Print Version|Feedback
Sham character of Maruti Suzuki workers’ trial further exposed
மாருதி சுசூகி தொழிலாளர்களின் வழக்கு விசாரணையிலுள்ள பாசாங்குத்தனம் மேலும் அம்பலப்பட்டது
By Keith Jones
23 March 2017
ஹிந்துஸ்தான் டைம்ஸ் இன் பத்திரிகையாளர் அமன் சேத்தி எழுதியிருந்த ஒரு கட்டுரை, பாசாங்குத்தனமான பொலிஸ் விசாரணை, வாதிதரப்பு வழக்கு மற்றும் 13 பாதிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளதற்கு காரணமான விசாரணை போன்றவை குறித்த முக்கியமான புதிய தகவல்களை எடுத்துக்காட்டுகின்றது.
நேற்று வெளிவந்த இந்த கட்டுரை பெருமளவில் குர்கான் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி RP கோயல் இந்த மாத தொடக்கத்தில் அளித்த தீர்ப்பின் மீதான ஒரு பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டிருந்தது. அவரது தீர்ப்பில், ஜப்பானுக்கு சொந்தமான வாகன தயாரிப்பாளர் நிறுவன நிர்வாகத்திற்கும், இட்டுக்கட்டப்பட்ட ஆதாரங்களுக்கும் பொலிஸ் உடந்தையாக இருந்தது என்பதை கோயல் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. நிறுவனத்தின் ஒரு மனிதவள மேலாளரான, அஸ்வின் குமார் தேவ் மூச்சு திணறி இறப்பதற்கு காரணமான நெருப்பிடல் சம்பவத்தில் நெருப்பு பற்றவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக வாதி தரப்பு கூறிய தீப்பெட்டிக்கும் 13 ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளுள் எவருக்கும் தொடர்புள்ளது என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது என்பதையும் அவர் ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது.
இந்த மோசமான ஒப்புதல்கள் ஒவ்வொன்றையும் ஒரு நீதிபதியாக கோயலே ஒப்புக்கொண்டிருப்பினும், அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார். ஆதாரங்களின் உண்மைத்தன்மையை வாதிதரப்பு மற்றும் அரசாங்கத்திடமிருந்து தொழிலாளர்கள் மீது திருப்பிவிடுவதற்காக அவரும் கூட சட்டத்தை சிதைந்துபோக செய்துவிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிலாளர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என்பதை நிரூப்பிக்கவேண்டியது அவர்களது கடமையாகும் என்றும், அவர்களை குற்றவாளிகள் என நிரூபிக்க தேவையான ஒரு நியாயமான சந்தேகத்தை கொண்டிருப்பதற்கு அப்பால் அரசாங்கத்திற்கு வேறு எவ்வித பொறுப்பும் கிடையாது என்ற ஜனநாயக விரோத கருத்தாய்வினை நீதிபதி கோயலினால் வழங்கப்பட்ட மரண தண்டனை தவறான வகையில் அடிப்படையாகக் கொண்டிருந்தது.
“மாருதி வழக்கின் தீர்ப்பு குர்கான் பொலிஸின் திறமையற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது” என்று சேத்தியின் கட்டுரை தலைப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய ஆவணங்கள் தகுதியற்றவை என்பதல்ல, ஆனால் இது ஒரு சதிதிட்டம்: மாருதி சுசூகி நிறுவனத்தின் மலிவுகூலி உழைப்பு கட்டமைப்பின் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கும், மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கத்தினை (Maruti Suzuki Workers Union - MWSU) உடைத்து நொருக்குவதற்கும், அரசியல் நோக்கம் கொண்டு ஜோடிப்பு வழக்கை தொடரும் வகையில் நிறுவனத்திற்கும், மாநில அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு சதிதிட்டமாகவே அது இருந்தது. மாருதி சுசூகியின் மானேசர், ஹரியானா வாகன அசெம்பிளி நிறுவன தொழிலாளர்கள் 2011-12ல், ஒரு நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு எழுச்சியின் போது தான் MSWU இனை நிறுவினார்கள்.
13 பேரில் MSWU இன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பன்னிரண்டு பேரை இந்திய சிறை எனும் வாழும் நரகத்தில் தள்ளும் வகையில் அவர்களுக்கு நீதிபதி கோயல் “ஆயுள்” தண்டனை வழங்கியுள்ளார்.
