Print Version|Feedback
India: 31 victimized Maruti Suzuki workers convicted on frame-up charges
இந்தியா: 31 மாருதி சுசுகி தொழிலாளர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பலிகடாக்களாக தண்டிக்கப்பட்டனர்
By Kranti Kumara and Keith Jones
14 March 2017
நீதித்துறையின் கேலிக்கூத்தாகிய ஒன்றில், இந்திய நீதிமன்றம் ஒன்று பலியாக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்களில் 13 பேர் ”கொலைக் குற்றம்” புரிந்தவர்களாகவும் இன்னும் 18 பேர் கலகம் மற்றும் தீவிர கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் உறுதிசெய்தது.
கொலைக்குற்றம் புரிந்ததாக கூறப்பட்டுள்ளவர்கள், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வழக்காடுநர் தரப்பு கோரும் நிலைக்கு முகம்கொடுத்து நிற்கின்றனர். ஒரு மிருகத்தனமான மலிவு-உழைப்பு வேலை முறை அதிகாரத்தை சவால் செய்வதற்காக MSI இன் மானேசர் கார் அசெம்பிளி ஆலையில் உருவாக்கப்பட்ட ஒரு சுயேச்சையான தொழிற்சங்கமான மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU) ஒட்டுமொத்த தலைமையும் இதற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
MSI நிர்வாகம், போலிஸ், நீதிமன்றங்கள், மற்றும் இந்தியாவின் இரண்டு பிரதான பெருவணிகக் கட்சிகளான பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகிய அனைத்தினது ஒத்துழைப்புடனான ஒரு அடாவடித்தனமான ஜோடிப்புக்கு தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டுள்ளனர்.
வெளிப்படையாக “வர்க்க நீதி”யின் ஒரு வழக்காக இருக்கும் இதில், 2012 இல் ஜூலை மாதத்தில் MSI இன் மானேசர் ஆலையில் நிர்வாகத்தின் தூண்டுதலில் நடைபெற்ற கைகலப்பிற்கும் அதனால் விளைந்த நெருப்புக்கும் -இதில் ஆலையின் ஒரு பகுதி அழிந்ததோடு நிறுவனத்தின் ஒரு மேலாளர் கொல்லப்பட்டார்- குற்றவியல்முறையில் தொழிலாளர்கள் பொறுப்பாக்கப்பட்டிருந்தனர்.
இந்தியாவின் தலைநகரும் மிகப்பெரும் நகரமுமான டெல்லியின் புறநகர்ப்பகுதியில் உருவாகியிருந்த ஒரு மிகப்பெரும் வாகன உற்பத்தி மையமான குர்கான்-மானேசர் தொழிற்பேட்டைப் பகுதியெங்கும் நிலவுகின்ற மலிவு கூலிகள், ஸ்திரமற்ற ஒப்பந்த-உழைப்பு வேலைகள் மற்றும் மிகக் கடுமையான உற்பத்தி இலக்குகள் ஆகியவற்றுக்கு எழுந்த போர்க்குணமிக்க ஒரு எதிர்ப்பின் மையமாக இந்த ஆலை திகழ்வதால் பெருவணிகங்களும் இந்திய அரசும் மானேசர் MSI தொழிலாளர்படையின் மீது குறிவைக்கின்றன. நிர்வாகத்தின் மிரட்டல்கள், அரசின் ஒடுக்குமுறை, நிறுவனத்தின் ஒரு எடுபிடி தொழிற்சங்கம் மற்றும் பாரம்பரியமான தொழிற்சங்க அமைப்புகள் இவை அத்தனையையும் மீறி மானேசர் MSI தொழிலாளர்கள் 2011 இல் வரிசையாய் புறக்கணிப்பு போராட்டங்களையும் உள்ளிருப்பு போராட்டங்களையும் நடத்தினர்.
