Print Version|Feedback
India: Framed-up Maruti Suzuki workers sentenced to life imprisonment
இந்தியா: ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
By Keith Jones
18 March 2017
சனிக்கிழமையன்று மாருதி சுசூகி வாகன நிறுவனத்தின் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள்கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. வேறு நான்கு பேருக்கு ஐந்தாண்டுகால சிறை தண்டனையும், இன்னும் 14 பேருக்கு மூன்றாண்டு கால சிறை தண்டனையும் வழங்கப்பட்டன.
இந்த தொழிலாளர்கள், இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) முழு ஒத்துழைப்போடு, அந்த வாகன நிறுவனம், பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளால் செய்த ஒரு பிரமாண்டமான ஜோடிப்பு வழக்கிற்கு பலியாக்கப்பட்டிருக்கிறார்கள்.
மாருதி சுசூகி தொழிலாளர் சங்கம் (MSWU) இன் ஒட்டுமொத்த தலைமை உட்பட 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் மானேசரில் உள்ள மாருதி சுசூகி கார் உற்பத்தி ஆலை தொழிலாளர்களை அந்நிறுவனம் கொடூரமாக சுரண்டுவதற்கு உடந்தையாய் இருந்து வந்த ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்தை எதிர்த்து அந்நிறுவன தொழிலாளர்களால் இந்த MSWU தொழிற்சங்கம் நிறுவப்பட்டது.
2012 ஆம் ஆண்டு, நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஒருவர் கொல்லப்படுவதில் போய் முடிந்த, நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு கலகம் மற்றும் நெருப்பிடல் சம்பவத்தில் தொழிலாளர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
“அதில் பலியான அவனிஷ் குமார் தேவ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் மூர்க்கமாக அடிக்கப்பட்டு, அதனால் உண்டான காயங்கள் காரணமாக அவரால் நெருப்பில் இருந்து தப்பிக்க முடியாமல் போனது,” என்று வெள்ளிக்கிழமை நடந்த தண்டனை மீதான விசாரணையில் வாதி தரப்பு வழக்கறிஞர் லால் சிங் வாதிட்டார், அவ்விசாரணையில் வாதி தரப்பு அந்த 13 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டுமென கோரியது.
"அரிதினும் அரிய வழக்குகளில்" மட்டுமே வழங்கப்படும் தண்டனையாக வாதி தரப்பே குறிப்பிட்ட மரண தண்டனையை, நீதிபதி ஆர். பி. கோயல் அந்த 13 தொழிலாளர்களுக்கும் விதிக்கவில்லை என்றாலும், சகிக்கவியலாத வாழுமிடங்களையும் மற்றும் கைதிகள் வழமையாக அடித்து உதைக்கப்பட்டு இல்லையென்றால் அவமரியாதையாக நடத்தப்படும் ஒரு இந்திய சிறைச்சாலையில் ஓர் ஆயுள் தண்டனை என்பதே கூட சிறுக சிறுக கொல்லப்படுவதற்கு வழிவகுக்கும்.
பலவந்தமான ஒப்புதல்களைப் பெறுவதற்கான ஒரு முயற்சியில் தொழிலாளர்களில் பலர் முன்பே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார்கள், கடுமையாக கால்களை இழுப்பது, மின் அதிர்ச்சி மற்றும் நீரில் மூழ்கடிப்பது ஆகியவை அதில் உள்ளடங்கும்.
MSWU செய்தி அறிக்கை எதை "வர்க்க நீதி" என்று பொருத்தமாக குறிப்பிட்டதோ, அதில் அனைத்து 31 தொழிலாளர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய அரசும் அரசியல் ஸ்தாபகமும், குர்காவ்-மானேசர் தொழில்துறை பகுதியிலும் மற்றும் இந்தியா எங்கிலும் உள்ள தொழிலாளர்களைப் பீதியூட்டவும் மற்றும் இந்திய உயரடுக்கு ஈவிரக்கமின்றி மலிவுழைப்பு நிலைமைகளைப் பேணும் என்பதை முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமளிப்பதற்காகவும் மாருதி சுசூகி தொழிலாளர்களைக் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்க தீர்மானகரமான இருந்தன.
