Print Version|Feedback
Unions, Stalinists force Maruti Suzuki India workers to accept company’s demands
தொழிற்சங்கங்களும், ஸ்ராலினிஸ்டுகளும் நிறுவனத்தின் கோரிக்கைகளை ஏற்க மாருதி சுஷூகி இந்திய தொழிலாளர்களை நிர்பந்திக்கின்றனர்
By Rajesh Tyagi
4 October 2011
இந்தியாவின் மானேசரில் உள்ள மாருதி சுஷூகி கார் உற்பத்தியாலையில் மாதக்கணக்கில் நடந்துவரும் தொழிலாளர்கள் போராட்டம் குறித்த டெல்லியிலுள்ள உலக சோசலிச வலைத் தள ஆதரவாளரால் பின்வரும் அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. பதிப்பிற்கேற்ற விதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வடமேற்கு மாநிலமான ஹரியானாவின் மானேசரிலுள்ள மாருதி சுஷூகி இந்தியா (MSI) வாகனத்துறை ஆலையில் மாதக்கணக்கில் நீடித்து வந்த தொழிலாளர்களின் போராட்டம், அம்மாநில அரசாங்க அதிகாரிகளோடு கூடி வேலை செய்த தொழிற்சங்கங்களால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆலையிலுள்ள மாருதி உத்யோக் காம்கார் தொழிற்சங்கத்தை (MUKU) கட்டுப்படுத்தும் ஹிந்த் மஜ்தூர் சபாவின் (HMS) தொழிற்சங்க தலைவர்கள், ஹரியானா அரசாங்கத்தின் தொழிலாளர்துறை மந்திரி மற்றும் ஏனைய தொழிலாளர்துறை அதிகாரிகளால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட, ஆனால் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை கைவிட்டுள்ள, ஓர் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டனர்.
நிறுவனம் விரும்பும்போது தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்கும் அதிகாரத்தை வழங்கும் ஒரு "நன்னடத்தை பத்திரத்தில்" கையெழுத்திட தொழிலாளர்கள் உடன்படாத வரையில், தொழிலாளர்களுக்கு கதவடைப்பு விதிப்பதாக MSI நிர்வாகம் ஆகஸ்ட் 29இல் அறிவித்தது. அப்போதிலிருந்து, MSIயுடன் அந்த வாகனத்துறை தொழிலாளர்கள் தீர்க்கமுடியாத மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். (பார்க்கவும்: மாருதி சுஷூகி இந்தியா கதவடைப்பு: பேச்சுவார்த்தை தோல்விக்குப் பின்னர் ,தொழிற்சங்க தலைவர்கள் கைது)
அக்டோபர் 1ஆம் தேதி அதிகாலை சுமார் 3.00 மணியளவில் அந்த உடன்படிக்கை அடையப்பட்டது. தொழிலாளர்துறை துணை ஆணையாளர் J P மன், தொழிலாறர்துறை உதவி ஆணையாளர் நிதின் யாதவ், குர்காவ் மாவட்ட ஆளுனர் P C மீனா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே பேரம்பேசுவதில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அவர்களோடு ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தின் தொழிலாளர்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி ஷிவ் சரண் லால் சர்மாவும் சேர்ந்து கொண்டார்.
நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் MUKUஇல் இருந்து பிரிந்து தனியாக ஒரு தொழிற்சங்கத்தை ஸ்தாபிக்கும் முக்கிய கோரிக்கைக்காக போராடிவந்த தொழிலாளர்களின் சார்பாக MUKU தொழிற்சங்கத்தால் அந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. மற்ற விஷயங்களோடு சேர்ந்து, தொழிலாளர்கள் "நன்னடத்தை பத்திரத்தில்" கையெழுத்திட வேண்டுமென்பதையும் அந்த உடன்படிக்கை நிர்ணயிக்கிறது. தொழிற்சாலையின் உற்பத்தியைப் பாதிக்கும் விதத்தில் அதற்கு எதிராக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்த போராட்டமும் நடத்தமாட்டோம் என்று தொழிலாளர்கள் உறுதிமொழி வழங்க வேண்டுமென அந்த உடன்படிக்கை கோருகிறது. மெதுவாக வேலை செய்தல், வேலையை நடுவில் நிறுத்துதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுதல், வேலையிடத்தில் விதிமுறைமீறல் ஆகியவற்றில் ஈடுபட்டாலோ, ஆலையின் வழக்கமான உற்பத்தியைப் பாதிக்கும் நாசவேலைகளில் அல்லது வேறு எவ்வித தன்னிச்சையான காரியங்களில் தொழிலாளர் ஈடுபட்டாலோ அவர்கள் உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள்.
