நடந்த ஒரு கூட்டத்தின் முடிவில் 18ஆம் தேதி மாலை, இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில், தொழிலாளர்கள் தரப்பிலிருந்த மூன்று பேச்சுவார்த்தையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தைக் குறித்து தொழிலாளர்கள் உயர்மட்ட ஏஐடியுசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால் தொலைபேசி வழியாக அவரை தொடர்பு கொள்ள முயன்ற பல முயற்சிகளும் வீணாகின. அடுத்தநாள் காலை, ஏஐடியுசி தலைவரின் மனைவி ஒரு தொழிலாளரை, குறைந்தபட்சம் அவரே திருப்பி அழைத்து, அதிகாலையில் தொந்தரவு செய்ததற்காக கண்டித்தார். அதற்கடுத்தநாள், ஏஐடியுசி கைது நடவடிக்கைக்கு எதிராக போராடுவதற்கும், அதற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் இறங்க தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுக்கு அழைப்புவிடுப்பதற்கும் மாறாக, கைது செய்யப்பட்ட தொழிற்சங்க தலைவர்களுக்கு பிணை கேட்டு விண்ணப்பிப்பதில் ஒருமுனைப்பட்டது.

கடந்த ஜூனில், மானேசர் MSI தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஓர் எழுச்சிமிக்க 13 நாள் வேலைநிறுத்தத்திலிருந்து ஸ்ராலினிய தலைவர்கள் நழுவிப் போயிருந்தனர். அப்போது அந்த வேலைநிறுத்தம் அதன் உச்சத்தில் இருந்தது. அரசாங்கம் தொழிலாளர்களின் குறைகளைக் கருத்தில் எடுக்குமென்றும், தொழிலாளர்களின் பிரதிநிதித்துவ அமைப்பாக MSEU-ஐ பதிவு செய்யுமென்றும் அரசாங்கம் அளித்த அர்த்தமற்ற உத்தரவாதங்களின் அடிப்படையில் அந்த போராட்டத்தின் தலைமை வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டது.

ஜூன் 4இல் தொடங்கி இருந்த அந்த வேலைநிறுத்த நடவடிக்கை, 16 வரையில் தொடர்ந்தது. மாருதி சுஷூகி அசெம்பிளி ஆலையின் கதவிற்கு முன்னால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக மானேசர் தொழில்துறை வளாகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குவிந்த போது, அரசாங்கம் அந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமென்று அறிவித்தது. மானேசர் தொழில்துறை வளாகத்தில் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் பங்கெடுக்கும் மற்றொரு பாரிய வேலைநிறுத்த நடவடிக்கை 20ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அரசாங்கத்தின் வாயளவிலான உத்தரவாதங்களை ஏற்குமாறு ஏஐடியுசி-சிஐடியு தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். தொழிலாளர்கள் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டார்கள். அது வெட்ககேடாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 11 தொழிலாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு தைரியம் அளித்தது. அந்த ஒழுங்குமீறல் நடவடிக்கைகள் வெறுமனே ஒரு வழக்கத்திற்காகவே செய்யப்படுவதாகவும், எந்த தொழிலாளர்கள் மீதும் உண்மையாக நடவடிக்கை எடுக்கப்படாது என்று நிர்வாகம் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் ஸ்ராலினிச தலைவர்கள் உத்தரவாதமளித்தனர்.

தொழிலாளர்களின் போராட்ட உணர்வு வற்றியவுடன், MSEU தொழிற்சங்கத்தை பதிவு செய்வதன் மீது அரசாங்கம் மட்டும் அதன் வாக்குறுதிகளை மீறவில்லை, மாறாக ஜூன் வேலைநிறுத்தத்தில் கருவியாக இருந்ததற்காக, மேற்பார்வையாளரோடு கைகலப்பில் ஈடுபட்டார் என்ற பொய்காரணத்தோடு, ஜூலை 28இல், நிர்வாகம் 6 நிலையான தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்தது. இரண்டு பேரின் பணிநீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்ட போதினும், நான்கு பேருக்கு பொலிஸின் குற்றப்பத்திரிக்கை அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அவ்விருவருக்கு எதிராகவும் கூட பொலிஸ் குற்றப்பத்திரிக்கையை வெளியிட்டது. ஆகஸ்ட் 23இல் மேலும் மூன்று தொழிலாளர்கள் நீக்கப்பட்டனர். 24ஆம் தேதி மற்றொரு தொழிலாளர் நீக்கப்பட்டார்.

