Print Version|Feedback
India: Maruti Suzuki and Congress government prepare police attack on occupation
இந்தியா: மாருதி சுசுகி நிறுவனமும் காங்கிரஸ் அரசாங்கமும் உள்ளிருப்புப் போராட்டத்தில் போலிஸ் தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்கின்றன
By Arun Kumar
13 October 2011
மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் (MSI) மானேசர் கார் ஒன்றுசேர்ப்புத் தொழிற்சாலையில் ஆறு நாட்களாக நடந்து வரும் உள்ளிருப்புப் போராட்டத்தை உடைக்க போலிஸ் வன்முறையைப் பயன்படுத்துவதற்கு மாருதி சுசுகி இந்தியா நிறுவனமும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.
சுமார் 2,000 தொழிலாளர்கள் பங்குபெற்றிருக்கும் இந்த உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்த வேலைநிறுத்தங்களில் இந்தியாவின் தலைநகரான டெல்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள கூர்கான் - மானேசர் தொழிற்துறைப் பகுதியில் இருக்கும் வாகன உற்பத்தித் துறை நிறுவனங்களில் வேலை செய்யும் 10,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபெற்றுள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் மானேசர் ஆலையில் இருந்து வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு போலிசாருக்கு சட்டபூர்வமாக அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக நேற்று ஹரியானா தொழிலாளர் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக நேற்று காலையில் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று தொழிலாளர் துறை விநியோகித்திருந்த அறிவிப்பின் முக்கியத்துவம் குறித்து பிரஸ் டிரஸ் ஆப் இந்தியா செய்தி முகமை கேட்டபோது தன் பெயர் வெளியிடாத இந்த அதிகாரி மேற்கூறிய தகவலை அளித்தார்.
தொழிலாளர் துறை, மாருதி நிறுவனம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட நெருக்குதலையடுத்து, மாருதி சுசுகி நிறுவனத்திற்கு சாதகமான அம்சங்களுடன் 33 நாள் கதவடைப்பை முடிவுக்குக் கொண்டு வந்த அக்டோபர் 1 அன்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறி விட்டதாகக் கூறி தொழிலாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்முயற்சி செய்யப் போவதாகவும் அரசாங்கம் உறுதி பூண்டிருக்கிறது. அத்துடன் வேலைநிறுத்தம் செய்யும் மானேசர் பாகங்கள் ஒன்றுசேர்ப்பு ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தது தொடர்பாக சுசுகியுடன் இணைந்த இரண்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை “பதிவுநீக்கம்” செய்யவிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது.
கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக வெகுண்டெழுவதையும் தாங்கள் விரும்பும் தொழிற்சங்கத்தில் சேருவதற்கான தங்கள் உரிமை மீது வலியுறுத்துவதையுமே தாங்கள் செய்த உண்மையான “குற்றமாக”க் கொண்டிருக்கும் இந்த வேலைநிறுத்தத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஒரு சட்டப்பூர்வ மறைப்பை வழங்குவதற்கான மேலுமொரு முயற்சியாக நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றத்தில் புதனன்று வழக்கும் தாக்கல் செய்திருக்கிறது. “மானேசரில் உள்ள எங்களது தொழிற்சாலையை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்” என்று மாருதி சுசுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா ஃபைனான்சியல் கிரானிக்கிள் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். “வியாழனன்று உயர் நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவை எதிர்பார்க்கிறோம், அந்த உத்தரவின் அடிப்படையில் நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.”
இந்த வாரத்தின் ஆரம்பத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தை உடைக்க உடனடி போலிஸ் நடவடிக்கை தேவை என்று மாருதி சுசுகி நிறுவனம் கோரியது. “வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு எங்களுக்கு போலிசாரின் உதவி தேவை” என்று மாருதி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “அவர்களை வெளியேற்றச் சொல்லி மாநில அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகிறோம். தொழிலாளர்களுடன் நாங்கள் கைகலப்புச் சண்டையில் இறங்க முடியாது.”