இந்த உடன்படிக்கை தொழிலாளர்களின் கையையும், காலையும் கட்டி நிர்வாகத்திற்கு கொடுக்கின்றது. வேலைநிறுத்தம் செய்வதற்கான அவர்களின் உரிமையை இல்லாமல் செய்யும் அது, எவ்வித கூட்டு நடவடிக்கையையும் சட்டவிரோதமாக்குகிறது. தொழிலாளர்களை நிர்வாகத்தின் கருத்திற்கு அடிபணிய செய்யவும், ஆலையினுள் அடிமையுழைப்பு வேலையிட நிலைமைகளைத் திணிக்கக்கோருவதிலும் இரக்கமற்று உறுதியாக இருக்கும் MSI நிர்வாகத்திற்கு அந்த உடன்படிக்கை நிச்சயமாக கூடுதல் துணிச்சலை அளிக்கிறது.
இன்னுமொரு கூடுதல் அநீதியாக, 62 பேரை வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம் அவர்களில் வெறும் 18 பயிற்சி தொழிலாளர்களை மட்டும் நிபந்தனையின் பேரில் மீண்டும் எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளது. பாதிக்கப்பட்ட மீதி 44 நிரந்த தொழிலாளர்களும் ஒரு ஒழுங்குமீறல் விசாரணைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றனர். அது நிச்சயமாக அவர்களின் வேலையிழப்பில் தான் போய் முடியும். “பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, சட்டம் அதன் கடமையைச் செய்யும்,” இது நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தது.
அந்த பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த மற்றொரு நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், “ஒழுங்குமீறலை ஏற்க முடியாது என்ற நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு இந்த உடன்படிக்கை மேலும் கூடுதலாக பலம் சேர்க்கிறது. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் செழுமைக்கும் உகந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கும்,” என்றார்.
ஒரு தண்டிக்கும் முறைமையாக, கதவடைப்பு காலத்திற்கு "வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை" கொள்கையைப் பின்பற்றுமென அந்த உடன்படிக்கை நிபந்தனை விதிக்கிறது. அதாவது இதன் அர்த்தம், ஒரு மாத சம்பளங்களை தொழிலாளர்கள் இழக்க வேண்டியதிருக்கும். இது, நிறுவனம் அதன் நிதியியல் இழப்புகளில் சிறிது ஈடுகட்ட உதவுகிறது என்பதற்காக மட்டுமல்ல, தொழிலாளர்கள் எதிர்காலத்தில் எவ்வித தொழில்சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவதிலிருந்தும் அவர்களை பின்வாங்க செய்வதே இதன் நோக்கமாகும்.
நிறுவனத்தின் தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பாக சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர்களின் அமைப்பான மாருதி சுஷூகி தொழிலாளர்கள் சங்கத்தோடு (MSEU) நிர்வாகம் நேரடியாக பேச மறுத்துவிட்டதால், இந்த பேரங்கள் ஒரு மோசடியாகும்.
இந்த காட்டிக்கொடுப்பிற்கான அடித்தளம் நீண்டநாட்களுக்கு முன்னரே AITUC (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) மற்றும் CITU (இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) ஸ்ராலினிச தலைவர்களாலும் மற்றும் சமூக-ஜனநாயக நிலைநோக்கு கொண்ட HMS னாலும் அமைக்கப்பட்டது. தொழிலாளர்கள் "நன்னடத்தைப் பத்திரத்தில்" கையெழுத்திட வேண்டுமெனவும், பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் எடுக்க முடியாதென்றும் அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.