31 பேர் மீது குற்றத்தை உறுதிப்படுத்தியதில், குர்கான் மாவட்ட நீதிமன்றமானது வழக்காடும் தரப்பின் வாதத்தில் இருந்த அப்பட்டமான ஓட்டைகளையும் பொருத்தமின்மைகளையும் வேண்டுமென்றே கண்டுகொள்ளாது விட்டிருந்ததோடு, தொழிலாளர்களுக்கு எதிரான ஆதாரங்களின் பெரும்பகுதி போலியானவை என தான் முன்னர் கூறியிருந்ததையும் கூட கொஞ்சமும் கூச்சமின்றி ஒதுக்கிவைத்திருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலருக்காக வாதாடிய வழக்கறிஞரான ரெபெக்கா ஜான் கூறும்போது, நீதிமன்றமானது தனது தீர்ப்பில் -இன்னும் முழுமையாக வெளியாகியிருக்கவில்லை- “ஆதார ஜோடிப்பு” இருந்தது மற்றும் போலிசுக்கும் மாருதி சுசுகி நிர்வாகத்துக்கும் இடையில் “ஒத்துழைப்பு” இருந்தது என்ற பிரதிவாதி தரப்பின் வாதத்துடன் உடன்பட வேண்டியிருந்தது என்று தெரிவித்தார்.
வழக்காடுநர் தரப்பு மிகவும் பலவீனமானதாய் மற்றும் சமரசப்பட்டதாய் இருந்த நிலையில், நீதிமன்றம், இந்த 31 பேருடன் சேர்த்து 2012 ஜூலை-ஆகஸ்டில் கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த 117 மற்ற MSI தொழிலாளர்களை முற்றிலுமாக விடுதலை செய்தது.
”148 பேரில் 117 பேர் அத்தனை குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றால் “அது தொழிலாளர்களுக்கு எதிரான ஆதாரங்கள் முழுமையாக ஜோடிக்கப்பட்டவையாக இருந்ததையே அம்பலப்படுத்துகிறது என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்” என்றார் ஜான்.
2012 ஜூலை 18 கைகலப்பு குறித்த எந்த சுயாதீனமான விசாரணையையும் போலிஸ் நடத்தவில்லை என்பதை பிரதிவாதிகள் தரப்பு காட்டியது. நிறுவனம் “சந்தேகத்திற்குரியவர்களாக” விநியோகித்த ஒரு பட்டியலின் அடிப்படையில் அவர்கள் தொழிலாளர்களை கைதுசெய்திருந்தனர். வழக்காடுநர் தரப்பின் சாட்சிகள் அவர்கள் யாருக்கு எதிராக சாட்சியம் கூறினார்களோ அவர்களை அடையாளம் காட்டமுடியாதிருந்த நிலை மீண்டும் மீண்டும் வந்திருந்தது. பிரதிவாதிகள் தரப்பு வேண்டியும் கூட சம்பவம் குறித்த சிசிடிவி ஒளிப்பதிவுகள் (CCTV footage) வழங்கப்படவில்லை.
அரசின் வழக்கிற்கு மையமாக இருந்த வாதமே தொழிலாளர்கள் ஆலைக்குத் தீவைத்தார்கள் என்பது தான், ஆனால் அந்த நெருப்பு எப்படி பற்றியது என்பதைக் காட்டுவதற்கே வழக்காடிய தரப்பு தோல்வியடைந்து விட்டது எனும்போது, அதைப் பற்றவைத்தது யார் என எப்படி அது அடையாளம் காட்ட முடியும்?
தண்டனைவிதிப்பு விவாதங்களுக்காக மார்ச் 17 வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றம் கூடவிருக்கிறது.
இந்த கிட்டத்தட்ட ஐந்தாண்டு கால சட்ட செயல்முறையின் காலம் முழுவதிலுமே, வழக்காடுநர் தரப்பு பழிவாங்கும் விதமாகவே நடந்து வந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு தொழிலாளர்களின் பிணை விண்ணப்பங்களை அது கடுமையாக எதிர்த்து வந்திருந்தது என்பதோடு சிறையிலிருந்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டு, மின்னதிர்ச்சி, கடுமையான கால்-விரிப்புகள் மற்றும் நீரில் மூழ்கடித்தல் ஆகியவை உள்ளிட்ட சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதற்கான ஆதாரத்தை அலட்சியமாய் நிராகரித்து விட்டது.
ஜியாலால் -MSI மேலாளருடன் இந்த தொழிலாளிக்கு நடந்த மோதல் தான் வெளிப்படையாக ஜூலை 18 சம்பவங்களை தூண்டியிருந்தது- மற்றும் MSWU செயற்குழுவின் 12 அங்கத்தவர்கள் கொண்ட “கொலைக் குற்றத்துக்குரியவர்கள்” என ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கும் 13 பேரில் சிலருக்கு அல்லது அனைவருக்கும் எதிராய் மரணதண்டனை விதிக்கக் கோரப் போவதாக வழக்காடுநர் தரப்பு ஊடகங்களுடன் பேசுகையில் கூறியிருக்கிறது.