இந்தியாவின் புதிய, உலகளாவிய இணைப்பு கொண்ட தொழில்துறை எங்கிலும் மேலோங்கி உள்ள—மலிவு கூலி, கடுமையான வேலையிட ஆட்சிமுறை, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களைப் பரந்தளவில் பயன்படுத்துவது ஆகியவற்றிற்கு எதிரான ஒரு போர்குணமிக்க எதிர்ப்பு மையமாக மானேசர் உற்பத்தி ஆலை 2011 இல் உருவெடுத்தது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அந்த தலையாட்டி தொழிற்சங்கத்தையும் மற்றும் பாரம்பரிய தொழிற்சங்க சம்மேளனங்களையும் எதிர்த்து மானேசர் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் தொடர்ச்சியான வெளிநடப்புகளையும் மற்றும் 2011 இன் கோடையில் உள்ளிருப்பு போராட்டங்களையும் நடத்தினர். அவர்களது தீர்க்கமான நிலைப்பாடானது, இந்தியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமான டெல்லியை ஒட்டிய ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரும் வாகன உருவாக்கம் மற்றும் உற்பத்தி மையமாக விளங்கும் குர்காவ்-மானேசர் தொழில்துறை பகுதி எங்கிலுமான தொழிலாளர்களிடம் இருந்து ஆதரவைத் திரட்டியது.
MSWU க்கு முன்னர் சிறிது காலமே இருந்த MSEU தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்ட முதல் வேலைநிறுத்தத்திற்கு ஓராண்டுக்கும் சற்று அதிகமான நாட்களுக்கு பின்னர், மாருதி சுசூகி நிறுவனமும் அரசும், படைகளை ஒருங்கிணைத்துடன், மிகவும் போர்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு சதி வேட்டையைத் தொடங்குவதற்கு ஜூலை 18, 2012 இல் நடந்த கலகம் மற்றும் நெருப்பிடல் சம்பவத்தைப் பயன்படுத்தியது. நிறுவனம் வினியோகித்த "சந்தேகத்திற்குரியவர்கள்" பட்டியலின் அடிப்படையில் MSWU தலைவர்களையும் மற்றும் விடாப்பிடியாக இருந்த ஏனையவர்களையும் பொலிஸ் கைது செய்த அதேவேளையில், மாருதி சுசூகி நிர்வாகம், காங்கிரஸ் கட்சியின் ஹரியானா மாநில அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவுடன், அதன் தொழிலாளர் சக்தியை களையெடுத்தது. பகுதியாக நெருப்பில் அழிந்திருந்த அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக, ஜப்பானிய நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த வாகனத்துறை நிறுவனம் 2,300 க்கும் அதிகமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து பிரதியீடு செய்தது.
மார்ச் 10 அன்று, அவர்கள் கைது செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், குர்காவ் மாவட்ட நீதிமன்றம் ஒன்று ஜூலை 18 சம்பவங்களுக்காக அந்த 31 தொழிலாளர்கள் மீது குற்றத்திற்கான பொறுப்பை சுமத்தியது. MSWU தொழிற்சங்கத்தின் அனைத்து 12 நிர்வாகிகளும் மற்றும் அந்த ஆலை தளத்தில் கலகம் உருவாவதற்குக் காரணமான மாருதி சுசூகி தொழிலாளர்களது ஒப்பந்ததாரர் ஒருவரால் அவமரியாதையாக நடத்தப்பட்ட ஒரு தொழிலாளரும், “மரணம் விளைவிக்கும் குற்றம்" (கொலை), கொலை முயற்சி மற்றும் ஏனைய குற்றங்களுக்கான குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். உள்நோக்கத்தோடு காயமேற்படுத்தியமை, கலகத்தில் ஈடுபட்டமை மற்றும் பொருள் சேதம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் இன்னும் 18 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
நீதிமன்றம் இந்த தீர்மானங்களை எட்டுவதில், பொலிஸிற்கும் மற்றும் மாருதி சுசூகி நிர்வாகத்திற்கும் இடையே நயவஞ்சகக்கூட்டு இருந்தது மற்றும் சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டிருந்தன என்ற அதன் சொந்த கண்டுபிடிப்புகளையே அது வேண்டுமென்ற புறக்கணித்திருந்தது.
நீதிமன்றம் அதன் மார்ச் 10 ஆம் தேதி தீர்ப்பில் ஏனைய 117 தொழிலாளர்கள் அனைவருக்கும் எதிரான எல்லா குற்றச்சாட்டுக்களும் அடித்தளமின்றி இருப்பதாக அறிவித்து, அவர்களை விடுவிக்க வேண்டியிருந்த அளவிற்கு, அந்தளவிற்கு ஜோடிப்பு வெளிப்படையாக இருந்தது.