கதவடைப்பு செய்யப்பட்டிருந்த தொழிலாளர்கள், இந்த காட்டிக்கொடுப்புக்கு முன்னதாக, பத்திரத்தில் கையெழுத்திடக் கோரிய நிர்வாகத்தின் கோரிக்கையை விடாப்பிடியாக மறுத்து வந்தனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள், கடந்த மாதம் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக குர்காவ்-மானேசர் தொழிற்துறை வளாகத்திலுள்ள மற்ற ஆலைகளில் இருந்த அவர்களின் சக தொழிலாளர்களும் போராட்டத்தில் களமிறங்கிய போது, அவர்கள் பெரும் தைரியம் பெற்றார்கள். சுஷூகி பவர்ட்ரைன் இந்தியா லிமிடெட், சுஷூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட், சுஷூகி காஸ்டிங்க்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று ஆலைகளும் ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான சுஷூகி மோட்டார் பெருநிறுவனத்தின் துணை நிறுவனங்களாகும். அவற்றில் MSI நிறுவனமும் அதன் பங்குகளைக் கொண்டுள்ளது.
நிர்வாகம் கருங்காலிகளையும், வெளியாட்களையும் பயன்படுத்திய போதினும், சுஷூகி பவர்ட்ரைன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், மானேசர் கார் உற்பத்தியாலைக்கு டீசல் என்ஜின்களையும், டிரான்ஸ்மிஷன் உதிரிபாகங்களையும் வினியோகித்து வந்த அந்த ஆலையின் உற்பத்தியை வெற்றிகரமாக நிறுத்திவிட்டிருந்தது. இது MSI நிர்வாகத்தின் மீது பலத்த அழுத்தத்தைக் கொண்டு வந்தது. எவ்வாறிருந்த போதினும், நிர்வாகத்திடம் அதை தீர்க்கும் பொறுப்பைவிட்டு அந்த ஆதரவுநடவடிக்கை இரண்டு நாட்களுக்குப் பின்னர் AITUC-CITU-HMS ஆகியவற்றால் தகர்க்கப்பட்டது.
அந்த உடன்பாட்டிற்கு பின்னர், பேச்சுவார்த்தைகளில் உத்தியோகபூர்வமாக பங்கெடுக்காத AITUC. CITU உடன்படிக்கையை எதிர்க்க MSI தொழிலாளர்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. மாறாக, அவர்களின் சொந்த துரோகத்தை மூடிமறைக்க, ஸ்ராலினிச தலைவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பும் உடன்படிக்கையை திணித்ததின் மீது ஓர் அடக்கவொடுக்கமான விமர்சனத்தை வெளியிட்டார்கள்.
மானேசர் ஆலைக்குள் நிலவும் வேலையிட நிலைமைகளானது, நிர்வாகம், அரசாங்கம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களால் வரைந்து காட்டப்படும் அழகான நிலைமையிலிருந்து பெரிதும் வேறுபட்டது.
வேலை நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஒரு "கூட்டத்தில்" கலந்துகொள்ள வேண்டுமென்ற நிர்பந்தத்தோடு தொழிலாளர்களுக்கு இரண்டு எட்டு மணிநேர ஷிப்டுகளுடன் வேலை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் கூட, அவர்களுடைய சம்பளத்தில் பாதி நாள் கூலி குறைக்கப்படுகிறது. அரைமணி நேர மதியவுணவு இடைவெளி மற்றும் இரண்டு ஏழு-நிமிட தேநீர் இடைவெளி ஆகியவற்றோடு, உண்மையில் மொத்த ஷிப்டு நேரம் ஒன்பது மணிநேரமாகிறது. இந்த இடைவெளி நேரங்களில் மட்டுந்தான் தொழிலாளர்கள் கழிவறைகளுக்குச் செல்ல முடியும். ஓர் இடைவெளியில் ஒரு நிமிடம் தாமதமானாலும், அதற்காக கூலியில் குறைப்பு செய்யப்படும்.