தொழிலாளர்கள் “ஆங்காங்கே வன்முறையில் இறங்குகின்றனர்” என்றும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத ”நிறுவன மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை அடித்து உதைக்கின்றனர்” என்றும் தொழிலாளர்களைத் தூற்றும் நிறுவனத்தின் அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்ததற்கு அடுத்ததாக போலிஸ் தலையீட்டுக்கான மாருதி சுசுகி நிறுவன நிர்வாகத்தின் அழைப்பு திங்களன்று வெளியாகியது.
ஆனால் செவ்வாயன்று மாருதி சுசுகி நிறுவனத் தலைவரான பார்கவா, உடனடி போலிஸ் தலையீட்டுக்கு நிறுவனம் விடுத்த வெளிப்படையான அழைப்பில் இருந்து பின்வாங்கினார். “(மானேசர்) தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை பலவந்தமாக வெளியேற்றுவதைத் தவிர்க்க நாங்கள் முயலுவோம், அத்தகையதொரு கட்டத்திற்கு நாங்கள் இன்னும் சென்று விடவில்லை” என்றார் பார்கவா. தமது உடைமைகளுக்கு சேதாரம் ஏற்படக் கூடிய உடனடி ஆபத்து உள்ளதாக முன்னதாக நிறுவனம் கூறியிருந்ததற்கு முரண்பாடான வகையில், “தொழிற்சாலைக்குள்ளாக எங்களது சாதனங்களின் பாதுகாப்புக்கு போலிஸ் பாதுகாப்பு எங்களுக்கு இருக்கிறது” என்றார் பார்கவா.
உள்ளிருப்புப் போராட்டத்தை உடனடியாக ஒடுக்குவதற்கான கோரிக்கையில் இருந்து நிறுவனம் பின்வாங்கியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு: முதலாவது, உள்ளிருப்புப் போராட்டம் நடக்கும் தொழிற்சாலையில் போலிசாரைக் கொண்டு தாக்கினால் ஒரு வன்முறை மோதல் வெடித்து நிறுவனத்திற்கு மேலும் அவமதிப்பைக் கொண்டுவந்து சேர்க்கலாம் என்பதோடு கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியெங்கும் அது தொழிலாளர் கிளர்ச்சியைத் தூண்டிவிடவும் செய்யலாம் என்கிற பயம்.
இரண்டாவதாக, ஜீன் மாதத்தில் இருந்தே இரண்டு தடவைகளில், இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சங்கங்களைக் - குறிப்பாக இந்து மஸ்தூர் சபா (HMS) மற்றும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் இணைந்த AITUC (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) மற்றும் CITU (இந்திய தொழிற்சங்க மையம்) ஆகியவை - கொண்டு மானேசர் தொழிலாளர்களை அவர்களது போர்க்குணம் மிக்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரச் செய்வதில் நிறுவனம் வெற்றி கண்டிருந்திருந்தது.
HMS ஆல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு AITUC மற்றும் CITU இன் ஆமோதிப்பைப் பெற்ற, தொழிலாளர்களை விலைபேசி 33 நாள் கதவடைப்பை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தத்தை எதிர்த்துத் தான் நடப்பு உள்ளிருப்புப் போராட்டமே வெடித்துள்ளது என்கிற போதிலும் தொழிலாளர்களுடன் ஒரு இரத்தம் சிந்தும் மோதலுக்குள் இறங்கும் ஆபத்தான முயற்சிக்கு முன்னதாக போர்க்குணமிக்க மானேசர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதில் இந்தத் தொழிற்சங்கங்களை மறுபடியும் பயன்படுத்திப் பார்க்கும் சாத்தியம் குறித்து நிறுவனம் கணக்கிட்டு வருகின்றது என்பது கண்கூடு.
நேற்று காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கமும் மாருதி சுசுகி நிறுவனமும் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போலிசின் ஒரு வன்முறைத் தாக்குதல் மீண்டும் மும்முரமாய் சிந்திக்கப்பட்டு வருவதையும் அது எந்த நேரத்திலும் தொடக்கப்படலாம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.
