Print Version|Feedback
India: Maruti strike continues after occupation ends under police threat
இந்தியா: பொலிஸ் அச்சுறுத்தலின் கீழ் உள்ளிருப்பு முடிந்த பின்னர் மாருதி வேலைநிறுத்தம் தொடர்கிறது
By Deepal Jayasekera
17 October 2011
மாருதி சுஷூகி இந்தியா (MSI) நிறுவனத்தின் மனேசரில் உள்ள கார் இணைப்பு ஆலையில் வேலை நிறுத்தம் செய்தவர்கள் தங்கள் எட்டு நாள் ஆலை உள்ளிருப்புப்போராட்டத்தை வெள்ளி பின்னிரவு பொலிஸ் அச்சுறுத்தலை ஒட்டி நிறுத்திக் கொண்டனர். கிட்டத்தட்ட 1,500 பொலிஸ் துருப்புக்கள் ஆலைக்குள் முன்னதாக அன்று நுழைந்து உள்ளிருப்பை முடிப்பதற்கான உயர்நீதி மன்ற ஆணையைச் செயல்படுத்த முற்பட்டனர். ஆனால் தொழிலாளர்கள் ஆலைக்குக் கிட்டத்தட்ட 100 மீட்டர்கள் தொலைவில் முகாமிட்டுத் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.
ஆரம்பத்தில் நீதிமன்ற ஆணையை மீறி அங்கு இருப்பது என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும், மாருதி சுஷூகி ஊழியர்கள் தொழிற்சங்கம் (MSEU) தொழிலாளர்களை உள்ளிருப்புபோராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வலியுறுத்தியது. MSEU பொதுச்செயலாளர் சிவக்குமார் “அரசாங்கத்துடனும் நீதிமன்றத்துடனும் நாங்கள் மோதலை விரும்பவில்லை. எனவே இடத்தைக்காலி செய்கிறோம், ஆனால் வேலைநிறுத்தம் தொடரும்.” என்றார்.
கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கி அக்டோபர் 7 மாலையில் மனேசர் ஆலையை ஆக்கிரமித்தனர். ஒரே வாரத்திற்குள் தொழிற்சங்கங்கள் அவர்களை நிறுவனம் ஆணையிட்ட “நன்னடத்தைப் பத்திரத்தில்” கையெழுத்திடக் கட்டாயப்படுத்தின. இது நிர்வாகம் சுமத்திய 33 நாட்கள் ஆலைமுடலை நிறுத்துவதற்கு ஈடு எனக் கூறப்பட்டது. வேலைநிறுத்தம் செய்தவர்கள் 1,200 தற்காலிக ஊழியர்கள் மற்றும் விசாரணையின்றி பணிநீக்கம் செய்யப்பட்ட 44 நிரந்தர ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனக் கோரினர். MSI நிர்வாகம் ஆலை மூடலை நிறுத்துவதற்கான உடன்பாட்டில் உறுதியளித்தபடி தற்காலிக ஊழியர்களை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டனர். தொழிற்சங்கங்களோ 44 பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய ஒப்புக் கொண்டன.
அக்டோபர் 7ம் திகதி வேலைநிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு நிர்வாகத்தின் கோரிக்கையான தொழிலாளர்கள் “நன்னடத்தைப் பத்திரத்தில்” கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை, தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் எனக்கோரியது ஆகியவற்றிற்கு எதிரான எழுச்சி ஆகும். இது பல கார்த்துறைத் தொடர்புடைய குர்காம்-மனேசர் தொழில்துறைப் பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் ஆதரவு வேலைநிறுத்த நடவடிக்கைகளைத் தூண்டியது. இவற்றுள் சுஷூகி பவர்ட்ரைன் இந்தியா லிமிடெட் (SPIL), சுஷூகி காஸ்டிங்க்ஸ் மற்றும் சுஷூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIL) ஆகிய மூன்று சுஷூகி ஆலைகளும் அடங்கியிருந்தன.
தொழிலாளர்கள், சுஷூகி பவர்ட்ரைன் இந்தியா லிமிடெட் ஆலையிலும் உள்ளிருப்புபோராட்டத்தை தொடங்கினர். சுஷூகி பவர்ட்ரைன் இந்தியா லிமிடெட் தொழிற்சங்கமும் உள்ளிருப்பை நிறுத்திக் கொண்டது. ஆனால் ஆலைக்கு வெளியே முகாமிட்டுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர்.