28ஆம் தேதி இரவு, கலகத்தடுப்பு உடையணிந்த ஒரு பலமான பொலிஸ் படை மானேசர் ஆலையின் உள்ளே நிறுவப்பட்டது. 29ஆம் தேதி நிர்வாகத்தால் கதவடைப்பு அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் நடவடிக்கையில் இறங்க தொடங்கியதும், தொழிலாளர்களைத் தாக்கவும், நிறுவன இடத்திலிருந்து அவர்களை வெளியேற்றவும் நிர்வாகத்தால் 150 முரடர்கள் கொண்டு வந்து திணிக்கப்பட்டனர். கதவடைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து, 23 தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; பொய் குற்றச்சாட்டுகளுக்காக 34க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹரியானாவின் மானேசரில் ஆலையை மூடிவிட்டு, குஜராத்தில் செயல்பாடுகளை அமைக்க தாங்கள் ஆலோசித்து வருவதாக சுஷூகி முதலாளிகள் கூறியுள்ளனர். வாகனத்துறை உற்பத்தியாளர்களுக்கு குஜராத் ஒரு பாதுகாப்பான இடமென்று ஏற்கனவே உத்தரவாதம் அளித்துள்ள நரேந்திர மோடியின் அதிதீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க அரசாங்கம் குஜராத்தில் ஆட்சியிலுள்ளது. மேற்கு வங்காளத்தின் சிங்கூரிலிருந்து டாடா நிறுவனம் அதன் நேனோ கார் உற்பத்தி ஆலையை மேற்கிந்திய மாநிலமான குஜராத்திற்கு மாற்றிய பின்னர், அது இந்தியாவில் வாகனத்துறை உற்பத்தியாளர்களின் மிகவும் வேகமாக விரிவடைந்துவரும் மையமாக வளர்ந்துள்ளது.

MSIஐ ஹரியானாவிலேயே வைத்திருக்க அதை சமாதானப்படுத்தும் முயற்சியாக, அம்மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கம் சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் அந்த கார் உற்பத்தியாளருக்கு உதவி வருகிறது. தொழிலாளர்கள் "நன்னடத்தை உடன்படிக்கையில்" கையெழுத்திட வேண்டும், மேலும் தொழிற்சங்கம் பதிவு செய்யும் அவர்களுடைய கோரிக்கையை அவர்கள் மறந்துவிட வேண்டுமென ஹரியானா தொழிலாளர்நலத்துறை கமிஷனர் சத்வாந்த் அஹ்லாவத் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.

சுமார் 60 சதவீத மானேசர் தொழிலாளர்கள், மானேசர் மற்றும் குர்காவைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வருகின்றனர். ஆகவே அவர்களின் போராட்டம் கிராமங்களில் இருந்தும் சிறிது ஆதரவைப் பெற்றுள்ளது. இதனால் நேரடியான பொலிஸ் ஒடுக்குமுறையைக் கையாள்வதில் அரசாங்கம் கூடுதல் சிரமத்திற்குள்ளாகி உள்ளது.

நாங்கள் பேசிய தொழிலாளர்களின் உணர்வுகளை ஒரு தொழிலாளர், சுனில், சுருக்கமாக வெளியிட்டார். அவர் எங்களிடம் கூறியது, “நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. அத்தோடு ஒரு தொழிற்சங்கத்தை ஸ்தாபிக்கும் உரிமைக்காக இறுதிவரை போராட தீர்மானமாக உள்ளோம்,” என்றார்.

அடிமட்ட தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க தீர்மானமாகவுள்ள நிலையில், MSI-யும் அரசாங்கமும் ஸ்ராலினிய தொழிற்சங்க தலைவர்களின் மத்தியஸ்தம் மூலமாக இந்த நெருக்கடியை தீர்க்க பார்த்து வருகிறது. ஏஐடியுசி-சிஐடியு அதிகாரிகளைப் பொறுத்த வரையில், தங்களின் உத்தரவுகளைப் பின்பற்ற தொழிலாளர்களை மிரட்டுவது, மற்றும் மாருதி சுஷூகி தொழிலாளர்களின் போராட்டம் ஏனைய ஆலைகளுக்கும், வேலையிடங்களுக்கும் பரவிவிடாமல் தடுக்கும் விதத்தில், அது கைக்கடந்து சென்றுவிடாமல் தடுப்பது உட்பட அவர்களால் முடிந்தமட்டிற்கும் முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.