தொழில் பயிலுனர்களுக்கு மாதம் ரூ. 7000-8000 வரையில் (சுமார் 140-160 அமெரிக்க டாலர்) வழங்கப்படுகிறது. வழக்கமான தொழிலாளர்களுக்கு ரூ. 16,000 ($320) வழங்கப்படுகிறது. வழக்கமான தொழிலாளர்களுக்கு வீட்டு வாடகைப்படியாக (HRA) ரூ. 8000மற்றும் "ஊக்கப்படியாக" ரூ. 8000 அளிக்கப்படுகிறது. ஒருநாள் விடுப்பெடுத்தால் ரூ. 1500, இரண்டு நாட்கள் விடுப்பெடுத்தால் ரூ. 2200 மற்றும் நான்கு நாட்கள் விடுப்பெடுத்தால் ரூ. 7000 குறைக்கப்படுகிறது.
ஏதாவதொரு காரணத்திற்காக நிர்வாகத்தால் கூலி குறைப்புகள் செய்யப்படுவதால், அத்தொழிற்சாலை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில், ஒரு தொழிலாளி கூட கூலியை முழுமையாக வாங்கியதில்லை.
தொழிலாளர்கள் "கீழ்நிலை பணியாளர்", “உதவி பணியாளர்", இன்னும் இதரபிற பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு கீழ்நிலை பணியாளர் உதவி பணியாளராக ஆக குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளாவது ஆகும். நிறுவனம் விருப்பப்பட்டால், காலவரையின்றி அந்த முதல் பிரிவை நீடிக்கவும் முடியும். மானேசர் ஆலையில், இதுவரையில் தொழிலாளர்களில் ஒருவர் கூட உதவி பணியாளர் பதவிக்கு உயர்த்தப்படவில்லை. ஒரு பயிற்சி தொழிலாளர்/தொழில் பயிலுநர் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது அதே பதவியில் இருக்க வேண்டும், ஆனால் அந்த கால அளவிற்குப் பின்னரும் கூட பலர், அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களோ இன்னும் மோசமான நிலைமைகளை முகங்கொடுக்கின்றனர். ரூ. 4500இல் இருந்து ரூ. 6,000 வரையில் (90 முதல் 120 அமெரிக்க டாலர்) சம்பாதிக்கும் அவர்கள், கூடுதல் நேர வேலைகளை (over time) மறுக்காமல் செய்தாக வேண்டும்.
தலையாட்டி MUKU தொழிற்சங்கத்திற்கு பதிலாக மானேசர் ஆலை தொழிலாளர்கள் அவர்களின் சொந்த தொழிற்சங்கமான (MSEU) ஏற்படுத்தினர். மானேசருக்கு வெகு அருகில் அமைந்துள்ள மற்றும் ஹரியானாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமுமான குர்காவில் உள்ள MSI இன் ஏனைய கார் உற்பத்தியாலைகளிலும் கூட இவ்வாறு செய்யப்பட்டது.
2000இல் இருந்து, MUKUஇல் தேர்தல்களே நடத்தப்படவில்லை. ஆனால் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த தொழிற்சங்கத்தை ஸ்தாபித்த உடனேயே, தொழிற்சங்க நிர்வாகம் MUKUஇல் அவசரஅவசரமாக தேர்தல்களை நடத்த ஏற்பாடு செய்தனர். தொழிலாளர்கள் அந்த போலி தேர்தலை புறக்கணித்தனர். ஆனால் நிர்வாகம் தொழிலாளர்களை MUKUஇன் உறுப்பினர்களாக இருக்கவும், அதில் திருப்திகரமாக இருப்பதாகவும் வலியுறுத்தும் அதன் உறுதிமொழி பத்திரங்களில் கையொப்பமிட நிர்பந்தித்தது. நிர்பந்தங்களின்கீழ் சில தொழிலாளர்கள் கையொப்பமிட்டனர், அதேவேளை பலர் அதை மறுத்தனர்.