நீதிமன்றங்களும், ஹரியானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அரசாங்கமும் தொழிலாளர்களுக்கு எதிராக MSI இனை ஆதரித்தன. புதன் கிழமை அன்று மாநில அரசாங்கம் மனேசர் மற்றும் பிற சுஷூகி பிரிவுகளில் நடைபெறும் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்று அறிவித்து சுஷூகி பவர்ட்ரைன் இந்தியா லிமிடெட், சுஷூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் இல் உள்ள தொழிற்சங்கங்கள் தம் பதிவை இழக்கும் வழிவகையைத் தொடங்கியது. அரசாங்கத்தின் தொழில்துறையும் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை மனேசர் ஆலையைவிட்டு நீங்குமாறு கோரியது.
மாநில அரசாங்கத்தின் ஆதரவை நம்பி, சுஷூகியின் நிர்வாகம் ஹரியான உயர்நீதிமன்றத்திற்கு வியாழன் அன்று முறையிட்டு வேலைநிறுத்தங்கள் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட வேண்டும் எனக் கோரியது. ஆனால் நீதிமன்றம் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என அறிவிக்க மறுத்தது. ஆனால் ஆலையைத் தொழிலாளர்கள் காலி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்து, ஆலை இடத்தில் இருந்து 100 மீட்டர்களுக்குள் எவரும் கூடக்கூடாது என்றும் தடை செய்தது.
தொழிலாளர்களின் திடீரென்ற வேலைநிறுத்தம் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, MSI மனேசர் ஆலையில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையைத் தீவிரப்படுத்தி உள்ளிருப்பை முறிக்கத் தயாராயிற்று. அக்டோபர் 9ம் திகதி அது 10 தொழிலாளர்களையும் ஐந்து பயிற்சி பெறுவோரையும் பதவியை விட்டு நீக்கி, மற்றும் ஒரு 10 பேரைத் தற்காலிகப் பணிநீக்கமும் செய்தது. வெள்ளியன்று மற்றும் ஒரு 25 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் நிறுவனம், பொலிஸால் கட்டாயமாகத் தொழிலாளர்களை அகற்ற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலும்கூட, இது தொழிலாளர்களுடன் பாரிய மோதலை தூண்டி இன்னும் அதிக ஆதரவு வேலைநிறுத்தங்களையும் ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் அத்திட்டத்தில் இருந்து பின்வாங்கியது. இப்பொழுது நீதிமன்றங்களும் பொலிசும் உள்ளிருப்பை முறிக்க நடவடிக்கை எடுக்கையில், நிர்வாகம் தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிக்கக் கட்டாயப்படுத்துவதற்குப் பயன்படுத்துகிறது. ஹரியானவின் தொழில்துறை மந்திரி சிவ் சரன் லால் சர்மா, “இன்று மாருதி சுஷூகியின் நிர்வாகம் திங்களன்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக என்னிடம் கூறியுள்ளது” என்றார்.
MSEU உடன் MSI பேச்சு நடத்துமா என்பது தெளிவாக இல்லை. ஏனெனில் இது தொழிற்சங்கத்தைப் பிடிவாதமாக அங்கீகரிக்க மறுத்துள்ளது. தன் கூலித் தொழிற்சங்கமான மாருதி உத்யோக் காம்கர் தொழிற்சங்கம் (MUKU) உடன்தான் அது பேச்சுக்களை நடத்தியுள்ளது.
நிர்வாகத்துடன் ஒரு சமரசத்திற்குத் தயார் என்பதை அடையாளம் காட்டிய வகையில் MSEU வின் தலைவர் சோனு குஜ்ஜர்: “நாங்கள் விவாதங்களுக்குத் தயாராக உள்ளோம்; ஆனால் நிர்வாகம் எங்களுடன் பேசத் தயங்குகிறது” என்றார். அதன் பின் அவர் நிர்வாகத்தை எச்சரித்தார்: “உடனடித் தீர்வு இல்லை என்றால், வேலைநிறுத்தம் இப்பகுதியிலுள்ள மற்ற நிறுவனங்களுக்கும் பரவும். ஏனெனில் எங்களுக்கு மற்ற தொழிற்சங்கங்களிடம் இருந்தும் ஆதரவு உள்ளது.” எனக்கூறினார்.