“நடவடிக்கை குழுவை" ஏற்படுத்துதல் என்ற பெயரில், மிகவும் தீவிர உட்கூறுகளை வெளியில் அனுப்பும் நோக்கில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) மற்றும் ஹிந்த் மஜ்தூர் சபா (HMS) ஆகியவற்றை உட்கொண்டிருக்கும் தொழிலாளர்கள் கூட்டமைப்புகளின் ஒரு சம்மேளனத்தை ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் ஸ்தாபித்து வைத்துள்ளன. INTUC என்பது மத்தியிலும், ஹரியானாவிலும் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க முன்னனியாகும். அது MSI உடன் கைகோர்த்து வேலை செய்து வருகிறது. HMS என்பது ஒருசமயத்தில் இருந்த சோசலிச-ஜனநாயக கட்சியினரின் தொழிற்சங்க முன்னணியாகும். அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்னரே பல்வேறு ஜாதிய மற்றும் மதவாத முதலாளித்துவ கட்சிகளுக்குள் சிதறி போயினர்.

முதலாளித்துவ முதலாளிமார்களுக்கும், அவர்களின் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களுக்கும் ஆதரவாக வர்க்க போராட்டங்களை ஒடுக்குவதில் ஸ்ராலினிஸ்டுகள் நீண்டகால சாதனைகளைக் கொண்டுள்ளனர். காங்கிரஸில் இருந்து விரட்டிவிடப்படும் வரையில், மே 2004 முதல் ஜூன் 2009 வரையில் அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பெருவர்த்தக அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்தனர். கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் மாநில அரசாங்கங்களை ஸ்தாபித்திருந்த ஸ்ராலினிஸ்டுகள் அதே முதலீட்டாளர்களுக்கு சார்பான மற்றும் தொழிலாளர்-விரோத கொள்கைகளைப் பின்பற்றினர். நாடாளுமன்ற ஸ்ராலினிச கட்சிகளைப் போலவே மாவோயிஸ்டுகளும், “ஜனநாயக புரட்சியில்" தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டாளிகளாக இருக்கக்கூடிய, முதலாளிமார்களின் தேசிய-முற்போக்கு பிரிவுகள் உள்ளன என்ற வாதத்தை மேலெடுக்கின்றனர்.

மானேசர் தொழிலாளர்களின் போராட்டம் தெளிவாக எடுத்துக்காட்டுவதைப் போல, ஸ்ராலினிஸ்டுகள் அவர்களின் தலைமையின்கீழ் கட்டவிழும் தொழிலாளர்களின் போராட்டங்களை தொழிலாளர் வர்க்கத்தின் எதிரிகளுக்கு எதிரான அவர்களின் ஒரு பரந்த அரசியல்ரீதியிலான போராட்டமாக பரவவிட அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, அத்தகைய போராட்டங்கள் ஒரு நனவுபூர்வமான வர்க்க போராட்டமாக மாறுவதிலிருந்து அவற்றை தடுக்க, அவர்கள் அவற்றை காட்டிக்கொடுத்து, மிதப்படுத்துவார்கள்.

மானேசரில், போராட்டத்தில் இறங்கியுள்ள தொழிலாளர்கள் அவர்களின் ஆதரவிற்கும், ஐக்கியத்திற்கும் அங்கே சுற்றியுள்ள ஆலைகளிலுள்ள அவர்களின் உடன்பிறவா தொழிலாளர் தோழர்களுக்கு அழைப்புவிடுப்பதும், பணக்கார முதலாளிகள் மற்றும் அவர்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு வர்க்க போராட்டத்தை நிலைநாட்டுவதுமே அவர்களின் முன்னால் இருக்கும் பாதையாகும். ஆனால் இதற்காக, போராட்டத்திலிருந்து முதலாளித்துவ மற்றும் சந்தர்ப்பவாத ஸ்ராலினிச தலைமையை தொலைத்தொழிப்பது, தவிர்க்க முடியாததாக உள்ளது.