வாதி தரப்பு இந்த 13 பேருக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர் என்று கேட்கப்பட்டபோது, சிறப்பு வழக்கறிஞர் அனுராக் ஹூடா சேத்தியிடம், “வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment-FDI) வரண்டுபோய்விட்ட நிலையில், நமது தொழிற்துறை வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” கொள்கையை நடைமுறைபடுத்த பிரதம மந்திரி நரேந்திர மோடி அழைப்புவிடுக்கிறார், ஆனால் இது போன்ற சம்பவங்கள் எங்கள் தோற்றத்தின் மீது கறைகளாக இருக்கின்றன” என்று கூறினார்.
ஜுலை 18, 2012ல் மாருதி சுசூகி நிறுவனத்தின் மானேசர் வாகன அசெம்பிளி ஆலையில் நிர்வாக அதிகாரிகள் ஒரு தொழிற்சாலை பிரிவில் கை கலப்பை தூண்டிவிட்டபோது நெருப்பு பற்றியதனால் ஆலையின் ஒரு பிரிவே அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக, ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் உத்திரவின் பேரில், ஆலையில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பொலிஸ் திரும்ப திரும்ப குவிக்கப்பட்டது என்பது, தில்லியின் புறநகர் பகுதியில் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக அமைந்துள்ள குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதி முழுவதுமான தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒரு குவிமைய புள்ளியாக வைத்தே வெளிப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, ஜுலை 18ம் தேதிய நிகழ்வுகள் மீதான “விசாரணையின்” ஆரம்பத்திலிருந்தே பொலிஸ் நிர்வாகத்துக்கு உடந்தையாகவே செயலாற்றினர் என்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜுலை 19ம் தேதி அதிகாலை 6 மணியளவிலேயே, மாருதி சுசூகி நிர்வாகம் 89 பேர் கொண்ட “சந்தேகத்துக்குரியவர்கள்” பட்டியலுக்கான அச்சுபிரதியை பொலிஸிடம் ஒப்படைத்தது. பிற்பகலில் நான்கு தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள், கூறப்படும் குற்றங்களின் கண்கண்ட சாட்சியாக இருந்ததாக கூறியவர்களை முன்தேதியிட்டு சேர்த்துகொள்வதன் பேரில் பொலிஸ் திரும்பிவந்த நிலையில், இந்த 89 தொழிலாளர்களும் உடனடியாக கைதுசெய்யப்பட்டனர்.
நீதிபதி கோயல் அவரது தீர்ப்பில், “விசாரணை அதிகாரிகள் முன்னர் குறிப்பிடப்பட்ட நபர்களை கைது செய்து… எவ்வித நியாயமுமின்றி சட்டத்தை மீறியுள்ளனர் என்று இந்த வழக்கை முடித்துகொள்ள முடியும்” என்பதை ஒப்புக்கொண்டார்.
பொலிஸ் போலி மருத்துவவியல் சான்றிதழ்களை (medico-legal certificates - MLCs) தயாரித்தனர், இதன்மூலமாக அவர்கள் தொழிலாளர்களால் தாக்கப்பட்டனர் என்று கூறிக்கொள்ளமுடியும் என்பதுடன் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்று மிகைப்படுத்தி கூறவும் வகைசெய்யும் என்பதையும் நீதிபதி ஒப்புக்கொண்டார். பொலிஸ் இதில் சுயாதீனமாக செயல்பட்டிருக்கலாம் என்றபோதிலும், தொழிலாளர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதற்காகவும், அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான சதி வேட்டையை நியாயப்படுத்தவும், மாருதி சுசூகி நிறுவனம், பெருநிறுவன ஊடகங்கள், மாநில அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் தலையீட்டுடனான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே அது இருந்தது. ஜுலை 18 நிகழ்வுகளுக்கு பின்னர், ஹரியானா அரசாங்கத்தின் பகிரங்கமான ஆதரவுடன், மாருதி சுசூகி நிறுவனம் தொழிலாளர் தொகுப்பிலிருந்து ஏராளமான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து பதிலீடாக 2,300 பேரை புதிதாக நியமித்தது.