MSI நிர்வாகம் அதன் வேட்டையை போர்க்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராகத் தீவிரப்படுத்த முயல்கிறது. அவர்கள் இயந்திரங்களையும் கருவிகளையும் உள்ளிருப்பின்போது சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறது. சர்மா கூறினார்: “ஆலையினுள் இருக்கையில் தொழிலாளர்கள் எந்த விதத்திலும் இயந்திரங்கள் அல்லது கார்க் கருவிகளுக்கு சேதம் இழைக்காமல் இருக்க வேண்டும் என்று நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது. எனவே ஆலை அதனால் முற்றாக சோதனை இடப்படும்.”
MSI நிர்வாகம் தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பை முறிக்கத் தொழிற்சங்கங்கள் உதவின—குறிப்பாக ஹிந்த் மஸ்தூர் சபாக (HMS), AITUC எனப்படும் அனைத்து இந்திய வணிக ஒன்றிய காங்கிரஸ் மற்றும் CITU எனப்படும் இந்தியத் தொழிற்சங்கங்களின் மையம் ஆகியவை. CITU, ஸ்ராலிச பாராளுமன்றக் கட்சிகளான CPI, CPM ஆகியவற்றுடன் பிணைந்தது.
இப்படி காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்ட உடன்பாடு, தொழிலாளர்களை “நன்னடத்தைப் பத்திரத்தில்” கையெழுத்திட வலியுறுத்தியது. மற்றும் 33 நாட்கள் ஆலைமூடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகியவை HMS ஆல் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதின் விளைவாகும். AITUC மற்றும் CITU ஆகியவை இதற்கு ஒப்புதல் கொடுத்தன.
MSI தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், உள்ளிருப்பு ஆகியவற்றிற்கு பரந்த ஆதரவு வேலைநிறுத்தங்கள் மூலம் வெளிப்பட்ட குர்காம்-மனேசர் தொழில்துறைப் பகுதியிலுள்ள தொழிலாளர்களின் பரந்த ஆதரவு இருந்தும்கூட தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் அப்பகுதியில் இருக்கும் பிற தொழிலாளர்களுடைய ஆதரவைத் திரட்ட ஏதும் செய்யவில்லை. MSI தொழிலாளர்களை சங்கங்கள் தனிமைப்படுத்தி உள்ளிருப்பை முடிப்பதற்கு அவர்களை கட்டாயப்படுத்தின.
தொழிற்சங்கங்கள் MSI நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்களான வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் “வன்முறையை” பயன்படுத்துகின்றனர் என்பதை எதிரொலித்தன; AITUC தேசிய செயலாளர் D.L. சச்தேவ், இளம் தொழிலாளர்கள் “தவறான பாதையில் செல்வதற்கு உரியவர்களாக உள்ளனர்”, மற்றும் இயக்கத்தில் “தீவிர இடது பிரிவுகளின் ஊடுருவல்” ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
“அதி-இடது” என்று சொற்றொடர், ஸ்ராலினிஸ்ட்டுக்களால் மாவோயிச எழுச்சியாளர்களை (நக்சலைட்டுக்களை) குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது; இது உட்குறிப்பாக ஆக்கிரமிப்பிற்கு எதிராக எத்தகைய பொலிஸ் நடவடிக்கைக்கும் ஆதரவு என்பதை முன்கூட்டியே அளிப்பதற்கு ஒப்பாகும்.
MSI வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கு பெரும் முயற்சியை மேற்கொண்டது. இது உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டது. மாருதிச் செய்தித் தொடர்பாளர் கருத்தின்படி, வேலைநிறுத்தங்கள் நிறுவனத்திற்குக் குறைந்தது 17.50 பில்லியன் ரூபாய்கள் (அமெரிக்க$56.5 மில்லியன்) உற்பத்தி இழப்பை ஜூன் மாதத்தில் இருந்து கொடுத்துள்ளது; அப்பொழுது MSI தொழிலாளர்கள் இரு வாரகால உள்ளிருப்புப் போராட்டத்தை, MSEU தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்னும் தங்கள் கோரிக்கைக்காக நடத்தினர். மாருதி சுசுகியின் பங்குகள் ஜூன் 3ல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியதில் இருந்து 16.6 சதவிகிதம் சரிந்துவிட்டது.