சென்ற வெள்ளிக்கிழமையன்று குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டவர்களில் மற்ற 18 MSI தொழிலாளர்கள் நெடிய சிறைத்தண்டனைகளைக் கொண்டு அச்சுறுத்தப்படுகின்றனர்.
நீதிமன்றம் விடுவிக்கத் தள்ளப்பட்டிருந்த 117 தொழிலாளர்களுமே ஒரு படுபயங்கர விலைகொடுத்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் அவர்கள் இந்தியாவின் படுபயங்கரமான சிறைச்சாலைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதோடு, அவர்கள் குடும்பத்தாரையும் பிரிந்து அவர்களுக்கு எந்த நிதியாதாரவையும் வழங்கமுடியாமல் தடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாதிருந்த நிலையிலும் கூட, 2015 மார்ச் வரையிலும் அவர்களில் யாருக்கும் பிணை வழங்கப்படவில்லை.
இவர்கள் அத்தனை பேருக்கும் மாருதி சுசுகி வேலை போயிருக்கிறது. அப்போதிருந்த ஹரியானாவின் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தின் துணையுடன், MSI, தனது தொழிலாளர் படையில் களையெடுப்பு செய்வதற்கான ஒரு சாக்காக 2012 ஜூலை கைகலப்பு மற்றும் நெருப்பு சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டது. ஆலையை மீண்டும் திறப்பதற்கு முன்பாக, போதுமான கீழ்ப்படிவு இல்லாதவர்களாக தான் கருதிய 2,300க்கும் அதிகமான நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அது வேலைநீக்கம் செய்தது.
நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கு கோபமான பதிலிறுப்பு கிட்டக்கூடும் என்ற அச்சத்தில், அரசாங்கம் குர்கானில் மார்ச் 15 வரை ஐந்து பேருக்கு மேல் கூடுவதை சட்டவிரோதமாக்குகின்ற இந்தியத் தண்டனைச் சட்டம் 144 பிரிவை உத்தரவிட்டது, அத்துடன் “பதட்டத்திற்குரிய இடங்களாக” கூறப்படும் இடங்களில் 2,500 போலிசையும் அணிதிரட்டியது. மானேசர் ஆலையைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் போலிஸ் சூழ்ந்துள்ளனர்.
பலியாக்கப்பட்டுள்ள மானேசர் MSI தொழிலாளர்களின் பக்கமான தங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் பொருட்டு, அத்தனை நான்கு பகுதி MSI ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் பெல்சோனிகா மற்றும் FMIக்கு சொந்தமான வாகன-பாகங்கள் உற்பத்தி துணை ஆலைகளின் தொழிலாளர்கள் உள்ளிட குர்கான்-மானேசரில் 30,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவிருந்ததை ஒட்டி வியாழக்கிழமையன்று மதிய உணவைப் புறக்கணித்தனர். பலரும் ஆலை வாயில் கூட்டங்களில் இணைந்து கொண்டனர்.
மானேசர் MSI தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலானது, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய மற்றும் ஹரியானா மாநில அரசாங்கங்களின் கீழ் தொடங்கப்பட்டு ஆதரவளிக்கப்பட்டது; பின்னர் பாஜக அரசாங்கங்கள் அவற்றை பிரதியிட்ட போதும் அது பிசிறின்றி தொடர்ந்தது.
குர்கான்-மானேசர் தொழிற்பேட்டைப் பகுதியில் இருக்கும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் தொழிலாளர்களது எதிர்ப்பை ஒடுக்குவதிலும் அடிமை உழைப்பு நிலைய சுரண்டலை திணிப்பதிலும் அரசின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்ற உறுதியை முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஏற்படுத்துவதற்கும் மாருதி-சுசுகி தொழிலாளர்களை உதாரணமாக்க வேண்டும் என்பதில் இந்தியாவின் பெருவணிக அரசியல் ஸ்தாபகம் தீர்மானத்துடன் உள்ளது.