நேரில் பார்த்ததாக கூறும் வாதி தரப்பு சாட்சிகள், அவர்கள் யாருக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தார்களோ அவர்களை மீண்டும் அடையாளம் காட்ட முடியாதவர்களாக இருந்தார்கள்.
அனைத்திற்கும் மேலாக நான்கு மாருதி சுசூகியின் நான்கு ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஜூலை 18, 2011 சம்பவங்களை நேரில் பார்த்ததாக கூறும் பொய் சாட்சியங்களால் பெயர் வரிசைகிரமமாக ஒழுங்கமைக்கப்பட்டு பொலிஸால் வழங்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 89 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துக்காட்டினர். அதன்படி "கலகத்தில் ஈடுபட்ட எல்லா தொழிலாளர்களிலும்" A இல் இருந்து G வரையிலான முதல் எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்களை கண்டதாக நேரில் பார்த்ததாக கூறும் ஒரு சாட்சி கூறினார். மற்றொருவர் G-P வரையிலான முதலெழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்களை மட்டும் கலகத்தில் பார்த்ததாக தெரிவித்தார், இது போல் இன்னும் தொடர்கிறது.
அங்கே இன்னும் 11 தொழிலாளர்கள் இருந்தனர், அவர்களுக்கு எதிராக எதையும் நேரில் பார்த்ததாக கூறும் சாட்சிகளே கிடையாது.
வழமையான இந்திய நடைமுறைகளுக்கு வெளிப்படையாகவே முரண்பட்ட விதத்தில், வாதி தரப்பு அவர்களுக்கு பிணை கோரிய மனுக்களை விடாப்பிடியாக எதிர்த்ததனாலேயே, இப்போது விடுவிக்கப்பட்டுள்ள 117 தொழிலாளர்களும் ஆண்டு கணக்கில் சிறையில் இருந்துள்ளனர். இம்மாத தொடக்கத்தில் அவர்கள் விடுவிக்கப்படும் வரையில், அவர்கள் அனைவரும் மூர்க்கமான குற்றங்களுக்காக குற்றவாளிகளாவர் என்று வாதி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 பேர் உட்பட இந்த 31 பேருக்கு எதிரான ஆதாரங்களின் துல்லியத்தன்மை பண்புரீதியில் வேறுபட்டு இல்லை. அதுவும் முற்றிலும் பொருத்தமின்மை, ஓட்டைகள் மற்றும் வெளிப்படையான ஜோடிப்புகளால் நிறைந்துள்ளன.
ஆனால் அடிப்படை வர்க்க நலன்கள் தான், ஆரம்பத்திலிருந்தே மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான நிறுவனம் மற்றும் அரசின் சதி வேட்டையை உந்தியது. வாதி தரப்பு வழக்கு பலவீனமாக இருந்த நிலையில், MSWU தலைவர்களுக்கு எதிரான ஜோடிப்புகளுக்கு சட்டபூர்வத்தன்மையை கொடுத்து, முன் செல்ல இயலும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றம் தொழிலாளர்களில் சிலரை விடுவித்திருந்தது.
நெருப்பிடப்பட்டதே அரசு வழக்கின் முன்னிலையில் உள்ளது. ஆனால் அந்த நெருப்பை பற்ற வைத்தது கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர் தான் என்பதற்கு நேரடியான ஆதாரத்தை அரசு தரப்பால் வழங்க முடியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், எந்த தொழிலாளரையும் கூட தொடர்புபடுத்தும் எந்தவித நேரடி ஆதாரத்தையும் அதனால் வழங்க முடியவில்லை. அவர்கள் ஒருபோதும் அந்த நெருப்பு முதலில் எங்கே பற்றியது அல்லது எவ்வாறு பற்ற வைக்கப்பட்டது என்பதை தீர்மானகரமாக நிறுவிக்காட்டவில்லை. நெருப்பு பிடித்த இடத்தில் நடந்த மணிக்கணக்கிலான ஆரம்ப சோதனை நடத்திய விசாரணையாளர்கள், ஆச்சரியமான விதத்தில் நெருப்பு சுற்றி எரிந்து கொண்டிருந்த இடத்தில் அந்த நெருப்பில் சிறிதும் பாதிப்படையாத ஒரு தீப்பெட்டியை அவர்கள் கண்டதாக கூறியிருந்தனர்.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனத்திற்கு கிடைத்த தாராளமான அரசியல் ஸ்தாபக ஆதரவை எடுத்துக்காட்டும் வகையில், மானேசர் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான இந்த ஜோடிப்பு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய மற்றும் ஹரியான மாநில அரசாங்கங்களின் கீழ் தொடங்கி, பின்னர் அவர்களை பிரதியீடு செய்த பிஜேபி தலைமையிலான அரசாங்கங்களின் கீழ் தொடர்ந்து சுமூகமாக நடத்தப்பட்டது.