சேத்தியின் அறிக்கைகளை போன்று, நீதிபதி கோயல் அவரது தீர்ப்பில், “பொலிஸ் அதிகாரிகள் அவர்களது MLCs ஐ இடம்பெறசெய்த பின்னரும் கூட அவர்களது மருத்துவர்களை அவர்கள் சந்திக்கவில்லை” என்பதை வலியுறுத்தினார். ஆனால், நீதிபதி இந்த ஒப்புதல்களை விரைவாக செயல்படுத்தவில்லை, பின்னர் அவர் இதை அப்படியே புதைத்துவிடவும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் மீண்டும் ஆதாரங்களை இட்டுக்கட்டியே காட்டுவார்கள் என்பதை மூடிமறைக்கவும் முயன்றார். “அனைத்து நேரில் கண்ட சாட்சிகளும் போலியாக இருப்பதனால் காயங்களை கருத்தில்கொள்ளாமல் வெறுமனே அவர்களது MLCs ஐ போலியானவை” என்று நீதிபதி கோயல் தொடர்ந்தார்.
இதேபோல், தொழிலாளர்கள் தான் நெருப்பு வைத்தனர் என்பதால் மனிதவள மேலாளரின் இறப்புக்கும் குற்றவியல் ரீதியாக அவர்களே பொறுப்பாளிகளாக உள்ளனர் என்று வாதி தரப்பின் முகவுரை முழு விவரங்களடங்கியதாக இருந்தபோதிலும், தொழிலாளர்களையும், நெருப்பிடலையும் சம்பந்தப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது போன்ற முக்கிய உண்மைகளை மதிப்பிழக்க செய்ய நீதிபதி கோயல் பெரு முயற்சி செய்தார்.
திட்டவட்டமாக எப்போது, எங்கே அல்லது எப்படி நெருப்பு பற்றவைக்கப்பட்டது என்பது ஒருபோதும் தீர்மானிக்கப்படவில்லை. நெருப்பிடல் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணையின்போது மர்மமான முறையில் கண்டுபிடிக்கப்படாத ஒரு தீப்பெட்டி, தீ ஜ்வாலை அதனை சுற்றிலும் அனைத்தையும் நிர்மூலமாக்கியிருந்த நிலையில் அது மட்டும் எப்படியோ திடீரென கண்டுபிடிக்கப்பட்டு பாதிப்பு ஒன்றுமில்லாத நிலையில் இருந்ததை வாதிதரப்பு சுட்டிக்காட்டியது.
புலனாய்வாளர்கள் கைரேகைகள் அல்லது DNA தடையங்கள் பற்றி ஆராயமல் இருந்ததை விளக்கமுடியாத நிலையில், குறுக்கு விசாரணையின்போது காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ், தீப்பெட்டிக்கும், 13 பேருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
நீதிபதி கோயல் அவரது தீர்ப்பில் இது தொடர்பான கருத்துகளை தவிர்க்க முடியவில்லை. “சந்தேகமேயில்லை, தீப்பெட்டி மீட்டெடுக்கப்பட்டது என்பது ஒரு சந்தேகத்திற்குரிய விடயமாகத்தான் உள்ளது,” என்பதை ஒப்புக்கொண்டார், பின்னர், “எனினும் இது குற்றம்சாட்டப்பட்டவர் நெருப்பை பற்றவைக்கவில்லை என்பது அரத்தமாகாது” என்பதையும் அவரே அவசரமாக தீர்ப்பில் சேர்க்க நேரிட்டது.