அருகிலுள்ள குர்காமிலும் மாருதி ஆலையில் உற்பத்தி வெள்ளியன்று நின்றுபோயிற்று. இதற்குக் காரணம் உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை மற்ற சுசுகி ஆலைகளில் நடந்த ஆதரவு வேலைநிறுத்தத்தின் விளைவு ஆகும். “மாருதி தற்பொழுது எந்தக் காரையும் உற்பத்தி செய்யவில்லை” என்று மாருதி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். வேலைநிறுத்தம் மாருதியின் விற்பனை இலக்குகளை, முக்கியமான நேரத்தில் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது; ஏனெனில் இந்தியர்கள் கார்களையும் மற்ற விலையுயர்ந்த பொருட்களையும் தற்போதைய இந்து திருவிழாக்காலத்தில் வாங்குவது அதிருஷ்டத்தை அளிக்கும் எனக் கருதுகின்றனர்.
MSI களில் கவலைகளை அதிகரிக்கும் வகையில் அதன் போட்டி நிறுவனங்கள் மாருதியை விட நலம் பெற முயல்கின்றன. அக்டோபர் 13ம் திகதி ஹுயுண்டாய் மோட்டார் நிறுவனம் Eon எனப்படும் அதன் மிக விலைகுறைந்த இந்திய மாதிரியை அறிமுகப்படுத்தியது. அதன் விலை 269,999 ரூபாய்களில் இருந்தது (US$5,496) மாருதியின் அதிகம் விற்பனையாகும் 235,413 ரூபாவில் ஆரம்பிக்கும் பெறுமதியான ஆல்டோவுடன் ஒப்பிடத்தக்கது.
இந்த வேலைநிறுத்தங்கள் MSI ன் முதலீட்டாளர்களைப் பெரும் கவலையில் தள்ளியுள்ள தன்மையில் அவர்களில் சிலர் முன்னோடியில்லாத வகையில் வேலைநிறுத்தம் செய்பவர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் வேண்டும். அது மும்பையை தளமாகக் கொண்ட தரகு நிறுவனம் நிர்மன் பங் நிறுவனப் பங்குச் சந்தைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் மாநாட்டு அரங்கில் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். “நாங்கள் அவர்களை அணுகினோம், முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் வினாக்களுக்கு விடையாளிக்குமாறு கேட்டுக் கொண்டோம்; அவர்கள் மறுபக்கத்தின் கருத்தையும் அறிய விரும்புகின்றனர்.”
தொழிற்சங்கத் தலைவர்கள் மாநாட்டிற்கான அழைப்பில் பங்கு பெற்று, புதிய கோரிக்கைகளையும் எழுப்பியுள்ளனர். அவற்றுள் ஆலையில் வெட்டப்பட்டுள்ள ஊதியங்கள் மீட்பு பற்றியும் கோரிக்கைகள் உள்ளன.
மோர்கன் ஸ்ரான்லி ஒரு குறிப்பில், “தொழிலாளர்களுடனான மோதல்கள் மோசமாவது, நீண்டகாலப்போக்கில் மாருதி சுஷூகியின் அதிகம் ஊழியர்களுக்குக் கொடுக்கும் கூடிய நிதியை ஒட்டி கட்டமைப்புரீதியான சரிவு என்ற அபாயத்தை ஏற்படுத்தும் சாத்தியத்தை கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளது.
தற்பொழுது மாருதி சுஷூகியின் உற்பத்தி செலவினங்கள் நிகர விற்பனையில் 2%தான் உள்ளன. இது இந்தியா மற்றும் ஆசியாவிலேயே இத்தகைய நிறுவனங்களில் மிகக் குறைந்தவற்றுள் ஒன்று ஆகும். MSI இத்தகைய மாபெரும் சுரண்டல் தன்மையுடைய நிலைமைகளைத் தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்புகிறது; அப்பொழுதுதான் அது இந்திய கார்ச் சந்தையில் அதன் பங்கான 50% என்பதைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதுதான் இதை நாட்டின் மிகப் பெரிய கார்த்தயாரிப்பாளராக வைத்துள்ளது.