குர்காவ்-மானேசர் தொழில்துறை பகுதியில் இந்த வஞ்சிக்கப்பட்ட மற்றும் தண்டிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு பரந்த ஆதரவும், அனுதாபமும் உள்ளது. சனியன்று நீதிபதி கோயல் அவரது தண்டனைகளை அறிவித்த வெறும் சில மணி நேரங்களிலேயே, மாருதி சுசூகியின் பவர்ட்ரைன் ஆலை மற்றும் சுசூகி மோட்டார்சைக்கிள் ஆலை உட்பட நான்கு பிரதான மானேசர் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் "கருவிகளைக் கையிலெடுக்காத" வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஜோடிப்புக்கு எதிரான பாரிய தொழிலாளர் போராட்டங்களுக்கு அஞ்சி, குர்காவ் மாவட்ட அதிகாரிகள் இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் 144 ஆம் பிரிவை அமுல்படுத்தி, மார்ச் 25 அடுத்த சனிக்கிழமை வரையில் ஐந்து பேர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் ஒன்றுகூடுவதை சட்டவிரோதமாக்கினர்.
விழானன்று, 144 ஆம் பிரிவு நடைமுறையில் இல்லாத ஒரு இடைப்பட்ட நேரத்தில், மானேசர்-குர்காவ் இல் 50 க்கும் அதிகமான ஆலைகளில் 100,000 வரையிலான தொழிலாளர்கள் அவர்களின் ஐக்கியத்தை எடுத்துக்காட்ட மதிய உணவு மற்றும் இரவு உணவைத் தவிர்த்து போராடினர்.
இந்திய அரசும் மற்றும் அரசியல் ஸ்தாபகமும் மாருதி சுசூகியைச் சுற்றி வளைத்து நின்று, போர்குணத்துடன் இருந்த மானேசர் தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு வழக்குகளைத் தொடுத்த அதேவேளையில், தொழிற்சங்க சம்மேளனங்கள் திட்டமிட்டு மாருதி சுசூகி தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தின.
ஸ்ராலினிச தலைமையிலான அனைத்திந்திய தொழிற்சங்க சம்மேளனமும் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையமும் (CITU) கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு மற்றும் நிறுவனத்தின் சதி வேட்டை குறித்து ஏறத்தாழ குற்றகரமான மௌனத்தைக் கடைப்பிடித்திருந்தன. தொழிலாளர்கள் “நீதிக்காக" பெரு வணிக அரசியல்வாதிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு முறையிடுவதில் அவர்களது ஆற்றலைச் செலவிடுமாறு அவை MSWU மற்றும் வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்களை வலியுறுத்தியதுடன், தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை பலம் மற்றும் சுயாதீனமான அரசியல் பலத்தை அணித்திரட்டுவதன் அடிப்படையில் அவர்களைப் பாதுகாக்கும் ஒரு மூலோபாயத்தை அவர்கள் விடாப்பிடியாக எதிர்க்கின்றனர்.
மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான இந்த பொய் வழக்கு, உலகளாவிய வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கம் மீதான தாக்குதலை எடுத்துக்காட்டுகிறது. பெரு வணிக அரசியல்வாதிகள் மற்றும் அரசின் ஆதரவுடன், பன்னாட்டு வாகனத்துறை நிறுவனங்கள் வெறுமனே இந்தியா மற்றும் மெக்சிகோவில் அவை புதிதாக திறந்துள்ள ஆலைகளில் மட்டுமல்ல, மாறாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பாரம்பரிய வானத்துறை மையங்களிலும் மலிவுகூலி நிலைமைகளை திணித்து வருகின்றன.
பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களைக் குற்றவாளிகளாக கூறும் தீர்ப்புகளை இரத்து செய்து அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவித்து பாதுகாக்கவும் மற்றும் 2012 இல் களையெடுக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் மீண்டும் நியமிக்கவும் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.
ஒரு சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தைக் கட்டமைப்பது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக சகல தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வாகனத்துறை தொழிலாளர்களின் ஓர் ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஒரு பலம் வாய்ந்த படியாக இருக்க முடியும்.