தொழிலாளர்கள் தங்களிடமிருந்து நிர்பந்தங்களின்கீழ் உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டன, ஆகவே அவற்றைத் திரும்பத்தர வேண்டுமென பின்னர் கோரினர். நிர்வாகம் அதற்கு மறுத்த போது, ஜூன் 4இல் வேலைநிறுத்தம் தொடங்கியது. அந்த ஆலையின் இடத்திலேயே புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ஆலையில், நிர்வாகம் புதிய தொழிலாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, தற்போது தொழில் பயிலுநராக, பயிற்சி தொழிலாளர்களாக அல்லது ஒப்பந்தத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கே அந்த வேலைகளை வழங்கவேண்டுமென்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
ஆரம்பத்திலிருந்தே, HMSஐ வழிநடத்திவரும் சமூக ஜனநாயகவாதிகளும் மற்றும் ஸ்ராலினிச AITUC மற்றும் CITU-உம் மானேசர் MSI தொழிலாளர்களின் போராட்டம் குர்காவ்விலும், அதைச்சுற்றியுள்ள தொழிற்துறை வளாகங்களிலும் இருந்த ஆதரவைப் பெறாதபடிக்கு மற்றும் பரவாதபடிக்கு அதை தடுக்க அதைச்சுற்றி ஒரு வேலியை ஏற்படுத்தி விட்டிருந்தன. அப்பகுதியில் உள்ள வாகனத்துறை, வாகனத்துறை சார்ந்த மற்றும் ஏனைய உதிரிபாகங்களின் தொழிற்சாலைகளில் 2.5 மில்லியனுக்கும் மேலான தொழிலாளர்கள் உள்ளனர்.
மானேசரின் ஒரு MSI ஆலையில் வெடித்த போராட்டத்தின் எழுச்சியை அதற்குள்ளேயே அடைத்துவிட்டதன் மூலமாக, சந்தர்ப்பவாத தொழிற்சங்க தலைவர்கள் அதை திட்டமிட்டு தனிமைப்படுத்தினர். அது அனுமானித்தவாறே தொழிலாளர்களின் தோல்வியில் போய் முடிந்தது. கதவடைப்பு செய்யப்பட்ட மானேசர் MSI தொழிலாளர்களுக்கு ஆதரவாக அப்பகுதியிலுள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்ட தொழிற்சங்க கூட்டமைப்புகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு மட்டுமல்ல, அவர்கள் மானேசர் ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக திரண்ட அனைத்து முயற்சிகளையும் நனவுபூர்வமாக தடுத்து நின்றனர்.
நாங்கள் ஆலைக்கு விஜயம் செய்தபோது, HMS-AITUC-CITU ஒருங்கிணைந்து திட்டமிட்டு தொழிலாளர்களின் போராட்டத்தை ஒரு முட்டுச்சந்திற்குள் இழுத்துச் செல்லும் அபாயங்களை மீண்டும்மீண்டும் தொழிலாளர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டினோம். மோசடியான பெயரோடு HMS-AITUC-CITU “கூட்டு நடவடிக்கை குழு" என்பதற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுப்பதை மறுத்தும், தொழில் வழங்குனர்கள் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான நடவடிக்கையில் ஒன்றுதிரட்டி போராடவும் மறுத்து, மானேசர் MSI தொழிலாளர்களின் போராட்டங்கள் தனிமைப்படவும், தோல்வியடையவும் பல சிறிய மாவோயிச அமைப்புகளும் பங்களிப்பளித்தன. செப்டம்பர் 20இல் புதுடெல்லியில் நடந்த அரசியல் குழுக்களின் ஒரு கூட்டு கூட்டத்தில், மிகவும் அடிப்படையான "ஆதரவு நடவடிக்கை" மட்டும் எடுக்கப்படும் என்று அவர்கள் அறிவித்தனர்.