2014 இல் தொழிலாளர்களது பிணை விண்ணப்பங்களை நிராகரித்த ஹரியானா உயர்நீதி மன்றம் முதலீட்டாளர்களுக்கு ஒரு செய்தி சொல்லப்படுவது அவசியமாய் இருந்ததாகக் கூறி அதை நியாயப்படுத்தியது. மானேசர் தொழிலாளர்களின் போராட்டங்களும் 2012 ஜூலை கொந்தளிப்பும் “உலகில் இந்தியாவின் மரியாதையை கீழிறக்கியிருந்தது. தொழிலாளர் கிளர்ச்சி பெருகுவதன் காரணத்தால் வெளிநாட்டு முதலீடு நடக்காமல் போகக் கூடும்” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஜப்பானை அடிப்படையாகக் கொண்ட சுசுகி மோட்டார் கார்ப். நிறுவனத்தின் ஒரு துணைநிறுவனமான MSI, இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவில் இருக்கும் மற்ற நாடுகடந்த நிறுவனங்களைப் போலவே, இதுவும் ஒரு மிருகத்தனமான உழைப்பு நிலைமைகளைத் திணிப்பதில் மோசமான பேர்பெற்றதாகும். சராசரியான ஊதியங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் விடுப்புடன் வாரத்தின் ஆறு நாட்களும் தொழிலாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர். ஒவ்வொரு 12 விநாடிக்கும் ஒரு புதிய கார் அசெம்பிளியில் இருந்து வெளியில் வருகின்ற மட்டத்திற்கு அங்கு வேலையின் வேகம் இருக்கிறது.
இந்தியாவின் பற்களற்ற மற்றும் அமலாக்கமற்ற தொழிலாளர் சட்டங்களினால் பாதுகாக்கப்படாத தற்காலிக அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை நோக்கி நிறுவனம் மேலும் மேலும் மாறி வந்திருக்கிறது. 2013-2014 மற்றும் 2015-16 காலத்திற்கு இடையில், MSI தனது ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கையை 6,578 இல் இருந்து 10,626க்கு அதாவது 60 சதவீதத்திற்கும் அதிகமாய் அதிகரித்து விட்டிருந்தது. அதேகாலகட்டத்தில், அதன் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கையோ 12,547 இல் இருந்து 13,529க்கு, அதாவது வெறும் 5.7 சதவீதம் மட்டுமே, அதிகரித்திருந்தது.
அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களது மையம் (CITU) ஆகிய ஸ்ராலினிச தலைமையிலான தொழிற்சங்க கூட்டமைப்புகள் குர்கான்-மானேசர் தொழிற்பேட்டையில் கணிசமான பிரசன்னத்தை கொண்டிருக்கின்றன என்றநிலையிலும், அவை, பலியாக்கப்பட்ட MSI தொழிலாளர்களை திட்டமிட்டு தனிமைப்படுத்தி வந்திருக்கின்றதோடு, “நீதி”க்காக பெருநிறுவன அரசியல்வாதிகள் மற்றும் முதலாளித்துவ நீதிமன்றங்களிடம் குழாவுவதில் தங்கள் முயற்சிகளை ஒருமுகப்படுத்துமாறு அவர்களுக்கு ஆலோசனையளித்தும் வந்திருக்கின்றன.
வெள்ளிக்கிழமை வந்த தீர்ப்பு, “இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்கு, குறிப்பாக குர்கான்-மானேசர் முதல் நீம்ரானா வரையான தொழிற்பேட்டைத் தொழிலாளர்களுக்கு” எதிராக இயக்கப்பட்ட ஒரு “தொழிலாளர்-விரோத அரசியல் தீர்ப்பு” என MSWU இடைக்கால செயற்குழு மார்ச் 11 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
“தொழிலாளர்களது உரிமைகளுக்கு குரல்கொடுத்தன” என்பதாலும் “ஒப்பந்த வேலைமுறை, கொடூரமான வேலை நிலைமைகள், மலிவு ஊதியங்கள்” ஆகியவற்றையும் MSI இன் “அரசாங்க உதவியுடனான” “சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை” ஆட்சியையும் சவால் செய்தன என்பதாலும் மட்டுமே MSWUம் அதன் தலைமையும் “குறிவைக்கப்பட்டன” என்று அது தெரிவித்தது.