தொழிலாளர்கள் செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது, நீதிமன்றம் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து துல்லியமாக வாதிடுகிறது. தொழிற்சங்கத்தை நொருக்கும் அளவிற்கு போலியாக காரணங்களை வழங்கும் பொருட்டு நிறுவன குண்டர்களால் தான் நெருப்பிடப்பட்டது என்று இணை குற்றவாளியும், MSWU இன் நிர்வாக உறுப்பினருமான அமர்ஜீத் மூலமாக விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையை தள்ளுபடி செய்கையில், நீதிபதி கோயல், “M1ல் (ஆலையின் முதல்தளம்) நெருப்பு பற்றவைத்த கருங்காலிகளாக இருந்தவர்கள் யார் என்பது பற்றி அமர்ஜீத் விளக்க தவறிவிட்டார்… எனவே அமர்ஜீத் மற்றும் அவரது சக பணியாளர்களால் சரியான விளக்கம் தரப்படாத நிலையில் அங்கிருந்த அவர்களால் தான் M1ல் நெருப்பு பற்றவைக்கபட்டிருக்ககூடும் என்பதே அர்த்தமாகிறது” என்று அறிவிக்கிறார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)
சேத்தியை பொறுத்தவரையில், தொழிலாளர்கள் தங்களது அப்பாவித்தனத்தை “நிரூபிக்க” ஏதுவாக அவர்கள் மீதே சுமையை திணிப்பதாகவே “இத்தகைய வாதம்” உள்ளது என்பது “தீர்ப்பின் பல பகுதிகளில் காணகூடியதாக இருக்கிறது” என்று கூறுகிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸின் பத்திரிகையாளரும் கூட, நீதிபதி கோயல், பொலிஸின் எண்ணற்ற தவறான செயல்கள் மற்றும் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்ட கட்டுக்கதைகளிலிருந்து அதன் கூற்றுக்களை பிரித்துப்பார்க்க முடியும் என்பதே “உண்மை” என்று வாதிடுவதன் மூலமாக வாதி தரப்பு வாதத்தை ஓரளவு பாதுகாக்க முயல்கிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
மாறாக, தவறான செயல்பாடுகளும், கவன குறைவுகளும் ஒரு ஜோடிப்பு வழக்கின் மீதான ஐயத்திற்கிடமற்ற தர அடையாளங்களுடன் ஒரு மாதிரியை அமைக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக அவற்றின் முக்கியத்துவத்தை குறைத்து காட்டாமல் நீதிபதி ஒவ்வொன்றையும் தந்திரமாக கையாள்கிறார்.
நீதிபதி கோயலின் தீர்ப்பு ஒரு சட்டபூர்வமான மோசடித்தனமாகவே உள்ளது. நான்கு தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் மூலமாக பொய்யாக குற்றம்சாட்டப்பட்ட 87 தொழிலாளர்கள் உட்பட 117 தொழிலாளர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவித்தார் என்றால், அது மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனம் மற்றும் மாநில அரசாங்கத்தின் சூனிய வேட்டையாடலை தக்கவைக்க முயலுகின்ற நோக்கம் கொண்டதாகவே அது இருந்தது. கூடுதலாக 12 MSWU இன் தலைவர்களையும், ஜியாலாலையும் கண்டறிவதில், 2012 ஜுலை 18ம் தேதிய கைகலப்பு போன்ற ஒரு மேற்பார்வையாளர் மூலமான தொழிலாளர்கள் துன்புறுத்தலுக்கும், கொலை குற்றத்திற்கும் வழிவகுத்தது, மேலும் அவர் ஏனைய 18 தொழிலாளர்களையும் இதற்கு சற்று குறைவான குற்றச்சாட்டுக்களின் பேரில் குற்றம்சாட்டியுள்ளார்.
நிச்சயமாக இந்த தீர்ப்பை ஒழுங்கமைவு செய்வதில், பொலிஸ் மட்டுமல்ல, வாதிதரப்பும் தொழிலாளர்கள் மீது குரோதத்துடன் வேண்டுமென்றே செயல்பட்டனர் என்ற உண்மையை நீதிபதி நிராகரித்துள்ளார் என்பது தீர்ப்பின் இறுதி நாள் வரையிலும் கடுமையாக வலியுறுத்தப்பட்டுவந்தபோதும், அனைத்து 148 தொழிலாளர்களும் குற்றவாளிகளென குற்றம்சாட்டப்பட்டனர்.
அனைத்து தொழிலாளர்களும் பெரும் துன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது வேலைகளை இழக்கச்செய்வது, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு, அதிலும் பெரும்பாலான வழக்குகளில் நான்கு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதித்து அவர்களது குடும்பங்களை வறுமையில் தள்ளுவது போன்றவை இதில் அடங்கும். குடியுரிமை குழுக்களின் கருத்துப்படி பொலிஸின் மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு பலரும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயினும் மாருதி சுசூகி நிறுவனம் திருப்தியடையவில்லை. குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து வாகன உற்பத்தியாளர்கள் மேல்முறையீடு செய்வதற்கும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும்படி கோருவதற்கும் உந்தி தள்ளும் என்று இதன் சட்ட ஆலோசகர் கூறியுள்ளார். அதாவது, 13 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட ஏதுவாக வாதி தரப்பை உந்தித்தள்ளும் வகையில் அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கவே நிறுவனம் விரும்புகிறது என்பதாகும்.
இந்த அசுரத்தனமான அநியாய ஜோடிப்பு வழக்குகளுக்கு எதிராக இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் தொழிலாளர்களை உடனடியாக அணிதிரட்ட வேண்டியது அவசியமாகவுள்ளது.