ஒட்டுமொத்தமான ஆறு மாத காலத் தொழிலாளர் பிரச்சினையிலுமே ஹரியானா மாநில அரசாங்கமானது நிறுவனத்தின் ஒரு அங்கம் போலவே செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை இங்கே தெளிவுபடுத்தியாக வேண்டும். சென்ற ஜூன் மாதத்தில் தொழிலாளர்கள் ஆரம்பித்த இரு வார கால வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்தது, மாருதி சுசுகி ஊழியர் சங்கத்திற்கு (MSEU) அங்கீகாரமளிக்க மறுத்தது, இட்டுக் கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரின் MSEU தலைவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது மற்றும் தொழிலாளர்கள் நிறுவனத்தின் “நன்னடத்தைப் பத்திர”த்தில் கையெழுத்திட வேண்டும் எனத் தொடர்ந்து கோரியது என ஏராளமாய்க் கூற முடியும்.
வேலையை விட்டு நீக்குவது மற்றும் பணியிடைநீக்கம் செய்வது ஆகியவற்றின் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் தனது மானேசர் தொழிற்சாலையில் ஒரு அசுரத்தனமான வேலை ஆட்சிமுறையை அமல்படுத்த முனைகிறது என்பது மட்டுமல்ல. இந்நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வந்து அளிக்கும் எண்ணற்ற தொழிலாளி நியமன ஒப்பந்ததாரர்களும் போர்க்குணத்துடன் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் தாக்குவதற்கும் குண்டர்களைப் பயன்படுத்துவதற்கு கொஞ்சமும் வருத்தம் காட்டுவதில்லை.
தொழிலாளர்களின் வன்முறை மற்றும் குற்றங்கள் பற்றி இட்டுக் கட்டி கதைக்கும் மாருதி சுசுகி நிறுவனம், மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலையில் வெளிநடப்பு செய்ததற்காக அருகிலுள்ள சுசுகி தொழிற்சாலை ஒன்றில் சுசுகி நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஒரு ஒப்பந்ததாரர் மூன்று தொழிலாளர்களின் மீது சென்ற ஞாயிறன்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - உள்ளிருப்பு தொடங்கிய நாளில் இருந்து நடந்தவற்றில் மிகவும் பட்டவர்த்தனமாக நடந்த வன்முறை நடவடிக்கைகளில் ஒன்று - குறித்து எவரும் வாய்திறந்து விடாமல் கவனத்துடன் தவிர்த்து வருகிறது.
கடந்த ஆறு மாதங்களில், ஏஐடியுசி சிஐடியு மற்றும் பிற தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் எல்லாம் மானேசர் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கும் அதேசமயத்தில் அவர்களை நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு பணியச் செய்வதற்கு வலியுறுத்துவதற்குமே வேலை செய்து வந்துள்ளன. இப்போது உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் பிற பொருள்ரீதியான உதவிகளை வழங்குவதாகவும் கூறி வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களிடம் மீண்டும் செல்வாக்கை வென்றெடுக்க அவை பிரயத்தனம் செய்து வருகின்றன.
ஆனாலும் அவர்களது தலையீட்டின் உண்மையான குணம் என்பது சென்ற ஞாயிறன்று தொழிற்சங்கங்கள் விநியோகித்த ஒரு கூட்டறிக்கையிலும் நாட்டின் மிகப் பழமையான ஸ்ராலினிசக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான AITUC இன் தலைவர் கூறிய கருத்திலும் தனித்து வெளிப்பட்டு நிற்கிறது.
சென்ற ஜூன் மாதத்தில், கூர்கான்-மானேசர் பகுதியில் பிரபலமாகச் செயல்பட்டு வருகின்ற தொழிற்சங்க அமைப்புகள் - HMS, CITU, AITUC, மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு கொண்ட INTUC, மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டமைப்பான BMS ஆகியவை உட்பட - மானேசர் மாருதி சுசுகி நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக என்கிற வெளிப்பட்ட காரணத்துடன் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்கின.
இந்த உள்ளிருப்புப் போராட்டத்தினைத் தொடர்ந்து வெள்ளியன்று இந்த கூட்டுக் குழு விடுத்திருக்கும் அறிக்கை மாருதி சுசுகி நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு விண்ணப்பிக்கவில்லை, மாறாக “சிக்கலான பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்க்கவும் தொழிற்துறை அமைதியை திரும்பக் கொண்டு வரவும் இந்தப் போராட்டத்தில் தலையீடு செய்ய வேண்டும்” என மாநில அரசாங்கத்திற்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசாங்கத்திற்கும் தான் விண்ணப்பம் செய்தது.