AITUC-CITU-HMS ஆகியவற்றின் தொழிற்சங்க கூட்டமைப்பு அப்பகுதியில் "கூட்டு நடவடிக்கை குழு" என்ற பதாகையின் கீழ் வேலை செய்துவருவதானது, மானேசர் ஆலையில் ஜூன் மாதம் நடந்த 13 நாட்கள் வேலைநிறுத்தத்தை மிகவும் இழிவார்ந்த சமரசத்திற்கு இட்டுச் சென்றதைப் போன்றே உள்ளது. அப்போதும் அவை, நிறுவனம் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையை பிடிவாதமாக மறுத்திருந்த போதினும், “வெற்றி" பெற்றுவிட்டதாக அறிவித்தன.
அந்த காட்டிக்கொடுப்பால் துணிச்சல் பெற்ற அம்மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கம் ஒடுக்குமுறையில் இறங்கியதோடு, ஆகஸ்ட் மத்தியில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவ அமைப்பாக MSEUஐ அங்கீகரிக்க மறுத்தது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 29இல், நூற்றுக்கணக்கான பொலிஸின் பிரசன்னத்தில், அத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கதவடைப்பு அறிவித்தது.
ஒருவரோடு ஒருவர் கொண்ட உள்கூட்டோடு, சமூக ஜனநாயகவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் எடுத்த சுயாதீனமான வர்க்க மற்றும் அரசியல் நடவடிக்கையின் பாதையைத் தடுத்துள்ளனர். இவ்விதத்தில் அவர்கள் தொழிலாளர்களை அடிபணிய செய்துள்ளனர். தொழிலாளர்கள் தீர்க்கமாக தொடர்ந்து போராடியதும், ஏனைய ஆலைகளில் இருக்கும் அவர்களின் ஏனைய சகதொழிலாளர்களின் திடீர் ஆதரவு வேலைநிறுத்தங்களும் தொழிலாளர்கள் கொண்டுள்ள உள்ளார்ந்த புரட்சிகர சக்தியை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதினும், MSI தொழிலாளர்களின் போராட்டம் பரவுவதற்கான மற்றும் தங்களின் கட்டுப்பாட்டிலிருந்து கைமீறி சென்றுவிடுவதற்கான ஒரு துல்லியமான அச்சுறுத்தல் இருந்ததைக் கண்ட ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக தொழிற்சங்கங்கள் முக்கியமான தருணத்தில் களத்தில் இறங்கின.
ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ முதலாளிமார்களுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும், அரசாங்கங்களுக்கும் ஆதரவாக நீண்டகாலமாகவே ஒரு துரோக பாத்திரத்தை நடத்தியுள்ளனர். அவர்கள் தொழிலாளர்களுக்கு விரோதமான, முதலாளித்துவம் சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தில் மே 2004இல் இருந்து ஜூன் 2008 வரையில் தங்கியிருந்தனர். அதேவேளை அவர்களின் இடது முன்னணி ஆட்சியிலிருந்த மாநிலங்களிலும் கூட அவர்கள் முதலீட்டாளர்கள் சார்ந்த கொள்கைகளை வெளிப்படையாகவே பின்பற்றினர். ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளைப் போலவே, மாவோயிஸ்டுகளும் தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவுகள் என்றழைக்கப்படுபவைகளின் மீது நப்பாசைகளை பேணி வளர்க்கின்றனர்.
ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகள் போன்ற ஏனைய குட்டி-முதலாளித்துவ தீவிர கொள்கையினரின் இரும்புப்பிடியை உடைத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே தொழிலாளர்கள் அவர்களின் சுயாதீனமான வர்க்க நலன்களை முன்னெடுக்க முடியும். அதாவது சோசலிசத்திற்கான ஒரு சர்வதேச போராட்டத்தின் ஒரு பாகமாக தொழிலாளர்கள் ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி நனவுபூர்வமாக திரும்ப வேண்டியுள்ளது என்பதையே இது குறிக்கிறது.