AITUC தேசியச் செயலாளரான டி.எல்.சச்தேவ் விடுத்திருக்கும் அறிக்கை இன்னும் பட்டவர்த்தனமாய் நிற்கிறது. வேலைநிறுத்தம் செய்பவர்களைக் குறிப்பிட்டு அவர் சொல்கிறார், “இவர்களெல்லாம் தவறான வழிகாட்டலுக்கு இலக்காகத்தக்க இளைஞர்கள். ஹரியானா அரசாங்கம் ஒரு கூடுதல் முன்முயற்சியுடனான பாத்திரத்தை ஆற்ற வேண்டியுள்ள நிலை இருக்கையில் அதுவோ, அதிதீவிர-இடது கூறுகள் இந்தப் போராட்டத்திற்குள் பிரவேசித்திருப்பதை அறிந்தும் இன்னும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.”
மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் மாருதி சுசுகி நிறுவனத் தகராறை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது என்பதான கூற்று ஒரு அப்பட்டமான பொய் என்பது மட்டுமல்ல. தொழிலாளர்களுக்கு எதிராக போலிஸ் கூட்டத்தை அமர்த்தியது உட்பட அவ்வப்போது மாருதி சுசுகி நிர்வாகத்தின் தரப்பில் அரசாங்கம் தலையீடு செய்தே வந்திருக்கிறது. ஆனால் இந்தியப் பொருளில் சச்தேவ் “அதிதீவிர இடது கூறுகள்”என்று குறிப்பிட்டது ஒரு மிகத் திட்டவட்டமான பிற்போக்குத்தனத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.
இந்தப் பதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் சகோதரக் கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுகளைக் (நக்சலைட்டுகள்) குறிப்பிடப் பயன்படுத்துவதாகும். இவர்களையே காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஸ்ராலினிசத்தின் ஆதரவுடன் நாட்டின் “மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக” அறிவித்துள்ளது.
மாருதி சுசுகி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் “அதிதீவிர இடது கூறுகள்” “நுழைந்து விட்டதாக” மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கத்தையும் இந்திய அரசியல் உயர்தட்டையும் “எச்சரிக்கை” செய்வதென்பது தொழிலாளர்கள் மீது அரசு நடத்தவிருக்கும் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு ஒரு அரசியல் மறைப்பை வழங்குவதற்குத் தான். அத்தகையதொரு தாக்குதல் மும்முரமாய்த் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது AITUC பொதுச் செயலரான சச்தேவுக்கு நன்கு தெரியும்.
அக்டோபர் 1 விலைபோன ஒப்பந்தத்திற்கு எதிராகக் கிளர்வதிலும், மானேசர் மாருதி தொழிற்சாலையில் நடக்கும் மோதலில் மற்ற தொழிலாளர்களுக்கும் பெரும் சம்பந்தம் இருக்கிறது என்பதை அத்தொழிலாளர்கள் உணர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதிலும் மானேசர் தொழிலாளர்கள் ஒரு முக்கியமான முன்நோக்கிய அடியை எடுத்து வைத்துள்ளனர். ஆனாலும் தங்களது நடவடிக்கைகளில் உட்பொதிந்து இருக்கும் அம்சத்தை வெளிப்படையானதாக அவர்கள் ஆக்க வேண்டும். கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியிலும் மற்றும் இந்தியாவெங்கிலும் நிலவும் மலிவு ஊதிய, கொத்தடிமை நிலை வேலை நிலைமைகளுக்கும் வேலைப் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கும் எதிராகவும் மற்றும் ஒரு தொழிலாளர்-மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தினை வேண்டியும் தொழிலாளர்கள் நடத்தும் ஒரு பரந்த தொழிலக மற்றும் அரசியல் தாக்குதலின் ஈட்டிமுனையாக தங்களது போராட்டத்தை ஆக்குவதன் மூலம் இதனை அவர்கள் செய்ய முடியும். அத்தகையதொரு போராட்டம், ஸ்ராலினிஸ்டுகள் உட்பட்ட முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் மற்றும் கட்சிகளில் இருந்து சுயாதீனப்பட்ட வகையிலும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டாக வேண்டும்.